உயிர்களின் மீது அன்பற்ற ரோபோக்களாக மனிதர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். சகமனிதனை நேசிக்கமுடியாது திணறிவரும் இன்றைய சமூகத்தில் அன்பின் இருப்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இரக்ககுணம், அன்புணர்வு அற்ற சமூகத்தைக் கட்டமைப்பதில் இன்றையை அதிகாரமையங்கள் தொடர்ந்து பரப்புரை மேற்கொள்கின்றன. ஆண், பெண்ணிற்கிடையிலான அன்பைக் காமநுகர்ச்சிக்கானதாக வடிவமைக்கின்றன. சகமனிதர்களைக் கொன்றொழிக்கும் அலரல் ஒலிகளுக்கிடையில் அன்பை இழத்தலின் வலியை இச்சமூகத்திற்கு உணர்த்திட பயணப்பட்டிருக்கிறது ‘இரயில்வண்டியின்இசை’.
சங்கஇலக்கியத்தில்பெண், போருக்குச் சென்ற தனது தலைவனின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்துவது போல படைப்பாளி தனது பிரிவாற்றாமையை,
“…உயிர்தொலைத்த
ஒருவெற்றுடம்பின்கணம்
எவ்விதவலியைஉணருமென
அறிந்தேன்அப்போது…” (ப. 66-67)
என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். தான் அன்பு செலுத்திய, வாழ்நாளை வாழ்ந்து கழிக்க உடனிருந்த ஓர்உயிர் தன் கண்முன்னால் இல்லாமல் போவது எவ்வளவு வலியை உருவாக்கும் என்பதை ‘ஆகப்பெரும் காதலில் திளைத்தவர்கள்’ கவிதையில் உணர்த்த முனைந்துள்ளார்.
பசியில்வாடும் பாணரை ஆற்றுப்படுத்துவது போல இங்கு அன்பிற்கு ஏங்கித்திளைக்கும் மனதிற்கு ஆற்றுப்படுத்தல் செய்யப்படுகிறது. தான் நேசித்த ஓர்உயிர் தனதன்பு குறித்த புரிதலற்று பிரிந்து சென்ற தன்வலியை,
“வலிதானெனினும்
தாங்கிக்கொள்ளென
சொல்வதைத்தவிர
வேறென்னசார்புநிலை
எடுக்கமுடியுமென்னால்.
குறைந்தப்பட்சம்ஒருதேநீர்.
குறைந்தபட்சம்ஒருபயணம்
அதிகபட்சம்ஒருகவிதை.
இதற்குள்தான்
கரைத்துவிடுகிறேன்
உன்னை.
இதற்குள்தான்
கரைந்துப்போகிறேன்
நானும்.” (ப. 35-36)
இவ்வாறு கவிதைக்குள் பரவச்செய்திருக்கிறார் படைப்பாளி. இங்கு கடந்து போதல் அதிமுக்கியமானது. இன்றைய சூழலில் மனிதவாழ்வு துயரத்தின்மையத்தில் நிலைகொண்டிருக்கிறது. அதைக் கடக்க ஏதேனும் ஒன்றின்மீது தனது சிந்தனையைக் குவியப்படுத்துகிறார்கள். இழந்துவிட்டவாழ்க்கைக்கானஏக்கச்சிந்தனையை‘ஜின்’ கவிதையின் வழி கடக்க எத்தனிக்கிறார். இதுவே இவரது கவிதைகளின் அடிப்படை குணங்களாக அமைந்துள்ளன.
‘அன்பு’ என்ற கருத்தாக்கத்தின் உயிர்நாடி இழந்துநிற்கும் சமூகத்தில் அன்பின் வலிமையை உணர்த்தும் பாங்காகப் பயணப்பட்டிருக்கிறார் படைப்பாளி. இக்கவிதைகளைப் பாலியல் அடிப்படையில் சுருக்கிப்பார்க்காது சகமனிதர்களுக்கானதாக அணுகும்போது அன்பின்வழி உயிர்ப்பெறும் மனிதத்தை நோக்கிப் பயணப்படுவதைக் காணமுடிகிறது. நம்பிக்கை, துரோகம், அவமதிப்பு, இழப்பு என்று வலிகளின் உச்சத்தை ‘மீரா’என்ற கதாபாத்திரக்கட்டமைப்பின் வழி தொட்டுக்காட்டுகிறது இக்கவிதைத்தொகுப்பு.
புறச்சூழல்குறித்த அவதனிப்புகளைப் பெரிதும் காணமுடியாவிட்டாலும் அகத்திற்குள் இயங்கும் உணர்வுப் பெருக்கம் சிறப்பாக கவிதையாக்கப்பட்டுள்ளது. ‘ஜின்’கவிதைகளின் முக்கியப் பொருண்மை அன்பு. அதைக்கவிதைத் தொகுப்பு முழுவதும் இழையோட விட்டிருக்கிறார்.
ஓர்ஆண், ஆணாதிக்கவாதியாக இயங்குவதை ஒப்புக்கொள்வது இழுக்கானதாக நோக்கப்படும் சமூகச்சூழலில் ‘ஆண்திமிடரங்கியபெருஞ்சுவை’ என்றகவிதையில்,
“…கைகள்விரித்த
மேல்நோக்கிய
சூரியவெளிச்சத்தின்முன்
மண்டியிட்டுஒப்புக்கொள்கிறேன்
உன்னிடம்தோற்றதை…” (ப. 71)
என்று ஒப்புக்கொள்வது ஆரோக்கியமானது.
பெண்ணின் வெற்றியைக் கொண்டாடுவது முக்கியமானது. ஆண் எளிதில் தான் தோல்வியுற்றதை ஒப்புக்கொள்ளமாட்டான். இங்கு ஒப்புக்கொள்வது அன்பின்வழிப்பட்டேயாகும். பெண்மையைக்கொண்டாடுவது ஆணாதிக்கத்திற்குள் சிறைபடுத்துவதாகும். வெற்றியைக்கொண்டாடுவது அவளின் சுதந்திரவெளியை எல்லையற்ற தாக்குவதாகும்.
படைப்பாளி ஒப்புக்கொள்ளுதல் இருந்தாலும் கவிதைகள் முழுக்க ஆணின்பார்வைக் கோணத்திலேயே அமைந்துள்ளது. இந்தஒற்றைச்சார்பு பெண்ணைக் குற்றவாளியாகவும் கொடூரமானவளாகவும் குற்ற உணர்விற்குள்ளாக்குவதாகவும் சினிமாதனத்தில் சித்திரிப்பதாகக் காட்சிப்படுத்துகிறது. பெண்ணின் பார்வையில் அவளின் வலியை இக்கவிதைகள் இருட்டடிப்பிற்குள்ளாக்கி அவளைச் சாத்தானாக உருமாற்றியிருக்கிறது.
அன்பிற்கு அடைக்கும்தாழ் இல்லையென்று கூறப்பட்டாலும்சாதி, மத, வர்க்க பாகுபாடுகளால் இருட்டறைக்குள் சிறைபடுத்தப்படுகின்றன. சாதியப் புனிதத்தைக்காக்க ஆணாவப்படுகொலைகள் தொடர்ந்து நடந்தேறி வருவது சமூகச் சமத்துவதற்குப் பெரும் சவாலாகியுள்ளன. அன்பு குறித்து பேசும் ஒருபடைப்பாளி இதைக்காணாது கடப்பது அவரது மலட்டுச்சிந்தனைக்கான அடையாளமாகும். சகமனிதன்மீது அதிகாரம்செலுத்தும் அதிகாரவர்க்கச்சமூகத்தை கேள்விகேட்பது இன்றைய அவசியத்தேவையாகிறது.
சாதியின் கோரப்பிடிக்கு பலியாக்கப்பட்டு தனது இணையை இழந்து ஒற்றைஅறையில்வாழ்வினைச்சங்கமித்துக்கொண்டிருக்கும்பெண்ணின்வலியை,
“…அடைந்துகிடக்குமொரு
வீட்டின்முனையிலிருந்து
எட்டிப்பார்க்கும்அவளுக்குஅறுதலில்லை.
ஒருபுறம்ப்ளேடும்
மறுபுறம்கயிறும்
தலைநீட்டி
நட்சத்திரமின்னுதலைரசிக்கிறாள்.
அப்பாவின்சாதிமதுக்கோப்பைகளின்
மீதும்கோபம்வருகிறதுஅவளுக்கு.
ஆயுளைத்துடைத்தெறியும்ஆசையில்
கண்கள்மேல்நோக்க
வானம்அப்போது
சங்கரையும்இளவரசனையும்
பூமிக்குஅனுப்பிக்கொண்டிருந்தது” (ப. 16)
என்று‘நான்வானமாகஇருந்தநாள்’ கவிதை பதிவுசெய்கிறது. பெண்ணைச் சாதியப்புனிதஉடலாகக் கட்டமைத்து அவளின் கனவுகளைச் சிதறடித்து, ஆசைகளை அழித்தொழித்து அவளின் சுதந்திரவெளியைத் தீர்மானிக்கும் ஆற்றலாகச் சாதியச்சமூகம் வினையாற்றிவருகிறது. அதை உடைத்தெறிய பெண்தான் முன்னிற்கவேண்டும். அவள் ஆற்றாமைக்குள் அகப்பட்டு வீட்டிற்குள் முடங்குவது மடத்தனமானது. ஆனால் இக்கவிதை, பெண்ணைக் கலகக்காரியாகச் சித்திரிக்காமல் ஆற்றாமைக்குள்ளாகி கோபத்தை உள்ளமுக்கிக்கொண்டு ஆயுளைக் கழிக்கும் உடலாகக் கட்டமைக்கிறது.
கற்பிஒன்றுசேர்’ என்ற கவிதை ஆணி ன் போராட்டக்குரலை,
“பூட்டிய/ கைவிலங்கினை / விடுவியுங்கள் / என்கிறான்/ அவன். / உடைக்கலாம் / என்கிறேன் / நாம்” (ப. 8)
இவ்வாறு வெளிப்படுத்துகிறது. அதிகாரமையங்கள் இட்டகைவிலங்கை உடைத்தெறிதல் வீரமரபின்அடையாளமாகிறது. இது கலகச் சொல்லாடாகவிரவுகிறது. ஆனால்பெண், தலைநீட்டி நட்சத்திர மின்னுதலை ரசிக்கும் மென்மையானவளாகச் சித்திரிப்பதன்வழி அவளது கலகமொழி மறுதலிக்கப்படுகிறது. ஆண்கலகம் செய்பவனாகவும் பெண்தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எண்ணி ஆற்றியிருப்பவளாகவும் கட்டமைத்திருப்பது முரணாகக்காணமுடிகிறது. இது கவிதையின் உள்தர்க்கத்திற்குப் பெரும்இடையூறாக உள்ளது. இதைப் படைப்பாளி கவனங்கொள்வது அவசியமாகிறது. புறச்சூழல் அகத்தை நிலைகுலையச் செய்யும் காலகட்டத்தில் அன்பின் வலிமையைப் பறைச்சாட்டுவது ஆரோக்கியமானது. ‘இரயில்வண்டியின்இசை’ அன்புப்பரிமாற்றப் பயணத்திற்குச் சகமனிதர்களை வரவேற்றுநிற்கும் பிரதியாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
படி வெளியீடு,
பக்: 80. விலை: 90.
044-48557525.