- நிசார் அகமது
கௌரவமான பொருளாதார நிலையிலும், சுயமரியாதையான வேலை நிலையிலும் வாழ்வதில், அடிமட்ட நிலையில், எங்கேயோ கிடந்த அரசு ஊழியர்களுக்கு விழிப்புணர்வூட்டி, தட்டியெழுப்பி, அவர்களுடைய வாழ்வில் மலர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காண வைக்க, அயராது பாடுபட்ட முன்னோடித் தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ‘DL’ என எல்லோராலும், அன்புடனும், உரிமையுடனும், அழைக்கப்பட்டு வந்த தோழர். D. லட்சுமணன் இன்று நம்முடன் இல்லை.
சில வருடங்களுக்கு முன்பு திருப்பூர் DC அலுவலகத்தில் அவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது எங்கள் பேச்சு ‘சுற்றுப்புறச் சுகாதாரம்,’ மற்றும் ‘நோய் நொடிகள்’ பக்கம் திரும்பியது அப்போது அவர் சோவியத் யூனியனின் கஜ் க்ஸ்தானத்தில் ‘அல்மா-அட்டா’ என்கிற இடத்தில் 1978 செப்டம்பரில் ‘எல்லோருக்கும் சுகாதாரம்’ என்கிற உயர்ந்த நோக்கத்துடன் ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் 134 நாட்டுப் பிரதிநிதிகளும் 67 உலக சுகாதார அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது அதுதான் ‘அல்மா-அட்டா பிரகடனம்’ அதில், ஒவ்வொரு நாடும் தன்னுடைய பிரஜைகளுக்கு சத்தான உணவு, சுகாதாரமான தண்ணீர் சுகாதாரமான தாய்-சேய் நலம், நோய் எதிர்ப்பாற்றல், மருத்துவ சிகிச்சை வசதி தேவையான மருந்துகள் கிடைக்கும் வசதி ஆகிய அடிப்படையான வசதிகளை 2000க்குள் செய்து கொடுக்க வேண்டும் என பிரகடனம் செய்யப்பட்டது. அது நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 1977இல் இத்தாலியில் நடைபெற்ற, ராக்பெல்லர் ஃபவுண்டேஷன் நடத்திய மாநாட்டில் ‘அல்மா-அட்டா பிரகடனம்’ நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என நிராகரிக்கப்பட்டு சுகாதாரம்-சிகிச்சை வசதி உள்ளிட்ட அனைத்தும் பன்னாட்டு கைகளுக்கு அரசுகள் தாரை வார்த்தன. அதன் கொடிய விளைவுகள்தான் ‘தொற்றுநோய்கள்’ ‘மரணங்கள்’ என்றார். ஒரு விஷயம் பேசும்போது அது சம்பந்தப்பட்ட பல விஷயங்களை நினைவில் கொண்டு வந்து கற்றுக் கொடுக்கும் அவருடைய ஆற்றலைக் கண்டு நான் வியந்து போனேன்.வாழ்வில் எத்தனையோ இன்னல்களையும், இடர்பாடுகளையும், சந்தித்து, அசராமல், அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி வெற்றி கண்ட அவரால் கொடிய கொரோனா வைரஸை எதிர்த்து வெற்றி பெற இயலவில்லை. ஏனோ அரசுகளின் மீதுதான் கோபம் வருகிறது.
அரசு ஊழியர் இயக்கப் பணிகளில் நான் 1978களில் ஈடுபட ஆரம்பித்த துவக்க காலத்திலேயே தோழர். DLஐப் பற்றி அறிந்து அவரைக் காண ஆவல் கொண்டிருந்தேன். அவரை, நான், முதன் முதலாகப் பார்த்தபோதே அவருடைய, எளிமையான, அதே நேரம் கம்பீரமான தோற்றம் என்னை கவர்ந்திழுத்தது. சமீப காலம் வரையிலும் அதே எளிமையையும், கம்பீரத்தையும், அவரிடம் நான் பார்த்து வியந்து போயுள்ளேன். கூட்டங்களிலும், வகுப்புகளிலும், அவர் தன்னுடைய கருத்துகளை முன் வைத்து, என்னைப் போன்ற புதிய இளைஞர்களுக்கு புரிய வைக்கின்ற போது, அவருடைய ஆழமான சமூக, பொருளாதார, அரசியல் அறிவைப் பார்த்தும் வியந்துள்ளோம்.அரசு ஊழியர் இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டவும், சோர்ந்து போய் சோம்பிக் கிடந்த அரசு ஊழியர்களுக்கு உணர்வூட்டி அவர்களை தட்டியெழுப்பி ஒன்றுபட வைக்க அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு அசாத்தியமானது. கால்நடைத் துறையில் பணியாற்றிய அவர், தன் சார்ந்த துறையோடு தன் சங்கப் பணிகளை சுருக்கிக் கொள்ளாமல், பரந்துபட்ட அரசு ஊழியர் அரங்கில் வைரம்போல் ஜொலித்தார்.கோரிக்கைகளை தேடிக் கண்டுபிடித்து, அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுப்பதிலும், பின்னர் அந்த கோரிக்கைகளின் அவசியத்தை ஊழியர்களுக்கு உணர்த்தி, அவர்களை, போராட்டக் களத்திற்கு கொண்டு வருவதிலும், அவரிடம் அலாதியான திறமை இருந்தது. அதிகாரிகளையும், அரசையும் கோரிக்கைகளின் பக்கம் திசை திரும்பி பார்க்க வைக்க அந்தக்காலத்திலேயே அவர் புதிது புதிதான, விதவிதமான பல போராட்டங்களை நடத்தியுள்ளார். கருப்பு முக்காட்டு ஊர்வலம் கால்நடைகளை வைத்து ஊர்வலம், குரங்கின் கையில் கோரிக்கை மனுவைக் கொடுத்து அதை அதிகாரியிடம், வழங்கும் போராட்டம் என பல போராட்டங்கள் பலருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளன.
அரசு ஊழியர் இயக்க வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தோழர் DL இன் பங்களிப்பு சிறப்பானதாக இருந்துள்ளது. சங்க ஜனநாயகத்திற்கான போராட்டத்தை கூர் மழுங்காமல் நடத்தும் அதே நேரத்தில் ஒற்றுமையை, உருவாக்கி, அதை கட்டிக் காத்து முன்னெடுத்துச் செல்வதிலும், அவர் கவனமாக இருந்தார்.
அரசு உழியர்களின் கோரிக்கைகளின் நியாயங்களை முன்னெடுத்து வைக்கவும், அரசு ஊழியர்களிடையே சரியான சமூக-பொருளாதார-அரசியல் விழிப்புணர்வையும், பற்றையும், ஏற்படுத்த வைக்கவும் தொடங்கப்பட்ட ‘அரசு ஊழியர்’ மாத இதழில் ஆசிரியராக பல ஆண்டு காலம் அவர் முன்னோடித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ‘இளவல்’ என்கிற பெயரில் அவர் எழுதிய பல கட்டுரைகள் அன்றைய இளைஞர்களுக்கு,உணர்வும் தைரியமும் ஊட்டும் கை ஆயுதங்களாக தவழ்ந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட ஆட்சிக் காலத்தில், ஒருகுறிப்பிட்ட சூழலில் போராடுவது சாத்தியமா? போராடினால் வெற்றி கிடைக்குமா? என்கிற தயக்கமெல்லாம் தோழர் DL இடம் இருந்ததில்லை.
‘களத்திற்குச் செல்வோம்’ ‘ஒற்றுமையை உருவாக்குவோம்’ ‘இறுதி வரை உறுதியாகப் போராடுவோம்’ என்கிற தாரக மந்திரத்தை முன் வைத்து தயக்கமில்லாமல் போராட தூண்டுவார், துணை நிற்பார். போராட்டத்தின் இறுதியில் வெற்றி கிடைக்கும், முன் வைத்த கோரிக்கைகளில் ஒன்றிரண்டாவது நிறைவேறும். ‘முடியாது’ ‘வேண்டாம்’ என ஆரம்பத்தில் தயங்கியவர்கள் ‘இது எப்படி சாத்தியமானது’ என திகைத்து நிற்பார்கள். தோழர் DL அரசுப்பணியை ராஜிநாமா செய்துவிட்டு பொதுவுடைமை அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உயர் பொறுப்புகளில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோதிலும் அரசு ஊழியர் இயக்கத்தின் மீதும், அதன் வளர்ச்சியின் மீதும் அக்கறை காட்டி வந்தார். அரசு ஊழியர் மாநாடுகளிலும், சிறப்புக் கருத்தரங்குகளிலும், பங்கேற்று, வழிகாட்டி உதவியுள்ளார். கருத்தரங்குகளில் அவர் ஆற்றிய கருத்துரைகள் பலருக்கும் பாடங்களாக அமைந்தன.
தோழர் DL அரசுப்பணியில் இருந்த காலத்திலும் சரி அதன் பின்னர் அரசியல் பணியில் மும்முரமாக இருந்தபோதிலும் சரி எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரில் உள்ள அரசு ஊழியர் சங்க முன்னோடிகளுடனும், முன்னணியினரிடமும் தொடர்புகொண்டு, அவர்களை வரவழைத்து, நலம் விசாரித்து அறிவுரை வழங்கி, உற்சாகமூட்டுவார். அதேபோல உணர்வும், துடிப்பும் கொண்ட இளைஞர்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்தி, அவர்களை சிறந்த தலைவர்களாக பரிணமிக்க வைப்பதில், கவனமும், அக்கறையும் காட்டுவார்.
மாநாடுகளிலும், கேம்ப்களிலும், அவர் எல்லோருடனும் ஒன்றாகத் தங்கி, பழகி, புதிய தலைமுறையினருடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். இரவு நெடுநேரம் எங்களுடன் அளவளாவிவிட்டு, காலையில் நாங்களெல்லாம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர் எல்லோருக்கும் முன்பு எழுந்து, குளித்து தயாராகி, ஏதேனுமொரு புத்தகத்தையோ அன்றைய செய்தித்தாள்களையோ வாசித்துக் கொண்டிருப்பார் ‘எப்படி தோழர்’ உங்களால் முடிகிறது? என கேட்டால் பிராக்டீஸ் பண்ணினால் எல்லாம் தானாக வரும் என அசால்டாக சொல்வார். வாசிப்புப் பழக்கத்தை எங்களிடம் உருவாக்கிய சில தலைவர்களில் அவரும் ஒருவர்.
அவருடன் பழகிய காலத்தில், பகிர்ந்துகொள்ளத்தக்க சுவாரஸ்யமான, நெகிழ்வான பல நிகழ்வுகள் உண்டு. அற்புதமான திறமைகளுடன், அக்கறையுள்ள கூடிய ஆசான்களில் ஒருவராகத் திகழ்ந்த தோழர் DL இன்று நம்முடன் இல்லை, ஆனால், அவர் தன்னுடைய வாழ்நாள் நெடுகிலும், நமக்கு கற்றுக் கொடுத்த அருமையான சமூக-பொருளாதார அரசியல் பாடங்கள் என்றென்றும்நமக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கும். கை பிடித்து, தோள் பற்றி, கட்டியணைத்து, நட்பும், தோழமையும் பராட்டி பழகிய, பண்பான தோழருடனான பழக்கத்தை வாழ்வில் என்றென்றும் மறக்கவே இயலாது.
திருப்பூருக்கு வரும்போதெல்லாம், என்னை வரவழைத்து, நலம் விசாரித்து ‘ஆரோக்கியமாக சிந்தி’ ‘ஆரோக்கியம் தன்னால் வந்துவிடும்’ ‘நாம் வாழ்வது போனஸ் காலம்’ இருக்கும்வரை உழைத்துக்கொண்டே இரு என அறிவுறுத்த, அக்கறையான தோழர் DL இல்லையே…