புத்தகம் பேசுது இதழாளர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த இனிய உரையாடலைத் தொடங்கியிருக்கும் உங்களுக்கு என் அன்பும் பாராட்டும்.
தமிழ்க் கவிதை உலகில் தவிர்க்கமுடியாத ஆளுமையான உங்களுக்கு புத்தகம் பேசுது இதழ் சார்பாக வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவிக்கிறேன். ஒரு தமிழ்ச்சிறுமியாக வாழ்ந்த அந்த இனிமையான நாட்களை எங்கள் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?
முதலில் என்னை அந்த விளாமர நீளநிழல் விளையாட்டு உலகிற்கு அழைத்துச் செல்லும் கேள்வி வைப்புமுறைக்கு நன்றி. எனது பிறந்த ஊர் திருவாரூர். தாத்தா இரயில்வே ஊழியராக இருந்தபோது அம்மாவின் சுகப்பிரசவத்திற்காக அவ்வூர் சென்றார்கள் என்று ஆரம்பிக்கிறது என் சரிதை! முதல் குழந்தை. அப்பாவின் தாயார் பெயரும், எங்கள் குடும்ப தெய்வத்தின் பெயரும், மதுரை நாயகியின் பெயருமாகிய மீனாட்சி என்மீது வரையப்பட்டது. அப்பா பெயர் இராமச்சந்திரன் எனது கையெழுத்து இரா.மீனாட்சி அதுவே கவிதையுலகப் பெயராகவும் நிலைத்துள்ளது. அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து ஆறு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார்கள். அதனால் ஒவ்வொரு புதுக்குழந்தை வரும்போதும் மூத்த குழந்தைகள் அம்மாவழிப் பாட்டி தாத்தா வீட்டிற்கு வளர்ந்துவர அனுப்பப்பட்டுவிடுவார்கள். எனவே தாத்தா எந்தெந்த ஊருக்கெல்லாம் மாற்றலாகிப் போனாரோ அங்கெல்லாம் நானும் நிழலாகப் போய்க்கொண்டிருந்தேன். தனுஷ்கோடியில் இரயில்வே ஸ்டேஷன் இருந்த காலத்தில் கடலலைகளைப் பார்க்கவும் கரை மணலில் நடைபழகவும், சுழல் காற்றில் பறந்து திரியவும் மழலைக்காலம் உவர்ப்பாயிற்று. அடுத்து கேரள தமிழ்நாடு எல்லை செங்கோட்டை வாசம். குற்றால அருவிக்காட்சியுடன் பசுமைமலைத் தொடர்ச்சியுடன் ஆரம்பப்பள்ளிக்கால ஆண்டுகள் இனிப்பாயிற்று.
ஒரு பாரதவிலாஸ் சூழல் என்னை வளர்த்தெடுத்தது. பலவேறு சமயத்தினரையும், பலவேறு வழிபாட்டு முறைகளையும் தெரிந்துகொள்ள இரயில்வே குடியிருப்பு வாழ்க்கை அஸ்திவாரமிட்டது எனலாம். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவப்பருவம் சொந்த ஊரான விருதுநகரில் பெற்றோரின் வயலில் நடப்பட்ட பயிர்போல செழித்து வளர்ந்தது. அன்றைய விருதுநகர் ஓர் அருமையான தாய்நகரம். பல கிராமங்களின் கூடுதுறை. வியாபார ஸ்தலம் குறிப்பாக கரிசல்காட்டு விளைபொருள்கள் பஞ்சு, மிளகாய், துவரை என வளங்காட்டிய சந்தை மையம். தாத்தா 1890 இல் கட்டிய எங்கள் பெரிய வீடு ஊரின் மையத்தில் இருந்தது. வீட்டின் முன்புறம் அக்ரஹாரம் பின்புறம் பெரியபள்ளிவாசல் கிழக்கே மாரியம்மன் கோவில் வெயிலுகந்த அம்மன் கோவில் மிகப்பிரம்மாண்ட கோபுரங்களைக் கொண்ட க்ஷத்திரிய வித்யாசாலைப் பள்ளிக்கூடம். பக்கத்துப் பிள்ளையார்கோவில் திடலில் திறந்தவெளி வானொலிக்கூடம். சற்று தள்ளிப்போனால் பொட்டல். சுதந்திர நினைவுத் தூண் கொடிமரம். அந்த இடத்திற்கு தேசபந்து மைதானம் என்றும் பெயர். அல்அங்காடி நாளங்காடி பலவும் உண்டு. பள்ளி செல்லும்போதும், திரும்பும்போதும் வேடிக்கை பார்க்க பல நிகழ்வுகள் குறைவின்றி நிறைந்திருக்கும். புழுதி பறக்கும் இவ்வூரில் அரசியல் பொறி பறக்கும். எங்கள் வீட்டுத் திண்ணையிலும் அதே சாயல்கள் பல அமர்ந்து இருந்தன.!

அதே புழுதித் திடலில் ஒரு கீற்றுத் தட்டி மறைப்பினுள் கட்டிலில் படுத்துக்கிடந்த தியாகி சங்கரலிங்கனார் கண்முன் நிழலாகத் தெரிகிறார் இப்போதும். சென்னை மாகாணத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றுக என சுமார் 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார். அவரிடம் தினமும் சென்று எம் நிருபர் அப்பா பேசிவிட்டு வந்து வருத்தப்படுவார். அவர் மறைவுச்செய்தி கேட்டு என் தோழியரை அழைத்து வந்து எங்கள் வீட்டுத் திண்ணையில் செந்தமிழ் நாடெனும் போதினிலே எனும் பாரதியார் பாடலுக்குக் கும்மியடித்து அஞ்சலி செலுத்தியது இன்னமும் பசுமையாக இருக்கிறது.
நாம் தமிழ்நாடு என்று பலகை மாட்டிக்கொண்ட போது தியாகி சங்கரலிங்கனார் மழைநீராவது குடித்து ஆன்மிக விடுதலை பெற்றிருப்பார். நான் விருதுநகர் நகராட்சிப் பெண்கள் பள்ளியில் படித்ததால், பலவேறு சமூகத்தட்டுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து எனது பள்ளிப்பருவம் நல்ல கல்விச்சூழலையும், பொருள்வாழ்வின் அர்த்தங்களையும் ஆழமாக உணர்த்தியது பள்ளியிலிருந்து திரும்பும்போது சலவைத் தொழிலாளர் வீட்டுத் துணிமூட்டை சிம்மாசனம். பூக்காரத் தெரு குதிரை வண்டிக்காரர் வீட்டில் துவரைமாறு அடுப்பு நெருப்பில் கேப்பைத் தோசை சிறப்பு விருந்து மாட்டாஸ்பத்திரியில் பூப்பந்து விளையாட்டுப்பயிற்சி, விடுமுறை நாட்களில் கௌசிக மகாநதி எனும் காட்டாற்றைத்தாண்டி பருத்திக் காடுகளினூடே நடந்து சென்று பாவாலி கிராமத்தில் கொய்யாப்பழம் கொய்தல், பகிர்ந்து உண்ணல், கிராமத்து விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு நாட்டார் வழக்கில் தோய்தல் என்று எனது இளம்வயது நாட்கள் பெற்றோரின் பொருளாதார வாழ்வில் சிக்கல்கள் இருந்தாலும் – தேடலும் தேடிக்கண்டடைதலும், புதியனவிரும்பலுமாக, பயனுள்ள கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அனுகூலங்களையெல்லாம் ஏற்றபடி இயல்பாகவே சென்றன எனலாம்.
அப்பா பத்திரிகைச் செய்தியாளர். அம்மா கல்கி, ஆனந்தவிகடன் நேசிப்பாளர் எனவே நல்ல வாசிப்புச்சூழல் வாய்த்தது. உறவினர்கள் நிறைய புத்தகங்களைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். புரிந்ததோ புரியவில்லையோ புத்தகங்களை உரிமைகொண்டாடி அடுக்கி எடுத்து வைத்துக்கொண்டு வேண்டும்போது படித்துக்கொள்வேன். குழுவுணர்வு மகிழ்ச்சி தந்ததுபோலவே தனிமைவாசிப்பும் தனித்திருந்து மனிதர்களை வேடிக்கை பார்ப்பதும் எதையாவது எழுதிக்கொண்டு இருப்பதும் எனது உள்ளத்தை ஆற்றுப்படுத்தியது என்று சொல்லலாம். பள்ளியில் எந்தமாதிரியான விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், போட்டிகள், என்றாலும் விருப்புடன் கலந்துகொண்டு எனது பங்களிப்பைச் சிறப்புடன் நிறைவேற்றும் உத்வேகமும் கூடவே நிரம்பியிருந்தது. மாணவியர் நடுவே ஒரு தலைமைத்துவத்தையும், பெரியோரிடையே எளிமையான தொண்டுள்ளத்தையும் ஒருசேர வளர்த்துக்கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் பெரும்பேறு என்றே எண்ணுகிறேன்.
எனது இளமைக்காலத்தில் விருதுநகரமே ஒரு மாபெரும் சமுதாயப் பள்ளியாக அமைந்திருந்தது. ஏராளமான திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள் நிரம்பியிருந்தன. ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பொங்கல் தீச்சட்டி, மாரியம்மன் திருவிழா நாட்கள் பொருட்காட்சியும், கோவில் கடைகளும், நாடகங்களும், நாதஸ்வரக் கச்சேரிகளும், நையாண்டி மேளமும் ஊரின் கலையழகுகளைப் பக்திப் பரவசத்துடன் பகிர்ந்தளிக்கும். ஆஸ்திக சபைகள் பலவேறு அருமையான பக்திச் சொற்பொழிவுகளுக்கு ஆதரவளித்ததால் தமிழ்வல்ல அறிஞர்கள் கி.வா.ஜ, குன்றக்குடி அடிகளார். கிருபானந்த வாரியார் எனப் பல பெருமக்களின் சொற்பொழிவுகள் நிகழும். தேசிய நீரோட்டத்தில் பெருந்தலைவர் காமராசரின் சொந்தஊர் என்பதோடு காங்கிரஸ் தியாகிகள் பலரும் வாழ்ந்திருந்ததாலும் அகில இந்தியத் தலைவர்கள் வந்து செல்வார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரும் அழகிய தமிழில் அரசியல் உரைப்பார். ஜஸ்டிஸ் கட்சியின் கையும் ஓங்கியிருந்ததால் திராவிட முன்னேற்றக்கழக முன்னோடிகளாக அமரர் இராமசாமியும், ஆசைத்தம்பியும் அவர்களது அபிமானிகளும் நிரம்பியிருந்தனர். ஆஸ்திகம், நாஸ்திகம், தேசியம், திராவிடம் எனப் பல வடிவங்களுக்கும் மைய மண்டபமாக விளங்கியது விருதுபட்டி எனும் விருதுநகர் இந்தச்சூழலில் ஓர் உழைக்கும் பத்திரிகையாளரின் வீட்டில் வளர்ந்த எனக்குள் எல்லாருடைய வார்த்தைகளும் உள் இறங்கி இரசவாதம் புரிந்தன என்றால் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.
இலக்கிய உலகத்தால் மதிக்கப்பட்ட ‘எழுத்து’ இதழில் எழுதிய பெருமை இன்றைக்கு உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
‘எழுத்து இதழில் எனது படைப்புகளை வெளியிட்டு, எழுத்துயுக புதுக்குரல்கள் வரிசையில் வார்த்தெடுக்கப்பட்ட கவிஞர்கள் பலருள் முதல் மகளாக வளர்த்தெடுத்தார்கள் அமரர் சி.சு. செல்லப்பாவும், விருதுநகர்க் கல்லூரித் தமிழ்த்துறையில் பணியாற்றிய இலக்கிய விமரிசகர் பேராசிரியர் சி. கனகசபாபதியும். நம்வீடு பேருந்துநிலையம் அருகில் இருந்ததால் சி.சு. செல்லப்பா எந்த நேரத்திலும் தனது இலக்கியப் படைப்புகளை ஒரு மஞ்சள் பையில் சுமந்தபடி நம் இல்லத்திற்கு வந்து செல்ல வாய்ப்பாக அமைந்தது. பல நேரங்களில் அப்பா, அம்மாதான் அவருடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.
பேராசிரியர் சி.க.வும் இணைந்துகொள்வார். கோவையில் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த நான் ஆண்டு விடுமுறை நாட்களில் விருதை வரும்போது எனது சந்திப்பும் சேர்ந்து கொள்ளும். எனது கையெழுத்து ஏடுகளை ஏற்கனவே படித்துச் சிலாகித்திருந்த பேராசிரியர் கனகசபாபதி, சி.சு செல்லப்பாவிடமும் காண்பித்தார். அவரும் ஏட்டைப்புரட்டிப் பார்த்துவிட்டு சில பக்கங்களைப் பிரதி எடுத்துத்தரச்சொல்லி சென்னைக்கு எடுத்துப்போனார். புதுக்கவிதை பிதாமகர் ந. பிச்சமூர்த்தியிடமும் காட்டி மகிழ்ந்திருக்கிறார். எனது கவிதை “பன்னீர்ப் பூ” முதலில் ‘எழுத்து’ வாகனத்தில் பவனி வந்தது. வேறுசில கவிதைகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டன. எழுத்துக்கால கவிஞர் வரிசையில் எனக்கும் ஓர் இடம் நிரந்தரப்படுத்தப்பட்டது இவ்வாறாகத்தான்! பிறிதொரு மாதத்தில் சென்னை செல்ல நேரிட்டது. சேலம் கவிஞர் முருகு சுந்தரம், நான், செல்லப்பா அழைப்பின் பேரில் ந. பிச்சமூர்த்தி அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம் அவரது வீட்டில் எங்களுக்கு மதிய உணவும் ஏற்பாடாயிற்று. மறக்கமுடியாத ஓர் அபூர்வ கவிதாதேவி தரிசனம் அன்று நிகழ்ந்தது. எனக்குள் நட்சத்திரங்களின் பிரகாச ஜொலிப்புகள். இச்சந்திப்பினைப்பற்றி கவிஞர் முருகு சுந்தரம் “ஒரு கவிஞரின் டைரி” என்னும் பதிவாக கவிஞர் மீராவின் பத்திரிகையில் எழுதியிருந்தார்.
எழுத்துவில் வந்த எனது முதல்கவிதை இளம் வயதின் இயலாமை, வேறுபட்ட கோணத்தில் முரண்பாடுகளைப் பார்க்கும் மாற்றம் எனும் இயல்புகளின் வெளிப்பாடாக இருந்தது எனலாம்! விருதுநகரில் பேராசிரியர் குடியிருப்பில் பன்னீர்ப்பூக்கள் உதிர்ந்த வேளையில் எழுதினேன் அது எழுத்து அச்சில் வந்தபோது இப்படி அமைந்தது கேளுங்கள்
பன்னீர்ப்பூ
மழைக்கனம்
உதிர்ந்தது பன்னீர்ப்பூ
மண்ணுக்குத்தான்
மேனியெல்லாம் நீர்க்கோவை
வழுக்கியது பன்னீர்ப்பூ.
விண்ணுக்குப் பறந்திருந்தால்
மீனோடு சிரித்திருக்கும்
வால் முளைத்த விண்மீனாய்த்
தெரிந்திருக்கும்.
காலத்தின் கோளாறோ?
காற்றோடு கண்ணேறோ?
மண்ணுக்கு வந்ததாலே
வழுக்கியது பன்னீர்ப் பூ
40 ஆண்டுகளுக்குப் பின் அதே பன்னீர்ப்பூ ஆரோவில் சாலையில் பொழிந்திடும் வேளையில் என்னவாயிற்று என் கவிதை நெஞ்சிற்குள் தெரியுமா?
பன்னீர்ப் பூவே!
சின்னப்பெண் நான்
உன்னைப் பார்த்தபோது
உன் உருவமே முன்நின்றது
கண்ணில் பட்ட நீ
வால்முளைத்த விண்மீனாகாமல்
மழைநாளில் பூமிக்கு வந்து
மண்ணில் வழுக்கியதை
எண்ணிக் குமைந்தேன் அன்று.
பொழுதுபுலரும்
இந்தக் கார்த்திகைக் காலையில்
குடியிருப்புச் சாலையில்
ஆளரவமற்ற பொழுதுகளில்
மழையெனப் பொழிந்து
மனமெல்லாம் நிறைந்து
வாசனைக் காற்றில் கரையவிட்டு
வானத்திசைக்கு உயர்த்திச் செல்கிறாய்
பன்னீர்ப் பூவே!
இயற்கைக் கோவிலின் மரக்கிளை விளக்கே
பொன்துகள் பதிந்த வெள்ளிப் பூவே
திருவுருமாற்றம் உனக்கா எனக்கா?
பன்னீர் பூக்களுடன் பிரிதொரு காலத்தில் எனும் இக்கவிதையை வாசித்த சில மதிப்புரையாளர்கள் மீனாட்சியின் 40 ஆண்டுக் கவிதையுலகப் பரிணாமவளர்ச்சியின் ஒரு சுழற்சியை நம்மால் பகிர்ந்துகொள்ள இயலுகிறது என்று மொழிந்தார்கள். எனக்கு என்னை உணர்த்தியது இக்காலக்கட்டம் என்பேன். எழுத்து வைத்த முதல் புள்ளி பெரிய தேர்க்கோலமாகி என்னை ஜனவாசம் செய்ய அழைத்துவந்துள்ளதை எப்போதும் நன்றியுடன் நினைவிலேந்துகிறேன். கவியாளுமைகள் பிச்சமூர்த்தியும், செல்லப்பாவும் வழிகாட்டியபடி இன்றளவும் புத்தம்புது இளம்படைப்பாளிகள் யார் தமது படைப்புகளைச் கொணர்ந்தாலும் படித்து, ஆலோசனை வழங்கி, பாராட்டி, மகிழ்கிறேன். நன்றியுணர்வின் அழகிய நீட்சி.
எழுத்து என்னை வளர்த்தெடுத்துக்கொண்டே வருகிறது இன்றளவும்!
எழுத்து இதழுக்கு எழுதியபோதே கவிஞர் கண்ணதாசனின் இலக்கிய இதழான கண்ணதாசனிலும் எனது கவிதைகள் இடம் பெற்றன. பலராலும் மீண்டும் மீண்டும் எடுத்தாளப்படும் “மதுரை நாயகியே”
உன் காலத்தில் அழகி நீ
எப்படி உலாப்போனாய்?
எனக்கேள்வி எழுப்பிய கவிதை கண்ணதாசன் இதழில் உச்சரிக்கப்பட்டதே ஆகும். அந்த ஒற்றைக்கவிதை என் கவிதை வாழ்வில் ஒரு பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த படைப்பு கவியரசு கண்ணதாசனை நினைவுகூர இதோர் நல்வாய்ப்பு. இக்கவிதைகளை எல்லாம் உள்ளடக்கிய முதல் கவிதைத் தொகுப்பு நெருஞ்சி 1970 இலும் சுடுபூக்கள் 1978 இலும் வெளியாயின.
ஒரு கால இடைவெளிக்குப்பின் ஆரோவில்லில் வந்தமர்ந்தபின் சகோதரர் மீராவின் தூண்டுதல் கடிதங்களால் அடுத்த படைப்பு தீபாவளிப் பகல் அன்னம் வெளியீடாக வந்தது. அடுத்தது இருமொழி நூலாக மறுபயணம் (Another Journey) ஆரோவில் வெளியீடு. இவை எனது 20 ஆம் நூற்றாண்டுக்கவிதைகள்! இவற்றை எல்லாம் இணைத்து 2002 இல் “மீனாட்சி கவிதைகள்”எனும் அழகிய தொகுப்பினை “காவ்யா” சண்முகசுந்தரம் மிக்க ஆர்வத்துடன் சென்னையில் வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார். அன்புநிறை வலம்புரி ஜான் தலைமை. எழுத்தாளர் சுஜாதா வெளியிட, சகோதரர் மாலன் நூல் மதிப்பீடு செய்து நலம் பாராட்ட நல்ல நிகழ்வாக அமைந்தது. அருமையான விழா. அதற்கு முன்னும் பின்னும் இப்படி வெளியீட்டுவிழா நடத்தி நூல்களை நான் அறிமுகம் செய்ததில்லை.!
எனது 21ஆம் நூற்றாண்டுக்கவிதைகள் இதுவரை வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு, ஓவியா, மூங்கில்கண்ணாடி என நூல் வலம் வருகின்றன. இடையே “கூழாங்கல்”இருமொழித் தொகுப்பாக தலைநிமிர்ந்தது.
கவிதை நேசிப்பாளர்களின் அழைப்பின் பேரில் பலவேறு நாடுகளிலும் இந்தியக்கவி சம்மேளனங்களிலும் எனது தமிழ்க்கவிதைகள் ஒலியலைகளை எழுப்பியுள்ளன. பரிசுகளையும், மதிப்புறு அங்கீகாரங்களையும் பெற்றுத் தந்துள்ளன. இப்பெருமைகளை எல்லாம் கவிதைத் தாய்வீடான புதுக்குரல் எழுத்துவிற்கே சமர்ப்பிக்கின்றேன்.

இயற்கை சூழ்ந்த ஆரோவில் வாழ்வு உங்களை ஆன்மீகம் பக்கம் அதிகமாக ஈர்த்துள்ளதா படைப்பிலக்கியம் சார்ந்து அதிகமாக ஈர்த்துள்ளதா இவைகளைத் தாண்டி, இங்கே சுற்றியுள்ள கிராம மக்களின் மேம்பாடு குறித்து செயல்படச் செய்துள்ளதா? நீங்கள் பல்வேறு முகங்களைக் கொண்டிருப்பதாகவும் உங்களிடம் காண முடியவில்லை; இந்த மாயம் எப்படி நிகழ்கிறது?
நாம் யார் எனும் தேடல் எப்போதும் என்னுள்ளே வியாபித்துள்ளது. ஆரோவில் சர்வதேசநகரம் அரவிந்த அன்னையின் திருக்கனவு. சாதி, சமய, இன, நிற, அரசியல் நிலைப்பாடு இவற்றையெல்லாம் கடந்த மாந்த இனம் ஒன்றிணைந்து வாழ்வதற்கான பரிசோதனைச் சாலை. சர்வோதய தர்மகர்த்தா பொதுவுடைமைப் பொருளாதாரச் சித்தாந்தத்தில் ஊறித்திளைத்திருந்த சேவகியான எனக்கு சேவைக் கனவுபூமியாக ஆரோவில் களம் பணியிடமாக வாய்த்தது நான் பெற்றபேறு.ஆரோவில் பகுதி செம்மண் பாலைப்பரப்பு. கடுமையான உழைப்பினால் பன்னாட்டுச் சேவகர்கள் ஒரு பசுமைப்பகுதியை உருவாக்கியுள்ளனர். இயற்கையின் நல்விளைவுகளைக் கடந்த 52 ஆண்டுகளின் பயன்களை உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்திருக்கும் பெரும் கூட்டுக்குடும்பம் எங்களுடையது! இத்திருப்பணியில், 50 நாடுகளைச் சேர்ந்த மக்கள் நாம் விருப்புடன் ஈடுபட்டுவருகிறோம்.
முடிவுறாக்கல்வி, மூப்புறா இளமை, இடையறாத முன்னேற்றம் இவற்றிற்கான நிலையுறு கேந்திரமாக விளங்குகிறது ஆரோவில். எனவே ஆரோவில்வாசியாக தன்னையுணர்தல், சுற்றியுள்ள கிராம மக்களின் இணைவளர்ச்சிப் பணிகள், இவற்றோடு என் இலக்கிய முயற்சிகள் எல்லாம் ஒன்றினுள் ஒன்றாகப் பின்னிப் பிணைந்துள்ளன. அவற்றின் ஒருங்கிணைப்பே எனது முழுமை. தனித்தனித் துண்டுகளாகப் பிரிந்து கிடப்பதில்லை. ஒவ்வொன்றும் வேறுவேறு அல்ல மேலும் சொல்வதானால் என் எழுத்துகளில் ஆரோவில் வாசமும், தமிழ்க்கிராமங்களின் முன்னேற்றத் தாகமும், பன்னாட்டு மாந்தர்களின் ஆளுமையும் ஒன்றாகக் கலந்து விரவியுள்ளன. எனது இந்த நான்கு பத்தாண்டு ஆரோவில் படைப்புகளில் தங்களைப்போன்ற வாசிப்பாளர்கள் ஒத்திசைவினை மதிப்பிட்டு உரைப்பீர்களானால் எனது இலக்கு நோக்கிய பயணம் மேலும் ஒளியூட்டப்பெறும். நல் வார்த்தைகளுக்கு நன்றி. பிரதிபா!
இன்னமும் சொல்வதானால் இங்கு எனக்கோர் ஆதர்சம் பாரதியின் உரைவீச்சு
நமக்குத் தொழில் கவிதை
நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்’
இம்மூன்றும் என் வாழ்விலும் பொருந்திவரவே பணியோகத்தில் நிலைத்திருக்கிறேன். ஒத்தகருத்துடையோர்கள் பலர் சூழ்ந்திருக்கிறார்கள். அனுபவங்களே ஆசிரியர்களாக வழிநடத்த எனது 50 ஆண்டுக் கவிதை வாழ்க்கை மேலும் எழுதிச் செல்கிறது.
அரவிந்தரின் வாழ்வியல் தத்துவங்கள் இங்குள்ள கலாச்சாரத்தின் நடைமுறை சார்ந்ததாக உங்களால் சொல்ல முடியுமா? அவை சாமானியனுக்கான விடுதலையை முன் மொழியுமா? நம் தேசத்தின் புரையோடிப்போன சாதியம் வளர்த்துவிட்ட தீமைகளையும், உயர்சாதி வன்மங்களையும் அதற்கெதிரான ஒடுக்குமுறைகளுக்குத் தீர்வாக அவர் முன் மொழியும் திட்டங்கள் என்னென்ன?
நான் ஸ்ரீஅரவிந்தரின் படைப்புகளை இன்னமும் வாசித்துக்கொண்டிருக்கும் ஆரம்பநிலை மாணாக்கி. இம்மாபெரும் ஆய்வுத் தலைப்பினுள் அரவிந்தோனியப் பேரறிஞர்கள் உட்புகுந்து நூற்றுக்கணக்கான விரிவுரைகளை உலக மொழிகளில் படைத்துள்ளனர். என்னுடைய சிட்டுக்குருவி கீச்சுக் கீச்சு விளக்கம் எள்ளளவாவது விடையாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை. எனது தமிழ்க் கவிதைகளைப் பற்றி மட்டும்தான் உரையாடப் போகிறோம் என்று எண்ணியிருந்தேன்.!
ஸ்ரீஅரவிந்தரின் மாபெரும் ஆங்கிலமொழிக்காப்பியம் சாவித்ரி உலக இலக்கியங்களுள் இடம் பெற்றுள்ள மாபெரும் படைப்பு. அதன் மையக்கருத்தே ஒட்டுமொத்த மானுடப் பரப்பின் பரிணாமவளர்ச்சிக் கூறுகளுடன் விடுதலை பெறும் உருமாற்ற வழிமுறைகளின் உள்ளடக்கம் பற்றியதே. பிரதிபா! உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் விருதுநகர் ரவிஆறுமுகம் IPSதான் சாவித்ரி நெடுங்காப்பியத்தை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். வருத்தம் அவர் இல்லை இப்போது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்துள்ள அவரது அருமையான உழைப்பிற்காக சாகித்ய அகாதெமி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. ரவி நம் குடும்ப நண்பர். அவரை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.
ஊருக்கு உழைப்பது யோகம் என்று அரவிந்தருடன் இணைந்து குரல்கொடுத்தவர் மகாகவி பாரதியார். நம்முடைய கலாச்சாரம் என்று நீங்கள் குறிப்பிடுவது நமது தமிழக, இந்தியக் கலாச்சாரம் என்றால், ஈகைத்திறன், வருவதைப் பகிர்ந்துண், தெய்வம் நீ என்றுணர் எனும் புதிய ஆத்திசூடியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் சங்ககாலக் கணியனின் உரத்த சிந்தனையும், தனிப்பெருங்கருணையை மொழிந்த வள்ளலாரின் அருள்மொழியும்தாமே அவற்றின் கனிச்சாறு? ஸ்ரீஅரவிந்தரும் இவ்வளமான அனுபவப் பொழிவுகளை உள்வாங்கியதால்தான் மாந்த இனத்தை தம் வசுதேவகுடும்பம் என்கிறார்.
மதங்களின் பெயரால் நிகழும் பொய்மையின் விளைபயன்களை வரலாற்று ஏடுகள் காட்டும் காட்சிகளால் தமது படைப்புகளில் விவரிக்கிறார். மிகப்பெரிய மதப்பற்றார்வமும், கடவுள் பக்தியும் மிக இருண்ட வாழ்க்கையில் ஒரு குழம்பிய நிலையாகவும் மிக இழிந்த கடைநிலையாகவும் நீண்ட தேக்கமும் கொண்டு அடைபட்டுக் கிடந்ததைக் குறிப்பிடுகிறார். கேள்விகேட்பாரற்ற கொடுமை, அநியாயம், அடக்கியொடுக்கக்கூடிய ஆட்சி, மேல்மட்டத்தில் ஏதோ ஓர் அறிவாற்றலின் ஒடுக்குமுறை விதிகள் இவற்றால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பிரிவினை; ஏதோ ஆண்டவனே அருளியது போல ஒருமாயத்தினை உண்டுபண்ணிய வரலாறு அதன் காரணமாக பலவேறு சமூகங்களில் கிளர்ந்தெழுந்த புரட்சிகளின் விளைவுகளைப் பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார் ஸ்ரீஅரவிந்தர். சான்றாக Human Cycle மனிதசக்கரம் நூல் சமூக, பொருளாதார அமைப்புகளைப்பற்றி விரிவாகப் பேசுகிறது. பெரும்பாலும் அவரது விசாலமான பார்வை வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே வெளிப்படுகிறது. ஸ்ரீஅரவிந்தரின் பெற்றோர் அவரையும் அவரது சகோதரர்களையும் மிகச்சிறு வயதிலேயே இங்கிலாந்தில் ஆங்கிலக்கல்வி பயில ஆங்கிலேயக் குடும்பத்தாருடன் விட்டுவிட்டு நாடு திரும்பிவிட்டார்கள். வளர்பருவத்தில் மூன்று சகோதரர்களுடன் குளிருக்குரிய ஆடைகளின்றி, உண்பதற்கு ரொட்டி வாங்க வசதியின்றி, ஈரஅறைகளில் வறுமையை மென்றுதின்று வளர்ந்தவர் அரவிந்தர் ஏழ்மையின்பாடுகளை நன்கு உணர்ந்தவர்.
இளம் வயதில் லண்டன் கலாசாலைகளி்ல் ஆங்கிலத்துடன் இலத்தீன், பிரெஞ்சு, கிரேக்கம், ஸ்பானிஷ் போன்ற உலக மொழிகளைக் கற்றுக்கொண்டவர். சிறுவயதிலிருந்தே கவிதை அவருக்குள் ஊற்றெனப் பொங்கிப் பிரவாகித்தது. இளைஞராக பாரதம் திரும்பிய பின்னரே முதன்முதலில் இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். தாய்மொழி வங்காளம், இந்தியக்கலைமொழி சமஸ்கிருதம், மூத்தமொழி தமிழ் என ஆசிரியர்களிடம் அமர்ந்து பாடம் கேட்டு, பலமொழிக்கூறுகளை ஆய்வுசெய்யும் அளவிற்குக் கற்றுணர்ந்தார். அந்நியராட்சியிலிருந்து பாரதம் விடுதலை பெறவேண்டும் என்பதோடு அடிமைப்பட்டுக்கிடந்த மக்களின் அறியாமை விலங்கொடித்து எழவேண்டும் என்பதிலே தீவிரம் கொண்டார். அன்றைய தேசபக்த இளைஞர்களுக்கு அவரது எழுத்துகள் பெரும் ஆதர்சம். வீரஞானி விவேகானந்தரும் சகோதரி நிவேதிதையும் ஸ்ரீஅரவிந்தரின் மனதிற்கு நெருக்கமானவர்கள். ஸ்ரீஅரவிந்தரின் அறிவார்ந்த உரைகளும், மக்கள் திரளை அச்சமற்ற தீரர்களாகத் தட்டி எழுப்பி, தங்களது நாட்டின் பெருமைகளுடன் தலைநிமிர்ந்து நிற்கச் செய்ய எழுதிக்குவித்த படைப்புகளும் நமது பாரதியாருக்கு உற்சாகமளித்தன. ஸ்ரீஅரவிந்தர் தமிழ் மண்ணிற்கு வந்து யோகநெறியில் நிலைகொள்ளும் முன்னரேயே அவரைப்பற்றி பாரதியார் நிறைய எழுதித் தமிழர்க்கு அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார்.
வரலாற்றுக்குள் வரலாறாக ஒரு செய்தியினைப் பகிர்ந்துகொள்கிறேன். பாரதியாரையும் அரவிந்தரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட அந்நாள் இளைஞர் சிவா – பின்னாளில் புதுச்சேரியின் பிரம்மாண்ட ஆளுமைகளுள் ஒருவரான ஜஸ்டிஸ் சிவா ஆவார். சிவா தமது மாணவ நாட்களில் இப்பெரும் மகாமனிதர்களிடம் பழகியதால் தனக்கு நேரிட்ட அனுபவங்களை எழுதியிருக்கிறார். அது ஒரு காலப்பெட்டகம். அந்நூல் நமக்கொரு வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஸ்ரீஅரவிந்தரிடம் சென்ற சிவா ஒருநாள் தனது மன உளைச்சலைச் சொன்னார். ‘’நானொரு கனவு கண்டேன் இரண்டு விசாலமான ராஜபாதைகள் என்முன் தோன்றின. ஒன்றில் நிசப்தமும் அமைதியும் நிலவின. மற்றொன்றில் கம்பனும் காளமேகமும் கவிமழை பொழிந்தனர் நான் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் தெரியவில்லையே என்றார்.
இரண்டு பாதைகளுக்குள்ளும் வேற்றுமை காண்பதைவிட்டு ஒற்றுமையைக் காண்பதுதான் உயர்ந்த லட்சியம் என்று சொல்லிக் கொண்டே வந்த ஸ்ரீஅரவிந்தர் – நான் சக்திபெறும் வழியை உனக்குக் காண்பிக்கிறேன். அந்த சக்தியை உபயோகிக்கும் வழியை பாரதியார் உனக்குக் காண்பிப்பார்’’ என்று கூறியதோடு, ‘’உன் அறிவு முதிர்ச்சியை அடைய, எந்தெந்தத் துறையில் மனித வாழ்வை உயர்த்தமுடியுமோ அவைகளில் உன் அறிவைச்செலுத்து. இதுதான் யோகம். இந்த ஆஸ்ரமத்தில் சக்தியைப் பெறுகின்றாய். பாரதியாரின் ஆஸ்ரமத்தில் அதை அழகான வகையில் அலங்கரிக்கின்றாய். இங்கு சக்தி விதைகள் உன் உள்ளத்தில் ஊன்றப்படுகின்றன. பாரதியாரின் சேர்க்கையினால் அவைகள் வளர்ந்து விருக்ஷங்களாகின்றன. வாழ்வே யோகம் யோகமே வாழ்வு என்று அறிவுரை வழங்கியதும் சிவா பணியோகத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அரவிந்தமும், பாரதியிசமும் நீதியரசர் சிவாவிற்கு இரு கண்களாயின. நம் பாரதியாரின் ‘எல்லாரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் நாம் எல்லாரும் இந்திய மக்கள்’ என்ற ஓங்கிய பெருங்குரலை ஸ்ரீஅரவிந்தர் மதித்துப் போற்றுவது ஒரு மாபெரும் புரட்சித் திட்டத்திற்கான ஆசிகள் அல்லவா?
ஸ்ரீஅரவிந்தரையும் மகாகவி பாரதியாரையும் அருகிருந்து பார்த்தறிந்த பாவேந்தர் பாரதிதாசன் தமது கவிதா மண்டலம் பத்திரிகையில் ஒரு பாடல் வெளியிட்டுள்ளார். அதில் அரவிந்த இளம்சிங்கம் அறிஞர் கோமான் என்று குறிப்பிடுவார்.
“ஆங்கிலத்துப் பெருங்கவிஞன் அரவிந்தர்க்கோ
அணிநாட்டின் பிணிநீங்கும் கவலையல்லால்
தீங்கியலில் சிறுசெயலில் பணத்தில் காசில்
சிறிதேனும் கவலையுறக் கண்டதில்லை
பாங்கன் ஒருவன் கிடைத்தான் அரவிந்தர்க்கே
பாரதிநம் தமிழ்க்கவிஞன் நாட்டின் அன்பன்!
தூங்கியது நாடந்நாள் இரண்டுபேரும்
சொல்லாலே உணர்வு தந்தார் ஏடும் தந்தார்
வங்காளச் சிங்கமவன் எண்ணம் செய்வான்
வரிப்புலி பாரதி அதைத் தமிழாய்ச் செய்வான்”
என்று இருவரையும் உச்சிமேல் வைத்துக்கொண்டாடி மகிழ்கிறார் பாவேந்தன் பாரதிதாசன்.
பாரதியாரும், இத்தேசத்தின் விடுதலை வேள்வியில் அரவிந்தர் போன்றோர் எல்லாம் இல்லையென்றால் பள்ளத்தில் விழுந்த குருடர் எப்படி வழிகண்டு விழிபெற்று எழுவார்கள் என்றெண்ணிப் பாடுகிறார். “வந்திலரேல்” எனும் பொற்பா இது.
“விந்தை திலகர் அரவிந்த ரொடு பாலர்பதி
சிந்தை சிதம்பரமாம் செம்மலுமே வந்திலரேல்
ஆதரமாம் அன்னை வளநாடெங்கே வந்தே
மாதரமாம் மந்திரம் எங்கே?
இப்பாடல் 11.09.1909 “இந்தியா” இதழில் ‘வி.ஓ. சிதம்பரமும் கோயமுத்தூர் ஜெயிலும்’ எனும் கட்டுரையின் ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த ஆண்டு 1910 ஏப்ரலில் அரவிந்தர் புதுவைக்கு வந்துவிடுகிறார்.
அடுத்த 40 ஆண்டுகள் வேறெங்கும் செல்லாமல் புதுவையிலேயே தங்கி 1950 டிசம்பர் 5-இல் சமாதி அடைகிறார்.
1947-இல் இத்தேசம் அரசியல் விடுதலை அடைந்த நாள் ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாள் 15 ஆகஸ்டு என்பதால் அரவிந்தரை அறிந்த மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 1947 ஆகஸ்டு 15 அன்று அவர் வெளியிட்ட சுதந்திர தினச் செய்தி ஓர் ஒப்பற்ற பெரும் விடுதலைபற்றிய சாசனம் என்றே கூறலாம். இந்திய விடுதலை ஒரு தொடக்கம் ஆசியா விழித்தெழும் மற்ற அடிமை நாடுகள் விடுதலைபெறும் என்று அரசியல் விடுதலையைப் பற்றிக் கூறியபின்னர், ஆதிக்க சக்திகளிடமிருந்து மனித இனம் பூரணவிடுதலை பெற்றுய்யும் வழிமுறைகளைச் சொல்லியிருப்பார். நாங்கள் நமது கல்வி மையங்களில் இவ்விடுதலைநாள் செய்தியை வாசித்து வாசித்து உரமேற்றிக்கொள்கிறோம்.
ஒரு சிறிய சமுதாயக் குழுமத்திற்கு தீர்வுகளை ஒருவேளை முன்வைத்து வெற்றிகரமாகச் செய்துவிட முடியும்; ஆனால் அதையே இந்தியா முழுமைக்குமான திட்டமாக அறிவிக்க முடியுமா? இந்திய மக்கள் பன்முகத் தன்மை கொண்டவர்கள், பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள், அவர்களுக்கான ஆன்மீகத் தீர்வென்ன?
இது ஒரு சூட்சுமமான கேள்வி! அறிவினாவோ?
வீட்டின் ஒரு மூலையில் ஒரு சிறு அகல் விளக்கு ஏற்றப்படும்பொழுது இருட்டு மெல்ல மெல்ல வெளியேறுகிறது ஒளி வீட்டை நிரப்புகிறது அல்லவா? அதுபோலவே ஒரு சிறு சமுதாயக்குழுமத்தில் ஏற்படும் மாறுதல்களின் அலையின் வீச்சு மற்ற கரைகளையும் தொட்டுவிடலாம். மகாத்மா காந்திஜி கிராமப்பெண் ஒருவரை குருவாக ஏற்றுக்கொண்டு இராட்டையில் நூல் நூற்கக்கற்றபின் தமது ஆசிரமத்தில் கதர்ப்பணியை ஆரம்பித்தார். அதுவே அந்நியத்துணி பகிஷ்கரிப்பு எனும் பேரியக்கமாகி, உள்நாட்டுத்துணி, உள்நாட்டு உப்பு எனும் கிராமப்பொருளாதார விடுதலை ஆயுதங்களாகி ஒரு புரட்சியை நிகழ்த்தியது. நல்ல எண்ணங்கள் துளித்துளிகளாய்ப் பல்கிப்பெருகி இயக்கமாகி மக்களின் சமத்துவ மேம்பாடு ஒன்றையே மையக்கருத்தாகக் கொண்டு வழிநடத்திச் செல்லும் என்பதை விநோபாஜி அவர்களின் பூதானம், கிராமதானம் இயக்கத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஒவ்வொரு நல் இயக்கமும் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். அவர்களுக்காக அவர்களால் அவர்களுடையதாக ஆகவேண்டும் அரசுகளால் அல்ல! மனித நேயத்துடன் இணைந்த எந்தத் தீர்வும் நாடு, சமயம், இனம், மொழி, பால் பேதம் பார்க்காது. மனித இன மேம்பாட்டினோடு பல்லுயிர்களின் மேன்மையையும் உடன் கொண்டிருந்தால் அதுவே உய்யும் வழி இதைவிட வேறென்ன ஆன்மிகப் பணி இருக்கிறது.?
உலகம் முழுதுமே சிறு சிறு சமுதாயக் குழுக்கள் வழி பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவில் சிரிஸ்குழுமம், அமிஷ் இனக்குடியிருப்பு, இஸ்ரேலின் க்யுபெக் கூட்டு வாழ்க்கை, காந்தி ஆசிரமங்கள், சர்வோதயப் பண்ணைகள், ரஷ்யாவின் கூட்டுப்பண்ணை வேளாண்மை, நமது கிழக்குக் கடற்கரையில் கலைஞர்களின் சோழமண்டலம், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் புதுவைக்குச் சமீபமாக நமது ஆரோவில் சர்வதேச நகரம் என எல்லாமே மனிதரை மேம்பட்ட மனிதராக்க, கூட்டுறவால் வேற்றுமைகளைக் களைந்து ஒப்புரவின் பெருமைகாணும் முயற்சிகள். இத்தகைய முயற்சிகளின் வெற்றி தோல்வி கணக்கிட முடியாதது. அவை நல் வருங்காலத்திற்கான இன்றைய அடித்தளங்கள். இவற்றின் சக்தி மிகுந்த வீச்சுகள் அவரவர் உள் நாட்டில் மட்டுமல்ல உலக முகடுகளையும் தொட்டிருக்கின்றன என்பதே மெய்!.

உங்கள் கவிதைகளில் காணப்படும் தெப்பக்குளம் இப்போது எப்படி இருக்கிறது? கவிதைத் தெப்பக்குளம் போலவே அது இப்போது அழகாக இருக்கிறது, போய்ப் பார்த்தீர்களா?
எனக்குச் சில தெப்பக்குளங்கள் நெருங்கிய சொந்தங்கள். எனது பிறந்த ஊர்த் தெப்பக்குளம் கமலாலயம் தேரோடும் வீதியுடன் ஒரு கோவில் அழகு. மதுரை வண்டியூர்த் தெப்பக்குளம் படித்துறை கதையளக்க நல் அழகு. எனது பெற்றோரின் சொந்த ஊர் விருதுநகரில் கடைவீதி நிறைவில் அமைந்துள்ள தெப்பக்குளம் எனது பள்ளி நாட்களில் மனதிற்கிசைந்த தோழமை அழகு. உள்ளூர் மக்களின் வீட்டிற்குப் போனால் “தெப்பத்தண்ணிதான் நல்லாக்குடிங்க” என உபசரிப்பார்கள் கந்தக பூமியில், கல்லுக்கிடங்குகளுடன் உப்புத்தண்ணீர்க் கிணறுகளின் ஆதிக்கம் சூழ்ந்திருந்த அந்த நாட்களில் திருச்செந்தூர் நாழிக்கிணற்று நன்னீர்போல, கோயமுத்தூர் சிறுவாணிக்குடிநீர்போல, இளநீராய் இனிக்கும் மென்னீர் கொண்டது இத் தெப்பக்குளம். நடு நீராழி மண்டபம், படித்துறைகள், சுற்றிலும் பிறைவடிவ வழுவழு தடுப்புச் சுவர்களுடன் கம்பீரமும், கனிவும் ஒரு சேர இணைந்த அழகிய கட்டுமானம். சுற்றிலும் உள்ள வீடுகள், கடைகளிலிருந்து மழைநீர் சேகரிக்கப்பட்டு தடையின்றி நீர்வரத்து நிகழ்வதால் தெப்பக்குளம் பெரும்பாலும் தண்ணீருடன் காட்சிதரும். நான் சொந்த ஊரைவிட்டுவந்து பல ஆண்டுகள் ஆயிற்று என்றாலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கியவிழாவில் கலந்துகொள்ளச் சென்றபோது தெப்பக்குளம் பார்ப்பதை எனது நிகழ்ச்சி நிரலில் சேர்த்திருந்தேன். அப்போது எழுதிய கவிதையொன்று புதிய தொகுப்பு ‘மூங்கில் கண்ணாடி’யில் சேர்ந்துள்ளது
தெப்பக்குளம் பார்த்திருக்க
ஊர்நடுவே
தேர்போல நடுமண்டபம்
நான்கு தெரு பார்த்துத் ததும்பும்
நீரே வற்றாத விருதுநகர்த் தெப்பக்குளம்.
நீராழி மண்டபத்தின் பொம்மைகள்
மீண்டும் மீண்டும் முறுவலிக்கும்
காலைமுதல் மாலைவரை
வானம் குளித்துக்கொண்டிருக்கும்
சூரியன் துணி உலர்த்தும்
நட்சத்திரங்கள் மினுக்கும்போது
நிலாவும் விளையாட வந்திறங்கும்.
செயற்கை விளக்கொளிகள்
ஜரிகை மாலைகள் போல அசைந்தாடும்.
கடிக்காத மீன் வாய்கள்
படியேறி பொறி கேட்கும்.
உள்ளிருக்கும் உறைகிணறும் தண்ணீரை
வெளிக்குழாய்க்கும் அனுப்பி வைக்கும்
நன்னீரை அள்ளிச் செல்லும்
பொன்வண்ணத் தவலைகளும்
செப்புக்குடங்களும் தகதகக்கும்
கைவண்ணம் மகளிர்க்கு உரித்தாக்கும்.
பாரவண்டித் தொழிலாளர்கள்
பிறைபோன்ற சுற்றுச்சுவரில்
தென்றல் சுகம் வீசத்
தூங்கிக்கொள்வார்கள்.
பூக்காரர் போட்டுச் செல்லும்
கப்பலூர் ரோஜாப்பூ
பன்னீரைக் கரைத்து வைக்கும்.
நீச்சலடிக்கும் பிள்ளைகளை
வேடிக்கைப் பார்த்திருப்பேன் நான்
அப்பாவின் கவிதை சுமந்த
என் காகிதக் கப்பல்
ஒரு நாள்
இங்கேதான்
உள்ளேதான்
மூழ்கிப்போயிற்று.
பரிசுகளும் அங்கீகாரங்களும் குறித்த உங்களது மதிப்பீடு என்ன?
பரிசுகள், அங்கீகாரங்கள், கௌரவங்கள் புகழ்மாலைகளை எதிர்பார்த்து வெளிப்படுவதில்லை ஜீவனுள்ள கவிதைகள். கவிதைகள் கவிஞரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாகப் பிறந்துகொள்கின்றன என்று நான் உணர்ந்துள்ளேன். எனவே பட்டம் பதவி பெறப்பாடவில்லை, என்று பட்டம்மாள் பாடியதைப் போல… சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அங்கீகாரங்கள் கவிஞரின் வாழும் நாட்களிலேயே மக்கள் மன்றத்தாலும் பேரறிஞர் அவையாலும் வழங்கப்படுமானால் கவிஞரின் உற்சாகச் சிறகுகள் மேலும் விரிவடையும். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவும், மணிமேகலை இயற்றிய சாத்தனாரும் தமது காப்பியங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
கம்பன் இராமகாதையை அரங்கத்தான் அவையிலே அரங்கேற்றுகிறார். சங்கப்புலவர்களின் பாடல்கள் தமிழ்ச்சங்க விமரிசனப் பலகை ஏறுகின்றன. நமது கவிதை எந்த தளத்தில் இயங்குகிறது என்று அளவிட்டுப் பார்க்க, கேட்பாளர்களின் வாசிப்பாளர்களின் மதிப்பீடு உறுதுணையாகிறது. அருட்பாவை அங்கீகரிக்காமல் மருட்பாவாக்கி ஆங்கிலேயரின் நீதிமன்றத்தில் நிற்க வைத்த வரலாறு தமிழுக்குப் புதிதன்று. இது எதிர்வினை ஏடுகள். தமிழ்மொழியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரிகள் உலகப் பொது வளாகங்களில் பளிச்சிடுகின்றன என்னும்போது அந்த அங்கீகாரம் நம் ஒவ்வொருவரையும் தோள் உயர்த்திக்கொள்ளச் செய்கிறது அல்லவா? கணியன் பூங்குன்றன் எழுதிய பாடல் என்றாலும் அது ஒரு பண்பட்ட சமுதாயத்தின் வெளிப்பாடல்லவா? அத்தகைய அங்கீகாரங்கள் தேவை. பாரதியார் எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய ஓலையில் பிரெஞ்சு நாட்டாரும் பாராட்டும் தமது கவிதை என்று பெருமிதத்துடன் குறிப்பிடுவது கவிஞனின் நிமிர்ச்சி அல்லவா?
என்னுடைய ‘சுடுபூக்கள்’ கவிதை நாலாயிரம் ஆண்டு உலகக்கவிதைகள் அமெரிக்க வெளியீடு ஆங்கிலத் தொகுப்பில் இடம் பெற்றிருந்ததை, புதுவை பிரெஞ்சு நிறுவனப் பேராசிரியர்கள் பெருமையுடன் அழைத்து முதல் சேதி சொன்னார்கள். சங்ககாலத் தமிழ்பாடல்களுக்குபின் 20ஆம் நூற்றாண்டில்தான் தமிழ்க்கவிதை சேர்க்கப்பட்டுள்ளது அதுவும் இரா. மீனாட்சியின் கவிதை மட்டுமே என்று அவர்கள் தெரிவித்தது எனக்கு மட்டுமல்ல தமிழுக்கே கிடைத்த அங்கீகாரமாகப் பார்த்தார்கள் என்று உணர்ந்து நிறைந்தேன்.
இன்னுமொரு நடந்தகதை சொல்லட்டுமா?
அண்மையில் 11 ஆம் வகுப்பு 2018-2019 தமிழ்ப்பாடப்புத்தகத்தில் தமிழகக் கல்வித்துறையினரால் அங்கீகாரம் பெற்று இடம்பெற்றுள்ளது எனது கவிதை “பிள்ளைக் கூடம்”. ஒரு பள்ளியிலிருந்து எனக்கு ஓர் அழைப்பு தொலைபேசியில் கவிஞர் என்பவர் இப்போதும் வாழ்கிறார்களா? மறைந்து போனவர்களின் பாடல்களைத்தானே இதுவரை பயின்றிருக்கிறோம். நீங்கள் வாழும் கவிஞர் என்றதால் நீங்கள் உங்கள் கவிதையை வாசித்துக் காட்டுங்கள் என்றார்களே பார்க்கலாம்!
அம்மாணவச் செல்வங்களுடன் நம் கவிஞர் குலத்தின் சார்பில் பேசி வாழ்த்துச்சொன்னேன். பிள்ளைகளும் என்னை வாழ்த்தினார்கள். வேறென்ன வேண்டும் தோழரே!

என் வாழ்வில் இதைச் சாதித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளத்தக்கதாக என்ன செய்திருக்கிறீர்கள்?
எனது சாதனைகள் பட்டியலிட சில உண்டு என்றாலும் நான் சொல்லப்போவது என் ஆன்மச் சிலிர்ப்பு.
என்னைப்பெற்று வளர்த்து ஆளாக்கி, தகுதிக்குமேல் படிக்க வைத்து, இயம்வயதில் மேடைப்பேச்சிற்குச் செல்லும்போதெல்லாம் துணையாக உடன் வந்து, என் எழுத்துகளின் முதல் வாசிப்பாளராக நலம் பாராட்டி, எனது ஆரோவில் வாழ்க்கையை உற்று நோக்கி ஏற்றுக்கொண்டு, மேலைநாட்டு த்வான் வான்மேகனைத் துணைவராகக் கரம்பிடித்த என்னை அவருடன் ஒருசேர அரவணைத்து அன்பு காட்டியவர் எம் அன்னை மதுரம். விருதுநகரில் தம் கணவரை இழந்து வருந்தியிருந்த நேரத்தில் தந்தையாரின் நிருபர் பணியில் ஈடுபட்டிருந்த இளையமகனும் பக்கவாத நோயால் இடது பக்கச் செயல்பாடுகளை இழந்து தவித்தான்.
அவனைத் தாங்கிப்பிடித்து, திருமணம் முடித்து பெயர்த்தியுடன் 120 ஆண்டுகளில் நாலு தலைமுறை கண்டிருந்த தங்களது வீட்டில் கூட்டுக்குடும்பச் சூழலில் ஓரளவு சமனப்பட்டிருந்த வேளை இளையமகன் மிக நோயுற்று உயிருக்குப் போராடும் நிலையில் மதுரை மருத்துவமனையில் இருந்த நேரம் அரசாங்கம் சார்ந்த துறையினரால் காவல்துறையினரின் கெடுபிடிகளுடன் அவரது கணவர் பிறந்து வாழ்ந்து மறைந்த தமது சொந்த வீட்டிலிருந்து தெருவாசலில் அநாதரவாகத் தூக்கி எறியப்பட்டார்… மாற்று உடைகூட இல்லாமல். பின்னாளில் விருதுநகர் பர்மா அகதிகள் காலனியில் நண்பர்கள் வீடமைத்துத் தந்தனர். கொடுமை… அக்குடும்பமே சிதைவுற்றது. மூத்த மருமகள் தொடர்ந்து மூத்த மகன் இறந்தனர். வீடு வாசல், சொத்து, பல்லாண்’டு வாழ்ந்த வீட்டில் இருந்த சொந்த உடைமைகள், கணவரின் நினைவுப் பொக்கிஷங்கள், பார்த்துப்பார்த்து சேமித்த பொருள்கள் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்க வேண்டிய துரதிர்ஷ்டம்.
நோயின் பிடியில் வாடிய இளையமகன், மருமகள், சின்னப் பெயர்த்தியுடன் புதுவையில் புகலிடம் தேடி வந்தனர். மூன்றாண்டுகளில் நோயுற்றிருந்த மகன் இறந்துவிட்டார். மருமகள் பெயர்த்தியுடன் புதுவையில் தனது கடமைகளை ஆற்றினார். விருதுநகர் கைவிட்ட நிலையில் தனது நட்புவட்டத்தினரின் உதவிபெற்று வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த எம் அன்னையாரின் மேனிப்பொன்னிறமும், எப்போதும் மலர்ச்சி தரும் புன்னகையும், இந்தியப் பண்பாட்டின் உறைவிடமாக வருவதை மகிழ்ந்துண்ணும் பாங்கும் சொல்லால் எழுதிவிட இயலாது. ஆரோவில்லில் பல ஆண்டுகள் தனிச்சூழலில் வாழ்ந்த எங்களுக்கும் ஒரு பனிரெண்டு ஆண்டுகள் மீண்டும் தாயின் நிழல் தந்த அருமையை உணரவைத்தது. கடைசி நாள்வரை அம்மாவை அன்புடன் பாதுகாத்து, அவரது விருப்பங்களைப் பூர்த்தி செய்து, அவரது விருப்பப்படியே ஆரோவில் தோட்டத்துப் பூக்களுடன் புதுவை கருவடிக்குப்பம் மயானத்தில் விடைதந்து அனுப்பினோம்.
அவரது அஸ்தியை வங்கக்கடலில் சங்கமிக்கச் செய்தோம். கடுமையான சூழலை மென்றுதின்ற ஒப்புயர்வற்ற எம் அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இயல்பாகச் செய்ததையே சாதனையாக எண்ணுகிறேன். அருகிலுள்ள கிராமத்துப் பள்ளி ஒன்றில் அவர் பெயரால் சிறந்த மாணவர்களுக்கான பொற்பதக்கம் வழங்கி நினைவேந்தல் செய்கிறோம். அம்மா மறைந்து ஏழாண்டுகள் ஆகின்றன….. மதுர மொழியே எம் முதல்பெரும் சாதனை. அம்மா தெருவில் வீசப்பட்டபோது நான் ஒருத்தி மட்டுமே அவ்வூரில் கூடவே இருந்தேன். அம்மாவின் துக்கங்களில் நேரடி பங்கு என்னுடையது. இன்னமும் கண்ணோரம் ஈரம்.
உங்களது ‘மறுபயணம்’ நூல் மிகச் சிறப்பான வடிவமைப்புடன் வந்தது. இருமொழிகளில் கொண்டுவந்ததற்கான சிறப்பான காரணங்கள் உண்டா?
மறுபயணம்’ இருமொழிநூல் வெளிவர பாவலர் தங்கப்பாவும் தோழியர் மார்ட்டியும் இணைந்து உதவி செய்தனர். வகுளாபரணனின் இசைவான ஓவியங்கள் இடையிடையே வைக்கப்பட்டிருந்தன. ஆரோவில் அச்சகம் 1998-இல் அழகாக வெளியிட்டிருந்தது. ஆரோவில் பன்னாட்டுக் குடும்பத்தினருக்கு நான் ஒரு கவிஞர் என்று தெரிந்திருந்தது ஆனால் பெரும்பாலோர்க்குத் தமிழ் வாசிப்பு மொழியில்லை என் கணவர் உட்பட எனது தமிழ்ப்படைப்புகளை நேரடியாக வாசித்து மகிழ்ந்ததில்லை இந்த ஆங்கில மொழியாக்கம் பிரெஞ்சு, ஸ்பானிஷ், கொரியன், டச்சு மொழிகளிலும் செல்ல உறுதுணையாயிற்று. ஹாலந்தில் வசித்த கணவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்முன் – நாங்கள் அங்கு சென்றபோதெல்லாம் – எனது கவிதை அரங்கம் யாருடைய இசைப்பின்னணியுடனாவது ஓரிரு முறையேனும் நிச்சயம் நிகழ்வதாயிற்று.
அடுத்தடுத்து அதுபோல ஏனைய எனது நூல்களை மொழிமாற்றம் செய்வதற்கான சூழல் ஏற்படவில்லை. 2017-இல் பாவலர் ம.இலெ.தங்கப்பா எனக்கு ஒரு அன்புப் பரிசு வழங்கப்போவதாகச் சொல்லி எனது 21 ஆம் நூற்றாண்டுக் கவிதைகளிலிருந்து தமக்குப் பிடித்தவற்றை அவரே தேர்வுசெய்து ஓராண்டில் சுமார் 45 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்தார். அவற்றுள் ஒரு கவிதை ‘கூழாங்கல்’. தங்கப்பா அண்ணாவும், விசாலாட்சி அண்ணியாரும் அக்கவிதையை மிகவும் பாராட்டினார்கள். அவ்வொரு கவிதைபற்றி ஒரு மூன்று பக்கம் நலம்பாராட்டி மடல் எழுதியிருந்தனர். எனக்கு அதொரு நோபல் பரிசு! ‘கூழாங்கல்’ தொகுப்பு புதுவை இளைஞர்கள் அமைப்பினரால் 2018-இல் வெளியிடப்பட்டது . ஆரோவில் 50 ஆண்டு கொண்டாட்டங்களின் ஊடாக நமது ‘கூழாங்கல்லும்’ பரவசப்பட்டுக்கொண்டது. பலரது கவனத்தையும் ஈர்த்தது. இத்தொகுப்பினைப் படித்த பிறகே தமிழ்மொழி பரிச்சயமில்லாத பிறமொழிக் குடும்பத்தினரும் என்னைக் கவிஞர் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். என்மீது ஏற்றப்படும் புகழ் அனைத்தும் தமிழ்க்கவிதாதேவிக்கே சமர்ப்பணமாகிறது. இப்போது எனது கவிதையை ஆங்கிலத்தில் வாசித்துப் புரிந்து கொண்டு தமிழில் இசைத்து நாட்டிய நிகழ்வுகளும் தர ஆரம்பித்துள்ளனர். மொழிமாற்றம் என்னென்ன மாயங்கள் செய்யும் என்பதை இப்போது நிதர்சனமாக உணர்கிறோம்.
நவீன தமிழ்க் கவிதைகளை சமீபத்தில் வாசித்த அனுபவம் உண்டா? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுகிறீர்கள்?
நவீன தமிழ்க்கவிதைகளை இலக்கிய இதழ்களில் வாசிக்கிறேன். ஆரோவில் செய்திமடல் ஆசிரியராக இருப்பதால் விமரிசனத்திற்காக நிறைய புத்தகங்கள் வருகின்றன. குறிப்பாகக் கவிதை நூல்களுள் சிலவற்றில் புரியாத மொழியில் சொல்லாடல்கள், நவீன நகரிய இயந்திரத்தனமான அந்நியமொழித் தாக்கங்களுடன் விநோத நடையில் குரல் எடுத்து வருவதாகச் சில நேரங்களில் தோன்றுவதுண்டு. அதே நேரத்தில், சில சிற்றூர்க் கவிராயர்கள் மண்பூசிய வார்த்தைகளை எருமணக்க எழுதியிருப்பதை வாசிக்கும்போது மேலும் பலருடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் உண்டாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழியின் பயன்பாடு ஏற்றம் பெறலாம் இறங்கி விடலாம் அல்லது புதிய வாழ்க்கைக்கான கூறுகளின் கிளர்ச்சியை மொழி ஏற்று புதுவடிவம் பெற்றிலங்கலாம். நவீன இலக்கியம் பன்னாட்டுத் தாக்கங்களைப் பெறுகிறது.
ஊடக வசதிகள் பெருவாரியாக வந்துவிட்டதால் சென்றகால கீழடியிலிருந்து நாளைய சந்திரமண்டல வாழ்க்கைவரை ஊடாட முடிகிறது… இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஓர் இளந்தாய் – பொறியாளர் – கூகுள் மொழியின் தாக்கம் நிரம்பியவர் தனது கவிதைகளை எனக்கு அனுப்பித் தரம் கேட்டறிந்தார். பல கவிதைகள் அகவுணர்வுக்கவிதைகள், ஆழ்மன நிலைகளின் பாதிப்புகளுடன் அமைந்திருந்தன. ஆனால் தனது பாட்டியின்அம்மா பூட்டி வாழ்ந்த அந்தக்கால வீட்டைப்பற்றிய அவரது கவிதை அருமை. கரிசல்மண்ணில் பருத்திச்சுளை பிரித்து உலர்த்தும் சூழலை முன்வைத்து விறகு அடுப்புடன் வாழ்ந்த பூட்டியின் அன்றைய இருப்பை ஆற்றொழுக்காகப் பதிவு செய்த பெயர்த்தி இன்று அந்த வீடு வெற்றுமண் சுவராய் நிற்பதை எண்ணி வருந்துவது காலச்சக்கரத்தின் கீழ்மேல் சுழற்சியைச் சொல்லும் ஒரு நீள்கதையின் முதல் புள்ளியாக நிற்கிறது.
மீண்டும் பூட்டி வீட்டை எடுத்துக் கட்டப் போகிறோமா, பட்டினத்து அடுக்கு மாடி அறையின் மூடிய ஜன்னலுக்குள் தலைபதித்து வேற்று நாட்டுக்குப் பணியேற்கச் செல்வது பற்றி திட்டமிடப்போகிறோமா என்ற கவண் கல்லை வீசுகிறது. நான் முதன் முதலில் கவிதை எழுதத் தொடங்கியபோதும் முரண்கள், ஏமாற்றங்கள், இயலாமைகள், எதிர்ப்புகளைச் சாடும் வேகங்கள், தோல்விகள், பிரமைகள், அடுத்தவரின் அலட்சியப்போக்குகள், மனித உருவில் நேராக எதிர்நிற்கும் பச்சோந்திகள் இவையே கவிதையின் மையத்திற்குள் வந்து நின்றன. இதற்கும் மேலே கடந்து செல்லச் செல்ல அனுபவங்கள் கூடக்கூட நான் என்பது நாங்கள் என்பதையும் தாண்டி நாம் என்றாகிறபோது வலிகளையும் மீறிய கூட்டுக்களிப்பினிலே கூடும் பாட்டுத் திறனில் ஏறும் எமது மொழி வலிமைகள்.
கவிதை என்பது ஒருமையில் உருவாவதில்லை. நமது பன்மைக்குள்ளிருந்துதான் உயிர்ப்புறுகிறது. இது ஒரு ஞானரகசியம். நிறைவாகச் சொல்வதானால் கவிதையில் புதிதென்ன முன் நவீனமென்ன பின் நவீனமென்ன மரபென்ன பழசென்ன செவ்வியல் என்ன நாட்டார் வழக்கென்ன? பெருங்கவிஞன் வால்ட் விட்மன், ‘சகமனிதன் பசியோடிருந்தால் இரவு முழுதும் என் கவிதை அழுதுகொண்டிருக்கும்’ என்று சொன்னது ஒரு வகை. ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதி உரத்துச் சொன்னது ஒரு வகை. ‘காலுக்குச் செருப்புத்தான் கேட்டேன் லாடமடிக்காதீர்கள்’ என்று பதாகை ஏந்துவது இரா.மீனாட்சியின் வகை. மெய்யுணர்வு நிரம்பியிருக்கும் கவிதைகளை எக்கூடாரத்திலிருந்து வந்தாலும் உள்வாங்கி விரிவடைகிறேன்.\

அரவிந்தரின் எதிர்காலக் கவிதைகள் குறித்த உங்களின் மதிப்பீடுகள் என்ன?
ஸ்ரீஅரவிந்தர் எழுதியுள்ள கட்டுரைகள், கவிதைகள், கடிதங்கள் பல தொகுதிகளாகப் புதுச்சேரி ஸ்ரீஅரபிந்தோ ஆசிரமத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல்களுள் ஒரு கட்டுரைக்களஞ்சியம் Future Poetry என்பதாகும். உலகக் கவிதைகள், இந்தியக் கவிதைகளின் வடிவமைப்புகள், உள் ஆழங்களின் வார்த்தை வெளிப்பாடுகள், கவிதையின் பிறப்பு உருவாகும் மையம், தனது அனுபவங்கள் மற்ற புலவர்களின் அணுகுமுறைகள் என, கவிதை வரலாற்றைப் பலவேறு மொழிக்கோட்பாடுகளுடன் எழுதியுள்ளார். ஆங்கிலப் புலமையுடைய பேரறிஞர்கள் எடுத்துச் சொல்லவேண்டும்!. என்னை இக்கேள்வி கேட்டு சிக்கவைக்கக்கூடாது.!
மூத்த சகோதரர் கவிஞர் சிற்பி, மறைந்த கவிஞர் பாலாவுடன் ஆரோவில் வந்த பொழுது ஸ்ரீஅரவிந்தரின் வருங்காலக் கவிதைபற்றிய பேச்சு வந்தது. கவிதைக்கு வருங்காலம் உண்டா? வருங்காலக் கவிதை எப்படி இருக்கும்? என்றெல்லாம் உரையாடல் நிகழ்ந்தது. அடுத்து ஆண்டுகளில் சாகித்ய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ஆரோவில்லும் சாகித்ய அகாதெமியும் இணைந்து வருங்காலக் கவிதை பற்றிய ஆய்வரங்கத்தை நிகழ்த்தினோம். கவிஞர் சிற்பி வழிநடத்தினார். தமிழகத்தின் பலவேறு பகுதிகளிலிருந்து பேராசிரியர்கள், கவிஞர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன், பேராசிரியர் கா.செல்லப்பன், முனைவர் மருதநாயகம், டாக்டர் முரளி ஆய்வுரைகள் வழங்கினார்கள். குறிப்பாகச் சொல்வதானால் எனது புரிதலில் அரவிந்தர் உணர்த்தும் வருங்காலக் கவிதையில் சொற்கள் மந்திரம் போலிருக்கவேண்டும். நம்மை அடுத்த தளத்திற்கு உயர்த்திச் செல்வதாக இருக்க வேண்டும் என்பதே!.
உடல்மொழி குறித்து இன்றைய பெண் கவிஞர்கள் நிறைய எழுதி விட்டார்கள். அவற்றைக் குறித்த உங்கள் கருத்துக்கள் என்ன?
என்ன இதுவரை இந்தமாதிரிக் கேள்வி வரவில்லையே என்று பார்த்தேன். கேட்டேவிட்டீர்கள். சகோதரர் பிரதிபா நீங்களே சொல்லுங்கள் உடல்மொழி பற்றி எழுதாத சித்தர்கள் உண்டா? மாங்காய்ப்பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் எனவரும் சித்தர்வாக்கின் உட்பொருள் என்ன? அதை ஏன் பெண்ணை நோக்கிப்பாட வேண்டும்?
சென்று கழிந்த காலத்தில் பெண்ணின் உடல்ருசியும் ஆணின் காமப் பசியும் கலந்து, வீழ்ந்து கிடந்த புண்ணான நாட்களைப் பற்றிப் பாடிப்பாடி தங்களின் கீழான நாட்களை எண்ணிக்குமையும் சாக்கில் உடல்களின் மோகங்களிலிருந்து விடுதலை தேடிய யோகிகளால் பேசப்படவில்லையா? ஏன் சங்ககாலத்துப் பெண்பாற்புலவர்கள் ஔவையார் உட்பட விரகதாபத்தால் உடலும் மனமும் தவித்த தவிப்புகளைப் பாடவில்லையா? கண்ணன் மீது கொண்ட தெய்வமாக்காதலை கோதைநாச்சியார் அழகொழுக எழுதவில்லையா?
ஓவிய வகுப்புகளில் மனித நிர்வாணங்கள் உடலின் அமைப்பு அளவீடுகளை அறிந்து கொள்ள அங்கீகரிக்கப்படுகின்றன. கோவில் சுற்றுச்சுவர்களில் ரதி மன்மத லீலைகள் கல்தச்சர்களால் செதுக்கப்படுகின்றன. அவை கலை மரபுகள். உடல்வாழ்க்கையைப் பாடும் காப்பியங்களும், பரணிகளும், உலாக்களும் தமிழில் எத்தனை எத்தனை? பெரும்பாலும் ஆண்களாலேயே பாடப்பட்ட பெண் உடல்களைப் பெண்களும் உரிமை கொண்டாடி எழுதினால் மட்டும் வாசிக்கிறவர்களுக்கு வக்ரஉணர்வுகள்தான் வரவேண்டுமா? பெண்களுக்கும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமையில்லையா என்ன? எழுதுவது அவரவர் சொந்த விருப்பம்!.
பெண்களுக்குரிய இடம் நாட்டுப்புறப் பாடல்களில் இருந்தது. கல்யாணம், நலுங்கு, விளையாட்டுகளில், செய்தொழிலில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் வேடிக்கைப் பாடல்கள்வழி நேரிடையாகவோ மறைமுகமாகவோ உடல் சார்ந்து மகளிர் பாடும் வழக்கம் இருந்தது. சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் மகளிர்க்கான வாசல்களை அவர்களே திறந்து கொண்டார்கள். பலநூறு ஆண்டுகளாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்தவர்கள் ‘ஆஹா’ என்று எழுந்து புதிய குரல்களில் பேச ஆரம்பித்ததும் திகைத்துப்போனார்கள் பண்டித கவிதை நேசிப்பாளர்கள். கூக்குரலிட்டார்கள் விமரிசகர்கள். காலத்தின் கட்டாயமாகியதை உணர்ந்த பல முன்னோடி அறிஞர்கள் பெண் கவிஞர்களின் படைப்புகளை ஏற்றுக்கொண்டார்கள், பாராட்டினார்கள். ஒரு சில பத்திரிகை இதழ்கள் மட்டும் வணிகரீதியாக வக்ரமான பார்வையிலே அள்ளித் தெளிக்க ஆரம்பித்தன. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிற மாதிரி… சரி மேலே தொடருகிறேன். ஆண்கள் பெண்கள் வாயிலாகப் படைக்கப்படும் உடல்மொழிக் கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமே… இதெல்லாம்
கடந்துபோய்க்கொண்டிருக்கின்றன. இப்போது மூன்றாம் பாலினத்தவரின் கதைகளைப் பதிவுசெய்து கொண்டிருக்கிறோம். எனக்குத் தெரிந்த திருநங்கை கல்கி எழுதியுள்ள கவிதைகளை வாசித்தால் தெரியும் உடல் மொழி மட்டுமல்ல அதன் வலிகளின் நிறம் என்ன என்று. புதுவையிலிருந்து வெளிவரும் “மஹாகவிதை” இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் அமர்ந்துள்ள நான் கல்கி நங்கையைக் கண்டுரையாடி சகோதரியின் கவிதை சிலவற்றை வெளியிட உறுதுணையாக இருந்தேன். மூன்றாம் பாலினத்தவரின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளைக் கேட்டாலே போதும் உடல்களின் ரணங்களே ஆபரணங்களாக மாட்டப்பட்டிருப்பதையும் திருநங்கையர் பிற பெண்களுக்கும் சேர்த்தேதான் நுகத்தடி சுமக்கிறார்கள் என்பதையும் உணர்வோம். அடுத்ததாக, நான்காம் பாலினத்தவர் எழுதப் போகிறார்கள்.! உடல் கடந்து உள்ளம் கடைந்து ஒத்த மானுடம் படைக்கும் வரை நாம் இந்த நிலைவாசல்களைக் கடந்து சென்றாக வேண்டும் இல்லையா? எப்போதும் பெண் இருப்பாள் அவளது தாய்மை வேண்டும். இல்லை எனில் எப்படி மானுடம் தழைக்கும்? ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் இணையராக வாழ ஆரம்பித்து சட்டபூர்வமான சலுகைகளும் பெற்றபின் பெண் உடல்மொழி பற்றிய கேள்வியே வேடிக்கையாகத் தோன்றுகிறது இப்படிச் சொல்வதால் மனவருத்தம் கொள்ளாதீர்கள். பிரதிபா!.
கற்பித்தல் உலகிலேயே உன்னதமான பணி. அதற்கான தளம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. இந்த நீரோட்டத்தில், இதுகாறும் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?
எனக்குப் பிடித்தமான நல்ல கேள்வி. கற்பித்தல் உலகிலேயே உன்னதமான பணி என்றால் கற்றுக்கொள்வதும் உத்தமமான பணி அல்லவா? எனது கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து பள்ளி செல்ல வாய்ப்பில்லாத உழைக்கும் வர்க்கத்தினரின் குழந்தைகளுக்கு மணல் குவியல்களில் வேப்பங்கொட்டை அடுக்கி எழுதப்படிக்கக்கற்றுக் கொடுக்கஆரம்பித்த சேவையே என்னை சமூகப்பணி மேற்படிப்பிற்குத் தூண்டியது. அக்குழந்தைகளின் விளையாட்டுத் தோழியாக்கியது.என்உள்ளிருக்கும் சிறுமியின்இளமைக்குச்சத்துணவாயிற்று. அதன் நீட்சிதான் ஆரோவில் வந்தவுடன் ஆரம்பித்த இளைஞர்கள் கல்வி மையம். பள்ளிக்கூடம் செல்லாது இடைநின்ற குழந்தைகளுக்கான மரத்தடி நிழல் பள்ளி, அதுவே வாழ்க்கைக்கல்வி மையம் ஆயிற்று. இன்றுநமது இளைஞர்கள்கல்விமையம்தனது 45ஆவதுஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரோவில் ஊழியர்கள் அவர்களது பிள்ளைகள் எந்த நேரத்திலும், அனைத்து நாட்களிலும், ஆண்டு முழுதும் தங்களுக்குத்தேவையான அடிப்படைக் கல்வியைஆசிரிய வழிகாட்டிகளின் உதவியுடன்கற்றுக்கொள்ளலாம். “நாம் யார்” எனும் தேடல்தான் பாடத்திட்டம். தாய்மொழிக்கல்வி, ஆங்கிலம், கணினிமொழி, யோகா வகுப்புகள், குழுப்பயிற்சிகள், சிறுதொழில்கள் படிக்கவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம்.
ஒரே ஒருஅம்மாபடிக்கவந்தாலும் வழிகாட்டிகள் உதவிசெய்வார்கள். ஆசிரியர்கள் இங்கே எப்போதும் இணைமாணவர்களே. நமது அனைத்துப் பருவ ஆண் பெண் பயிற்சியாளர்களுடன் இணைந்து உள்ளூர் உணவுமுறைகள், மூலிகைகள், இயற்கை சார்ந்த விளைவுகள், இப்பகுதியின் பழைய வரலாறுகள், மக்களிடையே வழங்கி வரும் பழமொழிகள்,விடுகதைகள், கூத்துப்பாடல்கள். கோவில் வழிபாட்டுமுறைகள், நிலாக்காலக்கும்மிப்பாடல்கள்,கழியாட்டம்எனநாம் கற்றுக்கொள்கிறோம். அவற்றுள் பலவற்றை நமது மையம் 24 ஆண்டுகளாக தமிழில் வெளியிட்டுவரும் ஆரோவில் செய்திமடல் வழியாகவும், சிறு கையேடுகளாகவும் அச்சிட்டு மக்களைச் சென்றடைய அணில்பணி செய்து வருகிறது. இங்குள்ள கிராமக் குழந்தைகள் குறிப்பாக கல்வியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினருக்கும் பஞ்சாயத்துப் பள்ளியில் படிப்பவர்க்கும் அவர்களின் ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி – மூச்சுப்பயிற்சி, குழுப்பாடல் பயிற்சி போன்ற வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம். மனவளக்கலை, உறவு மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை தேவையானவர்க்கு வழங்குகிறோம். சிறுவர்களின் சிந்தனைத் திறனைஊக்குவிக்குத் வகையில்கானுலா, குழுவுணர்வுவளர்ச்சி, தலைமைப்பயிற்சி, கூட்டுப்பொறுப்பேற்கும்நிகழ்வுகளைஇணைந்துசெய்கிறோம். இன்றையபள்ளிக்குழந்தைகள் குறிப்பாகஆங்கிலவழியில்கற்கும் பலபிள்ளைகளுக்குத் தமிழில் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த இயலவில்லை என்பதோடு ஆங்கிலத்திலும் முழுமையாக எழுத இயலாமல் சுருங்கி விடுகிறார்கள். மொழி ஆளுமை குறைந்து கொண்டேவருகிறது.
சான்றாக,இன்றுசத்துமாவுகஞ்சிசாப்பிட்டபின்‘’எப்படியிருக்கிறது என்றுகேட்டால் எல்லாப்பிள்ளைகளும் ஒரு சேர “சூப்பர்” என்று சொல்லிப் புன்னகைக்கிறார்கள்.நன்றாகஇருக்கிறது, சுவை அருமை, இதைப்போன்று சாப்பிட்டதே இல்லை, ஆஹா அற்புதம், எங்க பாட்டி செய்கிற மாதிரியே இருக்கிறது, இன்னும் கூடக்கொஞ்சம் வெல்லம் போட்டிருக்கலாம், அடுத்த வாரமும் கொடுப்பீர்களா என்றெல்லாம் சொல்லி மகிழலாமே. இதனாலேயே யாராயிருந்தாலும் சரி எமது மைய வளாகத்தினுள் “சூப்பர்” எனும் சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்றொரு தடை விதித்துள்ளோம்! மொழிவளம் பெற இப்படித்தான்வழிமுறைகளைக்கடைபிடித்தாகவேண்டியுள்ளது. நல்லசெய்திஒன்றையும் பகிர்ந்துகொள்கின்றேன்.!
கடற்கரை கிராமத்திலிருந்து வந்த பத்து வயதிலிருந்து பதின்மூன்று வயது வரையில் உள்ள முப்பது குழந்தைகளை அருகிலுள்ள எஞ்சியிருந்த ஒரே ஒரு தரைக்காட்டுப்பகுதி இளங்காளியம்மன் கோவில் வனத்திற்கு அழைத்துச்சென்றோம். அமைதியாகவரவேண்டும் நிழலில் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்த நிலையில் செவிகளைமட்டும் கூர்மையாக்கி சுற்றிலும் கேட்கும் சத்தங்களை மனதில் வாங்கிக்கொண்டு பிறகு ஒரு பத்து மணித்துளி கடந்தபின் தாளில் எழுதித் தரலாம் என்ற ஒரு பயிற்சி அளிக்கப்பட்டது. அக்குழந்தைகள் எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்த எனக்கு வியப்போ வியப்பு. நிறையப்பேர் கோவிலுக்கு வந்த ஒரு அம்மணியின் கொலுசு சத்தம் முதல் கற்பூர ஆரத்தி மணியடிக்கும் சத்தம் உட்பட எழுதியிருந்தார்கள்.
ஒரு பதினொரு வயதுப் பையன் எழுதியிருந்தது இப்படி “மழைநீர்க்குட்டையில் கீரிப்பிள்ளைதண்ணீர் உறிஞ்சிக்குடிக்கும் சத்தம் கேட்டேன்”. மற்றொரு மாணாக்கி ‘அரசமர இலை மட்டும் மெதுவாகப் பேசியது’ என்று சொல்லியிருந்தாள். நமது மக்களின் கவனச்சிதறல்களற்ற பொழுதின் தடங்கள் இப்படி அற்புதமாக உள்ளன. யதார்த்தம் கவித்துவமாகவே வெளிப்படுகிறது. பெரியோர்களாகிய நமது கடமை அக்குழந்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் – அன்பு காட்டுவதும் நலம் பாராட்டி விரிவடையச் செய்வதும்தானே? இப்படித்தான் நாளும் புதிதாக நாம் கற்றுக்கொண்டேயிருக்கிறோம்.
ஆரோவில் கல்வி முறையில் உடல், உணர்வு, மனம், அகவிழிப்பு என்பதற்கான வகைப்பாடுகள் உள்ளடங்கியுள்ளன.
எளிய சத்துணவு காலநிலைகளுக்கேற்ற எளிய ஆடைகள், கற்பதற்கான அழகிய இயற்கை வளம் நிறைந்த இயல்பான சூழல்கள் இவற்றோடு குழந்தையை மையப்படுத்தியே கற்கும் பயிற்சிகள் தரப்படுகின்றன. பெரும்பாலும் பெற்றோர்களும், குழுமவாழ்வில் இணைந்துள்ள மக்களுமே கற்பதற்கு துணைநிற்பதால் பிள்ளைகள் அச்சமின்றி பயிலுகிறார்கள். அச்சமற்ற கல்வி என்பதே அருகிவருகிறதல்லவா? பொதுவாக நம் நாட்டில் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களிடம் அச்சம், ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திடம் அச்சம், நிர்வாகிகளுக்கு அரசியலாரிடம் அச்சம், இவர்கள் அனைவரிடத்திலும் பெற்றோருக்கு அச்சம். பொதுவாக எல்லாருக்கும் தேர்வு அச்சம்! அச்சமே கீழ்களது ஆசாரம்! நமதுபள்ளிகள் பயத்தினையே புத்தக மூட்டைகளுடன் சுமத்தி அனுப்புகிறது. இந்த நிலை ஆரோவில் அணுகுமுறையில் இல்லை. குழந்தைகள் தமது இயல்பான நிலையிலே வளர்கிறார்கள். பதின்மவயது வரும்வரைதான் பெற்றோர் ஆசிரிய வழிகாட்டிகள் துணை வருகின்றனர். அதற்குமேல் அவரவர் விருப்பப்படி மேற்கல்வியோ, கலையோ, சேவையோ, தொழிலோ, அனுபவத் தேடல்களோ சுதந்திரமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆரோவில் சமூகம் பொறுப்புள்ள பணிக்களப் பயிற்சிக்கு ஆதரவு நல்குகிறது.
புதுவை ஸ்ரீஅரபிந்தோ பன்னாட்டுக் கல்வி அணுகுமுறை ஏற்கனவே பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளதால் ஒரு நிரந்தர முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.மாணவர்களேஅங்கும் மையப்படுத்தப்படுகிறார்கள். அவரவர்க்குப் பிடித்தமான பாடங்களை அங்குள்ள ஆசிரியப் பெருமக்களில் யாருடன் அமர்ந்து பாடம் கேட்க விருப்பமோ அவர்களுடன் இருந்து படித்து ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மாணவரின் தேவைக்கேற்ப விருப்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்.தேர்வெழுதி வெற்றிபெறுவது நோக்கமல்ல அறிவுத்தேடலும் கற்றுத் தெளிதலுமே முக்கிய கருதுகோள்கள். புதுவை ஆசிரமப் பள்ளிக்கும் நமக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. இங்கேநாம்இன்னும்தேடலில்இருக்கிறோம்.
ஆரோவில் குடியிருப்பிலுள்ள மக்கள் தொகை இன்னமும்தேவைஉச்சத்தைஅடையவில்லை எனவேகுழந்தைகளின் வருகைக்கேற்ப ஆசிரியவழிகாட்டிகள்செயல்வழிகளைமாற்றி அமைத்துக்கொள்ள வாய்ப்பும் உள்ளது. ஆரோவில் கவனிப்பில் அருகிலுள்ள கிராம மக்களுடன் ஆரோவில் ஊழியர்களின் குழந்தைகள், இளைஞர்களுக்கு ஏற்ற கல்விச்சாலைகளும் நிறைய உள்ளன. அருள்வழி, இளைஞர்கள், தமிழ்உலகம், தாமரை, வாழ்க்கைக் கல்வி மையம் போன்ற அமைப்புகள் மாலைநேர வகுப்புகளிலும் கவனம் செலுத்துகின்றன. விளையாட்டு, யோகாசனம், மொழி வகுப்புகள் சேர்ந்திசை, மறுசுழற்சி, கைவினைப்பொருள் உற்பத்தி அதுதொடர்பான அறிவியல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இசையம்பலம், ஐக்கியம், புதுயுகம், உதவி, ஆரோவில் தொழிற்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழ்க்குழந்தைகளும் பெற்றோரும் விரும்பும்படியான சான்றிதழ்கள் பெறும் பொதுக்கல்வி முயற்சிகள் நடைபெறுகின்றன. மேற்கூறிய மூவகைப் பள்ளிகளிலுமே தமிழ்மொழி, யோகா, கைவேலை, கலைநுட்பப் பயிற்சிகள், இசை, நாட்டியம், நாடகம், கணினி, குறும்படங்கள் தயாரிப்பு என, பலவகைப் படிப்பு வாய்ப்புகளும் கூடுதலாக அளிக்கப்படுகின்றன. சிறுவயதினர் வெளியிலிருந்து இங்கு வந்து தங்கிப்படிக்கும் வாய்ப்புகள் இல்லை. உள்ளூர்க்குழந்தைகளே முக்கியத்துவம் பெறுகின்றனர்.
ஆரோவில் எனும் இந்த ஆன்மிக நகரினைக் கட்டி முடிக்க வேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம். நகர மையத்திலுள்ளது ஆன்மா -மாத்ரிமந்திர் அதனைச் சுற்றி பசுமை வளையத்துடன் கூடிய பன்னாட்டு மண்டலம், தொழில் மண்டலம், கலாச்சார மண்டலம், குடியிருப்பு மண்டலம் என வகுக்கப்பட்டுள்ளது ஆரோவில். அடுத்துள்ள கிராமங்களின் வளர்ச்சியிலும் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படுகிறோம். நமது கல்விக்கொள்கைக்கு அடிப்படை ஸ்ரீஅரவிந்தரின் மொழிதலில் இருந்தே துவங்குகிறது. அக்கோட்பாடுகளின் படி மெய்யான கல்வியின் முதலாவது அடிப்படைக் கொள்கை ‘எதையும் கற்பிக்க முடியாது’ என்பதேயாகும். ஆசிரியர் பாடங்களை எடுத்துச் சொல்லும் அறிவுரையாளரோ, வேலைவாங்கும் மேலாளரோ அல்ல. அவர் உதவியளித்து வழிநடத்துபவர் மட்டுமே.
கல்வியின் இரண்டாவது கொள்கை ஒரு மனத்தின் வளர்ச்சியைப் பற்றி அந்தமனத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும்என்பதாகும். பெற்றோர் அல்லது ஆசிரியர் குழந்தையை வலுக்கட்டாயமாகத் தம் விருப்பத்திற்கேற்றவாறு உருவமைக்க முயலுவது மூட நம்பிக்கையாலும், அறியாமையாலும், விளையும் பண்பற்ற செயலாகும். குழந்தை தன் இயல்புக்கு ஏற்றவாறு தானாகவே விரிவடையுமாறு ஊக்குவிக்கப்படவேண்டும். குழந்தையின் உள்ளிருக்கும் மிகச் சிறப்பானவற்றை வெளிக்கொணர்ந்து, அவற்றை முழுமையடையச் செய்து ஓர் உயரிய பணியில் அவற்றைப் பயன்படுத்துவதில் வளரும் ஆன்மாவுக்கு உதவுவதே கல்வியின் தலையாய நோக்கமாக அமைய வேண்டும்.
அடுத்ததாக, கல்வியின் மூன்றாவது கொள்கை அருகிலிருப்பதை அடிப்படையாக்கிக்கொண்டு அதிலிருந்து தொலைவிலிருப்பதை நோக்கிச் செல்வதாகும். குழந்தையின் மரபு, சூழல், நாடு, வட்டாரம், அது வாழும் நிலம், சுவாசிக்கும் காற்று, அதற்குப் பழகிப்போன பழக்கங்கள், காட்சிகள், ஒலிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மேற்செல்ல வேண்டும். ஒருவனுடைய இயல்பு எந்த நிலத்தில் உயிர் வாழ்ந்து வளர வேண்டுமோ அந்நிலத்திலிருந்து அதை வேரோடு எடுத்து எறிந்து விடுதல்கூடாது. இயல்பானசுயமானவளர்ச்சியேமெய்யான முன்னேற்றத்திற்கான நிபந்தனையாகும்.
நமதுகுழந்தைகள்கடந்தகாலத்தின்மக்களாக,தற்காலத்தின்உடைமையாளர்களாக எதிர்காலத்தைப் படைப்பவர்களாக விளங்கவேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடாகும். கடந்த காலம் நமது அடிப்படை. தற்காலம் நம் கையிலிருக்கும் பொருள்.எதிர்காலம் நம் இலக்கு. சிகரம். இம்மூன்றும் தமக்குரிய இடத்தைப் பெற வேண்டும்.
இந்த அற்புதமான கல்விக்கொள்கைகளை மேலும் விரிவாகப் படித்துத் தெரிந்துகொள்ள ஸ்ரீஅரவிந்தரின் கல்விச் சிந்தனை நூல்களைக் கல்விச் சிந்தனையாளர்கள் கூட்டாக அமர்ந்து வாசித்துத் தெளிவு பெறலாம். அதற்கான வாய்ப்புகளை நமது கல்வி மையம் நட்பு வட்டத்தினரின் உதவியுடன் எப்போதும் உருவாக்கிவருகிறது. என்ன? உங்களது ஒரு குறுங்கேள்விக்கு இப்படியொரு நீண்ட பதிலை நான் சொல்லிக்கொண்டிருக்கிறேனே என்று யோசிக்கிறீர்களா? இப்படித்தான் அவ்வப்போது ஒரு துணுக்கு நூல் என்று எடுத்தால் பெரிய நூல்கண்டே முன்னே சுழற்சி செய்கிறது! உங்கள் பள்ளியில் சமஸ்கிருதம் கற்பிக்கப் படுவதாக அறிகிறேன்.
ஹிந்தி போன்ற வட இந்திய மொழிகளைப் பயின்றாலாவது அதற்கான பயன்பாடு உண்டு; வழக்கிலில்லாத சமஸ்கிருதம் கற்பிக்கப் படுவதன் நோக்கம் என்ன?
ஆரோவில்லின் பன்னாட்டுக் குடியிருப்புவாசிகளின் குழந்தைகளுக்கு என்னென்ன மொழிகள் கற்பிக்க வேண்டும் என்ற கேள்வி ஆரம்பகாலத்தில் எழுந்தபோது, ஸ்ரீஅன்னை எந்தவிதத் தயக்கமும் இன்றி நான்கு மொழித்திட்டத்தை முன்மொழிந்தார்கள். (1) தமிழ் (2) பிரெஞ்சு (3) எளிமையாக்கப்பட்ட சமஸ்கிருதம் (4) ஆங்கிலம். தமிழ்நாட்டில் ஆரோவில் அமைந்துள்ளதாலும், அதன் சிறப்புக் கருதியும் தமிழை முதலிடத்தில் அன்னை வைத்திருந்திருக்கலாம். அடுத்ததாக பிரெஞ்சு மொழி ஐரோப்பிய கலை இலக்கிய தத்துவ மொழி என்பதாலும் அருகிலுள்ள புதுவை பிரெஞ்சு கலாச்சாரத் தொடர்பினாலும் சொல்லியிருக்கலாம்.நடைமுறைசமஸ்கிருதமும் கற்றுக்கொண்டால் இந்திய மொழிகள்குறிப்பாக வடபுல மொழிகளைக் கற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படாது. ஆங்கிலம் உலகத் தொடர்புமொழியாக வளர்ந்து வருவதினாலும் அதற்கொருஇடம்தரப்பட்டிருக்கலாம் – என்று எண்ணுகிறோம்.
ஆனால் இன்றுவரை இந்த 52 ஆண்டுகளில் எங்களுடைய இலக்கை எட்ட இயலாது சிரமப்படுகிறோம். காரணம் 50 நாடுகளிலிருந்து ஆரோவில்லில் குடியேறியுள்ள மக்கள் மூவாயிரம் பேரும், பணிக்கு வந்து செல்லும் உள்ளூர் மக்கள் சுமார் ஐயாயிரம் பேரும் தமிழும் ஆங்கிலமும் கலந்துபேசி புதுத்தொழில்மொழியை உருவாக்கி வளர்த்து பணிசெய்து வருகிறார்கள். உள்ளூர் மக்களுக்கும் பன்னாட்டு ஆரோவில் வாசிகளுக்கும், தமிழி்ன் அருமையையும், கலாச்சாரப் பெருமைகளையும் பலவேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், குழுவிவாதங்கள், சிற்றரங்கங்கள், உரைவீச்சுகள், நூல் வெளியீடுகள், மொழிபெயர்ப்பு உதவிகள் வழியாகக் கொண்டு செல்வதே எமது தலையாயப் பணியாக அமைந்து விட்டது.எனது ஒரு கருத்து யாதெனில் மொழி என்பது ஒரு இனத்தின் பற்பல ஆண்டுகளின் பயன்பாட்டு வளத்திற்கான மூலக்கூறு. பண்பாட்டு நிலையம். நமக்கு எல்லா மொழியும் உயர்ந்தனவே இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்றெதுவும் இல்லை. மொழியைப்பற்றி உரைக்கும்பொழுது அவார் மொழிக்கவிஞன் ரஷியாவின் ரஸூல் கமஸ்தாவோ நினைவிற்குள் அலை எழுப்புகிறார்.தன் மலைநாட்டு அவார் மொழி அவருக்குள் எத்தனை பெருமிதத்தைக் கொண்டுவருகிறது? இந்துக்கோவில்களில் உள்ளூர்மொழியும், சமஸ்கிருதமும் ஒலிக்கின்றன. பள்ளிவாசல்களில் அரபும், உருதும் தொழுகின்றன. கிறிஸ்துவ தேவாலயங்களில் உள்ளூர்மொழியும் லத்தீனும் ஸ்தோத்தரிக்கின்றன.
மொழிகளில்வேற்றுமைஎங்கிருந்து வருகிறது? அதைக்கையாளும் ஆதிக்க வர்க்கத்தினரால்தான் சுயநலம் சார்ந்துதான் வேற்றுமை உண்டாக்கப்படுகிறது. மொழி எதிர்ப்பை உண்டாக்கி ஆதாயம்தேடுவோரால்தான்உயர்ந்ததுதாழ்ந்ததுஎனப்பாகுபாடுபார்க்கப்டுகிறது.சொந்தமொழியின் பெருமை யை மேடைகளில் மயக்க நெடிகளில் கலந்து தூவி மக்களின் இனவெறியைத் தூண்டி பிறமொழிகளின் மீது காழ்ப்பினை உண்டாக்கும் குறுமன அரசியல்வாதிகளுக்கும் மொழி இலக்கியம் படைக்கும் நமக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எந்தமொழியும் நமக்கு எதிரி அல்ல. இருமொழியைக் கற்றுத் தேர்ந்த கம்பன் உலகஇலக்கியத்தரத்திற்குகம்பராமாயணத்தைப்படைத்தளித்தார்.
பல மொழிகளில் பரிச்சயம் இருந்ததால்தான் பாரதியும், ஸ்ரீஅரவிந்தரும் இணைந்து ஆண்டாள், குலசேகரஆழ்வார், நம்மாழ்வார், பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள். அரவிந்தர் திருக்குறளைப் படித்து ஆங்கிலத்தில் சில குறள்களை மொழியாக்கம் செய்துள்ளார். தமிழின் சிறப்புகளை பிற செவ்விலக்கிய மொழிகளுடன் ஒப்பாய்வு செய்து மேலும் ஆய்வுக்கு வழிவகை செய்து தந்துள்ளார். வழக்கில் இல்லாத லத்தீனும், ஹீப்ருவும் படித்து இலக்கண இலக்கியவளங்களையும், மொழிக்குடும்ப வகைப்பாடுகளையும் தெரிந்துகொள்ளச் செய்துள்ளனர் அறிஞர் பெருமக்கள் ஜெர்மானிய, ஸ்பானிஷ் மொழிக்கூறுகளை ஆய்வு செய்ய ஐரோப்பியர் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொள்கின்றனர். சித்தமருத்துவம்பயிலும் ஐரோப்பியமாணவர்கள் தமிழைக்கற்றுக்கொள்கிறார்கள்.
நமக்கு மொழித்துவேஷம் தேவையில்லை. மொழியைக் காட்டி ஏமாற்றும் கபட நாடக மனிதர்களின் மனம் மாற்றி ஒரே மாந்தர்குல இனத்தவராக்கும் முயற்சியில் நாம் ஈடுபடுவோம்.நம் பக்கத்து வீட்டுப் பையன் ரஷ்யமொழி படிக்கிறான். மருத்துவம் படிக்கப்போகிறானாம் எதிர்வீட்டுப்பெண் ஸ்வீடிஷ் கற்றுக்கொள்கிறாள் அடுத்த பதவி உயர்வுக்கு அது தேவையாம். பொறியியல் படிக்க இடம் தேடும் சென்னைப் பையன் மாக்ஸ் முல்லர் பவனத்தில் ஜெர்மன் படிக்க ஆரம்பித்துள்ளான். சமஸ்கிருதம் கற்றறிந்துள்ள ஆரோவிலியர் ரஷ்யர் என்னிடம் சில நாட்கள் சங்கப்பாடல்களைப் புரிந்துகொள்ள வகுப்பறை வந்து சென்றார். வயிற்றுப்பிழைப்பிற்காக மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறவர்கள் கூட ஒவ்வொரு மொழியின் இலக்கண இலக்கியங்களால் ஆகர்ஷிக்கப்படுகிறார்கள். கவியோகி சுத்தானந்த பாரதியாருக்கு பதினான்குமொழி பரிச்சயம் உண்டாம். அவரது தொண்ணூறு வயதில் ஆரோவில்லிற்கு நம் தோட்டத்திற்கு வந்திருந்தபோது அயர்வில்லாமல் ஒரு சிறு தட்டச்சு எந்திரத்தைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு விரல்களால் தட்டியபடியே நடந்து வந்தார். ‘’என்ன தாத்தா? இப்படி’’ என்றேன். ‘’தாந்தேயின் படைப்புகளை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன்…. நேரமில்லை முடிக்க வேண்டும்’’ என்றார்… மொழிமீதுள்ள காதல் யார்யாரை என்ன செய்து விடுகிறது என்பதை அன்று முற்றாக உணர்ந்து கொண்டேன்.
நீங்கள் மிகச் சிறந்த ஆன்மீகவாதியாக இருக்கிறபடியால், உங்களிடம் இந்தக் கேள்வி கேட்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். கடவுள் என்று ஒருவன் இருந்தால், அது ஒருவனாகத்தான் இருக்க முடியும். அவன் உருவமற்றவன். ஆரோவில்லில், அரவிந்தரையும் ஸ்ரீஅன்னையையும் இறைநிலைக்கு உயர்த்துவதுபோல் இங்குள்ள நடைமுறைகள் உள்ளனவோ எனத் தோன்றுகிறது.
ஆன்மிகவாதியா!.
நான் இன்னும் வாழ்க்கை கல்விப் பள்ளியில் மாணாக்கியாகவே இருக்கிறேன்.! ஆரோவில் உள்பள்ளிக்கூடங்களின் பெயர்களைக் கேட்கிறீர்களா சேய்நலம், குழந்தைகள் தோட்டம், மாற்றம்-படிநிலை இறுதிப்பள்ளி, வருங்காலப்பள்ளி, உன்னதப் பள்ளி, பள்ளியே இல்லை எனும் பள்ளி, இப்படியாக முழுவதுமே ஒரு கற்கும் சமூகமாக உருவாகி வருகிறது. அனைத்து வயதினருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் அவரவர் தேவைக்கேற்ப விருப்பத்திற்கேற்ப பாகுபாடற்றுக் கற்கும் சூழலை நிலைப்படுத்த முயற்சி செய்கிறோம். எனவே, என்னை எப்படி பெண்கவிஞர் என்று சொல்லாதீர்கள் மானுடக் கவிஞர் என்றே சொல்லுங்கள் என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேனோ அது போலவே தான் – ஆன்மிகச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஆன்மிக அருளாளர்கள் நெறியிலே தம்மைக் கரைத்துக்கொள்ள முயல்வாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தேடலில் மேற்சென்று கொண்டிருப்பவளாக உங்கள் கேள்வியை எதிர்கொள்கிறேன்.
ஆன்மிகவாதியாக அல்ல!.
ஆரோவில்லில் உருவ வழிபாடு கிடையாது. ஆராதனை, பூஜை புனஸ்காரம், ஆசாரசடங்குகள் எதுவுமே கிடையாது. நாள்தோறும் கூட்டுவழிபாடு ஆராதனை எதுவும் நடப்பதில்லை. மதங்களின் பூச்சுகள் இல்லை. அவரவர் மனம்வழிதான் தேடல்கள். மையத்திலுள்ள மாத்ரிமந்திர் மண்டபத்தின் நடுவில் சூரியக்கதிரை வாங்கி ஒளியுறும் கிறிஸ்டல் மட்டுமே உள்ளது…. வானாகி…. ஒளியாகி…. வளியாகி…. மன ஒருமைக்கான ஒளி மண்டபம். வெளியே பெரிய ஆலமரம். புல்தரை, பூந்தோட்டங்கள். சிறுசிறு நீராழி அலைக்கட்டுமானங்கள். இயற்கையின் அழகு பரிபூரண அமைதியை உருவாக்கிடும் சூழல். இந்தப் பரப்பில் அன்னை அரவிந்தர் படங்கள், உருவங்கள் எதுவும் கிடையாது.
நாம் நாமாக இருத்தலும், மேற்செல்லுதலும்தான் இங்கே இயல்பாகின்றன. ஆனால் ஆரோவில் இத்தமிழ் மண்ணில் வருவதற்கான காரணகர்த்தாக்களான ஸ்ரீஅன்னை ஸ்ரீஅரவிந்தர் இவர்களது மனிதகுல உயர்வு, பூரணயோகம், திருவுருமாற்றம் எனும் படிநிலைகளை எடுத்துரைக்கும் நூலகங்களில், பொதுக்கல்விக் கூடங்களில் அவர்களுக்கு நன்றிகூறும் விதமாக ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கலாம். அவர்களது சிறப்பு நாட்களில், ஆரோவில் பிறந்த நாளில் ஆம்பிதியேட்டர் எனும் வட்டரங்கில் பன்னாட்டு மக்களும் உள்ளூர் மக்களுடன் அமைதிகாத்து அதிகாலைப்பொழுதில் தீ வளர்த்து சுற்றி அமர்ந்து தியானம் செய்வதுண்டு. அப்போதுகூட மலர் அலங்காரம், தீப அலங்காரங்கள் நிறைந்திருக்குமே அன்றி அரவிந்தர் அன்னையின் உருவாரங்கள் வைக்கப்படுவதில்லை. அவர்களது கருத்துகள் மொழியப்பட்டால் அமைதியாக கேட்டிருப்பார்களமக்கள்.மனஒருமையுணர்வும் சாந்தநிலையும் மட்டுமேஅங்கேநிலைகொண்டிருக்கும். நீங்கள் ஆரோவில் வரவேண்டும் வரும்போது மேலும் பேசலாம் வாருங்கள்.
கவிஞர் மீனாட்சி அவர்களின் படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறோம்.
- நெருஞ்சி 1970 (சாரல்)
- சுடுபூக்கள் 1978 (சாரல்)
- தீபாவளிப்பகல் 1983 ( அன்னம்)
- மறுபயணம் 1998 ( ஆரோவில்)
- மீனாட்சி கவிதைகள் 2003 ( காவ்யா)
- வாசனைப்புல் 2006 (மிதரா)
- உதயநகரிலிருந்து 2006 ( கபிலன்)
- கொடிவிளக்கு 2009 ( கபிலன்)
- ஓவியா 2014 ( கபிலன்)
- கூழாங்கல் 2018 ( TYCL Pondy)
- மூங்கில் கண்ணாடி 2019 ( கபிலன்)