உள்ளத்துள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை’ என்ற கவிமணியின் கூற்றிற்கிணங்க தம் கவிதை வரிகளால் வாசகரைக் கவரும் நுணுக்கம் தெரிந்தவர் நூலாசிரியர் நர்மதா. இவருடைய கவிதைத் தொகுப்புகளைப் பரந்துபட்ட வாசகர்கள் படிக்கின்றனர். தம் ஆறாவது நூலான இக்கவிதைத் தொகுப்பு நூலை இலக்கிய உலகிற்குக் கொடுத்துள்ளார். கவிதைக்கு விமர்சனம் கூறுதல் எளிதல்ல. காரணம் பல கவிதை நூல்கள் இருண்மைகளாக, படிமங்களாக, குறியீடுகளாக இருக்கும் சூழலில் இவருடைய கவிதைகள் வலிந்து உருவாக்கப்படாமல் வாழ்க்கையை இயல்பாய் எடுத்துக் கூறியுள்ள திறம் பாராட்டுதற்குரியது.
முதல் கவிதையிலேயே நாங்களும் மனிஷிகள்தான் என்று எதார்த்தத்தை எளிய முறையில் பதிவு செய்திருக்கும் ஆசிரியரின் புலமை சிறப்புடையது.
“அதே நிணம் அதே
பிறப்பிற்கான அதே கால அவகாசம
அச்சுறுத்தும் சில அசகாய சக்திகள்”
என்ற வரிகள் இயல்பாய் அமைந்துள்ளன.
கவிதை என்பது வெறும் வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுவதில்லை. மனதிலிருந்து வெளிப்பட்டு நம் உயிரோடு ஒன்ற வேண்டும் என்ற கருத்தை இந்நூலாசிரியர் கொண்டுள்ளார். மாற்றம் மட்டுமே மாறாதது என்ற கருத்தை எளிய நடையில் கூறியுள்ளது அருமை. டைனோசர் இனம் அழிந்துவிட்டது. அதற்குப் பிறகு யாருக்கு வேண்டுமானாலும் அழிவு வரலாம் என்பதை நிலையாமை பொருந்த சொல்லியுள்ளது சிறப்பு. நட்பு என்ற பொருள்பட வந்த கவிதையில் நட்பினை விலை கொடுத்து வாங்க முடியாது, அது கொடுக்கக் கொடுக்க குறையாது. பதிலுக்கு நன்றி சொன்னால் ஆயுள் போதாது என்பதை:
‘அள்ளவும் கொள்ளவும்
நன்றிகள் சொல்லவும் ஆயுள் போதுமா
மலைக்கிறேன் இப்போது’
என மிக அழகாக எழுதியுள்ளார்.
ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையால் வருங்கால சமூகம் சந்திக்கப் போகும் பிரச்சினைகளை:
“டிசம்பரின் ஊசிக்குளிரை
கோடையிலும் கொண்டு தருகிறேனே
என்னைத் தென்றலென்று கொஞ்சிடு
கெஞ்சியது குளிரூட்டி
ஓசோனில் ஓட்டை போட்டபடி”
என்ற கவிதை நச்சென்று சுட்டிக்காட்டுகிறது.
காதல் குறித்து பலவிடங்களில் இத்தொகுப்பில் நூலாசிரியர் கூறியுள்ளார். கணவனைப் பற்றிக் கூறுகையில
“மறுமொழி பேசாமல்
வசவுகள் வாங்கி நகரும்
கணவன்கள் கடவுள்கள்
கடவுளர் எண்ணிக்கை
கணிசமாக அதிகரித்து வருகிறதாம்”
இக்கவிதையைப் படித்து முடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் சிறுபுன்முறுவல் வரத் தவறுவதில்லை. அதே சமயம் மனைவியைப் பற்றி கூறும்போது மனைவியை ஒடுக்க நினைத்தால் காதல் கொள்ள முடியாது என்கிறார். இதில் பெண்ணின் தாக்கம் புலப்படுகிறது. வாழ்க்கையைப் பற்றி கூறும்போது திருத்தித் திருத்தி சரிசெய்ய வேண்டும் என்ற புரிதலை முன்வைக்கிறார்.
இறந்த தன் தங்கையின்மீது கொண்ட பாசத்தை ‘
‘தூண்டப்படும் நினைவுகளுனூடே
அருகாமையில் உன் அருவ நடமாட்டங்களின்
அதிசயங்கள் கண்டு மிரளுகிறேன்’
என்ற வரி நம்மைத் தாக்குகிறது.
தமிழின்மீது ஆசிரியர் கொண்ட அன்பினை,
‘உன்னுள் பெருகி
உனக்குள் மட்டுமே
பயணிக்கிறேன் தமிழே’என்ற கவிதையின் மூலம் அறியமுடிகிறது.
இவைத்தவிர இயற்கைச் சீற்றம், விவசாயம், பெண்ணடிமை, அன்பு, காலமாற்றம், தன்னம்பிக்கை, நிலவு, முதுமை, காதல்தோல்வி, ஜல்லிக்கட்டு போராட்டம் (2), அரசியல் எனப் பலப் பொருண்மைகளில் தம் கவித்தேனை வாசகருக்குப் பருகக் கொடுத்துள்ள நூலாசிரியர் நர்மதாவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கவிதையின் மீதும் எழுத்தின் மீதும் நர்மதாவிற்கு இருக்கும் தீராத அன்புதான் இக்கவிதைத் தொகுப்பை எழுத தூண்டியுள்ளது. இவருடைய எண்ணம் போல் மேலும் பல கவிதை நூல்கள் படைக்க வாழ்த்துகள். அட்டைப்படம் உட்பட நூலைச் சிறப்பாக பதிப்பித்த படி பதிப்பகத்தார்க்கும் வாழ்த்துகள்.