லட்சுமி என்னும் பயணி என்ற நூலை எமது முதல் நூலாய் கொண்டுவர வாய்ப்பளித்த லட்சுமி அம்மாவுக்கு வணக்கங்களும், அன்பும். உண்மையில் இந்நூல் எம்மை வரையறை செய்யும் விதத்திலானது. இதுவரை எழுதப்பட்ட தன் வரலாற்று நூல்களிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. தனது கதையைச் சொல்லும் எளிமையால் நூல் நிறையப் பொதிந்துகிடக்கும் பெண் உழைப்பின் விவரங்களால் அரசியல் வெளியில் தன்னை .ஏதோ ஓரிடத்தில் நிறுத்திக்கொள்ளும் ஒரு நேர்மையான மனதின் தத்தளிப்புகளை வெளிப்படுத்தும் விதத்தால் என இப்புத்தகம் பெண்ணிய செயல்பாட்டின் ஊடாய் எவரும் உணரும் பல கேள்விகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது – நூலின் பதிப்புரையிலிருந்து…
மிக வறிய குடும்பத்தில் பிறந்த தோழர் லட்சுமியின் இளமைக்கால வாழ்வு துயரமும், அவலமும் மிக்கதாக இருந்தது. தந்தையின் பொறுப்பற்ற இயல்பு அவரை தொடக்கக்கல்வியினைக்கூட பெறவியலாத நிலைக்குத் தள்ளியது. மிக்க சிரமத்திற்கிடையே அவர் புகுமுகவகுப்பு வரை தனது கல்வியைப் பெற்றார். தொழிற்சங்கத் தலைவர் எம்.கே.பி. மூலம் அவர் தஞ்சை டான்டெக்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாகச் சேர்ந்தார். அவர் வாரக்கூலியாக ரூ. 2.00 பெற்றார். தினசரி வாழ்க்கையே பெரும் போராட்டமாக அமைந்தது. தனது பணிக்காக 7 கி.மீ தூரம் நடக்க வேண்டிய நிலையில் இருந்தார். அங்கு அவருக்கு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத் தலைவரான எம்.கே,பி தோழரின் அறிமுகம் கிடைத்தது. பின்னர், இயக்கத் தோழர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. அதுவே அவர் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்க வழிவகுத்துக் கொடுத்தது. தனது சுயசரிதை நெடுகிலும் எண்ணற்ற தோழர்கள் குறித்து அவர் பதிவு செய்கிறார். இயக்கத் தோழர்களின் ஆதரவும், அரவணைப்பும் லட்சுமி அம்மாளை சோர்வடைந்திடவிடாது தன் நோக்கத்தில் முன்னேறிச் செல்ல உந்துவிசையாக இருந்ததும் கவனிக்கத்தக்கது.
அப்போது அவசரநிலைப் பிரகடனப்பட்டது. அது தொடர்பான சில கூட்டங்களில் கலந்து கொண்ட தருணத்திலிருந்து அவரது பொது வாழ்க்கைச் செயல்பாடுகள் துவக்கம் பெற்றதாகக் கொள்ளலாம். பின்னர் வி.பி.சிந்தனின் அறிமுகம் பெற்றதும், அவர் வேலையை விட்டுவிட்டு மாதர் சங்கப் பணிகளில் ஈடுபடக் கூறியதையும் லட்சுமி அம்மாள் பதிவிடுகிறார்.
தொடர்ந்து முதன் முதலாக தான் வசித்த தெருவிற்கு குடிநீர் கொண்டுவர தஞ்சை நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து ஏற்பாடு செய்தலே அவரது முதல் முயற்சியாகிறது. தொடர்ந்த இயக்கத் தோழர்களின் பங்பேற்புடன் தஞ்சை நகராட்சி சுத்திகரிப்பு பணியாளர்களுக்கு உடை, காலணிகள், உபகரணங்கள் வழங்க போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறுகிறார்.
இதனிடையே கட்சித் தோழர்களின் முயற்சியினால் தோழர் மணியரசனை திருமணம் செய்கிறார். குடும்ப வாழ்வு அவருக்குப் பல சோதனைகளைத் தந்தாலும், கட்சித் தோழர்கள் எப்போதும் தங்களது ஆதரவினையும், பல உதவிகளையும்.செய்து வந்ததை லட்சுமி அம்மாள் குறிப்பிட்டு நெகிழ்வுடன் நினைவு கூர்கிறார்.
உடல் உழைப்பிற்கான வாய்ப்புகள் இருக்குமிடங்களில் அடக்குமுறை அதற்கு இணையான உருக்கொண்டு வளர்கிறது. டெல்டா மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட இனமக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும், அநீதிகளும் எண்ணற்றவை.
இதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி விவசாயிகள் போராட்டத்தில் நாகராஜன், அஞ்சான், ஞானசேகரன் என்ற மூன்று இயக்கத் தோழர்கள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகின்றனர். லட்சுமி அம்மாள் உள்ளிட்ட எண்ணற்றோரைக் கைது செய்கிறது அரசு. இருப்பினும் மாலை அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். விடுதலை அவருக்கு மனக்கசப்பையும், மிகுந்த துயரத்தினையும் அளிக்கிறது. இது குறித்து அவர் கூறும்போது கைதாகி சிறை சென்றிருந்தால் உயிர்த்தியாகம் செய்த தோழர்களுக்கு உரிய அஞ்சலி செலுத்தியதாக இருந்திருக்கும். சித்திரக்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையினைப் பெற்றிட இரட்டைக்குவளை முறைக்கெதிரான போராட்டத்திலும் பங்கேற்றார். தொடர்ந்து தமிழர் இயக்கங்கள் நடத்திய இலங்கைத் தமிழருக்கான பல போராட்டங்கள் என அவரது வாழ்வு பொதுகளத்திலேயே தொடர்ச்சியாகப் பயணித்தது.
லட்சுமி அம்மாள் பல பரிமாணங்களை தன்னுள்ளே கொண்டிருந்தார். தொழிற்சங்கவாதியாக இருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார். மாதர் சங்கப் பொறுப்புகள், பின்னாட்களில் தமிழ்த்தேசிய அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு பல பணிகளை மேற்கொள்கிறார். தனது தனிப்ட்ட குடும்பவாழ்வு குறித்து அவர் கூறும்போது சில தருணங்களில் உணவு கிடைப்பதே பிரச்சினையாகிப் போனது. ஆயினும், உடை அதனைக் காட்டிலும் கொடுமையான பிரச்சினையாகியது. ஒரே சேலையை துவைத்து உடுத்திக் கொண்டாலும், மேலுடை (ஜாக்கெட்) கிடைக்காத நிலை மிக்க வேதனை தந்தது.‘ சீலையையே இழுத்துப் போர்த்திக் கொண்டே சென்னைக்கு மாதர் மாநாட்டிற்கு சென்றதை வேதனையுடன் நினைவு கூறுகிறார்.
அவரது மகளான மங்களம் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது அவருக்கு சொல்லொணா வேதனையை அளித்தது. அதற்கு சென்னையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்தக் குழந்தை மரணமடைகிறாள். பிறகு அவருடைய இடுப்பு எலும்பு உடைந்து அவதிப்படுகிறார். இவ்வாறான துயரங்கள் அவரைத் தொடர்ந்தவண்ணமே இருந்தன. ஒரு சில இடங்களில் இதனைக் குறித்து அவர் கலக்கமுற்று இருந்ததையும் அவர் பதிவாக்கத் தவறவில்லை. பரந்துபட்ட பார்வையினை தனது செயல்பாடுகளாலும், தனது வாழ்வனுபவங்களாலும் பெற்ற லட்சுமி அம்மாள் குறிப்பிட்டதொரு எந்தக் கட்சியின் கொள்கைகளையும் பின்பற்றவில்லை. விளிம்பு நிலை மக்களுக்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரச்சினையின் அடிப்படையிலேயே போராட்டங்களை முன்னெடுத்துத்துச் சென்றது அவரது இயல்பானது. மக்களின் அடிப்படை பிரச்சினைகள், உரிமைகள் போன்றவற்றிலிருந்து அரசியலானது கட்டமைக்கப்பட வேண்டும் என்பதையே அவர் தன் வாழ்வினூடாக விடுக்கும் செய்தியாகக் கொள்ளலாம். ,
தேர்தல் கூட்டணிகளுக்காக கடந்த முறை எதிர்த்து வாக்குச் சேகரித்த கட்சிக்கு, இம்முறை ஆதரித்து வாக்குச் சேகரிக்கும்போது எதிர்கொள்ளும் எழும் மனக்குரலின் வினாக்களுக்கு வெட்கி வெதும்பி பதிலின்றி அடங்கிப் போகும் மனச்சான்றின் அவலத்தினையும் அவர் கூறுகிறார்.
வேறு எந்தப் பெண்ணாக இருந்திருந்தாலும் இத்தகைய நடைமுறை வாழ்வலங்களால், தொடர் சோதனைகளால் மனம் கசந்து துவண்டு தங்களது பொது வாழ்விலிருந்து விலகி இதனைத் துறந்திருப்பர். மாறாக, லட்சுமி அம்மாளுக்கு இத்தகைய நிகழ்வுகள் இவருடைய மனதிற்கும், எண்ணங்களுக்கும் உரமேற்றி ஊக்கம் தந்திருக்கவேண்டும்.
எப்போதுமே அவருடைய சிந்தனைகளும், செயலும் பொதுப்பிரச்சினைகளைச் சுற்றியே அமைந்திருந்தன. உடல் எத்தகைய நிலையிருப்பினும் மனம் தனது நோக்கங்களிலிருந்து விலகிடவில்லை என்பதனை வாசகர்கள் அவரது தன்வரலாற்றினை வாசிக்கும்போது தெளிவாக உணர்ந்திட இயலும். நூல் நெடுகிலும் போராட்டங்கள், இயக்கச் செயல்பாடுகள், பல்வேறு இயக்கங்கள் குறித்த தரவுகள் நிரம்பிக்கிடக்கின்றன. இயக்க வரலாறுகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இளந்தோழர்களுக்கு இப்படைப்பு மிக்க பயனுள்ள கையேடாக இருக்கும். கூடுதலாக எண்ணற்ற தோழர்களின் பெயர்களும், அவர்களுடைய நடவடிக்கைகள், பங்கேற்ற போராட்ட நிகழ்வுகள் குறித்த விவரங்களும் குறிப்பிப்பட்டிருப்பது சிறப்பானது.
1980 ஆம் ஆண்டு வரையிலும் கூட தஞ்சை டெல்டா மாவட்டப் பகுதிகளில் நடந்து வந்த கீழ்நிலை உழைக்கும் மக்களின் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள், வரம்பு மீறல்கள், உழைப்பினைச் சுரண்டிக் கொண்டு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் அதிகம். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் ஒடுக்கப்பட்ட அவலம் எங்கும் நடந்திராதது. அவற்றிலிருந்து இம்மக்களை மீட்டெடுத்திட பலர் போராடினர். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களும் இதில் குறிப்பிடத்தக்கவராகிறார். இவர் முன்னெடுத்துச் சென்ற இத்தகைய முயற்சிகளுக்குத் தோள் கொடுத்துத் தொடர்ந்தவர்கள் உண்டு.
இத்தகைய சமூகப் போராளிகளின் தனிப்பட்ட வாழ்வில் அவர்களது சாதனைகளின் பின்னர் மறைந்திருக்கும் துயரங்கள், இழப்புகள், வேதனைகள் எண்ணற்றவை.
அதே தருணத்தில் அவர்கள் தங்களது வெற்றிகளையும், சாதனைகளையும் முன்னிலைப்படுத்திக் கொண்டு பலனடைந்திட முற்படுவதுமில்லை. அவர்கள் அதனைத் தங்களது கடமையாகக் கருதி தங்களது வாழ்க்கையினை அதனையொட்டியே அமைத்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றனர் என்பதும் மெய். எவ்விதப் பிரதிபலனும் கருதாது, மக்களின் துயர்துடைத்திடவும், அவர்களது மேம்பாட்டிற்காக தங்களது வாழ்க்கையினை தியாகம் செய்து, அயராது உழைக்கும் லட்சுமி அம்மாள் போன்றவர்கள் தொண்டும், அர்ப்பணிப்பும் வெளிச்சம் பெறுவதே இல்லை என்பதே நடைமுறை எதார்த்தமும், துவர்ப்புமிக்க உண்மையும். முதன் முதலாக இந்நூல் ‘தி இந்து‘ இதழில் ஷங்கரராமசுப்ரமணியனால் பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூலினை முன்னிட்டும், லட்சுமி அம்மாளின் செயல்பாடுகளுக்காகவும் ‘ஸ்பாரோ விருது‘, செயல்பாட்டாளர் விருது, பெண் ஆளுமை விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன
இந்நூல் மிக பரந்துபட்ட தரவுகளைக் கொண்டு அடர்த்திமிக்கதாக விளங்குகிறது.. இதனை குறிப்பிட்ட பக்க அளவில் சுருக்கி, அதன் சாரத்தினைத் தருவதுமே அடிப்படை நோக்கமாகிறது. லட்சுமி அம்மாளின் முக்கிய சில செயல்பாடுகள், முக்கியமான போராட்டங்கள் குறித்து மட்டுமே இக்கட்டுரை உருவாக்கப்ப்பட்டுள்ளது. அனைத்தையும் விரித்துச் சொல்ல விழைவிருப்பினும் அது அசாத்தியமானதொன்றாகும். அதனை வாசகத்தோழர்களின் தேர்விற்கு அளிப்பதே முறை. நூலினை எப்பக்கத்திலிருந்தும் வாசித்திட இயலும். அச்சூழலிலும் நூலின் கருத்தும், தொடர்ச்சியும் வாசகருக்கு விடுபடாது கிடைக்கும். .
நூலின் இறுதிப் பக்கங்களில் அவரது நேர்காணலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி லட்சுமி அம்மாளின் செயல்பாடுகளுக்கான பார்வையினை தேளிவாக வெளிப்படுத்துகிறது. பெண்களின் அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்கான கருத்துகள் முற்றிலும் மாறுபட்டவை. பொதுவெளியில் குடும்பவாழ்வுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டு வாழும் பெண்களுக்கு அவை சிறப்பானதொரு வழியினைக் காட்டுவதை உணரலாம்.. பெண்கள் ஊராட்சி அமைப்புகளில் பதவியிலிருந்தாலும் அவர்களது கணவரே முடிவெடுப்பவராக நிலவும் அவலங்கள் குறித்தும் அவர் இப்பகுதியில் பேசுகிறார். லட்சுமி அம்மாள் அவர்களது வாக்கியங்களைக் குறிப்பிட்டு இதனை முடிப்பதே பொருத்தமானதாக இருக்கும். துன்ப முத்திரைகள் என்னைப் போல் பெண்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கவேண்டும். எனக்காக கசியும் சில இதயங்களில் நான் மடிந்து படிந்து போவேன். இதுவே என் கடைசித்துளி, எனவே எனக்குள் இருக்கும் அவள் வெளியே வந்து பேசவேண்டும்..
நட்புக்கும், தோழமைக்கும் பாலி மொழியில் மைத்ரி எனப் பொருள். அதனை மெய்ப்பிக்கும் விதமாக இந்த நூலினை பதிப்பித்து லட்சுமி அம்மாள் அவர்களது அரும்பணியினை தமிழ் வாசகப்பரப்பிற்கு அறிமுகம் செய்து அவரை மட்டுமல்லாது தங்களையும் பெருமைப்படுத்திக் கொண்டுள்ள மைத்ரி பதிப்பக தோழர்களின் பணி பாராட்டத்தக்கதாகிறது.
மைத்ரி பதிப்பகம்,
விலை: ரூ.180