முனைவர் து.ரவிக்குமார் எம்.பி
மின் கம்பத்திலிருந்து
காக்கை உருவில் கரைந்து கரைந்து
அழைத்தது மரணம்
‘என்னை நினைவுகூர
எந்தத் தடயமும் இருக்கக்கூடாது
அவற்றையெல்லாம் அழித்துவிட்டு
அழைத்துப்போ’ என்றேன்
எங்கெங்கே இருக்கும்?
என்றென்னைக் கேட்டது
படித்த புத்தகங்களில் இருக்கும்
பார்த்த மலர்களில் இருக்கும்
குளித்த நதிகளில் இருக்கும்
கொஞ்சிய குழந்தைகளில் இருக்கும்
நடந்த வழிகளில் இருக்கும்
நனைந்த மழையினில் இருக்கும்
கடற்கரையில்
புல்வெளியில்
பாதையோர மரநிழலில்
கண்ணீரில்
புன்னகையில்
காற்றில்லா நடுப்பகலில்
எல்லாவற்றிலுமே
இருக்கும் என் தடயம் என்றேன்
உன்னை நினைவுகூர்வார்
யாருளர்? என்றது
ஒருத்தர் பெயரும் தோன்றாது திகைத்தேன்
பறந்து வந்தென்
தோளில் அமர்ந்தது
நத்தையைப்போல்
ஊர்ந்து வருகிறது
இரவு
இரையை நெருங்கும்
பல்லியைப்போல
தெரு விளக்கின் வெளிச்சத்துக்கு ஒதுங்கி
பாதையோரப் புதர்களின் ஊடாக
பதுங்கிப் பதுங்கி வருகிறது
யாசகனாய் வாசலில் நிற்கிறது
பரங்கிக்கொடிபோல் தரையில் படர்கிறது
பெருமழைக் காலத்துச் சுவர்களின்
ஈரமாய்
வீடெங்கும் கசிகிறது
கவனிக்கும்
ஒவ்வொரு மனத்தையும்
குகையாக மாற்றி அடைந்துகொள்ளும் இரவின்
சூழ்ச்சி அறிவேன்
எனினும்
குழந்தையைத் தேடும் தாயென
பதற்றத்தோடு
ஜன்னல் திரை விலக்கிப் பார்க்கும்
காற்றோடு பேசவோ;
கைவிடப்பட்ட மூதாட்டியாய்
பெருமூச்செறியும் அரச மரத்துக்கு
ஆறுதல்கூறவோ;
நாயின் அழுகைக்கும் துயரச்செய்திக்கும்
தொடர்பில்லையென்று மனம் தேறவோ
தெம்பில்லை எனக்கு
கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட
கைதி நான்
இரவே வா
எடுத்துக்கொள் என்னை