- டேவிட் கிராஸ், நோபல் அறிஞர்.
- ஆயிஷா இரா. நடராசன்
டேவிட் ஜொனாதன் கிராஸ் உலகப் பிரசித்தி பெற்ற இயற்பியல் அறிஞர். இழை கோட்பாட்டு வல்லுனர்களில் ஒருவர். 2004ஆம் ஆண்டில் தனது அணுகு கோட்டிற்குரிய விடுவிப்பு (Asymptotic Freedom) கோட்பாட்டிற்காக நோபல் பரிசு பெற்றார். மனிதநேய அறிக்கை (Humanist Manifestos) வெளியிட்ட அறிவியல் அறிஞர் கூட்டமைப்பின் முக்கிய குரல் தற்போது சாண்டா பார்பாரா இயற்பியல் ஆய்வு மைய முக்கிய பொருப்பாளர்களில் ஒருவர். குவாண்டா இணைய இதழுக்காக அவர் அளித்த நேர்காணல். வலதுசாரி அரசுகளின் அறிவியல் முடக்கத்தை வன்மையாக சாடுகிறார்.
நேர்கண்டவர்-பீட்டர் பைர்னி.
நன்றி: Quanta magazine.org.
டேவிட், இயற்பியலுக்கு எப்படி வந்தீர்கள்?
டேவிட் கிராஸ்: எனக்கு 13 வயதாக இருந்தபோது நான் முதலில் பொது புத்தக வாசிப்பிற்குள் வந்தேன். ஐன்ஸ்டீனும், லியோபால்டும் இணைந்து எழுதிய தி எவலூஷன் ஆஃப் பிசிக்ஸ் (The Evolution of Physics) புத்தகத்தை வாசித்தபோது இந்த பிரபஞ்சம் குறித்த அடிப்படை கேள்விகளை வகுப்பது குறித்து நான் ஈர்க்கப்பட்டேன். 1960களின் மத்தியில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படித்தபோது அந்த இடம் எஸ். மாட்ரிக்ஸ் கோட்பாட்டின் மையமாக இருந்தது. அந்த ரேட் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தங்களிடம் இருந்த ஆய்வுக் கருவிகளைக் கொண்டு புதிய அணுத்துகள்களை கண்டறிந்தபடியே இருந்தனர். ஆனால் அணுக் கரு பற்றிய ஆய்வு நிறைவு பெறவில்லை. குறிப்பாக குவாண்ட புலக் கோட்பாடு போதுமானதாக இல்லை. நாங்கள் கணித வழியில் அடையப்பட்ட குவார்க் போன்றவற்றை கோட்பாட்டளவுக்கு விவரிக்க முடியாமல் திணறினோம். குவார்க்கின் கணித விவரணை இயற்பியலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அது இயற்பியலற்ற நிலையை குவாண்ட புலக் கோட்பாட்டிற்கு தந்தது.
இயற்பியலுக்கு அப்பாற்பட்ட அல்லது இயற்பியலற்ற நிலை என்றால் எதை சொல்கிறீர்கள்.
டேவிட் கிராஸ்: இயற்பியலாளர்கள் நேரடியாக ஆய்வுக்கு உட்படுத்தி சரிபார்க்க முடியாத எதையும் ஏற்பது இல்லை. அந்த கால கட்டத்தில் குவார்க் போன்ற உட் துகள்களை கணித வரையறைகள்தான் நமக்கு வழங்கி இருந்தன. குவாண்ட புலக் கோட்பாடு ஆய்வுமுறையில் எதையும் அடையவில்லை. எனவே ஒன்று நீங்கள் கோட்பாட்டை கைவிட வேண்டும் அல்லது கணித வரையறைகள் வழியே உங்களுக்கு கிடைத்தவற்றை நீங்கள் தூக்கி எறிய வேண்டும். இதுதான் அன்று அந்த விஞ்ஞானிகளின் சிக்கலாக இருந்தது. ‘புலம்’ என்பது என்ன? புலம் என்பதே ஒரு பருபொருளாகி வெளியை (space) நிறைத்து அது ஆக்கிரமிக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் ஒரு அளவீடாக வெளிப்பட முடிந்த ஒன்று. இரும்பு துகள்களை காந்த புலனுக்கு உட்படுத்தும்போது ஏற்படும் கோட்டு அமைப்பு ‘புலம்’ என்பதற்கு ஒரு உதாரணம். குவாண்ட இயந்திரவியல் கோட்பாடுகள்-நாம் மின்னூட்ட துகள்களுக்குள் நடக்கும் பரஸ்பர ஈர்ப்பை சார்பியலுக்கு உட்படுத்தி கணக்கிடும்போது அர்த்தம் பெறுகின்றன-இவை வெளி நிறைத்த புலம் என்பதன் அம்சங்களை நமக்கு வழங்க முடியும். இந்தப் புலம் என்பதில் ஏற்படும் சலசலப்புகள் மின்காந்த அலைகள் அல்லது கதிர்வீச்சு அல்லது ஒளியால் ஏற்படுவதை நாம் சரி பார்க்கவும் முடியும். இந்த சலசலப்புகளை நாம் வெளி வழியே உட்துகள்கள் கடத்தும் இயற்கை விசைகளின் வெளிப்பாடாகவும் நோக்க முடியும். கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் அன்று குவாண்ட புலக் கோட்பாடு மின்காந்த அலைகளின் அடிப்படையில் மட்டுமே கணக்கீடுகளை செய்ய முடிந்தது. அது அணுக்கரு மென் விசையை தோராயமாக கணக்கிட முடிந்தது. ஆனால் இந்த துகள் அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கும் ஒரு வன்விசை எது என்பதை அதனால் காட்ட முடியாமல் தோற்றது.
கோட்பாட்டாளர்கள் அடிப்படை துகள்களை விளக்க மேலும் வலுவான கோட்பாட்டை அடைய முயன்றார்களா?
டேவிட் கிராஸ்: என்னுடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் ஜெஃப்ரி கியூ, அதையும் தாண்டி யோசித்தார். அவர் அடிப்பைட துகள் என்ற ஒன்றே இல்லை என்று அறிவிக்க துடித்தார். எனவே எஸ்-மாட்ரிக்ஸ் அமைப்பில் துகள்கள் துகள்களை தாங்களாகவே உற்பத்தி செய்கின்றன. எந்த துகளும் எதற்கும் கீழே அதைவிட அடிப்படை என்று கிடையாது என்ற ஒரு புதிய ரக கோட்பாட்டை முன் வைத்தார். இதை அவர் அணுக்கரு-ஜனநாயகம் அல்லது பூட்ஸ்-டிராப் தன் கட்டமைப்பு என அறிவித்தார். சிலருக்கு பூட்ஸ்-டிராப் ஒரு புரட்சிகரமான புதிய அணுகுமுறையாகப்பட்டது. புதிய கோணமும்கூட. ஒருவர் புரோட்டானில் எத்தனை புதிய உட் துகள்களை வேண்டுமானாலும் உற்பத்தி செய்து கொள்ளலாம். அதற்கு எதிர் திசையிலும் நடக்கலாம். கலிபோர்னிய புரோட்டான் வேக செயலிக் கருவி மூலம் அவர்கள் புரோட்டான் மோதல்களிலும் இறங்கினார்கள்… 1920களில் குவாண்ட இயந்திரவியல் தோற்றுவிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட கால கட்டத்தில் இருந்தே அதன் ஸ்தாபகர்களான வெர்னர் ஹெசன்பர்க், பால் டிராக், நீல்ஸ் போர் போன்றோர் அணுவுக்குள் இயங்கும் விசைகள் குறித்தறிய இன்னொரு இயற்பியல் புரட்சி நடக்க வேண்டும் என்றே கருதினர்.
சரி. இந்த கோணத்தில் உங்களது அணுகுகோட்டிற்குரிய விடுவிப்பு கோட்பாடு எங்கே வருகிறது?
டேவிட் கிராஸ்: அந்த காலகட்டத்தில் இயற்பியலாளர்கள் புதிது புதிதாக பல யோசனைகளை தொடர்ந்து வெளியிட்டார்கள். அவற்றில் மனமயக்கநிலை கோர்வையற்ற உளறல்களும் அடக்கம். ஆனால் அப்படியான யோசனைகளே அணு உட்கரு தர-மாதிரியை அடைந்து காட்டியது என்பதை மறக்கக்கூடாது. இயல்பான இயற்பியலாளர்கள் ஒரு ஆய்வு மாற்றி ஒன்று தொடர்ந்த போதுதான் அந்த தர-மாதிரியை அடைய முடிந்தது. நான் அவற்றில் ஒரு தொடர் சோதனையில் இரண்டு முடிவுகளை அடைய முடிந்தது. குவார்க்குகள் அடைத்த பைகளே புரோட்டான்கள் தனியான குவார்க் என்று ஒன்று கிடையாது. எங்களது ஆய்வில் நாங்கள் கண்டது என்னவென்றால் குவார்க்குகள் வெறும் கணித சமாச்சாரம் அல்ல. அவை அணுவுக்குள் உலவும் நிஜப் பொருட்கள் அவை புரோட்டான்களுக்குள் எப்படி உலாவுகின்றன என்பதை விளக்குவதே அணுகுகோட்டிற்குரிய விடுவிப்பு கோட்பாடு. அது கணித முறையில் நிரூபணம் ஆனது. புரோட்டானுக்குள் ஒன்றுக்கொன்று குவார்க்குகள் அருகருகே இருக்கும் போது, அவை எவ்வித தடங்கலும் இன்றி உலாவுகின்றன. எனது மிகப் பெரிய ஆச்சரியம்-அவைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகமாகும்போது அவைகளை ஒன்றுக்கு ஒன்று சேர்த்து வைத்திருக்கும் விசையும் அதிகரிக்கிறது. இது ஒரு ரப்பர் பேண்டு போல செயல்படுகிறது. இழுபடும்போது மையத்தை நோக்கிய விசை அதிகரிப்பது போல குவார்க்குகள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன.
அமெரிக்க அரசு அறிவியல் ஆய்வுகளை கைவிட்டதாக சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளீர்கள்.
டேவிட் கிராஸ்: இது புதிதல்ல. குடியரசுக் கட்சியின் முந்தைய போர் கால ஆட்சியான ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சியில் இது தொடங்கியது. தற்போது அறிவியலில் நடக்கும் முக்கிய கோட்பாட்டு ஆய்வுகளை முற்றிலும் முடக்கி விடும் அபாயம் சூழ்கிறது. அன்று 2008இல் தனி பாராளுமன்ற அவசர சட்டம் கொண்டு வந்து அடிப்படை அறிவியலை முடக்கினார்கள். இப்போது டிரம்ப் அரசு முற்றிலும் 200 வருடம் பின்னால் போய்விட்ட உணர்வை தரும் வகையில் அறிவியல் அலுவலகமும், தேசிய அறிவியல் பவுண்டேஷன் என வரிசையாக கை வைக்கிறது. வலதுசாரி சிந்தனை அவர்களது கண்களை குருடாக்குகிறது. மனித முன்னேற்றம், பிரபஞ்ச புரிதல், நவீன பார்வைகளை நீர்த்துப் போக வைக்க துடிக்கிறார்கள். பொதுவாகவே அறிவியல் பூர்வ அணுகுமுறையை கைவிட்டு உணர்வுபூர்வமான-வெற்று காழ்புணர்வு அரசியல் மூலம் அறிவியலை முடக்கும் நவீன அரசு, மக்களை கொத்து கொத்தாக மரணிக்க வைத்த கலிகுலா அரசுக்கு இணையானதே.
பன்னாட்டு பருவநிலை மாற்றம் குறித்த மெய்னாவு (Mainavu) ஆவணத்தில் கை சான்றிட்டீர்கள். பிரான்ஸ் அதிபரிடம் வழங்கினீர்கள். அதுபோல இங்கே (அமெரிக்கா) செய்ய உத்தேசம் உண்டா.
டேவிட் கிராஸ்: 2015இல் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச பாரீஸ் மாநாட்டில் நாங்கள் 65 நோபல் பரிசாளர்கள் கலந்து கொண்டோம். அமெரிக்க அரசு இந்த பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் இல்லை. புரியாதது போல நடிக்கிறது. புவிவெப்பம் அதிகரிப்பது சீன நாட்டின் சதி என்று எந்த சுய சிந்தனையாளராவது பேச முடியுமா? பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, எதை காட்டுகிறது. புவியின் அடுத்த இரண்டு டிகிரி வெப்ப அதிகரிப்பிற்கு இந்த அமெரிக்க அரசு முக்கிய காரணிகளில் ஒன்றாகி உள்ளது.
இழைக்கோட்பாட்டினை பற்றி பேசுவதைவிட அரசியலில் மனிதநேய அறிக்கை (Humanist Manifesto) உட்பட உங்கள் செயல்பாடு அமைகிறதே.
டேவிட் கிராஸ்: அறிவியல் எப்போதும் உண்மையை தேடுகிறது. மனிதநேயம், புவிப் பாதுகாப்பு, இவை குறித்த அக்கறை அரசியல் எனில் அதுவும் உண்மையை தேடுவதே. ஆய்வகத்தோடும் கோட்பாடுகளோடும் உங்கள் உலகம் முடிந்துவிடவில்லை. உதாரணமாக மனிதநேய அறிக்கையை நான் ஏன் கையொப்பமிட்டு ஆமோதித்தேன்? நீங்கள் மனிதப் பண்புகளுடன் சகோதரத்துவத்துடன் உங்களது நடத்தை விதிகளை அமைத்துக் கொள்ள உங்களுக்கு கண்டிப்பாக மதம் தேவை கிடையாது சமூக அக்கறைக்கும் தேவாலயத்திற்கும் அல்லது அது குறித்த நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை. இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத ஒருவர் மனிதநேயப் பண்புகளோடு உயர்ந்த நடத்தை விதிகளோடு வாழ முடியும். எந்த மத த்தையுமே சாராத ஒரு புதிய மதமற்ற மனிதக் குழுவின் பிரகடனம்தான் மனிதநேய அறிக்கை. நான் அந்த அறிக்கையை முழுமையாக நம்புகிறேன் மதமற்ற மனித உலகம் என்பது சாத்தியமே என கருதித்தான் அதில் கைச்சான்று இட்டேன். அறிவியல் ஆய்வுகளின் உண்மையான நேசர்கள் மனிதநேயர்களாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
உங்களது கோட்பாடு, சமன்பாடு அணு அமைப்பு இதில் எதையும் விவரிக்க படைப்பு சக்தி எனும் கடவுள் தேவைப்படவில்லையா?
டேவிட் கிராஸ்: இல்லை. இப்படி ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டிய அவசியமும் அறவே எழவில்லை.