- சிதம்பரம் இரவிச்சந்திரன்
ஆஸ்திரேலியா டாஸ்மேனியாவின் மேற்குக் கடற்கரைப்பகுதியில் மக்குவெரி துறைமுகப்பகுதியில் (Maquari Harbour) செப்டம்பர் 2020 இறுதிவாரத்தில் ஏராளமான பைலட் வகை திமிங்கலங்கள் கரையொதுங்கின. இவற்றில் 108 உயிருடன் மீட்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டும் கடலுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக 350 திமிங்கலங்கள் இறந்தன. இவற்றில் 15 திமிங்கலங்களின் உடல்கள் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டன. இத்தனைத் திமிங்கலங்கள் ஆஸ்திரேலிய வரலாற்றில் கரை ஒதுங்கியுள்ளது இதுவே முதல்முறை. 108 திமிங்கலங்கள் உயிருடன் மீட்கப்பட்டது மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்று கடல்வாழ் உயிரினப் பாதுகாப்புத் திட்டத்தின் வனவிலங்கு உயிரியலாளர் கிறிஸ் கார்லியொன் (Kiris Carlyon) கூறியுள்ளார். செப்டம்பர் 22 முதல் ஐந்துநாட்கள் மீட்புக்குழுவினரின் கடும் முயற்சி மற்றும் உழைப்பினால் இது சாத்தியமாகியுள்ளது.
துறைமுகப்பகுதியில் இருந்து இறந்த திமிங்கலங்களின் உடற்பகுதிகளை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முடிய பல நாட்கள் ஆகும் என்ரு டாஸ்மேனிய அரசு தெரிவித்துள்ளது. கடற்காற்றின் வேகம், அதன் போக்கு, கடலலைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தே இப்பணிகள் முடிவடையும்.
நீர்வாழ் உயிரினக் கழிவுகளை அகற்றும் அமைப்புகளின் உபகரணங்களும், நிபுணத்துவமும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று பூங்கா மற்றும் வனவிலங்கு சேவைகள் அமைப்பின் (Parks&wildlife Services PWS) மேலாளர் ராப் பக் (Rob Buck) கூறியுள்ளார். செப்டம்பர் 22 அன்று மக்குவெரி பகுதியில் முதலில் 270 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அடுத்தநாள் மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது, முதல்நாள் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய இடத்திற்கு அருகில், மேலும் 200 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது தெரியவந்தது. இரண்டாவதாக கரை ஒதுங்கிய இவற்றின் கூட்டம் முதல் குழுவைச் சேர்ந்தவையாகவே இருக்கலாம், கடலலைகளின் வேகத்தால் இவையும் முதலில் வந்த கூட்டத்துடன் இப்பகுதிக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் திமிங்கலங்களில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவை இந்தத் துறைமுகத்தின் முகப்புப் பகுதியிலேயே கரை ஒதுங்குகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுவே உலகில், மிக அதிகமான எண்ணிக்கையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிகழ்வு. இதற்கு முன் 1996ல் 320 திமிங்கலங்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கின. திமிங்கலங்கள் ஏன் இவ்வாறு கரை ஒதுங்குகின்றன என்று இதுவரைக் கண்டறியப்படவில்லை. குறிப்பாக, இவற்றில் பைலட் திமிங்கலங்களே அதிகமாக கடற்கரை மணற்பரப்பில் வந்து சிக்கிக் கொள்கின்றன.இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. மீன்களை இரை பிடிக்கும்போது, வழி மாறி கடற்கரைப் பகுதிக்கு வருவதாக சில அறிஞர்கள் நம்புகின்றனர். திமிங்கலங்களின் கூட்டத்தைத் தலைமையேற்று வழிநடத்தும் திமிங்கலம் வழிமாறி தவறுதலாக தன் கூட்டத்தைக் கரைப்பகுதியை நோக்கி அழைத்துவந்துவிடுவதாக சில நிபுணர்கள் கருதுகின்றனர். கடல்நீரோட்டங்களின் வேகத்தில், இவை மென்மையாக மிதந்துவரும்போது, கரையோரம் தேங்கியுள்ள நீர்ப்பகுதிகளைக் கண்டறியும் இவற்றின் மீஒலிமூலம் வழியறியும் திறன் (sonar pulses) பாதிக்கப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது என்று வேறு சில வல்லுநர்கள் கூறுகின்றனர். எது எவ்வாறு இருந்தாலும், 108 திமிங்கலங்கள் உயிருடன் மீட்கப்பட்டு, மீண்டும் கடலில், தங்கள் தாய்வீட்டிற்குச் சென்றது மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், இன்னொருபுறம், ஏராளமான இந்தக் கடல் அரசர்களின் கூட்டம் அநியாயமாக உயிரிழந்துள்ளது சூழல் அறிஞர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்லது.
II சூழல் காக்க உதவும் நீல அமோனியா எரிபொருள்
உலகில் முதல்முறையாக, நீல அமோனியா எரிபொருள் (blue Ammonia fuel)கடல்வழியாக, சௌதி அரேபியாவில் இருந்து ஜப்பானிற்கு அனுப்பப்பட்டுள்லது. அமோனியாவில் உள்ள ஹைடிரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதில் ஜப்பான் உலகில் முன்னணி நாடாகத் திகழும் நோக்கத்துடன் நீல அமோனியா எரிபொருளை உபயோகப்படுத்தவுள்ளது.இதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில், உலகில் முதல் பத்து இடங்களில் ஒன்றாக உள்ள ஜப்பான், தன் கார்பன் பயன்பாட்டை 2030 ஆகும்போது, 26% குறைக்கமுடியும் என்று நம்புகிறது. 2013ல் இருந்து ஜப்பான் இதற்கான முயற்சிகளைத் தீவிரமாக எடுத்துவருகிறது. சௌதி அரேபியாவில் உள்ள சௌதி ஆரம் அராம்கோ (Soudi Aram co oil company) என்ற சௌதி அரசின் மிகப் பெரிய எண்ணை நிறுவனத்தின் டாரன் (Dharan) தலைமையகத்தில் இதற்கான ஒப்பந்தம் 2018 அக்டோபரில் ஏற்பட்டது.
இந்த எரிபொருளைப் பயன்படுத்தி கார்பன் உமிழ்வு இல்லாமல், , மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். ஹைடிரோகார்பன்கள் என்ற அங்கக வேதிப்பொருள்களை அமோனியாவுடன் வேதிவினைக்கு உட்படுத்தும்போது, நீல அமோனியா என்ற இந்தப் பசுமை எரிபொருள் (Green fuel) கிடைக்கிறது. மீதேனை நீராவியுடன் வேதிவினை புரியச்செய்து, ஹைடிரஜன் உருவாக்கப்படுகிறது. இது பிறகு காற்றில் உள்ள நைட்ரஜனுடன் வினை புரிகிறது.
ஹீபர் முறையில் இவ்வாறு பெருமளவில் அமோனியா தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் மீதேன் போன்ற இயற்கை எரிவாயுக்கள் வாயுநிலையில் உள்ள ஹைடிரஜனைப் பெருமளவில் தயாரிக்க உதவுகின்றன. இந்த செயல்முறையின்போது உருவாகும் துணைப்பொருளான கார்பன் டை ஆக்சைடு எளிதில் அகற்றப்படுகிறது. இதனால், நீல அமோனியா கார்பன் இல்லாத, சூழலிற்கு நட்புள்ள எரிபொருளாக மாறுகிறது. முதல் தவணையாக 40 டன்கள் நீல அமோனியா எரிபொருளை ஜப்பான் பெறவுள்ளது. இந்த எரிபொருள் அனல் மின் நிலையங்களில் மின்னாற்றல் உற்பத்தி செய்யப் பயன்படும். இது எரியும்போது, கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதில்லை.
நீல அமோனியாவில் உள்ள ஹைடிரஜன் இதற்காக உபயோகிக்கப்படுகிறது. புதைபடிவ எரிபொருள் இந்த முறையில் கார்பனற்ற நீல அமோனியா எரிபொருளாக மாற்றப்படுகிறது. கார்பன் உமிழ்வற்றமுறையில் தயாரிக்கப்படும் இந்த ஹைடிரஜன் பசுமை ஹைடிரஜன் என்று அழைக்கப்படுகிறது. உலகில் மிகப் பெரிய எண்ணை உற்பத்தி நாடாக உள்ளசௌதி அரேபியா பெட்ரோல் உற்பத்தியின் மூலம், சூழல் மாசை ஏற்படுத்தும் எரிபொருளை (dirty energy) உருவாக்குவதில் உலகில் முதலிடத்தில் உள்ளது. சமீபகாலங்களில், ஆரம் கோ நிறுவனம் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக, எண்ணைக் கிணறுகளுக்கு அருகில் அலையாத்திக் காடுகள் செயற்கைமுறையில் உருவாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் உற்பத்தி மற்றும் தயாரிக்கும் நடவடிக்கைகளின்போது வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்கள் இந்தக் காடுகளால் உறிஞ்சப்படும். நியோம் நகரில், $5 பில்லியன் செலவில், ஹைடிரஜனை ஆதாரமாகக் கொண்டு மறுசுழற்சி முறையில் நீல அமோனியா எரிபொருளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை சௌதி அரேபியா உருவாக்கிவருகிறது.
இந்த எரிபொருள் கப்பல் மூலம் ஜப்பானிற்கு பாதுகாப்புடன் அனுப்பிவைக்கும் பொறுப்பை சௌதி ஆரம் கம்பெனியும், ஜப்பானின் மிச்சுபிஷி (Mitsubishi) கம்பெனியும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் மூலம் கார்பன் உமிழ்வினால் ஏர்படும் சூழல் சீர்கேடைக் குறைப்பதற்கான ஒரு புதிய வாசல் திறக்கப்பட்டுள்ளது என்று சௌதி ஆரம் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அலுவலர் அகமது அல் கவேட்டர் (Ahmad Al-Khowaiter) கூறியுள்ளார். நம்பகத்தன்மையும், எளிதில் பெறக்கூடியதுமான குறைவான கார்பன் உமிழும் எரிபொருளை உற்பத்தி செய்யும் ஆற்றல் மூலமாக ஹைடிரோகார்பன்களைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
இன்று உலகில் புவி வெப்பத்திற்கும், காலநிலை மாற்றத்திற்கும் முக்கியக் காரணமாக உள்ள கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை அதிக அளவில் வெளியேற்றும் உலகின் முதல் நான்கு நாடுகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகியவையும் ஜப்பானைப் பின்பற்றி நீல அமோனியாவை தங்கள் ஆற்றல் தேவைக்கு ஆதாரமாகப் பயன்படுத்தத் தொடங்கினால், சூழல் மாசு பெருமளவில் குறையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.