“இந்து மதம் என்பது ஒரு அரசியல் சொல்லாடல். அதில் பல நூற்றுக்கணக்கான குல வழக்கங்களும், தெய்வ வழிபாடுகளும், தனித்தன்மையும் உண்டு. காண்பதெல்லாம் அத்வானிதான் என்றால், ஆரோக்கியக் குறைவு என்று பொருள்.” (பக். 86)
“உலமாக்களிடமிருந்து மட்டும் முஸ்லீம்களை புனிதவாதம் துண்டிக்க முயற்சிக்கவில்லை; அத்துடன் தமிழ்ப் பண்பாட்டிலிருந்தும், அண்டை அயலாரிடமிருந்தும் துண்டித்து சஹாரா பாலைவனத்தில் ஆதித்தந்தை காலத்திற்கு இட்டுச்செல்ல முயல்கிறது. அத்துடன் பயங்கரவாத நிகழ்ச்சிநிரலில் உள்ளபோது அதற்கான உந்து சக்தியாகவும் விளங்கப்போகிறது.” (பக். 91)
“பயங்கரவாதம் – ஒரு உளவியல் பார்வை” என்ற க. செல்லபாண்டியன் அவர்களின் நூலை முன்வைத்து பங்கரவாதம், தீவிரவாதம், அடிப்படைவாதம், மதவாதம், மதவெறி உள்ளிட்ட கருத்தாக்கங்களின் அரசியல், உளவியல், சமூவியல் சார்ந்த சிந்தனைகளை பேச முயலலாம். இந்நூல் இந்தியாவில் 90-களுக்கு பின் பெருகிவரும் மதவாதப் போக்கு, இந்துத்துவ மற்றும் இஸ்லாமியத்துவ (Islamithuva) அரசியல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகி சமூகத்தில் ஒரு பேரச்சத்தைக் கட்டமைத்த பயங்கரவாதம் என்பதை உளவியல் பார்வையில் அணுக முயற்சிக்கிறது.
இஸ்லாமியத்துவா என்ற இந்த புதியசொல் எதைக்குறிக்கிறது? என்பதை விளக்கிவிடலாம். எப்படி இந்து என்பதும், இந்துத்துவா என்பதும் ஒன்றில்லையோ, அப்படி இஸ்லாமும், இஸ்லாமியத்துவாவும் ஒன்றல்ல. முந்தையது மதம் என்றால் பிந்தையது மதநம்பிக்கையை ஒரு அதிகார, ஆதிக்க கருத்தியலாக மாற்றிக்கொண்ட நிலை. மார்க்ஸ் கூறியதைப்போல ‘மதம் கருணையற்ற உலகின் கருணையாக, இதயமற்ற உலகின் இதயமாக’ பாமர உழைக்கும் மக்களின் ஒரு ஆன்மீகத் தேவையை நிறைவு செய்வதன்மூலம், அவர்களை உற்பத்தி நிலமையை பாதுகாக்கும் மறுஉற்பத்திக்கான உடல்களாக தயாரிப்பதில் பங்களிக்கிறது. உழைப்பைச்சுரண்டி, உடலைப்பிழியும் துயர்நிறைந்த இவ்வுலகில் வாழ்வதற்கான ஒரு நம்பிக்கையை உருவாக்க கூடியதாக உள்ளது.
ஆனால், அதே மதம் ஒரு கருத்தியலாக மாறும்போது, அரசியல், அதிகாரம் என்பதோடு ஆன்மீகத்தை இணைத்து ஆன்மீக அரசியலாக மாறுகிறது.இந்து, இஸ்லாம் என்பது ஒரு வழிபாட்டிற்குரிய பாமர நம்பிக்கை என்றால், இந்துத்துவா, இஸ்லாமியத்துவா என்பது ஆன்மீகத்தை அரசியலாக மாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றி உலகை தங்களது கருத்தியல் சார்ந்த கடவுளின் அரசாட்சியாக ஆள நினைக்கும் ஒரு பின்-மனிதநிலை (post-human condition), பின்-நவீனத்துவ (post-modern) சமூக நிலை. இதை விரிவாக எழுதினால் தனிக்கட்டுரையாக மாறும். சுருக்கமாக இந்துத்துவா போன்றதொரு இஸ்லாமிய மதக் கருத்தியல் நிலையே இஸ்லாமியத்துவா எனக் கூறலாம். பயங்கரவாத உளவியலைப் புரிந்துகொள்ள இம்மதக் கருத்தியல் நிலைகளை அறிந்து கொள்வது அவசியம். இந்நூல் இஸ்லாமியத்துவா பற்றியது அல்ல என்றாலும் இந்த எழுத்தை தொடர அதை அறிவது அவசியம் என்பதால் இங்கு சுருக்கமாக உரைக்கப் பட்டுள்ளது.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான மத பயங்கரவாத உளவியலின் ஒரு கருத்தியல் வெளிபாட்டு வடிவமே ஆன்மீக அரசியல் என்பது. (ரஜனி போன்ற சுயமோகிகள் கூறும் பிழைப்புவாத ஆன்மீக அரசியல் அல்ல இது.) இந்துத்துவ பிதாமகர்களான சாவர்க்கர், கோல்வால்கர் போன்றவர்களும், இஸ்லாமியத்துவ பிதாமகர்களான அப்துல் வஹாப் துவங்கி பின்லாடன் வரையிலானவர்களும் முன்வைப்பது இந்த ஆன்மீக அரசியலைதான். (அடிப்படைவாதம், பயங்கரவாதம் குறித்த விரிவாக அறிய, வாய்ப்புள்ளவர்கள், எனது “உலக அரசாட்சியில் புனித ஆவிகளும் அடிப்படைவாத ஜின்களும்” (நூல்: மொழியும் நிலமும்), “பயங்கரவாதம் என்கிற பக்கவாதம்”, “கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்” (நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள்) ஆகிய கட்டுரைகளை வாசித்தறியலாம்.) புதிதாக இன்று பேசப்படும் ஆன்மீக அரசியல் என்பது ஆன்மீக உணர்வு என்கிற தனிஉடல் சார்ந்த உணர்வை, அரசியல் என்ற பொதுஉடலுக்குள் கரைக்கும், அதாவது மதத்தை தனிமனித வெளியிலிருந்து, சமூக பொதுவெளிக்குள் நகர்த்திவிட்ட ஒரு அதிகாரக் கருத்தியல் என்பதை மட்டும் சொல்லி மேற்செல்லலாம்.
இந்துக்கள் எப்படி அரசியல் இந்துத்துவர்களிடமிருந்து பிரித்து பார்க்கப்பட வேண்டுமோ அப்படி இஸ்லாமியர்களும் அரசியல் இஸ்லாமியத்துவாவிலிருந்து பிரித்து பார்க்கப்பட வேண்டும். சுருக்கமாக, பயங்கரவாதம் இஸ்லாமியத்துவாவுடனும், இந்துத்துவாவுடனும் இணைந்த அதிகார வெறிகொண்ட ஒரு நவீன அரசியல் செயல்பாடு. பயங்கரவாதத்தையும் பெருகிவரும் முதலாளிய மற்றும் நவதாராளவாத முதலாளியத்தையும் பிரித்து பார்க்க முடியாது. முதலாளியத்தின் உலகலாவிய ஆதிக்கத்திற்கான ஒரு உலகமய கருத்துருவத்தை உருவாக்குவதில் மத அடிப்படைவாத்திற்கும் அதன் வெளிப்பாடான பயங்கரவாதத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது.பயங்கரவாதம் குறித்த உளவியல் அறிஞர்களின் கருத்துடன் குஜராத் கோத்ரா சம்பவம் துவங்கி கோயம்புத்தூர் குண்டுவெடிப்புவரை உளவியல் பின்னணியில் ஆராய்கிறது இந்நூல். பொதுவாக, தமிழில் உளவியல் ஆய்வுகள் மிக்குறைவாகவே வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக பயங்கரவாதம் குறித்த நூல்கள் மிகக்குறைவே. பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல்களே அதிகம். இன்னும் குறிப்பாகச் சொன்னால் உளவியல் குறித்த நூல்களும் ஆய்வுகளும் மிகக்குறைவே.
தமிழில் தற்போது உளவியல் குறித்து பிராய்ட், யுங், லக்கான் போன்ற சிந்தனையாளர்களின் அறிமுககங்களையும், கோட்பாடுகளையும் எழுதி வருபவர்கள் புறப்பாடு மற்றும் மற்றமை இதழ்களை நடத்திய இந்நூலின் ஆசிரியர் க. செல்லபாண்டியன், பேரா. அரங்க நலங்கிள்ளி மற்றும் பேரா. தி. கு. இரவிச்சந்திரன் ஆகியோரோ (எனது வாசிப்பில் அறிந்தவர்கள்). இவர்களது நூல்களை வாசித்தவர்களுக்கு உளவியல் சார்ந்த நவீன கருத்தாக்கங்கள் அறிமுகம் ஆகியிருக்கும். வாசிக்காதவர்களுக்கு அக்கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்தாமல் இந்நூல் நேரடியாக எழுதப்பட்டுள்ளது என்பது வாசிப்பிற்கு சிக்கலாக உள்ளது.
அறிவுத்துறைகளில் மிகவும் சவாலான துறை உளவியல். துறைசார்ந்த கலைச்சொல் அறிமுகம் மட்டுமின்றி, சிக்கலான கோட்பாட்டு பின்புலமும் கொண்டவை. கோட்பாடு சார்ந்த உளவியல், பயன்பாடு சார்ந்த உளவியல், மருத்துவம் சார்ந்த உளவியல், சமூக உளவியல் என பலதுறைகளில் உளவியல் கருத்தாக்கங்கள் முக்கியமானவை. சமூக உளவியல் குறித்த ஆய்வுகளில் மேற்சொன்ன பிராய்ட், யுங், லக்கான் மற்றும் இந்திய உளவியல் அறிஞரான சுதிர் காக்கர், ஆசிஷ் நந்தி போன்றவர்களின் பங்களிப்புகள் முக்கியமானவை. பயங்கரவாதத்தின் சமூக உளவியலை ஆய்விற்கு எடுத்துக்கொண்ட இந்நூல் பிராய்ட், லக்கான், காக்கர் போன்றவர்களோடு, சமூக உளவியல் சார்ந்த பல ஆய்வாளர்களின் கருத்தாக்கத்தை எடுத்துக் கொண்டு விளக்கிச் செல்கிறது. நிறைய குறிப்புகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூலில், ஒரு ஒருங்கிணைவு இல்லாமல், கலைத்துப் போடப்பட்டதாக கருத்தாக்கங்கள் உள்ளது. உளவியலைவிட அதிகம் சமூக அரசியல் வரலாற்று தரவுகள் உள்ளன. அத்தரவுகள் வழியாக உளவியல் பின்புலங்கள் விளக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
இந்திய இஸ்லாமிய பயங்கரவாதம் தனது சுயமாக (self) அதாவது தான் (I) -ஆக கற்பிதம் செய்து கொண்டிருப்பது, அதன் மற்றமையான (other) இந்துத்துவ பயங்கரவாதத்தைதான். லக்கானிய கருத்தாக்கத்தில் சொன்னால், இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் தனது, குழந்தமையின் கண்ணாடி நிலையில், பிரதிபிம்பமாக கற்பிதம் செய்துகொண்ட மற்றமை இந்துத்துவ பயங்கரவாதமே. உலகளவில் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்தியங்கள், வளைகுடா நாடுகளினது எண்ணெய்வள சுரண்டலுக்காக சிவப்பு பயங்கரவாதம் எனும் கம்யுனிச பூதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டதே பச்சை பயங்கரவாதம் எனும் இஸ்லாமிய பயங்கரவாதம். இந்த வாக்கியம் புரிய இதில் உள்ள லக்கானிய உளவியலின் மூன்று கலைச்சொற்கள் குறித்த அறிமுகம் அவசியம். 1. தானுமை என்கிற சுயம் 2. மற்றமை என்கிற பிறன்மை 3. கண்ணாடிநிலை.அதாவது, ழாக் லக்கான் என்கிற பிரஞ்சு உளவியலாளர், ஒரு குழந்தையானது தனது 6 மாதம் துவங்கி 18 மாதம் வரை கண்ணாடி நிலை எனப்படும் உளவியல் நிலையை அடைகிறது என்கிறார்.
அதுவரை தன்னை தனது தாயின் ஒரு உறுப்பாகவும், தான் என்பது முழுமையற்ற சிதறுண்ட, பிளவுண்ட பல உறுப்பாகவும் எண்ணிக்கொண்டிருந்த குழந்தை, தன்னை கண்ணாடியில் பார்த்ததைப்போல (கண்ணாடி என்பது பிரதிபலிப்பை செய்யும் ஒரு உருவகமே) தனது பிம்பத்தை கண்டு தான் ஒரு முழுமையான புறப்பொருள் என்பதை உணருகிறது. அந்நிலையே குழந்தையின் தானுமை என்கிற சுயம் கட்டமைகிறது. அந்த சுயம் தனது கண்ணாடி பிம்பம் என்கிற புறத்தின் வழியாக, அதாவது தனது கற்பித மற்றமையின் வழியாக (அது தாயாகவும் இருக்கலாம், ‘தாயைப்போல பிள்ளை நூலைப்போல’ சேலை என்கிற முதுமொழியின் உருவாக்க உளவியலாக இதைக் கருதலாம்) உணர்கிறது என்கிறார். ஆக. லக்கான் சுயம் என்பதை அகப்புறம் (object என்பதை க.செ. அகப்புறம் என்று மொழிபெயர்த்துள்ளார்) அதாவது அகத்திற்குள் அமைந்த ஒரு புறப்பொருள் என்கிறார். அதாவது தனக்குள் உள்ள ஒரு மற்றமை எனலாம். ஒரு மனிதனின் தானுமை, சுயம், தன்னிலை புறத்தினால் குறிப்பாக மற்றமையினால் கட்டப்படுகிறது என்பதே.
இஸ்லாமியத்துவ பயங்கரவாதம் இந்துத்துவ மற்றமையாலும், இந்துத்துவ பயங்கரவாதம் இஸ்லாமியத்துவ மற்றமையினாலும் கட்டப்படுகிறது. எளிமையாக ஒரு உடலின் சுயம், அவ்வுடலின் ‘தான்’ குறித்த ‘பிறரி’ன் அல்லது தனது மற்றமையின் வேட்கையை, விருப்பை தன்னுடையதாகக் கருதிக்கொள்கிறது. ஆக ஒரு மனிதனின் சுயம் மற்றமைகளால் கட்டப்படுகிறது என்பதே. இதிலிருந்து தனது பிம்பத்தின்மேல் தான் கொள்ளும் சுயமோகம் (narcissism) என்கிற தற்காதல் பிம்பநோய்க்கு ஒரு உடல் ஆட்படுகிறது. இந்த தற்காதல் உளவியலுக்கும், பயங்கரவாதத்திற்கும் உள்ள தொடர்பை இந்நூல் விரிவாக விளக்குகிறது. அதன் தொடர்ச்சியான உளவியல் நோய்க்குறிகளான சுயமோக மனக்காயம், சுயமோக நிறைவு, மனப்பீடிப்பு (obsession), அடையாளச் சிக்கல் (identity crisis), அங்கீகாரம் (belongingness) போன்ற உளவியல் கருத்தாக்கங்கள் வழியாக பயங்கரவாத உளவியலை ஆராய்கிறது.
பொதுவாக கலைச்சொல்லாக்க விளக்கங்கள் குறைவாக இருப்பது வாசிப்பில் உளவியல் கருத்தாக்கம் அறிமுகமற்றவர்களுக்கு இடர்பாடாக அமையலாம். சான்றாக பிராய்டிய காயடிப்பு அச்சம் (castration anxiety), இடிபஸ் சிக்கல் (Oedipus complex), அதிகாரச் சின்னம் (phallic symbol), லெக்கானிய கற்பித அகப்புறம், சுயமோகம் ஆகியவற்றை தனியாக விவரித்திருந்தால் வாசிப்பு எளிமையாக அமைந்திருக்கும். காரணம் பொதுவாசகர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட நூல் என்பதால், துறைசார்ந்த கருத்தாக்க விளக்கம் அவசியம். ஆசிரியரின் உளவியல் பார்வை, வாசகரே தேடி அடையும் வண்ணம் விவரிக்காமல் நூலோடு இழையோடியுள்ளது. மேற்சொன்ன லக்கானிய விளக்கம் நூலில் இல்லை, ஆனால் இந்த கருத்தாக்க அடிப்படையில் உளப்பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விளக்கமின்றி இந்துத்துவ, இஸ்லாமியத்துவ எதிர்மை கட்டமைவுகளினால் உருவான பயங்கரவாத உளவியலைப் புரிவது வாசகருக்கு கடினமானது. ஆனால், இறுதியில் சுட்டு (index) என்று தனியாக பேசப்பட்ட கருத்தாக்கத்தின் பக்க எண்கள் தந்திருப்பது, ஆய்வாளர்களுக்கு பின்பற்ற வசதியானது. அதேபோல் கலைச்சொற்கள் என்று தனது பயன்பாட்டு வார்த்தைகளின் ஆங்கில சொற்களை தந்துள்ளது நல்ல முயற்சி. அத்தோடு கலைச்சொல் விளக்கத்தையும் இணைத்திருந்தால் நூல் முழுமையடைந்திருக்கும். அடுத்த பதிப்பில் க. செல்லபாண்டியன் அவர்கள் இதனை விரிவுபடுத்தி எழுதவேண்டும்.
நூலை வழக்கமான உளவியல் நூல்கள் போல இறுக்கமாக இல்லாமல் ஒரு ஆட்ட மகிழ்வுத் தன்மையுடன் (playfulness) எழுத முயற்சித்துள்ளார். அதனை இடர்படுத்தும் விதமாக பயங்கரவாதம், உளவியல் குறித்து எழுதப்பட்ட ஆங்கில அறிஞர்களின் கருத்தாக்கங்களை நேரடியாக தொடர்ந்து தந்திருப்பது வாசிப்பு நெருடலை உருவாக்குகிறது. குறிப்புகள் ஆய்வுடன் பொறுத்திக்காட்டியிருந்தால் சிறப்பாக இருக்கும்.
9-11-1997 கோவை தொடர் குண்டுவெடிப்பு குறித்து விரிவாக எழுத எண்ணிய ஆசிரியர் அவரது இதழான ‘புறப்பாடு’ இதழில் எழுதிய ஒரு கட்டுரையோடு முடிந்துவிட, பிறகு 2008-ல் இந்நூலை நேரடி கள ஆய்வுகள் மற்றும் செய்திகள் வழியாக முழுமைப்படுத்தி எழுதியுள்ளார். இந்துத்துவ பயங்கரவாதச் செயலான பாபர் மசூதி இடிப்பு, கோத்ராவிற்குப் பிந்தைய குஜராத் கலவரம், கோவை குண்டுவெடிப்பு, கோவையில் நிகழ்ந்த காவலர் படுகொலையை ஒட்டி நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, இந்தியாவில் உருவான இந்துத்துவ பயங்கரவாத்தின் எதிர்விளைவாக உருவான இஸ்லாமிய பயங்கரவாதம் என இந்திய பயங்கரவாத வரலாற்றை வரிசையாக ஆய்விற்கு உட்படுத்துகிறது இந்நூல். பயங்கரவாதம் இரண்டு மதங்களிலும் தனக்குத் தேவையான தன்னிலைக் கட்டமைவைச் செய்திருப்பதையும், அவ்வியக்கங்களின் தலைவர்களின் கூற்றுகளில் வெளிப்படும் உளவியல்-நரம்பியல் நோய்க்கூறுகளையும் பேசுகிறது.
நூலின் கட்டமைப்பில் வழக்கமாகப் பின்பற்றப்படும் அத்தியாயப் பிரிப்புகள் இல்லாமல், பயங்கரவாதம் குறித்த பல கட்டுரைகள் வரிசையாக இணைக்கப்பட்டு துணைத் தலைப்புகள் போல ஒற்றைக் கட்டுரைத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது வாசிப்பில் ஒரு ஓர்மையைப் பெற முடியாமல் செய்கிறது. அப்படி ஒரு ஓர்மை வாசகருக்குத் தேவையில்லை என்று கருதுகிறாரா இதன் ஆசிரியர் என்று தெரியவில்லை. பயங்கரவாதம் என்ற சொல்லை ஒரு குறிப்பானாகக் கொண்டு, அதன் குறிப்பீடுகளை ஆய்வதாகத் துவங்கும் நூல், குறிப்பீடாக நக்சலைட்டுகள், முஸ்லிம்கள் என்று அதன் குறியீட்டுத் தன்மை சூழலுக்கு ஏற்ப மாறுபடுவதைச் சுட்டுகிறது. “பயங்கரவாதம் என்பது ஒரு அரசியலற்ற நடுநிலைச் சொல்லாடலாக ஊடகங்கள் மற்றும் அரசின் ஆய்வறிக்கைகள், செய்திகள் வழியாகக் கட்டமைக்கப்படுகிறது. ஒருகாலத்தில் உள்நாட்டுக் கலகமாக, விடுதலைப்போராக, புரட்சியாக, தீவிரவாதமாகக் கருதப்பட்ட இத்தகைய எதிர் நடவடிக்கைகள் இன்று பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லாகப் பாவிக்கப்படுகிறது” என்று ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தேன் (நவீன தொன்மங்கள்…, 276,2010). பயங்கரவாதம் என்ற சொல் வரலாற்றில் பல குறிப்பீடுகளாக மாறிவந்துள்ளது. எனவே பயங்கரவாதம் என்கிற குறிப்பான் பல அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளின் குறிப்பீடாக மாறியுள்ளது. அது இன்றைய இந்துத்துவர்களால் அனைத்து அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளையும், சிந்தனைகளையும், போராட்டங்களையும் அர்பன் நக்சல், தேசத்துரோகி என குறிப்பீடு செய்வதாக மாறியுள்ளது அறிந்ததே.
ஒரு குறி என்பது குறிப்பான், குறிப்பீடு என்ற இரண்டு அமைவுகளைக் கொண்டது என்கிறது சசூரிய மொழியியல். நமது தொல்காப்பியமும் இதனை சொன்மை, பொருண்மை என்ற அமைவுகளாகக் குறிக்கிறது. பயங்கரவாதம் என்பது ஒரு குறிப்பான் அதாவது சொன்மை என்றால் அதன் பொருண்மை அதாவது குறிப்பீடு பலவற்றைக் குறிப்பதாக மாறியுள்ளது. இந்த குறிப்பீடுகளை மனஅலசல் முறையில் பல்வேறு சம்பவங்கள் அடிப்படையில் விவரிக்கிறது இந்நூல். முதல் 28 பக்கங்களில் பயங்கரவாதம் குறித்த உளவியல் கருத்தாக்கங்கள், என ஒருவன் மனமுவந்து பயங்கரவாதியாகிறான், மனிதவெடிகுண்டாகிறான், அதற்கும் அவனது குழந்தைமை, மதங்கள், அதன் பொற்காலக் கனவுகள் மற்றும் அவை உருவாக்கும் அமரத்துவ சிந்தனை, இறப்பிற்கு பிந்தைய மறுமையின் சுகவாழ்வு போன்ற கூறுகள் விவரிக்கப்படுகிறது. அடிப்படையில் தன்னடையாளச் சிக்கலாக உருவாகி, அதிகார எதிர்ப்பு, தனது சுயத்தை மோகித்தல், அதனை நிலைநிறுத்துவதற்கான மதநம்பிக்கையின் உறுதிப்பாடு, அது உருவாக்கும் ஒரு பேரானந்தம் (joyousness) ஆகியவை விளக்கப்பட்டுள்ளது. இது விரிவாக எழுதப்பட வேண்டிய பகுதி.
அடுத்த 52 பக்கங்கள்வரை 2002-ல் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு, அதை வைத்து உருவாக்கப்பட்ட குஜராத் கலவரம், இஸ்லாமிய தனிமைப்படுத்துதல், மோடி அரசால் உருவாக்கப்பட்ட வெறுப்பு அரசியல், அதன் தொடர்ச்சியாக வளர்ந்த ஏகத்துவ இந்து என்கிற கருத்தாக்கம் ஆகியவை வெகுசன உளவியலில் கட்டமைத்த இந்துத்துவக் கூறுகளை விவரிக்க முயல்கிறார். “லெக்கான் நனவிலி என்பது மற்றமையின் சொல்லாடலாக இருக்கிறது என்கிறார்” (பக்.50) என்பதை அத்வானியின் குஜராத் கலவரம் குறித்துச் சொன்ன ‘அதை ஒரு இனப்படுகெலையாக (ஜெனோசைட்) பார்க்க கூடாது’ என்பதை மனஅலசலுக்கு உட்படுத்துகிறார். இத்தகைய மற்றமையின் சொல்லாடல் எப்படி ஒரு மனநோய்க்கூறாக வெளிப்படுகிறது என்பதை சுட்டிச் செல்கிறது. குஜராத் கலவரம் ஒரு அரசியல் நனவிலியாக மாறி, இந்திய சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களின் நனவிலியைக் கட்டமைத்தது குறித்த உரையாடலாக இது வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
இக்கலவரம் “இந்துத்தன்மை” என்பதை எப்படி ஒரு அதிகாரக் குறியீடாக அதாவது லக்கானிய ‘ஃபேலிக்’ என்ற லிங்கமையவாதக் கருத்தாக்கமாக உருவாக்கியது என்பதை சுட்டிச் செல்கிறது. இந்த “இந்துத்தன்மை” என்பது ‘எல்லை கடந்த பேரானந்தமாக’ மாற்றப்பட்டு கற்பித அதிகாரக் குறி (imaginary phallus) ஒரு குறியீட்டு அதிகாரக்குறியாக (symbolic phallus) மாறுவதை சுருக்கமாக சொல்கிறார். இது விரிவாக ஆராயப்படவேண்டிய ஒரு பகுதி. லக்கானிய மும்மை அமைப்பு (ISR) எனப்படும் கற்பிதநிலை (imaginary), குறியீட்டுநிலை (symbolic) மற்றும் யதார்த்தநிலை (real) என்கிற கருத்தாக்கத்தை விவரித்துப் பேசப்பட வேண்டிய பகுதி. இந்தக் கற்பித அதிகாரம், நிகழ்வுகள் வழியாக குறியீட்டு அதிகாரமாக மாற்றப்பட்டு, “இந்துத்துவ இந்தியா” என்கிற யதார்த்தத்தை உருவாக்கியிருப்பதை விவரித்திருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். க. செல்லபாண்டியன் அவர்கள் தன்னையே ஒரு வாசகராகக் கருதி இந்த பகுதியை சுருக்கமாக தனது புரிதலுடன் இணைத்து எழுதிச் சென்றுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
குஜராத் கலவரத்தினால் கட்டமைக்கப்பட்ட “இந்துத்துவ இந்தியா” என்கிற கற்பனை யதார்த்தத்தின் எதிர்விளைவாக தமிழகத்தில் உருவான கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்ட இஸ்லாமிய தன்னிலை தனது பதற்றத்தினை பதிலீடாக்கும் ஒரு கருத்தியலாக இஸ்லாமியத்துவா என்கிற பயங்கரவாதத்திற்குள் செல்வதை விவரிக்கிறது கோவை கோட்டைமேடு குண்டுவெடிப்பு கலவரங்கள். அதன் பின்னணியாக உருவான அல் உம்மா என்கிற அமைப்பும், அதற்குப் பின்புலமாக அமைந்த இஸ்லாமியத்துவ அடிப்படைவாதக் கருத்தாக்கமாக உலக அளவில் கட்டமைக்கப்பட்ட ஜிகாத் என்பதன் மன அலசல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜிகாத் குறித்த உளவியல் சூஃபிகளின் விளக்கம் ஆகியவை விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு கருத்தாக்கம். 1980 முதல் உருவான மீனாட்சிபுர கலவரம், எம்ஜியார்-ஜெ அரசுகள் திட்டமிட்டு வளர்த்த இந்துத்துவ சக்திகளான இந்து முன்னணி (இராம கோபாலன்), அதிலிருந்து பிரிந்த இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்) ஆகிவற்றின் வரலாறு, தமிழக அரசியலின் வாக்குவங்கி அரசியல் ஆகியவற்றின் பின்னணியில், மனக்காயமாக மாற்றப்பட்ட, அவமான உணர்வாக மாற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு துவங்கி குஜராத் கலவரம் ஆகியவற்றின் எதிர்மன உளவியல் செயல்பாடுகள் பேசப்படுகிறது.
“கோட்டை மேடு ஒரு குட்டி பாகிஸ்தான் என்று சொல்லப்படுவதிலும், சொல்வதிலும் இங்குள்ளவர்களுக்கு உள்ள பெருமித உணர்வு சுயமோகப் பெருமிதமாக உள்ளது.” (பக்.54) இந்த சுயமோகப் பெருமிதம் ஒரு அநீதிக்கு எதிரான, அந்நியப்படுத்தப்பட்ட நிலையில் உருவாகும் அடையாளப் பெருமிதம் என்பதாக வலிந்தேற்றப்பட்ட ஒன்று. இது உளவியல் ரீதியாக, தந்தை அதிகாரத்தால் (இந்துத்துவ அதிகாரம்) காயடிப்பிற்கு ஆளாகிவிடுவோம் (தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்), என்கிற உளவியல் சிக்கலுக்கு பதிலியாக உருவாகும் சுயமோகப் பதிலீடு. காரணம் பாகிஸ்தான் என்பது மற்றமையால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பித அடையாளம் அதில் அடிபட்ட தன்னிலை தனது சுயத்தை திணிக்கிறது. “இராமகோபாலன் போன்றவர்களின் கீழ்தரமான பிறமத ஏளனப் பேச்சுகளை அனுமதித்து மோதலுக்கான சூழலை ஜனநாயகம் எனும் பெயரில் போலிஸே தீவிரவாதத்திற்கு அடிகோலியது.” (பக். 55) என்று கூறும் க.செ., இதேபோல பழனிபாபாவின் வெறித்தனமான பேச்சுகளும் அனுமதிக்கப்பட்டதை சுட்டுகிறார். அடிப்படையில் வடநாட்டில் ஏற்பட்ட இந்துத்துவ கட்டமைப்புபோல தமிழகத்தில் உருவாக்கும் ஒரு அதிகார அரசியல் திட்டத்தின் விளைவே இக்கலவரங்கள் என்பதை சுட்டுவது முக்கியமானது.இந்துத்துவா கட்டமைத்த ‘யதார்த்த’ உலகில் தங்களுக்கு இடமில்லை என்கிற அச்சமும், பதற்றமுமே இஸ்லாமிய பாமர மக்களை ஒருவகை கற்பனா யதார்த்தத்தில் திளைக்கச் செய்கிறது. அதற்கான அடித்தளத்தை அடிப்படைவாத அமைப்புகள் தங்களது மதங்களின் பெயரால் உருவாக்கி விடுகின்றன. யதார்த்த இழப்பு என்பது ஒரு உளவியல் நிலை. அதைத்தான் லக்கானிய உளவியல் தனது மும்மை நிலையில் விவரிக்கிறது. கற்பனை நிலை, குறியீட்டு நிலையால் செதுக்கப்பட்டு யதார்த்தநிலையை கட்டமைத்துவிடுகிறது. கற்பனைநிலை உருவாக்கும் அக பிம்பம், குறியீட்டு நிலையின் மொழி மற்றும் புற உலகால் ஒழுங்கமைக்கப்பட்டு, ஒரு புற யதார்த்தம் கட்டமைக்கப்படுகிறது. இதனை இந்திய மாயாவாத அத்வைதத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. அத்வைதம் யதார்த்த உலகை மறுக்கிறது. லக்கானியம் யதார்த்த உலகு உளவியல் கட்டமைப்பால் உணரப்படுகிறது என்கிறது. இதன்பொருள் யதார்த்தம் உள்ளது, ஆனால் அது உள்வாங்கப்படுவதில் உளவியல் பங்கு முக்கியமானது என்கிறது. இங்கு அதிகார அரசியல் இந்துத்தவ யதார்த்த உலகைக் கட்டமைக்கிறது என்றால், அதிகார எதிர்ப்பு அரசியல் இஸ்லாமியத்துவ யதார்த்த உலகைக் கட்டமைக்கிறது. விரிவஞ்சி இதனை நிறுத்திவிட்டு நூல் குறித்து தொடரலாம்.
இந்த கலவரங்களின் யதார்த்தக் கட்டமைப்பு வெறும் உளவியல் விளையாட்டாக உருவாகிறது என்று கருத வேண்டியதில்லை. இதற்கான பொருளியல் பின்னணி குறித்து பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார் செல்லபாண்டியன். வழக்கமான உளவியல் அறிஞர்கள் இந்தப் பகுதியை கவனத்தில் கொள்ளமாட்டார்கள். ஒரு மார்க்சிய இடதுசாரி வாசிப்புடன் உளவியலை அணுகும் செல்லபாண்டியன் மிகச்சரியாக, குஜராத், கோவை கலவரங்களுக்கு பின்னுள்ள, இந்து, இஸ்லாமியர்களின் வியாபார சந்தைப் போட்டியை சரியாகச் சுட்டிக்காட்டுகிறார். இஸ்லாமிய பொருளாதாரம் அழிக்கப்படுவதன் வழியாக மட்டுமே, இந்துத்துவ அதிகாரம் நிலைநிறுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அடிப்படையில் இதுபோன்ற பண்பாட்டு உளவியல் ஆக்கங்கள், பொருளாதார நலனை விரும்பும் முதலாளிய, அதிகார சக்திகளால் கட்டமைக்கப்படும் புற யதார்த்தம் வழியாகவே உருவாகுகிறது.
இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் உருவாக புறநிலையில் இந்துத்துவா எதிரியாக கட்டமைக்கப்படுவதுடன், அகநிலையில் இஸ்லாமிய இயக்கங்கள் காரணமாக அமைகின்றன. பயங்கரவாதத்தின் உடலரசியலில் அகமாக இருப்பது இஸ்லாமியச் சீர்திருத்த – குறிப்பாக ஓரமைவாக்க (தௌகீது அல்லது ஒருபடித்தான இந்துமதம் அல்லது அத்வைதம்) இஸ்லாமைப் பின்பற்றக் கூடிய இஸ்லாமியத்துவ இயக்கங்கள் என்றால், புறநிலையில் மற்றமையாக இருப்பது இந்துத்துவ இயக்கங்களே. இவை உருவாக்கிய ஒரு சமூகக் குலைவை உருவாக்கும் எதிர் உடலே பயங்கரவாதம். இது மதத் தூய்மைவாதம், மதப் புனிதம் போன்ற கருத்தாக்கங்கள் வழியாக பயங்கரவாத உடல்களை சாவு-விருப்ப அரசியல் (Thanatos politics) உடல்களாகக் கட்டமைக்கின்றன.
கோவையில் உருவாகிய இஸ்லாமியத்துவ, இந்துத்துவ இயக்கங்கள் குறித்த விரிவான ஆய்வுத் தரவுகள், களநிலவரங்கள் மற்றும் ஊடகச் செய்திகள் என தொகுத்து அங்கு உருவான உள்முரண் குறித்த சித்திரங்களைத் தருகிறார். உலகளாவிய முஸ்லிம் தன்னிலையில் தன்னை அடையாளப்படுத்தும் செயலை அந்த இயக்கங்கள் இளைஞர்களிடம் எப்படி உருவாக்கின என்பதை விரிவாக, கலவரங்கள் குறித்து வந்த செவ்விகள், குறுந்தகடுகளை ஆராய்ந்து விளக்கியுள்ளார். இந்த இரண்டு அடிப்படைவாத அமைப்புகளும் கம்யுனிஸ்டுகளை, நாத்திகர்களை, மதச்சார்பற்றவர்களை எதிர்ப்பதில் ஒன்றுபடுவதும், மதம், கடவுள் என்பதில் மட்டுமே வேறுபடுவதும், கலகங்களில் ஈடுபடுவதும், அது உருவாக்கும் உளவியலில் இந்த இயக்கங்கள் வலுவடைவதுமான ஒரு உரையாடல் கவனமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இவர்கள் ஒழிக்க நினைப்பது ஜனநாயகச் சிந்தனை, பகுத்தறிவு, நாத்திகம் மற்றும் கம்யுனிசம், மார்க்சிய இடதுசாரி அரசியலையே.
“புனிதம் கெட்டுவிட்டது என்ற எண்ணமே காயடிப்பு அச்சத்தை உருவாக்கிவிட்டது. அதைக் கருத்தாக்கி பிறருக்கும் புனிதம் காப்போம் என்ற கருத்தியல் வெறியை சுயமோக வெறியாக வித்திடுகிறது. இதைச் சார்ந்த பிறருக்கு பதற்றத்தை (anxiety), பீதியை உருவாக்க ஏதுவாக இருக்கிறது” (பக்.77) என்று கூறும் க.செல்லப்பாண்டியன் இதை விரிவுபடுத்தி எடுத்துரைக்கிறார். தீர்க்கதரிசி, புனிதமதம் என்பதெல்லாம் இவர்களது நனவிலி ஆசையாக வடிவமைக்கப்படும் கற்பனை பிம்பம் என்பதையும், அந்த நனவிலி வேட்கை பயங்கரவாத சாகச செயல்களாக பதிலீடாவதும் உளப்பகுப்பாய்வு (சைக்கோ அனாலிசிஸ் – மன அலசல்) ஆய்வுகள் வழி வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
இஸ்லாமிய பன்மைத்துவத்தை மறுத்து, இந்துத்துவா விரும்பும் ஓரமைவாக்க அடையாளத்திற்குள் இந்திய இஸ்லாமியர்கள் திணிக்கப்படுகிறார்கள் என்பதை பக்.76-ல் சுட்டிக்காட்டுகிறார். புனிதவாதம் என்பது இரண்டு மதவாத அமைப்புகளின் அடிப்படை உளவியலை கட்டமைக்கும் சமூகநனவிலியாகச் செயல்படுகிறது. பொதுவாக, ஓரமைவாக்க மதம் என்கிற வடிவம் ஐரோப்பிய யூத-கிறித்துவ நம்பிக்கையிலிருந்து உருவாகி வந்த ஒன்றே. வஹாபியிசம் என்பதுகூட கிறத்துவ சுவிசேஷம் போன்று இஸ்லாமிய சுவிசேஷமாக உருவான ஒன்றே. அது பழமைவாதமான மதத்தை புதிய முதலாளிய உற்பத்திமுறைக்கு ஏற்ப மறுபிரவேசம் (evangelical) செய்த ஒன்றே. ஆக, மதஅடிப்படைவாதம், பயங்கரவாதம் அனைத்தும் மதங்களின் போர்வையில் வரும் முதலாளிய அதிகார வேட்கையின் விளைவே. அதை உளவியலில் Phallic Power என்பார்கள். அதை அடிப்படையாக் கொண்டு இந்நூல் பங்கரவாத உளவியலை ஆய்வு செய்துள்ளது.
“வெளிப்படையாக நாங்கள் நபிகள் என்று கூறிவிட்டால் அல்லாவிற்கு இணைவைத்தவர்கள் ஆகி விடுகிறார்கள். அது மத நம்பிக்கைக்கு எதிரானது ஆகவே அது தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த தடைசெய்யப்பட்ட ஆசைதான் இப்படி நனவிலியாக வெளிப்படுகிறது.” (பக். 80) என்பதை மிகச்சரியாக உளப்பகுப்பாய்வு செய்துள்ளார். எல்லோருக்கும் அது இந்துத்துவர்களாக இருந்தாலும், இஸ்லாமியத்துவர்களாக இருந்தாலும் இவ்வாறான மதப் புனித பிம்பம் உள்ளுறைந்த உள ஆற்றலாக இருந்து தூண்டி இயக்குவதாக உள்ளது. அதாவது நனவிலி வேட்கை, நனவுமனதில் தனது கற்பனார்த்த பிம்ப ஆசையாகத் தூண்டப்பட்டு, பயங்கரவாதச் செயல்வழியாக அமரத்துவ விருப்பமாக வெளிப்படுகிறது.
“பா.ஜ.க. வின் அரசியல் சூது கோவையில் வெற்றி பெற்றுவிட்டது. தன்னின் இருப்பிற்கு நியாயம் பிறந்தாயிற்று.” (பக். 114) என்ற வாக்கியம் மிகவும் சிந்திக்கத்தக்கது. பாஜக தன்னை நியாயப்படுத்த, நிறுவனமயப்படுத்திக்கொள்ள, அதிகாரத்தைக் கைப்பற்ற நிகழ்த்திய ஒரு எதிர் விளையாட்டே இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது. பிறரைத் தூண்டுவதன் வழியாகத் தன்னைக் கட்டமைத்துத் திடப்படுத்திக் கொள்வது. இந்த ஆட்டத்தை நிகழ்த்தி இஸ்லாமிய உளவியலில் ஒரு ஏதிலி நிலையை உருவாக்கி, அதை செலாவணியாக வைத்து இந்து உடல்களில் இந்துத்துவத்தை முதலீடு செய்துள்ளது. பண்பாட்டு மூலதனத்தில் இஸ்லாமை ஒரு செல்லாக்காசாக மாற்றும் முயற்சியைத் துவங்கி, தனது இந்துத்துவப் பண்பாட்டு மூலதனத்தைக் குவியச் செய்துள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது இந்துத்துவாவின் பண்பாட்டு மூலதனமாக மாறியுள்ளது. இதைப் புரிந்துகொள்ளாத இஸ்லாமிய இயக்கங்கள், தங்கள் இஸ்லாமிய உடல் மூலதனத்தை பயங்கரவாதம் என்ற பெயரில் இழந்து வருகின்றன.இந்த இழப்பை உணர்ந்து, இந்துத்துவ ஆதிக்க அதிகாரம் வலுப்பெற்றுள்ள நிலையில், ஆணாதிக்கத்தின் குறியொழுங்காக உள்ள மகா-லிங்க (Great Phallus) அதிகாரத்தை எதிர்த்து, பெண்ணியத் தன்மையிலான போராட்டத்தைத் துவக்கியுள்ளன.
இஸ்லாமிய சமூகநனவிலியின் இந்த பெண்ணிய போராட்ட வடிவமே இன்றை பாஜக பாசிச அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராக வெடித்துள்ளது. ஷாகின்பாக், வண்ணாரப்பேட்டை, மண்ணடி துவங்கி இந்தியாவின் பல பாகங்களிலும், தமிழகத்தின் பல ஊர்களிலும் பெண்களால் வடிவமைக்கப்பட்ட குடியரிமை பறிப்பிற்கு எதிரான அமைதிவழி உட்கார்ந்து போராடும் போராட்டமுறை. ஒருவகை மக்களின் இயங்குதிரள் (multitude) போராட்டமுறை. இது இந்துத்துவ நனவிலியாகக் கட்டப்பட்ட மத நம்பிக்கை கொண்ட இந்துக்களின் நனவிலியில் நிகழ்த்த முனையும் ஒரு உளவியல் போர் என்றே சொல்லாம். இஸ்லாமிய ஆணியத்தன்மை என்கிற அதிகாரக் குறியைத் தகர்த்து, இஸ்லாமிய பெண்ணியத் தன்மையிலான இந்தப் போர்முறையே இனியான மாற்றுப் போர்முறையாக அமையும் என்பதை இன்றைய இஸ்லாமிய சமூகம் தன்னளவில் உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இந்நூலில் பயங்கரவாத உளவியலைக் கட்டமைக்கக் காரணமாக அமைந்த இயக்கங்களே இன்று இந்தப் போராட்டமுறையைக் கையில் எடுத்துள்ளன என்பது அவற்றின் மாற்றத்தைப் பதிவதாக உள்ளது.
“முஸ்லீம் மக்களிடையே ஒரு விலகல் தெரிகிறது. ஜிகாத், பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் விமர்சனமும் அணித்திரள்வும் தெரிகிறது. இது இன்னும் வீச்சுப் பெறுமானால் மக்களுக்கிடையிலான ஒற்றுமை கேள்விக்குறியாகாது.” (பக்.116) என்பதைச் சொல்லி “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் – குறள்” என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். 2008-ல் எழுதப்பட்ட இந்த வரிகள் தற்போது நிகழ்ந்துள்ள மேற்சொன்ன ஷாகின்பாக் வகை போராட்ட நடைமுறைக்கு இஸ்லாமிய சமூக்தை நகர்த்தியுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. இனி இந்துத்துவ ஆணாதிக்க அதிகாரக் குறியைச் சிதைக்க ‘அவர் நாண நன்னயம்’ செய்வதுதான் சரியாக இருக்குமா? அல்லது அந்த நன்னயத்தை அறியா நாணக்கேடானவர்களாக அவர்கள் இருப்பார்களா என்பதை மற்றொரு உளவியல் ஆய்வே கூறமுடியும்.இறுதியாக, மார்க்ஸ் மனிதனின் ‘சிந்தனையை வாழ்நிலைதான் தீர்மானிக்கிறது’ என்று கூறும் கூற்றை, இவ்வாறாக உளவியலுக்கும் விரிவுபடுத்திக் காணமுடியும். அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் சக்திகள் எப்பொழுதும், புற யதார்த்தத்தை தனது குறியீட்டு மொழியில் மாற்றியமைத்து, அதற்கான வாழ்நிலையை உருவாக்கி, யதார்த்தம் குறித்த தனது அதிகாரத்தை ஏற்கும் பார்வையை உருவாக்கிவிடுகிறது.
இன்றைய புற உலகம் முதலாளியச் சித்தபிரமையால் (paranoia) பார்க்கப்படுகிறது. அல்லது முதலாளியம் உருவாக்கிய உலகைப் பார்க்கும் ஒரு பிறழ்ந்த மனநிலையே இன்றைய இயல்பான மனநிலையாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த இயல்பு மனநிலையை உணர்வதற்கான உளவியல் ஆய்வுகள் அவசியப்படுகிறது. அவ்வகையில் சிற்சில சிக்கல்கள் இருந்தாலும் க. செல்லபாண்டியனின் இந்த பயங்கரவாதம் பற்றிய உளப்பகுப்பாய்வு முக்கியமான ஒரு முன்னெடுப்பு.
ஆசிரியர் குறிப்பு: க. செல்லபாண்டியன் மதுரையில் வசித்துவருகிறார். 90-களில் மதுரையில் மார்க்சிய இடதுசாரி சிந்தனையுடன் இயங்கியவர். மாற்று சிந்தனைகளை முன்வைக்கும் ‘புறப்பாடு’ என்ற இதழையும், கார்முகில் பதிப்பகத்தையும் நடத்தி வந்தவர். தமிழக இடதுசாரி இதழ்களில் முக்கியமான பல கட்டுரைகள் புறப்பாடு இதழில் வெளிவந்துள்ளது. அதன்பின் ‘மற்றமை’ என்கிற உளவியல், உளபகுப்பாய்வு ஆய்விதழை நடத்தி வருகிறார். இந்நூல் அவரது சொந்தப் பதிப்பில் 2008-ல் வெளியிடப்பட்டது. இவரது பிற நூல்கள் “ஔவையின் உளவியல் – பிராய்டு லெக்கானின் மன அலசல்”, “ப்ராய்டு, லெக்கானிய பார்வையில் சமூக, அரசியல் பிரதிகள், கதைகள், கவிதைகள், பாடல்கள்”
கார்முகில் பதிப்பகம்
விலை: 80 பக்கம்: 124