- தோஹா முஹம்மது அலி
- தமிழில் : முனைவர் து.ரவிக்குமார் எம்.பி
துறவியின் ஞாபகங்களைப்போல்
காலியாக இருக்கின்றன வீதிகள்
அகோர்ன் கொட்டைகளைப்போல
தணலில் வெடிக்கின்றன முகங்கள்
தொடுவானத்திலும் கதவு நிலைகளிலும்
நெரிகின்றன பிணங்கள்
இருப்பதற்குமேல் ரத்தத்தைப் பீய்ச்சமுடியாது நரம்புகளால்
எழுந்ததற்குமேல் எழமுடியாது அலறல்களால்
நாங்கள் போகமாட்டோம்!
தேனும் பிணையாட்களும் நிரம்பிய ட்ரக்குகளுக்காக கார்களுக்காக
வெளியே காத்திருக்கிறார்கள் எல்லோரும்.
நாங்கள் போகமாட்டோம்!
முற்றுகைக்கும் பின்வாங்கலுக்கும் முன்னால்
உடைகின்றன விளக்குகளின் மூடிகள்.
வெளியே, நாங்கள் வெளியேறவேண்டும் என்கிறார்கள் எல்லோரும்.
ஆனால், நாங்கள் போகமாட்டோம்!
முக்காடிட்ட
தந்த நிறத்து மணப்பெண்கள்
தடுப்புக்காவலின் கண்காணிப்புக்குள்
மெள்ள நடக்கிறார்கள்,
காத்திருக்கிறார்கள்.
வெளியிலிருப்போர் எல்லோரும் நாங்கள் வெளியேறவேண்டும் என்கிறார்கள்.
ஆனால் நாங்கள் போகமாட்டோம்
பீரங்கிகள் தாக்குகின்றன பேரிச்சைத் தோப்புகளை
நாசமாக்குகின்றன பூக்களின் கனவுகளை
அழிக்கின்றன ரொட்டிகளை கொல்கின்றன உப்பை ஏவுகின்றன தாகத்தை
உதடுகளை,ஆன்மாக்களை உலரச்செய்து.
வெளியிலிருப்போர் கேட்கிறார்கள்:
” எதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்?
நேசம் மறுக்கப்பட்டாயிற்று
காற்றும் கைப்பற்றப்பட்டாயிற்று
ஏன் இன்னும் நாங்கள் போகவில்லை?”
அழுக்கைப்போக்கிக்கொள்ளும் இடங்களான பிரசங்க மேடைகளை,விபச்சார விடுதிகளை முகமூடிகள் நிறைத்துவிட்டன.
வியப்பில் பார்க்கின்றன,
இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டதை நம்ப முடியாமல் விழுகின்றன.
நாக்குகளைப்போல புழுக்களைப்போல நெளிகின்றன.
நாங்கள் போகமாட்டோம்!
நாங்கள் உள்ளேயிருப்பது வெளியேறத்தானா?
வெளியேறுவதென்பது முகமூடிகளுக்காக
பிரசங்க மேடைகளுக்காக, மரபுகளுக்காக.
வெளியேறுவதென்பது உள்ளிருந்தே செய்யப்படும் முற்றுகைக்காக.
பெய்தூனின் சிங்கங்களிடமிருந்துவரும் முற்றுகை.
கத்திகளின் ருசியால் காக்கைகளின் துர்நாற்றத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட சகோதரர்களின் முற்றுகை.
நாங்கள் போகமாட்டோம்!
வெளியே அவர்கள் அடைக்கிறார்கள் வழிகளை
அளிக்கிறார்கள் தமது ஆசிகளை ஆள்மாறாட்டக்காரர்களுக்கு.
எல்லாம்வல்ல இறைவனை
தொழுகிறார்கள், இரைஞ்சுகிறார்கள்
எங்களின் மரணத்துக்காக