- ஸ்ரீநிவாஸ் பிரபு
முகங்கள் ஒவ்வொன்றும் இருக்கிறது விதம்விதமாய்!
இரட்டையராய் பிறந்தாலும்
இருக்கவே செய்கிறது முகங்களில் வித்தியாசம்!
ஒவ்வொரு முகமும் ஒரு பாவனையை
வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறது.
ஒப்பனையற்ற முகங்கள் கூட வசீகரமானதாக இருக்கிறது.
சூழ்நிலைக்குத் தக்கபடி வெளிப்பாடுகளை
மாற்றும் தந்திரங்களை
சில முகங்கள் அறிந்து வைத்திருக்கிறன.
கல்வெட்டாய் மனதில் தங்கிவிடுகிறது
ஒரு போதும் மறக்க முடியாத சில முகவெட்டுக்கள்.
காரணங்கள் தெரியாமல்
திடீரென்று நெருக்கமாகிப் போகிறது சில முகங்கள்.
காரணம் புரியும் முன்பே
விலகிச் சென்று விடுகின்றன வேறு சில முகங்கள்.
சில முகங்களில் மட்டும் துரோகத்தின் சுவடுகளை
தாங்கிக் கொண்டே இருக்கிறது
சில முகங்கள் நம் புன்னகையை பெற்று
நமக்கு புன்னகையை பிரதிபலிக்க
முயற்சித்துக் கொண்டே இருக்கிறது.
குழந்தைகளின் முகங்களில் தெய்வீகம் ஒளிர்கிறது.
எங்கேயோ, யாரோ சிலர் மாத்திரம்
உள்ளும் புறமும் ஒரே முகத்தை
சிலையாக வைத்திருக்கிறார்கள்!