சொல்லில் சித்திரம் வடிக்கும் வல்லமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இன்னமும் கூடுதலாக அதில் சங்கத் தமிழ் இலக்கியங்களின் இனிமையினைக் குழைத்து சமகால இலக்கியம் படைத்தோர் சொற்பமானவரே. அத்தகையதொரு இலக்கியப் பங்களிப்பினை தமிழுக்கு அளித்த சிறப்புக்குரியவர் ப.சிங்காரம் அவர்கள். குடத்திலிடப்பட்ட விளக்கினைப் போன்று பரவலாக இலக்கிய தளத்தில் அறியப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் வாழ்ந்து மறைந்த மகத்தானதொரு படைப்பாளி. உலகப் போர்களை அடிப்டையாகக் கொண்டு பல்வேறு மொழிகளிலும் புதினங்களும், திரைப்படங்களும் இன்று வரை தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் வரலாற்றுப் புதினமென்ற வரையறை தமிழ் வாசகர்களுக்கு சேர, சோழ, பல்லவ அரசுகளை உள்ளடக்கியதாகவே எழுதப்பட்டன. அவற்றிற்கு சந்தை மதிப்பும், தனியானதொரு வாசகத் தளமும் இருந்தது.
அவ்வகையில் புலம் பெயர்ந்து வாழ்ந்த தமிழரின் வாழ்வியலை, தாங்கள் வாழ்ந்த நிலத்தினூடாகப் உலகப்போரின் பின்ணனியில் பிணைத்துக் கதை சொல்லும் நெடுங்கதைகள் இல்லையென்றே குறிப்பிடலாம். சிங்காரத்தின் இந்த இரு படைப்புகளும் இப்பெருங்குறையினை போக்கியது மட்டுமன்றி தமிழின் ஆகச்சிறந்த படைப்பாக மிளிர்வதும் குறிப்பிடத்தக்கது. இன்று இலக்கணக் குறிகள் ஏதுமின்றி தொடர்ச்சியாக கதை சொல்லிச் செல்வது நவீன இலக்கியத்தின் ஒரு கூறாக கருதப்படுகிறது. இதனை சிங்காரம் ஒரு தலைமுறைக்கு முன்பாகவே வெற்றிகரமாக சாதித்துள்ளதை நாம் இவ்விரு நாவல்களை வாசிக்கும் போது காணலாம். இருப்பினும், ஒன்றை உறுதியாக இங்கு பதிவிடுதல் அவசியமாகிறது. பல கடினமான சொற்களை, வாக்கியங்களை வலிந்து புகுத்தி, பத்து பக்கங்களுக்குள் வாசகனை அயர்வுறச் செய்து கதையினைக் கீழே தூக்கியெறியச் செய்யும் கதை போன்றதல்ல சிங்காரத்தின் எழுத்து.
சிங்காரத்தின் சொல் வீச்சு, வளமை, வன்மை வாசகனை அயரவைப்பது. நாவலின் ஓட்டம் பல பகுதிகளில் பாய்ந்தோடிச் செல்வது வாசகனுக்கு மயக்கத்தினை அளிக்கும். இவ்விரு நாவல்களிலுமே இலக்கிய நயமும், அதே தருணத்தில் வட்டார வழக்குச் சொற்களும், வசைச்சொற்களும் விரவிக்கிடப்பதைக் காணலாம். புனைவினைத் தொய்வின்றி இறுதிவரை அவை நடத்திச் செல்கின்றன. சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் பல இடங்களில் சுவையுடன் எடுத்தாளப்படுவது குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரம் மட்டுமல்லாது கலிங்கத்துப்பரணி, திருமூலரின் பாடல்கள் என கதை முழுவதும் சுவைகுன்றாது கையாளுகின்ற இலாவகமும், நயமும் அவருக்குக் கைவரப்பெற்றிருந்தது. உதாரணமாக, மாணிக்கமும், செல்லையாவும் உரையாடும் பகுதி, ஆஅஅ! யவன நாட்டு மரக்கலங்களை எதிர்நோக்கி நிற்கும் பூம்புகார் வணிகன்! செல்லையா, உனக்கு வரலாற்றுப்பான்மை இருக்கிறது. யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல்! கலந்தரு திருவறி புலம் பெயர் மாக்கள் கலந்திருந்துறையும் இலங்கு நீர் வரைப்பு!. நளி இரு முன்னீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட சோழர்!… புகார், கொற்கை, முசிறி! அது பண்டைத் தமிழகம்… இவ்வாறு அப்பகுதி செல்கிறது.
தன் முதலாளியின் மகள் மரகதத்தின் மீது செல்லையா காதல் கொள்கிறான். அவளும் அவ்வாறே. இருப்பினும் செல்லையா, நேதாஜியின் படையில் இணைந்து போராடியது முதலாளிக்கு பிடிக்காத காரணத்தால் திருமணம் தடைபடுகிறது. செல்லையாவும், மரகதமும் இறுதியாக விடைபெறும் காட்சி கவித்துவமானது.
மரகதத்தின் தாயார், அம்மா சொல்லிக்யம்மா, நேரமாகுது. மரகத உருவம் ஏதோ முனங்கியது.மரகத உருவம் கனவில் நடப்பது போல் திரும்பி நடந்து போய் மறைந்தது. மரகத உருவம், மரகதத்தின் உருவமாகிறது. மரகதம் அத்தருணத்தில் உணர்விழந்து பருப்பொருளாக, பௌதிகப் பொருளாக மாற்றம் பெறுவதை சிங்காரம் உணர்வுபூர்வமாக உணர்த்தும் காட்சி அது. புயலிலே ஒரு தோணியில்… போர்களின் இழப்புகளை, கொடுமைகளையும் போரினை தங்கள் சுயநலத்திற்காக நடத்தும் சூத்திரதாரிகள் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நாடு பிடிக்கும் ஆசைகளின் அடிப்படையே இயற்கை வளங்களைச் சுரண்டவும், செலவின்றி போர்க்கைதிகளின் உழைப்பினைக் கொண்டு வலுவாக கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு பொருளாதாரச் சுரண்டலை மேற்கொள்ளவுமே. இந்த நாவலில் அதனைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார் சிங்காரம். ரஷியாவுடன் போரிடுவதைக் காட்டிலும் தெற்காசியாவின் மீது பாய்ந்து ரப்பர், ஈயம், பெட்ரோல் முதலிய அடித்தேவைப் பொருட்களைப் பெறுவதே சிறப்பானது என்ற ஜப்பான் நாட்டின் குறிக்கோளை சிங்காரம் முன்வைக்கிறார்.
இன்றுவரை வல்லாதிக்க அரசுகள் மூன்றாம் உலக நாடுகளின் மீது தந்திரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் இயற்கைவளச் சுரண்டல்களை அன்றே தன் எழுத்தில் சுட்டிக்காட்டியவராகிறார் சிங்காரம். அதேகணம், யுத்தத்தின் மற்றொரு பரிமாணம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை. சிங்காரத்தின் எழுத்து வன்மை இங்கு இலக்கிய நயத்துடன் அவலத்தின் உச்சத்தைத் தொடுகிறது. கொண்டைப் பிடியாய்க் கைப்பிடியாய் கால்பிடியாய் இழுத்துச் சென்றனர்… புல்லாந்தரையில் பிறந்த மேனிக் கோலத்தில் மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டப்பகலில் ஊரறியக் காதறிய கண்ணறியக் கட்டாய உடலாட்டு…பகலவன் பார்த்திருந்தான். நிலமங்கை சுமந்திருந்தாள். ஊரார் உற்று நோக்கக் களித்து நின்றனர்‘..
பாண்டியன் முகத்தைத் திருப்பினான். சிலப்பதிகார வரிகள்…ஆ…‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றேனில் இன்றால்… இன்னொரு பகுதியில், செர்டாங் என்ற அத்தியாயத்தில் பாண்டியன் கைவண்டியில் செல்கிறான். சிகரெட்டினைப் புகைத்தவாறு மானுட வாழ்வின் பல நிலைகளை நினைத்துப் பார்ப்பதாக அப்பகுதி ஏறக்குறைய பத்து பக்கங்கள் வரை நீள்கிறது.
அடிகாள்! கேடிலியப்ப பிள்ளை தவப் புதல்வீர்! மட்டுவார் குழலி மணாளீர்! அரசியை மயக்கிய அறிவழகீர்! நன்றை சொன்னீர், நனி நன்றாய்ச் சொன்னீர். மனமெனும் பெரிய மத்த யானையை அடக்கும் வழி என்ன? அதையும் சொல்வீராக. எப்படி அடக்குவது? எல்லாத் திக்குகளிலும் தடங்கல். மனதுக்கு உடல் முட்டுக்கட்டை. உடலுக்கு மனம் இடைஞ்சல்…கன்னற்சுவை மொழி மின்னிடையாய் உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருங்குங்காறும் சங்கநிதி பதுமநிதி இரண்டும் வேண்டேன் கங்கை வார் சடை கரந்தான் அருளும் வேண்டேன்! எனினும், பெண் மயிலே, நான் தன்னந்தனியன். என் காதலீ! மார்பிற் படுத்த மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகீ! அன்னையற்ற எனக்குத் தாயாகி மடியிற் கிடத்தி தாலாட்டவல்லையோ? தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக் கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ?
இதில் எடுத்தாளப்பட்டுள்ள நெடிலோசையின் நுட்பம் தனிச்சிறப்புடையது. அதிகம் எந்தப் படைப்பாளியும் கையாளாதது. இவ்வாக்கியங்களுக்கு இவ்வோசை தனிச்சுவையினை அளிப்பதைக் காணவேண்டும். மேலும், அந்நாளைய கூடல் நகர் குறித்து ஒர் அத்தியாயமே காட்சிப் படிமாக விரிந்து கிடக்கிறது. பாண்டியனின் சிந்தனை ஓட்டம், மதுரை, ரயிலடியிலிருந்து கிளம்பினால் எதிரே மங்கம்மாள் சத்திரம். அங்கு தங்கலாம். மாலையில் ஒரு சுற்று. டவுன் ஹால் ரோடு., பீம விலாஸ் – மதுரையில் முதன்முதலாக, மேசையில் வைத்துப் பலகாரம் தின்னும் பழக்கத்தைப் புகுத்திய கிளப்புக்கடை. மெஜுரா காலேஜ் ஹைஸ்கூல். பெருமாள் கோயில் தெப்பகுளம் ஒரே நாற்றம். எச்சிலை – குப்பை கூளம் – பாசி. மாசி வீதியைக் கடந்ததும் மேலக் கோபுரத் தெரு. விக்டோரியா காலேஜ், மில்ட்டெரி ஹோட்டல், முன் திண்ணைச் சுவரோரம் பாய் விரித்த, வட்டக் குடுமி -சந்தனப் பொட்டு – சிவப்புக்கல் கடுக்கன் -சாயவேட்டியராய் முதலாளி சாமிநாத பிள்ளை உட்கார்ந்திருக்கிறார். சித்திரை வீதிகள், சாலாமிசிரி ஹல்வா விற்பவர்கள், பொம்பிளை சீக்கு மாத்திரை விற்பனை, நோய்க்கும் பேய்க்கும் மத்தரித்த தாயத்து விற்பவர்கள், பிறகு ஓட்டல் கடைகள்.
பலகைக்குக் கீழே, எச்சில் தொட்டி உரிமையாளர்கள் குடும்பம் நடத்துவர். பிறப்பு – இணைப்பு – இறப்பு எல்லாம் அங்கேயே நடைபெறும்… இவ்வாறு ஆழ்ந்து, தோய்ந்து, உய்த்துணர வேண்டிய வாக்கியங்கள் எண்ணற்றவை. வாசகர்களுக்கு ஒரு புதுமையான மொழிநடையினை, அனுபவத்தினை, புத்துணர்வினை அளிப்பவை. இத்தகைய சொற்களையும், வாக்கியங்களையும் சிங்காரம் ஓர் அதீத, உன்மத்த மனோநிலையிலேயே படைத்திருக்கமுடியும் என்பதை வாசகர்கள் உணரமுடியும். சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகையதொரு புதினத்தினை தமிழ் வாசகப் பரப்பும், தமிழ் இலக்கிய தளமும் எத்தகைய மனநிலையில் இதனை எதிர் கொண்டிருக்கக்கூடுமென்ற வினாவிற்கு பொருத்தமான, சரியான விடைகள் குறித்த பதிவுகளைக் காணவியலவில்லை.
நாவலில் பெரும் சுதந்தரப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் கதை மாந்தராக உலவுகிறார். சிங்காரத்தின் வாழ்வனுபவங்கள் இங்கு அவருடன் கைகோர்த்து கதைக்கு மெருகூட்டுவதைக் காணலாம். பாண்டியன் மரணமுறும் தருணத்தில் அவன் மனத்தில் காட்சிப் படிமமாக ஓடும் எண்ணங்கள் நவீனத்துவம், பின் நவீனத்துவம் உள்ளிட்ட அனைத்து வரையறைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கிறது.
இரு படைப்புகளிலுமே இடக்குறிப்புகள் குறித்தான பகுதிகள் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. சொற்ப காலமே வாழ்ந்திருந்த அன்னிய நாட்டின் வீதிகள், சாலைகள், கட்டடங்கள், உணவு விடுதிகள். அங்கு புழங்கிய மனிதர்கள் குறித்த இப்பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. உணவு வகைகள் பற்றிய குறிப்புகளும் உண்டு. இவ்வாறு படைப்பின் அனைத்து அத்தியாயங்களுமே காவிய நயம் சொட்டும் அழகியலோடு படைக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு பரந்து விரிந்த பல பரிமாணங்களை இந்நூல் அளிக்கிறது. இலக்கியம் விரும்புவோருக்கு அச்சுவையும். வரலாற்றினை அறிய விரும்புவோருக்கு அதனையும், சொற்சுவையினை ரசித்திடுவோருக்கு வற்றாத சொல்லடுக்குகளையும் வழங்குகிறது. கூடுதலாக பழந்தமிழ் இலக்கியங்களைப் பகடிக்குள்ளாக்கி, கேள்விக்குள்ளாக்கும் அங்கதமும் உண்டு. இவ்விரு படைப்புகளைத் தவிர்த்து ஒரே ஒரு சிறுகதையினை அவர் எழுதியுள்ளார். “தவளைகள்” என்னும் தலைப்பிடப்பட்ட அச்சிறுகதையினை காலச்சுவடு ஜனவரி 2020 இதழில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. மின்னூல் பதிப்பாகவும் அது ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
தனது இளமைப்பருவத்தில் அவரது நாட்கள் வெளிநாட்டில் கழிந்ததால் அவருக்கு தமிழ் இலக்கியங்களுடனான பரிச்சயம் ஏறத்தாழ இல்லை என்று அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். பினாங் நூலகத்தில் வாசித்த மேல்நாட்டு இலக்கியங்களே அவரது வாசிக்கும் ஆர்வத்திற்கு வடிகாலாக அமைந்தன. இவற்றின் பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டே இவ்விரு படைப்புகளும் செவ்வியல் தன்மையுடன் தமிழுக்குக் கொடையாக அமைந்தன என உறுதியாகக் கூறவியலும். பிரபலமான நாளிதழில் 40.ஆண்டுகள் பணியிலிருந்தபோதும் தன் எழுத்துகளை அவர் பதிப்பிக்கவியலாது வேதனையுற்றது அவருக்கான இழுக்கன்று, அது நமக்கான இழுக்கும், அவமானமுமாகும். தனது வாழ்நாளில் ரூ 7,00,000 சேமிப்பாக அவர் வைத்திருந்தார். அதனை கடைசியாக தங்கியிருந்த நாடார் மகாஜன சங்கத்திற்கு ஏழை மாணவர்களின் கல்விக்காக வழங்கிவிட்டார்.
தனது மரணச் செய்தியினையும் யாருக்கும் தெரியப்படுத்தத் தேவையில்லை என்றும் கூறிவிட்டார். சிங்காரத்தைப் பற்றியும், அவரது இந்தப் படைப்புகளைப் பற்றியும் வாசகப் பரப்பிற்கு அறிமுகப்படுத்திய பெருமை சி,மோகன், ந.முருகேசபாண்டியன், கோணங்கி மற்றும் சாரு நிவேதிதா என்ற சிலரை மட்டுமே சாரும். (சாரு நிவேதிதா…பழுப்பு நிறப்பக்கங்களில்). இப்புதினங்களுக்கான செறிவுமிக்க முன்னுரையினை சி.மோகன் எழுதியுள்ளார். அவரது முன்னுரை தமிழ் இலக்கிய உலகின் மகத்தானதொரு படைப்பாளிக்கு சிறப்பு செய்கிறது. இவ்வாறு பல இலக்கிய மேதைகளாலும், ஆளுமைகளாலும் சிறப்பு செய்யப்பட்ட பாராட்டப்பெற்ற தமிழ் நாவலின் நவீன வடிவான இந்த நூலினை நற்றிணை கடந்த 2011ஆம் ஆண்டு கெட்டி அட்டையுடன் மகத்தான நாவல் வரிசையின் கீழ் வெளியிட்டது. தொடர்ச்சியாக பல பதிப்பகங்கள் இப்படைப்புகளை வெளியிட்டன. எனினும், இவை இவ்வாறு பாராட்டப் பெற்றதையும், சிறப்புப் பெற்று புகழடைந்திருப்பதனையும் பார்த்து மகிழ்ந்திட அந்த மேன்மைமிக்க படைப்பாளி இல்லை. வாழும் காலத்தில் கிடைக்கப் பெறாத அங்கீகாரமும், பெருமையும் எப்போதோ கிடைப்பதால் பயன் என்ன?
1957ஆம் ஆண்டு எழுதப்பட்ட கடலுக்கு அப்பால் பிரசுரமாகாத நிலையில் ‘நாராயணசாமி ஐயர் போட்டிக்கு‘ கலைமகள் இதழுக்கு கடலுக்கு அப்பால் நாவலினை சிங்காரம் அனுப்பிவைத்தார். அப்போட்டியில் முதல் பரிசு பெற்றாலும் ஏழு வருடங்கள் கூட்டுப்புழுவாக நீண்ட துயிலிலிருந்து அது 1963ஆம் ஆண்டு கூடுடைத்துப் பிரசுரம் கண்டு சிறகடித்தது. புயலிலே ஒரு தோணியும் படைக்கப்பட்டு பத்தாண்டுகள் கழித்தே நூலானது. இத்தகைய நிகழ்வுகளே அவருக்கு படைப்புகள் குறித்த கசப்புணர்வினை உண்டாக்கியிருக்கலாம். விளைவாக, இது தமிழ் இலக்கிய தளத்திற்கும், வாசகர்களுக்கும் பல அரிய, சிறந்த நூல்களை இழக்கவேண்டிய அவலத்தினை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதலாம். விந்தன், ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ், சார்வாகன், ஆதவன் போன்ற மகத்தான படைப்பாளிகளை தள்ளிவைத்த தமிழ் உலகம் இப்பட்டியலில் ப.சிங்காரத்தையும் இணைத்துக் கொண்டது ஒரு துயரமே.. தன் படைப்பினை அச்சில் பார்த்து இன்புறுவதைக் காட்டிலும் ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் பேரின்பம் எதுவாக இருந்திடமுடியும்? அத்தகைய பொறுப்பினை மறுத்த, மறந்த தமிழ் இலக்கியதளமும், வாசகர்களும் இதற்கான பொறுப்பினை ஏற்று வெட்கமுறவேண்டும்.
காலம் தாழ்த்தப்பட்ட கௌரவமாக மேற்கூறப்பட்ட ஆளுமைகளின் எழுத்துகளை தற்போது பெருவாரியான பதிப்பகங்கள் வெளியிட்டு இவ்விழுக்கினைத் துடைத்து பரிகாரம் தேடிக்கொண்டுள்ளன. இனிவரும் காலங்களில் வளரும் தலைமுறைகளுக்கும் இப்படைப்பாளிகளின் பரிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை சற்றே ஆசுவாசமளிக்கிறது, மகிழ்ச்சியுமளிக்கிறது.
நற்றிணை,
ரூ.270