- பொ.வேல்சாமி
எட்டுத்தொகை நூல்களில் முதல்முதலாக அச்சுவாகனம் ஏறிய ‘கலித்தொகை’ யை சி.வை.தாமோதரம் பிள்ளை வெளியிட்டார் (1887). இந்நூல் வெளிவந்து 37 ஆண்டுகளுக்குப் (1925) பின்னர் இ.வை.அனந்தராமையர் தன்னுடைய கலித்தொகை பதிப்பைக் கொண்டுவந்தார். சி.வை.தா கலித்தொகையை வெளியிடுவதற்கு பட்டபாடுகளையும், அந்த நூலையும் உரையையும் ஒழுங்கு படுத்துவதற்கு அவர் செய்த பணிகளையும் தான் பதிப்பித்த கலித்தொகை நூலின் முன்னுரையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அரும்பாடுபட்டு சி.வை.தா பதிப்பித்த பின்னரும் அந்த நூலையும் இந்நூலுக்கு நச்சினார்கினியர் எழுதியுள்ள உரையையும் பயில்கின்றவர்கள் ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற முடியாமல் தடுமாறி நின்றனர். சி.வை.தா வெளியிட்ட காலத்தில் இருந்தே இந்நூலின் சில பகுதிகள் அன்றைய தமிழ் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. இந்நூலை பயில்கின்ற மாணவர்களுக்கு தெளிவும் விளக்கமும் பெறுவதற்கு இன்னும் பல்வேறுபட்ட ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பிற நூல்களுடான ஒப்பிட்டுத் தகவல்களையும் தரவேண்டியிருந்தது. அத்துடன் கூடவே நூலின் அமைப்பிலும் சில வகையான மாறுதல்களை செய்தால், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்னும் கூடுதலான தெளிவு பிறக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. இத்தகைய முக்கியமான அரிய பணியை இ.வை.அனந்தராமையர் ஏற்றுக் கொண்டார்.
இ.வை.அனந்தராமையர் பழந்தமிழ் ஏடுகளை ஆராயும் கலையை பல ஆண்டுகள் உ.வே.சாமிநாத அய்யருடனிருந்து கற்றுகொண்டார். அதே நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் சொல்லும் பேராசிரியராக சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றியதனால் அவர்களுக்கு என்னவிதமான தகவல்களை தந்தால் இந்நூலை மாணவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவியாக அமையும் என்பதை அவர் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். அதே நேரத்தில் பழந்தமிழ் நூல்களை வெளியிட்டவர்களுக்கு இருந்த பணம் சார்ந்த பிரச்சனைகளும் இவருக்குப் பெரிதாக இருக்கவில்லை. உ.வே.சாமிநாத அய்யர் கலித்தொகையை அச்சிடுவதற்கு அனந்தராமைய்யருக்கு 150 ரூபாயும் அத்துடன் கலித்தொகையின் ஒரு அச்சுப் பிரதியையும் ஒப்புநோக்குவதற்கு இரண்டு ஏட்டுச்சுவடிகளையும் அளித்து இவர் பணியை ஊக்கப்படுத்தியுள்ளார். அந்தக் காலத்தின் புகழ்பெற்ற பேராசிரியர்களான
கா.நமச்சிவாயமுதலியார்,
எஸ்.அனவரதவிநாயகம்பிள்ளை போன்றவர்கள் சிறந்த ஏட்டுச்சுவடிகளை இவர் கேட்டவுடன் கொடுத்து உதவியிருக்கின்றனர். கலித்தொகையை 3 பகுதிகளாக 1925 லிருந்து 1931 வரை இவர் உரையுடன் வெளியிட்டார்.(1A,1B,1C). 1930 இல் கலித்தொகை மூலத்தை மட்டும் தனியாக வெளியிட்டார். பின், இரண்டு பாகங்களை இவர் வெளியிடும் காலத்தில் திருப்பனந்தாள் காசிமடத்தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், பவானந்தம் பிள்ளை போன்றவர்கள் ஆதரவும் உதவியும் அளித்துள்ளனர்.
பெரும்பாலான பதிப்பாசிரியர்களுக்குக் கிடைக்காத உற்சாகமும் பண உதவியும் இ.வை.அ பதிப்பு பணியில் ஈடுபாட்டுடன் உழைப்பதற்கு உதவியிருக்கின்றது. இயல்பிலேயே பதிப்பு நுணுக்கமும் பெரும் தமிழ் புலமையும் நிறைந்திருந்த இ.வை.அ தான் எடுத்த பணியை மிகச்சிறப்பாக செய்து முடித்திருக்கின்றார். இ.வை.அ வின் கலித்தொகை பதிப்பில் அடிக்குறிப்புகளாக சேர்க்கப்பட்டிருக்கின்ற சுமார் 4000 க்கு மேற்பட்ட தகவல்கள் மேற்கூறிய அனைத்தையும் உறுதிசெய்கின்றன.
இந்நூலின் முகவுரையில் முன்னர் வெளிவந்த பதிப்பில் இருந்து தன்னுடைய பதிப்பு எந்த வகையில் கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது என்பதை குறிப்பிடுகின்றார். அவர் குறிப்பிடுகின்ற ஒன்பது அம்சங்கள் இப்பதிப்பு பெற்றுள்ள மாற்றங்களையும் விளக்கங்களையும் குறிப்பிடுகின்றன.
- பல ஏட்டுச்சுவடிகளோடு ஒப்பிட்டதனாலும் வேறு நூல்களை ஆராய்ச்சி செய்ததனாலும், ஐயமுற்றவிடத்து அறிவால் நெடிது சூழ்ந்து துணிந்ததனாலும் மூலமும் உரையும் பல திருத்தமடைந்திருத்தல்.
- உரையாசிரியர், பாடல்களைப் பகுத்துக்கொண்டு உரை யெழுதியிருக்கும் இடங்களில் அவ்வுரைகளுக்குமுன் அவற்றுக்கு மூலமான பாடற்பகுதிகளை மீட்டும் பதிப்பித்திருத்தல்.
- பிரதி பேதங்களுள் சிறந்தவற்றைப் பாடமாகக் கொண்டு மற்றவற்றையும், பலவும் சிறந்தனவென்று தோற்றின் ஒன்றைப் பாடமாகக் கொண்டு மற்றவற்றையும் பிரதிபேதமென்று பக்கத்தினிறுதியிற் குறித்துக் காட்டியிருத்தல்.
- இப்பாட்டு, அல்லது இப்பகுதி, இன்ன நூலில் இன்ன பகுதியில் இன்னாருரையில் இன்ன செய்திக்கு மேற்கோளென்பதையும், அங்கே குறிப்பு வேறுபட்டிருந்தால் அவ்விவரத்தையும், பிறர் கருத்தை மறுப்பதாகத் தோன்றின் அதனையும், முன்பின் முரணுவதாகத்தோன்றின் அதனையும் ஆங்காங்கு எண்களிட்டுக் குறித்திருத்தல்
- பண்டைக்காலத்து இலக்கியங்களிலும் பிற்காலத்து இலக்கியங்களிலும், சொல்லினும், பொருளினும், சொற்பொருளினும், இதற்கொத்த பகுதிகளையும் இதிலிருந்து கிளைத்த பகுதிகளையும், பல சமயத்தவர்க்கும் தமிழின்கண் அன்பு மிகுமாறு பல மதநூற் பாடல்களிலுமிருந்து எடுத்து ஒப்புநோக்கும்படி பாட்டு அல்லது உரையில் எண்களிட்டு அவ்வப்பக்கத்தின் அடியில் அவ்வெண்களைக் கொடுத்துச் சேர்த்திருத்தல்.
- விளக்கவும் சேர்க்கவும் வேண்டியவை விடுபட்ட இடங்களில் மேற்கோள்களின்முன், பின் அவை குறிப்பதற்குக் கருவியாக அ, ஆ முதலிய எழுத்து வரிசைகளை அமைத்திருத்தல்.
- உள்ளவற்றிற் பொருந்தா வென்று தோற்றியவற்றை [] இருதலைப் பகரத்துள்ளும், பொருந்துமென்று தோற்றியவற்றை () நகவளைவினுள்ளும் இசைத்திருத்தல்.
- உரையாசிரியர் கூறிய பொருளன்றி வேறு பொருளும் இயையுமாயின் அதனையும் ஆங்காங்கு எண்களிட்டுக்குறித்திருத்தல்.
- நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறுகளும் அரும்பத முதலியவற்றின் அகராதியும் எழுதிச் சேர்த்தல் முதலியவையாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விளக்கங்கள் கலித்தொகையையும் நச்சினார்கினியர் எழுதிய உரையையும் புரிந்துகொள்வதற்கு பெரியளவில் உதவி செய்வது மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியப் பரப்பில் பல்வேறு இடங்களில் இந்நூலுக்கும் அதன் உரைக்கும் தொடர்பாக உள்ள பல செய்திகளை ஓரிடத்தில் இயைபு படுத்தி பழந்தமிழ் மொழியில் வரலாற்றுரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் வாசகர்களுக்கு புரிய வைக்கின்றது. இந்தப் புரிதலானது இந்நூலை பயிலும் வாசகனை தமிழ்மொழியில் உள்ள பல்வேறுவகைப்பட்ட நூல்களையும் படித்தவனாக மாற்றி சங்க இலக்கியங்களைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் உள்ளவர்களாக பழந்தமிழ் நூல்களை கற்கின்ற மாணவர்களை உருவாக்குகின்றது. அப்படி அவர் கொடுக்கின்ற பல செய்திகளில் புதுமையும் சுவையும் நிறைந்த பகுதிகளில் குறிப்பிட்ட சிலவற்றை பார்ப்போம்.
கலித்தொகையின் முதல் பாட்டாக உள்ள கடவுள் வாழ்த்து பாடலில் ‘ஆறறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து’ என்ற வரியில் உள்ள ‘மறை’ என்ற சொல்லுக்கு விளக்கம் தருகின்ற உரையாசிரியர் நச்சினார்க்கினியர் நான்கு வேதங்களை இச்சொல் குறிக்கின்றது என்று கூறுகிறார். ஆனால் அந்த நான்கு வேதங்கள் என்பன நாம் நினைத்து கொண்டிருப்பதுபோல ருக், யஜீர், சாமம், அதர்வனம் போன்ற நான்கு அல்ல (2) என்றும் தைத்ரியம், தலவகாரம், பௌழியம், சாமவேதம் என்று கூறி விட்டு, பெரும்பாலோர் நம்புகின்ற ருக், யஜீர் போன்ற நான்கு வேதங்கள் மேலே அவர் கூறுகின்ற வேதங்களின் சுருக்கங்கள் என்று கூறுகின்றார். நச்சினார்க்கினியருடைய இந்தக் கருத்தை விளக்கும் வகையில் இ.வை.அனந்தராமையர் சில கூடுதல் குறிப்புகளை தருகின்றார். ஒன்று தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் சிறப்புபாயிரத்தில் ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்’ என்ற தொடருக்கு இதே போன்ற விளக்கத்தை நச்சினார்க்கினியர் எழுதுவதை எடுத்துகாட்டி ‘இனி வேதவியாதர் வரையறைப்படுத்திய காலத்து ஓதுகின்ற நான்கு வேதமுமாம்’ என்ற தொடர் கலித்தொகையில் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கருத்துரைக்கின்றார். அவருடைய கருத்து சரியானதுதான் என்று தோன்றுகின்றது. கூடுதலாக நிகண்டுகளிலும் திருவாய்மொழியிலும்(பெரிய திருமொழி 7..7.2) தைத்ரியம் தவலகாரம் என்று வேதத்தின் பெயர்கள் குறிப்பிடப்படுவதை மேற்கோளாகக் காட்டுகின்றார்.
மருதக்கலியில் முதல் பாடலில் வருகின்ற ‘பொதுக்கொண்ட கவ்வையுள்’ என்ற தொடரை விளக்குகையில் பழமொழி நானூறு நூலில் ஐந்தாவது பாடலில் வருகின்ற (கழகப் பதிப்பில் இது 7 வது பாடலாக உள்ளது) பொதுமக்கட்காகாதே என்ற வரியை எடுத்துக்காட்டி பொதுமக்கள் என்ற சொல் இப்பொழுது நாம் வழங்குகின்ற அதே பொருளில் சங்கப் பாடலில் இடம்பெற்றிருப்பதைக் காட்டுகின்றார். நண்பர்கள் பலரும் இந்தச் சொல் பப்ளிக் என்ற சொல்லை தற்காலத்தில் மொழிபெயர்த்து அமைத்து கொண்டதாக இருக்கலாம் என்று கருதி வந்தனர். அப்படியல்ல பழங்காலத்தில் இருந்தே பொதுமக்கள் என்ற சொல் இதே பொருளில் வழங்கிவருவதை இந்தக் குறிப்பு நமக்கு உணர்த்துகின்றது.
குறுந்தொகையில் இப்பொழுது உள்ள பாடல்கள் 401 என்பதை பலரும் அறிவர். குறிஞ்சி கலியில் 2 வது பாடலுக்கு உரை கூறும் நச்சினார்க்கினியர் மேற்கோளாக ‘நன்றே என்னும் குறுந்தொகையும் அது’(3) என்று குறிப்பிடுகின்றார். ஆனால் “நன்றே’என்று தொடங்கும் பாடல் எதுவும் இன்றைய குறுந்தொகை பதிப்புகளில் காணப்படவில்லை என்பதை இ.வை.அ குறிப்பிடுகின்றார். உண்மையும் அதுதான். இது இந்தச் செய்தி நமக்கு ஒரு முக்கியமான உண்மையை புலப்படுத்துகின்றது. இன்று நாம் குறுந்தொகைப் பாடல்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்ற சில பாடல்கள் குறுந்தொகை நூலுக்கானது இல்லை என்பதையும் வேறுபட்ட பாடல்களை குறுந்தொகையில் பிற்காலங்களில் ஏடு எழுதியவர்கள் இணைத்துவிட்டார்கள் என்பதையும் சில பாடல்களை சேர்க்காமல் தவிர்த்து விட்டார்கள் என்பதையும் நமக்கு புலப்படுத்துகின்றது.
இன்றைய காலத்தில் இந்துமதத்தைச் சார்ந்தவர்கள் விநாயகரை, பிள்ளையார் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் சங்க காலத்திலும் அதற்கு அடுத்துவந்த காலங்களிலும் பிள்ளையார் என்பது முருகனைக் குறிக்கும் (4) சொல்லாக இருந்திருக்கின்றது. மருதக்கலி 18 ம் பாடலின் உரையில் நச்சினார்க்கினியர் ‘ஆலின்கீழ் இருந்த இறைவனுடைய மகனாகிய பிள்ளையார் திருநாளுக்கு அடிக்கொள்ளுகின்ற நாளென்று கருதி’ என்ற விளக்கத்தில் பிள்ளையார் என்று முருகனைக் குறிப்பிடுகின்றார். இத்தகைய வழக்கம் நிலவியதை இ.வை.அனந்தராமையர் மேலும் சில எடுத்துகாட்டுகளைக் கொண்டு விளக்குகின்றார். பிள்ளையார் என்றது, முருகவேளை; ‘பிள்ளையார் அயனைச் சபித்தலின்’ ‘சித்தன் என்பது பிள்ளையாருக்குத் திருநாமம்‘ ‘பிள்ளையார் வேலைத் தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்’ ‘நகர் – பிள்ளையார் கோவில் என்றுமாம்’ (திருமுருகாற்றுப்படை 162 176 222 238) ‘பிள்ளையாரால் வந்ததென முற்கூறி’(மதுரைக் காஞ்சி 611) என்பவற்றாலும் இவ்வழக்கை அறியலாகும்.
நெய்தல் கலி 18 ம் பாடலின் முதல்வரியில் வருகின்ற வலம்புரி என்ற சொல்லுக்கு இ.வை.அ. அருமையாக விளக்கம் தருகிறார். சங்கு, இடம்புரி வலம்புரி சலஞ்சலம் பாஞ்சசன்னியமென நால்வகைப்படும். ஆயிரம் சிப்பிகள் சூழ்ந்துள்ள சங்கு இடம்புரி எனப்படும். ஆயிரம் இடம்புரி சங்குகள் சூழ்ந்துள்ள சங்கு வலம்புரி எனப்படும். ஆயிரம் வலம்புரி சூழ்ந்துள்ள சங்கு சலஞ்சலம் எனப்படும். ஆயிரம் சலஞ்சலம் சூழ்ந்துள்ள சங்கு பாஞ்சசன்னியம் என்று கூறப்படும்.
இதுபோன்று கலித்தொகையையும் அதற்கு நச்சினார்கினியர் எழுதிய உரையையும் வாசகர்கள் புரிந்துகொள்வதற்கும் அதன் வழியாக சங்க இலக்கியங்களை எவ்வாறு படிக்க வேண்டும் என்பதற்கும் வழிகாட்டும் விளக்கங்களாக பல்லாயிரக்கணக்கான குறிப்புகளை அடிக்குறிப்பாகத் தந்து இந்தப் பதிப்பை அற்புதமாக செழுமைப்படுத்தியுள்ளார். ஒருவகையில் உ.வே.சா. பதிப்பித்த நூல்களில் கூட இவ்வளவு விளக்கங்கள் உள்ளன என்று கூற முடியாத அளவில் இ.வை.அனந்தராமையரின் உழைப்பும் புலமையும் படிப்பவர்களுக்கு பிரம்மிப்பையும் வியப்பையும் உண்டு பண்ணுகின்றன.
இத்தகைய ஆய்வுகுறிப்புகளுடன் கலித்தொகையில் உள்ள பாடவேறுபாடுகளில் சிறப்பானவற்றை தன்னுடைய பதிப்பில் அவர் பயன்படுத்தி இருப்பதை பாராட்டி டாக்டர்வெ.பழநியப்பன் சிறப்பாக குறிப்பிட்டு கூறுகிறார்.
‘மூலபாடங்களில் சிறந்தவைகளையும் பொருத்தமானவைகளையும் தேர்வு செய்து அமைக்கப்பட்டுள்ள பாடபேதங்களில் 27 பொருள் நோக்கில் ஆய்வு செய்ய தக்கனவாக உள்ளன என்று கூறி அவற்றை ‘தமிழ் நுால்களில் பாட வேறுபாடுகள்’ என்ற நூலில் ஆராய்ந்த டாக்டர் வெ.பழநியப்பன் இரண்டு பாடபேதங்களை தவிர மற்றவை அனைத்தும் இ.வை.அ பதிப்பில் மிகச் சரியானவைகளாக உள்ளன என்று கூறுகின்றார். (பக்.379) அத்தோடு நில்லாது இ.வை.அனந்தராமையர் அடிக்குறிப்புகளும் பாடவேறுபாடுகளும் பின்னே வந்த பல பதிப்புக்களில் பொருட் சிறப்புடையவையாகக் கொள்ளப்பட்டுப் பதிப்பில் மூல பாடங்களாக ஏற்கப்பட்டுள்ளன.’ (பக்.385)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு டாக்டர் உ.வே.சா இந்நூல் பற்றிய தன்னுடைய மதிப்புரையில் சில குறிப்புகளை தருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
உ.வே.சா.வின் குறிப்புகள்: - இதுகாறும் நன்கு விளங்காமலிருந்த கடின பதங்களுக்கு உரியபொருளை யறிந்து விளக்கித் தக்க மேற்கோள்களைக் காட்டியிருத்தல்.
- உரையிலிருந்த பிழைகளை மூலத்தைக் கொண்டும், மூலத்திலிருந்த பிழைகளை உரையைக் கொண்டும், இவ்விரண்டிலும் இருந்த பிழைகளை வேறு பிரதிகளைக் கொண்டும்நீக்கிச் செப்பஞ்செய்திருத்தல்.
- ஒவ்வொரு பொருளினுடைய இயற்கையும் நன்கு புலப்படும்படி பழைய நூல்களிலிருந்தும், பிற்காலத்து நூல்கள் பலவற்றிலிருந்தும் பற்பல மேற்கோள்களைக் காட்டியிருத்தல்.
- இந்நூலிலிருந்தும், வேறு நூல்களிலிருந்தும் ஆங்காங்கு ஒப்புமைப் பகுதிகள் பலவற்றைக் காட்டி யிருத்தல்.
- பழைய இலக்கண வுரையாசிரியர்கள், உரியவிடங்களில் மேற்கோள்களாக ஆண்டிருக்கும் இடங்களைக் கண்டு பிடித்து அவற்றை விளக்கி யிருத்தல், இவை போல்வன பிறவும் காணப்படுகின்றன.
இயல்பாகவே கலித்தொகை மிக்க மதிப்புடையதாயினும், இப்பதிப்பால் இந்நூல் பின்னும் மிக்க கௌரவத்தையடைந்து விளங்குகின்றதென்றே சொல்லலாம் இவை. அனந்தராமையர் இந்த நூலைத் தவிர பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள களவழி நாற்பது, ஐந்தினை எழுபது, கைந்நிலை ஆகிய மூன்று நூல்களையும் (5) பதிப்பித்துள்ளார். ஆனாலும் கலித்தொகை பதிப்பினால் பழந்தமிழ் நூல் வரலாற்றில் அவருக்கு மிகச் சிறந்த ஒரு இடத்தை கொடுத்துள்ளது. இதுவன்றியும் பிற்காலத்தில் வந்த பதிப்பாளர்களுக்கும். ஆய்வாளர்களுக்கும் மிகச்சிறந்த முன்னோடிகளாக விளங்கும் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சா., ரா.ராகவையங்கார், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், வையாபுரி பிள்ளை போன்றவர்களுடன் இ.வை.அனந்தராமையரையும் தவிர்க்க முடியாதவராக சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.