பொ.வேல்சாமி
பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய புகழ்பெற்ற நூலான ‘சோழர்கள்’ என்ற புத்தகத்தில் அதிகாரம் 24 இல் ‘கல்வியும் அறிவும்’ என்ற தலைப்பிட்ட கட்டுரை உள்ளது. அக்கட்டுரையில் சோழர்கால கல்வி நிலையங்களைப் பற்றியும் அங்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களைப் பற்றியும் மாணவர்களைப் பற்றியும் அங்கு கற்பிக்கப்பட்ட வடமொழி பாடத்திட்ட நூல்களைப் பற்றியும் விரிவாக விளக்குகின்றார். சோழர் ஆட்சி நடைபெற்ற 350 ஆண்டுகளும் இத்தகைய வடமொழிக் கல்வி நிலையங்களுக்கு பேரரசன் இராஜராஜ சோழன் தொடங்கி அவன் சந்ததியில் வந்த அரசர்கள் அனைவரும் மிகப் பெரிய கொடைகளை வாரி வழங்கியதைப் பற்றிய கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை தருகின்றார். அதில் இராஜராஜ சோழன் காலத்திலும் (கி.பி.998, 999) இராஜராஜ சோழன் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் இராசேந்திர சோழனுக்குப் பிறகு அரசாண்ட வீரராசேந்திரன் (கி.பி.1067) காலத்திலும் செயல்பட்டு வந்த வடமொழிக் கல்லூரிகளைப் பற்றியும் அந்தக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு வந்த வடமொழி நூல்களைப் பற்றியும் அந்த நூல்களைக் கற்பித்த ஆசிரியர்கள் அவர்களுக்கான ஊதியங்கள் அங்கு கற்றுக்கொண்ட மாணவர்கள் அவர்களுக்கு சோழ அரசாங்கம் செய்த செலவுகள் என்று பல்வேறு விதமான தகவல்களைக் கூறும் கல்வெட்டுக்களை எடுத்துக்காட்டுகின்றார். அடுத்து வந்த காலமான கி.பி.1121 இல் விக்கிரமசோழனுடைய காலத்தில் செயல்பட்டு வந்த இதேபோன்ற வடமொழிக் கல்லூரிகள் அவற்றிற்கு அரசு செலவு செய்த பெருந்தொகைகளைப் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேபோன்று கி.பி.1213 இல் திருவொற்றியூரில் செயல்பட்டு வந்த வடமொழிக் கல்லூரியைப் பற்றியும் அந்தக் கல்லூரிக்கு 65 வேலி நிலம் (சுமார் 400 ஏக்கர்) மானியமாக விடப்பட்ட கல்வெட்டுக் குறிப்பையும் எடுத்துக்காட்டுகின்றார். இவ்வாறான வடமொழிக் கல்லூரிகளைப் பற்றி செய்திகள் சோழர்கள் பாண்டியர்கள் நாயக்கர்கள் மராட்டியர்கள் என்று எல்லா வகையான ஆட்சியாளர்களாலும் ஒரே மாதிரி செயல்படுத்தப்பட்டு வந்த வரலாற்றை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சோழர் காலத்திலிருந்தே ‘தமிழ்க் கல்வியின் தன்மை எவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்பிக்கையான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை’ என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.
இப்படியான 600 ஆண்டுகாலங்களில் நடைபெறாத, தமிழக வரலாற்றுச் சூழலில் கி.பி.1827 இல் தமிழ்க் கல்வி எப்படி இருந்தது என்பதை முதல் முதலாக வெளிப்படுத்துகின்ற ஒரு ‘தமிழ்ப் பாடநூல்’ நமக்குக் கிடைக்கின்றது. இந்தத் தமிழ்ப் பாட நூலை ஆக்கிக் கொடுத்தவர் ஆங்கிலேய பெண்மணியான ‘திறிமர்’ (1) என்று இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை, கி.பி.1812 இல் திருக்குறளை வெளியிட்ட எல்லீஸ் உருவாக்கிய சென்னைக் கல்விச் சங்கம் வெளியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல் தமிழ் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழியில் உரைநடையில் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கும் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடங்களில் ‘பஞ்சதந்திர கதை’ நூலிலிருந்து சுவையான கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுப்பில் தமிழ் உரைநடையில் கதை சொல்லப்படுகிறது. அதற்கு இணையாக ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (அந்தக் காலத்தில் தமிழ்ப் பயிலுபவர்கள் உரைநடையில் எழுதுவதற்கு தெரியாதவர்களாக இருந்தனர் என்பதும் பாடல்களில்தான் ஒரு விசயத்தைச் சொல்லுவார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்).
இந்த நூலை அடுத்து கி.பி.1847 இல் அமெரிக்க நாட்டுப் பாதிரியார்களால் தொடங்கி நடத்தப்பட்ட யாழ்ப்பாணம் ‘வட்டுகோட்டை வித்யாசாலை’ என்று அழைக்கப்பட்டு வந்த ‘வட்டுகோட்டை கல்லூரி’ வெளியிட்ட தமிழ்ப் பாடத்திட்ட நூல் நமக்குக் கிடைக்கின்றது. இந்நூலின் முன்னுரையில் ‘தமிழ்ச் செய்யுட்களைக் கற்கப் புகுவோர் திருவள்ளுவர் குறளில் தெரிந்து இந்நூலுள் அமைந்திருக்கும் பகுதியைச் சிந்தனையாய்ப் பார்க்க வேண்டுமென்றுங் கேட்கிறோம்’ என்று தொடங்கி கம்பராமாயணம், பஞ்ச தந்திரம், வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம், காசிக் காண்டம், நீதிநெறிவிளக்கம், நாலடியார், திருக்குறள், பெரியபுராணம் போன்ற நூல்களிலிருந்து குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்வு செய்து பாடத்திட்டமாக அமைத்திருக்கிறார்கள். திருக்குறளில் பரிமேலழகர் உரையையும் இணைத்திருக்கின்றார்கள். கூடுதலாக தமிழ்ச் செய்யுட்களைப் பிரித்து படிக்கும் முறையை திருக்குறளை உதாரணமாகக் காட்டி 3 பக்கங்களில் அற்புதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (2)
மகா ஸ்ரீ.ஸ்ரீ. துரைத்தனத்தாராலே ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் படிக்கிறவர்கள் எளிதில் தமிழ் இலக்கியத்தைக் கற்றறியும் பொருட்டாகச் செய்யப்பட்டதாகக் குறிப்பு எழுதப்பட்டு வெளியிடப்பட்ட ‘தமிழ்ச் செய்யுட் கலம்பகம்’ ( TAMIL POETICAL ANTHOLOGY ) என்ற நூல் 1857 இல் பாடநூலாக வந்துள்ளது. இந்நூல் வெளிவந்த காலத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கு வயது இரண்டு. தமிழ்த் தாத்தா 1880 இல் தான் அறியாத நூல் என்று குறிப்பிட்ட ‘சீவக சிந்தாமணி’ யில் உள்ள பாடங்கள் இந்நூலில் அன்றைய மாணவர்களுக்காக தொகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. திருக்குறள் நாலடியார் கம்பராமாயணம் என்ற நூல்களுடன் பழமொழி நானூறு, தேம்பாவணி, தாயுமானவர், மூதுரை என்பவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பொழுது நம்முடைய பாடநூல் வரலாற்றில் கிடைக்கின்ற மூன்றாவது நூல் என்பது குறிப்படத்தக்கது. (3)
இதனையடுத்து தமிழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியமான பாடநூல் என்பது 1868 இல் அன்றைய பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்ட ‘சீவக சிந்தாமணி’ -‘நாமகள் இலம்பகம்’, நச்சினார்கினியர் உரையுடன் கூடியது ஆகும். உ.வே.சாமிநாத அய்யரின் 13 வது வயதில் பாடநூலாக வைக்கப்பட்ட இந்நூல்தான் பிற்காலத்தில் சாமிநாத அய்யரை ‘தமிழ்த் தாத்தா’ என்று அழைப்பதற்கு காரணமாக அமைந்தது. இதனை தொடர்ந்து 1872 இல் ‘மூன்றாம் பாடப் புஸ்தகம்’ ( THIRD BOOK OF LESSONS FOR THE USE OF SCHOOLS, ) என்ற நூல் அன்றைய மாணவர்களுக்கு உலகில் நிகழ்ந்து வரும் பல்வேறு முக்கியமான செய்திகளை அறிந்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளின் கல்வி நிலையங்களில் பாடமாக இருந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கபட்டு பாடத்திட்டத்தில் அமைக்கபட்ட உரைநடை நூல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நூலில் அந்தக் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் உரைநடை இன்று நாம் படிப்பதற்கு அழகாகவும் எளிமையாகவும் இருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. (4)
கி.பி.1872 இல் உ.வே.சாமிநாத அய்யருக்கு வயது 17. அந்த வருடத்தில் சிலப்பதிகாரம் அன்றைய பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 1876, 1880 வருடங்களிலும் பி.ஏ. பாடத்திட்டத்தில் சிலப்பதிகாரம் தொடர்ந்து பாடநூலாக இருந்து வந்துள்ளது. உ.வே.சாமிநாத அய்யருக்கு தான் வகித்த தமிழ்ப் பேராசிரியர் வேலையை பெற்றுத் தந்த தியாகராஜ செட்டியார் சிலப்பதிகாரத்தை மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமல் தடுமாறியதாக அய்யர் குறிப்பிடுகின்றார். பிற்காலங்களில் உ.வே.சாவின் புகழ் கொடிகட்டி பறப்பதற்கு காரணமாக அமைந்ததில் சீவக சிந்தாமணி புறநானூறு போன்று சிலப்பதிகாரமும் இடம் பெற்றதை நாம் அனைவரும் அறிவோம். அத்துடன் பண்டைய தமிழ்க் கலாசாரம் வரலாறு போன்றவைகளை அதுவரையில் துளியும் அறியாத தமிழ்ச் சமூகம் அறிந்துக் கொண்டு பெருமிதப்பட்டதற்கு காரணமாகவும் சிலப்பதிகாரம் அமைந்தது. இத்தகைய நூலை பாடத்திட்டத்தில் சேர்த்த அன்றைய ஆங்கில அரசாங்கத்தை நினைவுகூறாமல் மறக்க முடியுமா ? இதனையடுத்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் குறிப்பிடத்தக்க ஏலாதி நூல் முழுமையையும், 1884 இல் கம்பராமாயணத்திற்கான விளக்கம் என்ற பெயரில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வேறுபல குறிப்பிடத்தக்க நூல்களையும் இணைத்து பாடநூல்களாக வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. (5)
கி.பி.1885 இல் நாலடியார் மற்றும் கூர்மபுராணம் இதனை தொடர்ந்து 1895 இல் ஷேக்ஸ்பியரின் (‘மிட்ஸம்மர் நைட்ஸ் ட்ரீம்’) ‘நடுவேனிற்கனவு’ நாடக நூலை தமிழில் மொழிபெயர்த்து பாடமாக வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நூல் பாடமாக வைக்கப்பட்ட செய்தியை இந்நூலின் முன்னுரை ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகாகப் பேசுகின்றது. (6)
கி.பி.1901 இல் தமிழில் அலங்கார இலக்கணத்தைப் பேசுகின்ற ‘தண்டியலங்காரம்’அதன் பழைய உரையாசிரியர் சுப்ரமணிய தேசிகர் எழுதிய உரையுடன் அன்றைய பி.ஏ. வகுப்பிற்கு பாடமாக வைக்கப்பட்டது. இந்நூலை மாணவர்களுக்கு புரியும்படியான விளக்கக் குறிப்புகளுடன் வை.மு.சடகோப ராமானுச்சாரியார் மற்றும் கிருஷ்ணமாச்சாரியார் ஆகிய இருவரும் வெளியிடுகின்றனர். அந்த நூலுக்கு ஒரு அற்புதமான ஆராய்ச்சி முன்னுரையை ஆசிரியர்கள் இருவரும் எழுதியிருக்கின்றனர். வடமொழியில் புகழ்பெற்ற அலங்கார சாஸ்திர நூல்களை அறிமுகப்படுத்தி பின் தமிழ் அலங்கார சாஸ்திரமாகிய தண்டியலங்காரம் நூலை ஒப்பிட்டு எழுதப்பட்ட எட்டு பக்க முன்னுரை ஒரு மிகப்பெரிய ஆய்வுரையாக இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த ஆசிரியர்கள் இருவரும் அன்றைய பாடநூல்களுக்கு விளக்கவுரைகளையும் ஆராய்ச்சிக் குறிப்புகளையும் எழுதி வெளியிடுவதை தங்களுடைய தொடர் பணியாகக் கொண்டிருந்தனர். அந்தப் பணியின் பலனாக இவர்களுடைய நன்னூல் விளக்கம், கம்ப ராமாயணத்திற்கான உரை, திருக்குறள் பரிமேலழகர் உரைக்கான மிகவும் சிறப்பான விளக்கம் போன்று பல நூல்கள் இன்றும் நமக்கு ஆய்வுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக உள்ளன என்பதை மறக்கமுடியாது. (7) l