ஜமாலன்
சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்
புதிய புத்தகம் பேசுது வாசகர்கள் சார்பாக வணக்கங்கள், பொதுவாக அனைத்து இலக்கிய ஆளுமைகளுடனும் நேர்காணலின்போது முன்வைக்கும் முதல் கேள்வி – தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கிய விமர்சகர் தோழர் ஜமாலன். தங்களின் இளமைக்காலங்கள் குறித்தான ஒரு இயல்பான அறிமுகத்தைத் தந்தால் வாசகர்கள் உங்களை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
வணக்கம். இளமைக்காலம் வழக்கம்போல ஒரு இனிமையான காலம்தான். காரணம் இளமைப்பருவம் ஒரு மனிதனை செதுக்கும் பருவம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த, கோவில் நகரமாக புகழ்பெற்ற கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற அரை கிராமத்தில். சிவன் மற்றும் விஷ்ணுவிற்கான இரண்டு பெரிய கோவில்கள் உள்ள ஊர். அதனால் இளமையில் ஒரு சிவபக்தனாக, சைவனாக (உணவுப் பழக்கம் உட்பட), எங்கள் ஊர் சேக்கிழார் வாரவழிபாட்டுக் குழுவில் உறுப்பினராகி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறுகளில் சோழமன்னரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரால் கட்டப்பட்ட நாகேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு சன்னிதியிலும் பதிகங்கள் பாடுவது இப்படியாகத் துவங்கி, எங்கள் ஊர் சுந்தரகாளியம்மன் பக்தனாகி, ஊரின் தலப்புராணமாக உள்ள ஜெம்புமாலி ராஜன் நாடகங்கள் பார்த்து, நூலகங்களில் புராணங்கள், இதிகாசங்கள், நாவல்கள் படித்து உருவானதே எனது சிறார் பருவம். 9-ஆம் வகுப்பு படித்தபோது ஒரு தோழியுடன் இணைந்து ‘தேனி’ என்று கையெழுத்து பத்திரிக்கை நடத்தியது துவங்கி, 11-ஆம் வகுப்பில் ‘திசைகள்’ என்ற கையெழுத்து பத்திரிக்கை என தொடர்ந்து, கல்லூரிக் காலங்களில் ‘ஜனகனமன’ என்கிற உருட்டச்சு இதழ் இப்படி சிறுவயதுமுதல் வாசிப்பு எழுத்து என்பதே என்னை உருவாக்கிய அடிப்படை. 83-ல் நடந்த ஈழப் படுகொலைகள் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கமே என்னை முழுமையாக அரசியல்படுத்தியது. நான் 83-ல் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே எங்கள் ஊரில் ஒரு பெரிய ஊர்வலத்தை நடத்தி கடைவீதியில் ஜெயவர்த்தனே கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக கல்லூரிக் காலங்களில் தோழர் பொதியவெற்பன், அ. மார்க்ஸ் போன்றவர்களின் தொடர்பால் மார்க்சியமும், தீவிர இலக்கியமும் அறிமுகமாகியது. எந்த ஒன்றிலும் தீவிரமாக ஈடுபடும் இயல்பு கொண்டவன் என்பதால், மார்க்சியத்தின் மீது தீவிர ஈடுபாடுகள் உருவாகி, மார்க்சிய – லெனினிய இயக்கங்களின் பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்ட தொடர்பால், மாணவர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளனாக இருந்து, மாணவர் இயக்கத்திற்காக ‘விடிவு’ என்ற பத்திரிக்கையும் நடத்தினேன்.
இலக்கியத்தின்மீது அதீத காதல் இருந்தாலும், தீவிர அரசியல் செயல்பாடே தொடர் இயக்கமாக மாறிப்போனது. மாணவர் சங்கம் சார்பாக ஒவ்வொரு கோடை விடுமுறையிலும், எங்கள் மாணவர் அமைப்பு கிராமங்களுக்கு செல்லுதல் என்ற அடிப்படையில் ‘கிராம முகாம்கள்’ நடத்துவோம். 15 நாட்களுக்கு தேர்ந்தெடுத்த கிராமங்களுக்கு சென்று, அங்கிருந்து அதன் சுற்றுப்புறங்களிலுள்ள கிராமங்களுக்குப் போய், கலை நிகழ்ச்சிகள், அரசியல் வகுப்புகள், தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவோம். நான் மாவட்ட செயலாளர் என்ற முறையில் எனது தலைமையில்தான் 10 பேர் கொண்ட குழுவாகச் செல்வோம். அந்த 15 நாட்களும் உணவு, உறக்கம் எல்லாம் கிராமங்களின் பொது இடங்களில்தான். பெரும்பாலும் சமுதாயக்கூடம், அல்லது தோழர்களின் இல்லம், கிராமக்கோவில்களின் முன்பாக உள்ள படுகளங்கள் இவற்றில்தான் தங்குவோம். உணவு அந்த கிராம மக்களிடம் வீட்டிற்கு ஒருவராக சென்று உண்போம். இதன்மூலம் நமது கிராமங்களின் வாழ்வைப் புரிவதும், தம்மை வர்க்கநீக்கம் செய்து உண்மையான பாட்டாளி வர்க்கமாக மாற்றிக் கொள்ளுதல், கிராமங்களில் இயக்கத்திற்கான ஆட்களை உருவாக்குதல், கிராம மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் என முழுக்க வேர்க்கால்மட்ட அரசியல் அமைப்பு உருவாக்கமே நோக்கம். அப்படி இளமறிவியல் படித்த மூன்று வருடங்களும் தஞ்சை மாவட்டத்தின் மேலத்தஞ்சை எனப்படும் ஒரத்தநாட்டை சுற்றியுள்ள கிராமங்கள், கீழத்தஞ்சை எனப்படும் கொள்ளிடம், சீர்காழியை சுற்றியுள்ள கிராமங்கள், திருப்பனந்தாளைச் சுற்றியுள்ள கிராமங்களில் இயக்கம் நடத்தியுள்ளோம். பெரும்பாலும் தலித் மக்கள் வசிப்பிடங்களில்தான் எங்கள் இயக்கம் தங்கி அவர்களோடு அந்த 15 நாட்களில் கலந்து, அவர்களது உள்ளூர் பிரச்சனைகளை கள ஆய்வு செய்து, அவற்றைத் தொகுத்து இயக்கத்திற்கான வேலைத்திட்டம் உருவாக்குவோம். இதெல்லாம் சீனாவில் மாவோ உருவாக்கிய மக்கள் யுத்தக் குழுவிற்கான கட்சி அமைப்பு உருவாக்கும் வழிமுறைகள் என்று அதைப் பின்பற்றிச் செய்துவந்தது, என்னை முழுக்க ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமாக உணர வைத்தது. மார்க்ஸ் சொன்னதைப்போல வாழ்நிலைதான் உணர்வுகளைத் தீர்மாணிக்கிறது என்பதை உணர்ந்த நாட்கள். இடதுசாரி இயக்கங்கள் இந்த வழிமுறைகளை தற்போது விட்டுவிட்டன. ஆனால் இந்துத்துவ சங்பரிவார் அமைப்புகள் இன்றும் இப்படியாக அடிமட்டங்களில் இறங்கி தங்கள் மதவெறி அமைப்புகளை உருவாக்கி, வெறுப்பரசியலை பரப்பி வருகிறது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. லெனின் சொன்ன ஸ்தாபனங்களைப்பற்றி என்ற நூல் ஸ்தாபனங்கள் கட்டப்படுதல், ஜனநாயக மத்தியத்துவம், அமைப்பின் ஒழுங்கு ஆகியவை பற்றி பேசுகிறது. ஆனால் எதையும் இன்று இடதுசாரி அமைப்புகள் பின்பற்றுகிறதா? என்பது தெரியவில்லை.
உங்கள் மாணவப் பருவம் அரசியல் இயக்கங்களோடு கழிந்தது என்கிறீர்கள், அப்பொழுது நடந்த நினைவில் உள்ள சிறப்பான நிகழ்வுகளைப் பற்றிக் கூறுங்கள்
மாணவர் அமைப்பில் இருந்தபோது ஒருமுறை தேர்வு தேதி அறிவிப்பில் குளறுபடியாகி, பல மாணவர்கள் தேர்வு எழுதமுடியாத நிலை உருவானது. மதியம் தேர்வு என அறிவித்து காலையில் தேர்வு வைத்து விட்டார்கள். அதற்காக தஞ்சையில் பல கல்லூரிகளில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினோம். ஒரு குழுவை அமைத்து, நாங்கள் நேரடியாக திருச்சி சென்று பாரதிதாசன் பல்கலைக்கழகம், அப்பொழுதுதான் புதிதாக ஆரம்பித்திருந்தனர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியை சந்திக்க நேரம் வாங்கி சந்தித்து எங்கள் பிரச்சனைகளை மனுவாக தந்தோம். அத்தோடு நிற்காமல் அதை ஒரு சென்சேஷனல் செய்தியாக எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவை சில பத்திரிக்கைகளில் வெளிவந்தது. அதன்பின் மறுதேர்வு நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அக்காலத்தில்தான், தற்போதைய விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ரவிக்குமார் அவர்களுக்கு திருமணம் நடந்தது. இயக்கத்தோழர்கள் அனைவரும் கலந்துகொண்ட ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. கொள்ளிடத்தை ஒட்டிய ஒரு கிராமம் ரவிக்குமார் வீடு. அது ஒரு தோப்பின் நடுவில் உள்ள வீடு. திருமணத்திற்கு முதல்நாள் அங்கு தோழர்கள் ஒன்று கூடி பல அரசியல் விவாதங்கள் செய்தது நினைவில் உள்ளது. கவிஞர் பழமலய், கல்யாணி, அ. மார்க்ஸ், கோச்சடை, கோ. கேசவன், கண. குறிஞ்சி, இரா. கோமகன், விழி பா. இதயவேந்தன் என்கிற அண்ணாதுரை, திருக்குறள் முனுசாமி அவர்களின் மகன் ஞான சூரியன், ஆசிரியர் சங்கத்தில் உள்ள தோழர் விழுப்புரம் பாலு போன்ற பல தோழர்களின் தொடர்பும், நட்பும் இருந்த இனிமையான காலம் அது.

மாணவர் சங்க, இயக்க பணிகளிலிருந்து எப்படி விலகினீர்கள்? அதன்பின் உங்கள் இலக்கிய எழுத்துப்பணிக்கு எப்படி வந்தீர்கள்?
85-ல் தமிழகத்தில் எங்கள் மாணவர் சங்கம் இரண்டாக பிரிந்தது. கம்யூனிச இயக்கங்களில் நிகழும் ‘சித்தாந்தப் போர்’ என்பார்கள் அது தீவிரமாக நிகழ்ந்தது அமைப்பிற்குள். எனது இளம் அறிவியல் பட்டப்படிப்பின் இறுதி தேர்வை எழுதாமல் மாணவர் சங்கப்பணிகளுக்காக, நான் வீட்டைவிட்டு வெளியேறி முழுநேர மாணவர் சங்கப் பணியாளராக சில மாதங்கள் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இயக்கம் அனுமதித்த மாதாந்திர ‘லெவி’ எனப்படும் தோழர்களிடம் பெற்ற பணத்தைக் கொண்டுதான் உணவு, இதரப் பிரச்சனைகளை தீர்த்துகொள்ள வேண்டும். அந்நிலையில் பெரும்பாலும் தோழர் நீண்டபயணம் சுந்தரம் வீட்டில் இரவு சாப்பாடு கிடைத்துவிடும். சில நாட்கள் நந்தனம் எஸ்.சி. ஹாஸ்டலில் தங்குவேன். பெரும்பாலும் மாணவர் விடுதிகள், தோழர் குமரன் வீட்டில் தங்குவேன். அவர் தற்போது சுப.வீ. அவர்களது இயக்கத்தில் உள்ளார் என நினைக்கிறேன். அப்போது பொதுவான பல மாணவர் இயக்கங்களை இணைத்து ஒரு ஐக்கிய முன்னணி அமைப்பை உருவாக்கியிருந்தோம். அந்த ஐக்கிய முன்னணியில் அப்பொழுது தி.க. அமைப்பு சார்பாக வழக்கறிஞர் அருள்மொழி அவர்களும், சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த விடுதலை அவர்களும் பங்குபெற்றார்கள். ஈழப்போராட்ட ஆதரவு என்ற அடிப்படையில் உருவான ஐக்கிய முன்னணி. அவ்வமைப்பு சார்பாக நந்தனம் கல்லூரி துவங்கி சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரிவரை ஒரு பெரிய ஊர்வலம் நடத்தினோம். அதன்பின் சென்னை வாழ்வில் தாக்குபிடிக்க இயலாதநிலை. இயக்கத்திலும் உருவான சிக்கல்கள் என ஊர் திரும்பி, அடுத்த ஆண்டு இறுதி தேர்வை எழுதி அதன்பின் முது அறிவியல் படிப்பை திருச்சி ‘ஜமால் முகமது கல்லூரி’யில் தொடர்ந்தேன். கண்ணன் அவர்களின் மார்க்சிய நூலகத்தில் படித்த தமிழவனின் ஸ்டரக்சுரலிசம் ஒரு புதியதொரு திசைவழியை, பார்வையை உருவாக்கியது. அதன்பின் பல்வேறு கோட்பாட்டு நூல்களை வாசிக்கத் துவங்கினேன். இளமையிலேயே இந்திய தத்துவங்களில் ஆர்வம் கொண்டு படித்ததால், அது கோட்பாடுகளின் வாசிப்பிற்கு துணையாக இருந்தது. அக்காலத்தில் கவிதைகளை விட்டு கோட்பாடு சார்ந்த கட்டுரைகள் எழுதத் துவங்கினேன். தோழர் பொதியின் ‘பறை’ என்ற தொகுப்பிதழில் ஒரு திறனாய்வு கட்டுரை வெளிவந்தது. ‘மேலும்’ இதழில் ‘கவிதையும் சிதைவாக்கமும்’ என்ற கட்டுரை வந்தது. இயக்க அரசியலை விட்டபின் மிஞ்சியது எனது சிறுவயது முதல் பேரார்வம் ஊட்டுவதாக இருந்த வாசிப்பு மட்டுமே தொடர்ந்தது. அங்கிருந்து வாசித்தவை அனைத்தும், எனது அடிப்படை மார்க்சிய கல்வியால் உள்வாங்கப்பட்டு செழுமைப்படுத்தப்பட்டது. தமிழவன் சார் சென்ற மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் பேட்டியில் கூறியதைப்போல “மார்க்சியம் கற்றுவிட்டால் மற்ற துறைகளை புரிந்துவிடலாம்”என்பதற்கு சரியான சான்று நான்தான்.
அடிப்படையில் கவிதை போன்ற படைப்பிலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட உங்கள் கவனம் விமர்சனங்களை நோக்கித் திரும்பியதற்கான காரணங்கள் என்ன என்று விரிவாகச் சொல்லுங்கள்
ஏற்கனவே சொன்னதைப்போல சிறுவயதுமுதல் எழுத்தில் தீராக்காதல் உருவாகிவிட்டது. சிறுவயதில் அணில், சுட்டி, அம்புலிமாமா என சிறார் இலக்கியங்கள் வாசிப்பதும், அவற்றை வாங்கி, வீட்டில் வைத்து ‘லெண்டிங் லைப்ரரி’ போல் நடத்தி வந்தேன். அப்பொழுது ‘அணில்’ விலை 15 காசுகள் என்று நினைவு. அதற்காக, 2 காசிற்கு நூல்களை வாடகை விட்டு, அவற்றை சேர்த்து நூல்கள் வாங்குவேன். 5-ஆம் வகுப்பில் முதன்முதலான ‘மாயமோதிரமும் வீரச்சிறுவனும்’ என்று ஒரு சிறுவர் கதை எழுதிப் பார்த்தேன். எனது தாத்தாவிற்கு கண்புரியாது என்பதால் அவருக்காக நூலகத்தில் போய் நாவல்கள் எடுத்துவந்து வாசித்துக் காட்டுவேன். இப்படியாக படைப்பிலக்கியத்தின்மீது தீராக்காதல் இருந்தது. அவ்வப்போது சிறுகதைகள் எனது கையெழுத்து இதழ்களில் எழுதியுள்ளேன். வழக்கம்போல், 1982-ல் வந்த பாரதி நூற்றாண்டும், அதை தொடர்ந்து மீராவின் ‘கவிதைகள் + கற்பனைகள் = காகிதங்கள்’, மு. மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’ ஆகியவை அக்காலத்தில் மிகப்பெரிய உத்வேகம் தரக்கூடியதாக இருந்தது. அன்னம் நவகவிதைகள் வரிசை என்கிற 10 புதுகவிஞர்களின் கவிதைகளும் என்னை கவிதைகள் நோக்கி முழுமையாகத் திருப்பின. அதில்தான் கலாப்ரியா, விக்ரமாதித்தியன், நா. விச்வநாதன், கல்யாண்ஜி (வண்ணதாசன்), வண்ணநிலவன் போன்ற கவிஞர்கள் அறிமுகமானார்கள். அதை தொடர்ந்து ஆத்மநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா, பிரமிள் என வாசிப்பு நகர்ந்தது. தொடர்ந்து புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். குடந்தைக் கல்லூரியில் கவிதை எழுதி தேர்வானேன். அங்கு நான், கவிஞர் ரவி சுப்ரமண்யம், கவிஞர் பிருந்தாசாரதி, நிழல் திருநாவுக்கரசு, அமானுஷ்யன் என்கிற பாமணி என்கிற கோனேரிராசபுரம் சாமிநாதன் அனைவரும் ஒரு சாலை மாணாக்கர்கள். அதன்பின் குடந்தை கல்லூரி சார்பாக கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டேன். மார்க்சிய கல்வி பெற்றபின், ‘செந்தாரகை’ என்ற புரட்சிப் பண்பாட்டு இயக்க இதழில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அவை பெரும்பாலும் இன்குலாப் பாதிப்பில் உருவான கவிதைகள். மேத்தா எழுதியதைப்போல இந்த உலகைப் புரட்டும் நெம்புகோல் கவிதைகள். அவற்றை தொகுத்து ‘மூன்றாவது பாதை’ என்ற நூலாக வெளியிட சிலிக்குயில் பொதி முன்வந்தார். தொகுத்தோம் அவற்றை வெளியிடவில்லை. மார்க்ஸ் தனது இளமைக்கால படைப்புகளை எலிக்கடிக்கும் விமர்சனத்திற்கு அர்ப்பணித்ததைப்போல, அதையும் அக்காலத்தில் எழுதிய சில சிறுகதைகளையும் அப்படியே விட்டுவிட்டேன். அவற்றின் பிரதிகள்கூட என்னிடம் இல்லை. சரியாகச் சொன்னால் இயக்க பிரசுரங்கள் எழுதுவதில்தான் எனது எழுத்துக்கள் அச்சாகத் துவங்கின எனக் கூறலாம். காரணம் பகத்சிங் நினைவுதினம். மார்க்ஸ் நினைவுநாள், இயக்கத்திற்கான அறிக்கைகள் ஆகியவைதான் எனது அரசியல் எழுத்துக்களின் துவக்கம். அ. மார்க்ஸ் அவர்கள் எரிதழல் என்ற பெயரில் எழுதிய ஒரு சிறுநூலிற்கு நான்தான் அறிமுகவுரை எழுதினேன். அதுதான் முதலில் எழுதிய நீண்டதொரு அரசியல் கட்டுரை. இந்த சூழலில் குறிப்பாக எனக்குள் இருந்த அரசியல் உத்வேகமும், தமிழவனின் ‘புதுக்கவிதை நாலு கட்டுரைகள்’ நூலும், என்னை கவிதைகள் குறித்த திறனாய்வுகளை நோக்கித் திருப்பியது. பொதுவாக எனக்கு தத்துவங்கள், கோட்பாடுகள், நவீன அறிவியல் ஆகியவற்றின்மீதான ஆர்வமும், விருப்பமும், தர்க்கசிந்தனை, பகுத்தறிவு, மார்க்சியம் ஆகியவற்றின் சிந்தனை தாக்கமுமே திறனாய்வை நோக்கி நகர்த்தியது. திறனாய்வு குறித்து ஏற்கனவே விரிவாக எனது சிந்தனைகளை, சிற்றேடு இதழுக்கான நேர்காணலில் விளக்கியுள்ளேன்.
திறனாய்வு குறித்து புத்தகம் பேசுது வாசகர்களுக்கு மேலதிகமாக அதன் அடிப்படைகள் குறித்து ஏதாவது கூறமுடியுமா?
குறிப்பாக சொன்னால் திறனாய்வு ஒரு சிந்திக்கும் செயல்பாடு. அந்த செயல்பாட்டை தொடராத ஒரு சமூகம் மிகவும் பின்தங்கிய அறிவுக் குருட்டில்தான் நிற்கும். நமது தமிழ் இலக்கிய சூழலே அதற்கான சான்றாக காட்டலாம். பொதுபுத்தியே ஆதிக்க சிந்தனை முறையாக இங்கு இருப்பதற்கு திறனாய்வு சிந்தனை வளராததே காரணம். தமிழ் இலக்கியவாதிகள் தங்களை இந்த சமூகம் கொண்டாடவில்லை என்கிறார்கள் என்றால், அவர்கள் உருவாக்கிய பொதுபுத்தி சார்ந்த சிந்தனைதான் காரணம் என்பதை உணர்வதில்லை. வெறும் படைப்புகள் வாசிப்பிற்கான சமூகத்தை உருவாக்காது. அதற்கு திறனாய்வே துணைபுரியும் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. தமிழில் சினிமாவின் பாதிப்பும், அதுவே அரசியலை தீர்மானிப்பதாக மாறியிருப்பதற்கும்கூட சமூகவியல்ரீதியாக இதுவே காரணம். நான் படைப்பில் உருவாகும் ஒரு அதீத மனநிலையை திறனாய்விலும் பெறமுடியும் என்பதை உணர்ந்தது மற்றொரு காரணம். அதுவே முக்கியமான காரணமாக இருக்கலாம். தவிரவும் கவிதை உருவாகுதல் என்பது ஒரு மனநிலை. அம்மனநிலை வாய்க்கும் போதெல்லாம் கவிதை எழுதுகிறேன். தற்போதும் எழுதுகிறேன். ஒரு தொகுப்பளவிற்கு உள்ளது. ஆனால் வெளியிடுவதில்லை. பத்திரிக்கைகள்கூட கவிதைகளைவிட என்னிடம் திறனாய்வு, கட்டுரைகளைத்தான் அதிகம் எதிர்பார்க்கின்றன. எனது சகபயணியான நண்பர் எஸ் சண்முகம் தினமும் கவிதை எழுதுங்கள் என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார். நண்பர் பிரேம்கூட என்னை புனைவுகள் எழுதும்படி தொடர்ந்து கூறிவருகிறார். சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதற்கான குறிப்புகள் தலைப்புகள் எல்லாம் எழுதி வைத்துள்ளேன். அடிப்படையில் எழுத்து சோம்பல் உள்ளதால் அவற்றை இன்னும் எழுத துவங்கவில்லை.
விமர்சகர்கள், அடிப்படையாகவே, நிறைய கோட்பாடுகளையும், இலக்கியப் பிரதிகளையும் படித்திருக்கவேண்டும், அந்த வகையில், உங்களின் படிப்பிற்கான தளத்தை எப்படிக் கட்டமைத்துக் கொண்டீர்கள்?
என் அம்மா, மனைவி ஆகியோர், நான் எதையும் தொடர்ந்து செய்யாதவன் என்று விமர்சிப்பார்கள். காரணம் படிப்பை பாதியில் விட்டது, அதன்பின் கம்ப்யூட்டர் படித்து பாதியில் விட்டது, தீவிர சிவபக்தனாக இருந்து வாரம் ஒரு சிவத்தலத்திற்கு விஜயம் செய்ததை விட்டு கடும் நாத்திகனாக மாறியது இப்படி. ஆனால், தொடர்ந்து நான் வாசிப்பதை நிறுத்தியது இல்லை. எனது மூன்றாம் வகுப்பில் வாசித்த ‘கொம்புமுளைத்த சாமியார்’ என்ற ஒரு சிறுவர்கதை துவங்கி, இந்நிமிடம் வரை வாசிக்கிறேன். எல்லாவற்றையும் வாசிப்பேன். அது ‘தினத்தந்தி’யாக இருந்தாலும் சரி அல்ல ‘சி-தியரி’, ‘கிரிட்டிக்கல் என்கொயரி’ போன்ற தீவிர கோட்பாடு சார்ந்த இதழ்களாக இருந்தாலும் சரி வாசிப்பேன். எழுதப்பட்ட அனைத்தையும் வாசிக்கும் பேராவல் உண்டு. அலுப்பே இல்லாத ஒரு செயல்பாடு அது. 80-களில் பரவலாக ‘என்சிபிஎச்’ வெளியீடுகள் வாங்கி வாசிப்பது, புத்தகங்கள் சேகரிப்பில் உருவாக்கிய விருப்பம் முக்கியமானது. குறைந்த விலையில் கிடைத்த அந்த நூல்களை வாசிப்பதும், சேகரிப்பதிலும் துவங்கியது. திறனாய்வு, விமர்சனம் ஆகியவை படைப்பிலக்கியங்களைவிட சவாலான ஒன்று. காரணம் நீங்கள் கூறியதைப்போல நிறைய வாசிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக முதல்நூல் என்று தொல்காப்பியம் கூறும் மூலநூல்களை வாசித்து அது குறித்து ஒரு அடிப்படைத் தெளிவை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதன்பின் வழிநூல்களை வாசிக்க வேண்டும். அவற்றை நமது அரசியல், தத்துவ, கருத்தியல் சார்ந்த அடிப்படையில் உள்வாங்க வேண்டும். ஒருநூலை திறனாய்வு செய்யும்முன் அதுகுறித்து வந்தபிற நூல்களை வாசித்து, அதனையும் உள்வாங்கி தனித்தன்மைகொண்ட நமது கருத்தை உருவாக்க வேண்டும் என்பதால் பலதுறைசார்ந்த வாசிப்பு அவசியப்படுகிறது. நான் 25 ஆண்டுகள் அரேபியாவில் கணிப்பொறித்துறையில் பணியாற்றியதால், நிறைய வாசிக்க முடிந்தது, நேரம் இருந்தது. ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் நிறைய புத்தகங்கள் எடுத்து செல்வேன். எனது அறையில் இருந்த திருச்சியை சேர்ந்த நண்பர் முபாரக் அவர்களும் ஒரு நூல் வாசிப்பாளர் என்பதால், அவரிடமும் நிறைய படைப்பிலக்கியங்கள், தமிழ் புனைவிலக்கியங்கள் இருக்கும். இருவரும் வாசிப்போம் அது குறித்து பேசுவோம். அப்போது பிளாக் எழுதும் பழக்கம் துவங்கியதால், தொடர்ந்து வாசிப்பதும் அதை பகிர்வதும் என எழுதுவது தொடர்ந்தது. நான் ஊர் திரும்பியபோது பலநூல்களை அந்நண்பரிடம் தந்துவிட்டு மீதம் உள்ள நூல்களே மிக அதிகமாக அதை sea cargo போட்டு எடுத்துவந்தேன். சிறுவயதுமுதல் நண்பனாக உள்ள காலக்குறி ஆசிரியர் அ.ஜ. கானிடம் ஒரு பெரிய நூலகம் உள்ளது. எங்கள் சிறுவயது கனவு அது. அதை அவர் நிறைவேற்றியுள்ளார். அவரின் நட்பும், ஆதரவும் முக்கியமானது எனது வளர்ச்சியில். அவரிடம் நூல்களை எடுத்து சென்று வாசிப்பது எனக்கு பெரிய அளவில் உதவி புரிந்தது. எனது குடும்ப சூழலும் வாசிப்பிற்கோ, நூல்கள் வாங்குவதற்கோ தடையாக இருப்பதில்லை. தற்போது இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிப்பதால், என்னிடமே ஒரு பெரிய நூலகம் அளவிற்கு நூல்கள் உள்ளதால், எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் வசதியாக உள்ளது.
நீங்கள் சவுதி அரேபியா போக வேண்டிய காரணம்? அங்கு போனபின் புத்தகம் வாங்க, வாசிக்க ஏதுவான சூழல் இருந்ததா?அந்நாட்டு அனுபவங்களை புத்தகம் பேசுது வாசகர்களுக்கு சுருக்கமாக பகிரமுடியுமா?
இரண்டு காரணங்கள். ஒன்று, இயக்க தொடர்புகள் அற்றுப்போனதால் உருவான வெறுமை. மற்றது எனது தந்தை மரணம் உருவாக்கிய வருமானமற்ற குடும்ப சூழல். குறிப்பாக, 89-ல் ராஜிவ் காந்தி வருகையை ஒட்டி காவல்துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு 15-நாட்கள் திருச்சி மத்திய சிறையில் இருந்தேன். எனது தந்தையார் வெளிநாட்டில் இருந்து ஊரில் வந்திருந்த நேரம். நான் அப்பொழுது ‘ஐஏஎஸ் பிரிலிமினரி’ எழுதும் தயாரிப்பில் இருந்தேன். தன் மகன் படித்து ஒரு அரசு அதிகாரியாக வருவான் என்கிற கனவு அவருக்கு அதில் தகர்ந்தது. ஆனால், எனக்கோ விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே எனது சிறுவயது முதலான விருப்பம். அதனால்தான் கணிதத்தில் ஈடுபாடு இருந்தும், இயற்பியல் படித்தேன். இயற்பியலிலும் கோட்பாட்டு இயற்பியல்தான் (theoratical physics) எனது விருப்பமான பாடம். எனது முதுஅறிவியல் ஆசிரியர் எஜ. சுப்புரத்தினம் என்று பெயர், அவர் எனக்கு திருச்சி நெஷனல் காலேஜில் எம்.ஃபில்’ படிக்கவும், தொடர்ந்து பிஎச்டி செய்யவும் ஏற்பாடு செய்வதாக கடிதம்கூட எழுதினார். அவர் என்னபை்போல ஒரு ஜோல்னாப்பையுடன் வரும் ஆசிரியர். பொதுவாக மாணவர்கள் அவரிடம் பழக மாட்டார்கள். ஒரு எக்சென்டிரிக் ஆனவர். என்னை அழைத்துக்கொண்டு ஹோட்டலில் வடை டீ எல்லாம் வாங்கி தரும் அளவிற்கு என்மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அதேபோல் எனது தந்தைக்கும் ஒரு ஐஏஎஸ் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை நிறைய இருந்தது.அந்நம்பிக்கை நள்ளிரவில் காவல்துறையினர் வந்து என் வீட்டு கதவை தட்டி கைது செய்ததை நேரில் பார்த்து அதிர்ச்சியாக விட்டார். என் தந்தையாருக்கு அது பெரும் மனவருத்தம் தருவதாக இருந்தது. சிறையிலிருந்து வெளிவந்தபின் அத்தை மகளுடன் திருமணம் முடிந்தது. தொடர் கண்காணிப்பு, நெருக்கடி, பொருளியல் சிக்கல், வேலை கிடைக்காதநிலை. காவல்துறையின் கியூபிரிவு அம்மாவிடம் தொடர்ந்து பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புங்கள், இங்கு இருந்தால் பிள்ளை கெட்டுவிடுவான் என்று ஆலோசனை. ஒரு குழந்தை பிறந்து ஒன்னரை வயது ஆகிவிட்டது. தந்தையாரும் அடுத்தடுத்த ஆண்டே இதய தாக்குதலுக்கு ஆளாகி இறந்துவிட்டார். அண்ணனின் வருமானத்தில் மனைவி குழந்தையுடன் காலம் நகர்த்த வேண்டிய சூழல். கரும்பு விவசாயம் செய்தேன். அதிலும் பெரிய அளவில் வருமானம் இல்லை. பிள்ளைக்கு பால்பவுடர் வாங்ககூட கடன் பெறவேண்டிய சூழல். சமீபத்தில் வாசித்த முகமது யூசுப்பின் ‘மணல் பூத்த காடு’ நாவலின் நாயகன், இதே வறுமை சூழலில்தான் சவுதி பயணமாவான். நானும் வேறுவழியின்றி 91 இறுதியில் வெளிநாட்டிற்கு பயணமானேன். அங்கும் தொடர்ந்தது எனது வாசிப்பும், எழுத்தும். இயக்கத் தொடர்புகள் அதோடு அறுபடத் துவங்கிவிட்டது. தற்போது இயக்கம் இல்லை, அது கற்றுதந்த அனுபவமும், அரசியலும், மார்க்சியமும் எஞ்சியுள்ளது.
அரேபியா போனபின் புத்தகம் வாங்க, வாசிக்க ஏதுவான சூழல் இருந்ததா? அந்நாட்டு அனுபவங்களை புத்தகம் பேசுது வாசகர்களுக்கு சுருக்கமாக பகிரமுடியுமா?
சவுதி அரேபியாவை பிரேம்-ரமேஷ் நாவலில் வரும் ஒருவகை இருள்நகர் என்று சொல்லலாம். அங்கு புத்தகங்கள் எல்லாம் தீவிர தணிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படும். வாசிக்கும், பகிரும் நண்பர்கள் கிடையாது. பெரும்பாலும் இஸ்லாமியம் குறித்து விவாதிக்கும் நண்பர்கள் மட்டுமே. எனக்கோ இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது. சிறுவயது முதல் கோவில் மற்றும் மாற்றுமத நண்பர்களுடனேயே பழகியவன். அவர்களோடு விவாதிக்க என அப்போது இஸ்லாம் குறித்து வாசிக்க துவங்கினேன். அங்கு உருமறைத்து வாழவேண்டிய சூழல்தான். அந்த சூழல் ஆரம்பத்தில் ஒரு நரகத்தில், உழைப்பு முகாம் ஒன்றில் சிக்கிவிட்ட மனநிலையையே தந்தது. தினமும் காலை நாளைக்கு ஊருக்கு போய்விடலாம் என்ற எண்ணத்தில்தான் எழுவேன். அதிலிருந்து மீள, நானே வழக்கம்போல ஒரு கையெழுத்து இதழை துவங்கினேன். அப்போது மிஷல் பூஃக்கோ மீது இருந்த வாசிப்புத் தீவிரத்தில் அவ்விதழுக்கு “அறிவின் தொல்பொருளியல்”என் பெயர் வைத்தேன். அவரது புகழ்பெற்ற நூலான ‘Archaeology of Knowledge’ என்பதன் தாக்கத்தில். அதில் நானே எல்லாம். ‘நமக்கு நாமே’ என்பதைப்போல. நானே ஆசிரியன், வாசகன், எழுத்தாளன் எல்லாம். அதில் சினிமா விமர்சனங்கள், கோட்பாட்டு அறிமுகங்கள், அரசியல் பிரச்சனைகள் குறித்த உரையாடல், கவிதை என நிரப்பி, நானே வாசித்துக் கொண்டிருப்பேன். கையில் கொண்டு சென்ற புதுமைபித்தன் கதைகள் தொகுப்பு துவங்கி இருந்த சில நூட்களை வாசிப்பது வழக்கம். அப்போது இணையம் கிடையாது. ஏன் கணிப்பொறி என்பதே அபூர்வமானது. அச்சூழலில்தான் நண்பன் அ.ஜ. கான் அரேபியாவிற்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு வந்து சேர்ந்தான். அவன் எனது கையெழுத்து இதழைப் பார்த்துவிட்டு, முழுமையான ஒரு இதழையே கொண்டுவரலாம் என திட்டமிட்டோம். அப்படி பிறந்ததுதான் ‘காலக்குறி’ இதழ். தமிழ் இலக்கிய வரலாற்றில் சவுதி அரேபியாவிலிருந்து வெளிவந்த ஒரே தமிழ் இதழ் அதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அது முழுக்க கைகளால் எழுதியும், அப்போது அறிமுகமான விண்டோசில் (3.0) இலங்கை கணிப்பொறியாளர்களால் கிடைத்த டயமண்ட், பாமினி எழுத்துருக்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டு, ஒரு மாதிரி இதழை கான் கையால் வடிமைத்து, அதை ஒளிப்படிவச்சில் (செராக்ஸ்), 10 முதல் 20 பிரதிகள் எடுத்து, ‘பின்’னடித்து உருவாக்கப்பட்ட இதழ். படங்கள் வெட்டி ஒட்டி, இன்று பேஜ் மேக்கர், இன்டிசைன், கொரல் டிராவில் உருவாக்குவதற்கு நிகரான ஒரு இதழாக கையால் உருவாக்கினான் கான். அதிலும் பல பெயர்களில் நாங்கள் இருவருமே எழுதினோம். அதில் எட்வர்ட் சைத், விளாடிமிர் நபக்கோவ், உம்பர்ட்டோ ஈகோ என எழுத்தாளர் அறிமுகங்கள், மொழிபெயர்ப்பு கதைகள், காஷ்மீர் குறித்த அரசியல் தொடர் என 7 இதழ்கள் வரை நடத்தினோம். அதில்தான் தமிழவனின் சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவல் குறித்த எனது கட்டுரை, பிரேம் நாவல் குறித்த கட்டுரை, அழகியல் பற்றிய கட்டுரை எல்லாம் வெளிவந்தது. அதை தமிழகத்தில் முக்கியமான இதழ்கள் மற்றும் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தோம். அதற்கு ரவிக்குமார் போன்றவர்களிடமும், மற்றும் சில ஆய்வாளர்களிடமும் பாராட்டு கடிதங்களும், எதிர்வினைகளும் வந்தது. அப்பொழுது நான் அரேபிய தலைநகர் ரியாத்தில் இருந்தேன். அங்கு வந்திருந்த கவிக்கோ அப்துல் ரகுமானை, அவரது மாணவரான என் நண்பர் கட்டாயத்தின் பேரில் பார்க்க அழைத்து சென்றார். அவர் என்னிடம் காலக்குறியை வாங்கிகொண்டு படித்தவிட்டு சொல்வதாக கூறினார். அடுத்தவாரம் சந்தித்தபோது அவர் வழக்கம்போல் சிறுபத்திரிக்கைகள் என்பது ஒன்மேன் ஷோ போன்றது, பெரும்பத்திரிக்கையில் எழுத வாய்ப்பில்லாததே காரணம் என்றார். அதற்கு அவர் சொன்ன உதாரணம் இன்னும் நினைவில் உள்ளது. ஒருவர் நம்மை நாம் போக வேண்டிய இடத்திற்கு தூக்கிச் சென்றால், அது நல்லதுதானே, பெரும்பத்திரிக்கையில் நமது அரசியலை எழுதினால் அவர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்றார். ஆதாயம் இல்லாமல் அவர்கள் தூக்கி செல்லமாட்டார்கள். அப்படியே தூக்கி சென்றாலும், ஒரு கட்டத்தில் அவர்களுக்கானவர்களாக நம்மை மாற்றிவிடுவார்கள் என்றேன். வழக்கம்போல் அது ஒரு விவாதமாகியது. பொதுவாக சிறுபத்திரிக்கை என்பது ஒரு இயக்கம். அது சமூகத்தில் பல விளைவுகளை உருவாக்குவது. அதைதான் டெல்யுஸ் கத்தாரி சிறுவாரி இலக்கியம் என்ற கருத்தாக்கமாக வளர்த்துள்ளார்கள். எந்த சூழலும் சிறுவாரியாக இருத்தலே சுதந்திரமான நிலை, வளரக்கூடிய நிலை. பெருவாரி அல்லது பெரும்பான்மை என்பது வளர்ந்து நிற்பது. அது வீழ்ச்சிக்கானதாகவே மாறும். அதை புரிந்துகொள்ளாதவர்களே இடதுசாரி இயக்கம், கருத்தியலை மக்களிடம் பரவாத ஒன்று என்று பேசித்திரிகிறார்கள். இடதுசாரிகள் எப்பொழுதுமே சிறுவாரிகள்தான்.
அரேபியாவில் வேறு எந்த இலக்கிய தொடர்புகளும் உருவாக்கி கொள்ளவில்லையா? அங்குள்ள தமிழ் சங்கங்களுடன் தொடர்பு வைத்துகொள்ளவில்லையா?
எனது நூல்கள், கட்டுரைகள் அனைத்துமே அரேபியாவில் இருந்தபோது எழுதியவைதான். கடந்த 4 ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் இருக்கிறேன். இந்நான்கு ஆண்டுகளில் எழுதியது சொற்பமே. சென்னை திரும்பிய கான் காலக்குறி இதழை அச்சில் கொண்டுவந்தான். அதில் எஸ்ரா, கோணங்கி, ம. அரங்கநாதன் என பலரும் எழுதினார்கள். அதில்தான் எனது மொழியும் நிலமும், புதுமைபித்தனின் நாரத ராமாயணம் குறித்த ஆய்வு, மௌனி குறித்த கட்டுரைகள் வெளிவந்தன. எனது எழுத்தியக்கத்தில் ‘காலக்குறி’தான் அன்றும் இன்றும் தொடர்ந்து ஒரு பின்புலமாக, அடிப்படை செயலூக்கியாக அமைந்து வருகிறது. 98-ல் எனது பழைய நிறுவனத்தைவிட்டு அரேபியாவின் பழமையான பெருநகரமாகிய ஜெத்தாவில் ஒரு புதிய நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மேலாளராக சேர்ந்தேன். அதுதான் எனது பொருளாதார சூழலையும், வாசிப்பு, எழுத்து சூழலையும் மாற்றியமைத்தது. 90களில் ஏற்பட்டிருந்த மனச்சோர்வு, ஏக்கம், தனிமை மாறியது. இணையம் வந்தது. வாசிப்பிற்கான உலகம் விரிந்தது. திருச்சியில் படித்த காலங்களில் அங்கிருந்து ஈழ முகாம்களில் நண்பர்கள் கிடைத்தார்கள். குறிப்பாக அசோக் என்று ஒரு நண்பர். அவருடன் அவரது முகாம்களில் போய் தங்குவது, அங்கு சமைப்பதை உண்பது என அவர்களது வாழ்வின் அவலங்களை காண நேர்ந்த காலம் அது. அந்நண்பர் அதன்பின் பிரான்சிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் ‘அசை’ என்ற ஒரு இதழைக் கொண்டுவந்தார். இதழ் சென்னையில் அச்சாகியது. அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த ‘உடலரசியல்’ என்ற கட்டுரையின் முதல் பகுதி அதில் வெளிவந்தது. 90களில் ரியாத்தில் சுமார் 80 பக்கங்கள் கொண்ட ஒரு குறுநூலாக உடலரசியலை எழுதி வைத்திருந்தேன். பிறகு ‘அசை’ நின்றுவிட்டது. அதன்பின் அவரது நண்பர்கள் ‘எக்சில்’ என்று ஒரு இதழை கொண்டுவந்தனர். அதில் புஷ்பராஜா, கலைச்செல்வன், இன்பராணி, லெஷ்மி போன்றவர்கள் செயலாற்றிக் கொண்டிருந்தார்கள். இன்பராணி, லெஷ்மி அவர்கள் என்னிடம் எழுதும்படி கேட்டார்கள். உடலரசியல் தொடரை அந்த இதழ்களில் தொடராக வெளியிட்டார்கள். அதன்பின் ‘எக்சில்’ இரண்டாக பிரிந்து, லெஷ்மி ‘உயிர்நிழல்’ கொண்டுவந்தார். அதில் உடலரசியல் தொடரின் அடுத்த பகுதிகள் வந்தது. அதில் வேறு சில கட்டுரைகளும் எழுதினேன். அவர்கள் 2000-த்தில் பிரான்சில் நடத்த இருந்த இலக்கிய சந்திப்பிற்கு என்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்தனர். அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து கட்டுரை வாசியுங்கள் என்றார்கள். காரணம் அப்பொழுதுதான் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு உலகளாவிய சிக்கலாக, பேசுபொருளாக மாறியிருந்தது. ஏற்கனவே அடிப்படைவாதம் குறித்த எட்வர்ட் சைத்தின் கட்டுரைப்பகுதிகளை காலக்குறியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக நான் ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். ஆனால், கெடுவாய்ப்பாக எனது அலுவலகம் விசாவிற்கான அனுமதி தரவில்லை. அவர்கள் விசா கடிதம்,டிக்கெட் புக்கிங் எல்லாம் அனுப்பியும் அலுவலகம் மறுத்துவிட்டார்கள். காரணம் அங்கு போனால் திரும்ப சவுதி வராமல் சாடிவிடுவோம் என்று. அந்த கட்டுரையை அனுப்பி, சந்திப்பில் அதை வாசித்தார்கள். அதன்பின் மீண்டும் புதிதாக வந்த ‘அசை’யில் அது வந்தது. அதற்கு சென்னையில் இருந்து மார்க்சியரான (இவரை டிராட்ஸ்கியிஸ்ட் என்பார்கள்) ஜோதிவிநாயகம் என்பவர் ஒரு நீண்ட மறுப்பு எழுதியிருந்தார் அக்கட்டுரைக்கு. அதற்கான எனது எதிர்வினையை வெளியிட மீண்டும் ‘அசை’ வெளிவரவில்லை. இப்படி அங்கிருந்தபடி முடிந்தவரை இலக்கிய தொடர்புகளை பேணிவந்தேன். அதில் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது, பிளாக் துவங்கிய பின்தான். அதன்பின் தமிழ் இலக்கியத்தோடு, சிறுபத்திரிக்கையோடு தொடர்புடைய பலரும் தொடர்பில் வந்தனர். ரியாத்திலிருந்து கவிஞரான திருச்சியை சேர்ந்த முபாரக் தொடர்ந்து என்னை காலக்குறி வழியாக வாசித்தவர் எனபதாக ஒரு தீவிர வாசகராக அறிமுகமானார். அவர் தனது வேலையை ஜெத்தாவிற்கே மாற்றிக் கொண்டு வந்துவிட்டார். அவரும் நானும் ஒரே பிளாட்டில் இரண்டு அறைகளில் தங்கியிருந்தோம். அவர் மட்டுமே தொடர்ந்து பேசவும், எழுதுவதற்கான ஊக்கத்தை தருபவராக இருந்தார். பொதுவாக இதுபோன்ற நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களை நாங்கள் ‘உப்புமா சங்கங்கள்’ என்றுதான் அழைப்போம். காரணம் உப்புமா, கிச்சடி, பஜ்ஜி, போண்டா தின்று விட்டு ஆற அமர உட்கார்ந்து இலக்கியம் என்ற பெயரில் பிரபலமானவர்களின் கதைகள், வாரப்பத்திரிக்கை சமாச்சாரங்கள், வெகுசன சினிமா பாடல்கள், கதைகள், காட்சிகள். டீவி சீரியல்களை அலசுபவர்கள். அவர்களது பண்பாட்டு அடையாளத் தேடல் அவ்வளவுதான். அதனால் அத்தகைய சங்கங்களோடு எந்த தொடர்புகளும் வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் பிரபலமானவர்களை அழைத்து பேசவைத்து, அவர்முன்பாக தங்களை முன்வைத்துக் கொள்பவர்கள். வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொல்வதைப்போல “கூட்டத்த கிட்ட சேக்காத, எனக்கு ஆகாது”என்பதைப்போல, சங்கங்கள் என்றாலே எங்களுக்கு அலர்ஜிதான். அதிலும் இதுபோன்ற வெகுசன சங்கங்கள் பொதுபுத்தியை மீட்டுறுவாக்கம் செய்யும் அமைப்புகளே தவிர அவற்றால் விளையும் சமூகப்பயன்கள் ஏதுமில்லை.
சமீபத்தில், வெண்டி டோனிகரின் இந்துமத மாற்று வரலாறு படித்துக்கொண்டிருந்தீர்கள், அந்த புத்தகத்தைக் குறித்த உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள், அந்த நூலைப் பற்றி விரிவானதொரு விமர்சனம் எழுதும் உத்தேசம் இருக்கிறதா?
ஆம். இந்த கோரோனாக்கால தனிமையில் 903 பக்கங்களைக் கொண்ட அந்நூலை எடுத்து வாசிக்கலாம் என்று துவங்கினேன். டொனிகர் ஒரு முக்கியமான இந்தியவியல் ஆய்வறிஞர் (ஸ்காலர்). சமஸ்கிருதம் படித்து காமசூத்ரா, மனுதர்மம், ரிக்வேதத் தொகுப்பு, 108 கீர்த்தனைகள் என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு அமெரிக்க பேராசிரியர். எட்வர்ட் சைத்தின் கிழக்கத்தியவியல் (ஓரியண்டலிஸம்) சிந்தனை, இதுபோன்ற மேற்கத்திய, அமெரிக்க ஆய்வறிஞர்களின் ஆய்வுகள் குறித்து ஒரு விமர்சன சிந்தனையை வளர்த்துள்ளது. மேற்கத்திய ஆய்வாளர்களிடம் உள்ள ஐரோப்பிய மையவாத, முதன்மைவாத சிந்தனை, கிழக்கத்தியர்களை திருத்தப்பட வேண்டியவர்களாய், பிறன்மையாக (Other) கட்டமைக்கிறது. இதுபோன்ற நூல்களை மிகவும் கவனத்துடன் கிழக்கத்தியவியல் விமர்சன சிந்தனையுடன் வாசிக்க வேண்டும் என்பதால் மிகவும் நிதானமாக வாசிக்கிறேன். ரோலாண்ட் பார்த் நிதான வாசிப்பு ஒருவகை பேரின்பத்தை உருவாக்கும் என்கிறார். அதேபோல் இந்நூலை அதன் தரவுகள், ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டு தமிழில் வாசிப்பதால் நிறைய நேரம் எடுக்கிறது. அந்த நூல் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வேதகாலத்திற்கும் முன்பாக துவங்கி, இந்துக்களுக்கான ஒரு மாற்று வரலாற்று திட்டத்தை முன்வைத்து நகர்கிறது. குறிப்பாக பொதுபுத்தியில் பதிவுறுத்தப்பட்டுள்ள பல தகவல்களை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் இந்துக்கள் என்ற ஒரு மதவகைமையை ஏற்பதாக அமைந்துள்ளது. இந்துமதம் பிராமணமயமாகும்போது அல்லது ஆரியமயமாகும்போது அது இந்துத்துவாவாக மாறுகிறது என்ற சிந்தனையுடன் அதை வாசிக்க வேண்டும். அந்நூல் குறித்து விரிவாக எழுதவேண்டும் என்ற உத்தேசம் உள்ளது. ஆனால் நிறைய மூலங்களை நாம் சோதிக்க வேண்டும். அது ஒரு பெரிய திட்டமாகவே அமையும். பொதுவாக எனக்கு மதங்கள், தத்துவங்கள், தொன்மங்கள், புராணங்கள் (இடையீடாக தொன்மங்கள், புராணங்கள் இரண்டையும் பிரித்து இரண்டு வகைத்திணையாக கொள்கிறேன் என்பதை சொல்லிவிடலாம். இது குறித்து ஒரு கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்) வாசிப்பில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் இந்த நூலை வாசிப்பது பரவசமான அனுபவமாக உள்ளது. பொதுவாக மேற்கத்திய, அமேரிக்க ஆய்வாளர்கள் நூல்களில் ஒருவித புறவயப்பார்வை இருக்கும். நமது இந்திய அறிஞர்களிடம் தவிர்க்க முடியாமல் வந்துவிடும் அகவயநோக்கு இருக்காது. அடுத்து, ஆய்வில் அவர்கள் ஒரு சரியான முறையியலை, கோட்பாட்டை, கருத்தியலை பயன்படுத்துவார்கள். அவ்வகையில் இந்நூலில் பல மாற்றுத் தகவல்கள் உள்ளன. குறிப்பாக மையநீரோட்ட (அதாவது பிராமணத்துவ) இந்துக்களில் விடுபட்ட பெண்கள், தலித்துகள் பார்வையில் எழுதுவதாக முன்னுரையில் சொல்கிறார். சமஸ்கிருத மொழி புவியியல் தன்மை அற்றது அதாவது நிலமற்ற மொழி என்கிறார். வேறுவார்த்தைகளில் சொன்னால் நாடோடிகள் என்பதே. இதெல்லாம்தான் இந்த நூலை இங்கு வெளியிட சங்பரிவார்களால் தடைகோரப்பட்டது. வாய்ப்பிருந்தால் விரிவாக எழுதும்போது இதனை நீ்ங்கள் புரிந்துகொள்ளலாம்.
வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வேதகாலத்திற்கும் முன்பாகத் துவங்கி’, என்னும் சொற்றொடரை நீங்கள் உணர்ந்தே பயன்படுத்துகிறீர்களா? அப்படி ஒரு காலம் இருந்ததாக பொதுப்புத்தியில் இந்துத்துவா சக்திகள் கட்டமைத்துவிட்டனர், அதற்கு மாக்ஸ் முல்லர் போன்ற ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்களும் துணைபோயினர், அதே சிந்தனையோட்டத்தில் அந்த நூல் தொடர்வதாக நீங்கள் உணரவில்லையா?
நான் பயன்படுத்தவில்லை, அந்த நூலின் திட்டவரைவைத்தான் சொல்கிறேன். அவர் “2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.மு. 50000 வரை” என்றுதான் துவங்குகிறார். இதன் பொருள் இந்துமதம் மிகப்பழமையானது என்பதல்ல, அவர் இந்திய வரலாற்றை அப்புள்ளியில் துவங்கி, சிந்துவெளி நாகரீகம் கி.மு. 5000 – கி.மு. 1500, அதன்பின் கி.மு. 1500 ரிக்வேதகாலம் என்று தொடர்கிறார். உண்மையில் இந்துத்துவர்கள் அதைதான் விரும்புகிறார்கள் என்பதால், தெளிவாக டொனிகர் அதை மறுத்து ரிக் வேதகாலத்தை கி.மு. 1500-ல்தான் துவங்குகிறார். அக்காலக்கணிப்புகள் குறித்து அவரே முன்னுரையில், இது வரலாற்றுக் கால கணிப்பிற்கான நூல் அல்ல என்கிறார். இயற்கையான மொழியான பிராகிருதமே முதலில் தோன்றியிருக்க வேண்டும் என்றும், சமஸ்கிருதம் அதன் பின்னர்தான் வந்திருக்க வேண்டும் என்கிறார். மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் உருவாக்கிய அரசியல் வேறு. அந்த அரசியலை ஹிட்லரின் சுத்த ஆரிய ரதத்திற்கான மூலப்பிரதியாக கூறலாம். அதனை இதோடு ஒப்பிட முடியாது. அது முழுக்க எட்வர்ட் சைத் முன்வைக்கும் ஓரியண்டலிசப் பார்வை என்றே வாசிக்க வேண்டும். இவரது பார்வை இந்துக்கள் விளிம்பிற்கு தள்ளியவர்கள் குறித்த வரலாறே மாற்றுவரலாறு என்ற புரிதலில்தான் எழுதுகிறார். இந்துத்துவ சக்திகளுக்கான வேதகால பெருமிதம், பொற்காலம் போன்றவை மாக்ஸ் முல்லர் வழி கட்டமைக்கப்பட்டவையாகக் கொள்ள வாய்ப்பு உள்ளது.ஆனால், இந்நூல் பல தரவுகளை தொகுத்து வழங்குகிறது. அதன் பார்வையிலும் ஒரு புறவயத்தன்மை உள்ளது. இடதுசாரிகளான நமக்கு அதில் நிச்சயம் விமர்சனரீதியான சில கருத்தாக்கங்கள், வரலாற்று நிகழ்வுகள், வாசிப்புகள் கிடைக்கும். மாக்ஸ்முல்லரின் ஓரியண்டலிச ஆய்வுகள் இந்துத்துவ பொற்காலத்திற்கு அடித்தளமிட்டன எனக்கருத வாய்ப்பு உள்ளது. அதுதான் இன்றைய இந்துத்துவ சித்தாந்தின் மையமான பிராமண மேலாண்மைக்கான நவீன அரசியல் முன்னெடுப்பிற்கு அடிகோலியது. இதன்பொருள் இந்துத்துவத்தை கட்டமைக்க விரும்புபவர்கள் வரலாற்றை தங்களது கருத்தியலுக்கு ஏற்ப வாசிக்கிறார்கள் என்பதே. டொனிகரின் நூல் வலதுசாரிகளை பல இடங்களில் அம்பலப்படுத்தி செல்கிறது. குறிப்பாக இராமர் கோவில் என்று மசூதி இடிப்பு, ராமர் பாலம் போன்ற பலவற்றை அம்பலப்படுத்துகிறது. “1950 முதல் நிகழ்காலத்தில் இறந்தகாலம்”என்ற அத்தியாயம் வலதுசாரி அரசியலை அம்பலப்படுத்துவதாக உள்ளது. என்றபோதிலும், இந்நூல் முன்பே சுட்டியதைப்போல விமர்சன சிந்தனையுடன் வாசிக்கப்பட வேண்டிய நூல் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
மற்றமை, பிறன்மை, சிறுவாரி போன்ற வார்த்தைகளை நீங்கள் உருவாக்கினீர்களா? பெருவாரியாக, இந்தச் சிறுவாரி என்ற வார்த்தை புழங்கப்படுவதாக அறிகிறேன்.
இதில் எதுவுமே நான் உருவாக்கியதில்லை. சிறுவாரி என்ற சொல்கூட தமிழில் புழக்கத்தில் உள்ள ஒன்றுதான். ஆனால், அதனை டெல்யுஸ் கத்தாரி முன்வைக்கும் ‘மைனர் லிட்ரேட்சர்’ என்ற சொல்லை தமிழில் கூற சிறுவாரி என்ற சொல்லை பயன்படுத்தினேன். அதற்கு ஒரு கோட்பாடு, தத்துவ அடிப்படைகளை தர முயன்றிருக்கிறேன். அப்படி பயன்படுத்துவதற்கான விளக்கமும் அதன் அடிக்குறிப்பாக எழுதியுள்ளேன். ஒரு சொல்லின் மீது புதியதொரு அர்தத்தை, ஏற்படுத்துவதன்வழியாக அந்த சொல்லை அடர்வானதாக மாற்றி, அதற்கான உணர்வுப்புலத்தை கட்டமைப்பதே எழுத்து, இலக்கியத்தின் முக்கிய பணி. இன்று சிறுபான்மை, பெரும்பான்மை என்பது அரசியல்களத்திற்கான சொல்லாடல்களாக மாறிவிட்டது. சிறுபான்மை இலக்கியம் என்று சொன்னால் அதன் பொருள் ‘மைனாரிட்டி லிட்ரேச்சர்’ என்றே பொருள்படும். சிற்றிலக்கியம் என்று சொல்லலாம். ஆனால் தமிழில் சிற்றிலக்கியம் என்று தனியானதொரு இலக்கியவகைமை ஏற்கனவே உள்ளது. பரணி, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ் என இது 96 வகை ஆகும் என்கிறார்கள் தமிழியல் ஆய்வாளர்கள். அதனால் ‘மைனர்’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பகரமாக சிறுவாரி என்ற சொல்லை பயன்படுத்தினேன். சிறுபான்மை, பெருபான்மை போல இது எண்ணிக்கை சார்ந்த ஒன்று அல்ல. மற்றமை, பிறன்மை இரண்டும் ஒரே பொருள்கொண்ட இரு சொற்கள்தான். பொதுவாக லக்கானிய other என்பதை மற்றமை என்றே தமிழில் புழக்கத்தில் பயன்படுத்தி வருகிறோம். இங்கு நான் பிறன்மை என்ற சொல்லை பயன்படுத்த காரணம், அதில் உள்ள விளக்கத்தையும், வெறுப்பையும் அழுத்தமாக குறிக்கவே. சரியான கலைச்சொல் பயன்பாடு என்றால் லக்கான இரண்டு சொற்களை பயன்படுத்துகிறார், அதை ஆங்கிலத்தில் other/Other என்று குறிக்கிறார்கள். இரண்டையும் லக்கான் வேறுபடுத்துகிறார். other என்பது ஒரு கற்பனையான மற்றமை என்றும், அது நனவிலிச் செயல்பாட்டிற்கானது, அகமானது, Other என்பது மற்றமையை மீறிய மற்றமையாதலுடன் உறவு கொண்ட தீவிரமான புறநிலை சார்ந்த ஒன்று என்பதாக புரிந்து கொள்ளலாம். அதாவது மொழி, சட்டம் போன்று நமக்கு புறமாக உள்ள ஒரு மற்றமையே என்கிறார். அவரது வார்த்தைகளில் சொன்னால் ‘நனவிலி என்பது மற்றமையின் சொல்லாடலே’ (‘the unconscious is the discourse of the Other’) என்கிறார். இது விரிவாக பேச வேண்டிய ஒன்று. நாம் லக்கானின் big Other ஐ ‘பிறன்மை’ என்ற சொல்லால் குறிக்கலாம் எனக்கருதுகிறேன். small other ஐ ‘மற்றமை’ என்ற சொல்லால் குறிக்கலாம். தமிழ் மொழியின் ஆழத்தில், பழமையில், விரிந்த பல சொற்களில் உள்ள அழகு இது.
‘உடலரசியல்’, ‘உடல்மொழி’ போன்ற சொல்லாடல்கள் தமிழ்ச் சூழலில் மிகவும் பேசப்பட்ட நைந்துபோன பண்டமாக மாற்றப்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா?
ஆம் பொதுவாகவே உலக அளவில் அது ஒரு buzzword என்ற ஆங்கிலத்தில் சொல்வதைப்போல எல்லாவற்றிற்கும் கலைச்சொல் புரிதலின்றி பயன்படுத்தப்படுகிறது. உடலரசியல் ஒரு தீவிரமான கோட்பாடு. உடல்மொழி ஒரு உடலின் சைகைகள் வழியாக உணர்த்தப்படுவதைக் குறிப்பது. அது நாட்டிய சாத்திரம் கூறும் நவரசங்கள் அல்லது தொல்காப்பியம் கூறும் 8 வகை மெய்பாடுகள் சார்ந்த ஒன்று. தொல்காப்பிய மெய்பாட்டியல் உடல்மொழி குறித்து விரிவாக பேசுகிறது. அதை முழுமையான புரிதலுடன் யாரும் பயன்படுத்துவதில்லை என்பது புரிதல் சார்ந்த ஒன்று. ஆனால் உடலரசியல் என்பது அப்படி இல்லை. அது அடிப்படை அறிதல் சார்ந்த ஒன்று. அது வெறும் மனித உடல் சார்ந்தது மட்டுமல்ல. உடல் என்பது ஒரு முழுமையை, தொகுப்பை, நிறுவனத்தை குறிப்பது. Body என்பது political body, legislative body. executive body என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா, அதில் வரும் ‘பாடி’ என்பதும் இணைந்ததே Body Politics. அதை வெறும் பாலியல், உடலியல் சார்ந்த ஒன்றாக தமிழில் பரவலாக பாவிக்கிறார்கள். நிறுவனமே ஒரு அரசியலாக உள்ளது என்பதே.சான்றாக காலில் பிறந்தவன், தலையில் பிறந்தவன் என்கிற ருக்வேதத்தின் புருஷ சூக்தம்தான் உலகின் முதல் உடலரசியல் என்று எழுதுகிறார் Harvey என்ற ஆய்வாளர். இந்த சமூகத்தை ஒரு அமைப்பொருமையாகவும், அரசு, அதிகாரம் ஆகியவற்றை ஒரு நிறுவன அமைப்பாகவும் பார்ப்பதற்கான ஒரு உருவகமே உடல் என்பது. இது குறித்து விரிவாக இந்தமாதம் வெளிவந்த ‘உடலரசியல்’ நூலில் விவரித்துள்ளேன். சாதி, மதம், இனம், மொழி என அனைத்தும் ஒரு உடலை அரசின் அதிகாரத்திற்கு ஏற்ப எப்படி கட்டமைக்கிறது என்பதே உடலரசியல் ஆய்வு. ஒரு உடல் எப்படி அடையாள அரசியலாக கட்டப்படுகிறது என்பதை ஆய்வதே. அதற்கு மிஷல் பூஃக்கோவின் உயிரரசியல் என்கிற biopolitics குறித்த அறிமுகம் அவசியம். இதெல்லாம் எனது நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இன்று உலகளாவிய மிகப்பெரிய சமூவியல் ஆய்வாக உள்ள ஒரு துறை. மார்க்ஸ்தான் ஒரு உடலை உழைப்பு சக்தியாக மாற்றிய முதலாளிய பண்ட உற்பத்திமுறையை அம்பலப்படுத்தியவர். அதுவே உடலரசியலின் மற்றொரு முக்கிய கூறு என்பதையும் எனது நூலில் விவரித்து உள்ளேன். தமிழில் இப்படி ஒரு எளிமைப்படுத்தப்பட்ட தேய்வழக்காக மாற்றப்படும் உடலரசியல் என்ற சொல், இந்நூலிற்குப் பிறகு அதன் கோட்பாட்டு ஆழத்தை அடையலாம்.

இந்திய அரசியல் சூழலில் அதன் பொருத்தப்பாடு என்ன? இலக்கிய திறனாய்வாளராக அக்கோட்பாட்டை இலக்கிய திறனாய்விற்கு எப்படி பயன்படுத்துகிறீர்கள்?
இந்திய உடல்கள் பிராமணிய அழகியல் அடிப்படையில் கட்டப்பட்ட உடல்களே என்பதை புரிந்துகொள்ள உடலரசியல் கோட்பாடு பயன்படும். குறிப்பாக, தீண்டத்தகாத உடல், சாதிய படிநிலை உடல், புனித உடல், தூய உடல் போன்ற கருத்தாக்கங்கள் உள்ளிருத்தப்பட்ட உடல்கள் சனாதன வருண தர்மத்தால் கட்டப்பட்டவையே. மேற்சொன்ன சாதிய, மத, இன உடல்கள் எப்படி பாசிச உடல்களாக மாறுகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும். நமது உடல் இயல்பானது அல்ல என்பதை உணர்ந்து நம்மை கட்டவிழ்த்துக்கொள்ள உதவும். வரலாற்றில் ஒவ்வொரு சமூகமும் தனக்கான உடல்களை கட்டமைப்பதும், பிறதொரு சமூகம் அதை கட்டுடைப்பதும், மீண்டும் புதிய உடல்கள் கட்டமைவதும் என்கிற இயங்கியலை புரிந்துகொள்வது அவசியம். பாலியல் சார்ந்த சொல்லாடலாக, பெண்ணுடல் சார்ந்த ஒன்றாக, அல்லது மாற்றுப்பாலின (LGBT) உடல்களாக மட்டுமே உடலரசியலை சுருக்கிவிடக்கூடாது. இலக்கியத் திறனாய்வைப் பொறுத்தவரை ஏற்கனவே சில நாவல்கள், கவிதைகளை உடலரசியல் அடிப்படையி்ல் வாசித்துக் காட்டியுள்ளேன். சங்க கவிதைகளில் உடலரசியல் குறித்து சில ஆய்வுகள் பல்கலைக்கழக கல்விப்புலத்தில் நிகழ்ந்துள்ளது. கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், மணிமேகலை போன்ற காப்பியப் பெண்களின் கட்டமைவை உடலரசியல் அடிப்படையில் ஆய்ந்தால், தமிழ் பெண் அகம் எப்படி கட்டப்பட்டது, பெண் உடல் காவியமானது எப்படி என்பதை ஆராயலாம். தமிழவனின் சமீபத்திய இரு நாவல்களான ‘ஆடிப்பாவை’ மற்றும் ‘ஷம்பாலா’ ஆகியவற்றை உடலரசியல் அடிப்படையில் வாசித்துக் காட்டியுள்ளேன். குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எப்படி இந்திய தேசியம் என்பது இந்திய உடல்களில் முதலீடாக்கப்பட்டு அதை காங்கிரஸ் அறுவடை செய்தது என்பதையும், அதன்பின் திராவிட தேசியம் என்கிற அரசியல் எப்படி தமிழ் உடல்களில் முதலீடாகி திராவிட இயக்கங்கள் அதை அறுவடை செய்தன தற்போது இந்துத்துவா அரசியல் இந்திய உடல்களின் முதலீடாக மாற்றப்படுகிறது என்பதையும் புனைவுகளில் கண்டுணர்ந்து அதன் நுட்பமான சொல்லாடல் புலங்களை கட்டவிழ்ப்பது என்பது உடலரசியல் சார்ந்த இலக்கியத் திறனாய்வாக கொள்ளலாம். கவிதைகளில் பெண் அகம், ஆண், பெண் உடல் கட்டமைவு ஆகியவற்றை அறிவதற்கான கருவிகளை தருவது உடலரசியல் ஆய்வுகளே. இத்துறை இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று.
கவிதைகள் எழுதும் பெண்கள் தமிழில் இருக்கிறார்களா?
ஏன் இப்படி ஒரு கேள்வி வருகிறது?
இதுகுறித்த அதிக வாசிப்புப் பரிச்சயம் இல்லாததால் கேட்கிறேன், தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்போது பெண் கவிஞர்களின் கவிதைகள் மிகவும் அருகி வருகின்றன என்பதால் இப்படிக் கேட்டேன்.
எல்லா மொழிகளிலும் கவிதை எழுதக்கூடிய பெண்கள் இருக்கிறார்கள். தமிழில் இன்னும் கூடுதலாக உள்ளனர். இதை ஒரு பாலின அரசியல் சார்ந்த கோட்பாட்டுக் கேள்வியாக எடுத்துக் கொள்கிறேன். பல பெண் கவிஞர்களின் கவிதைகள் அவர்கள் மொழியில் சொன்னால் ஆண்மொழியில்தான் எழுதப்படுகிறது. பாலின அரசியல் (Gender Politics) ஆண் விழைச்சால் உருவாக்கப்பட்ட ஒரு மற்றமையே பெண் என்கிறது. லெக்கான் ‘women doesn’t exit’ என்கிறார். அதன்பொருள் ஆண், ஆணின் மற்றமையாக ‘பெண்’ உள்ளதே தவிர, பெண் என்கிற தனித்த இருப்பு இல்லை என்பதே. நாம் அந்த விவாதத்திற்குள் நுழைய வேண்டாம். பெண்ணியலாளர்களின் பேரிருப்பாக கருதப்படும் சிமோன் தி போவா கூட பெண் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறார். ஜீதித் பட்லர் போன்ற தற்கால ஆய்வாளர் பாலினம் என்பதே ஒரு performative act என்கிறார். பெண்என்பதற்கான சில நடத்தைகளை உருவாக்கி அதனை பின்பற்றுபவர்களை பெண் என்ற இரண்டாம் பாலினமாக அடையாளமிடுகிறோம். பெண் என்ற சாராம்சவாத சிந்தனைக்கு எதிராக ஆணிருப்பிற்கான திரளுதலில் உருவாகும் ஒன்று என்று தற்போதைய பின்நவீனம் சார்ந்த பெண்ணிய சிந்தனை பேசுகிறது. அதேபோல் ஆண், பெண் என்ற இரண்டு பாலினம் தாண்டி 5 வகை பாலினம் உள்ளதாக உயிரியல் ஆய்வாளர் அன்னி பாஸ்டோ-ஸ்டெர்லிங் என்பவர் கூறுகிறார் தனது “Sexing the Body – Gender Politics and Construction of Sexuality” என்ற நூலில் (இது குறித்த விரிவான கட்டுரை உடலரசியல்’ நூலில் உள்ளது). ஆகையினால் நமது பொதுபுத்தி சார்ந்த பலவற்றை மாற்றவேண்டிய காலத்தில் இருக்கிறோம். தமிழில் சங்ககாலம் துவங்கி பெண் கவிஞர்கள் (தமிழில் இதனை பா என்றுதான் அழைக்க வேண்டும், காரணம் கவிதை என்பது வடமொழி சொல்) கவிதை எழுதியுள்ளனர். குறிப்பாக 90களுக்கு பின் தமிழில் ஆண் கவிஞர்களைவிட பெண் கவிஞர்களே அதிகம் என்று சொல்லும் அளவிற்கு நிறைய பெண் கவிஞர்கள் உள்ளனர். தமிழ் பெண் கவிஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து முன்பு தீராநதியில் “பெண் எனும் பேரச்சம் – பெண்ணிய பாலியலும் ஆண்களும்”என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். கவிதை எழுதப்படுவதில்லை வாசிக்கப்படுகிறது என்கிற ஒரு கருத்தாக்கம் எனக்கு உண்டு. ஒரு குறிப்பிட்ட கணத்தின் வாசிப்பில்தான் கவிதை பிறக்கிறது. அந்த கணத்திற்காக வாசிப்பாளன் காத்திருக்க வேண்டும். வாசக எதிர்கொள்ளல் கோட்பாடு (readers response theory) அதைதான் கூறுகிறது. பிரதி வாசிப்பில் நெய்யப்படுகிறது என்கிறது. எல்லோருக்கும் பொதுவான ஒரு இலக்கிய அழகியலோ, கவிதையோ, படைப்புநெறியோ சாத்தியமில்லை. அதனால் இக்கேள்வி ஒருவகையில் நமது இலக்கிய வாசிப்பு குறித்த கேள்வியாகவும் உள்ளது.
புத்தகம் பேசுது வாசகர்களுக்காக உங்களுடைய சமீபத்தில் எழுதிய கவிதைகள் சிலவற்றைத் தரமுடியுமா?
தரலாம், ஆனால் அவற்றை முந்தைய கேள்வியில் ஒதுக்கியதைப்போல இது கவிதையா? என்று ஒதுக்கக்கூடும். காரணம் தமிழில் செய்யுள் என்று அறியப்படும் பா வகைகளை அடையாளமிட்ட யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்கிற தொல்காப்பிய செய்யுளில் கூறிய 32 உத்திகள் இருந்தது. ஆனால், புதக்கவிதையில் அப்படி கவிதையை அடையாளப்படுத்திவிட முடியாது. சான்றாக, “நீரின்றி அமையா உலகு” என்ற வாக்கியம் புறநானூற்றிலும் உள்ளது, வள்ளுவரிடமும் உள்ளது. ஊடிழைப் பிரதியில் கோட்பாட்டின்படி, பிரதி என்பது மற்றொரு பிரதியோடு உறவு கொண்டே உருவாகுகிறது. மேலே சென்ன புறநானூற்று வரியும். வள்ளுவர் வரியும் ஒரு ஊடிழைப்பிரதியாக (inter-textuality) அமைந்து மற்றொரு பிரதியை உருவாக்குகிறது. புதுக்கவிதை என்பதும்கூட பல ஊடிழைப்பிரதிகள் வழியாக உருவாகி வருவதே. அதை படைப்புகணம், உள்ளொளி, தெறிப்பு என்றெல்லாம் கூறும் படைப்பு குறித்ததொரு மெய்யிருப்பியல் (metphysics) கண்ணோட்டம் நம்மிடம் இருப்பதே காரணம். புதுக்கவிதையும் மரபுகளின் ஒரு தொடர்ச்சிதான். புதுக்கவிதைக்குள்ளும் ஒரு சந்தம் அல்லது ஓசை உண்டு. அது மௌனத்தை அசைக்கும் ஓசை. அவ்வகையில் அந்த ஓசை வாசிப்பில் உருவாக வேண்டும். இப்படி சில சிக்கலான செல்நெறிகளை கவிதைகளில் வாசிக்க முயல்வதால், கவிதை எழுதுவதில் எனக்கு பல சிக்கல்கள் உள்ளன என்பதே தொடர்ந்து கவிதை எழுதாததற்குக் காரணம். இருந்தும் தமிழின் புதுக்கவிதை மரபில் பலவிதமாக எழுதிப் பார்த்தவையே என் கவிதை. நீங்கள் கேட்டதால் சில கவிதைகளை தருகிறேன்.
வாழ்ந்துசாவதைவிடவும்
வலிமிகுந்தது சாவில்வாழ்வது
சட்டையின் நிறத்தைமாற்ற
தோலைகிழித்தெடுக்கிறார்கள்
-இந்த இரவு நிறமற்றிருக்கிறது
நீலவானம் கருத்துவிட்டது
அவிந்துபோன நட்சத்திரங்கள்
குருட்டு இருட்டில் முட்டித் திரிந்தன
துன்பங்களை கடந்துவிடலாம்
துயரங்களை என்ன செய்ய?
காலத்தை ஒடிப்பதைப் பற்றிதான்
இக்கவிதை துவங்கியிருக்க வேண்டும்
ஏனோ வெளியை சிதைத்துவிட்டது
—நிற்கவும் நிமிரவும் இயலாத புல்வெளிகள்
காகங்கள் தின்றுவிட்டு துப்பிய
கனவின் எச்சங்களால்
சிதறிவிட்டது முற்றங்கள்
—நிற்கவும் நிமிரவும் இயலாத புல்வெளிகள்
உடலின் புறக்கோடுகளை கிழித்துவிட்டேன்
அகக் கோட்டில் சிக்கி
அலைகிறது நம் நினைவுகள்
—நிற்கவும் நிமிரவும் இயலாத புல்வெளிகள்
காகிதங்களை தின்றுவிட்டு துப்பிய
நினைவின் எச்சங்களால்
பதறுகிறது கவிதைப் பக்கங்கள்
—நிற்கவும் நிமிரவும் இயலாத புல்வெளிகள்
எண்ணெய் மண்ணில் உற்பத்தியாவதில்லை
எண்ணெய் வள தேசங்களின்
இரத்த சகதிகளில்தான்
குறிப்பாக
குழந்தைகள் இரத்தம்
குண்டுகள் துளைத்து
சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய்
வளங்கள் வாழ்வதற்கல்ல
வல்லரசுகளால் அழிக்கப்படத்தான்
மனிதம் தன்னைக் கொன்று
தன்னையே தின்கிறது
ஒரு நாயைப்போல
போரற்ற உலகமும்
நீரற்ற உலகமும் ஒன்றுதான்
ஒன்றில்
இரத்தம் நீராகிறது
மற்றதில்
நீர் இரத்தமாகிறது
(கீழே உள்ள கவிதைகள் – 27-02-2020 குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பிறகான டெல்லி கலவரத்தை பார்த்து ஏற்பட்ட உணர்வில் எழுதியது)
எண்களால் அறியப்படும் உலகு
இறுதியில் எமது அடையாளம்
வெறும் எண்கள் –
அது அகதிக்கானதாக
ஊடுறுலுவலுக்காரளுக்கானதாக
குற்றவாளிக்கானதாக
அல்லது
தேசத்துரோகிக்கானதாக
எதுவாகவும் இருக்கலாம்.
எண்மருவிய மதங்கள்
எண்களாக மனிதத்தை மாற்றிவிட்டது
மனிதம் மதம்
ஒற்றை எழுத்தே வித்தியாசம்
ஓரெழுத்திற்குள் பலகோடி உயிர்கள்
பதற்றுத்துடன் வாழ்கின்றன
ஓரெழுத்தை அழிக்க
ஓராயிரம் உடல்களின் ரத்தம்
ரத்தகவுச்சி வீசும் தெருக்களில்
மாட்டு மூத்திரம் அபிஷேகிக்க
மகோன்னதக் கடவுள்களுக்கு
மனித ரத்தம் படைக்கப்படுகிறது
அசுவமேத குதிரைகளின்
குளம்பொலிகள் ஒலிக்கும் நகரத்தில்
ரத சக்கரங்களில் அலறும்
குழந்தைகளின் கூக்குரல்
அக்னி குண்டத்தின்
அறுக்கப்பட்ட
ஆண்குறிகள் மட்டுமே
ஆகுதியாக ஆக்கப்படுகிறது.
வாலில் தீபிடித்த –
வானரங்களால் ஆளப்படும் தேசத்தில்
ராமனின் வெற்றிகளில் இருப்பது
ரஹ்மான்களின் தோல்வியல்ல
ராவண தேசங்களின் அழிவு
இன்று
கரைகடக்க குகன்கள்
ராமனை
தங்கள் படகில் ஏற்றிச் செல்லலாம்
என்றாலும்
சீதம்மாவையே கொளுத்திய நெருப்பு
விபிஷனர்கள், குகன்கள் என
ஒவ்வொருவராய் கொளுத்தாமல்
விட்டுவிடவா போகிறது
சாம்பல் மேடுகளில் மட்டுமே
மலரப்போகும்
அந்த
ஆகாயத்தாமரைக்காக
ராமன்கள் மறைந்திருந்து
வாலிகளை தாக்குவதுதானே வரலாறு.
அக்பரி வயது 85
பால் வாங்க சென்ற
தனது மகளுக்காக
மூன்றாவது மாடியில்
காத்திருந்தார்
கரித்துண்டுகளாக அவர்
கீழிறக்கப்படுவார் என்பதை
கனவிலும் நினைக்காமல்
நாசியில் உணர்ந்த நெருப்பின் வாசத்தை
அறியும் முன்பாக…
தனது தசைகள் உருக உருக…
காது மடல்களில் பரவிய சூட்டில்
ஒலித்துக் கொண்டிருந்தது
ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்!
கடைசிநேரமென அறிந்து
கைவிட்ட இறையை அழைத்திருக்கலாம்
அல்லது
காதுகளில் ஓதப்பட்ட பாங்குடன்
கேட்ட தன் பெயரென நினைத்து
அல்லாஹ் அக்பர்! என்று…
அழைத்திருக்கலாம்
மனிதர்கள் கைவிட்டவர்களை
இறைவனா காக்கப் போகிறான்.
கையேந்திய பிரார்த்தனைகளை
கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்
செவிடன் காதில்
ஊதிய சங்கென…
இறைவன்கள் எப்போதும்
சக இறைவன்களை கைவிடுவதில்லை
மதம்பிடித்த மனிதர்களைப்போல…
மனிதகுலத்தை காப்பாற்றுவதில்
அனைத்து இறைவன்களும்
ஒன்றுபோல்தான்…
ஒருவன் கையில் கத்தி
பிறிதொருவனுக்கோ கழுத்து
நரிகளின் நாட்டாமை
நாடுகளில் வாழ்வதைவிட
காடுகள் சிறந்தவை என்ற
நாட்டை காடாக்கிய பரிவாரங்கள்
காட்டிற்கு அரணாக நரியை அறிவித்தன
இந்த நரிகள் வழக்கமான நரிகள் அல்ல
கோமாதாக்களுக்கும் நரசிங்கங்களுக்கும் பிறந்த
வினோத நரிகள்
இதோபோல் ஈரானில் நடந்த அமெரிக்க வான்வெளித் தாக்குதலின் புகைப்படங்களை பார்த்து இரவு தூங்கமுடியாமல், புகைப்படங்கள் கவிதை வரிகள் என எழுதினேன். அவை முகநூலில்கூட பதிவிட்டுள்ளேன் புகைப்படங்களுடன். அதேபோல் முள்ளிவாய்க்கால். இப்படி மனிதப் படுகொலைகளினால் மனதில் உருவாகும் ஒரு காரிருள், கடினமான மௌனம், செயலின்மை உருவாக்கும் குற்றஉணர்வு என்கிற கணங்களில் கவிதை ஒரு வெளிப்பாடாக அமையும். இதனை காளிதாசன் நாக்கில் கீறிய காளி போன்று உருவகித்துக் கொள்ளக்கூடாது. அதற்குதான் மொழி வினை, ஊடிழைப்பிரதி ஆகியவற்றை கூறினேன். அழுத்தப்பட்ட வெளிப்படுத்தப்பட முடியாத மொழி ஒரு புறவடிவம் தேடும் போது அது படைப்பாக வடிவம் கொள்கிறது. அதுவே பிரக்ஞையுடன் எழுதப்படும்போது திறனாய்வாக, கட்டுரைகளாக வெளிப்படுகிறது. மொழி ஒரு பிறன்மை, அதன் நனவிலிச் சொல்லாடலே படைப்பு (பிரதி) என்று லக்கானிய விளக்கம் தரலாம் இதற்கு.
தமிழில் இலக்கியத் திறனாய்வுப் புலம் சற்றேறக்குறைய படைப்பிலக்கியத்தைப் போன்றே நுண்ணுணர்வுகளையும் கவித்துவத்தையும் கோரக்கூடியது. அதற்கான சரியான எல்லைகளை தமிழ்ச்சூழலில் எட்டவில்லை என்றே நினைக்கிறேன். அதனாலேயே, போலி சனாதன இலக்கியக் கோட்பாடுகள் பொதுவெளியில் நிலவுவதாகக் கருதுகிறீர்களா?
நீங்கள் கூறுவது உண்மைதான். கோட்பாட்டு அடிப்படையில் உணர்வு /அறிவு என்கிற முரணியக்கமாக இதனை புரிந்துகொள்ள வேண்டும். படைப்பை திறனாய்விற்கு எதிராக முன்நிறுத்தும் போக்கு 70-களில் துவங்கியது. அது கலை கலைக்காகவே என்று பேசிய ஒருவகை பிராமணிய கலைத்துவ அல்லது வடமொழி ரசக் கோட்பாட்டு அடிப்படையில் உருவான போக்கின் உச்சம். உணர்வு தூய்மையானது, உடனடியாக பொய்யில்லாமல் வெளிப்படக்கூடியது என்றும், அறிவு சிந்தித்து, தணிக்கை செய்து சுய அடையாளத்துடன் வெளிப்படும் பொய் தன்மை கொண்டது என்கிற பார்வையுமே இதன் அடிப்படை. இது படைப்பை சுயம்புவாக வெளிப்படுவது உன்னதமானது என்கிற மாந்ரீக வேளிப்பாட்டைப் போல பார்ப்பது. உணர்வு என்பது பதப்படுத்தப்படாத அறிவு. அறிவு என்பது பதப்படுத்தப்பட்ட உணர்வு என்ற அடிப்படை கோட்பாடுகூட அறியாத கிணற்றுத் தவளைகள் நிரம்பிய சூழல். அறிவில்லாமல் உணர்வை புரிந்துகொள்ள முடியாது. உணர்வில்லாமல் அறிவுருவாக்கம் நிகழாது. படைப்பு என்ற சொல்லே நவீன திறனாய்வில் காலாவதியான சொல். காரணம் படைப்பு என்பது மதவாத இறைத்தன்மை கொண்ட சொல். அதற்கு பதிலியாக அமைப்பியல் பிரதி என்ற சொல்லை முன்வைக்கிறது. பிரதி என்பது படைப்பாளியும், வாசகனும் மொழி வழி நெய்யும் ஒன்று. படைப்பாளி என்பவன் பிரதிக்குள் இருக்கும் ஒரு குரலே தவிர, அதை எழுதிய ஆசிரியன் அல்ல. அடுத்து படைப்பாளி என்ற சொல்லும் ஆசிரியன் என்பதால் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் இங்கு இலக்கியம் இன்னும் நீங்கள் கூறியதைப்போல சனாதன மதவாத பிடியிலிருந்து விடுபடவில்லை. காரணம் திறனாய்வு என்பது அவர்கள் நினைப்பதுபோல ஆகா ஓகோ அருமை பேஷ் பேஷ் நன்னா இருக்கு என்பதான புரிதல் இருப்பதே காரணம். திறனாய்வு என்பது படைப்பின் திறனை ஆய்வதுதானே தவிர, படைப்பிற்கு தீர்ப்பு வழங்குவதோ, படைப்பிற்குள் துப்பறிந்து கண்டுபிடிப்பதோ அல்ல.
உங்களுடனான சக பயணிகளாக நீங்கள் யாரையெல்லாம்முன் நிறுத்துவீர்கள்?
சகபயணி என்றெல்லாம் கூறும் அளவிற்கு ஒரு தனித்தன்மையான இடத்தில் நானில்லை. வாசிக்கிறேன், எழுதிக் கொண்டிருக்கிறேன். இது ஒரு தொடர்செயல். எனது இருத்தலுக்கான செயல். அதாவது இருத்தல் குறித்து existance, being, becoming என்ற மூன்று தத்துவ வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளது. பொதுவாக எழுத்து என்பதை இந்த மூன்றையும் உள்ளடக்கிய ஒரு செயல்பாடாகவே கருதுகிறேன். சிலர் இருத்தலுக்காக எழுதுகிறார்கள். சிலர் இருப்பதால் எழுதுகிறார்கள். சிலர் தன்னுருவாக்க வினையாக தன்னை மற்றமையாக்குவதற்காக எழுதுகிறார்கள். மற்றமையாதலே எழுத்தின் அடிப்படைவினை என்று கருதுகிறேன். அவ்வகையில் டெல்யுஸ்-கத்தாரி முன்வைக்கும் ‘பிக்கமிங்’ (becoming) என்கிற ஆதல் அல்லது உருவாகுதல் தன்மையாகவே எழுத்தை பார்க்கிறேன். அதனால் எழுத்தில் பலனை எதிர்பார்ப்பதில்லை ஆனால் அதற்கு விளைவு உண்டு என்று நம்புகிறேன். தன்னை அழிப்பதும், மற்றமையாதலுமே எழுத்தின் வினை அவ்வகையில் சகபயணி, குழு, கூட்டம், குருமடம் உள்ளிட்டவற்றை நிராகரிப்பதே எனது எழுத்து என நினைக்கிறேன். உப்போ, சக்கரையோ நீரில் கரைவதைப்போல, எழுத்து என்பது மொழியாக சமூகத்தில் கரைந்து விடுகிறது. கரைந்தபின் அது பழைய நீராக இருப்பதில்லை. இப்படியாக மொழியாக கரைக்கப்பட்டு கட்டமைந்ததே சமூகம். அதுதான் எழுத்தின் ஆகப்பெரும் வினையே. எல்லாவற்றிற்கும் முன்பாக, நல்ல வாசிப்பாளர்களை கண்டுகொள்வது அவசியம் என்று கருதுகிறேன். சிறந்த எழுத்து சிறந்த வாசிப்பாளனை உருவாக்குகிறது. சிறந்த வாசிப்பாளன் சிறந்த எழுத்துக்களை உருவாகுகிறான்.
எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் உண்மையல்ல என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
எப்போதுமே அப்படித்தான் நினைக்கிறேன். புதுவரலாற்றியம் (New Historicism) என்ற நவீனக் கோட்பாடு, வரலாறு உண்மையல்ல, அது புனைவும் கலந்ததே என்கிறது. எடுத்துரைப்பு இல்லாமல் வரலாறு இல்லை. எல்லா எடுத்துரைப்புகளும் அரசியல் சார்பானதே அல்லது எடுத்துரைப்பாளனைச் சார்ந்ததே. இது குறித்து ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளேன். ஷேக்ஷ்பியரின் எழுத்துக்கள் எப்படி விக்டோரியன் பண்பாட்டை மறு வடிவமைப்பு (Reshaping) செய்தது என்பது குறித்து புது வரலாற்றியல் ஆய்வாளர் ஸ்டீபன் கிரீன்பிளாட் என்பவர் எழுதுகிறார். இங்கிலாந்து மார்க்சியரான ரெய்மாண்ட் வில்லியம்ஸ் பண்பாட்டு பொருள்முதல்வாதம் (Cultural Materialism) என்று புது வரலாற்றுவாதத்தை மார்க்சிய அடிப்படையில் பண்பாட்டை முதன்மைப்படுத்திய ஆய்வுகளை செய்கிறார். மார்க்சிய மேற்கட்டுமானமாக கூறும் பண்பாடு ஒரு குறிப்பிட்ட காலங்களில் வரலாற்றை நிர்ணயிப்பதாக இருக்கும் என்கிறார். இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் பண்பாட்டை முதன்மையாகக் கொண்டே வரலாற்றை கட்டமைப்பதைக் காணலாம். இதன் அடிப்படையில் ஆளும் வர்க்க உலக கார்பரேட்டுகளின் பொருளாதார நலன் இருந்தாலும், அதனை அவைகள் பண்பாட்டு சிக்கல்கள் வழியாகவே தனது ஆளுகையை உறுதிபடுத்துவதைக் காணலாம். வரலாறு என்பது நிகழ்காலத்தால் வாசிக்கப்படும் ஒருவகை அரசியல் எடுத்துரைப்பே. சான்றாக பலவற்றை சொல்லலாம். வரலாற்றின் இடைவெளிகளை இலக்கியப் புனைவுகளைக் கொண்டே நிரப்புகிறோம். அதேபோல் இலக்கியத்தின் இடைவெளிகளை வரலாற்றைக் கொண்டு நிரப்புகிறோம். பின்நவீனத்துவம் முழுமுதலான உண்மை கிடையாது என்கிறது. அது சார்புத்தன்மைக் கொண்டதே. முற்றான உண்மை என்பதே இன்றைய மதங்களின் பெரும் வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. வரலாறு எப்பொழுதுமே ஆதிக்க வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் எடுத்துரைப்பாகவே உள்ளது. இது குறித்து பல உதாரணங்களுடன் விரிவாக பேசலாம். பாபர் மசூதி ராமஜென்ம பூமி பிரச்சனையே இதற்கு ஒரு உதாரணம். தற்காலத்தில் இந்த வரலாறு எப்படி தொலைக்காட்சிகள் துவங்கி ஊடகங்கள் வழியாக உருவாக்கப்பட்டது என்பதை ‘வரலாற்று உருவாக்க எந்திரம்”என்ற தலைப்பில் எனது ‘உடலரசியல்’ நூலில் எழுதியுள்ளேன்.
உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய புத்தகங்கள் என்னென்ன?
நீங்கள் வழக்கமான முறையில் இந்த கேள்வியை முன்வைக்கிறீர்கள். இதற்கான கோட்பாட்டு விளக்கத்தை கூறவே விரும்புகிறேன். புத்தகம் ஒரு அகப்பொருளோ, புறப்பொருளோ அல்ல என்கிறார்கள் டெல்யுஸ்-கத்தாரி இரட்டையர்கள் தங்களது ‘ரைசோம்’ என்ற தலைப்பிட்ட முன்னுரையில். அது ஒரு திரளுதல் (அசம்பலேஜ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் சொல், தமிழில் திரளுதல் என்று நான் பயன்படுத்துகிறேன். அது குறித்து தமிழில் அதிகம் பேசப்படவில்லை என்பதால் கலைச்சொல் சிக்கல் உள்ளது.) புத்தகம் சமூகத்தில் அர்த்தமாக திரளும் ஒன்றே. அது சமூகத்தை வாசிப்பின் வழி கட்டமைக்கும் ஒன்றாகவும் உள்ளது. அதனால்தான் அதனை தமிழில் ‘நூல்’ என்கிறார்கள் போலிருக்கிறது. ஆங்கிலத்தில்கூட பிரதி என்பதை குறிக்கும் text என்ற சொல் textureஎன்கிற துணி நெய்தலில் கிடைக்கும் ஒரு வடிவமைப்பை குறிக்கும் சொல்லில் இருந்தே வந்தது. அதனால் புத்தகம் என்பது வாசித்து ஆச்சர்யத்தை உருவாக்கும் ஒன்று அல்ல. அது ஒரு வினையாடல் என்ற வகையில் நம்முள் இயங்கிக் கொண்டிருப்பது. இதுகுறித்தும் நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். புத்தகங்கள் எப்படி சமூகத்தை கட்டுகின்றன என்று. அதில் “புத்தகங்கள்தான் மதம், வரலாறு துவங்கி சமூகமாக தொடர்ந்து ஒரு அமைப்பு உருவாகவும் அடிப்படையானதாக இருக்கிறது. பகுத்தறிவின் அடிப்படையிலான நவீன சமூகங்கள்கூட புத்தகங்களாக எழுதப்பட்ட சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியத்திற்கு ஆளாகியுள்ளது. காரணம் புத்தகம் உண்மையாக, உண்மையின் மூலமாக சமூகவயப்படுத்தப்பட்டுள்ளது. வேதங்கள், திருமறைகள், ஆதியாகமங்கள் எல்லாம் புத்தகங்கள்தான். இந்திய வேதமதங்கள் நான்கு வேதங்கள் என்ற புத்தகத்தையும், செமெட்டிக் மதங்கள் எனப்படும் யூத, கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் புத்தகங்களின் மதங்கள் என்றே அழைக்கப்படும் அளவிற்கு அவற்றின் புனிதமறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
உலகின் எல்லா மதங்களும் கடவுளின் வாக்காக புத்தகங்கள் அல்லது அதன் தீர்க்கதரிசிகளின் வாக்குகள் பதியப்பட்ட புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டவையே. ஜொராஸ்டீரியம், பௌத்தம், சமணம். சைவம், வைணவம் என எல்லாம் இத்தகைய விளக்க புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டவையே. இவ்வாறாக, பேச்சு அல்லது வாக்கு மாறிவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டதால் எழுத்தாக மாற்றப்பட்டு புத்தகமாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு தெய்வீமானது, புனிதமானது, கடவுளின் இருப்பை முதன்மைப்படுத்துவது என்பதாக வாக்கு-மையவாத சிந்தனை என்பதே மதங்களின், தத்தவங்களின் அடிப்படையாக அமைந்திருக்கிறது. இப் புனிதமறைகள் வாக்கின் வரிவடிவமே எழுத்து என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. எனவே புத்தகங்கள் வாசிப்பின் வழி திரளும் ஒன்றே. அதனால்தான் புத்தகம் என்பதற்கு பதிலாக பிரதி என்ற சொல்லை பின்அமைப்பியல் சிந்தனை முன்வைக்கிறது. ஆகையினால் வாசிக்கப்படும் நூல்கள் அனைத்துமே நமக்கு ஆச்சர்யம் ஊட்டக்கூடியவைதான். குறிப்பாக நீங்கள் கேட்க விரும்பவது சில புத்தகங்களின் பெயர்கள் என்றால், நிறைய புத்தகங்களைச் சொல்லவேண்டி வரும். எனக்குள் மாற்றத்தை உருவாக்கிய தமிழ் நூல்கள் என்றால் சிலவற்றை சொல்லலாம். மார்க்சின் “அரசியல் பொருளாதாரத்திற்கான விமர்சன பங்களிப்பு”, ஐராவதி கார்வேயின் “யுகாந்தா-ஒரு யுகத்தின் முடிவில்”, அம்பேத்கரின் “பார்ப்பனியத்தின் வெற்றி”, தமிழவனின் “தமிழும் குறியியலும்”, மாவோவின் “முரண்பாடுகள் பற்றி”, “நடைமுறைப்பற்றி”, லெனினின் “அரசும் புரட்சியும்”, எங்கல்சின் “குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” , தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் “இந்திய தத்துவத்தில் மறைந்துபோனவையும், நிலைத்திருப்பவையும்”, டி.டி. கொசாம்பியின் “மாயையும் யதார்த்தமும்”, ராகுல்ஜியின் “வால்கா முதல் கங்கைவரை”, “பௌத்த தத்துவம்”இப்படி நிறைய சொல்லலாம். மூலநூல்களான பைபிள், குரான், அவஸ்தா, சூஃபி நூல்கள், வேதங்கள், மகாபாரதம், உபநிஷத்துகள், சைவ ஆகமங்கள், 18 புராணங்கள், காமசாஸ்திரம், அரேபிய இரவுகள், டான் குவிக்சோத், டெக்கமரான் கதைகள், புத்த ஜாதகக் கதைகள், கதாசரித சாகரம், விக்ரமாதித்தியன் கதை, ஹாத்திம்தாய் ஆகியவை அனைத்துமே படிக்குந்தோறும் ஆச்சர்யம் தரக்கூடியவைதான்.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்களில், இந்தியா ஒரு வாழத் தகுதியற்ற நாடாக உங்களை அச்சுறுத்திய சம்பவங்கள் என்னென்ன?
ஒன்றா இரண்டா? கட்டபொம்மனில் சிவாஜி கூறும் வசனத்தைப்போல ‘எண்ணிக்கை தெரியாத குற்றங்கள்’ நிகழ்கிறது. தினவாழ்வே சாத்தியமற்றதாக மாற்றப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனைகளின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளனர். கொதிகலனில் அமர்ந்துள்ளவன் மற்றவற்றைபற்றி சிந்திப்பதில்லை. அதுதான் இன்றைய பாசிச அரசிற்கு தேவை. இன்று நமது உடல் முற்றிலமாக பாசிசமயமாகவோ, அல்லது அதை எதிர்த்து மடிவதாகவோ கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவாக வர இருக்கும் எனது சமீபத்திய “குடியாண்மை சமூகமும் நுண்பாசிசமும்”நூலில் விவரித்துள்ளேன். குஜராத் கலவரம், பாதிரியார்கள் எரித்து கொல்லப்பட்டது, தலித்தகள் மீது நடக்கும் வன்கொடுமைகள், மாட்டுக்கறிக்காக கொல்லப்படுவது, சாலைகளில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லாதவர்களை அடித்துகொல்வது, ஐஐடி, பல்கலைக்கழக தற்கொலைகள் என கணக்கிலடங்கா நிகழ்வுகளை பட்டியலிடலாம். இது குறித்து நிறைய புத்தகங்கள் வந்துள்ளன. ‘ராம் புன்யானி’. ‘சம்சுல் இஸ்லாம்’ போன்றவர்கள் இதை தொடர்ந்து கவனப்படுத்துகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் என்பது இரண்டாவது பிரிவினையை உருவாக்கம் ஒரு மக்கள்விரோத சட்டம். முழுக்க இந்தியாவை அகதி முகாம்களாக, வதைமுகாம்களாக மாற்றுவதற்கான திட்டம் அது. உலகளாவிய நிகழ்வாக மாறிவரும் ‘முகாம்’ என்கிற கருத்தாக்கம் குறித்து இத்தாலிய சிந்தனையாளர் ஜியார்ஜியோ அகம்பன் பல உயிரரசியல் சார்ந்த ஒடுக்குமுறைகள் குறித்து கோட்பாட்டாக்கம் செய்துள்ளார். மனித வாழ்வு அம்மண நிலைக்கு (bare life) தள்ளப்படுவதை விளக்குகிறார். மனிதர்கள் பலி-மனிதர்களாக (Homosacre) மாற்றப்படுவதை விவரிக்கிறார். இங்கு குறிப்பாக 9 வயது ஆசிபாவை கோவிலில் பூட்டி வைத்து வன்கொடுமை செய்தது. டெல்லியில் அப்பாவி மக்களை கொன்று வெறியாட்டம் நிகழ்த்தியது ஆகியவற்றை சொல்லலாம். அடிப்படையில் வெறுப்பு, வன்மம், குரோதம் இவற்றின் மீது கட்டப்பட்ட ஒரு வெடித்து சிதறும் கன்னிவெடி புதைக்கப்பட்ட நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. காவி என்ற நிறம் ஆன்மீகத்தை குறிப்பதற்கு பதிலாக இந்தியர்களின் ரத்தத்தை குறிக்கும் நிறமாக மாற்றப்படுகிறது.
தமிழின் தொன் மரபுகளுடனான புரிதல் ஏதுமின்றி, லக்கான், பக்தின் போன்ற கோட்பாளர்கள் மொழி குறித்து பேசியவைகளை, இப்போது நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?
இக்கேள்வியில் ஒரு சிறிய குழப்பம் உள்ளது. “தமிழின் தொன் மரபுகளுடன் புரிதல் ஏதுமின்றி”என்ற வாக்கியம் யாரை குறித்தது என்பதே. லக்கான், பக்தினைக் குறித்ததா? அல்லது என்னைக் குறித்ததா? என்னைக் குறித்தது என்றால், அறிவியல் மாணவனான நான் தமிழின் தொன்மரபுகளை முறைசார் கல்வி வழிப்பெறவில்லை என்பது உண்மையே. ஆனால், லக்கான், பக்தின் போன்றவர்களை வாசித்தபின், தமிழின் தொன்மரபுகளை ஒரு புதிய புரிதலுடன் என்னால் வாசிக்கமுடிந்தது என்பதே உண்மை. தமிழவனைப் பின்பற்றி அமைப்பியல் அறிவுடன் 1994ல் தொல்காப்பியத்தை அதன் உரையாசிரியர்களுடன் தீவிரமாக வாசித்தேன். தொல்காப்பியம் எப்படி ஒரு தமிழகம் என்கிற மொழிசார் நிலத்தை கட்டமைத்தது என்பதை “மொழியும் நிலமும்”என்ற கட்டுரையில் எழுதினேன். அக்கட்டுரை பல்கலைக் கழக ஆய்வமாணவர்கள் பலரிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தற்போது பேராசிரியர்களாகிவிட்ட அந்த மாணவர்களே சுட்டிக் காட்டி பேசினர் நான் கலந்துகொண்ட ஒரு ஆய்வரங்கில். அதன்பின் சங்க அகநானூறு, புறநானூறு பாடல்கள் எப்படி பெண், ஆண் உடல் கட்டமைவுகளை காதல் எந்திரமாகவும், போர் எந்திரமாகவும் கட்டமைக்கிறது என்பதையும், அது உருவாக்கிய தமிழ் அகம் எப்படி காதல், வீரம் என்கிற உணர்வுப் புலங்களாக மாறியது என்பதையும் கட்டுரையாக எழுதியுள்ளேன். அது எனது “பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்”நூலில் உள்ளது. சமீபத்தில் கல்லூரிகளில் தொல்காப்பிய எச்சக் கோட்பாட்டை ழாக் தெரிதா என்கிற கட்டுடைப்பு முறையியலை உருவாக்கிய சிந்தனையாளரின் ‘trace’ என்கிற கருத்தாக்கத்தை வைத்து ஒரு கட்டுரை வாசித்தேன். ஒருவரது பேச்சில், பேசப்படாத, மௌனிக்கப்பட்டதின் எச்சமும், மிச்சமும் எப்படி உள்ளது? அதை எப்படி கண்டுபிடிப்பது? என்பதை தொல்காப்பிய 10-வகை எச்சங்கள் வழி காணமுடியும் என்பதை அறிமுகம் செய்யும் கட்டுரை. ஆக, சங்க தமிழ் தொன்மரபிற்கு என்னை நகர்த்தியது அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீன சிந்தனைகளும், சிந்தனையாளர்களுமே.
அடுத்து லக்கான், பக்தின் போன்றவர்களது சிந்தனைகளை புரிந்துகொள்ள தமிழின் தொன்மரபுகளின் பரிச்சயம் முன்நிபந்தனையல்ல. லக்கானை புரிந்துகொள்ள பிராய்டின் உளப்பகுப்பாய்வு மற்றும் சசூரின் அமைப்பு மொழியில் பரிச்சயம் அவசியம். பக்தினை புரிந்துகொள்ள ஓரளவு மாரக்சியம் மற்றும் ரஷ்ய உருவவியல் குறித்த பரிச்சயம் தேவை. ஆனால், அவர்களை ஆழ்ந்து வாசிப்பவர்கள், நமது தொன்மரபுடன் அவர்களை இணைத்து புரிந்துகொள்வதை நோக்கி நகர்த்தப்படுவோம். குறிப்பாக பக்தினின் மொழிதல் கோட்பாடு என்ற கருத்தாக்கம், தொல்காப்பிய செய்யுளியல் முன்வைக்கும் 32 உத்திகளில் கூற்று, முன்னம் போன்றவற்றுடன் இணைத்து வாசிக்க முடியும். ஒரு கூற்று அல்லது உரையாடல் நிகழ நிச்சயமாக மற்றொருவர் அவசியம். அவர் யதார்த்தத்தில் இல்லாதபோதும், அவர் இருப்பதான கற்பனையில் மட்டுமே கூற்று நிகழும் என்கிறார் பக்தின். அதனை ‘dailogical imagination’ என்கிறார். அதைதான் முன்னம் என்கிறது தொல்காப்பியம். பக்தினின் மொழிதல்கோட்பாடு இப்படியாக தமிழின் தொன்மரபுடன் இணைத்து வாசிக்கத்தக்கது. (இதனை விரிவாக தமிழவனின் மொழிதல் கோட்பாடு நூல் பேசுகிறது.) அதேபோல லக்கானின் ‘ஆப்த வாக்கியம்’ (இந்திய தத்துவ சிந்தனையில் ஒரு தத்துவக் கட்டமைப்பினை அடையாளப்படுத்தும் முக்கியமான வாக்கியத்தை ஆப்த வாக்கியம் என்பார்கள்) “மொழி நனவிலிபோல கட்டப்பட்டுள்ளது” (unconcious structured like a language) என்பதை தொல்காப்பிய மொழி குறித்த சிந்தனையுடன் இணைத்து, ஒரு சமூக அமைப்பை, ஒரு உடலின் நனவிலிக் கட்டமைப்பில் மொழியின் பங்கு குறித்து விரித்து வாசிக்கலாம். அதாவது நனவிலியின் செயல்பாடு மொழியின் குறித்தல் செயல்பாட்டைப்போல இயங்குவது எனலாம். அவரது குறிப்பான் சங்கிலி என்ற கருத்தாக்கம் தொல்காப்பியரின் “பொருட்குத் பொருட் தெரியின் அது வரம்பின்றே”என்றா வாய்ப்பாட்டுடன் (சூத்திரத்துடன்) இணைத்து வாசிக்கத் தக்கது.
அப்படியல்ல, அதாவது, லக்கான், பக்தின் இவர்களது மொழி குறித்த ஆய்வு, ஃப்ராய்டியச் சிந்தனை அடிப்படையிலானது என்றால், தமிழ் அதன் தொன்மை, எந்த மொழிக்கும் இல்லாத இலக்கணப் பாரம்பரியம் மேலும் தமிழ் இலக்கியங்களின் அறம் சார்ந்த சிந்தனைகள் இவற்றை மேற்கத்திய மொழி ஆய்வுக்கு எவ்வாறு ஒப்பிட்டுச் சொல்ல முடியும்? தமிழ் மொழி ஓர் அறம் சார்ந்த மொழி அல்லவா?
லக்கானின் ஆய்வு என்பது பிராய்டை மறுவாசிப்பு செய்வதில் துவங்கியது. அவர் சசூரின் மொழியியலை பிராய்டியத்தில் பயன்படுத்தி, மொழி உளவியல் பகுப்பாய்வு என்ற புதியதுறையை உருவாக்கியவர். அல்தூசர் மார்க்ஸை மறுவாசிப்பு செய்ததைப்போன்றது லக்கானின் பிராய்டிய வாசிப்பு. பக்தின் நேரடியாக மார்க்சியத்திலிருந்து விமர்சனபூர்வமாக வந்தவர். மார்க்சியத்தை மொழியியல் ஆய்விற்கு விரிவாக்கி வளப்படுத்தியவர். இதெல்லாம் மேற்கத்திய மொழி ஆய்வுடனான ஒப்பீடே அல்ல. நான் சொல்வது வலிந்தேற்றலாக இருக்கலாம், அது ஒரு சுற்று. அதாவது சசூர் பாணினியம் படித்தவர், அதில் ஆய்வு செய்தே முனைவர் பட்டம் பெற்றவர். பாரிசில் சமஸ்கிருதம் கற்பிக்ககூடிய மொழித்துறை ஆசிரியராக பணியாற்றியவர். அதனால் இந்திய மொழிகளோடு அவருக்கு ஆழ்ந்த தொடர்பு உண்டு. அவரது மொழி குறித்த அமைப்பியல் விதிகளே இன்றைய நவீன சிந்தனைகளின், குறியியலின் அடிப்படை. அதனால் அதெல்லாம் சமஸ்கிருத பாரம்பரியம் என்று கூறிவிட முடியுமா? ஒருவகையில் இந்திய சிந்தனை மரபு மேற்கத்திய மரபுடன் தொடர்பில் இருந்த ஒன்றே. பொதுவாக பண்பாடுகளுக்கிடையே கலப்பு ஏற்படுவது என்பது சமூக வளர்ச்சியோடும், அதன் உற்பத்திமுறைகள் சார்ந்தும் அமைவதே. அவ்வகையில் எல்லா பண்பாடுகளும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டவை. பிரச்சனை அவற்றை ஒப்பீடு செய்வதுதான். காரணம் ஒப்பீடு என்பது உயர்வு/தாழ்வு, வளர்ச்சி/வீழ்ச்சி நாகரீகம்/நாகரீகமற்றது என்கிற இருமை எதிர்வு சிந்தனை வழியாக நிகழ்கிறது. அது முழுமையாக மறுக்கப்பட வேண்டியது. அடுத்து தமிழ் தனித்தன்மையான மொழி என்பது போல உலகில் உள்ள அனைத்த மொழிகளும் தனித்தன்மை வாய்ந்ததே. எந்த மொழிக்கும் இல்லாத இலக்கணப் பாரம்பரியம் என்பதும் கூட மிகைக்கூற்றே. பாணினியத்துடன் உறவு கொண்டதாக அகத்தியமும், அதிலிருந்து கிளைத்ததே தொல்காப்பியமும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அகத்தியமே மூலம் அதிலிருந்து பானினியமும், தொல்காப்பியமும் வந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். பாணினியின் அஷ்டாத்யாயி வழியாகவே சசூர் போன்றவர்கள் தனது குறியியலைப் பெற்றிருக்கலாம். பாணினி அகத்தியித்திலிருந்து பெற்றிருக்கலாம். இது ஊகம்தான். மொழியியல் ஆய்வாளர்கள்தான் அதற்கு விடைகாண வேண்டும். வடமொழியையும், பாணினியத்தையும் ஒதுக்க முடியாது. ஆனால் அதை வைத்து அரசியல்செய்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தை ஒதுக்க வேண்டும். வடமொழி (சமஸ்கிருதத்தை) வைத்து இன்று முழு இந்தியாவிலும் பாசிசத்தை கட்டமைக்கும் இந்துத்துவ அரசியல் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே. மொழி பண்பாடு சார்ந்தது, ஆனால், மொழி உயர்வு என்பது அரசியல். சசூரின் மொழி குறித்த குறிப்பான், குறிப்பீடு என்ற அமைப்பு தொல்காப்பியத்தில் சொன்மை, பொருண்மை என்று உள்ளது. அதனால் சசூருக்கு முன்பே தொல்காப்பியம் சொல்லிவிட்டது என்று பெருமை அடித்துக்கொள்வதில் அர்த்தமில்லை. சசூரின் கோட்பாடுதான் தொல்காப்பியத்தில் அப்படி ஒரு அமைப்பு இருப்பதை கண்டுபிடிக்க உதவியது. தொல்காப்பியம் படித்த எந்த தமிழறிஞரும் சசூராக உருவாகவில்லை, உலக சிந்தனைதளத்தை மாற்றியமைக்கவும் இல்லை. தமிழ் மொழியை அறம் சார்ந்த மொழி என்றால், வடமொழி தர்மம் சார்ந்த மொழி என்பார்கள். மொழிக்கு அறம், தர்மம் போன்ற பண்புகள் கிடையாது. சமூகம்தான் அதற்கான உள்ளீடை தருகிறது. மொழி என்பது ஒழுங்கமைக்கபட்ட சப்தமே. எல்லா மொழிகளிலும் சப்தம் குறிப்பது வேறுவேறான அர்த்தம். தொல்காப்பியம்கூட எழுத்து (அட்சரம்), சொல் (சொற்கள்), பொருள் (அர்த்தம்) என்று படிப்படியாக ஒரு எழுத்தின் சப்தம், அதனை இணைக்க சொற்கள், அதற்கான அர்த்தம் வாக்கியம் வழியாக உருவாகுதல் என்ற அமைப்பை கொண்டிருக்கிறது. ஆகையால், எந்த மொழியும் மற்றொரு மொழியை ஆதிக்கம் செய்ய, தனது வரலாறை, சிறப்புத் தன்மையை பயன்படுத்த முனைவதும் பாசிசமே. எல்லா மொழிகளும் சமம் என்பதே. தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் உள்ளது. அதற்காக அது மட்டுமே உலகில் சிறந்தது என்றெல்லாம் நாம் பெருமிதம் பட்டுக்கொள்ள முடியாது. சான்றாக தமிழின் திணைக்கோட்பாடு ஒரு தனித்துவம் வாய்ந்தது. மற்ற எந்த மொழியிலும் இல்லாத ஒன்று என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதை வைத்து ஒரு சிந்தனை முறையை உலகிற்கு யாரும் எடுத்து செல்லவில்லையே?
நீங்கள் கூறுவதிலிருந்து தமிழின் தொன் மரபுகளிலேயே இத்தகைய நவீன சிந்தனைகள் பேசப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ளலாமா?
இல்லை அப்படி புரிந்துகொள்ள வேண்டியதில்லை. இப்படி நாம் பேசும்போது தமிழின் தொன்மரபை உச்சத்தில் வைத்து பேசுவதாக எண்ண வேண்டியதில்லை. நிகழ்கால அறிவுடன் தமிழ் தொன்மரபு விரித்து பொருளுரைப்பதற்கான உள்ளாற்றலை கொண்டுள்ளது என்றே பொருள் கொள்ளவேண்டும். அதைவிடுத்து தமிழில் எல்லாம் உள்ளது என்கிற ‘முன்தொன்றி மூத்தகுடி’ என்ற சிந்தனைக்கு போய்விடக்கூடாது என்ற எச்சரிக்கை அவசியம். ஏனென்றால் மனித சிந்தனை இரண்டு வடிவங்களை கொண்டது என்கிற உருவகம் ஒன்றை கூறுகிறார்கள் டெல்யுஸ்-கத்தாரி இரட்டையர்கள். ஒன்று ஆணிவேர்பாவிய மரச்சிந்தனை (ஆர்போரிக் தாட்) மற்றது சல்லி வேர்களாக பரவிய சல்லிவேர் அல்லது எலிவளை அல்லது இஞ்சித் தண்டு போன்று நிலையான வடிவமற்று கிளைக்கும் சிந்தனை (ரைசோமேட்டிக் தாட்). மரச்சிந்தனையே இன்றைய ஆதிக்க சிந்தனையாக உள்ளது. அது பாசிசத்திற்கு மனித குலத்தை இட்டு செல்லும். எந்த ஒன்றிற்கும் அதன் வேரை தேடிச்செல்லுதல். பல நூற்றாண்டாக வேர்விட்டு கிளைத்து வளர்ந்த உறுதியான மரம் என்று வரலாற்றை, தத்தவத்தை, வாழும் சமூகத்தை, இனத்தை என அனைத்தையும் பார்க்கும் சிந்தனை. இதுதான் சாராம்சமான இனவாதம், மதவாதம், மொழிவாதம் என்ற நிலைத்த அடையாளம் என்கிற சாராம்சவாத அரசியலுக்கும் அடிப்படையாக உள்ளது. இச்சிந்தனை படிநிலை தன்மைக் கொண்டு உயர்ந்தது, தாழ்ந்தது என்பதை நமது நனவிலிக்குள் கட்டமைத்து அதற்கான தன்னிலைகளாக நம்மை உருவாக்குகிறது. ஆனால் ரைசோமேட்டிக் என்பது ஏற்கனவே நான் சுட்டிய திரளுதல் (அசமப்லேஜ்) என்பதுடன் உறவுகொண்டு, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கே வேர்பரவி வளரும் தன்மைகொண்ட உயிர்ப்பான நிலை. இது அதிகாரப் பரவலாக்கம் கொண்ட, சிறு சிறு அமைப்புகளாக கிளைக்கும் படிநிலையற்ற சமத்துவநிலை. அதனால்தான் சிறுவாரியாதல் (becoming minor) என்பதே அவர்கள் முன்வைக்கும் இனவறைக்கான பாசிசத்தை எதிர்க்கும், பாசிசமற்ற வாழ்நிலையாகும். அதுவே இன்றைக்கான அரசியலாகவும் உள்ளது. இதனை வாழ்தல், உயிர்த்தல் என்கிற இருமை முரணாகக் கொண்டு ஒரு தத்துவார்த்த கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன் 90-களில். அக்கட்டுரை ஞானியின் நிகழ் இதழுக்கு அனுப்பி, அதை அவர் புரிவதில் சிக்கல் உள்ளது விரிவாக எழுதும்படி திருப்பி அனுப்பிவிட்டார். நமது சிந்திக்கும் முறையிலேயே இந்த சாராம்சவாத சிக்கல் உள்ளது என்பதால், தமிழின் தொன்மை என்பதை, பழமை என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது. தொன்மை என்பது பண்பாடு, பழமை என்பது வரலாறு. தொன்மை என்பதும் தற்கால அரசியல் சொல்லாடலில் கட்டமைக்கப்படும் ஒரு மரபுசார் கருத்தாக்கமே. இதையும்கூட செய்யுளியலில் தொல்காப்பியம் “மரபு”என்று ஒரு உத்தியாக முன்வைக்கிறது என்பதாக வாசிக்கலாம். மரபுகள் வாழும் சமூகத்தால் கண்டடையப்படுவதே ஒழியே, வாழ்ந்துபோன சமூகம் விட்டுவைத்திருப்பது அல்ல.
தமிழ் மரபு குறித்து பேசிவிட்டோம், அடுத்து தலித் சினிமா குறித்த கருத்துக்களை பேசலாம். காட்சிகளைக் களப்படுத்தும் திரைப்பட வடிவத்தில், தலித் அழகியலை முன்வைத்த படங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?
“தலித் சினிமா -அழகியல், அரசியல், அறவியல்”என்று எனது நூலில் இது குறித்து விரிவாக பேசியுள்ளேன். அதில் இந்திய சினிமாவின் பல மொழிகளில் வெளிவந்த தலித் சினிமாவின் அழகியல் குறித்து ஒரு உரையாடலை துவக்கியுள்ளதாக நம்புகிறேன். தமிழில் ‘பரியேறும் பெருமாள்’, ‘மனுசங்கடா’ தலித் வாழ்வியலை திரைஅழகியலுடன் வெளிப்படுத்திய படங்கள். மராட்டியில் வெளிவந்த ‘ஃபாண்ட்ரி’ (மராத்தி மொழியில் பன்றியைக் குறிக்கும் சொல் தமிழில் உள்ள பன்றி என்ற சொல்லே என்பது ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை), ‘சாய்ராட்’ தலித் சினிமா என்ற வகைத்திணையை உலகளவில் கொண்டு சேர்த்த முக்கியமான படங்கள். மையநீரோட்ட திரைப்படங்களை விஞ்சக்கூடிய அழகியலுடன் அதேசமயம் தலித் வாழ்வியலுடன் வெளிப்பட்ட படங்கள். அடிப்படையில் அழகியல் என்கிற கருத்தாக்கமே ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணோட்டத்தில் சிக்கலானது. காரணம் அழகியல் என்பதே ஒரு அதிகார ஒழுங்கமைப்பாக செயல்படுவதுதான். அது தூய்மை, புனிதம், நளினம், ஒழுங்கு போன்ற பாசிசம் சார்ந்த உணர்வுக் கூறுகளுடன் தொடர்புகொண்டது. இது குறித்து ‘அழகிய மையங்களும் ஆதிக்க விளிம்புகளும்’ என்று ஒரு கட்டுரை 90-களில் எழுதி அது பிரேம் நடத்திய அமீபா இதழிலும், பின்னால் எனது ‘மொழியும் நிலமும்’ நூலிலும் வெளிவந்தது. வாழ்வியலை பிரித்து அதன்மீது ரசனைவாதத்தை திணித்து, அழகியல் ஒரு ஆதிக்க மையமாக மாறிவிட்டதையும், அது விளிம்புநிலை வாழ்வியலை ஒடுக்குவதாகவும் பேசுகிறது அக்கட்டுரை. இன்று அழகியல் ஆதிக்க அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. அதிலிருந்து தலித் அறம்சார்ந்த ஒரு அழகியல் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதையே அந்நூலில் கூற முற்பட்டுள்ளேன். அந்நூலில் தலித் அழகியலுடன் தொடர்புடைய நிலம், வர்க்கம், சாதி, பண்பாடு, தொன்மம் வரலாறு என்கிற ஆறு காரணிகள் அடிப்படையில் தலித் அழகியலை பேசியுள்ளேன். கன்னட படமான ‘சோமனதுடி’, மலையாளப்படமான ‘பாப்லியோ புத்தா’ இரண்டும் நிலம் குறித்து வெளிவந்த மிக முக்கியமான படங்கள். ஒன்று காலனிய காலத்திலும், மற்றது தற்போதைய நவகாலனிய காலத்திலும் நடைபெறும் நில ஆக்ரமிப்பும், நிலமற்ற தலித் வாழ்வையும் பேசுபவை. பீஹாரைப் பின்புலமாகக் கொண்ட ‘தமுல்’ ஒரு அசலான வர்க்கப் பிரச்சனையை பேசும் படம். ஒரு தலித் சேரி எப்படி உயர்சாதி பிராமணர்களால் சூறையாடப்படுகிறது என்பதை சொல்கிறது. அதேபோல் வங்கமொழியில் வெளிவந்த ‘பார்’, வர்க்கப் பிரச்சனையால் நகரை நோக்கி துரத்தப்படும் தலித், தன்னை நகரில் இடப்படுத்திக் கொள்வதில் உள்ள பிரச்சனையை பேசுகிறது. தலித் அழகியல் என்பது அரசியல் மற்றும் அறவியல் சார்ந்த ஒன்றுதானே தவிர, முதலாளியம் முன்வைக்கும் ரசனைவாதம் சார்ந்த உயர்புருவ அழகியல் அல்ல. தலித்துகள் பிரச்சனை அழகியலைவிட வாழ்வியலை மையப்படுத்தியது என்பதே இன்றைக்கான அரசியல்.மற்றவர்களுக்கு அழிகியல் பிரச்சனை என்றால், தலித்துகளுக்கு வாழ்வியலே பிரச்சனையாக உள்ளது.
தலித் அல்லாதவர்களும், இன்று தலித் சார்ந்த படங்களை எடுக்கிறார்கள், பெரு வெற்றியும் பெறுகிறார்கள்; தலித் புனைவுகளை தலித்துகள்தான் எழுதவேண்டும் என்பதுபோல், தலித் சினிமாக்களை தலித்துகள்தான் எடுக்க வேண்டும் என நீங்கள் சொல்வீர்களா?
இது ஒரு சிக்கலான முற்றுப்பெறாமல் உரையாடலில் உள்ள ஒரு கேள்வி. இது தலித் என்கிற அடையாள அரசியலுடன் உறவு கொண்டது. தலித் என்ற சொல், தலித் இலக்கியம் ஆகியவற்றின் தோற்றம் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து ஒருவான ஒன்றே. குறிப்பாக அமெரிக்காவில் கருப்பின எழுச்சியாக உருவான பிளாக் பாந்தர் (கருஞ்சிறுத்தைகள்) என்ற அமைப்பை பார்த்து மராட்டியத்தில் 72-களில் உருவான தலித் பாந்தர் (தலித் சிறுத்தைகள்) தங்கள் அறிக்கையில் தலித் இலக்கியம் என்பது ஒரு தனித்த வகைத்திணை என்பதை முன்வைத்தார்கள். அதேபோன்று தலித் வாழ்வியலை வெளிப்படுத்தும் இலக்கிய சாட்சியம் என்ற ஒருவகை ‘டெஸ்டிமோனியல் லிட்ரேட்சர்’ (சாட்சிய இலக்கியம்) என்பது உருவாக ஆரம்பித்தது. அதன் வழியாக தலித் வாழ்வியலில் நிறைந்துள்ள அழகியல், அவர்கள்மீதான ஒடுக்குமுறையின் கொரூரங்கள், கொடூரங்கள் ஆகியவை வெளிப்பட்டன. அந்தவகையில் தலித் புனைவிலக்கியம் தலித்துகளால் எழுதப்படும்போது அதன் அச்சுஅசலான வாழ்வியல் வெளிப்படுகிறது என்பது ஏற்புடையதே. இதன் மறுதலையாக ஒரு தலித், தலித்தல்லாத ஒரு புனைவை ஏன் எழுத முடியாது? என்கிற கேள்வியும் உள்ளது. பொதுவாக இத்தகைய வாதங்கள் ஆசிரிய மையவாதம் சார்ந்த பழகிய இலக்கிய கோட்பாடுகளில் இருந்து வருகிறது. ஒரு புனைவோ, படைப்போ ஆசிரியனின் சொந்த அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. அதேசமயம் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் தலித்துகள் தங்களது புனைவுகளை முன்வைப்பதற்கான முன்னுரிமை பெற்றவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. சினிமாவைப் பொறுத்தவரை, தலித் சினிமாக்களை தலித் அல்லாத பல இயக்குநர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். எனது நூலில் அது குறித்த விரிவாக பேசப்பட்டள்ளது. அதனால், தலித் சினிமாக்கள் என்பது தலித் எடுக்கும் சினிமாக்கள் அல்ல, தலித் என்கிற அரசியலை, வாழ்வியலை, அறவியலை, அழகியலை முன்வைக்கும் சினிமாவே. ஒரு படைப்பை தீர்மானிப்பது அந்த படைப்புதானே ஒழிய அதன் ஆசிரியனோ, அவனது சமூகம் வழங்கியுள்ள அடையாளமோ அல்ல. அடிப்படையில் இன்றைய இந்தியாவில் மாற்றத்திற்கான, புரட்சிகரமான அரசியல் என்பது தலித்தாதல் (becoming dalit) என்பதே என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. அதனால் புனைவு, சினிமா அனைத்தும் தலித்தாதலுக்கானதாக இருக்க வேண்டும்.
இன்றைய தலித் சினிமாக்கள், தலித் சித்தாந்தந்தங்களை முன்மொழிகின்றனவா? இன்றைய தலித் சினிமாக்களைக் குறித்த உங்களின் கணிப்புகளும் அவதானிப்புகளும் என்னென்ன?
சித்தாந்தம் என்ற சொல் ஒரு மதப்பிரிவு சார்ந்த கலைச்சொல் என்ற அடிப்படையில் இதற்கு பயன்படுத்த முடியாது. காரணம் வேதாந்தம் என்பது வைணவநெறி, சித்தாந்தம் என்பது சைவநெறி. பொதுவாக தத்துவம் என்பது வாழ்வியல்நெறி என்றால், அரசியல் சார்ந்த ஒன்றை கருத்தியல் என்று குறிப்பதே நவீன சிந்தனையாக இருக்கமுடியும். தலித் அரசியலை, அறவியலை, அழகியலை, வாழ்வியலை, கருத்தியலை பேசும் சினிமாதான் தலித் சினிமா என்பதே எனது நூலின் அடிப்படை. ‘மாசன்’, ‘ஆர்ட்டிகல்-15’ போன்ற ஹிந்தி படங்கள் எல்லாம் தலித் அரசியலை முன்வைக்கும் சினிமாக்கள்தான். இன்று தலித் சினிமா என்பது ஒரு புதிய போக்கு. அதனைப் பயன்படுத்திக் கொண்டு மையநீரோட்ட சினிமாக்கள் தலித் அரசிலை பேசத் துவங்கியுள்ளன. சினிமா என்பது ஒரு அறிதல்முறை, தத்துவம் சார்ந்த ஒன்று, புலனியக்கத்தை மாற்றும் உடலரசியல் சார்ந்த ஒன்று என்பதாக சினிமா குறித்த நவீன கோட்பாடுகள் பேசுகின்றன. குறிப்பாக டெல்யுசின் சினிமா குறித்த நூல்கள் விவரிக்கின்றன. இதனை சினிமாத்துவம் (filmosphy) (சினிமா தத்துவம் Film Philosphy அல்ல)என்று டேனியல் பிராம்டன் போன்ற ஆய்வாளர்கள் குறிக்கிறார்கள். சினிமா வெறும் அரசியல் பிரச்சாரத்திற்கானது மட்டுமல்ல. காணும் உடலை காட்சி எந்திரமாக கட்டமைப்பது சினிமா. சினிமா குறித்து நான் எழுதிய 18 கட்டுரைகள் இந்தவகை புதிய பார்வையில் சினிமாவை அணுகக் கூடியவை. அவை தொகுத்து நூலாக வெளியிடும் எண்ணம் உள்ளது. இந்த ஆண்டு வாய்ப்பள்ளதா? எனப் பார்க்கலாம்.
உங்களுடைய சமீபத்திய புத்தகங்கள் குறித்து சொல்லுங்கள்…
இதுவரை 7 புத்தகங்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் 4 நூல்கள் வெளிவந்துள்ளது. மௌனி குறித்து நான் 90களில் எழுதிய கட்டுரைகளை விரிவுபடுத்தி, புதிதாக கோட்பாடு சார்ந்த கட்டுரை ஒன்றுடன் மௌனி குறித்த முழுத்தொகுப்பாக “மௌனியின் இலக்கியாண்மை”என்ற நூல் 2017-ல் நண்பர் எஸ். சண்முகத்தின் விரிவான முன்னுரையுடன் வெளிவந்தது. மௌனி என்பது மேலே நாம் பேசிய இலக்கிய அழகியலுடன் உறவுடைய ஒரு அரசியல் நிகழ்வு என்பதை பேசுவதே அந்நூல். தமிழ் இலக்கியச் சூழலில் பிராமண அழகியல் நவீனத்துவ இலக்கியமாக இங்கு மணிக்கொடி, எழுத்து இதழ்கள் வாயிலாக அறிமுகமாகி பரவலாக்கப்பட்டு, தமிழில் இலக்கியம் என்றால் அரசியல் பேசாத, அரசியலுக்கு அப்பாற்பட்ட தூய அழகியல் என்பதான ஒரு கருத்தியல் கட்டப்பட்டது. கம்யுனிச எதிர்ப்பு, மார்க்சிய நிராகரிப்பு, திராவிட எதிர்ப்பு, மக்கள் சார்ந்த வாழ்வியலை பேசாமை, தமிழின் தொன்மரபு நிராகரிப்பு, மத்தியதரவர்க்கம் சார்ந்த பிராமண வாழ்வியலை ஆதிக்க அழகியலாக கட்டமைத்தல் என்கிற நிகழ்வாக அது அமைந்தது. அதற்கான பீடமாக உருவாக்கப்பட்டவரே மௌனி என்பதை ‘கூறுகாண் வாசிப்பு’ (symphtomatic reading) செய்வதே அந்நூல். ஒரு இலக்கிய பிரதி பேசாமல் மௌனிக்கும் அதன் உள்முரண்களை வாசிப்பது. அது வெளிப்படுத்தும் சமூக மனநோய்க்குறிகளை வாசிப்பதே கூறுகாண் வாசிப்பு. அதன்பின் எனது 2010-ல் வெளியான “நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள்”என்ற நூலிற்கு பின் எழுதிய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக 2018ல் ஆசிரியர் தமிழவன் அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்ததே “பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்”தொகுப்பு. அதில் கதைகள், கவிதைகள், கோட்பாடுகள் சார்ந்த 18 கட்டுரைகள் உள்ளது. தமிழ் கவிதையியல் (tamil poetics) பற்றியும், தமிழில் வெளிவந்த நாவல்கள் குறித்த கதையியல், அரசியல், உடலரசியல் சார்ந்த ஆய்வுகள், வாசிப்பின் அரசியல், புதவரலாற்றுவாதம், புத்தகம், பதிப்பகங்களின் அரசியல் என தமிழ் இலக்கிய அறிவுருவாக்கம் குறித்த கட்டுரைகள் அவை. 2019ல் நண்பர் நிழல் திருநாவுக்கரசு அவர்கள் தலித் சினிமா விழா ஒன்றிற்கு ஒரு விளக்க குறிப்பு எழுதி தரும்படி கேட்க, அது விரிவான நூலாக மாறியதே “தலித் சினிமா அழகியல் அரசியல் அறவியல்”என்ற நூல். இயக்குநர் பா. இரஞ்சித் அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்தது. அது குறித்து ஏற்கனவே கூறினேன். தற்போது வெளியாகியுள்ள நூல் “உடலரசியல்”. இது கடந்த 30 (1990-2019) ஆண்டுகளாக எனது தேடலின், வாசிப்பின் விளைவாக உருவான உடலரசியல் சார்ந்த சிந்தனைகளின் தொகுப்பு. மேலே நான் சுட்டிக்காட்டியதைப்போல தமிழில் உடலரசியல் குறித்து உள்ள தவறான புரிதல்கள், பஸ்வேர்ட் (buzzword) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அப்படியான ஒரு நீர்த்த சொல்லாடலாக பாவிக்கப்பட்ட உடலரசியல் என்ற சொல்லை அதன் அரசியல், வரலாறு, தத்துவம், அறிவியல் தளத்திலான விரிவான ஆய்வே அந்நூல். ரிக்வேத புருஷசூக்தம் துவங்கி தற்கால இணையவழி டிக்டாக் வரை உருவான சமூவியல் சார்ந்த வினைகள் ஒரு உடலை எப்படி கட்டமைக்கின்றன என்பது குறித்த அரசியலே அந்நூல். ஏற்கனவே சுட்டியதைப்போல சினிமா குறித்த ஒரு நூலும், இந்தியாவில் குடியாண்மை சமூகம் எப்படி இந்துத்துவ நுண்பாசிசத்தால் கட்டமைக்கப்படுகிறது என்று ஒரு நூலும் தயாரிப்பில் உள்ளது. தற்போதைய பதிப்பு சூழலையும், வாசகபலத்தையும் மனதில் வைத்து கிண்டில் போன்ற இணைய நூலாக வெளியிடலாமா? என்ற யோசனையில் உள்ளேன்.
இன்றைய பல்கலைக் கழகங்களும் தமிழ்த் துறையினரும், மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் ஏதேனும் செய்கிறார்களா?
பல்கலைக்கழகம் ஒரு சமூகத்தின் அறிவுருவாக்க மையம். அதனால்தான் இந்தியாவில் தட்சசீலம், நாளந்தா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் அந்தக்கால அரசுகளால் நிறுவப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டன. காரணம் ஒரு சமூகத்தில் வாழும் மக்கள் அந்த சமூகத்தை புரிந்துகொள்ள மொழிவழியிலான அறிவுருவாக்கம் முக்கிய காரணியாகிறது. ஒரு குறிப்பிட்ட சொல்லாடல்புலம் வழியாகவே அச்சமூகத்தின் அறிதல்புலன் கட்டமைக்கப்படுகிறது. அதனால்தான் நூல்கள், அறிவுஜீவிகள், பல்கலைக்கழகம், ஆய்வுப்புலம் உள்ளிட்டவை எப்பொழுதும் அதிகாரத்துடன், ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமாக உள்ளது. தற்போது இந்திய அறிவுப்புலம் இந்துத்துவா என்கிற சொல்லாடல்வழி இந்திய மக்களை தங்களது பாசிசத்திற்கு தயார்படுத்திக் கொண்டுள்ளது. அதை எதிர்ப்பதற்கான ஒரு எதிர் சொல்லாடல் புலத்தை, பொதுபுத்திக்கு எதிரான விமர்சன சிந்தனையை உருவாக்குவதில் பல்கலைக்கழகம், அறிவுஜீவிகள், நூல்களின், இலக்கியங்களின் பங்கு முக்கியமானது. தற்போதைய தமிழ்துறையில் அதற்கான முயற்சிகள் அரிதாகவே உள்ளது. அதனால்தான் நாங்கள், நாங்கள் என்றால் குறிப்பாக தமிழவன், சிவசு, எம்டிஎம், பிரேம், எஸ். சண்முகம் உள்ளிட்டவர்கள், தொடர்ந்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள் மத்தியில் நவீன சிந்தனைகளை கொண்டுபோவதில் கவனம் செலுத்த முனைகிறோம். 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பல தமிழ் ஆய்வறிஞர்கள்தான் தமிழ் என்ற மொழியை வளமிக்கதாக, பல்துறைசார்ந்த ஆய்வுகள் வழியாக வெளிப்படுத்தினார்கள். அவ்வரலாறு தெ.போ.மீ. துவங்கி தற்போதைய தி.சு. நடராசன், ந. முத்துமோகன், இ. முத்தையா, கா. பஞ்சாங்கம், அரங்க. நலங்கிள்ளி, பக்தவச்சல பாரதி, தி.கு. ரவிச்சந்திரன், க. ஜவகர் வரையில் தொடர்கிறது. பல்கலைக் கழக ஆய்வுகளை வாசிப்பதை ஒரு பாவச்செயலாக மாற்றியதில் தமிழ் சிறுபத்திரிக்கை சார்ந்த பிராமணிய கலைக் கோட்பாட்டிற்கு ஒரு பங்கு உண்டு. திராவிட கருத்தியலான தமிழை எதிர்கொள்ள அவர்கள் பல்கலைக்கழக ஆய்வாளர்களையே புறக்கணிப்பது என்ற நிலையை எடுத்தார்கள். மற்றொருபுறம் பல்கலைக்கழக ஆய்வுகள் திராவிட இயக்க அரசியல் சீரழிவின் ஒரு பகுதியாக மாறியது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பல தமிழாசிரியர்கள் திராவிட இயக்க அரசியல் பின்புலத்தில் பல்கலைக்கழக ஆய்வை தேய்வழக்கான ஆய்வுகளாக மாற்றினார்கள். அது ஒரு பண்பாட்டு அரசியல்.உண்மையில் இடைக்காலத்தைவிட தற்போது ஒரு புதிய தலைமுறை ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்துவதைக் காணமுடிகிறது. குறிப்பாக பல்கலைக்கழக புலங்களிலிருந்து வரும் ‘சிற்றேடு’, ‘பெயல்’, ‘பிறழ்’ போன்ற இதழ்கள் நவீன சிந்தனைகளுடன் தமிழின் தொன்மரபு இலக்கியங்களை ஆய்கின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்கலைக்கழகங்களும், அதற்கு வெளியில் உள்ள அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள் இணைய சந்திப்புகள் வழியாக பல அரங்குகளை நடத்திவருவதைக் காணமுடிகிறது. அதில் பாதிக்குமேல் சம்பிரதாய சந்திப்புகள் என்றாலும், பல பயனுள்ள சந்திப்புகளும் நிகழ்த்தப்படுகின்றன என்பதை மறுக்கமுடியாது.
மொழி குறித்த சர்ச்சை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது; எந்த ஒரு கலந்தாலோசனையுமின்றி, ஒரு எதேச்சதிகாரப் போக்குடன் இன்றைய அரசு நடந்துகொள்வதை எப்படி அணுகுகிறீர்கள்?
ஆம். மொழி ஒரு பரிமாற்றுக்கருவி, வேலைவாய்ப்பிற்கான ஊடகம் என்பதான மரபான கருத்துக்களில் இருந்து இந்த பிரச்சனைகளை அணுகக்கூடாது. மொழி ஒரு இனமனிதனை உருவாக்கும் காரணி. அடிப்படையில் மொழித்திணிப்பு இன ஆதிக்கப் போக்கு மட்டுமல்ல, இனத்தையே மறுகட்டமைப்பு செய்யும் போக்கு. அவ்வகையில் மொழித்திணிப்பு இந்துத்துவ பெருந்தேசிய பாசிசத்தின் ஒரு அவசிய, அவசர நடவடிக்கை. அல்லது மார்க்சியம் கூறும் ஒற்றை சந்தைக்கான முயற்சி என்றளவில்கூட இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. தேசிய முதாலாளியத்தை ஒழித்து, பெருந்தேசிய முதலாளியத்தை வளர்ப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமின்றி, தனித்த இனங்களை அழித்து ஒரு பேரினமாக கட்டும் முயற்சியும் உள்ளது. இந்தியா ஒரு பல்தேசிய புவிப்பரப்பு என்கிற யதார்த்தத்தை தங்கள் இந்துத்துவ கருத்தியல் வழி அழிக்க முயல்கிறார்கள். அதற்கான முன்முயற்சிகளே இவை. பூர்வீக நிலமற்ற ஒரு கும்பல், பூர்வக் குடிகளை அழிப்பதுதானே அரசியல். மற்றொரு பக்கம், அவர்கள் வட இந்திய வாக்கு வங்கி மட்டுமே போதும் என்கிற பாரளுமன்ற முறையில் உள்ள எண்ணிக்கை சிக்கல் இது. இங்கு ஒரு கூட்டாச்சிமுறை அவசியம் என்பதும் ஒவ்வொரு மாநிலத்திலும் உறுப்பினர் பலம் ஒரு குறைந்தபட்ச நிபந்தனை ஆட்சியமைக்க என்பதுபோன்ற ஒரு முறை இல்லை. நாம் கூட்டாச்சி சிந்தனையை நோக்கி நகர வேண்டும் என்கிற அண்ணா முன்வைத்த கருத்தாக்கம் இன்று முக்கியமானது. அதுவே ஏகாதிபத்திய வேட்டைக்காடாக மாறும் இந்தியாவை காப்பாற்றுவதற்கு ஒரே வழி. இல்லாவிட்டால் இந்தியா ஒரு பேரழிவை சந்திப்பது தவிர்க்கமுடியாதது.
சமீப காலங்களில், வட இந்தியர்கள் நமது தட்டுகளில் கை வைப்பதைப்போல உணருகிறீர்களா?
அவர்கள் கை மட்டும் வைக்கவில்லை, நமது தட்டையே பிடுங்கிகொண்டு நம்மை ஓட்டாண்டியாக மாற்ற முயலுகிறார்கள். உதாரணம் ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் வழியாக நமது உயர்கல்வியை அபகரிப்பது, அடிப்படை சமூக கட்டுமானம் நிறைந்த தமிழ் நாட்டு மூலவளங்கள் ஆகியவற்றை சூறையாடுவது, அவர்கள் நம்மை கீழே தள்ளிவிட்டு எல்லாவற்றையும் கையில் எடுக்க முயலுகிறார்கள். இது வெறும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனை அல்ல. மாறாக, நமது உரிமை சாரந்த பிரச்சனை. புலம்பெயர்தலைதல் என்பது இன்று உலகளாவிய பிரச்சனை. புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த பல புள்ளிவிபரங்கள் உள்ளன. குறிப்பாக குஜராத், உபி, பிஹார், ராஜஸ்தான் ஆகிய நான்கு இநதிபேசும் மாநில தொழிலாளர்களே புலம்பெயர் தொழிலாளர்களாக இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பரவியுள்ளனர். அவர்களுக்கென்று தனியான அமைச்சகம் உள்ளது. அப்படி ஒன்று உள்ளது என்பதே தற்போது நிகழ்ந்த மிகப்பெரிய புலம்பெயர்ந்து நடந்தே சென்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களால் மட்டுமே அறியமுடிந்தது. புலம்பெயர்தல் மட்டுமல்ல புலம்பெயர்த்தல் முடியாச்சி காலந்துவங்கி, காலனிய காலத்தில் நியமமாக்கப்பட்டு, இன்று அது வளர்ச்சி என்ற பெயரில் கட்டாயமாக மாறியுள்ளது. உலகமயமாதலின் ஒரு விளைவு என்பதோடு இதன் பக்கவிளைவு முகாம் என்கிற அமைப்பாக உலகை மாற்றியமைப்பதாக உள்ளது. வட இந்திய தொழிலாளர்களின் பிரச்சனையை ஒரு வர்க்கப் பிரச்சனையாக அணுக வேண்டும். ஆனால் தற்போதைய அரசியலில் அது ஒரு மொழிசார்ந்த. இனம் சார்ந்த பிரச்சனையாக மாற்றப்படுகிறது. வடமாநிலங்களின் வறுமை, வேலையின்மை என்கிற அரசின் மக்கள் நலனில் அக்கறையற்ற மதவேறிப்போக்கிற்கு எதிராக அங்குள்ள தொழிலாளர்கள் திரும்பிவிடாமல் பாதுகாக்க, அவர்களை மாநிலங்களுக்கு புலம்பெயர வைக்கிறது. மற்றொருபுறம் இந்திய பெருந்தேசிய பாசிச இந்துத்துவ அரசானது, இந்தியாவில் இதனை ஒருவகை குடியேற்றமாக மாற்ற முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, அடுத்து ஒரே வாக்காளர் அட்டை என்ற நகர்த்தி இந்தியா முழுவதும் பெருந்தேசியத்தின் குடியேற்றமாக மாற்றி, இதர தேசிய இனங்களை சிறுபான்மையாக்க முயல்கிறது. இது மிகவும் ஆபத்தானதொரு போக்கு. ஒவ்வொரு மாநிலமும் தனது உரிமைகளை இழந்துகொண்டுள்ளது. மற்றொருபுறம் தனியார்மயமாகி, சில குடும்பங்களின் கீழ் மொத்த இந்தியாவும் போகப்போகிறது.
இன்றைய காலகட்டத்தில், தமிழ் இலக்கிய வாதிகளும் சிந்தனையாளர்களும் முன்னெடுக்க வேண்டிய (அரசியல்) நடவடிக்கைகள் அல்லது வளர்ந்துவரும் அரசு பாசிசத்திற்கு எதிராக செயலாற்ற வேண்டிய வேலைகள் என்னவாக இருக்கின்றன?
இன்றைய காலகட்டம் மிகவும் கடினமானதொரு காலகட்டம். தற்போதுதான் இலக்கியவாதிகளும் சிந்தனையாளர்களும் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. முதலில் பெரும்பாண்மை, சிறுபாண்மை என்ற சொல்லாடல்களை விடுத்து, பாசிச எதிர்ப்பு என்பதை மையப்படுத்த வேண்டும். பாசிசம் என்பதே ஒரு சிறுபாண்மை முதலாளியக் கும்பல் அல்லது குடும்பத்தின்கீழ் ஒட்டுமொத்த அதிகாரமும் செல்வதே. முதலாளியம் தனக்குள் எற்படும் முரண்களை தீர்க்க, தனது அமைப்பிற்குள்ளேயே ஒரு எதேச்சதிகார சக்தியாக வளர்வதற்கு அது அரசை எதேச்சதிகாரத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. இதைதான் இத்தாலிய நாசிசத்திலும், ஜெர்மானிய பாசிசத்திலும் பார்த்தோம். அதனால், இன்று அந்த எதேச்சதிகாரக் கும்பல் பரந்துபட்ட மக்களுக்கு குறிப்பாக பெரும்பாண்மை என்று பெருமிதம் ஏற்றப்பட்ட மக்களுக்கும் எதிரானது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஜெர்மானிய இனவெறி பாசிசம், யூதர்களைக் கொன்றதைவிட, ஜெர்மானிய மக்களை பலியிட்டதே அதிகம் என்பதே வரலாறு. போர்வெறியில் ‘சுத்த ஆரிய ரத்தம்’ என்ற பெயரில் எண்ணற்ற ஜெர்மானியர்களை காவுகொடுத்தது. சிறுபான்மை முஸ்லிம், கிறித்துவர்களை எதிரிகளாக காட்டி பெரும்பாண்மை மக்களை பலியிடுவதற்கான தயாரிப்பே இந்துத்துவ மதவெறி பாசிசம் என்பதை பரந்துபட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உண்மையான இந்துமதக் காவலர்கள் என்ற பொய்வேடத்தில், ஒருகுறிப்பிட்ட குழுவினர் சுரண்டிக் கொழிக்க பரந்துபட்ட மக்களை பலியிடப் போகிறார்கள் என்பதே யதார்த்தம். இன்று அனைத்து அறிவுக்களமும் இந்துமதம் என்பதும். இந்துத்துவாவும் ஒன்றல்ல என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். சாவர்க்கர், ஹெட்கேவர், கோல்வால்கர் முன்வைத்த இந்துத்துவ கருத்தியலை உள்வாங்கி, பார்ப்பன – பனியா பாசிசக் கும்பல், உலக முதலாண்மை (கார்பரெட்) சக்திகளிடம் நாட்டை அடகு வைப்பதே நடக்கிறது. உண்மையில் சுதேசியம் என்பது விதேசியமாக ஆக்கப்பட்டு இந்திய மக்கள் பரதேசியாக மாற்றப்படும் நாளை நோக்கி இன்றைய அரசியல் நகர்கிறது என்பதை அம்பலப்படுத்துவதே இலக்கிய, அறிவுப்புலத்தின் வேலைத்திட்டமாக இருக்க வேண்டும்.
இலக்கியத்தில் அரசியல் வருவது பிரச்சாரம் என்று ஒருசாரார் ஒதுக்குகிறார்கள் நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?
மேலே இதற்கு வெவ்வேறு கோணத்தில் பதில் சொல்லப்பட்டள்ளது என்றாலும், இது ஒரு தீராத சிக்கலாக தமிழ் சூழலில் ஒரு இலக்கிய கொள்கையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நான் அடிக்கடி பல மேடைகளில், கட்டுரைகளில் பேசிய ஒன்றுதான், 17-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உலகப்பார்வை என்பது அரசியல் என்கிற சொல்லாடல் வழியாகவே கட்டப்பட்டுள்ளது. முதலாளியம் மதங்களை அரசியலால் மாற்றீடு செய்துவிட்டது. அதனால் அரசியல் இல்லாத எந்த ஒன்றும் தற்காலத்தில் சாத்தியமில்லை. ஆன்மீகமே அரசியலால்தான் வெளிப்பாடு கொள்கிறது எனும்போது, இதுபோன்ற பிரச்சாரம், ஆச்சாரம் என்றெல்லாம் இலக்கியத்தைப் பற்றி பேசுவது பெரும் அபச்சாரம். பிரச்சாரம் என்ற ஒன்று தனியாக இருப்பதான பாவனை இதில் உள்ளதை கவனித்து பார்த்தால் புரியும். எது பிரச்சாரம். கலை என்று இவர்கள் கூறுவதன் பின் ஒரு அரசியல் உள்ளது. அது அரசியலை மறுப்பதன் வழியாக உன்னத, புனித, தூய கலை என்கிற முதலாளியத்திற்கு முந்தைய மதவாத கண்ணோட்டத்தில், முதலாளிய சுரண்டலை மறைப்பதே. முதலாளியம் மார்க்ஸ் கூறியதைப்போல புற உலகை நுகர்விற்கான பண்டங்கள் குவிக்கப்பட்ட சந்தையாக மாற்றிவிட்டது. அதன் மொழியில் உலகம், கலை, இலக்கியம், உணர்வுகள், மனிதம், அறிவு, ஆண், பெண் உள்ளிட்ட அனைத்தும் பண்டங்களாக மாற்றப்பட்டுவிட்டது. கம்யுனிஸ்ட் அறிக்கை அதைதான் முன்வைக்கிறது. முதலாளியம் உலகை அரசியலாக மாற்றிவிட்டது என்பதையும் அதை எதிர்கொள்வதற்கான அரசியலுமே அந்த அறிக்கையில் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆக கலை என்ற பெயரில் இலக்கியத்தை அரசியலற்றதாக வெளிப்படுத்துவது என்பது ஒருவகை ஆதிக்க வர்க்கத்தின் குரலே. ஒரு இலக்கியத்தில் கருத்து துருத்திக் கொண்டிருந்தால் பிரச்சாரம். கருத்தியலுக்காக இலக்கியம் படைத்தால் பிரச்சாரம் என்பவர்கள் எனது மௌனி குறித்த ஆய்வுநூலை அவசியம் வாசிக்க வேண்டும். அதில் மௌனியின் கலை எந்த அளவிற்கு திராவிட எதிர்ப்பு காரநெடி வீசம் அரசியல் பிரச்சாரமாக உள்ளது என்பதை வெளிப்படுத்திக் காட்டியுள்ளேன். முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவரும், தமிழ் சிறுகதை எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன் தொலைபேசியில் மெளனி நூல் குறித்து பேசினார். மௌனியை, அவரது அரசியலை புரிந்துகொள்ளவும் இந்நூல் உதவியதாகக் கூறினார். அந்த திறனாய்வுமுறையே புதிதாகவும், வித்தியாசமாகவும் இருந்தது என்றார். ஒரு எழுத்தாளானக எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தை தந்தது அவரது பேச்சு. ஆகையினால், கலை என்பது அரசியலற்று இருக்க வேண்டும் என்பவர்கள், அரசியலையே ஒரு கலையாக நிகழ்த்தும் பாசிசவாதிகளை பற்றி என்ன கூறுவார்கள்? இலக்கியம், அரசியல் என்கிற பிரிவினை எல்லாம் ஒழிந்துவிட்டது. இலக்கியத்தால் அரசியல் அதிகாரம் பெறலாம், அரசியலால் இலக்கிய அதிகாரத்தையும் பெறலாம்.
l