- ஸ்ரீதர் மணியன்
வரலாறு என்பது சமூக மேல்தட்டு வர்க்கத்தினரின் வரலாறாக மட்டுமே உள்ளது. இதை விடுத்து சாமானிய நிலையில் பிறந்து, சாமானிய நிலையில் வாழ்ந்த போராளிகள் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறோடு கலந்து மறைந்து விடுகிறது… (நூலிலிருந்து)
சாதிய, பொருளாதார, கல்விப் பின்புலம் உள்ளிட்ட காரணிகள் யாருடைய வரலாறு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அடிப்படைக் காரணிகளாக விளங்குகின்றன என்பதை மறுக்கவியலாது. இருப்பினும், மனமார்ந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும். உண்மை இறுதியில் வெல்லும் என்ற கூற்றினை நிரூபணம் செய்கின்றன. அவ்வகையில் சுயமரியாதைப் போராளியான மூவலூர் அம்மையாரின் வாழ்வும், செயல்பாடுகளும் இன்று தமிழ்ச் சமூகத்தில் காண, வாசிக்கக் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இயல்பாக, மாற்றுக் கருத்துகளையோ, அல்லது அவர்களது செயல்பாடுகளையோ ஓர் அமைப்பில் உள்ளோர் திறந்த மனநிலையுடன் வரவேற்பதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை. தங்களது நிலை அல்லது இருப்பு குறித்தான அச்சம் அத்தகையோரை அங்கீகரிக்க தயக்கத்தினை உண்டாக்குகிறது. ஆண்களுக்கான எதார்த்தநிலையே இதுதான் என்றிருக்கும்போது. பெண் ஒருவர் புரட்சிகரமான கருத்துகளுடன் தங்களிடையே சமநிலை பெறுவதை ஏற்குமளவிற்கான சூழல் நமது சமூகத்தில் அமைவது நடைமுறையில் கடினமாகிறது. கூடுதலாக இது நிகழும் காலமும் முக்கிய காரணியாகிறது.
சமூகத்திற்காகப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட இத்தகையோர் முதலில் தங்களுக்கான களத்தினை அமைப்புகளினூடாக உறுதி செய்து கொள்வதே பெரியதொரு போராட்டமாகிறது. இவ்வாறான சூழல்கள் இத்தகைய சமூகப் போராளிகளுக்கு உந்துதலாக அமைவதற்கு இத்தகைய புறக்கணிப்புகளே காரணியாகின்றன. இவை அளிக்கும் சோர்வும், தடைகளும் சொற்ப வாநாளினைக் கொண்டவை. இத்தகையோரின் செயல்பாட்டுத் தளங்களுக்கு இத்தடைகள் வலுவானதொரு அடித்தளமைத்துக் கொடுப்பவை என்பதும் மெய்யாகிறது. எனவே, அவற்றிற்கு நாம் நன்றி கூறுதலும் தகும்.
வறிய குடும்பத்தில் பிறந்த அம்மையாரது வாழ்வு மிக்க அவலநிலையிலிருந்தது. அவரை பத்து ரூபாய் பணத்திற்காக அவரது பெற்றோரே ஒரு தாசியிடம் விற்றனர். அப்பெண்மணி அவருக்கு ஓர் ஆசிரியரை நியமித்து கல்வி கற்றிட வாய்ப்பளித்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற்றார். தாசிகுல வழக்கப்படி அவருக்கு பேரளம் சுயம்புபிள்ளையிடம் இசைப்பயிற்சி, நாட்டியம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. அதில் வியக்கத்தக்க அளவு அவர் தனது பத்துவயதிற்குள் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் ‘முக்கிய பிரமுகர்களுக்கு‘ பெண்ணை அறிமுகப்படுத்திடும் சடங்கான ‘சலங்கை பூஜையும்‘ நடத்தப்பட்டது. தேவதாசி இனத்திற்காக வழமையான மரபுகளைக் கடைபிடிக்காத காரணங்களால் பலரது எதிர்ப்பினைச் சந்தித்தார். தனது ஆசானாகிய சுயம்புப்பிள்ளையை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கரம் பிடித்தார். அவரது திருமண நிகழ்வு, மதச்சடங்குகள் ஏதுமின்றி கடவுளின் முன்பாக மாலை மாற்றி வாழ்க்கைத் துணையாக வாழ உறுதி மேற்கொண்ட திருமணமாக நடைபெற்றது. இவ்வகையில் இஃது ஒரு புரட்சித் திருமணமாக, பின்னாட்களில் அவர் செய்து வைக்கவிருக்கும் எண்ணற்ற சாதி மறுப்பு, எளிய திருமணங்களுக்கு முன்னோடி நிகழ்வாக அமைந்தது. அவரது துணைவரும் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்டவராக இருந்தது அவருக்கு ஏற்ற பின்புலமாக அமைந்தது.. இளமையில் அவரடைந்த கசப்பான அனுபவங்களே அவரை மாற்றுப் பாதையில் சிந்திக்க வைத்தன. பொருளற்ற மூடநம்பிக்கைகளே சமுதாயத்தின், முக்கியமாக பெண்களின் இழிநிலைக்கான காரணம் என அவர் உறுதியாக நம்பினார்.
சமுதாயத்தில் போகப் பொருளாக மட்டுமே கருதப்பட்டு, மேட்டுக்குடிகளை அண்டி வாழ்ந்து இறுதியில் பல துயரங்களுக்கு ஆளாகி மடியும் அவலம் நிறைந்ததொரு இனம் தேவதாசி இனம். இவர்களில் சொற்ப எண்ணிக்கையினரே வளமாக வாழ்ந்திருக்கலாம். எண்ணற்றோர் அனுபவித்த வேதனைகளும், இழிநிலைகளும் பதிவாவது இல்லை. செல்வாக்குடன் வாழ்ந்த சிலர் குறித்த பதிவுகளே காணக்கிடைக்கின்றன. நிலஉடமையாளர்களான ஆண்களின் எண்ணப்படியே இவர்கள் வாழ நேரிட்டது.
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் அவையெல்லாம் வெறும் கண்துடைப்புகளே. சமுதாயம், குறிப்பாக ஆண்வர்க்கம் இத்தகையோரை எத்தகைய கண் கொண்டு பார்த்தது என்பது கண்கூடு. இந்த இனத்தில் பிறந்த பெண்கள் தனது பெண் வாரிசினை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் அல்லது மறுக்கும் பெண் பல இன்னல்களை சந்திப்பதுடன் முதுமையில் ஆதரவின்றி வறுமையில் வாடும் நிலையே அன்றிருந்த அவல நிலை. இப்பகுதியில் தேவதாசி இனத்தின் சடங்குகள், மரபுகள் அவர்களுக்கான உரிமைகள் என பல தரவுகளை ஜீவசுந்தரி அளித்துள்ளார். இத்தகைய நிலையினை மாற்றிட அவர் 1910 – 20ஆம் ஆண்டுகளில் மிகத்தீவிரமாக செயல்பட்டார். சனாதனத் தீவிரவாதிகள் இதனைத் தாளவியலாது ஒரு மேடையில் ஏறி அம்மையாரது கூந்தலினை அறுத்து எறிந்தனர். இருப்பினும் அவர் தனது உரையினை நிறுத்தாது பேசி முடித்தார். கொலை வழக்கு உள்ளிட்ட பல அடக்குமுறைகள் அவர் மீது ஏவப்பட்டன. இவை எதுவும் அவரது போராட்டங்களை முடக்கவில்லை. இவரது போராட்டங்களை அறிந்த காந்தியார் அவரது செயல்பாடுகளைப் பாராட்டி கடிதம் அனுப்பினார். இத்தருணம் வரையிலும் அவர் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் குறித்து அறிந்திராதது மிக்க வியப்புக்குரிய செய்தியாகப் பதிவாகியுள்ளது.
காந்தியும் தேவதாசி ஒழிப்பிற்கு ஆதரவளித்தது அவருக்கு மேலும் உந்துதலை அளித்தது. இதற்காகத் தீவிரமாகப் போராடிய ஒரே பெண்மணியாக காந்திஜி இவரைக் கண்டார். இதன் பின்னர் அவர் கதராடை அணிவது குறித்த பிரச்சாரத்தில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தலைச்சுமையாக அவர் கதராடைகளை எடுத்துக் சென்றார். இதன் விளைவாகப் பல தேவதாசி இனப்பெண்கள் கதராடை உடுத்தத் துவங்கியதுடன் இராட்டையில் நூற்கவும் தொடங்கினர். காங்கிரஸ் தலைவர்களிடையே அவரது உழைப்பு அவருக்கான இடத்தினை உறுதியாக்கியது. அவரது முக்கிய நோக்கமான ‘தேவதாசி ஒழிப்பு சட்டம்‘ 1929ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.தலித்துகளுக்கான முன்னெடுப்பாக அவர்களை வீட்டுப்பணிகளில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்னும் காந்தியின் கருத்துப்படி தனது வீட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட இனப்பெண்ணை இணைத்துக் கொண்டார்.
அவர்களிடையே கல்வியின் அவசியம் குறித்தும், மதுவின் கேடு பற்றியும் விழிப்புணர்வினை உண்டாக்க முனைந்தார். பல்வேறு வழிகளில் அவர்களை மாற்றிட முயற்சி மேற்கொண்டார். தலித்துகளுக்காக தனது வீட்டில் விருந்து நடத்தி அவர்களுக்கு சமத்துவம் பற்றிய அவசியத்தினைக் கற்பித்தார்.
காகிநாடா மாநாட்டில் கொடி பிடிக்க தடைவிதிக்கப்பட்டதால் கொடியினை சேலையாக மாற்றி அணிந்து ஜின்னாவிடம் பாராட்டுப் பெற்றதும், அவருக்கு மேடையில் பேசிட தடைவிதிக்கப்பட்டதால் கரும்பலகையில் தனது உரையினை எழுதிக்காட்டி தனது சேவையினைத் தொடர்ந்ததும் போராளிகளின் செயலாக்கத்தினை வெற்றுச் சட்டங்களும், விதிகளும் தடுத்திடவியலாது என்பதை உணர்த்துகின்றன. தனது கூட்டத்தில் காந்தியடிகளை உரையாற்ற அழைப்பு விடுத்திருந்த நிலையில் ரூ 500 கட்டணமாக செலுத்தினால் மட்டுமே காந்தியடிகள் பேசுவார் என ராஜாஜி அவரைத் தடுத்தார் காந்தியடிகளை நேரில் சந்தித்து நிலையைக் கூறியதும், காந்தியடிகள் அவரது மனைவி கஸ்தூர்பாவுடன் கலந்து கொண்டு கூட்டத்தினைச் சிறப்பித்தார்.
1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு பெரியாருக்குத் திருப்பு முனையானது. அரசுப்பணிகளில் வகுப்புவாரி ஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமை மறுத்தது. பெரியார் இதனைத் தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். இவ்வியக்கத்திற்கான கொள்கை அறிக்கையினை உருவாக்கும் கூட்டம் ஈரோடில் பெரியாரின் இல்லத்தில் நடைபெற்றது .அக்கூட்டத்தில் ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், குத்தூசி குருசாமி, சாமி.சிதம்பரனார், இராமநாதன் ஆகியோருடன் அம்மையாரும் முக்கியப் பங்காற்றினார்.வலுவான பின்னணி கொண்ட கட்சியான காங்கிரசின் வீழ்ச்சி இத்தருணத்தில் தொடக்கப் புள்ளியானது.
அம்மையாரும், சிங்காரவேல் உள்ளிட்டோரும் அவருக்குத் தோள் கொடுத்தனர். முன்னதாக பெரியாருடன் இணைந்து பல போராடங்களில் செயலாற்றிய அம்மையார் இப்போது தனது களத்திற்கு இளவயதுத் திருமணம், சாதி மறுப்புத் திருமணங்கள், விதவைகள் மறுமணம் என புதுவடிவம் கொடுத்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு 42 நாட்கள், 577 மைல்கள் பயணித்து, 87 பொதுக்கூட்டங்களில் முழங்கினார். அரசு ஆறுமாத சிறைத் தண்டனையைப் பரிசாக்கியது. .1938ஆம் ஆண்டு சென்னையில் பெண்கள் மாநாடு நடத்தினார். அத்தருணத்தில் மகளிர் மன்ற அமைப்பு துவங்கப்பட்டது.
அம்மையாரைப் பற்றிய செய்திகள் குறைவாகக் கிடைத்த நிலையில் ஏறத்தாழ பதினாறு நூல்களை ஆதாரமாகக் கொண்டு கிடைத்த தரவுகளைத் தொகுத்துத் திரட்டி இந்நூலினை உருவாக்கியுள்ளார் ஜீவசுந்தரி. இந்நூல் ஒரு போராளியின் வாழ்க்கைக் கதை என்பதனைவிட ஒரு புனைவின் தன்மை கொண்டு விறுவிறுப்புடன் சுவாரசியத்தினை வாசகர்களுக்கு அளிக்கிறது. அந்நாளைய வரலாற்று நிகழ்வுகள், பல தோழர்களது பெயர்கள் என பலப்பல தரவுகளைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. அம்மையாரது படைப்புகள், கையெழுத்துப் பிரதி மற்றும் புகைப்படங்கள் என இது ஒரு முழுமையானதொரு தொகுப்பாக அமைந்துள்ளது. பின்ணிணைப்பில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் குறித்த தரவுகள் மிக விரிவான வகையில் அளிக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமின்றி நூலின் இறுதிப்பகுதியில் இசுலாமிய, இந்து, கிறித்தவ மதங்களின் கோட்பாடுகள் குறித்து ஒப்புமை நோக்கில் அம்மையார் எழுதியுள்ள கருத்துகள் உற்று நோக்கப்பட வேண்டியவை மட்டுமல்லாது இவை அம்மையாரது ஆழ்ந்த அறிவினையும் பிரதிபலிக்கின்றன. அவரது கட்டுரைகளில் தாய்மொழிப் பற்று, கருத்தடை, எளிய வாழ்க்கை என பல கருத்துகளை பெண்களுக்காக வலியுறுத்துகிறார் மற்றுமொரு முக்கியத் தகவலாக அம்மையாரது நேர்படப் பேசும் இயல்பு குறிப்பிடப்படுகிறது. பெரியாரிடமே தனது கருத்தினைத் தயங்காது பேசும் இப்பண்பு பல தருணங்களில் ஆண்களான பல தலைவர்களுக்கு சங்கடமளித்தாகப் பதிவாகியுள்ளது.
இத்தகையதொரு இனத்தில் பிறந்து தனது இருப்பினையும், பெண்ணினத்தின் விடுதலை, அடிப்படை உரிமை, சமத்துவம் என்ற கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டு உழைத்தவர் சகோதரி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். ஈராயிரம் ஆண்டுகளாக இழிநிலையில் வைக்கப்பட்டிருந்த சாதியில் பிறந்து, அந்த இழிநிலையினை போக்கப் போராடி, அதில் வெற்றியும் கண்டார். பல சீர்திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதை தன் வாழ்நாளிலேயே அவர் கண்டார். அதுவே, அவரது தன்னலமற்ற உழைப்பிற்கு அளிக்கப்பட்ட கௌரவரமானது. அம்மையாரது வாழ்க்கை வரலாறு கர்நாடக அரசின் தமிழ்ப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள மற்றொரு சிறப்பாகும்.
இந்நூலினைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டியும், வாசிக்கும் வளரிளம் பருவத்தினருக்கு அறிமுகம் செய்து வாசிக்க ஊக்கமளிக்க வழியமைத்துக் கொடுத்தல் நன்மை பயக்கும். முனைவர் ஆனந்தியின் அணிந்துரையில் கூறப்பட்டுள்ள கருத்தும் கவனிக்கத்தக்கது. டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியின் தன் வரலாற்று நூலில் எங்குமே இராமமிர்தம் அம்மையார் குறித்தான பதிவுகளே காணப்படவில்லை என்பதே அது. இதனையும் வரலாறு குறித்து ஆய்வோர் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் கூறுகிறார். தந்திரமாக மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட இத்தகைய செயல்பாட்டாளர்களை இன்றைய அரசியல் சூழலில் மீள்பார்வை செய்வது மலினமான அரசியல் சக்திகளை இனம் காணவும், தக்கதொரு விழிப்புணர்வினை உண்டாடக்கிடவும் வழிவகுக்கும். அத்தகைய அரிய பணியினை தனது பல நூல்கள் வாயிலாக பாரதி புத்தகாலயம் செய்துவருவது மகிழ்ச்சிக்குரியது. l