- முனைவர் இரா. மோகனா
மனதிற்கு மகிழ்ச்சியும் நாவிற்கு இனிமையும் அறிவுக்கு வளர்ச்சியும் பொழுதுபோக்கிற்குச் சுகமும் தருபவையே இலக்கியங்கள். பழங்காலத்தில் எல்லாம் இலக்கியங்கள் செய்யுள் வடிவத்தில் இயற்றப்பட்டன. இன்றோ உரைநடையில் அமைந்த நூல்கள்தான் மிகுதி. நவில்தொறும் நூல்நயம் போலும் என்பார் வள்ளுவர். மனதைச் செம்மைப்படுத்துவது நூல்கள்தான். மனக்கோட்டம் தீர்க்கும் நூல்போல் என்று கூறுவர் இலக்கண நூலார். இவை அனைத்தையும் தருபவை உரைநடை இலக்கியங்கள். இன்று வெளியாகும் நூல்களில் மிகுதியாக மக்களால் விரும்பப்படுவதும் வாங்கப் பெறுவதும் படிக்கப் பெறுவதும் உரைநடை இலக்கியங்களே ஆகும். கற்பவனுக்கு நிலைத்த சுவையையும் காலம், இடம், மொழி, எல்லை கடந்து நிலைபெற்றும் இருப்பவை உரைநடை இலக்கியங்கள்.
தேனி மாவட்டம் கூடலூரில் பிறந்து தாய், தந்தை மீது கொண்ட அன்பின் காரணமாக இருவரின் முதலெழுத்தைப் பெயருக்கு முன்னால் வைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர் சக. முதுகண்ணன். இவர் மாற்றுக் கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அறிவியல் இயக்க செயல்பாட்டாளர். ஆசிரியர், மாணவர் உறவில் கவனிக்க வேண்டிய அம்சங்களைச் சுவாரஸ்யமாகவும் நுட்பமாகவும் எழுதிச் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்கின்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவர் எழுதிய முதல் நூலே சிலேட்டுக்குச்சி எனும் நூலாகும். நீரைத் தேடி ஓடும் வேரைப் போல தன்னை ஒத்த மனவயது கொண்ட ஆசிரியர்களைப் பெற்றோர்களைத் தேடி அலைகிறார்கள் குழந்தைகள். அப்படி அலைந்து குழந்தையாகவும் தற்போது ஆசிரியராகவும் இருக்கிற ஒருவன் இரண்டுமாக நின்று எழுதிப் பார்த்த முயற்சிதான் இந்த சிலேட்டுக் குச்சி. கால் நூற்றாண்டு குழந்தைகள் விஷயத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் சமூகமும் அரசும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது.
உட்கார்ந்து படித்துதான் ஆக வேண்டும் என்கிற எந்தவித கட்டுப்பாடும் அற்ற மனிதர்களுக்கும் வீதிவீதியாய் சென்று அவர்களோடு அமர்ந்து அவர்களுக்குள் இருந்து தொடங்கி, அவர்களைப் பேசவிட்டு அவர்களோடு பேசி, கற்று, வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்து, கற்றல், கற்பித்தல் அனுபவங்கள் வகுப்பறைக்குள் ஒரு ஆசிரியனுக்கு நேரும் எனில் அதுவே கல்வியின் வசந்தகாலம் என்கிறார். அரசுப் பணிக்கு வந்த பிறகு நானும் வகுப்பறை அனுபவங்களை எழுத ஆரம்பித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் முகநூல்தான் எனக்கு நவீன சிலேட்டுக்குச்சி. எனக்கும் என் தோழர்களுக்கும் நேர்ந்த அனுபவங்களைத்தான் எழுதியிருக்கிறேன். வெற்றிகளையும் தோல்விகளையும் சிரித்துவிட்டு அனுபவங்கள் மட்டுமே மிச்சம் வைத்து நிற்கும் பள்ளிகளில், அதன் கசப்பும் இனிப்பும் ஆன பல தருணங்களை அப்படியே நூலில் பச்சை வாசத்தோடு சொல்லி காட்டியிருக்கிறார். இவை உங்களுக்கு அருகாமையிலும் நேர்ந்திருக்கலாம். அட ஆமால்ல என்றும் சொல்ல வைக்கலாம் என்பதாக முன்னுரையை மிக அழகாக தன்னுடைய அனுபவங்களைச் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். மீண்டும் பள்ளிக்கூடத்துக்குப் போய் கொஞ்சநேரம் அப்படியே இந்த மரத்தின் நிழலில் வகுப்பறை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு இளைப்பாறலை இவருடைய கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதை போலவே உள்ளது.
இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள தமிழ்ச்செல்வன் அவர்கள் தோழர் சக. முத்துக்கண்ணனின் வகுப்பறை அனுபவங்கள் அல்லது ஒரு ஆசிரியராக அவருடைய பள்ளி வாழ்க்கை அனுபவங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளார். குழந்தைகளை மையப்படுத்தி கல்வி இல்லாத நம் நாட்டில் குழந்தைகள் மீது அக்கறையும் அளவற்ற அன்பும் கொண்ட ஆசிரியர்களால்தான் நம் குழந்தைகள் பள்ளி எனும் கொடுமையைத் தாக்குப்பிடித்து தங்கள் கல்வியை முடித்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கானச் சாட்சியமாக இந்த நூல் விளங்குகிறது. குழந்தைகளின் உளவியலை அறிந்துகொள்ள இந்த ஆசிரியரின் அனுபவத் தொகுப்பை வாசித்தால் போதும் என்ற உயரிய மதிப்பீட்டை தமிழ்ச்செல்வன் தந்துள்ளார். 112 பக்கங்கள் உடைய இந்நூலில் 17 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு ஆசிரியர் அன்பானவராக, அறிவியல் ஆற்றலுடன் இன்முகத்துடன் ஈகையில் சிறப்பு உடையவராய், உயரிய பண்புகளோடு, ஊக்கம் தந்து எதிரியாக இல்லாமல் ஏணியாக நின்று ஐயம் போக்கி ஒருமித்த கருத்து உடையவராய் ஓய்வு பாராது மாணவர்களில் மனம் அறிந்து செயல்பட வேண்டும் என்பதைத் தம் கட்டுரைகளின் வழி சக. முத்துக்கண்ணன் அவர்கள் விளக்கி இருக்கின்றவிதம் அருமை.
இந்நூலில் முதல் கட்டுரையாக ’என்ன சிரிப்பு வேண்டியிருக்கு’ என்ற கட்டுரையில் மனோஜ் என்கிற சேட்டைக்காரப் பையனின் கதை வழியாக நமக்குத் குழந்தைகள் நினைத்தால் நம்மை எளிதாக ஏமாற்றி விட முடிகிற தன்மையைக் கூறி, அப்பாவிகளாகத்தான் நம்முடைய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதை நகைச்சுவையோடு சொல்லிச் சென்றிருக்கின்றார். மாணவர்களிடம் அன்பு செலுத்தும் நல்ல மனமுள்ள ஆசிரியர்கள்தான் குழந்தைகளின் நாயகர்களாகவும் நாயகிகளாகவும் எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறார்கள். இந்நூலில் இரண்டு கட்டுரைகளில் பன்னீர் ஆசிரியரைப் பற்றிய கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. விடுமுறை நாட்களிலும் ஸ்பெஷல் கிளாஸ் வைத்து மாணவர்களோடு தன்னுடைய பொழுதை போக்கி அவர்களுக்குத் தேவையான செய்திகளைக் கூறி அறிவுப் பசிக்கு விருந்து தந்து கொண்டிருந்த செய்தியை மிக அழகாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். குழந்தைகளின் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கும் பாலினம் சார்ந்த கேள்விகளுக்கும் மிக அழகாகவும் அதேசமயம் நாசுக்காகவும் பதில் சொல்லுகின்ற பன்னீர் ஆசிரியரை மாணவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை என்பதையும் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்.
அடுத்ததாக ராமர் ஐயா பற்றியும் ஒரு கட்டுரையில் கூறியிருக்கின்றார். இவர் பெரிய பசங்களோடு அதிகம் நட்புக் கொள்வதைக் காட்டிலும் சிறுவயது குழந்தைகள் உடனே நன்றாகப் பேசிப்பழகி பணிசெய்து வருவதையும் அக்கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார். நீங்க வாத்தியாரா இருப்பதிற்குப் பதிலா போலீசாக இருக்கலாம் இப்படிச் சொல்லாத ஆள் இல்லை. ஆனால் குழந்தைகள் ஒருபோதும் ராமர் ஐயாவை அப்படிச் சொன்னதில்லை. வேண்டுமானால் நீங்க போலீஸ் வேலைக்கு லாயக்கு இல்ல சார் என்றபடி அவரைக் கிண்டல் அடிக்கின்றனர் என்ற செய்தியையும் கட்டுரையாளர் பதிவு செய்திருக்கிறார்.
குழந்தைகளோடு குழந்தையாக ஆசிரியர் விளையாடுவதையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். இரண்டு உள்ளங்கைகளையும் ராமர் ஐயா காட்ட மாணவர்கள் கரங்களில் தட்டி மாற்றி மாற்றி கைதட்டிய இந்த விளையாட்டிற்குப் பூஸ்ட் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருவகையில் குழந்தைகளுக்கானக் கைகுலுக்கல். பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதாகவும் அங்கு எல்லா மாணவர்களும் இந்த ஐயாவுடன் பூஸ்ட் விளையாடி இருக்கிறார்கள் என்பதை மிகப் பெருமையாக இக்கட்டுரையில் கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு ஒரு ஆசிரியர் மாணவர்களுடன் மாணவராகப் பழகிய அந்த விதத்தை இக்கட்டுரையின் வழி அறிந்து கொள்ள இயலுகிறது. ஆசிரியர்களுக்குப் பட்டப் பெயர்கள் வைத்து அழைப்பதைப் பகிரங்கமாக சொல்லி உள்ளமை அருமை. படிக்கின்ற ஒவ்வொருவரையும் அவரவருடைய பள்ளிப்பருவத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டார் ஆசிரியர். சாம்பத் தின்னி வாத்தியார், தெய்வம், அடேங்கப்பா சார், சந்தனக் குடம்சார், சப்பைக்கட்டு வாத்தியார், பாபா சார், மூக்குப்பொடி, டுமீலு, சைக்கிள் மேன், போப்பாண்டவர், அலங்கார டீச்சர் என நூற்றுக்கணக்கில் பட்டப் பெயர்களை வைத்ததை இங்கே பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
வெள்ளைத்தமிழ் ஐயா என்று ஒருவரைக் குறிப்பிட்டு அவரை அப்பள்ளியில் உள்ள அனைத்து வாத்தியார்களும் அப்படித்தான் கூப்பிடுவார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார். ஒருமுறை பள்ளி மேடையில் ஒரு கவியரங்கம். நடுவராக இருந்த தலைமையாசிரியர் ஆடையும் வெள்ளையய்யா முடியும் வெள்ளையய்யா உன் மனசும் வெள்ளையய்யா வாருமையா நல்ல கவிதை தாருமையா என்று புன்னகையோடு அவரை அழைத்ததை இன்றும் தான் நினைத்துப் பார்ப்பதாக எழுதியிருக்கிறார். தமிழ் ஐயா என்ற உடன் மீடியாக்களும் தமிழ் திரைப்படங்களில் சிலவும் நகைச்சுவை என்ற பெயரில் கேலியும் கிண்டலும் செய்வதைப் பதிவிட்டு இருப்பார்கள். மாறாக ஆசிரியரோ ஒரு விருது போல அந்த வெள்ளைத்தமிழய்யாவின் பட்டப்பெயர் அமைந்திருப்பதைக் குறிப்பிட்டிருப்பது சிறப்புடையது.
கண்பார்வையற்ற முருகன் சாரும் ராமர் ஐயாவும் தன்னுடைய சக மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்ணுகின்ற வேளையில் அனைவரும் பகிர்ந்து உண்ணுகின்ற சிறந்த பண்பாட்டை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். சத்துணவு சாப்பாட்டையும் பகிர்ந்து உண்ணும் பக்குவம் மற்றும் சத்துணவு மேலும் சிறக்க வழி ஏற்படுகின்ற விதத்தில் சத்துணவு சாப்பாட்டையும் அனைவரும் உண்டு மகிழ்ந்தனர் என்பதையும் மிக அழகாக இந்நூல் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். ராமர் ஐயா அருகில் இல்லாத நாட்களில் முருகன் சார் சாதத்தையும் ரசத்தையும் பிசைந்து கொடுக்கும்படி ஜனனியிடம் கூற அவள் மனமகிழ்வோடு அன்பினையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து தந்தாள் என்று அக்கட்டுரையை முடித்திருப்பார். இதனைப் படிப்பவர்கள் கண்களில் ஈரம் கசியும்.
பாடவேளைகளின் இடையிலும் சிலநேரங்களில் பொழுதுபோக்கிற்காகவும் ஆசிரியர்கள் கதைகள் கூறுவதுண்டு. ஒவ்வொரு சிறந்த கதையாசிரியர் பயனுடைய சிறுகதைகளைக் கூறுகின்றபொழுது அந்தக் கதைகள் எழுதிய எழுத்தாளர்கள் மறைந்திருப்பினும் அவருடைய கதைகளைக் கேட்ட மாணவர்கள் மனதில், அக்கதைகள் மரணம் இல்லாமல் பயணிக்கின்றன என்பதை மிக அழகாக எழுதி இருக்கின்றார்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் கேட்கின்ற ஒரு கேள்வி உன்னுடைய ஆசை என்ன. நீ வளர்ந்தவனானவுடன் உன்னுடைய விருப்பம் என்னவாக வேண்டும் என்று கேட்பதுண்டு. அந்தந்த வயதிற்கு ஏற்றார்போல ஆசைகளும் வேறுபடுகின்றன. நான்காம் வகுப்பு படிக்கும்பொழுது பஸ் கண்டக்டர் ஆகணும் என்ற ஆசை. அப்போதெல்லாம் பஸ்ல போறது ரொம்ப பிடிக்கும். வீட்ல என்னைக்காவது ஒரு நாள்தான் ஊருக்குக் கூட்டிட்டுப் போவாங்க. கண்டக்டர் என்றால் தினமும் பஸ்ஸில் போகலாம். ஆதலால் அந்த வயதில் கண்டக்டர் தான் ஹீரோ.
சிறிதுநாள் கழித்து கோயில் பூசாரியாக வேண்டும் என்று ஒரு மாணவன் கூறினான். அவனைப் பொருத்தவரை அருள் வந்து ஆடும் எல்லோரும் தன்னைப் பார்த்து கும்பிட்ட கையோடு நிற்பார்கள். அந்தக் கூட்டத்தில் அவர்தான் ஹீரோ. சில வீடுகளிலும் கிளி பிள்ளைகளுக்குச் சொல்வதைப்போல டாக்டர், இன்ஜினியர் என்று சொல்லித்தர அந்தக் குழந்தைகளும் அதையே ஆசிரியர்களிடம் கூறி கைதட்டல் வாங்கினார். எட்டாம் வகுப்பிற்குப் பின்புதான் என்ன ஆக வேண்டும் என்று ஒரு லட்சிய மூட்டைகளையே மாணவர்கள் கழற்றிவிட்டார்கள். என் வகுப்பில் இரண்டு டாக்டர்ஸ், ஒரு இன்ஜினீயர், 3 கலெக்டர்ஸ், 8 டீச்சர்ஸ், 6 போலீஸ் உட்பட ஹோட்டல், ஏரோபிளேன் டிரைவர், கப்பல் ஓட்டுனர் நகைக்கடை ஓனர், புரோட்டா மாஸ்டர், ஸ்வீட் கடை, சிமெண்ட் பேக்டரி வேலை, சினிமா நடிகர், டி.இ.ஓ என ஸ்டேடஸ் பிரச்சினையின்றி அனைவரும் ஒரே வகுப்பில் கலந்து படித்தனர் என்று ஆசிரியர் எழுதியுள்ளமை அருமை. பொண்டாட்டி நோயில் இருக்கையில் சமைத்துப் போடும் ஆண்களை, குழந்தையைக் குளிப்பாட்டும் அப்பாக்களை, வீட்டில் செத்துப்போன நாயை யாருக்கும் தெரியாமல் கதவைப் பூட்டிக்கொண்டு அழும் சித்தப்பாவை, பட்டினி கிடந்த பட்டாளத்து தாத்தாவை என எப்போதாவது வெளிப்படும் முரட்டு ஆண்களின் பெயர் அன்பைக் குறித்து ஆணுக்குள் ஒரு எக்ஸ் என்ற பகுதியில் மிக அழகாக எழுதி இருக்கிறார்.எல்லாக்காலங்களிலும் வீட்டு பாடங்களுக்குச் சாவே இல்லை. அது கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து கொடூரமானது. சனி, ஞாயிறு நினைக்கும்பொழுது ஒரு பயங்கரமான பேய் போன்று இருக்கும். இந்தத் திங்கட்கிழமையை எவன் கண்டுபிடித்தான். இந்த நாளில்தான் எல்லா வீட்டுப்பாடங்களும் அடியாய் உருமாறி முதுகிலும் கால்களிலும் இறங்குகின்றன.
அவர் படிக்கும் காலத்திலும் வீட்டுப்பாடம் குறித்த அபிப்ராயம் இதுதான் என்று ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். வானமே எதிராக நின்றாலும் திங்கட்கிழமை விடியலைச் சாபதினம் போல உணர்ந்து இருக்கிறேன். இன்று வார்த்தைகள் இருக்கிறது. இப்படி எல்லாம் எழுதிப் பார்த்துக் கொள்கிறேன். அன்று அதுவுமில்லாமல் ஆறுதல் அற்ற மனதோடு அலைந்தோம்.
இதுவரை நான் படித்த 12 வருட பள்ளிக்கூட வாழ்க்கையில் முக்கால்வாசி திங்கட்கிழமைகளில் இதயம் நடுங்கித்தான் பள்ளிக்கூடம் போய் இருக்கிறேன். எனக்குப் பிள்ளையார் பிடித்த கடவுள். சில சமயம் காசு சேர்த்து வைத்து தேங்காய் உடைத்து இருக்கிறேன். கடவுளே இன்னைக்கு அறிவியல் ஆசிரியர் வரக்கூடாது சமூகவியல் ஆசிரியர் வரக் கூடாது என்றெல்லாம் வேண்டி இருக்கிறேன் என்று வீட்டுப் பாடம் குறித்த விரிவான விளக்கத்தை இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.
ஊர்விட்டு ஊர் போய் வேறு பள்ளியில் சேர்ந்தாலும் பழைய பள்ளியில் இருந்த டீச்சர் அற்புதம் மேரியின் நினைவாக இருக்கும் நித்யாவும் தஞ்சாவூருக்குக் கேட்கும்படி அற்புதம் டீச்சருக்குக் கரவொலி எழுப்பும் மாணவர்களும் ஒரு மறக்கமுடியாத காட்சியாகப் பதிவு செய்திருக்கிறார். இத்தனைக்கும் அந்த அற்புத மேரி டீச்சர் செய்தது பெரிதாக ஒன்றும் இல்லை. அவர் வைத்திருக்கும் பெட்டியில் குழந்தைகளுடைய பிரச்சனைகளை எழுதி போடலாம். அந்தப் பிரச்சினைகள் தீர அவர் வீட்டில் தினமும் பிரேயர் பண்ணுவார். குழந்தைகள் மனதில் இடம்பிடிக்க இது போதுமானது. ஆசிரியர்கள் தங்களுடன் கைகோர்த்து வருவதாக மாணவர்கள் உணர்கின்றபொழுது அங்கே அந்த ஆசிரியர் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்.
ஒவ்வொரு கட்டுரையும் மாணவர்களின் உளவியலைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. வாசிப்பும் எழுத்துப் பயிற்சியும் இல்லாத ஒரே காரணத்தால் நமக்கு கிடைக்காமல்போன வகுப்பறை அனுபவங்கள் மனம் வருந்தச் செய்வதாக தமிழ்ச்செல்வன் மிக அழகாக அணிந்துரையில் எழுதி இருக்கின்றார். கடவுளுக்குக் கடிதம் என்ற பகுதியில் மாணவர்கள் தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் கடிதம் எழுதலாம் என்று சொன்னதால் பலரும் தங்களுடைய உள்ள வேட்கைகளை, ஏமாற்றம், துன்பங்கள் என பலவற்றையும் அக்கடிதத்தில் பதிவு செய்திருந்ததை நினைத்து ஆசிரியர் கண்ணீர் வடித்தார்.
அப்பனுக்குப் பயந்து ஓடி ஒளியும் இடத்தில் ஒரு மாணவி சோறுதின்ன வேண்டி மற்ற வீடுகளைவிட முக்கியமாய் அத்தை வீட்டில் அம்மா சாப்பிடுவதில்லை என்று எழுதியிருந்தாள். ஒரு குழந்தை பிடிக்காதவர்களின் வீட்டில் நுழைந்துகொண்டு அவர்களின் புலம்பல்களைக் கேட்டும் கேட்காமலும் சோற்றோடு அவமானத்தையும் பிசைந்து மகளின் பசிக்கு ஊட்டி இருப்பாளே அந்த அம்மா. அவற்றை அவள் தின்ன்னும் அதேநேரத்தில் தம்பி தின்னும் சிக்கன் பக்கோடா மறுநாள் கிடந்த சுருட்டி எறியப்பட்ட காகிதமும் நினைவுக்கு வர நானும் அவள் வயதுக்கு இறங்கி அழுதேன் என்று ஒரு பெண்குழந்தைபட்ட துன்பத்தை அக்கட்டுரையில் படிப்பவர்கள் அழுகின்ற விதத்தில் சிறப்பாக எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படி மாணவர்களின் ஆசைகள், நிறைவேறா எண்ணங்கள், அவர்களின் மன உளவியல் எனப் பலவற்றையும் இக்கட்டுரையில் சக. முத்துக்கண்ணன் அவர்கள் மிக அழகாக தொகுத்துள்ளார். இவருடைய முதல் நூலில் இவருடைய பெயருக்கு நல்ல ஒரு முத்துப்போல பிரகாசத்தைத் தருவதாக இந்நூல் படைப்பு அமைந்துள்ளது. இந்நூலை சிறப்பாக தொகுத்துத் தந்த ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். மேலும் இந்நூலை நன்முறையில் பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
l