தொடர்ந்து தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து மத்திய பாரதீய ஜனதா, வலதுசாரி இந்துத்துவா அரசு சர்ச்சைக்குரிய சட்டத் திருத்தங்களை முன்மொழியும் அரசாக, மக்களின் கடும் எதிர்ப்பிற்கு நடுவே பிடிவாதமாக தன் சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் ஏதேச்சதிகார அரசாகவே இருக்கிறது. நோய் தொற்று காலத்தில் பொது நிலைப்பாடுகளை மாற்றும் சட்டங்களை இயற்றக்கூடாது என்று ஐ.நா. சபையின் ஷரத்தில் கைச் சான்றிட்ட நாடு… மக்களை முடக்கி பொது-முடக்கத்தின் போது அவசரம் அவசரமாக கொல்லைப் புறம் வழியே பல கொடுஞ்சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதில் மிக மோசமான ஒன்றுதான் புதிய கல்விக் கொள்கை.
- கல்வியை மாநில உரிமையிடமிருந்து பறித்து மத்தியில் ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வருதல்.
- கூடுதல் தனியார் மயத்தை ஊக்குவித்து ஏழை மக்களின் கல்வி குறித்த தன் கடமையை கை கழுவுதல்.
- கொல்லை புற வழியே குலக் கல்வியை வேறு பெயரில் நவீன உத்தியோடு திணித்தல்.
- தாய்மொழி-மும்மொழி எனும் பெயரில் இந்தியை கட்டாயமாக்குதல்-அதுவும் மூன்று வயது குழந்தைக்கு.
- சமஸ்கிருத போதனை என்று மத அடிப்படைவாதத்தை காவி மயத்தை திணித்தல்.
- தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் மிக அதிகமாக்கி-கோச்சிங் சென்டர் கலாச்சாரத்தை ஏற்படுத்தி சாதாரண மக்களின் கல்விக் கனவுகளை சிதைக்கும் பாகுபாட்டுக் கல்வி.
- உயர் கல்வியில் அயல்நாட்டு பல்கலைகழகங்களை நாட்டிற்குள் விட்டு நம் கல்வியின் ஜனநாயக-மக்கள் ஆதரவு கட்டண நிலையை குலைத்தல்.
- அகில இந்திய போட்டித் தேர்வாக ஆசிரியர்/பேராசிரியர் பணியை மாற்றி நம் கிராமத்தில் வட நாட்டு அயல்மொழி ஆசிரியர்களை பணி அமர்த்த சதி.
- பள்ளி-வளாகத்தை பயன்படுத்துதல் என்கிற போர்வையில் ‘பசனை’ மடமாக கல்விக்கூடங்களை மாற்ற முயற்சி.
- பி.எச்.டி. ஆய்வாளர் யாராக இருந்தாலும் தேசிய ஆய்வு மன்றம் (National Research Foundation) என்று மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற தலைப்பில் மட்டுமே ஆய்வு செய்ய முடியும்எனும் ‘அறிவுச் சிறை’ அவலம்.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த கல்விக் கொள்கை நமது மதசார்பின்மையை குலைத்து மொழி-உரிமைகளை சிதைத்து, ஜனநாயகத் தன்மையை வீழ்த்தி, அரசின் கடமையாக மலரும் கட்டணமில்லா பொதுக் கல்வியை முடக்கி நாட்டை 200 வருடங்கள் பின்நோக்கி பயணிக்க வைக்கும் பிற்போக்கு-சர்வாதிகார வர்ணாசிரம கொள்கை. பாராளுமன்றத்தில் வைத்து பேசாமல், நம் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வராமல் நேரடியாக இந்த நோய்-தொற்று பேரிடர் காலத்தை பயன்படுத்தி திணிப்பது ஜனநாயக விரோத செயலாகும். புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம். நம் தமிழ்நாட்டிற்கு அது தேவை இல்லை என்று அறிவிக்க தமிழக அரசுக்கு நிர்பந்தம் கொடுப்போம்.
-ஆசிரியர் குழு