- கவிஞர் ஆர். நீலா
புத்தம்புதிதாய் நித்தம்நித்தம் மலரும் இப்பிரபஞ்சம் புதிதுபுதிதாய் நமக்குச் செய்திகளை வழங்கிக்கொண்டு இருக்கிறது இயற்கை வழங்கும் அப்பேருண்மைகளில் சில மகத்தான தருணங்களைப் படம் பிடித்து வழங்கக் கவிதை போல ஒரு கருவி உண்டா? அதனால்தான் கண்ணதாசன் சொன்னார், ‘கவிஞன் யானோ காலக்கணிதம்; கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்’ என்று. ஒரு திருவிழாக் கூட்டத்தில் சிக்கி கசகசப்பும் மூச்சுத் திணறலோடும் ஒரு மர நிழலில் ஒதுங்கிக் கொஞ்சம் இளைப்பாற, எங்கிருந்தோ ஓடி வந்து நம் முந்தானை பிடித்து இழுத்துத் தன் முல்லைச் சிரிப்பைக் காட்டுமே ஒரு குழந்தை. அந்த அற்புதக் கணங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்க்கும்தானே? அது போன்ற உணர்வுப் பரவசங்களை வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி கவிதைகளில் நான் அனுபவித்திருக்கிறேன்.
கண்ணதாசனின் இயற்கை வெளிப்பாடும், வண்ணதாசனின் உணர்வுப் பிரவாகமும் ஒன்றெனக் கலந்து கவியருவியாய்க் கொட்டுகிறது கவிஞர் பா.தென்றலின் ‘உயிர் பருகும் மழை’ என்னும் கவிதைத் தொகுப்பில். மழை, நந்தவனம், தென்றல் இம்மூன்று சொற்களே இக்கவிதைத் தொகுப்பிற்கான கடவுச்சொற்கள். கவிஞர் பெயர் தென்றல். நூலின் பெயர் உயிர் பருகும் மழை. பதிப்பகத்தின் பெயர் இனிய நந்தவனம். நூலை முதல் பக்கம் புரட்டியதில் இருந்து இறுதிப்பக்கம் வரை நம் உதட்டுச் சிரிப்பை உலரவிடவில்லை இந்நூல். கொஞ்சம் மென்சோகம் ஆங்காங்கே, மனித வாழ்வுதான் இது… இதுவும் சேர்ந்ததுதான் வாழ்க்கை யதார்த்தம்… என்று தத்துவத்தைத் தூவிச் செல்கிறது. பாரதத்தில் ஒரு கதை உண்டு. கண்ண பரமாத்மா, தருமரையும் துரியோதனனையும் அழைப்பார். தருமனிடம், ‘நீ உலகெங்கும் தேடி ஒரு நல்லவனைக் கண்டுபிடித்துக் கூட்டி வா’ என்பார். துரியோதனனிடம், ‘நீ உலகமெங்கும் தேடி ஒரு கெட்டவனைக் கூட்டி வா’ என்பார். இருவரும் எங்கும் தேடி அலைந்து விட்டு வெறுங்கையோடு திரும்பி வருவார்கள். ‘என்னாச்சு?’ கண்ணன் கேட்பான்.
‘எங்கும் தேடிவிட்டேன், ஒரு கெட்டவனைக் கூடக் காணோம்’ என்பான் தருமன். ‘எங்கும் ஒரு நல்லவனைக் கூடக் காணோம்’ என்பான் துரியோதனன். உலகம் ஒன்றுதான். பார்க்கும் கோணங்கள் தான் வேறு வேறு. தருமனின் நம்பிக்கைப் பார்வையோடு இவ்வுலகை அணுகுகிறார் தென்றல். பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், இயற்கை ஆகியவற்றின் இயல்புகளை அவற்றின் இயல்பு கெடாமல் சின்னச்சின்னத் தெறிப்புகளாய்ப் பதிவு செய்திருக்கிறார்
“தோள் வேண்டும்
என்று நானும்
நான் வேண்டும்
என்று நீயும்.
எவர் ஜெயித்தாலும்
தோற்றாலும்
ஒரு புன்முறுவலோடு
நகர்கிறது காதல்”
அவ்வளவுதாங்க. வாழ்வு எனும் பெருங்கொடைக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
ஆனால், அப்படியேக் கவித்துவமாய்ப் போய்விடுகிறதா வாழ்க்கை? முன் கவிதையில் அரும்பும் புன்னகை, அடுத்த கவிதையில் சற்று உறைந்துவிடுகிறது.
“உனக்குப் பிடிக்கவில்லை
கழற்றிவைத்தேன்
என் காற்சதங்கைகளை.
எனக்குப் பிடித்திருக்கிறது
அடிக்கடி அலமாரி திறந்து
பார்த்துக் கொள்கிறேன்”.
இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையான பெண்ணிய நுட்ப உணர்வுகளைப் படைப்பதில் அசாத்திய அணுகுமுறை தெரிகிறது. பெண் மனசின் ஆசை, ஏக்கம், கோபம், நம்பிக்கை என அனைத்தும் பாடுபொருள்களாகி இருக்கின்றன.
‘உள்ளத்துள்ளது கவிதை’ என்று அவரே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருப்பது போல, உண்மையும் எளிமையுமாய் வசீகரிக்கின்றன இவரது கவிதைகள். கவிதையின் கையை அவர் பற்றவில்லை. கவிதைதான் அவர் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. வரலாம் வரலாம் வாங்க…
இன்னும்சற்றே விளிம்புநிலை மாந்தர்கள், ஜாதியமதச் சிக்கல்கள், உடலரசியல் எனப் பார்வையைக் கொஞ்சம் விசாலப்படுத்தலாம்.
இசையின் பிடியில்
காற்று வெளியிடை
அசைந்து வரும் சருகு
வலசைப் பறவையின்
மெல்ல முளைக்கும் சிறகில்
உரிமைக்காற்று
உயிர் பருகும் மழை
வரமா சாபமா?
சிரிக்கும் சுயம்!
மேற்கண்ட கவிதை வேறொன்றுமில்லை. பா.தென்றல் அவர்களின் கவிதைத் தொகுப்பின் ஒட்டு மொத்த மதிப்பீடு. வாங்கிப் படியுங்கள். நீங்களும் இதே கணிப்பிற்குள் வருவீர்கள்.