- விட்டல்ராவ்
”மதம் ஓர் அபினி” என்றார் மார்க்ஸ்.Poppy is Also A Flower” என்ற திரைப்படமும் அதன் புத்தக வாசிப்பும் சிலிர்க்க வைத்த அனுபவம். அந்த அழகிய மலர் பாப்பி, பயங்கர போதையை ப்போதையில் உசுப்பி விடப்படும் உணர்ச்சி வயப்படலை அளிக்கவல்ல போதைப் பொருளைக் கொண்ட செடியில் பூப்பதாகும். ஆப்கானிஸ்தானப் பகுதியில் காணப்படுவது. இக்கட்டுரையை எழுதும் சமயம் நாம் எவ்வித சூழலில் எத்தகைய மன இறுக்கத்தில் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம் என்பது செல்லித் தெரியவேண்டியதில்லை. வேற்றுமையும் போரும் உயிர்கள் மற்றும் பொருட் சேதமும் தாங்க ஒண்ணா செயற்கைப் பஞ்சமும் மனிதனுக்கு மனிதன் நாட்டுக்கு நாடு ஏற்படுத்திக் கொள்ளும் அழிவுப் பாதைக்கான முக்கிய காரணங்களில் தலையாயது மதம்தான் என்பதில் வேறொரு கருத்து இருக்காது.
மதத்துக்கு மதம், ஒரே மதத்துக்குள்ளான உட்பிரிவுகள் என இணக்கம் காட்டி அமைதியாக வாழ்ந்து வந்த பொழுதுகளின் நிலை நிரந்தரமல்ல. நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்திருக்கிறது. பட்டியலோ எடுத்துக்காட்டுகளோ அவசியமில்லை. அவதூதர்களும் ஞானிகளும் அவ்வப்போது தோன்றி இணக்கம் ஏற்பட ஆவன மேற் கொண்டிருக்கும் வரலாற்றிலும் கூர்ந்து பார்த்தோமானால் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு சார்பு உணர்வை ஏற்படுத்தக்கூடியதாகவும் தோன்றும். எனவே அவற்றின் முயற்சியிலும் குறுக்கீடும் எதிர்ப்பும் நிகழ்ந்திருக்கின்றன.
மதங்களிடையே தீவிர நோக்கிலான இடைவெளியைக் குறைத்தும் நீக்கியும் உலகில் அமைதியும் மக்கள் நல்வாழ்வும் கருதி மறை மெய் ஞானிகள் அவ்வப்போது தோன்றி ஆவன மேற்கொண்டிருக்கும் வரலாற்றிலும் கூர்ந்து பார்த்தோமானால் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு சார்பு உணர்வை ஏற்படுத்தக்கூடியதாகவும் தோன்றும். எனவே அவற்றின் முயற்சியிலும் குறுக்கீடும் எதிர்ப்பும் நிகழ்ந்திருக்கின்றன.
மதங்களிடையே தீவிர நோக்கிலான இடைவெளியைக் குறைத்தும் நீக்கியும் உலகில் அமைதியும் மக்கள் நல்வாழ்வும் கருதி மறை மெய் ஞானிகள் அவ்வப்போது தோன்றி ஆவன மேற் கொண்டு வாழ்ந்து போயிருக்கிறார்கள். பலன் ஓன்றும் நிரந்தரமானதாயில்லையென்றே தெரிகிறது. அந்த வழியில் இஸ்லாமிய சமய உட்பிரிவுகளில் ஒன்றாக பொருள் கொள்ளும் சூபியிஸம் தன் பங்கிற்கு பல சூபிகளை காட்டிச் சென்றிருக்கிறது. சூபிகளுக்கு நல்லடக்கமும் பின்னர் அவர்களை நினைவு கொண்டு தொழுது வரும் தர்காகளும் நிறைய இருக்கின்றன. தர்கா வழிபாட்டையும் சூபிகளையும் ஆசார இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்றும் தெரியவருகிறது. தமிழகத்தில் குணங்குடி மஸ்தானும் கர்னாடகத்தில் சாந்த் சிசு நாள ஸரீஃப சாஹிப் பரு ஆகியோரின் பாடல்களில் மிகவும் பூடகமான கருத்துக்களால் குறிப்பிட்ட மதம் என்று கூறாமல் ஒரு மறை மெஞ்ஞான போதகம் மிளிர்கிறது. சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற் பொழிவை வாசித்தவர்கள் இத்தருணத்தில் நினைவு கொள்ளுவார்கள். சூஃபிஸம் பற்றி அவர் பேசுகையில், சூஃபிஸம் என்பது வேதாந்தத்தால் மென்மைபடுத்தப்பட்ட, அழகுபடுத்தப்பட்ட இஸ்லாம் சமயமாகும், என்கிறார். ஆனால் அவர் எந்த குறிப்பிட்ட சமய உட்பிரிவின் பிரதிநிதியாகவும் கலந்து கொள்ளாமல் சர்வ வேதங்கள் கூறும் அனைத்துலக சமயத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு மானுடம் முழுவதின் சமயப் பேரார்வத்தைப் பற்றி பேசினார். ஆனால் அனைத்துலக சமய வாதம் என்பது சிகாகோவில் வரவேற்கப்படாததோடு நேரிட்ட தவிர்க்க இயலாத தனியொரு மதம் பேணும் வெறி என்பது வெளிப்பட்டது. சமயம் சார்ந்த விசயமே கத்திமுனை மீது நடப்பதாகும். சாமர்செட் மாம் கூட இவ்வுணர்வுகள் மின்னலிட்ட தம் நாவலை RAZORS EDGE என அழைத்தார். இந்த கத்திமுனையின் மேல் நடக்கும் சங்கதிகளை சார்பு இன்றி நன்கு எழுதப்பட்ட ஒரு நூல், IN GOOD FAITH A JOURNEY IN SEARCH OF AN UNKNOWN INDIA என்பது எழுதியவர் திருமதி சபா நக்வி (SABA NAQVI) இது திரு முடவன் குட்டி முகம்மது அலியின் சிறந்த தமிழ் பெயர்ப்பில் வாழும் நல்லிணக்கம் அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம் என்று சிறந்த முறையில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
இன்றைய அரசியல் சமூக சூழ்நிலையில் மதச் சகிப்புத் தன்மை என்பது உலகளாவிய அளவிலும் இந்திய உப கண்டத்தில் இந்தியாவில் பெருமளவுக்கும் தாழ்ந்து போய் அபாயகரமான விளிம்பை எட்டிவிடும்படிக்கு இறங்கியிருக்கிறது. இந்த மனநிலையில் திருமதி சபா நக்வி இந்தியாவின் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் பயணித்து நகரங்களிலும் கிராமங்களிலும் அலைந்து திரிந்து அந்த மதச் சகிப்புத் தன்மையும் மத நல்லிணக்கமும் எப்படியெல்லாம் ஜீவித்து வருகிறதென்பதை அனுபவ பூர்வமாக கண்டு எழுதியிருக்கும் கட்டுரைகள் கொண்ட நூல், பெரும்பாலும் அவர் பார்த்தது, அறிந்தது, கேட்டது பிறகு சொல்லுவது யாவும் சூஃபிஸம் சூஃபிகள் பற்றியதாகவே இருக்கிறது. எனது அனுபவம் வார்த்த பார்வையில் சொன்னால், இந்து சமயத்தைச் சார்ந்த அதுவும் பாமர மக்கள் அதிகளவில் பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் ஞானிகளின் அடக்கத் தலங்களுக்கும் போய்ப் பிரார்த்தித்து மெழுகு வர்த்தியேற்றுதல், சர்க்கரை ஊதுபத்தியளித்தல் காணிக்கை செலுத்துதல் போன்ற பக்தி காரியங்களில் ஈடுபடுகின்றனர். பிற மத்த்தினர் இந்து சமய வழிபாட்டு தலங்களுக்கு பக்தி மேலிட்டு வருகை தருவது வழிபாடு செய்வது என்பது அபூர்வம். இதற்கு முக்கிய காரணம், அரசு இந்து அறநிலைய கட்டுப் பாட்டுத்துறையே. புகழ் பெற்ற பிரம்மாண்டமான கோயில்களில் கருவரையின் வாசலிலேயே, ”இந்துக்கள் அல்லாத பிற சமயத்தினருக்கு அனுமதியில்லை” என்று அறிவிப்பை வைத்திருக்கிறார்கள்.
பயங்கரவாதமும் நாசவேலையும் அதிகரிக்கவும் இப்படியான தடை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களிலும் தர்க்காக்களிலும் இவ்வித தடை யாருக்கும் என்றைக்கும் எதுவுமில்லை.
இந்த நிலையில் இந்த நூலில் செய்திகள் ஒத்துப் போகின்றன. மேற் கொண்டு மத நல்லிணக்கத்துக்கான யோசனைகள் எதையும் இந்நூலில் காணமுடியவில்லை. இன்றுவரை இந்திய தேசம் முழுவதும், நூலில் சபா நக்வி சொல்லியிருக்கும் அளவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இப்படியிருக்க, இன்னொரு பக்கம் மதரீதியான பயங்கர சம்பவங்கள் நாள்தோறும் செய்திகளாக வந்தபடியே இருக்கின்றன.
நந்தவனத் தாண்டி தான் வேண்டிக் கொணர்ந்த மண் தோண்டியை போட்டுடைத்த கதை. சபா நக்வியின் பார்வையில் இன்றும் வாழ்ந்து வரும் நல்லிணக்கத்துக்கான சமய அந்நியோன்யம் நிலைத்து வாழ்ந்தால்தான் மேற்கொண்டு பல்வேறு நல்லிணக்க நடைமுறைக்கு உந்து சக்தியாக விளங்கும். அவரது அயராத நீண்டு பரந்த பயணங்கள் சமய நல்லிணக்கம் இன்றும் இந்திய கிராமங்களிலும் பல்வேறு திசைகளிலுள்ள பாமர மூலை முடுக்குகளிலும் வாழ்ந்து வருவதைச் சொல்லுகின்றன.
சபா நக்வி, இந்தியாவின் முன்னணி வாரச் செய்தி இதழான அவுட்லுக்கில் அரசியல் தொடர்பான செய்திகளின் பதிப்பாசிரியர். அரசியல், ஆட்சி நடப்பு விவகாரம் ஆகியவை குறித்து எழுதி வருபவர். இந்தியா முழுக்க விரிவான அளவில் பயணம் மேற் கொண்டவர். நாட்டின் தேர்தல்கள் குறித்து குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், குஜராத் மாநில தேர்தல்கள் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். அரசியல் நிருபராக, ஆய்வாளராக மட்டுமல்லாமல், அடையாளம் பண்பாடு குறித்த பிரச்சினைகளையும் தொடர்ந்து கவனித்து வருபவர்.
கடைய நல்லூரைப் பிறப்பிடமாய்க் கொண்டு பெங்களூரில் 41 ஆண்டுகள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுக்குப் பின்னர், தம் சொந்த ஊரில் வசிக்கும் முடவன் குட்டி முகம்மது அலி, முடவன் குட்டி என்ற புனைபெயரில் கவிதை சிறுகதை முயற்சியும் செய்து வருபவர். திண்ணை சமரசம், ஆகிய பத்திரிகைகளில் அவை வெளி வந்துள்ள நிலையில், இவரது சிறந்த மொழி பெயர்ப்பு நூல் இது.