இந்த நோய் தொற்று காலத்தின் ஊரடங்கு, அனைத்து வகை மக்களையும் முடங்க வைத்துவிட்டது. புத்தகம் என்பது கடை விரித்து விற்பனை செய்ய வேண்டிய ஒன்று. அதற்கான குறைந்தபட்ச சூழலும் இல்லாத நிலை. சிறு பத்திரிகைகள், வார இதழ்கள், பல இணைய இதழாகிவிட்டன அல்லது முடங்கி நின்று போய்விட்டன.
சமீபத்தில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலர் தற்கொலை செய்து கொள்ளத் தொடங்கியபோது மருத்துவர் குழு இந்த சிகிச்சை வார்டுகளில் நூலகங்களை அமைத்து புத்தக வாசிப்பை ஊக்குவித்தால் தற்கொலைகளை நாம் தவிர்க்கலாம் என்று ஆலோசனை கூறியது. எனவே புத்தக வாசிப்பு நூலகம் என்பவை ஒரு சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
அத்தகைய சமூக வளர்ச்சியின் மன-நலத்தின் அங்கமாக உள்ள புத்தகங்களை உற்பத்தி செய்யும் பதிப்பாளர்கள் இன்று மிகவும் நொடிந்து போய் உள்ளனர் என்பதே உண்மை. அரசு நூலகங்களுக்கு புத்தகங்களை தேர்வு செய்து வாங்கிய தமிழக அரசின் நூலகத்துறை இன்று வரை பாக்கியை பதிப்பாளர்களுக்கு தராமல் காலதாமதம் செய்வது அந்தத் துறை சார்ந்த பதிப்பாளர் யாவரையும் நொடிந்து போக வைக்கும் செயலாகும்.
ஏற்கனவே மிகவும் மனம் உடைந்து போயிருக்கும், முற்றிலும் முடங்கி வருமானமே இல்லாமலிருக்கும் அவர்கள் மேலும் நலிந்திடாது காக்க தமிழக அரசின் நூலகத்துறை பதிம்பாளர்களுக்கு தரவேண்டிய பாக்கியை உடனடியாக வழங்கி உதவிட வேண்டும். பதிப்பாளர்கள் அரசிடம் கேட்பது கரோனா கால சலுகைகளை அல்ல. அவர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தான். சமூகத்தின் மனசாட்சி என்று பேரறிஞர் அண்ணா புத்தகங்களை அழைத்தார். அந்த மனசாட்சியை உருவாக்கித் தரும் பதிப்பாளர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.
அனைவருக்கும் நன்றி
-ஆசிரியர் குழு