- நிகழ் அய்க்கண்
ஐரோப்பியர்களால் துவக்கி வைக்கப்பட்டதுதான் அடிமை வணிகமுறை. இவர்கள் வணிகத்திற்காக, ஆப்பிரிக்க கறுப்பின மக்களை இரக்கமற்று வேட்டையாடி, அடிமைச்சந்தையில் விற்பனை செய்துவந்தனர். இப்படி விற்பனை செய்யப்பட்டுவந்த ஆப்பிரிக்க கறுப்பின மக்கள், அடிமைகளாக 1620 ஆண்டு வாக்கில்தான் முதன்முதலாக தோட்டம் மற்றும் ஆலைப்பணிகளுக்காக, அமெரிக்காவிற்கு கொண்டுவரப்படுகின்றனர். இவ்வாறு, 1626 முதல் 1860 வரை கிட்டத்தட்ட 4.7 லட்சம் பேர்அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகியிருக்கின்றனர் என்கிறது புள்ளிவிபரம். இந்த கறுப்பினஅடிமைகளின் நூற்றாண்டுகால உழைப்பே அமெரிக்க மூலதனத்தை உச்சாணிக்கொம்பில் தூக்கிவைத்தது என்பதை பின்புலமாகக்கொண்டு விளக்குவதாக உள்ளது இந்நூல். 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆசியாவின் கிழக்குப்பகுதியில், ரஷ்ய நாட்டினது சைபீரியப்பகுதியிலிருந்து, அமெரிக்காவின் மேற்குப்பகுதியிலுள்ள பெரிங்கியா எனும் பகுதியைக்கடந்து, அலாஸ்கா வழியாக ஆசியர்கள் முதன்முதலாக பண்டைய அமெரிக்காவில் குடிபெயர்ந்திருக்கின்றனர் என்கிறது வரலாறு. இவர்கள்தான் தற்போதைய ஐக்கிய அமெரிக்காவின் பூர்வ குடிகளாவர்.
பின்னர், 1607ஆண்டுவாக்கில், பிரிட்டிஷார்கள் அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் குடியேறி, பதிமூன்று பிரதேசங்களையும் தமதாக்கிக்கொள்கின்றனர். இப்படி, 1650 ஆண்டு வாக்கில் 50,000 ஆயிரமாக இருந்த குடிபெயர்ந்த பிரிட்டிஷாரின் எண்ணிக்கை 1725 வது ஆண்டில், 25 லட்சமாக உயர்ந்துவிட்டது. இந்தப்பிரதேசங்கள்தான் பின்னாட்களில் ஐக்கிய அமெரிக்கக்குடியரசு உருவாகக்காரணமாக இருந்தது.
இந்த குடியேற்றக்காரர்களுக்கு, பரந்த நிலத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டனர். அதற்காக, முதலில், அமெரிக்க பூர்வகுடிகளை அல்லது செவ்விந்தியர்களை அடிமைகளாக்க முயற்சித்தனர். செவ்விந்தியர்களைப் பிடித்துவந்து அடிமைகளாக விற்பதற்கும் குடியேறியவர்களில் சிலர் கிளம்பினார்கள். இச்செயலுக்கு,பூர்வகுடிகள் எதிர்ப்புக்காட்டி பணிய மறுத்ததால், குடியேறி நிலவுடமையாளர்கள் அம்மக்களை கொன்றொழித்தும், கொடுஞ்சித்திரவதைக்கும் உள்ளாக்கினர். அடுத்த முயற்சியாக, நில உரிமையாளர்கள், தங்களது 13 குடியேற்றப்பகுதிகளில் வாழ்ந்து வந்த வெள்ளையின குற்றவாளிகள் மற்றும் கைதிகளை பயன்படுத்தி, குறைந்த கூலிகொடுத்து மிகக்கடுமையாக சித்திரவதை செய்து, வேலைவாங்கி வந்தனர். இந்த முயற்சியும் நில உரிமையாளர்களுக்கு பலனளிக்கவில்லை.
(ஒரு புள்ளிவிபரத்தின் படி, 1717 லிருந்து, பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிகர யுத்தம் தொடங்கிய 1775 வரையிலும் சுமார் 40,000 கைதிகள் பிரிட்டனிலிருந்து குடியேற்றப்பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்) அதன் பிறகு, ஐரோப்பியாவிலிருந்து வடஅமெரிக்காவிற்கு குடியேற விருப்பம் உள்ளவர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி, வடஅமெரிக்காவிற்கான கடற்பயணச்செலவுகள் முழுக்க ஏற்றுக்கொள்வதெனவும், அதற்குஈடாக, அப்பயணியானவர் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை தோட்ட வேலைகள் செய்தாகவேண்டும் என்கின்றனர். ஒப்பந்த வேலைக்காரர்களும் அடிமைகளைப்போலவே நடத்தப்பட்டனர். அதுமட்டுமல்லாது, விற்கவும், வாங்கவும் முடிந்தது. பண்டமாற்று முறையைப் போன்றும் பரிமாறிக்கொள்ளப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், காலனி நாடுகளைக் கைப்பற்றுவதில், ஐரோப்பிய நாடுகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதனையொட்டி, பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்குமிடையே போர்கூட நடந்தது. இதனால், உலகளவிலுள்ள நாடுகளை காலனியாக்க வேண்டியிருந்ததால், அந்தந்த நாடுகளின் இராணுவத்துக்கு ஆட்கள் அதிகம்பேர் தேவைப்பட்டனர். இதன் காரணமாக ஐரோப்பாவிலிருந்து, வடஅமெரிக்காவிற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக, வட அமெரிக்க வெள்ளைநிற நில உடைமையாளர்களுக்கு தங்களுடைய தோட்டங்களில் வேலை செய்ய புதிய அடிமைகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்தச்சூழலில், ஆப்பிரிக்காவிலுள்ள கறுப்பினத்தவர்களை வேட்டையாடுவதில் பிரிட்டிஷ்காரர்களில் ஒரு கூட்டத்தினர் தீவிரங்காட்டி வந்தனர். இப்படி, திருட்டுத்தனமாக, வேட்டையாடப்பட்ட கறுப்பினத்தவர்கள், அங்கிருந்த அடிமைச்சந்தையில் விற்கப்பட்டனர். அதன்பிறகு, விற்பனை செய்யப்பட்ட கறுப்பினத்தவர்கள் வெள்ளைநிற அடிமை வியாபாரிகளால் வடஅமெரிக்காவிற்கு கப்பலின் வழியாககொண்டுவரப்பட்டு, இங்கிருந்த அடிமைச்சந்தைகளில் விற்கப்பட்டனர்.
அடிமைவியாபாரமும் பல்கிப்பெருகுகிறது. இதனால் உள்ளூர் வெள்ளையின அடிமை வியாபாரிகளின் லாபமும் அதிகரிக்கிறது. இவ்வாறு, சந்தையில் வாங்கப்பட்ட கறுப்பின அடிமைகள் பிரிட்டிஷ் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெள்ளையர்கள் குடியேறிய பதிமூன்று பிரதேசங்களிலும் உழைப்பதற்காக பரவலாகின்றனர். இம்மக்களுடைய கடும் உழைப்பின் பலனை வெள்ளைநிறத் தோட்ட உரிமையாளர்கள் லாபமாக அறுவடைசெய்து கொண்டனர். 1607லிருந்து வடஅமெரிக்காவின் பதிமூன்று பிரதேசங்களில் குடியேறிய பிரிட்டிஷ் வெள்ளையர்களில் கணிசமானவர்கள் மிகப்பரந்த அந்தப்பூமியில் நில உடைமையாளர்களாக இருந்தனர். நிலம் வைத்திருந்தவர்களுக்கே வாக்குரிமை என்ற அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு 13 பிரதேசங்களுக்கும் சட்ட மன்றப்பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் தான், தனது நாட்டின் குடியேறிகளின் பிரதேசங்களின் மீது ஆதிக்கம் செலுத்த அதாவது தனது காலனியாக்கிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு தீவிரங்காட்டியது. இந்த முடிவினை குடியேறிகள் ஏற்க மறுக்கின்றனர். 1775 ஜூனில் அவ்விருதரப்பிற்குமிடையே யுத்தம் வெடித்தது. இச்சமயத்தில், குடியேறிகளின் 13 பிரதேசங்களுக்கும் இராணுவத்தலைவராக ஜார்ஜ்வாஷிங்டன் பொறுப்பேற்கிறார். யுத்தம் பரவலாகிறது. இச்சமயத்தில், 1776 ஜூலை 14 ல் பிரிட்டிஷ் காலனியாதிக்க எதிர்ப்பு இராணுவமானது தங்களது 13 பிரதேசங்களையும் ஐக்கிய அமெரிக்க நாடு என பிரகடனம் செய்கின்றது. இருந்த போதிலும், யுத்தம் தொடர்ந்து நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்க நாட்டினது படைகளுடன் பிரிட்டிஷின் எதிரி நாடான பிரான்ஸ் நாட்டுப்படைகளும் சேர்ந்துகொள்கிறது. இறுதியில் வேறு வழியின்றி, பிரிட்டிஷ் அரசாங்கம் ஐக்கிய அமெரிக்க நாட்டுப்படைகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வந்து, 1783 ல் ஏற்பட்ட பாரீஸ் உடன்படிக்கையின்படி, ஐக்கிய அமெரிக்கா தனிச்சுதந்திரம் பெற்ற நாடானது.
ஐக்கிய அமெரிக்கா நாடானது பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றிருந்த போதிலும், அது, கறுப்பின அடிமைகளின் நிலைமையில் எந்த வித மாற்றத்தையும் உருவாக்கவில்லை. ஐக்கிய அமெரிக்க நாட்டில், தோட்டப்பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட ஆறு மாகாணங்கள் தென்பகுதியிலும், ஆலைத்தொழிலை அடிப்படையாகக்கொண்ட ஏழு மாகாணங்கள் வட பகுதியிலும் இருந்தன. இதில் தென்பகுதியில்தான் கறுப்பினஅடிமைகள் அதிகமிருந்தனர். 1715 ஆண்டின் கணக்குப்படி, ஐக்கிய அமெரிக்காவில், கட்டாயமாக இறக்குமதி செய்யப்பட்ட கறுப்பின அடிமைகளின் எண்ணிக்கை ஆறு லட்சத்திற்கு அதிகம். அப்போது, 13 பிரதேசங்களின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 30 லட்சமாகும். இப்படி, தோட்ட உரிமையாளர்கள், ஆலை உரிமையாளர்களின், கொள்ளை லாபத்திற்கு முழுக்க காரணமாகயிருந்த கறுப்பு அடிமைகளின் கொந்தளிப்புக்களை புரிந்திருந்த நில உடைமையாளர்கள் அவற்றினை ஆரம்பத்திலேயே தடுத்திடும் நோக்கில், ஒருபக்கம், அரசாங்கத்தின் மூலம் கடும் ஒடுக்குமுறைச்சட்டங்களை அமல்படுத்தி கறுப்பு அடிமைகளின் எழுச்சிகளை கட்டுப்படுத்தினர். மறுபக்கம், அடிமை உரிமையாளர்களையும், அடிமைமுறையையும் காப்பாற்றும் நோக்கில் மதத்தின் பெயரைச்சொல்லி, அவ்வடிமைகளை முடக்கியும் போட்டனர்.
கல்வியற்றவர்களைப் பணியவைப்பது எளிதானது’ என்பது நில உடைமையாளர்களின் கருத்தாகும். இதனையொட்டியே, ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துப்பகுதிகளிலுமே –
• கறுப்பு அடிமைகளுக்கான சட்ட விதிகளின்படி, அவர்களுக்கு படிக்கவோ, எழுதவோ கற்றுத்தருவது மிகக்கடுமையான குற்றமாக கருதப்பட்டது.
• சேமிப்பதற்குக்கூட அவர்களூக்கு விதிகள் அனுமதிக்கவில்லை.
• சொத்தும் கூட வைத்துக்கொள்ளக்கூடாது.
• ஆயுதமும் தாங்கக்கூடாது.
• நாய்களைக்கூட வளர்ப்பது சட்ட விரோதம்.
• தப்பிச்செல்லும் அடிமைகளை கொல்வதற்கு நில உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதே சமயம், வீரதீரச்சாதனைகளில் ஈடுபடும் கறுப்புஅடிமைகள் விடுதலை செய்யப்பட்டு சுதந்திர மனிதனாக ஆக்கப்படுகிறார். பிரிட்டிஷ் காலனியாட்சியிலிருந்து சுதந்திரமடைந்த 1783 ஆண்டு வரையிலான 120 ஆண்டுகாலத்தில், சுமார் 50 ஆயிரம் கறுப்பு அடிமைகள் இது போன்று, விடுவிக்கப்பட்டு சுதந்திர கறுப்பர்களாகயிருந்தனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
1775 ஆண்டு முதல் 1783 வரையிலான எட்டு ஆண்டுகள் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கும், ஐக்கியஅமெரிக்கப் படைகளுக்கும் நடந்த சுதந்திரப்போரின் விளைவாக, கறுப்பினத்தவர்களிடையே, ’அடிமை ஒழிப்பு இயக்கம்’ ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக உருவெடுத்தது. சுதந்திரப்போர் கால கட்டத்தில், பிரிட்டிஷ் காரர்களின் இராணுவத்தில் கறுப்பினத்தவர்கள் சேர்ந்துவிடக்கூடாது என தோட்ட உரிமையாளார் கூட்டணியும், தோட்ட உரிமையாளர் கூட்டணியினருடன் கறுப்பினத்தவர்கள் சேர்ந்துவிடக்கூடாது என பிரிட்டிஷ்காரர்களும், கறுப்பினத்தவர்களை கவனமாக விலக்கிவைத்தே செயல்பட்டனர்.
இதற்கிடையே, பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆளுநர், 1775ஆம் ஆண்டில், ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அதன்படி, ‘சுதந்திரப்போர் தொடுத்துள்ள குடியேற்றக்காரர்களின் வசமுள்ள அடிமைகளில், உடல் தகுதியானவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்து, போரில் ஈடுபட்டால் அவர்கள் அனைவரும் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்’ என்கிறார். ஆனால், ஐக்கிய அமெரிக்காவினது, சுதந்திரபோர்ப்படையின் தளபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டனும், தோட்ட உரிமையாளர்களும், கறுப்பு அடிமைகளை சுதந்திரபோர்ப்படையில் சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த, அமெரிக்க நாடாளுமன்றமோ, கறுப்பு அடிமைகளை சுதந்திரபோர்ப்படையில் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனக்கூறி, கடுமையான போராட்டத்தையும் மேற்கொள்கிறது.
இந்நிலையில் ஐக்கிய அமெரிக்காவின், தெற்கு கரோலினா மாநிலமானது, 1780 ல் ஒரு சட்டத்தை நிறைவேற்றுகிறது. அச்சட்டத்தின்படி, கரோலினா மாகாணத்தில், சுதந்திரப்போரில் ஈடுபட முன்வரும் அடிமையல்லாத குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், வழக்கமான ஊதியத்துடன் ஒரு கறுப்பு அடிமையும் சேர்த்து பரிசாக வழங்கப்படும் என்பதுதான் அது. அநீதிமிக்க, இந்த மாகாணத்தின் தனித்த போக்கானது பிற மாகாணங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்துவிட்டது. பிறகு, அனைத்து இராணுவப்பொறுப்பாளர்களுக்கும், தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் எழுதிய கடிதத்தில், ‘இராணுவக்கவுன்சில் எடுத்த முடிவின்படி, நீக்ரோக்கள் (கறுப்பு அடிமைகள்), மூலட்டோக்கள் (கறுப்பர்களுக்கும் வெள்ளையினத்தவர்களுக்கும் பிறந்த கலப்பினத்தவர்கள்), பூர்வீககுடி இந்தியர்கள் தவிர்த்த மற்றவர்களில் 16 வயது முதல் 50 வயது வரையிலான உடல்தகுதியானவர்களை இராணுவத்தில் சேர்க்குமாறு உத்திரவிட்டார்’.
இதனிடையே, பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப்போரில், ஐக்கிய அமெரிக்க படைகள் வெற்றியை தழுவுவதற்கு, கறுப்பின அடிமைகள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய தவிர்க்கமுடியாத நெருக்கடி உருவாகிறது. இதனை கருத்தில் கொண்ட இராணுவத்தளபதி ஜார்ஜ்வாஷிங்டன் டிசம்பர் 16.1775 ல் நாடாளுமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘கறுப்பு அடிமைகளை இராணுவத்தில் சேர்க்க அனுமதிக்கிறேன்’ என்கிறார். இந்த அறிவிப்பினைத்தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கறுப்பு அடிமைகளை இராணுவத்தில் சேர்த்திட உடன்பாடு இல்லாததால் ஒப்புதல் அளிப்பதை தள்ளிப்போடுகின்றனர். இதன்பிறகு, கறுப்பு அடிமைகளுக்கு ஆதரவான, பல்வேறு அமைப்புகளிடமிருந்து அரசுக்கு எதிராக அழுத்தம் அதிகரித்த பின்னரே, கறுப்பு அடிமைகள் இராணுவத்தில் சேர அனுமதியளிக்கப்படுகிறது.
சுதந்திரப்போரில்,ஈடுபட்ட கறுப்பர்களின் கைகளில் ஆயுதங்கள் கிடைத்ததானது அவர்களின் உரிமையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது மட்டுமின்றி,பிரிட்டிஷாருக்கு சாதகமாக இருந்த போர்களமானது ஐக்கிய அமெரிக்காவிற்கு சாதகமாக திரும்புவதற்கும் வழிவகுத்தது.இதுவரை, பொருளாதாரக்களத்தில் முனைப்புடன் விளங்கிய கறுப்பினத்தவர்கள், சுதந்திரப்போருக்கும் அதன் காரணமாக அடையப்பட்ட சுதந்திரத்திற்கும் முதுகெலும்பாக விளங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களினது பற்றுதலை விளங்கிக்கொள்ள முடியும். சுதந்திரப்போரில் 5,000 கறுப்பு அடிமைகள் பங்கெடுத்தனர். இவர்கள் இயல்பாகவே அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதே போல, ஆலைத்தொழில் முதலாளித்துவம் நிலவிய வடபகுதியில் 50,000 பேரும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திர மனிதர்களானார்கள். ஆனால் தென்பகுதியில் மட்டும், தோட்டத்தொழிலில் ஈடுபட்டுவந்த கிட்டத்தட்ட 7 லட்சம் கறுப்பினத்தவர்கள் ஒடுக்கப்பட்டு அடிமை முறையிலேயே நீடித்துவந்தனர். 1775-1783க்கு இடையிலான எட்டு ஆண்டுகால சுதந்திரப்போரின் முடிவாக ஐக்கிய அமெரிக்க அரசால், இரண்டு முக்கிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. அவை சுதந்திரப்பிரகடனமும், அமெரிக்காவின் அரசியல் சாசனமுமாகும். இவையிரண்டும் அமெரிக்காவை எந்தக்கொள்கையின் அடிப்படையில் உருவாக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பவையாக இருந்தது. 1787 மே மாதத்தில் அரசியல் சாசன சிறப்பு ஆய்வுக்குழு கூட்டமானது, குடியரசுத்தலைவரான ஜார்ஜ்வாஷிங்டன் தலைமையில், அரசியல் சாசனத்தின் சில விதிகளை மறுபரிசீலனை செய்யவும், புதிய அரசியல் சாசனத்திற்கான முன்வரைவு குறித்தும் நடைபெற்றது. ஆய்வுக்குழுவில் பங்கேற்ற பெரும்பகுதியினர் அடிமைமுறையை ஆதரிக்கும் பழமைவாதிகளாகவே இருந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனிலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் தொழிற்புரட்சி ஏற்படுகிறது. அதனையொட்டி, அமெரிக்காவிற்கும் வேகமாக பரவுகிறது. இதன் விளைவால், இயந்திரமுறையின் மூலம் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. தென்பகுதியில் மட்டும் தோட்ட விவசாய உற்பத்தி முறையினால், அடிமைமுறையானது அப்படியே நீடித்துவருகிறது.
மனித அடிமை வியாபாரம் நடத்தும் கொடுமைக்கு எதிராக உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் அதிகரித்துவந்ததால் 1807 ஆம் ஆண்டு அடிமைகள் விற்பனை செய்யப்படுவது என்பது ஐக்கிய அமெரிக்க அரசால் தடை செய்யப்படுகிறது.கறுப்புஅடிமைகளின் வரத்து இல்லாமல் போனதையொட்டி, கால்நடைப்பண்ணைகளைப்போல, அடிமைப்பண்ணைகள் ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியில் ஆரம்பிக்கப்படுகின்றன.
வடபகுதி ஆலை உரிமையாளர்கள்,தென்பகுதி தோட்ட உரிமையாளர்களுக்கிடையேயான முரண்கள் அடிமைகள் விசயத்தில் மட்டுமின்றி,ஆட்சியதிகாரத்திலும் பிரதிபலித்தது.இந்நிலையில் அடிமைமுறையை எதிர்த்த கறுப்பர்களின் இயக்கம் 1820-1830 களில் தனது வெள்ளைநிற ஆதரவாளர்களுடன் தீவிரமடைந்தது. எழுச்சிகளும்,கிளர்ச்சிகளும் நாடுமுழுக்க பரவலாகின.இதன் காரணமாக,அரசின் ஒடுக்குமுறைகளும் கறுப்பு அடிமைகளுக்கு எதிராக அதிகரித்தன. 1833-ஆம் ஆண்டு, ’அமெரிக்க அடிமை ஒழிப்பு’ அமைப்பு ஒன்று உருவாகிறது. இந்த அமைப்பு,ஐக்கிய அமெரிக்கா முழுக்க 2.5 லட்சம் உறுப்பினர்களை கொண்டிருந்தது. அதுமட்டுமின்றி,நாடு முழுக்க 25 பத்திரிக்கைகளையும்,பருவ இதழ்களையும் வெளியிட்டுவந்தது.இச்சூழலின் காரணமாக,அடிமை ஒழிப்பு இயக்கத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய உத்வேகம் ஏற்பட்டது.
1849 ஆம் ஆண்டு ஃபிரடெரிக் டக்ளஸ் அடிமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகிறார்.இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும்,பேச்சாளரும்,களப்பணியாளரும் கூட.இவர் தலைமையேற்றதற்குப்பிறகு, இயக்கத்தின்போராட்ட வடிவம் மாறுகிறது.தென்பகுதியில் அடிமைகள் வடபகுதிக்கு தப்பியோட அமைப்பு ரீதியான பல்வித உதவி நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.கறுப்பர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வெள்ளை நிறத்தவர் மற்றும் அடிமை ஒழிப்பு இயக்கத்தினர் இவ்வாறாக, நாடுமுழுக்க, நடத்திய கொந்தளிப்பான போராட்டங்களின் விளைவாக, அடிமைமுறையை அடித்தளமாகக்கொண்ட தோட்ட உரிமையாளர்களுக்கும்,வடபகுதி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை உருவாகிறது. 1854 ல் தென்பகுதியிலுள்ள கான்சாஸில் தோட்ட உரிமையாளர்களுக்கு எதிராக அடிமைமுறை எதிர்ப்பாளர்கள் துவங்கிய ஆயுதமேந்திய போராட்டம் 1856 வரை நீடித்தது.இந்தப்போராட்டமானது, 1861 ல் துவங்கிய உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னுரையாக அமைந்தது.
அடிமைமுறையை நீடிக்க விரும்பிய தென்பகுதி தோட்ட உரிமையாளர்கள் 1861 பிப்ரவரி 6-ல் ஐக்கிய அமெரிக்க நாட்டிலிருந்து பிரிந்து, தென்பகுதி மாநிலங்களைக்கொண்டு,’கூட்டிணைப்பு மாநிலங்கள்’எனும் புதிய நாட்டை உருவாக்கினர்.இதனையொட்டி, 1861 ஏப்ரல் 13 அன்று ஐக்கிய அமெரிக்க நாட்டுப் படைகளுக்கும்,புதிய அரசின் படைகளுக்குமிடையே உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. 1861 ஜூலை 22 ந்தேதி கூடிய ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்றம்,கூட்டிணைப்பு மாநிலங்களின் பிரிவினையை ஏற்க மறுத்தது.பின்னர் நிறைவேற்றிய தீர்மானத்தில், ‘இந்த யுத்தத்தின் நோக்கம்,அடிமைமுறையை ஒழிப்பதும்,ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரசியல் சாசன உயரிய அதிகாரத்தை உயர்த்திப்பிடிப்பதுவும்,ஐக்கிய அமெரிக்காவின் ஒன்றியத்தை நிலை நாட்டுவதும்தான் என்றது.’
ஐக்கிய அமெரிக்க அரசின் இரண்டு முக்கிய நடவடிக்கைகள் அடிமை முறையை ஒழிப்பதில், மிகமுக்கிய பங்காற்றியிருப்பதை கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து உறுதி செய்து கொள்ளமுடியும்.அதாவது,
1861, ஜூனில்,தென்பகுதி விர்ஜினியாவிலிருந்து வடபகுதிக்கு தப்பியோடிவந்த மூன்று அடிமைகளை பிடித்துச்செல்ல அவர்களின் தோட்ட உரிமையாளரும், ஒரு இராணுவ அதிகாரியும் வருகின்றனர். அடிமைகளை அவர்களிடம் ஒப்படைக்க ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ ஜெனரல், பட்லர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் ‘தப்பியோடி வரும் அடிமைகளை பிடித்து ஒப்படைப்பது பற்றிய அடிமைகள் குறித்த சட்டமானது ஐக்கிய அமெரிக்க நாட்டிற்குள் மட்டும் தான் பொருந்தும். இப்போது விர்ஜினியா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து விலகிவிட்டது. எனவே இச்சட்டம் பொருந்தாது’ என்கிறார்.
ஜெனரல் பட்லரைத் தொடர்ந்து, மற்றொரு இராணுவ ஜெனரலான, ஃபிரிமோண்ட் 1861, ஆகஸ்ட் 31 ல் தப்பியோடிவந்த அடிமைகளின் விடுதலை குறித்த பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இந்த பிரகடனமானது, ஐக்கிய அமெரிக்காவில் அடிமைமுறை ஒழிப்பிலும், அடிமைமுறை ஒழிப்பு இயக்கத்திலும் வரலாற்றுச்சிறப்புமிக்க நடவடிக்கையாக அமைந்துவிட்டது.. அதாவது, ‘மிஸ்ஸவுரி மாநிலத்தில் தென்பகுதி பிரிவினை வாதிகளின் அடிமைகள் உள்ளிட்ட அவர்களது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படவேண்டும்’ என்பதுதான் அது. அப்போது, குடியரசுத்தலைவராக இருந்த ஆப்ரஹாம் லிங்கன், இப்படியான, விடுதலைகுறித்த பிரகடனத்தை
திரும்பப்பெறுமாறு ஃபிரிமோண்டிடம் கேட்டுக்கொண்டார். ஜெனரல் ஃபிரிமோண்டோ ஆணையை திரும்பப்பெற மறுக்கிறார். ஆப்ரஹாம் லிங்கனோ, மீண்டும் திரும்பபெற உத்தரவிடுகிறார். அதனை, ஃபிரிமோண்ட் மீண்டும் மறுக்கவே, லிங்கன் அவர்மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு உத்திரவிடுகிறார். ஃபிரிமோண்ட் மீது இரண்டு விசாரணைக்குழுக்கள் அமைக்கப்படுகிறது. குழுவினது பரிந்துரையின்
அடிப்படையில் ஃபிரிமோண்ட் இராணுவ ஜெனரல் பொறுப்பிலிருந்து கட்டாயமாக நீக்கப்படுகிறார்.
ஒருபக்கம், உள்நாட்டு யுத்தம். மற்றொருபக்கம் அடிமை ஒழிப்பு இயக்கத்தின் போராட்டம். இதற்கிடையே ஒரு சமரசத்தீர்வை எட்டும் நோக்கில் லிங்கன் ஒரு தீர்வை 1862 மார்ச் -6 ல் நாடாளுமன்ற அவையின் முன் வைக்கிறார். அதாவது, ‘அடிமை உடைமையாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்துவிட்டு, அடிமைகளை சுதந்திர மனிதர்களாக்குவது’ என்பதுதான் அது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுக்கின்றனர். குடியரசுத்தலைவரான லிங்கன், தமது சமரசத்திட்டத்திற்கு, செயல்வடிவம் கொடுப்பதற்கு முன்னதாக, சில முன்னோட்ட நடவடிக்கைகளை கையிலெடுக்கிறார். அவற்றில் முக்கியமானது, 1862, மே மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, வீடுகளுடன் கூடிய பண்ணைகளை, அடிமைகளுக்கு வழங்குவதான சட்டமாகும். இச்சட்டத்தின்படி, ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் பதிவுக்கட்டணமாக 10 டாலரை கொடுத்துவிட்டு 160 ஏக்கர் நிலம் பெற்றுக்கொள்ள வகைசெய்தது. இச்சட்டமானது ஒருவகையில் அடிமை முறைக்கு பதிலாக, சுதந்திரமான சுயேட்சையான விவசாய மற்றும் பண்ணைமுறைக்கு வழிவகுத்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் பெரும்பகுதி கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்களின் ஆதரவைப்பெற்ற பின்னணியில், 1862, செப்டம்பர் 22 ல் லிங்கன் தனது அரசின் அடிமை ஒழிப்பு பிரகடனத்தை வெளியிட்டார். அப்பிரகடனமானது, ‘1863 ஆம் ஆண்டில் நமது பிரபு (இயேசு)வின் பிறந்த நாளான ஜனவரி முதல் நாளிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் எந்தவொரு மாநிலத்திற்குள்ளும் அடிமைகளாக கையாளப்பட்டவர்கள் அனைவரும் என்றென்றைக்கும் சுதந்திரமானவர்கள்’ என்றது.
இப்பிரகடனம் குறித்து, கறுப்பின அடிமைஒழிப்பின் தலைவரான ஃபிரடெரிக் டக்ளஸ் கூறுகையில், ‘இந்த நியாயமான பிரகடனத்தை நிலைத்ததன்மை கொண்டதாக ஆக்குவதற்காகவே நாம் இந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்று உரக்கக் கூவிட வேண்டும் ’ என்கிறார். ஐக்கிய அமெரிக்காவின் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும், தங்களை அடிமைமுறையிலிருந்து விடுவித்துக்கொள்வதிலும் கறுப்பின மக்கள் நேரடியாகவும், தீர்மானகர சக்தியாகவும் பங்காற்றினார்கள் என்றால் அது மிகையல்ல. ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தில் மட்டும் 1,85,000 கறுப்பின வீரர்கள் பங்கெடுத்து அதில் 38,000 பேர் தன்னுயிரை இழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சுதந்திரப்போருக்கு பிறகான மறுகட்டுமான காலத்தில், அடிமைமுறை ஒழிக்கப்பட்ட தென்பகுதியில், முதலாளித்துவ உறவுகளை வளர்க்கவேண்டியிருந்ததால், அதற்கேற்ற உற்பத்திக்கருவிகள் மற்றும் சுதந்திரக் கூலித்தொழிலாளி முறையினை நடைமுறைபடுத்துவதற்கான இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. இதனூடாக, ஏற்கனவே கறுப்பினத்தவர்கள் எழுப்பிவந்த உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் கோரிக்கையும்கூட மீண்டும் வலுவடைந்தது. அடிமைமுறை ஒழிந்தது மட்டுமின்றி, இப்போது, கையிலிருக்கும் நிலமும் பறிபோய்விடும் என அஞ்சிய தென்பகுதி நில உடமையாளர்கள் கடும்ஆத்திரம் கொண்டனர். இந்தப்பின்னணியில்தான் 1865 ஏப்ரல் 14 ஆம் தேதியன்று மாலை வேளையில்,தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்காவின் குடியரசுத்தலைவர் ஆப்ரஹாம் லிங்கன், ஃபோர்டு அரங்கில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்படுகிறார்.
லிங்கனின் மறைவுக்குப்பிறகு, குடியரசுத்தலைவர் பொறுப்பேற்ற ஜான்சனுக்கு அவரது குடியரசுகட்சி, முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், வெள்ளையின தொழிலாளர்கள், விவசாயிகள் வர்த்தகர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு துணை நின்றனர். இந்நிலையில், 1865 டிசம்பரில், லிங்கனின் அடிமை ஒழிப்பு பிரகடனத்திற்கு அரசியல் சாசன 13 வது திருத்தம். அடுத்து 1866 ஜூனில்அமெரிக்காவில் பிறந்த அனைத்து குடிமக்களுக்கும் குடியுரிமை வழங்கும் 14 வது சட்டத்திருத்தம். பின்னர், அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை 1868 ஆம் ஆண்டினது சட்டத்திருத்தம் உறுதி செய்தது.
உள்நாட்டு யுத்தம் முடிந்த கையோடு, அரசால் முன்னெடுக்கப்பட்ட மறுகட்டுமான இயக்கமானது 1866 முதல் 1877 வரையில் நடந்தது.இக்காலகட்டத்தில் முன்னாள் அடிமைகளின் உரிமைகள் மீது அக்கறை கொள்ளாது அரசாங்கத்தினர் அலட்சியம் காட்டினர்.இந்நிலையில்,ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மீது இனவெறி எனும் புதிய தாக்குதல் குறிப்பாக தென்பகுதியில் வாழும் நில உடமையாளர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டது இதற்கிடையே, தென்பகுதி நில உடைமையாளர், மற்றும் பிற்போக்கு ஆலைத்தொழிலாளர் ஆசிர்வாதத்தோடு ‘கு க்ளாக்ஸ் க்லான்’ என்ற பயங்கரவாத அமைப்பு அங்கிருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும், அவர்களது வெள்ளையினக்கூட்டாளிகளையும் அச்சுறுவதற்காக தலைதூக்கியது. இச்சூழலில், 1867 ல் அரசியல் சாசனப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக தேர்தலில் பங்குகொண்டு 14பேர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும், 2 பேர் செனட் அவைக்கும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.மறுகட்டுமான காலத்தில், தங்களுடைய வெள்ளைக்கூட்டாளிகளுடன் இணைந்து ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நடத்திய போராட்டங்களின் காரணமாக அவர்களுடைய குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் கல்விகற்கும் உரிமையைப்பெற்றனர். பொதுப்பள்ளிகளில் சேர்ந்து படித்த கறுப்பின மாணவர்களின் எண்ணிக்கையானது, 1860 களில் 500 ஆக இருந்து, 1877 களில் 5 லட்சமாக உயர்ந்தது.
ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியில், வெள்ளையினர்களின் பயங்கரவாத அமைப்பானது, அரசின் உதவியோடு ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் அவர்களது வெள்ளையின ஆதரவாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றது. அதேபோன்று, ஐக்கிய அமெரிக்காவின் வடபகுதியிலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மீது இனவெறிவாதம் முன்னெடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வேலை, ஊதியம் மற்றும் கல்வியிலும் பாரபட்ச அணுகுமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அமெரிக்கா முழுமைக்கும் தொழிலாளி வர்க்கம் நடத்திய 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தில்கூட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இணைக்கப்படவோ, ஈர்க்கப்படவோ இல்லை.
இதன்பின்னர் 1905 ஆம் ஆண்டு ஜூலையில், அமெரிக்க ஏகபோக முதலாளியத்தையும், தோட்ட உடமையாளர்களையும் எதிர்த்து நிற்பதற்காக, ’நயாகரா’ எனும் தீவிரவாத இயக்கம்ஆப்பிரிக்க அமெரிக்கரான டூபோயஸ் முயற்சியால் தொடங்கப்படுகிறது. இதன் நோக்கம், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க போராட்டத்தை முன்னெடுத்து அம்மக்களை ஒன்றுபடுத்தவேண்டும் என்பதுதான்.உரிமைக்காகவும், இனவெறி உள்ளிட்ட அனைத்துவகையான பாரபட்சத்திற்கும், கொடுந்தாக்குதலுக்கும் எதிராக இன்றளவும் (2020) எதோ ஒருவகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போராடிக்கொண்டே இருக்கின்றார்கள்!
இன்றைய ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியதில் அடித்தளமாகவும், முதுகெலும்பாகவும் செயல்பட்டு பாடுபட்ட ஆப்பிரிக்க அமெரிக்ககர்களிடம் இன்றளவிற்கும் வெள்ளையின ஆதிக்கத்தவர்கள் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்பதை அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்கள் திரும்பத்திரும்ப உணர்த்திக்கொண்டேயிருக்கின்றன. தங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்தைப்பெற்ற கறுப்பினத்தவர்கள், அரசியலிலும், பொருளாதாரத்திலும் இன்னும் தங்களது எஜமானர்களையே சார்ந்திருக்க வேண்டியிருப்பது என்பது சோகந்தான்.
l