ஸ்ரீதர் மணியன்
நொடிதோறும் நிகழும் எண்ணற்ற கதைக் கண புள்ளிகளுக்கிடையில் நல்ல கதைகளைக் அடையாளம் காணும் நுண்ணோக்குப் பார்வை அவரிடம் உள்ளது. நல்ல படைப்பு என்பது எப்போதும் குறிப்பால் உணர்த்தும் ஆற்றல் நிறைந்தது. (முன்னுரையில் பாவண்ணன்).
சந்தியூர் கோவிந்தன் பல முகங்கள் கொண்டு ஓசையெழுப்பாது இயங்கி வருபவர். தூறல் சிற்றிதழின் ஆசிரியர். கல்வெட்டு ஆராய்ச்சியாளர். உலகு காணொளி காணாத நாட்களில் வானொலி வரை தனது படைப்புகள் வாயிலாக பரிச்சயப்பட்டவர். கொங்கு பகுதி படைப்பாளிகளின் வரிசையில் சந்தியூர் கோவிந்தன் தன்னை இணைத்துக் கொண்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் அவரது கதைத்தொகுப்பு தற்போதுதான் நூலாக உருப்பெற்றுள்ளது. மண் மணம் வீசும் கதைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். இலக்கிய தளத்தில் பல தமிழ் எழுத்தாளர்ளிடையே ஆழ்ந்த, தனித்த நட்புக் கொண்டிருப்பினும் அதனை வெளிப்படையாய் கூறத்தயங்கும் பண்பு கொண்டவர்.
இவரது ‘தாத்தாவின் ஞாபகம் என்ற சிறுகதைத் தொகுப்பில் 14‘ கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என காந்தியடிகளின் கூற்று. இருப்பினும், இன்றைய நிலையில் கிராமங்களே அருகிவருகின்றன, தேய்ந்து வருகின்றன எனில் மிகையாகாது. இவ்வாறான சூழலில் இத்தகைய கிராமங்களைக் களமாகக் கொண்ட புனைவுகளும் அருகிவருகின்றன. பல்வேறு ‘இஸங்கள்‘ கால நடைமுறைக்கேற்ப, சமூக மாற்றங்களுக்கேற்ப, படைப்பாளிகளின் திறமைக்கேற்ப உருவாகிவிட்டன. இலக்கியத்தின் ஓட்டத்தினை வரையறைகள் கொண்டு குறுகிய தளத்தில் அடக்கவியலாது. இருப்பினும், சந்தியூர் கோவிந்தன் இத்தகைய படைப்புகளின் ஊடாக மண்ணின் மைந்தர்கள் குறித்த சிறுகதைகளை எழுதியுள்ளது வாசகர்களுக்கு ஒரு மாற்றாக அமைகிறது.
வாய்மொழிக் கதைகள் மிகுந்த சுவாரசியத்தையும், கிளர்ச்சியினையும் ஒருங்கே அளிப்பவை. அவைகளுக்கு எவ்வித இலக்கணமும் தேவைப்படுவதில்லை. அவைகளுக்கு வரையறைகளும் கிடையா. கடுகளவு பேசுபொருள் கிடைப்பின் அவை புறணி பேசுவோரின் கற்பனைக்கேற்ப பரந்து விரிபவை. ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள், முதியோர்கள் என எல்லாப் பிரிவினருக்குமான கதைகள் அவர்களிடையே கொட்டிக்கிடக்கின்றன. இத்தகைய சின்னஞ்சிறிய கிராமங்களின் மண்ணில் உலவித் திரியும் கல்கட்டுபவர். கிணற்றில் தூர் எடுப்பவர். கூத்துக் கலைஞர்கள், கணவனால் அபலைகளாக்கப்பட்ட பெண்கள் என எண்ணற்ற கதாபாத்திரங்கள் உலவுகின்றனர். இவர்களையே சந்தியூரார் தனது படைப்பாக்குகிறார்.
அத்துடன், வாசகர்களையும் அதனில் மூழ்கிப் போகச் செய்கிறார். வெற்றி பெற்றோரிடம் வரலாறு கிடைக்கும். விளிம்பு நிலை மக்களிடையே ஆழமான, உயிரோட்டமிக்க கதைகள் மறைந்திருக்கும் துயரத்தின் சாயலினைக் கொண்ட கதைகள் மனிதர்களை, வாசகனை ஈர்ப்பவை. இவரது ‘பாட்டுச் சத்தம்’ எனும் சிறுகதையில் அருகிவரும் நாட்டுப்புறக் கலையான தெருக்கூத்து உயிர் பெறுகிறது. கூத்து நடக்கும் களம், அதற்கான ஆயத்தங்கள் இவ்வாறாக அது விரிகிறது. இதன் உள்ளூடாக பல ஆண்டுக்கு முன் காணாமல் போன, தனது மகனின் முகத்தை, பிம்பத்தினை கூத்தில் பாடும் குரலில் காண முற்படும் தாயின் அவலத்தையும், அவளது ஏக்கப் பெருமூச்சினையும் உணர முடிகிறது..
‘அநாதையாய்க் கிடந்த டைரியிலிருந்து’ சிறுகதை புதுமையான உத்தியில் கையாளப்படுகிறது. வழமையான நேர்கோட்டுக் கதைகளை வாசித்து வருவோருக்கு இஃது மாற்றாக அமைகிறது. அதன் ஒரு பகுதியில் பெண் பார்க்கும் படலத்தில் ஆண் எத்தகைய நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் என்பதைப் படைப்பாளி பட்டியலிட்டு விளக்குகிறார். அப்பகுதி அழகான ஒரு கவிதையோடு நிறைவுறுகிறது. இறுதிப் பகுதியிலும் மகுடேஸ்வரனின் கவிதையுடன் கதையினை நிறைவாக்குகிறார்.
‘விடியற்காலை’ சிறுகதை மனநிலை பிறழ்ந்தவர்களைப் பற்றிக் பேசுகிறது. நாம் கேலிப் புன்னகைகளோடு, அலட்சியமாகக் கடந்து செல்லும் அவர்களைப் பற்றிய விவரங்கள் மலைப்பூட்டுகின்றன. அவர்களைப் பற்றி, அவர்களது அன்றாட நடவடிக்கைகள், குறிப்பாக அவர்களது செய்கைகள் சிறப்பாக விவரிக்கப்படுகின்றன. சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் நல்ல பொழுதுபோக்காக மட்டுமே அமைகின்றனர். வாய்வழிச் செய்தியாக, லாரியில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போன மனநிலை பிறழ்ந்த ஒரு பெண்ணின் மரணம் ஆழான சிறுகதையாக உருப்பெறுகிறது. கதையின் இறுதி வாக்கியம் வாசகனுக்கு அதிர்ச்சியளிப்பதுடன், சமுதாயத்தின், போக்கிற்கு மட்டுமல்லாது, ஆண் வர்க்கத்தின் வக்கிரப் போக்கிற்கும் சூடு கொடுக்கிறது.
‘அம்மாசி சொன்ன கதை’ எளிய மனிதனின் கதை. ஆசிரியர் இச்சிறுகதையில், வெறும் கல் என அலட்சியம் செய்து கடக்கும் கற்களின் வகைமைகளை விளக்குகிறார். கற்களைக் குறித்த அவரது ஆழ்ந்த அவதானிப்பு இதில் புலப்படுகிறது அம்மாசி போயன் தன் போக்கில் உலவித் திரிகிறான் மகளை இழந்த வேதனையும், அவளைக் காப்பாற்ற இயலாத நிலையும் அவனது துயரத்தின் சுவடுகளாகின்றன.
‘வண்டிக்காரன்’ கதை வெள்ளந்தியான மனிதனைக் களமாகக் கொண்டது. அவனது மனைவி பொருத்தமற்ற இணையினால் செங்கானோடு ஓடிப்போகிறாள். அவளைப் பற்றி பலவாறாகப் பேசும் ஊர்மக்களாலும், அவமானத்தினாலும் அவன் குடிபோதையில் கத்தியோடு அவளைத் தேடிப் புறப்படுகிறான் .சுற்றியலைந்தும் அவன் கிடைக்காததால் பப்பாளி மரத்தினை வெட்டுகிறான். மனைவியைப் புரிந்து கொண்டு அவளுக்கு அணுக்கமாக வாழ இயலாத அவனது மற்றொரு பரிமாணம் வேறாகிறது .அடங்காது திரியும் காளைகளை அடக்கவும், பழக்கப்படுத்தவும் அவனால் மட்டுமே முடியும். . மாடுகளைப் பற்றிய அவனது ஞானம் வியப்பளிப்பது. ராஜா சுழி, தாமினி சுழி, வால் சுழி, வெங்கு சுழி என காளைகளில் காணப்படும் சுழி வகைகளைப் படைப்பாளி அக்கதாபாத்திரம் மூலம் வாசகனுக்குக் கூறுகிறார்., மாட்டு வண்டிகளே அருகிவிட்ட காலச்சூழலில் வண்டிகளின் மரச்சக்கரங்களுக்கு இரும்புப்பட்டை பொருத்துவதும் அழகாக விவரிக்கப்படுகிறது.
‘மோகினி ஆட்டம்’ சிற்றூர்களில் நிலவி வரும் சம்பிரதாயங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் குறித்துப் பேசுகிறது. தொலைக்காட்சியில் பேய்கள் குறித்த தொடரினை தினமும் பார்ப்பதால் அவளுக்குக் பேய் பிடித்துவிட்டதென்று பேய் ஓட்டுபவனிடம் அழைத்துச் சென்று பேய் ஓட்டுகின்றனர். தனக்குப் பேய் ஏதும் பிடிக்கவில்லை என வாதாடும் ரேவதியை, பேய் பிடித்திருப்பதால்தான் இவ்வாறு வாதம் செய்கிறாள் எனக் கூறி மீண்டும் அதனை துரத்த அவளைக் கூட்டிச் செல்கின்றனர். கதை முடிவில் ரேவதி, பூசாரிக்கும், அவனது எடுபிடிகளுக்கும் பேய் ஓட்டிவிடுவதாக பூடமாகக் கதை நிறைவு பெறுவது நகைச்சுவையானது. இத்தகைய பொருளற்ற நம்பிக்கைகளை படைப்பாளி தனது கதாபாத்திரமான ரேவதியின் மூலம் பகடி செய்கிறார்.
நிறைவாக்கிட, ‘மழை முடிந்த பிறகான பொழுது’ கதை வரிகளை அவரது வழக்கு மொழிக்கு சான்றாகக் காணலாம். கெழவன் வயசுல என்ன ஆட்டம் ஆடுனான் தெரியுமா? ஊருக்கு ஒன்னுன்னு சுத்திகிட்டு கட்டுன பொண்டாட்டிக்கு பண்ணுன கொடுமைக்கு அளவே இல்ல. மாப்ள நாயம் நடத்த ‘தொடுப்பு’ வீட்லதான் அவனப் போயி பாக்கணும். இவன் மீசய நீவிக்கிட்டு ஊஞ்ச மரத்து நெவுல்ல படுத்துகிட்டு, கள்ளு ஒரு மொந்தய வெச்சுகிட்டு, கோழிய வறுத்து கடிச்சிகிட்டு மொதப்புல கெடப்பான். நாம ஊர்ல, ஊட்ல ஏதாவது பிரச்சினயின்னா அப்பிடியே போய் பம்மிக்கிட்டு நிக்கணும். கெட்ட புத்திக்கார நாயி. இன்னயோட இவங்கத முடிஞ்சது எனத் தொடர்கிறது. இக்கட்டுரையில், சில கதைகளே தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. கதைகள் வாசகனுக்கு இன்னும் ஆழமான பரிமாணங்களை அளிக்கும் சாத்தியங்கள் உள்ளன. படைப்பில் கையாளப்பட்டுள்ள சொற்கள், பெயர்களை ஆசுவாசமாக ஆழ வாசித்தால் வாசகர்கள் இதுவரை கண்டிராத புதுவுலகு விரியும். மேலும், தொகுப்பு நெடுகிலும் பறவைகள், விலங்குகள், கால்நடைகள் என இவையும் கதாபாத்திரங்களாகி உலவுகின்றன. பலவகை செடிகள், மரங்கள், நிலப்பகுதிகள் என இவை ஊடாடி வருவதையும் காணலாம்.
கொங்குப் பகுதிக்கே உரித்தான கொஞ்சும் வழக்கு மொழியில் இவை படைக்கப்பட்டிருத்தல் சிறப்பு. மறைந்த ஆளுமையான க.சீ.சிவகுமார் மொழியழகிற்காகவே நினைவு கூறப்படுபவர். தமிழின் மூத்த படைப்பாளியான கி.ரா தொடங்கி, மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன், தோப்பில் முஹம்மது மீரான், வா.மு.கோமு, ஸ்ரீராம், பெருமாள் முருகன் உள்ளிட்ட படைப்பாளிகளே இத்தகைய வழக்கு மொழியினைக் கையாளுகின்றனர். இந்நூலிற்கான முன்னுரையினை பாவண்ணன் இச்சிறுகதைகளில் ஆழ்ந்து, தோய்ந்து வழங்கியுள்ளார். பல பக்கங்களுக்குத் தொடரும் முன்னுரை சிறப்பான அறிமுகத்தினை வாசகருக்கு வழங்குகிறது.
இவரது ‘சாபம்’ சிறுகதை பெரியார் பல்கலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது இது அவருக்கான சிறப்பாகிறது. இத்தொகுப்பு 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டை நகரில் நடத்திய நூல் காட்சியில் சிறுகதைப்பிரிவில் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பெற்று பட்டயத்துடன் ரூ.5000 பரிசினைப் பெற்றது இவரது தமிழக கல்வெட்டுகள் குறித்த நூல் ஒன்று சென்னைப் பல்கலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
பெருங்கதைகளான நாவல்கள் கதை நடைபெறும் காலத்தின் நிகழ்வுகளை, சுவடுகளைப் பதிவாக்குகின்றன. மக்களின், சமூகத்தின் மனப்போக்கினை அவை தன்னுள் கொண்டவை. ஆயினும், இத்தகைய சிறுகதைகளில் தனி மனிதனின் வாழ்க்கை, உணர்வுகள் அவற்றினூடாக அவர்களது அவலங்கள் முக்கியத்துவம் கொள்கின்றன. இத்தகைய சிறுகதைகளை இத்தொகுப்பில் வாசகர்கள் காணவியலும். இவை, மிகைப்படுத்துதல்கள், வர்ணணைகள், உவமானங்கள், இலக்கணங்கள் என்ற படைப்புகளுக்கே உரிய கூறுகளைக் கடந்து மனிதனைக் குறித்துப் பேசுகின்றன. வாசகர்களுக்கு இத்தொகுப்பு நல்லதொரு மனநிறைவினை உறுதியாக அளிக்கும். l