(பொருளாதார அடியாட்கள், ரகசிய உளவாளிகள், உலகளாவிய ஊழல், குறித்த உண்மைகள்)
இந்நூலின் ஆசிரியர் ஜான் பெர்க்கின்ஸ் பொருளாதார அடியாளாக இருந்து வந்த காலத்தின் வாழ்வு அனுபவங்களை, இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியலுடன் கலந்து ,அமெரிக்கப்பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையோடு தொடர்புபடுத்தி விவரிக்கிறார்.
அமெரிக்க ஏக போக முதலாளிகளின் வளர்ச்சியினையும், கம்யூனிஸ எதிர்ப்பைச்சாரமாக கொண்ட அமெரிக்க ஆளும் வர்க்க கொள்கையினையும் அடித்தளமாகக்கொண்டு நூலாசிரியரின் வாழ்வு அமைந்திருப்பதை இந்நூலில் காணமுடியும்.
அமெரிக்காவானது அபாரமான அரசியல் சட்டத்தையும், உரிமைகள் மசோதாவையும் கொண்டுள்ளது. ஜனநாயகத்திற்காக வாதிடுகிறது. இருப்பினும் கொடூரமானதும், தன்னலம் மிகுந்து, பிற தேசங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதுமான பேரரசின் பண்புகளைக் கொண்டிருக்கிறது.
பேரரசு எனும்போது,
• அது, ஆதிக்கம் செலுத்தும் மண்ணின் இயற்கை வளங்களைச்சுரண்டும்.
• மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, தன்னுடைய மக்கள் தொகையின் அளவைவிட பன்மடங்கு அதிகமான இயற்கை வளங்களை நுகரும்.
• நுணுக்கமான நடவடிக்கைகள் வெற்றி பெறாத போது தன்னுடைய கொள்கைகளை, பிற நாடுகள் மீது திணிப்பதற்காக மிகப்பெரிய இராணுவத்தை வைத்திருக்கும்.
• தன்னுடைய செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதிகளில், தன்னுடைய மொழி, இலக்கியம், கலை, மற்றும் பல்வேறு அம்சங்களைப் பரப்பும்.
• தனது நாட்டு குடிமக்களின் மீது மட்டுமின்றி பிற நாட்டு குடிமக்களின் மீதும் வரி விதிக்கும்.
• தன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மீது தன்னுடைய நாணயத்தை திணிக்கும் என்கிறார்.
அதே போல, நிறுவன அதிகார வர்க்கத்தின் அதிகார அடித்தளமாக விளங்குவது பன்னாட்டு நிறுவனங்களே என்கிறார்.
உலகில் அமெரிக்கர்கள்
• மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கின்றனர்.
• சுமார் 25 சதவிகித இயற்கை வளங்களை நுகருகின்றனர்.
• 30 சதவிகிதத்திற்கும் மேலாக சுற்றுச்சுழல் கேட்டை உற்பத்தி செய்பவர்களாக இருக்கின்றனர்.
• பிற நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணையைக்கொண்டு அந்நாட்டின் போக்குவரத்துகள் இயங்குகின்றது.
• தொழிலாளர்களை கசக்கி பிழியும் தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிபவர்களாக இருக்கின்றனர்.
இந்நூல், ஆசியா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் உலகை மாற்றுதல் என ஐந்து பாகங்களாக பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசியா
பொருளாதார அடியாளாக, 1971 ஆம் ஆண்டில் பன்னாட்டு நிறுவனங்களின் கேவலமான வேலைகளையெல்லாம் செய்கின்ற சாஸ் டி மெயின் எனும் ஆலோசனை நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணி நிமித்தமாக 17000 தீவுகளைக்கொண்ட, 250 மொழிகள் பேசும் இனக்குழுக்கள் வாழும் இந்தோனேஷியாவிற்கு முதலில் அனுப்பப்படுகிறார். அந்த நிறுவனத்தின் நோக்கமானது, கம்யூனிஸத்தை தடுத்து நிறுத்துவது, அரசினை ஆதரிப்பது, அந்நாட்டின் எண்ணெய் வளத்தை தங்களுடையதாக ஆக்கிக்கொள்வது மட்டுமின்றி. ஆசியா மட்டுமல்லாது ,முஸ்லிம் உலகம் முழுமைக்கும் இந்தோனேஷியாவை ஒரு முன்னுதாரண நாடாக ஆக்கிக்காட்டவேயாகும்.
அடியாளின் வேலையானது, பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டக்கூடிய இயற்கை வளங்கள் இருப்பதுபோல் தெரிகிற எந்தப்பகுதிக்கும் செல்வது, சமுதாயத்தலைவர்களைச் சந்திப்பது, கிடைக்கும் அனைத்துத் தகவல்களையும் சேகரிப்பது, மேலும், மின்சக்தி மற்றும் இதர கட்டமைப்புத் திட்டங்களின் நிறைவேற்றத்திற்காக, உலக நிதி நிறுவன அமைப்புகளிடம் பெறப்படும் அதிகளவு கடன் தொகையானது இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஒரு நவீன வெற்றியாக மாற்றிவிடும் என பளப்பளவென்று ஒரு அறிக்கையை தயாரிப்பது என்பதாக இருந்திருக்கின்றது
1997 களில் ஆசியாவில் பொருளாதார வீழ்ச்சி நிகழ்கிறது. அது இந்தோனேஷியாவையும் பாதிக்கிறது. 1970 களிலிருந்து 1997 வரை இந்நாட்டினது வளர்ச்சியின் புள்ளிவிபரங்களை பார்க்கும்போது, குறைவான பணவீக்கம், அந்நியச்செலவானி கையிருப்பு இருபது பில்லியன் டாலர், 90 மில்லியன் டாலர் வர்த்தக உபரி, பொருளாதார வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது சதவிகிதம் எனும் அளவில் இருந்த போதிலும், பொருளாதார வீழ்ச்சியானது அந்நாட்டு எளிய மக்களை கடுமையாக பாதித்துவிட்டது. இதனால், லட்சக்கணக்காண மக்கள் பட்டினியாலும், நோயாலும் இறந்திருக்கின்றனர்.
சர்வதேச ஆய்வுகளின்படி,ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தோனேஷியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அப்பேற்பட்ட நாட்டில், 2002 ஆம் ஆண்டில் இந்தோனேஷியா மக்கள் தொகையில் 52 சதவிகிதம் பேர் ஒருநாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவான ஊதியம் பெற்று உயிர் வாழ்ந்திருக்கின்றனர். இந்த நிலைமை பெரும்பாலான கண்ணோட்டங்களின்படி, நவீன கால அடிமைத்தனத்தோடு ஒப்பிடத்தக்கதாகும்.
பன்னாட்டு நிறுவனங்களான நைக்கி, அடிடாஸ், ரீபோக், தி கேப், ஒல்ட் நேவி, டாமி ஹில்பிகர், போலோ, ரால்ப்லாரன், லோட்டோ, பிலா மற்றும் லெவிஸ் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இப்படியாக கசக்கி பிழியப்பட்டு, ஒரு நாளைக்கு 1.25 டாலர் ஊதியம் பெற்று உயிர் பிழைத்திருக்கின்றனர். நமது நிறுவனங்களும், அரசாங்கமும் கொல்லும் அனுபவத்திற்காகவே கொலைசெய்யும் பழக்கத்திற்கு அடிமையாகும்படி மனிதர்களை ஊக்குவிப்பதாகக் கூறுகிறார்.
1975 நவம்பர் 28 ம் நாள் ரோமன் கத்தோலிக்கர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு தைமூர் தன்னை போர்த்துக்கிசியரிடமிருந்து விடுதலை பெற்ற நாடாக அறிவித்துக்கொண்டது. அது நடந்து, ஒன்பது நாட்களுக்குப்பின்னர் இந்தோனேஷியா தைமூரின் மீது படையெடுத்து இரண்டு லட்சம் மக்களை பலியிட்டு அந்நாட்டை திரும்பக் கைப்பற்றிக்கொண்டது. அந்தப்படுகொலைகளில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அமெரிக்கா வழங்கியது மட்டுமின்றி, அப்படையெடுப்பை பகிரங்கமாக ஆதரிக்கவும் செய்தது.
அமெரிக்க ஆதரவுடன் நடத்தப்பட்ட இப் படுகொலைகள் குறித்து அமெரிக்க மேரிலேண்ட் பல்கலைக்கழக் துணைப்பேராசிரியர் பிராட் சிம்ப்சன் “டெமாக்ரஸி நவ்”எனும் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதை நூலாசிரியர் இங்கு பதிவு செய்கிறார். அதாவது, அடுத்தடுத்த அமெரிக்க ஆட்சியாளர்கள் கடைபிடிக்கும் கள்ளத்தனத்தை தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகத்திலுள்ள ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தோனேஷியா திட்டமிட்டு கிழக்கு தைமூரை ஆக்கிரமித்தது பற்றிய விபரங்களை மக்களிடமிருந்தும், சர்வதேச சமூகத்திடமிருந்தும் அமெரிக்கா மறைத்து வைத்திருக்கிறது. கிழக்கு தைமூரில் நடந்த படுகொலைகள் குறித்த நம்பகமான தகவல்களை வெளிவர விடாமல் தடுத்தது அல்லது அவற்றை உண்மையல்ல என மறுத்தது. இப்படியாக,அமெரிக்க நாடாளுமன்றம் இராணுவ அமைப்புக்கள் மீது தடை விதிப்பதை சூழ்ச்சி செய்து ஆட்சியாளர்கள் தடுத்ததன் மூலம் ஆயுதங்கள் தங்கு தடையின்றி வினியோகமாவதை உறுதி செய்தது.
இந்தோனேஷியாவின் இயற்கை வளங்கள் மீது பேராசைகொண்ட, பல பன்னாட்டு நிறுவனங்கள் அதிபர் சுகார்த்தோ அரசுக்கு நிதியுதவி அளிக்கின்றன. பிறகு ,அந்நாட்டின் மலிவான உழைப்பு, இயற்கை வளங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள், நுகர்வுப்பொருள்களுக்கான சந்தை ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் ஆதாயம் பெறுகின்றன. சர்வதேச வங்கி மற்றும் வர்த்தக சமுதாயத்தின் முதலீட்டை சுற்றிக்கட்டப்பட்ட பொருளாதாரம் என்பதற்கு இந்தோனேஷியா சிறந்த உதாரணமாகத் திகழ்ந்து வந்தபோதிலும், தன்னுடைய இயற்கை வளங்களை விற்று அதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடனை ஈடு செய்ய முடியாத சூழல் உருவாகியது. வளர்ந்து வந்த பொருளாதார நெருக்கடி, தன்னுடைய நாட்டை கடுமையாக பாதிக்கத்துவங்கிய போது, அந்நாட்டு அதிபர் சுகார்த்தோ, ஐ.எம்.எப் பின் பொருளாதார மறு சீரமைப்புத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறார். இத்திட்டத்தின்படி,அரசாங்கத்திற்கான செலவுகளில் சிக்கனத்தை கடைபிடிக்கிறார். எண்ணெய் மற்றும் உணவுபொருட்களுக்கான மானியத்தைக்குறைக்கிறார். இதன் விளைவு ஏழைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.(69)
2004-ல் சுனாமி ஏற்பட்டு இந்நாட்டை கடுமையாக பாதிக்கிறது. அரசானது, இதனை சாக்காக வைத்து, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து விடுதலை கோரிவந்த வளமிக்க ஆசே மாகாண போராட்டக்காரர்களை அமெரிக்கப்படைகளின் உதவியுடன் ஒடுக்கியது. மேலும், பேரிடர் காலம் என்று கூட பார்க்காமல், பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க வசதியாக, மறு சீரமைப்பு என்று கூறி, பொறியியல் நிறுவனம், தகவல் தொடர்பு, சில்லறை விற்பனை, போக்குவரத்து …இப்படியாக பெரும் தொகையினை தாரை வார்க்கவும் செய்தது என்கிறார்.
உலகின் பல்வேறு நாடுகளில், பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக, தேசிய இராணுவங்களுக்கு உதவியாக தனியார் இராணுவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தோனேஷியாவைப் பொருத்தவரையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, இயற்கை வளங்களும், இராணுவமும் சொந்தமாக இருப்பதை “நியூ யார்க் டைம்ஸ்” பத்திரிக்கையில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார். அதில், இந்தோனேஷிய ஆயுதப்படைகளுக்கான நிதியில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே அரசிடமிருந்து வருகிறது. மீதி, வெளியில் தெரியாத மூலங்களிலிருந்து ’பாதுகாப்புக்கான கட்டணம்’ என்கிற பெயரில் வருகிறது. இதுபோன்ற போக்குகளானது, இராணுவ உயர் அதிகாரிகளை அரசாங்க நிதிக்கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கின்றது என கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.
1997 களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் வகித்த பங்கு, பொருட்களின் மீதான நுகர்வு மோகம், வர்த்தகமயம் இவையே ஆசியாவில் பெருமளவு மக்கள் துன்ப துயரங்களை அனுபவித்ததற்கு, காரணம் என்கிறார் .
1997 ஆசிய பொருளாதார நெருக்கடிக்கு, ஐ.எம்.எப் கடைபிடித்த ‘அதி விரைவு முதலாளித்துவ’ நடவடிக்கையே காரணமாக அமைந்தது என்கிறார். அதாவது
• மூலதன வரத்துக்கான தடைகள் நீக்கப்பட்டது.
• தனியார் மயத்தை ஊக்குவிப்பது.
• அந்நிய முதலீட்டார்களையும் வங்கி மூலதனத்தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு ஈர்க்கும் வகையில் வட்டிவிகிதங்களை உயர்ந்த அளவிலேயே வைத்திருப்பது.
• தேசிய நாணயங்களை டாலருக்கு எதிராக நிலையான விலையில் வைத்திருப்பதன் மூலம் நாணய நெருக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முயற்சிப்பது.இவையெல்லாம் அதிவிரைவு முதலாளித்துவத்தின் அம்சங்களாகும்.
ஆசியர்கள் இந்த முதலாளித்துவ மாதிரியை அதாவது, மேலிருந்து கீழான கட்டுப்பாடு, பெரு முதலாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டுறவு, அளவுகடந்த நுகர்வுக்கலாச்சாரம் மற்றும் கொட்டிக்கிடக்கும் இயற்கைவளங்கள் வெகு சிலரால் சுரண்டப்படுவதற்காகவே இருக்கின்றன என நம்பும் முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்கிறார்.
லத்தின் அமெரிக்கா
1992 வாக்கில், அடியாள் குவாதமாலாவிற்குச் செல்கிறார். அங்கு மாயன் எனும் பழங்குடிச்சமூக பூசாரி ஒருவரை சந்திக்கிறார். பூசாரி கோபமாகவும், உணர்ச்சித் ததும்பவும், சத்தமாகவும் கூறும் போது, உங்களுக்கு நான் ஏன் உதவ வேண்டும்? உங்களது ஆட்கள் எங்கள் மக்களை ஐந்நூறு ஆண்டுகளாக கொன்று குவிக்கிறார்கள். காலனிய காலத்திய ஸ்பானியர்கள் மட்டுமல்ல, உங்களது அரசாங்கம் ரகசிய உளவாளிகளையும், சீருடை அணிந்த பணியாளர்களையும் என்னுடைய வாழ்நாள் முழுதும் அனுப்பிக்கொண்டே இருக்கின்றது. இப்போதும் கூட அது தொடர்கிறது. எங்கள் தலைநகரைத்தாக்கினீர்கள். எங்களுக்கு உதவ முயன்ற ஒரே அதிபரான ஆர்பன்சை கவிழ்த்தீர்கள். மாயன்களை சித்திரவதை செய்வதற்கு நீங்கள் குவாதமாலா படைகளுக்கு பயிற்சி அளித்தீர்கள். இப்போது, நீங்கள் என் உதவியைக்கேட்கிறீர்கள் என்று பதிவு செய்கிறார்.
1998 களிலிருந்து தென் அமெரிக்காவின் ஏழு நாடுகளைச்சேர்ந்த 37 கோடி மக்களில், 30 கோடிப்பேர் அந்நியர்களின் சுரண்டலுக்கு எதிராக பிரச்சாரம் செய்த அதிபர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் வாதிகள் அதை கம்யூனிஸம், அராஜகம் அல்லது பயங்கரவாதத்திற்கானது என்ற போதும் அவை அடிப்படையில் சுய நிர்ணயத்திற்கானவையே. ஜனநாயகத்தேர்தல் மூலம், அண்டை நாடுகள் அமெரிக்காவிற்கு ஒரு வலுவான செய்தியை கூறியிருக்கிறார்கள். அவர்களையும் அவர்களது மண்ணையும், பன்னாட்டு நிறுவனங்கள் பழிப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் அவ்வளவுதான். இறுதியில் அமெரிக்கா அவர்களுக்கு அளித்த வெகுமதி அவர்களை ஒதுக்கிவைத்ததும், கொன்றொழித்ததும்தான் என்கிறார். பேரரசுகளால் சுரண்டப்பட்ட நாடுகள் எப்படியிருக்கும் எனத்தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், முதலில் பொலிவியாவைப் பார்க்கச்சொல்லுகிறார்.
1970 களின் மத்தியில் ஒரு பொருளாதார அடியாளாக பொலிவியாவிற்குச் செல்லுமுன், அந்நாட்டைப்பற்றி ஆராயும் போது, நான் எதிர்பார்த்ததைவிட, அங்கு ஒடுக்குமுறை அதிகமாக இருந்தது. அதுமட்டுமின்றி, சேகுவாரா விட்டுச்சென்ற பாரம்பரியத்தால் உண்டான அச்சம் காரணமாக, அந்நாட்டின் செல்வந்தர்களும், இராணுவமும் கூட்டணி அமைத்துக்கொண்டு மக்களை பிராணிகள் போல் நடத்தினார்கள். அந்தக்கூட்டணியை நிறுவன அதிகார வர்க்கத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்ளத்தூண்டும் வழிகளை ஆராய்வதுதான் என்னைப்பொன்ற பொருளாதார அடியாட்களின் வேலையாக இருந்தது.
இந்தோனேஷியா அதிபர் சுகார்த்தோவைப்போலவே, பொலிவியாவிலும் இயற்கைவளங்களை அந்நியர்களுக்கு விற்கும் திட்டங்களையே அமல் படுத்துவது என ஆட்சியாளர்கள் முன்னரே தீர்மானித்திருந்தனர். சாரம்சத்தில், பொலிவிய செல்வந்தர்கள் மற்றும் இராணுவக்கூட்டணியானது ஒரு புதுவகை காலனிமயமாக்கலை அதாவது, ’நல்ல ஆட்சி நிர்வாகம், வலுவான பொருளாதாரம், கட்டமைப்பு சீரமைப்பு’ போன்ற ஐ.எம்.எப் பின் வார்த்தைகளுக்குப்பின்னால் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் வரை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருந்தார்கள்.
உலகெங்கும் அமெரிக்கத்தூதரகங்கள் இருப்பது, பிரதானமாக நிறுவன அதிகார வர்க்கத்தின் ஆதாயத்திற்காகத்தான் என்கிற வெளிப்படையான உண்மையைத்தவிர என்னிடம் வேறு பதிலில்லை என்கிறார். அமெரிக்க ஆதிக்கத்தின் சின்னமாக லத்தின் அமெரிக்க நாடுகள் ஆகிவிட்டன. ஏனெனில், அந்த நாடுகளின் இயற்கை வளங்களை தமதாக்கிக்கொள்ள தமது பன்னாட்டு நிறுவனங்கள் பேராசைப்பட்டன. இதற்கு மாறாக, தங்களது சொந்த நாட்டு மக்களுக்காக அந்த இயற்கை வளங்கள் பயன்படுத்தவேண்டும் என ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் உறுதிகொண்டிருந்தனர். இதன் விளைவாக, ஒவ்வொரு நாடும் தன்னுடைய தலைவர்கள் இராணுவக்கலகங்கள் மூலம் தூக்கி எறியப்படுவதையோ, அல்லது படுகொலை செய்யப்படுவதையோ கண்டிருக்கின்றன. (உதாரணத்திற்கு,) ஆர்பென்ஸ் – குவாதமாலா, கோலார்ட் -பிரேசில், எஸ்டன் சோரோ – பொலிவியா, அலண்டே -சிலி, ரோல்டோஸ் – ஈகுவாடர், டோரி ஜோஸ் -பனாமா மற்றும் இந்த நாடுகள் தவிர அரைக்கோளத்தில் உள்ள இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட வளம் கொண்ட எல்லா நாடுகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது.
நிறுவன அதிகார வர்க்கம் தன் கட்டுப்பாட்டைச் செலுத்தியதில் ஒரு வகை என்ன வென்றால், 1970 களில் லத்தின் அமெரிக்காவில் எதேச்சதிகார அரசாங்கங்களை அமரச்செய்ததாகும்.இந்த அரசாங்கங்கள் அமெரிக்க முதலீட்டாளர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஆதாயம் பெறும் வகையிலான பொருளாதாரக்கொள்கைகளை பரிசோதித்துப்பார்த்தன. அவை பொதுவாக, உள்ளூர் அளவிலான பொருளாதாரங்களைப்பொறுத்தவரையில் தோல்வியிலேயே முடிந்தன. உதாரணத்திற்கு, பொருளாதார தேக்க நிலை, பணவீக்கம், வேலையின்மை, பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி போன்றவற்றைச் சந்தித்தன.
1998 ஆம் ஆண்டு வெனிசுலாவின் சாவேஸ் தேர்தலில் 56 சதவிகிதம் வாக்குகள் பெற்று அதிபராகிறார். ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு முன்னர் இருந்த பலரைப்போல ஊழலுக்கு அடிபணியவில்லை. எண்ணெயின் மூலம் கிடைத்த லாபத்தை மீண்டும் எண்ணெய் தொழிலிலேயே முதலீடு செய்யவில்லை. அதற்குப்பதிலாக, எழுத்தறிவின்மை, நோய்கள், மற்றும் இதர சமூக அவலங்களைப்போக்கும் திட்டங்களில் முதலீடு செய்கிறார். முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தினை கொடுப்பதற்குப்பதிலாக, கடனால் நிலைகுலைந்துபோயிருந்த அர்ஜெண்டினாவின் அதிபருக்கு ஐ.எம்.எப் கடனை அடைக்க 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதியுதவி அளிக்கிறார். சந்தை விலையில் எண்ணெய் வாங்க முடியாத நாடுகளுக்கு சலுகை விலையில் எண்ணெயை விற்கிறார். இதன் விளைவு, நிறுவன அதிகார வர்க்கமானது சாவேஸை பெரும் அபாயமாகக்கருதியது.
பிரேசில் தன்னுடைய இயற்கை வளங்களை அந்நாட்டு ஏழைகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் எனவும், ஐ.எம்.எஃப். ஃபிற்கு கொடுக்கவேண்டிய கடன்கள் சட்டவிரோதமானவை என்பதால் அவைகள் தணிக்கை செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர் பிரேசிலின் இனாசியோ லூலா டா சில்வா. இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 60 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகள் பெற்று வெற்றிபெற்று அதிபராகிறார். இவ்வெற்றியின் மூலம், இதுவரை வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் அதிகாரத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியானது நாடுமுழுக்க பரவியது.
லத்தின் அமெரிக்க பிராந்தியத்தில், வெனிசுலாவிற்கு அடுத்தபடியாக அதிகளவில் பெட்ரோலியப்பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடாக ஈக்வடார் இருக்கிறது. அங்கிருந்த ஆட்சியாளர்கள் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி, சுற்றுச்சூழலை நாசம் செய்தல், கல்வி, சுகாதாரம் மற்றும் இதர சமூக சேவைகளை புறக்கணித்ததினால் நிலைமை மேலும் மேலும் மோசமாகியது, அங்கு வாழ்ந்துவந்த இந்தியர்களை நிலத்தைவிட்டு பலவந்தமாக வெளியேற்ற எண்ணெய் நிறுவனங்களும் முயற்சித்தன. அம்மக்கள் வெளியேற மறுத்ததால் அவர்களது மரங்களினிடத்தில் எண்ணெய் எடுக்கும் ஆழ்துளை இயந்திரங்கள் வைக்கப்பட்டதினால் கழிவுகள் வெள்ளம்போல் சிதறி நிலங்களையும், நதிகளையும் மாசுபடுத்திவிட்டிருக்கின்றன.
ஈக்வடார், வெனிசுலா போல் பொலிவியாவில் நடக்கும் மக்கள் எழுச்சிக்கான காரணம் எண்ணெயல்ல. அது, பூமியின் மதிப்புமிக்க இயற்கை வளங்களுள் ஒன்றான தண்ணீரை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டமாகும். பொலிவியாவில், கொசபாம்பா ஆற்று நீரானது அமெரிக்காவின் பெக்டெல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்படி, மழைநீரைக்கூட மக்கள் பிடிக்கக்கூடாது. அங்குள்ள எந்த நீரைச்செலவழித்தாலும் பெக்டெல் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்கிறது அந்த ஒப்பந்தம்.
இப்படியாக, ஒரு நாட்டின் தண்ணீர் வினியோகத்தை கட்டுப்படுத்துவதின் மூலம், அந்நாட்டின் பொருளாதாரத்தையும், அரசாங்கத்தையும் தங்களுக்கு ஏற்ற வகையில் இயக்கலாம் என்பதை நிறுவன அதிகார வர்க்கம் புரிந்து கொண்டது. தங்கமும், எண்ணெயும் சேர்ந்தால், என்ன மதிப்போ அத்தகைய மதிப்பு எதிர்காலத்தில் நீருக்குத்தான் என ஆகப்போகிறது. ஆதலால், எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு நீருக்கு நாம் உரிமையாளார்களாகி விடவேண்டும் என்பதும் கூட பன்னாட்டு நிறுவனங்களின் கனவாக இருக்கிறது என்கிறார்
2005 டிசம்பரில், பொலிவியாவில் மொராலெஸ் தேர்தலில் வெற்றிபெற்று முதல் இந்திய அதிபராக ஆனார். அமெரிக்காவின் ஊடகங்களோ அந்நாட்டுமக்களை வெளிப்படையாக ஏமாற்றின. குவாதமாலா நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுப்பதற்கு முன்பு கூட ஊடகங்கள் இப்படித்தான் செய்தன. தற்போது பொலிவிய அதிபருக்கு எதிராகவும் இதேபோன்று பொய்பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதாக இருக்கின்றன. மொராலெஸ் தான் பதவி யேற்றதும் நாட்டிலுள்ள அனைத்து தனியார் எண்ணெய் வயல்களையும் அரசுடமையாக்கினார். லாபத்தில் 80 சதவிகிதம் அந்நிய நிறுவனங்களுக்கும் 20 சதவிகிதம் பொலிவியர்களுக்கு என்றிருந்தது போய் பொலிவியர்களூக்கு 80 சதவிகிதமும் அந்நிய நிறுவனங்களுக்கு 20 சதவிகிதமெனவும் மாற்றியமைத்தார்.
மத்தியக்கிழக்கு
மத்தியக்கிழக்கு நாடுகளில் கம்யூனிஸம் அல்லது ,ரஷ்யாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதும்,அங்கிருக்கும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதும், ஆயுத விற்பனைமூலம் லாபமடைவதும்தான் அமெரிக்காவின் நோக்கம் மட்டுமின்றி, இன்னொருவகையில், இஸ்லாம்-கிறிஸ்தவம்-யூத மதங்களுக்கிடையே உரசல்களை ஏற்படுத்தி தங்களது அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்வதுமாக இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதிப்புமிக்க இயற்கை வளமாக பெட்ரோலியம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் யுத்தம் நடத்துவதற்கு டாங்கிகள், கப்பல், விமானங்களுக்கு, எரிபொருளின் தேவை அதிகமிருந்ததால் அது மிகவும் அவசியம் என்றாகிவிட்டது. ஜப்பான், அமெரிக்காவின் ’பியர்ல் ஹார்பரைத்’ தாக்கியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பெட்ரோலியம் இருந்திருக்கிறது. அதன் பிறகான காலத்தில், நிறுவன அதிகார வர்க்கத்தின் தனிப்பெரும் சக்தி வாய்ந்த கருவியாக எண்ணெய் பரிணாம வளர்ச்சி பெற்றது.
இரண்டாம் உலகப்போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபின், வரலாற்றின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தை அமெரிக்க எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வகுத்தனர். அமெரிக்க எண்ணெய் வயல்களை எதிர்கால யுத்தங்களுக்காகவும், அவசரத்தேவைகளுக்காவும் சேமித்து வைக்கும்படி அமெரிக்க அதிபரையும், நாடாளுமன்றத்தையும் சம்மதிக்கச்செய்வது நாட்டின் நலனுக்கு உகந்தது என்று தீர்மானித்தார்கள். உலக எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் அமெரிக்கா கோரியபடி, வரி விலக்குகளும் இதர சலுகைகளும் தங்களுக்கு வேண்டும் என்று கோரி, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளையும் அவ்வாறே ஏற்றுக்கொள்ளச் செய்துவிட்டனர். அமெரிக்காவின் இந்த முடிவானது, தேசங்களின் எல்லைகளை மறு நிர்ணயம் செய்த, சர்வாதிகாரங்களை உருவாக்கிய, அரசாங்கங்களை கவிழ்த்த கொள்கைகளுக்கு இட்டுச்சென்றது. தங்கத்தைப்போல் எண்ணெயும் அதிகாரத்தின் அடையாளமாகவும், நாணயங்களை மதிப்பிடுவதற்கான அடிப்படையாகவும் ஆகிவிட்டது எண்ணெயானது, தங்கத்தைப்போலல்லாமல், நவீன தொழில்நுட்பத்திற்கு அவசியமானதாகவும் ஆகியிருக்கிறது.
நாடுகளின் அரசியலை அமெரிக்காவின் இஷ்டத்திற்கு ஏற்றாற்போல் இயக்குவதற்கு அவை தங்களது எண்ணெய் வயல்களை தேசிய மயமாக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதை விரைவிலேயே கண்டுபிடித்துவிட்டோம். உலக வங்கி, ஐ,எம்.எப், மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்களை காலனிமயமாக்கும் கருவிகளாக மாற்றினோம். அமெரிக்க நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் தரக்கூடிய ஒப்பந்தங்கள் போட்டோம். மூன்றாம் உலக நாடுகளில் உள்ளவர்களுக்குப்பதிலாக, எங்களது ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே லாபம் தரக்கூடிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கினோம். மற்ற நாடுகள் மீது சமாளிக்க முடியாத அளவு கடன் சுமையை ஏற்றினோம். வெளித்தோற்றத்திற்கு தங்களது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போல தோற்றமளிக்கும். ஆனால், உண்மையில் எங்களது பதிலி அரசாங்கங்களை உருவாக்கினோம். சில பழைய உதாரணங்கள்: ஈரான், ஜோர்டான், சவுதி அரோபியா, குவைத், எகிப்து, மற்றும் இஸ்ரேல் ஆகும் என்கிறார். அமெரிக்காவைப்பற்றி, அடியாள் கூறும் போது, நாம் நம்மைப்பற்றி சித்தரித்துக்கொள்வதைப்போல ஜனநாயகத்தின் காவலர்கள் அல்ல. நம்முடைய முக்கிய குறிக்கோள் மூன்றாம் உலக நாடுகளுக்கு உதவுவதும் அல்ல. நாம் அந்நாட்டினது இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம், அவ்வளவுதான்.
1960 க்கு பிறகான காலகட்டத்தில், அமெரிக்காவில் நுகர்வுக்கலாச்சாரம் பெருகுகிறது. கொரியா, வியட்நாம் யுத்தங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்காக நிதித்தேவையை ஈடுகட்டவேண்டி, வெளிநாடுகளிலிருந்து கடனுக்கு கொள்முதல் செய்யப்பட்டன. அந்நிய வர்த்தகர்கள் பொருட்களையும், சேவைகளையும் திரும்பப்பெற முயற்சித்தபோது, தங்களிடமிருந்த டாலரின் மதிப்பை பணவீக்கம் குறைத்துவிட்டதை கண்டனர். உண்மையில் அந்நிய நாட்டு வர்த்தகர்கள் மறைமுக வரி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கடன் கொடுத்த அரசாங்கங்கள் கடனைத் தங்கமாக தீர்க்கவேண்டும் என்று கோரின. இதனை மறுத்த நிக்சன் நிர்வாகம் 1971 ஆகஸ்ட் 15 ந்தேதியன்று தங்கம் பரிவர்த்தனை அலகு என்பதையே கைவிட்டது. .டாலரை நாணயமாகத் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளுமாறு உலகை சம்மதிக்கவைக்க கஷ்ட்டப்பட்டு முயற்சித்தது.
இறுதியில் 1970 களின் துவக்கத்தில் சவுதி அரேபியாவில் அடியாளான நூலாசிரியர் பங்கேற்ற கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றும் சதி விவகாரத்தில் அமெரிக்க டாலர்களுக்கு மட்டுமே எண்ணெய் விற்கப்படும் என்று சவுதி அரச குடும்பம் வாக்கு கொடுத்தது. பெட்ரோலியச்சந்தைகள் அப்போது சவுதியின் கட்டுப்பாட்டில் இருந்ததால், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இதர நாடுகள் அதை ஏற்குமாறு நிர்பந்திக்கப்பட்டன. எண்ணெய் உச்சபட்ச வளமாக நீடிக்கும்வரை,டாலர் நிலையான உலக நாணயமாகத்தொடர்ந்து இருப்பது உத்திரவாதப்படுத்தப்பட்டது.
மத்தியக்கிழக்கு இஸ்லாமிய நாடுகள் பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு முன் ஐரோப்பிய நாடுகளினாலும், இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமெரிக்காவினாலும் (சுரண்டல் மற்றும் ஆதிக்கம்) பாதிக்கப்படிருப்பதை விவரிக்கிறார். லெபனானில் இஸ்லாமியர்-கிறிஸ்தவர் பிரச்சனை, இஸ்ரேல் உருவாக்கம், இஸ்லாமியர்கள் அகதிகளாவது, இஸ்ரேல்-எகிப்து போர், இஸ்ரேலுக்கு பின்னே அமெரிக்கா இருப்பது, ஈரானில் ரஷ்ய ஆதரவான அதிபரை மாற்றி அமெரிக்க ஆதரவு அதிபரை தேர்ந்தெடுத்தது இப்படியாக பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிடுகிறார். லெபனானில் அடியாள் இருக்கும் போது, மத்தியக்கிழக்கு நாடுகளின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மத அடிப்படையிலான கலாச்சாரங்களுக்கிடையேயான மோதலே வெளிப்படையான காரணம் என கருதுகிறார்.
அமெரிக்கா இஸ்லாமிற்கு எதிராக யுத்தம் நடத்திக்கொண்டிருப்பதாக இந்தோனேஷியர்களில் பலர் கருதுவதாகவும் கூறுகிறார். 1950 களில் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் அர்னால்ட் டோய்ன்பி என்பவர் அடுத்த நூற்றாண்டில் உண்மையான யுத்தம் முதலாளித்துவவாதிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையில் நடக்கப்போவதில்லை என்றும், ஆனால் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் தான் யுத்தம் என்று கணித்திருப்பதாகக்கூறுகிறார். சர்வதேச அரசியலில் மதத்தின் முக்கியத்துவம் குறித்த புதிய கண்ணோட்டத்தை மத்திய கிழக்கிற்கு தாம் மேற்கொண்ட பயணம் எனக்களித்தது என்கிறார்.
பொருளாதார அடியாட்களாகிய நாங்கள், கிறிஸ்து பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மகா அலெக்ஸண்டர் மற்றும் டாரியஸ் காலத்திய உயர் நாகரீகத்தை மீண்டும் ஈரானில் வளர்த்தெடுக்க உறுதி கொண்டுள்ள ஆட்சியாளராக ஷாவை சித்தரித்தோம் என்கிறார். அமெரிக்க எதிர்ப்புணர்வு தீவிரமாக இருந்த ரஷ்யா, லிபியா, கொரியா, கியூபா, பனாமா, நிகாரகுவா மற்றும் இதர நாடுகளுக்கு ஷாவின் அரசாங்கத்தை ஒரு மாற்றாக முன்வைப்பது எங்களது மூல உத்தியாகும்.
பொருளாதாரஅடியாள், ஈரானில் நெசிம் எனும் வரலாற்றுப் பேராசிரியரைச் சந்திக்கிறார். அவர் ஒரு நூலுக்காக பழைய வர்த்தகப்பாதைகளை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் இஸ்தான்புல்லிலிருந்து வந்திருப்பவர். நெசிம் கூறும்போது, நீங்கள் அனைவரும் சர்வாதிகார அரசால் ஏமாற்றப்படுகிறீர்கள். நல்லது. அனைவருக்கும் அல்ல. உங்களது அதிபருக்கும் உங்கள் நாட்டை நிர்வகிக்கும் மற்றவர்களுக்கும் உண்மை நிச்சயமாகத்தெரிந்திருக்கும். அதுதான் அவர்களது சிறப்பு, வஞ்சகம். உங்கள் தலைவர்கள் ஏகாதிபத்தியத்தை மறைக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மறைக்கிறார்கள். மனிதர்களை ஊழல்வாதிகளாக்குவதற்குத் தாங்கள் செய்யும் காரியங்களை மறைக்கிறார்கள். தாங்கள் பணக்காரர்களை காப்பாற்றும் உண்மையை மறைக்கும் அதே வேளையில், அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஜம்பமாய் பேசுகிறீர்கள்
பாலஸ்தீனர்கள் டார் அல் இஸ்லாம் என்று அழைக்கும் மண்ணை முஸ்லீம் சாசுவாதமான ராஜ்ஜியத்தை திருடிக்கொண்டது மட்டும் உங்களுக்கு போதவில்லை. அதை யூதர்களிடம் கொடுத்தீர்கள். உங்கள் செல்வத்தை பயன்படுத்தி யூதர்களுக்காக ஒரு தாய் நாட்டை கட்டுவதாக அவர்களை எண்ண வைத்தீர்கள். முஸ்லிம்களின் மூக்கை வரலாற்றின் கழிவில் வைத்து தேய்க்கிறீர்கள். யூதர்களைத் தங்கள் குடும்பங்களை தியாகம் செய்ய சொல்லி ஊக்கப்படுத்திவிட்டு, உங்கள் நிறுவனங்கள் எண்ணெயை எடுத்துக்கொள்கின்றன. யூதர்கள் உங்களது காவல் நாய்கள். முஸ்லிம்களாகிய எங்களை கட்டுக்குள் வைக்க நீங்கள் அவர்களுக்கு அணு ஆயுதங்கள் கொடுக்கிறீர்கள். அவர்களது இராணுவத்திற்கு நிதியுதவி அளிக்கிறீர்கள்.
ஈரான் – ஈராக் நாடுகளுக்கிடையே எட்டு ஆண்டுகள் நடந்த போரில் இரு தரப்புமே அதிக செலவு செய்து பொருளாதாரத்தை சீரழித்துள்ளனர். பத்து லட்சத்திற்கும் மேலானோர் பலியாகியிருந்தனர். அப்படியிருந்தும், நிறுவன அதிகார வர்க்கம் இராணுவத்தளவாடங்களை விற்றதின் மூலம் பெரும் லாபமடைந்திருந்தது. நாம் அரேபியர்களின் மனங்களையும் அறிவையும் வெல்ல வேண்டும் என்றால், அதற்கு எகிப்து ஆற்றவேண்டிய பாத்திரத்தை அதன் பிரமிடுகள் குறிக்கின்றன. இதில் எகிப்துதான் உறுதியான அடித்தளமாக இருக்கும். பின்னர் நாம் ஒவ்வொரு நாடாக அதன் மேல் அடுக்குவோம். அரேபிய உலகில் எகிப்து ஒரு முக்கியமான பங்கு வகிக்கமுடியும். அதே சமயம், அது ஆப்பிரிக்காவின் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பூகோள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எகிப்து ஒரு பாலம்.
பொருளாதார-இன-மத ரீதியாகவுங்கூட என்கிறார். அமெரிக்காவின் எதிர்காலத் தலைமுறைகளின் நலனுக்காக, அவர்களது நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை வளங்கள் மிக்க மத்தியக்கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே நோக்கம்.
ஆயுதப்போட்டி அதிகரிப்பதைப்பற்றியும் மத்தியக்கிழக்கு நாடுகளின் மீது அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றியும் எண்ணிப்பார்த்தபோது என்னுடைய நம்பிக்கையின்மை அதிகரித்தது. முன் எப்போதையும் விட ஆயுதங்கள் அதிகமாக முழங்கிக்கொண்டிருக்கும் உலகம் நம்முடையது. ஒரு நாட்டின் அரசியல் அந்தஸ்து அதனிடமிருக்கும் ஆயுதங்களை வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது மரண வியாபாரத்தை சர்வதேச ராஜ தந்திரத்துடன் இணைப்பதில் நிறுவன அதிகார வர்க்கம் வெற்றிபெற்றுவிட்டது என்கிறார்.
பனிப்போருக்கு பிந்தைய காலத்தில்,யுத்த தொழிலின் விஸ்தரிப்புக்காக நியாயமாக கம்யூனிஸ்டுகள் இருந்த இடத்தில் இஸ்லாமிய புரட்சியாளர்கள் வைக்கப்பட்டனர். பேராசையையும் ஆதிக்கத்தையும் சுதந்திரம் என்றும் ஜனநாயகம் என்றும் மொழிமாற்றம் செய்யும் பொய் பிரச்சாரத்தில் பொருளாதார அடியாட்களும், ஊடகப்பேரசர்களும் நிபுணத்துவம் பெற்றுவிட்டனர். அவர்கள் நிறுவன அதிகார வர்க்கத்திற்கு பிரமாதமாக வேலை செய்கின்றனர்.ஈரான் மற்றும் ஈராக் விஷயத்தில் நமது வெளிப்படையான கொள்கைகள் தோல்வியடைந்தபோதும், அதைவிட நுணுக்கமான வகையில் அரேபிய உலகத்தை மீண்டும் எங்கள் வசப்படுத்திக்கொண்டுவிட்டோம். துபாயில் நாங்கள் அவர்களுக்கு உலகத்தையே விற்றோம். சீனாவைப்போலவே மத்திய கிழக்கும் எங்களது நுகர்வுக்கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது.
ஆப்பிரிக்கா
இங்கேயும், ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கைவளங்களை சுரண்டவும், கம்யூனிஸ்டுகளை வரவிடாமல் தடுக்கவுமான வேலைகளை எவ்வித மாற்றமுமின்றி அமெரிக்க செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆப்பிரிக்காவில் வறுமை மிகுந்துள்ளது. மொத்தமுள்ள 53 நாடுகளில் 43 நாடுகள் குறைந்த வருமானம் – பட்டினி நோயினால் வாடுகின்றனர். வறட்சியும் பஞ்சமும் அவ்வப்போது பீடிக்கின்றன. இயற்கை வளங்களை சுரண்டும் அந்நிய நிறுவனங்கள் அரசிடமிருந்து வரிச்சலுகைகள் பெறுவதும் அதிக லாபமீட்டுவதாகவும் உள்ளன. அந்த லாபத்தையும் கூட அதே நாட்டில் முதலீடும் செய்வது இல்லை. ஆட்சியாளர்களிடையே ஊழல் மலிந்துவிட்டது . இதனால் மக்கள் வேலையின்மை மற்றும் பட்டினியால்அவதியுறுகின்றனர். இதன் காரணமாக இனமோதல்கள், வன்முறை, உள்நாட்டுக்கலவரங்களுக்கு தள்ளப்படுகின்றனர். ஆப்பிரிக்காவில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 46 வயது. எயிட்ஸ் நோயால் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக இருக்கின்றனர். கோடிக்கணக்கான குழந்தைகள் எயிட்ஸ் நோய் காரணமாக அநாதையாக்கப்பட்டுள்ளனர். இப்படியான சூழலிலும் இயற்கை வளங்களை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிலை விட்ட பாடில்லை.
\மேற்கத்தியமயத்தை நீடித்து நிலைக்கசெய்யும் இயந்திரத்தின் ஒருபகுதிதான் தொண்டு நிறுவனங்கள். தலைமை பாங்கு முதல் தங்கள் நாடுகளில் கிடைக்கும் சம்பளம் வரை தொண்டு நிறுவனங்கள் தாங்கள் யாருக்காக சேவை செய்கிறோம் என்கிறார்களோ அவர்களுக்கும் தங்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் வகையில் மேற்கத்திய கலாச்சார, சமூக, மற்றும் பொருளாதார மதிப்பீடுகளைத் திணிக்கிறார்கள். அந்நியர்களைப்போலவே நடந்து கொள்வதன் மூலம், அந்த இடைவெளியைக்குறைக்க ஆப்பிரிக்கர்கள் இடைவிடாமல் முயற்சி செய்கிறார்கள். மேற்கத்திய மதிப்பீடுகள் கலாச்சார நம்பிக்கைகளை தலைகீழாக மாற்றுகின்றன. உள்ளூர் பொருளாதார ஒழுங்குமுறைகளை சீர்குலைக்கின்றன.
ஆப்பிரிக்காவில், மோசமான ஆட்சிக்கும், அம்மக்களிடையே நிலவும் ஒற்றுமையின்மைக்கும், அத்தலைவர்களிடையே ஊழல் நிறைந்திருப்பதற்கும் தொடர்புகள் இல்லாமல் இல்லை.. ஆப்பிரிக்காவின் வைரங்கள், எண்ணெய், இயற்கை எரிவாயு, மற்றும் இதர வளங்களை அடைய வேண்டும் என்கிற அமெரிக்காவின் தீராத பேராசையே ஆப்பிரிக்க மக்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கெல்லாம் காரணம் என்கிறார்.
இந்தியப்பெருங்கடலில் மொரிஷியஸ் தீவிற்கு அருகேயுள்ள டிகோ கார்ஷியா எனும் தீவில் ஆப்பிரிக்கர்கள் வசித்து வருகின்றனர். அத்தீவானது அப்போது பிரிட்டனின் வசமிருந்தது. அமெரிக்கா அத்தீவினில் இராணுவத்தளம் அமைக்க விரும்பி, பிரிட்டனிடம் கோரிக்கை வைத்தது. அத்தீவினை குத்தகைக்கு பெற்றதும். அங்கு வசித்து வந்த மக்கள் வலுக்கட்டாயமாக அருகிலுள்ள செய்சல்சில் தீவிற்கு குடியமர்த்தப்படுகின்றனர். செய்சல்சில் தீவின் அதிபர் சோவியத் ஆதரவாளர் என்பதால் அமெரிக்கர்கள் அவரையும் கொல்ல திட்டமிட்டு, செயலில் இறங்கிய கூலிப்படையினர் பின்னர் தோல்வியுற்று ஏர் இந்தியா போயிங் 707 விமானத்தில் ஏறி தப்பிக்கின்றனர் அதேபோல், சாரோ விவா என்பவர் நைஜீரிய நாட்டு சுற்றுசூழல் வாதி. ஓகோனி இனக்குழுவைச்சேர்ந்தவர். இவர் தன்னுடைய தாய் நாட்டை, எண்ணெய் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு எதிரான இயக்கத்திற்கு தலைமையேற்று நடத்துகிறார். அவர் மீது அந்நாட்டு அரசு பொய்வழக்கு தொடுத்து அவரையும் சேர்த்து ஆதரவாளர்கள் பத்துபேரையும் தூக்கிலிடுகிறது.
மாலி எனும் நாடு விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட நாடு. அங்கே மரபணு மாற்றப்பயிர்களை அறிமுகப்படுத்தவும், விற்கவும், அதன் காப்புரிமையை வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கும் வகையில் மாலி நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி எழுதும் வேலையில் அமெரிக்க அரசாங்க அமைப்பு ஒன்று மான்சாட்டோவுடன் இணைந்து செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்கிறார்.
உங்களுக்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்தால், அவர்கள் வளமான வாழ்வு வாழவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நாம் ஆப்பிரிக்காவைக்கட்டுப்படுத்துவதை உறுதி செய்யுங்கள் என்பது அமெரிக்காவின் பொதுவான நிறுவன அதிகார வர்க்கத்தின் கருத்தாக இருக்கிறது. ஆப்பிரிக்கா பற்றிய அமெரிக்காவின் அறியாமை, நமது முக்கிய ஊடகங்கள் உள்ளிட்ட கல்வி முறையில் பொதிந்துள்ளது. அது திட்டமிடப்பட்டது என அடியாளாகிய நூலாசிரியர் உணருகிறார்.
உலகை மாற்றுதல்
உலகத்தை நற்பண்புள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் பாசம் மிகுந்த இடமாகவும் மாற்றுவதற்குப்பதிலாக நிறுவன அதிகார வர்க்கத்தின் நலனுக்காகவே சேவைசெய்து கொண்டிருந்தேன். தற்போது, நிறுவன அதிகார வர்க்கத்தால் ஆளப்படும் உலகை மாற்ற வேண்டுமென்றால், நாம் முதலில் நிறுவனங்களை மாற்ற வேண்டும். செயலில் இறங்குவதற்கும், ஆபத்துக்களை எதிர் கொள்வதற்கும் நாம் நம்மை அர்ப்பணித்துக்கொண்டோமெனில் மாற்றம் சாத்தியமே. பெரும் நிறுவனங்களே இன்றைய உலகில் மிகவும் சக்திவாய்ந்தவை.. மாற்றத்தை உருவாக்குவதற்கான அதிகாரமும் ஆற்றலும் அவர்களிடம்தான் இருக்கிறது. உலகை மாற்ற வேண்டுமானால் நாம் பெரும் நிறுவனங்கள் தங்கள் குறிக்கோளை மாற்றிக்கொள்ளும்படி செய்யவேண்டும்.
பெரும் நிறுவனங்கள் சில செல்வந்தர்களுக்கு சேவைசெய்வதை விட்டுவிட்டு நம்மைப்போன்ற அனைவரது வாழ்வையும் மேம்படுத்துவதில் அதிகக்கவனம் செலுத்தவேண்டும். அதேபோல் சுற்றுச்சூழலையும் நாம் வாழும் சமுதாயங்களையும் பாதுகாப்பதில் அதிகக்கவனம் செலுத்தவேண்டும். உலகை காப்பாற்ற வேண்டிய தேவையில்லை. உலகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை. மனிதர்களாகிய நாம் ஆபத்திலிருக்கிறோம். நாம் நமது வழிமுறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அன்னை பூமி நம்மை ஒட்டுண்ணிகளைப்போல் உதறித்தள்ளிவிடுவாள்.
பாரதி புத்தகாலயம், பக்:400 விலை: 350/-