- மயிலம் இளமுருகு
கல்வியின் நோக்கம்
கல்வி நோக்கம் மனிதநேயத்தோடு கூடிய ஜனநாயக சமத்துவ, சமயம் சாராத சமூகத்தைக் கட்டி எழுப்புவதாகும். தனிமனிதனுள் புதைந்திருக்கும் முழு ஆளுமையை வளர்த்தெடுப்பதும் இதனை மொத்த சமூகத்தின் நலனுக்குப் பயன் பெறவைப்பதும் கல்வியின் இலக்காகும். சமத்துவம், சமூகநீதியோடு கூடிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் பாதையாகவும் கல்வி செயல்பட வேண்டும். பெரும்பாலான மக்களின் நலனுக்காக அறிவை உற்பத்தி செய்வதில் கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கல்வி சிலரின் லாபம், ஆதிக்கம், அதிகாரம் என்பவற்றிற்கான சாதனமாக இருத்தல்கூடாது. கல்விச் சந்தையில் வணிகப் பொருளாக ஒரு நாளும் இருக்க முடியாது. கல்வி என்ற மாபெரும் முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் அளவு, தரம், சமத்துவம் என்பதாகும். மூன்றும் ஒன்றாக இணைந்தால்தான் கல்வி முழுமை அடையும்.
முதல் தலைமுறை கற்போர் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர் மிகுதியாக உள்ள நமது நாட்டில் கல்வி என்பது, தான் முன்னேறவும் சமூக முன்னேற்றத்தை உறுதிபடுத்தவும் வளர்ச்சிக்கும் கருவியாக இருக்கின்றது. மக்களின் இந்த விருப்பத்தினை நிறைவேற்றும்விதமாக கல்வி அமைப்பு இருக்க வேண்டும். சமூகத்தின் புதுமையாக இதனை விளக்கும் அளவுகோலாக அனைவருக்கும் கல்வி என்பது இன்றைக்குப் பார்க்கப்படுகிறது.
கல்விக் கொள்கை
இன்றைய இந்தியாவின் கல்விக் கொள்கைக்கு மையமான அக்கறை எதுவாக இருக்க வேண்டும் என்றால் இந்த மூன்று புள்ளிகள் கொண்ட முக்கோணத்தை குறிப்பிடலாம். சிறந்த கல்வியாளரான நாயக் இதை Trinity of Indian Education Quantity, Quality, Equality என்று குறிப்பிடுகிறார். பலகோடி கற்போருக்கு கல்வி தரும் எண்ணிக்கை பிரச்சனையும் சமூகத்தின் ஆழ்ந்த ஏற்றத்தாழ்வுகளை மீறி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு தருவதும் அதேநேரம் குறைந்த தரத்தை ஒத்துக்கொள்ளாது நல்ல தரத்தை உறுதிப்படுத்துவதும் அங்கீகரிக்க வேண்டியதாக பார்க்கப்படுகிறது.
நிறைவான கற்றல் சூழலைப் பேணுதல்
வகுப்பறையில் மட்டுமல்லாது பள்ளி வளாகத்திலும் கல்வி சுற்றுலா போன்ற வெளி உலகிலும் மாணவர்கள் அறிவைப் பெறுகின்றனர். அதாவது வகுப்பறை, பள்ளி வளாகம், வெளி உலகு அவற்றிலெல்லாம் கற்றல் நிகழ்கிறது. பள்ளி என்பது மாணவரும் ஆசிரியரும் அறிவைப் பெறவும் பெருக்கிக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம். அங்கு பள்ளி அறைகளில் கல்வி கற்பிக்கப்படும். வெளியிலும் விளையாட்டுத்திடலிலும் மாணவர் ஒருவரோடு ஒருவர் பழக வாய்ப்பு உண்டு. பள்ளி வகுப்புகளுக்கு இடையில் கிடைக்கும் நேரங்களிலும் மாணவர்கள் தம்மிடையே பலச் செய்திகளைப் பகிர்ந்து கொள்வர். வகுப்புத் தேர்வு, ஆண்டு இறுதித்தேர்வு இவற்றிற்கு கடைசி நேரத்தில் படிப்பது, தேர்வு எழுதுவது, தேர்வு முடிவுகளைக் கவலையுடன் எதிர்நோக்குவது, தேர்வு முடிவை அறிந்து வருந்துவது அல்லது மகிழ்வது, இவையாவும் கலந்ததே பள்ளி வாழ்க்கை. இவற்றில் ஒவ்வொரு நிகழ்விலும் ஏற்படும் அனுபவங்களால் அறிவு வளர்கிறது என்பதில் ஐயமில்லை.
எவ்வாறு அறிவைப் பெற விரும்புகிறார்கள் என்பதில் வேறுபாடுகள் உண்டு. சில குழந்தைகள் நேரடியாக பார்த்துக் கற்றுக் கொள்ளும். சில செவிவழி, கேள்விவழி ஞானம் பெறும். சிலத் தொட்டு செய்முறையில் கற்றுக்கொள்ளும். இவ்வாறு கற்றுக் கொள்ளும் முறைகளில் வேறுபாடுகள் உள்ளன.
மொழி
‘கல்வியைப் பற்றி விவாதிக்கும்போது சமுதாய முழுவதுக்குமான திட்டம் பற்றியே விவாதிக்கிறோம்’ என்று பெளலே பிராய்ரே கூறியுள்ளார். மனித மூளை வலது, இடது என்று இரு பகுதிகளைக் கொண்டது என்றும் இடது மூளை சொற்கள் மற்றும் மொழி அறிவு ஆகியவற்றை வளர்க்கும் என்றும் நோபல் அறிஞர் பேராசிரியர் ரோஜர் ஸ்பெர்ரி கண்டறிந்தார். மூளை வளர்ச்சி ஒருவரைப் போல மற்றொருவருக்கு இருப்பதில்லை. அதனாலே ஒருவர் பன்மொழிப் புலவராக உருவாகுவதும் மற்றொருவர் தில்லியில் 40 ஆண்டுகள் கழித்தும் ஒரு வாக்கியம் இந்தியில் பேசத்தெரியாமல் இருப்பதும் ஆகும்.
மும்பையில் பல்லடுக்கு கட்டிடத்தில் உள்ள நான்குவயது தமிழ்க்குழந்தை இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளைப் புரிந்து கொள்ளவும் பேசவும் கற்றுக் கொள்கின்றது. எந்தப் பயிற்சி பெற்ற ஆசிரியரிடமிருந்தும் அல்ல. தன்னுடன் விளையாடும் அம்மொழிக் குழந்தைகளே அக்குழந்தைகளின் ஆசிரியர்கள். எவ்வாறு ஒரு குழந்தை தாய்மொழியைப் பேசக் கற்றுக் கொள்கின்றதோ அதைப் போன்றதே பன்மொழிப் புலமைக்கு ஆதாரம். சிறு குழந்தைகள் எளிதில் மொழியை கற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வின் முடிவு. நோம் சாம்ஸ்கி என்ற உலகப்புகழ் பெற்ற மொழிஅறிஞர் குழந்தைகள் மொழியைக் கற்பது என்பது தனது சூழலில் நடைபெறும் பேச்சுகளை கேட்டு தானும் அவ்வோசைகளை எழுப்ப வேண்டும் என்ற முயற்சியின் விளைவு என்பார்.
குழந்தைமொழி
மொழியினைக் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாகவே நம்மில் பலரும் கருதுகிறோம். ஆனால் சிந்திப்பதற்கும் உணர்வதற்கும் பல்வேறு சூழல்களில் வினைபுரிவதற்கும் மொழி பயன்படுகிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். குழந்தையின் ஆளுமையை, திறமைகளை வளர்த்தெடுப்பதில் குழந்தையின்மொழி முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால் குழந்தைகளிடையே பணிபுரிவோர் மொழியை மேலும் விரிவாக பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. உலகைப் பற்றிய பார்வையை உருவாக்குவதிலும் ஆர்வத்தை தூண்டுவதிலும் திறமைகளை வளர்ப்பதிலும் இன்னபிறவற்றைற்காகவும் நுட்பமான கருவியாக ஆனால் அதே நேரத்தில் வலிமையான கருவியாக குழந்தைமொழி முக்கிய பங்கு வகிக்கிறது.
கல்வி மொழி
கல்வி மொழியாக எந்த ஒரு மொழியும் தனித்து இயங்குவது இல்லை. ஏனென்றால் கல்வி என்பது பொது மக்களுக்கானதாக இருக்கவில்லை. அது சமூகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரிவினருக்கு இன்னொரு பிரிவினரால் செவி அளிக்கப்பட்டு ஓதுவிக்கப்பட்டு வந்தது. கல்வி அனைவருக்கும் ஆனது என்ற கோட்பாடு உருவாகும் காலம்வரை கல்விக்கான மொழியை அவர்களே தீர்மானித்தனர்.
கல்விமொழி ஒரு பக்கமிருக்க நிர்வாக மொழியாக ஆங்கிலத்தைத் தெரிவு செய்த பிரிட்டிஷார் அதனைப் பரப்ப பெரும் முயற்சி செய்தார்கள். மெக்காலே கல்விமுறை என்று நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் அந்தமுறையை அவர்கள் அவ்வளவு எளிதாகக் கொண்டு வந்துவிடவில்லை. கல்வி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலை அருகே சிலையாக நின்றுகொண்டிருக்கின்ற தாமஸ் மன்ரோவும் மாநகராட்சி மன்ற கட்டிடத்தின் பெயர்தாங்கி நிற்கிற ரிப்பன் பிரபுவும் இன்னும் பிற மூன்றுபேரும் இந்திய மக்களுக்கு அவரவர் தாய்மொழியில்தான் கல்வி அளிக்க வேண்டும் என்று வாதாடினார்கள். இந்தவாதத்தை நிராகரிக்க மெக்காலே அவர்கள் முன்வைத்த காரணம்தான் முக்கியமானது. ஆங்கிலேயர்கள் தங்களது ராஜ்ஜியத்தை விரிவாக்க அவன் கனவு கண்டான். கிழக்குப் பிராந்தியத்தின் வழியாக வெகுவிரைவில் மாற இருக்கிற மொழியான ஆங்கிலமொழியே இந்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் மெக்காலேவின் கருத்தாக இருந்தது.
தாய்மொழி – பயிற்றுமொழி
தாயின் கருவில் இருக்கும் குழந்தை பிறப்பதற்கும் 100 நாட்களுக்கு முன்பிருந்தே தாய்பேசும் மொழியை உணர்ந்து கொள்வதாக அறிவியலார் கூறுகின்றனர். பிறந்த குழந்தை தாய்வழியாகவும் அக்கம்பக்கத்தார் மூலமாகவும் மொழியை உள்வாங்கிக் கொள்கிறது. பள்ளிக்குச் சென்று படிப்பதற்கு முன்பே அது இலக்கணத்துடன் வாக்கியத்தை அமைத்துப் பேசுகிறது. காரணம் செவிவழிகேட்டு அதனை மனதில் இருத்திக் கொள்வதுதான் அதற்குக் காரணம். இப்படி இயல்பாக வளர்கிற குழந்தை ஐந்து வயதில் பத்தாயிரம் சொற்களைத் தனது மூளையில் பதிவு செய்து கொள்வதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓர் இளம் மாணவனுக்கு, கற்பவனுக்கு எந்தப் பயிற்றுமுறை பொருத்தமானதாக இருக்க இயலும்? பெரும்பான்மையான கருத்துகள் ஆதரவளிப்பது ‘தாய்மொழி’க்குத்தான். நகர்ப்புற, உயர்குடிப் பிரிவினர், ஆங்கிலத்திலேயே கற்று வளர்ந்து மகிழ்வோடும் வெற்றிகரமாகவும் உலகை வசப்படுத்திக்கொள்ள ஆங்கிலமே சிறந்தது என்று சொல்வது முற்றிலும் தவறான கருத்தாகும்.
ஐ.நா சபை – கல்வி
1951 ல் வடிவமைக்கப்பட்ட ஐ.நா சபையின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பின் யுனெஸ்கோ நிபுணர் குழு தெள்ளத் தெளிவாய்க் கூறுவது யாதெனில் கல்வியைப் பொறுத்த அளவில் தாய்மொழியில் கற்பிப்பதை எத்துணைக் கட்டம்வரை நீட்டித்தாலும் கற்பிப்பினும் அது எவ்வளவு சாத்தியம் உள்ளதோ அதைச் செய்திட பரிந்துரைக்கிறோம். குறிப்பாக, பள்ளிக்கல்வி துவங்கும்போது அக்கட்டத்தில் தாய்மொழியில் இருப்பது சிறந்த அளவில் புரிந்துகொள்வதற்கு உதவுவதுடன் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள இடைவெளியை எந்த அளவு சாத்தியமோ அந்தளவு குறைக்கவும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆசிரியர் முன்தயாரிப்பு
வகுப்பறையில் கற்பிக்கச் செல்லும் முன்பு அதற்காக முன்தயாரிப்பு செய்யாமல் செல்வது எந்தவகையிலும் நியாயமில்லை. குறைந்தபட்சம் என்ன கற்பிக்கப் போகிறோம், முன்பு இதே பாடத்தைக் கற்பித்தபோது ஏதேனும் பிரச்சனைகள் இருந்தனவா, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பாடம்தானா இது என மனதுக்குள் சிறிதுநேரம் எண்ணிப்பார்க்கவேண்டும். கவிதை, நாடகம் போன்றவற்றை ஒருமுறை வாசித்துக் கொள்வது நல்லது. நிலப்படம், விளக்கப்படம் போன்று ஏதேனும் தேவையானால் தேடி எடுத்துக்கொண்டு போகவேண்டும். நடத்தி முடித்ததும் கொடுக்கவேண்டிய பகுதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிந்தனை இருக்க வேண்டும்.
கற்பித்தலுக்கான தயாரிப்பு
சில பாடங்கள் நடத்தத் துணைக்கருவிகள் தேவைப்படும். அவற்றைத் திடீரெனச் செய்யமுடியாது. துணைக்கருவிகளைச் செய்வதற்கும் பாடம் நடத்தத் திட்டமிடுவதற்கும் பள்ளி தொடங்குவதற்குச் சில நாள் முன்பே ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கவேண்டும். இந்த முறையை ஆரோவில் பள்ளிகளில் இப்போதும் கடைப்பிடிக்கிறார்கள். பள்ளி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு பள்ளிக்கு வந்து தயாரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். நல்ல பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு சில நாள் முன்பே கற்பித்தலுக்கான தயாரிப்பில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் சில நாள் தயாரிப்பு வேலைசெய்து செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணன் ஒருமுறை மாநிலங்களவையில் பேசியபோது ‘இந்தியக் கல்வியின் பெரும் சாபக்கேடு புரியாமை என்னும் சுமை. இந்தச்சாபக்கேட்டைதான் நம் குழந்தைகள் தினந்தோறும் வகுப்பறையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார். இதையே யஸ்பால் குழு அறிக்கை 1993 ‘கற்பிப்பதோ ஏராளம் கற்றுக்கொள்வதோ புரிந்துகொள்வதோ வெகுகுறைவு’ எனக் குறிப்பிடுகிறது. ஏன் கற்பிப்பதைக் கற்றுக் கொள்ள முடிவதில்லை? அறிவின் பிறப்பே கேள்விகள்தான், ஏன், எவ்வாறு, எதற்காக, யாரால், யாருக்காக? கேள்விகளின்றி அறிவு வளர்ச்சி இல்லை. அதனால் வகுப்பறைகளில் குழந்தைகளின் கேள்விக்கு இடம்கொடுக்க வேண்டும். கேள்விகளை கேட்க அனுமதிப்போம். கேள்விகள் மூலமாக அறிவான சமுதாயத்தை உறுவாக்குவோம்.
பெற்றோர் தம் கடமையை ஆற்றும் முறைகள்
பெற்றோர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து தங்களது குழந்தைகளைத் தவறாது பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதாது. அவர்கள் பள்ளியில் பெரும் தேர்ச்சி என்ன? அதனை உயர்த்த நாம் என்ன வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்பதைக் கண்காணித்து உரியநேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பெற்றோர்கள் கல்வி வழங்குவது ஆசிரியர் பொறுப்பு என்று ஒதுங்கி விடுகிறார்கள். இது தவறான செயலாகும். ஒரு நாளில் சுமார் 5 மணி நேரம் மட்டுமே குழந்தைகள் ஆசிரியர்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கிறார்கள். எனவே பெற்றோர்களின் பொறுப்பு மிகவும் அதிகமானதாகும். சில பெற்றோர்கள் பள்ளிகளில் நடக்கும் விழாக்கள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொள்வதில்லை. மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போதுதான் தமது குழந்தைகளின் திறமைகள் மற்றும் தேவைகளை அறியமுடியும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செவ்வனே ஆற்றினால்தான் அவர்தம் கல்வி சிறக்கும்.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் – திருக்குறள் 67
மேற்கோள் நூல்கள்
- குழந்தை மொழியும் ஆசிரியரும், கிருஷ்ணகுமார், நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி, முதற்பதிப்பு -2007.
- தாய்மொழிக்கல்வி, தொகுப்பு- ஜோ. ராஜ்மோகன், புக்ஸ் பார் சில்ரன், சென்னை, முதற்பதிப்பு -2015.
- தமிழக பள்ளிக்கல்வி, ச,சீ. இராசகோபாலன், புக்ஸ் பார் சில்ரன், சென்னை, முதற்பதிப்பு -2007.
- சமச்சீர் கல்விமுறை, ச. முத்துக்குமரன் குழு அறிக்கை, சாந்தா ப்ளிஷர்ஸ், சென்னை, முதற்பதிப்பு -2008.
- கல்வி ஓர் அரசியல், வே. வசந்திதேவி, பாரதி புத்தகாலயம், சென்னை, இரண்டாம் பதிப்பு -2018.
- மெகருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டும், ஆர். ராமானுஜம், பாரதி புத்தகாலயம், சென்னை, முதல்பதிப்பு -2016.
- கல்வி மறுப்பு தொடர்கதை, வே. வசந்திதேவி, யுரேகா புக்ஸ், சென்னை, முதல்பதிப்பு -2009.
- எது நல்ல பள்ளி, த. பரசுராமன், பாரதி புத்தகாலயம், சென்னை, ஆறாம் பதிப்பு -2013.
- கரும்பலகைக்குப் பின்னால்…, தொகுப்பு, சவுத் விஷன், சென்னை, முதல்பதிப்பு -2003.
- ஓரே மாதிரி பள்ளி கல்வி, வே. வசந்திதேவி, பாரதி புத்தகாலயம், சென்னை, முதல் பதிப்பு -2005.
l