- முனைவர் இரா. மோகனா
ஒவ்வொரு மனிதனையும் நல்வழிப்படுத்துவதில் மாதா, பிதா, குரு இந்த மூவரும் முதன்மையான இடத்தைப் பெறுகின்றார்கள். மூன்றாவதாக சொல்லப்படுகின்ற குருவாகிய ஆசிரியர் இறைவனுக்கு ஒப்பாக கருதப்படுகிறார். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் எனும் வரி இதனைப் புலப்படுத்துகிறது. ஒவ்வொரு மாணவனுக்கும் அகரத்தைக் கற்றுக்கொடுத்தவர்களும் அவனைச் சிந்திக்கவும் சிறப்புடன் வாழவும் உருவாக்கியவர்களும் ஆசிரியர்கள். பாடங்களை முதலில் தான் புரிந்துகொண்டு தெளிவாக நடத்துவது, உலக நடப்புகளைப் பாடங்களுக்குள் இணைத்து மெருகூட்டுவதும், காலம் தவறாமை, நேர்மை, மன்னிப்பு, அக்கறை, உண்மை உரைத்தல், சமத்துவம், ஒழுக்கம் மற்றும் பல்வேறு குணநலன்கள், திறமைகள் உடையவர்கள் ஆசிரியர்கள்.
உண்மையான ஆசிரியர் பாடப் புத்தகத்திலிருந்து நடத்துவதில்லை இதயத்திலிருந்து நடத்துகிறார் என்ற ஜான் ஹோல்ட் இன் வரிகள் ஆசிரியர் குலத்திற்குச் சிறப்பானதொரு பாராட்டைத் தருகிறது. இன்று கல்வி என்பது மாணவர்களிடம் ஒரு கவலையாகக் காணப்படுகிறது. மாணவர்களின் கவலையைப் போக்கி அவனை வாழ்வில் உயர்த்துவதே ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். ஆசிரியர்கள் யாரும் பிறப்பதில்லை. அவர்கள் தங்கள் இயல்பிலேயே இருக்கிறார்கள். மாணவர்கள் அவர்களை நல்ல ஆசிரியர்களாக கண்டு கொள்கிறார்கள் என்ற கருத்தை இந்நூலில் இந்நூலாசிரியர் சூ.ம.ஜெயசீலன் பதிவு செய்துள்ளார். வகுப்பறையைப் புரிந்துகொள்ளும் முன் குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள் என்பது இந்நூலாசிரியரின் வேண்டுகோள். அதுதான் இந்த நூலின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. நிலைத்து தேங்கிப்போன பார்வைகளின் வழி குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது.
ஒவ்வொரு நிமிடமும் புதிதாய் பிறப்பவர்கள் அவர்கள். கண்களால் சிரிப்பார்கள். சிந்திய நீரில் ஓவியம் வரைவார்கள். சிதறிய பொருட்களில் அதிசயம் படைப்பார்கள். கலைகளின் நூலகம், கற்பனையின் அமுதசுரபி, திறமைகளின் தடாகம், தோல்வி பற்றிய அச்சம் இல்லாதவர்கள். விரல் நுனி பிடித்து நடப்பவர்கள் என்று குழந்தைகள் குறித்து மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தை இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர். தினமும் கற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியரே சிறந்தவர் என்ற உண்மை இந்த நூல் முழுவதும் காணப்படுகிறது. ஓர் ஆசிரியர் மாணவரிடம் தோற்றுப்போக வேண்டும் எனும் ஜோல்னா ஜவகர் அவர்களுடைய கருத்து இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஊர் கூடி தேர் இழுக்கும் இந்த காலகட்டத்தில் ஆசிரியரின் சிறு முயற்சி ’இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ எனும் இந்நூல் ஆகும். இந்நூலின் முதல் பதிப்பை வாசித்த தினமணி நாளிதழ் மாணவ சமுதாயத்திற்கு வழிகாட்டி நூல் என எழுதியது. சென்னை கல்வியியல் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் இந்நூலை சேர்த்துக்கொண்டது. கவிதைஉறவு இதழ் சிறந்த கல்வி நூலுக்கான இரண்டாம் பரிசினைக் கொடுத்துள்ளது. சென்னை புத்தகத் திருவிழா 2017 சிறந்த கல்வி நூல் விருது கொடுத்து சிறப்பித்துள்ளது. தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் இந்நூலிற்குச் சிறப்பானதொரு விருதினைத் தந்துள்ளது. இத்தகைய சிறந்த ஒரு நூலினைப் பாரதி புத்தகாலயம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்நூலிற்கு ச.மாடசாமி அணிந்துரை தந்துள்ளார். ஆயிஷா இரா. நடராசன் மற்றும் ஜோன் ஜவஹர் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். ஜோல்னா ஜவஹர் இந்நூல் குறித்து பேசும் பொழுது ஒவ்வொரு இந்துவின் இல்லத்திலும் கீதை இருக்கிறதோ, கிருத்துவர் இல்லத்தில் விவிலியம் இருக்கிறதோ, இஸ்லாமியர் இல்லத்தில் குர்ஆன் இருக்கிறதோ, தமிழன் இல்லத்தில் திருக்குறள் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வோர் ஆசிரியர் இல்லத்திலும் இந்நூல் இருக்க வேண்டும் என்ற சிறப்பானதொரு வாழ்த்துரையைத் தந்துள்ளார். இந்நூலில் 22 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஆசிரியர் மாணவர் உறவை மிக அழகாக பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
உண்மையில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு நடந்து போகும் உணர்வை இந்நூல் தருகிறது. புது மரபுகள் தோன்றும் இடத்து பழைய மரபுகள் ஏற்படுவது இயற்கைதான். தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு போன்ற தடுமாற்றங்கள் போன்றவற்றிற்கெல்லாம் குழந்தைகளைக் குற்றம் சொல்வது பழைய மரபு. பள்ளியில் படிக்கும் மாணவனிடம் அறிவுசார் முன்னேற்றம் இல்லை என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் பள்ளிதான் ஏற்க வேண்டும் என்பதை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் ஆசிரியர் கூறுகின்ற இடங்களில் அந்தப் பழைய மரபு உடைபடுகிறது. நமது இன்றையத் தேவைகளான பொதுப்பள்ளி முறை, அருகாமைப் பள்ளி, விலை ஏற்ற தரமான கல்வி, வகுப்பறை ஜனநாயகம், ஆசிரியர் மாணவர் நல்லுறவு, ஆத்மார்த்தமான கற்றல் செயல்பாடு, படைப்பாக்க கல்வி முறை எனப் பலவற்றையும் தெளிவாக இந்நூல் பேசுகிறது. கல்வி சுமையா? சுவையா? கல்வி விடுதலையா? சிறையா? கல்வி சமூக மாற்றமா? சீரழிவா? கல்வி வளர்ச்சியா? பழமைவாதமா? எனப் பலவிதமான கேள்விகளுக்கு விடை தருவதாக இந்நூல் அமைந்திருக்கிறது. 160 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஆசிரியர்-மாணவர் உறவிற்கு மிகச்சிறந்த பாலமாக அமைந்துள்ளது.
உங்களில் பார்க்கிறோம் எங்களை என்ற கட்டுரையில் மாணவர்களின் கவனம் மிகக்குறுகியதல்ல. உண்மையில் அவர்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். நிகழ்வு துணுக்குகளை இணைத்து முடிவெடுக்கிறார்கள். தன் ஆசிரியரிடம் விளங்கும் நல்ல குணம் என்ன என்று எழுதும்போது உங்களிடம் நல்ல ஒழுக்கம் உண்டு அந்த ஒழுக்கத்தையே மாணவர்களுக்கு கற்றுத்தர விரும்புகிறீர்கள் என்று தெளிவாக ஒரு மாணவன் எழுதி இருந்ததாக அக்கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய நெறி அல்லது உரிய முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற ஒழுக்கம் சார் வரைமுறைகளை மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வதைவிட ஆசிரியர்கள் வழியாக பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்பதை அக்கட்டுரையில் அழகாகச் சொல்லிச் சென்றுள்ளார்.
ஆசிரியர்கள் எப்படி தங்களை வெளிப்படுத்துகிறார்கள் அப்படித்தான் மாணவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். மாணவ-மாணவிகளைத் தன் குழந்தைகள் போல ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் வைக்கப்பட்டிருக்கின்ற குப்பை தொட்டிகளில் ஆசிரியர்கள் குப்பைகளை போட்டால் மட்டுமே மாணவர்கள் அதனைப் பார்த்து அதுபோல் செயல்படுவார்கள். இடங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு ஆசிரியர்களே சொல்லித்தர வேண்டும் என்பதையும் மிக அழகாக அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். கையை உயர்த்திக் காட்டி இருக்கிறோம் என்ற கட்டுரையிலும் என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க புரிகிற மாதிரி பாடம் எடுப்பது என் கடமை என்று எந்த ஆசிரியர் மாணவரிடம் கூறுகிறாரோ அவரே என்றும் மாணவர் மனதில் நிற்கின்ற நல்ல ஆசிரியராக இருக்கிறார் என்ற அழகான கருத்தை கூறியிருக்கின்றார். என் ஆசிரியரிடம் எதைக் குறித்தும் சந்தேகம் கேட்க முடியும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும். கால வளர்ச்சிக்கு ஏற்ப சந்தேகங்களும் தேடல்களும் மாணவர்களிடம் நிறைய வருகின்றன. தன் ஆசிரியர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு வருதல் வேண்டும். அது ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பும் கூட. மாணவன் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை என்று சொன்னால் சமாளிக்காமல் அது தொடர்பாக படித்துவிட்டு நாளை வந்து சொல்கிறேன் என்று சொல்லும் பக்குவத்தை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும். அதுவே ஒரு நல்ல ஆசிரியரின் பண்பும் ஆகும். அதை விடுத்து கேள்விகளோடு கேட்பவரையும் வறுத்தெடுக்கின்ற ஆசிரியராக நாம் இருக்கக்கூடாது என்பதை மிக அழகாக நூலாசிரியர் கட்டுரைகளில் ஆங்காங்கே சொல்லியிருக்கின்றார். சந்தேகங்களை மாணவர்கள் கேட்பதற்கு ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில் எந்தப் பாடத்தைக் கற்பிக்கும்போதும் அது தொடர்பான சரியான வினாக்கள் எழுப்ப குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் நீடு வாழ்க என்ற கட்டுரையில் தமிழை நேசிப்பது நம் தாயை நேசிப்பதாகவும் சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று ஈழக் கவிஞர் சச்சிதானந்தன் கருத்தை இக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இலக்கிய நயத்துடன் கற்பனை தேர் பூட்டி அதில் மாணவர்களை அமர்த்தி உலா வரச் செய்யும் கைங்கரியம் ஆசிரியர்களால் மட்டுமே இயலக்கூடிய ஒன்று என்பதை ஆணித்தரமாக இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார். தமிழின் தனிச் சுவை அறிந்த ஆசிரியர்கள் தமக்குச் சுவைபட கற்பிப்பதை நினைத்து ஆசிரியர்களைப் பெருமை படுத்துகிறார்கள் பாமா, தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் ரமேஷ் போன்றவர்களின் கருத்துகள் வாயிலாக விளக்கியுள்ளார். கிரேட் அந்தமானிஸ் பழங்குடி மக்களால் 65 ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்ட மொழி போ என்பதாகும். 1858ல் பிரிட்டிஷ் அந்தமானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோது போ தெரிந்தவர்கள் 5 ஆயிரம் பேர் இருந்தார்கள். கடைசியில் போ சீனியர் என்ற 84 வயது பெண்மணி மட்டுமே அந்த மொழியைப் பேசினார் என்ற அந்த மொழி குறித்த வரலாற்று உண்மையை இக்கட்டுரையில் மிக அழகாகத் தந்துள்ளார்.
மக்களின் ஆன்மீக செல்வமே மொழி. எத்தனை மொழிகள் எனக்குத் தெரியும் அத்தனை அளவுக்கு நான் மனிதன் ஆனேன் என்று மூத்தோர் மொழி கூறுகிறது. குழந்தை ஒழுக்கம் என்பது குறும்புகளை மாற்றியமைப்பதில்தான் உள்ளது என்று கூறும் அமனஷ்வீலி கருத்தையும் மனிதர்களை உருவாக்குவோம் என்ற கட்டுரையில் தந்துள்ளார். கல்விச் சூழலில் ஏற்பட்டுவரும் பல்வேறு மாற்றங்களை பெருமையுடன் ஏற்றுக்கொண்டு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை மெருகூட்டி அவர்கள் புரிந்துகொள்ள திணறும்போது தனிக்கவனம் பெறுவதையும் இந்நூலில் தந்துள்ளார். புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய் என்ற கட்டுரையில் நம்பிக்கையூட்டும் சராசரி மாணவர்களும் நல்ல நிலைக்கு வருகின்றனர். அவர்கள் இகழப்படுகின்றபொழுது திறமைகள் அவர்களுள் இருந்தபொழுதும் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர் என்ற செய்தியைத் தந்துள்ளார். இன்றும் மாணவர்களை முதல் கோணல் முற்றும் கோணல் என்றெல்லாம் சொல்லி ஊனப்படுத்தும் ஆசிரியர்கள் இருப்பதையும் இந்தக் கட்டுரையில் சொல்லி இருக்கின்றார். அறிவை விரிவு செய் என்ற கட்டுரையிலும் அரசியற் சிந்தனையாளர் லியோ டால்ஸ்டாய் பற்றிய அருமையான செய்தியைத் தந்துள்ளார் டால்ஸ்டாய் சிறுவயது முதற்கொண்டே வகுப்பு பாடங்களை படிப்பதைவிட அறிஞர்களின் நூல்களை ஆர்வமாக வாசித்தார். வாசித்ததைக் குறித்து, சிந்தித்து சிந்தித்து அதை எழுதியும் வைத்தார். இதுபோன்ற செயல்களால் பள்ளியில் அவர் முதல் மாணவராகத் திகழ்ந்தார் என்ற செய்தி படிப்பவரிடையே நல்ல ஊக்கத்தைத் தருகின்றது. வாசிப்பைச் சுவாசித்த ஆசிரியர்கள் தங்களை அறிமுகம் செய்து வைத்ததை வளர்ந்த பின்னும் மாணவர்கள் மறப்பதில்லை. வாசித்தவர்கள் யாரும் வாழ்வில் தோற்றுப்போய் விடவில்லை.
எழுத்தாளராக முற்போக்கு சிந்தனையாளர்களாக விமர்சகர்களாக வளர்ந்து உள்ளார்கள். அகில இந்திய அளவில் மேடைக்கலை, எழுத்துகலை, அறிவியல், ஓவியம் இவற்றில் சிறந்து விளங்கும் 9 வயது முதல் 16 வயது உள்ளவர்களுக்கு தேசிய பால்ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. அத்தகைய விருதை 2010 பெற்றவர்களில் ஒருவரான கரூர் தர்ஷினிடம் அவரது அனுபவம் குறித்து கேட்டார்கள். அதற்கு அவர் தந்த ஒரேபதில் தான் தொடர்ந்து வாசிப்புப் பழக்கம் கொண்டவர் என்பதாகும். அதனால் மட்டுமே என்னால் இப்படி ஒரு சிறந்த விருதைப் பெற முடிந்தது என்ற செய்தியை நூலில் தந்துள்ளார்.
பிறந்த நாளின் போது மாணவர்கள் நன்கொடையாக பள்ளி நூலகத்திற்கு நூல்கள் கொடுக்க வேண்டும் என்ற அருமையான திட்டம் மாணவர்களை மேம்படுத்தும் என்பதையும் தன்னுடைய கருத்தாக இந்நூலில் தந்துள்ளார். பூஜையறை, படுக்கை அறை, சமையல் அறை என இருக்கும் வீடுகளில் படிப்பறை இல்லாதது ஒரு பெரும் குறை என்பார் அறிஞர் அண்ணா. ஆதலால் ஒவ்வொரு வீட்டிலும் புத்தக அறை ஒன்று இருக்க வேண்டும் என்பது இந்நூலாசிரியரின் கருத்தாக உள்ளது.
குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசு புத்தகங்கள்தான் என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். பரிசு கொடுக்க பாத்திரங்களைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத ஆசிரியர்களும் உள்ளார்கள். புத்தகத்தையா.. அதெல்லாம் பிள்ளைகள் விரும்ப மாட்டார்கள் என்று முழங்குகின்ற ஆசிரியர்களும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். புத்தகம் மட்டுமே ஒரு அன்பான பரிசாகும். அதைத் திரும்பத் திரும்ப பிரித்துப் படிக்கலாம் எனும் பெர்னாட்ஷாவின் குரலைச் செயல்படுத்துகின்ற ஆசிரியர்கள் மிகமிக குறைவு என்பதையும் தன் கட்டுரையில் அழகாகச் சொல்லிச் சென்றுள்ளார். இதயத்திற்கு இதம் தாருங்கள் என்ற கட்டுரையில் ஒரு ஆசிரியர் முதலில் தாயாக இருக்க வேண்டும். பிறகுதான் ஆசிரியராக இருக்க வேண்டும். தாயாக மாறி வகுப்பில் உள்ள குழந்தைகளைக் குறித்து தெரிந்து இருக்க வேண்டுமானால் அவர்களது குடும்பத்தை நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என்ற வசிலிசுகம்லீன்ஸ்கி என்பவருடைய கருத்தை இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
கற்பித்தலில் புதுமை செய்வீர் என்ற கட்டுரையிலும் தங்கள் வகுப்பிற்கு வர வேண்டும் எனச் சில ஆசிரியர்களை வேண்டி மாணவர்கள் தவம் இருப்பது உண்டு. அந்த ஆசிரியர்கள் வகுப்பிற்குள் நுழைகையில் உற்சாகத்தை, மாணவர்களின் எதிர்காலத்தை, தங்களோடு சுமந்து வருவார்கள். கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை முடிப்பதைவிட மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட செய்வதையே முதல் நோக்கமாக வைத்திருக்கிறார்கள். தாங்கள் படிக்கும் பாடத்தை மற்ற பாடங்களுடன் தொடர்புபடுத்தி படித்தால் மாணவர்கள் தங்கள் அறிவை வளப்படுத்த கூர்மைப்படுத்த முடியும் என்ற ஆணித்தரமான உண்மையை தம் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். போட்டி போடுதல் ஆகாது பாப்பா என்ற கட்டுரையில் போட்டியால் தன்னிடம் இருக்கும் உண்மையான திறமையை ஒரு மாணவன் கண்டுகொள்வதில்லை. பதற்றமடைகிறான். தன்னிடமிருக்கும் அறிவுத்திறனைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறான். தன்னுடன் இருப்பவர்களை எதிரியாக பார்க்கிறான். அவர்கள் அனைவரும் தனது வெற்றிக்கு தடையாக இருப்பவர்கள் எனத் தவறாக முடிவெடுக்கிறான். இந்த நிலைமை எப்பொழுது மாறுகிறதோ அப்பொழுது அவன் வெற்றி பெறுகிறான் என்ற உண்மையான கருத்தை இக்கட்டுரையில் கூறியுள்ளார். கூடிவிளையாடு பாப்பா என்ற கட்டுரையில் விளையாட்டு முழு மனித ஆளுமை. அது ஒரு மாணவனை நல்ல நிலையில் வளர்த்தெடுக்கும் என்பதை கூறுவதோடு நேர்மையையும் நியாயத்தையும் விளையாட்டு பயிற்றுவிக்கிறது. இந்த விளையாட்டு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று விளையாட்டை விளையாட்டாக விளையாடுவது. மற்றொன்று சான்றிதழ் விருப்பத்திற்காக விளையாடுவது. முதல்வகை யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இரண்டாவது போட்டிகளுக்காக மாணவர்களைத் தயார்படுத்தி அதில் வெற்றி காண்பது. இரண்டுமே மாணவர்களை நல்ல சீரிய பாதையில் கொண்டு செல்வதாக இந்நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார்.
இனியவை சொல்லி இன்புற வைப்போம் என்ற கட்டுரையில் ஆசிரியர் மாணவர் இருவரும் அன்பு நிறைந்தவர்களாக தொடர்ந்து வளர நல்ல வார்த்தைகளைக்கூறி மனதைப் பக்குவப்படுத்தகின்றனர். தங்களது திறன்களை வெளிப்படுத்தும் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் அன்புச் சொற்களை வெளிப்படுத்துகின்றனர். நல்ல சொற்களைக் கேட்டு வளரும் பிள்ளைகள் தங்களது எதார்த்த நிலையைப் புரிந்து கொள்கிறார்கள். தங்களுடைய வாழ்வை அமைத்துக் கொண்டு நல்ல வாழ்வு வாழ்கிறார்கள்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
எனும் குறளுக்கு இணங்க சில எதிர்மறையான வழிகாட்டுதலால் மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்த உண்மையையும் மிகுந்த சோகத்தோடு பதிவுசெய்துள்ளார். ஆசிரியர்கள் மாணவர்களிடம் மங்கலமான சொற்களை மட்டுமே பேச வேண்டும். ஒரு நல்ல ஆசிரியரின் குரலில் அதிகாரம் இருக்கக்கூடாது. இருந்தால் அவர் ஆசிரியர் இல்லை. போலீஸ்காரர் என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன் என்று பிரபஞ்சனின் கருத்தும் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஈடுபடுவோம் ஏற்றுவோம் என்ற கட்டுரையில் ஒரு ஆற்றில் ஒருவன் இலக்கை நோக்கி படகை ஓட்டுவது போல் ஆசிரியர் ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு செலவிட்டால்தான் அது ஆசிரியருக்கு ஏற்ற நாளாகும் என்ற கருத்தை புரிகின்ற விதத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.
கலை அறிவு மட்டுமே திறமை அல்ல. வாசிப்பது, யோசிப்பது ஆலோசிப்பது, கேள்வி வழி ஞானம் பெறுவது, விளையாடுதல் விட்டுக்கொடுத்தல், துணிவு பெறுதல். தன்னையறிதல் அனைத்துமே திறமைகள்தான். 2014 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலா இருவருக்கும் டிசம்பர் 10 அன்று வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் 17 வயதான மலாலா நிகழ்த்திய உரை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த உரையில் தந்தை, தாய் இருவருக்கும் நன்றி சொன்ன மலாலா மூன்றாவதாக என்மீது நான் நம்பிக்கை வைக்கவும் துணிவுடன் இருக்கவும் சொல்லிக் கொடுத்து என்னை ஈர்த்த எனது அருமையான ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறி ஆசிரியர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். இதனை எங்கே என்னை கண்டு பிடியுங்கள் என்ற கட்டுரையில் ஆசிரியர் அருமையாக எழுதிச் சென்றுள்ளார்.
நான்கு எழுத்தில் தலைமுறை வளர்ப்போம் என்ற கட்டுரையில் மாணவர்களை முழுமதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக நல்லொழுக்கம் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிய கற்பனை கதாபாத்திரங்களாகவும் ஆசிரியர்கள் சிலர் நினைப்பதுண்டு. இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் வாங்குவது தவறு. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாது சில சமயங்களில் மாணவர்கள் தம் எண்ணத்திற்கு மாறாக செயல்படுகின்றபொழுது வார்த்தைகளால் அவர்களைச் சுடுவது, அவர்களைத் தவறான முடிவுக்கு அழைத்துச் செல்பவர்களாகவும் ஆசிரியர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என நாம்தான் கற்றுக் கொடுக்கிறோம். நமது வார்த்தைகள் எப்பொழுதும் வாழ்வதாக இருக்க வேண்டும் என்ற உயரிய கருத்தை இக்கட்டுரையில் சொல்லியுள்ளார். கொஞ்சம் கை கொடுங்கள் என்ற கட்டுரையில் மாணவர்களின் குடும்பநிலை, கற்கும் கலை இவை அறிந்து உதவி செய்யும் ஆசிரியர்கள் எல்லா காலங்களிலும் மாணவர்கள் நெஞ்சில் நீங்காதவர்களாக இருக்கிறார்கள். கைகுலுக்க வாருங்கள் என்ற கட்டுரையில் முகநூலில் ஒரு வாக்கியம் பார்த்தேன். காய் விடுவதையும் பழம் விடுவதையும் விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள். நாம்தான் மனங்களில் வைத்திருக்கிறோம். குழந்தைகள் சமாதான விரும்பிகள். கோபமாக நெடுநேரம் இருக்க தெரியாதவர்கள். அறநூல்களும் மத நூல்களும் மன்னிப்பை மறுப்பதில்லை. பகைமையை விதைப்பதில்லை. இணக்கமான வாழ்வுக்கு இனிய வழிமுறைகளை கூறுகின்ற இவைகளின் நல்வழியில் பயின்றுவரும் நாம், அதை நம் வாழ்வில் கடைபிடிக்கும்போதுதான் வகுப்பறையில் உயிர் பிறக்கிறது என்ற உன்னதமான கருத்து கவனிக்கத்தக்கது. நீங்கள் கோபம் கொண்ட மாணவர்களோடு தயவுசெய்து கை குலுக்குங்கள். இப்படி ஆசிரியர்களை வேண்டி மன்றாடுகிறார். கண்டித்த மாணவர்களை அழைத்து தோளைத் தட்டிக் கொடுங்கள். வகுப்பறையில் நட்பை மலர வைப்பதற்கு நீங்கள் தோற்றுப் போங்கள். தோற்பதற்கு கூச்சப்படாதவர்கள்தான் உண்மையான வீரர்கள். உண்மையான ஆசிரியர்கள் என்ற ச. மாடசாமியின் கருத்தை இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது.
ஓருயிராய் வாழ்வோம் என்ற இறுதி கட்டுரையில் நண்பர்களின் வழியாக தாங்கள் அறிந்த உலகின் அழகியலில் மகிழ்ந்த குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றபொழுது ஆசிரியர்கள் அறிந்திருக்கின்ற உலகின் அதிசயங்களை அதே நட்பு வட்டத்திற்குள் வந்து அவர்கள் கற்றுத் தருவார்கள் என எதிர்பார்க்கிறார்கள். நட்புக்குக் கைக்கொடுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் என்றும் நண்பர்களாக மட்டுமே பார்க்கின்றார்கள். அவர்களுடைய உறவு காலத்திற்கும் மாறாததாக இருக்கின்றது. குழந்தைகளின் நட்பைப் பெறுவது மிக எளிது. கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை இரண்டும் இருந்தால் போதும். அவர்கள் நம்மோடு இருக்கவே விருப்பப்படுவார்கள். அதை மிக அழகாகவும் எளிமையாகவும் இக்கட்டுரையில் ஆசிரியர் தந்துள்ளார். ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய வழிகாட்டி நூலாக இந்நூல் இருப்பதாக ஆயிஷா இரா. நடராசன் கூறுகிறார்.
இன்றைய நம் கல்வியின் இறுக்கமான வகுப்பறைகளை இலகுவாக்கி அங்கே மாணவர்களை மாணவ ஆசிரியராகவும் ஆசிரியரை ஆசிரிய மாணவராகவும் உணர வைக்கின்ற சிறந்த நூலாக இந்நூல் உள்ளதாக இவர் குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கின்ற ஆசிரியரை காணச்சென்ற மாணவியிடம் நன்றாகப் படி என்று கனிந்து உரைத்த பூமாலை, சரிந்து கிடந்த தொடக்கப் பள்ளியைத் தூக்கி நிறுத்திய விஜயலலிதா, ஏழைக் குழந்தைகளின் தோழனாய் நிற்கும் ஜோசப் சகாயராஜ், குழந்தைகள் எந்த நேரமும் சிரித்து சூழ்ந்திருக்க விளையாட்டு கற்றுத்தரும் வில்லியம், மறைந்தாலும் மாணவர் மனதில் நிறைந்திருக்கும் மைக்கேல் நெடுஞ்செழியன் என அற்புதமான ஆசிரியர் பலரை சூ.ம. ஜெயசீலன் இந்நூலில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் மாணவர்க்கு இடையிலான அன்போடு கூடிய அறிவைத் தருகின்ற சிறப்பானதொரு நூலை எழுதிய நூலாசிரியர் அவர்களுக்குப் பாராட்டுகள். இந்நூலை அழகாக பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கும் என் வாழ்த்துகள்.