உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள், சேலம் இராமசாமி முதலியாரை முதன்முதலாக சந்தித்த போது (1880) நடந்த உரையாடலை என் சரித்திரத்தில் சொன்னது… “சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?”
அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை. என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும் “இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களைப் படிக்கவில்லை என்பதைப் பிரமாதமாகச் சொல்லவந்து விட்டாரே!” என்ற நினைவோடு பெருமிதமும் சேர்ந்து கொண்டது. “புஸ்தகம் கிடைக்கவில்லை, கிடைத்தால் அவைகளையும் படிக்கும் தைரியமுண்டு” என்று கம்பீரமாகச் சொன்னேன்.
என் சரித்திரத்தில் வேறுசில இடங்களில் சிலப்பதிகாரத்தை சிறப்பதிகாரம் என்று கூறுகின்றார்கள். சிலப்பதிகாரத்தில் உள்ள “இந்திரவிழா ஊரெடுத்தக் காதையை” இந்திர எழவு ஊரெடுத்தக் காதை என்று கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 19ம் நூற்றாண்டு தமிழ்க் கல்விச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டுதான் இந்தப் பகுதி.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐச்சிறுங் காப்பியங்கள், இந்த நூல்களுக்கு உரையெழுதிய நச்சினார்கினியர், தெய்வசிலையார் போன்ற உரையாசிரியர்களையும் அன்றைய தமிழ்ச் சூழல் முறையாக அறிந்திருக்கவில்லை. பழந்தமிழ் நூல்களைக் காலங்காலமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த சைவ மடங்கள்கூட சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கா அல்லது பதினைந்தா என்று சந்தேகப்பட்டுக் கொண்டும் தெளிவுபெறாத காலகட்டகமாகவும் 19, 20 ம் நூற்றாண்டின் தமிழ்ச் சூழல் இருந்தது.(1)
இத்தகைய குழப்ப நிலையில் பழந்தமிழ் நூல்கள் பலவும் இருந்து வந்தன.(2)
அவற்றுள் பதினெண்கீழ்க் கணக்கு தொகுதியில் உள்ள சில நூல்களின் பிரச்சனைகளை மட்டும் இங்கே காண்போம். அன்றைய காலகட்டத்தில் திருக்குறள் நாலடியார் போன்ற புகழ்பெற்ற ஒருசில நூல்கள்தான் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு வடிவம் பெற்று வெளிவந்த நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூல்கள் கூட அன்றைய நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயின்றுவந்த மாணவர்களின் பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டதனால் மட்டுமே பலராலும் அறியப்பட்ட நூல்களாக இருந்தன. இந்த நூல்களைப் பாடமாக வைப்பதற்கு காரணமாக அமைந்தவர்கள் கிறிஸ்தவ பாதிரிமார்கள் என்பதை அன்றைய வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. இந்தப் பாதிரிமார்கள் இந்த நூல்களைப் படித்து அவற்றின் சிறப்பைப் புரிந்து கொண்டு அன்றைய பாடத்திட்டத்தில் இந்நூல்களைச் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சென்னையில் அரசு அதிகாரியாக இருந்த “எல்லீஸ்” 1812 இல் திருக்குறளில் அறத்துபாலின் ஒரு பகுதிக்கு எழுதிய விரிவுரையில் பழந்தமிழ் நூல் பலவற்றின் பாடல்களை எடுத்துக்காட்டாகக் காட்டுகின்றார். அவர் உருவாக்கிய புனிதஜார்ஜ் கோட்டை கல்லூரியில் பணியாற்றிய பெரும்புலவர்களால் பல பழமையான தமிழ் நூல்கள் அன்று பயின்ற மாணவர்களுக்கான பாடநூல்களாக ஏற்படுத்தப்பட்டன. அதே காலத்தில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பரம்பரை தமிழ்ப் புலவர்களால் இத்தகைய நூல்கள் அறியபடாதவைகளாக இருந்தன.
ஆனால் கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு தமிழாசிரியர்களாகவும் எல்லீஸ் போன்ற அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டவர்களாகவும் இருந்த தாண்டவராய முதலியார், இராமானுகவிராயர், மழவை மகாலிங்க அய்யர் போன்றவர்கள் இத்தகைய நூல்களை நன்கு அறிந்திருந்தனர். இவர்களைப் போன்ற தமிழ் அறிஞர்களால் இந்நூல்கள் 19ம் நூற்றாண்டின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டு அன்றைய தலைமுறை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை 1868 இல் பி.ஏ.வகுப்பில் பாடமாக வைக்கப்பட்ட “சீவக சிந்தாமணி”யில் உள்ள ஹெச்.பவார்(3) அவர்களின் முன்னுரையின் வழியாகப் புரிந்துகொள்கிறோம்.
இவ்வாறு பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பற்றிய சில செய்திகள் அன்றைய காலத்து தமிழ் அறிஞர்கள் அறிந்தவைகளாக இருந்தாலும் வேறு சில நூல்களைப் பற்றிய குழப்பங்களும் இருந்தன. குறிப்பாக “பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள்” எவை எவை என்பது பற்றியதில் தெளிவற்ற நிலையும் குழப்பமும் நிலவி வந்தது. இது பற்றிய பிரச்சினையை முதலாவதாக விவாதிக்க ஆரம்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. 1887 இல் வெளியிட்ட கலித்தொகை பதிப்புரையில்(4)
இந்த விவாதம் பதிவாகி உள்ளது. அதில்…
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.
என்ற செய்யுளைக் கொடுத்து, அதன்கீழ்” இவற்றுள் கோவை என்றது ஆசாரக்கோவையை, முப்பால் என்றது திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, பஞ்சமூலம் ஆதிய போன்று நாலடி வெண்பாவா னியன்று அக்காலத்திலேயே வழங்கிய மூன்று சிறுத் தருமநூல்களை யென்றும், இன்னிலைசொல் என்றது இன்னிலை, இன்சொல் என்னும் பெயரிய இரண்டு நூல்களின் பெயரே யென்றும் உத்தேசிக்கின்றேன். சிலர் ஐந்திணையை ஐந்தொகை யென்று பாடமோதுவர்…” இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பவே ” என்றும் பாடமுண்டு… சிலர் முப்பாலை… சங்கத்தாரைப் பங்கப்படுத்தி அழித்து விட்ட தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் திருக்குறளென்று மயங்கித் தடுமாறுப” என்று எழுதிச் செல்லுகின்றார்கள்.
பின்னர் 1889 இல் இலக்கண விளக்கப் பதிப்புரையில் கோ.சீனிவாசராகவாச்சாரியார் அவர்கள் எழுதிய நாலடியார் நூல் வரலாற்றில் உள்ள செய்தியைப் படித்த பின்னர் ஐந்திணை நூல்களில் நான்கு நூல்களின் ஏட்டுச்சுவடிகள் கிடைத்ததால் ஐந்திணை நூல்களைப் பற்றிய தான்கொண்ட கருத்து தவறு என்பதை ஏற்றுக்கொண்டு ஆச்சாரியார் அவர்களுக்கு சி.வை.தா தன்னுடைய வணக்கத்தைக் கூறுகி்ன்றார். மேலும் த.கனகசுந்தரம் பிள்ளை அவர்கள் வெளியிட்ட ஒரு குறிப்பின்படி மேற்கூறப்பட்ட செய்திகள் உறுதிபடுத்தப்பட்டது என்றும் “கைந்நிலை” என்பது அதே பெயரோடு உரையோடு உள்ள தனி நூல் என்பதும் கனகசுந்தரம்பிள்ளை எழுதிய குறிப்பால் விளங்கியதாக சி.வை.தா கூறுகிறார்.
பதினெண்கீழ்க் கணக்கு பற்றிய வெண்பாவில் வருகின்ற முப்பால் என்பது திருக்குறளைக் குறிக்கவில்லை என்ற கருத்தும் அன்று நிலவியதை சி.வை.தா குறிப்பிடுகின்றார். ஆனால் பேராசிரியரும் நச்சினார்கினியரும் (செய்யுளியல், சூ.547 உரை) பதினெண்கீழ்க் கணக்கில் இரண்டு அடிச் செய்யுள் உள்ளது என்பது குறிப்பிட்டு திருக்குறளில் இருந்து உதாரணமும் காட்டுகின்றனர். “மாஞ்சீர் கலியுட்புகா” என்னும் காரிகைச் செய்யுளின் (40) உரையில் “திருவள்ளுவப்பயன்”, நாலடி நானூறு முதலாகிய கீழ்க்கணக்குள்ளும்” என மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (வையாபுரிப்பிள்ளை – திரிகடுகம்)
அடுத்து, இன்னிலை என்ற நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றுமே இல்லாத ஒரு நூலாகும். இந்தப் பெயரில் சொர்ணம்பிள்ளை என்ற தமிழ்ப் புலவர் ஒரு நூலை புதுமையாக இயற்றி தேசப் பக்தர் வ.உ.சிதம்பரம்பிள்ளையிடம் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று என்று சொல்லி கொடுத்துவிட்டார். அதனை நம்பிய வ.உ.சி அந்த போலியான நூலை அச்சிட்டும் வெளியிட்டுவிட்டார். வ.உ.சி ஏமாற்றப்பட்ட இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை ஆராய்ந்து வெளிபடுத்தியுள்ளார். ஆனால் இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுவதற்கு பனிரெண்டு ஆண்டுகளுக்கு (1903) முன்பே கைந்நிலை என்பது பதினெண்கீழ்க் கணக்கைச் சார்ந்த நூல்தான் என்பதை பேராசிரியர் ரா.ராகவையங்கார் பதிப்பித்து வெளியிட்ட “திணைமாலை நூற்றைம்பது” என்ற நூலில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
அதே காலத்தில் (1903) டாக்டர்.உ.வே.சா பதிப்பித்து முதன்முதலில் வெளியிட்ட “ஐங்குறுநூறு” நூலின் முகவுரையில் தமிழில் உள்ள ஐந்து திணைகள், “கைந்நிலை” என்ற நூலில் வரிசைப்படுத்தப்பட்ட உரையையும் விளக்குகின்றார். இந்த ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே (1849) வேம்பத்தூர் முத்து வேங்கடசுப்பபாரதியாரால் இயற்றப்பட்ட பிரபந்ததீபிகை(5) என்னும் நூலில், பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் பதினெட்டின் பெயர்களையும் ஒரு பாடலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதுடன் அப்பாடலுக்கான உரையையும் விளக்கமாக எழுதியுள்ளார். ஆனால் இத்தகைய தகவல்கள் அடுத்து வந்த தலைமுறையினருக்குத் தெரிந்து கொள்வதற்கு மிக நீண்ட காலம் ஆகிவிட்டது என்பதைப் புரிந்து கொள்கிறோம். இந்த நிகழ்வுகள் சங்க காலத்து நூல்களை 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் பலரும் அறிந்து கொள்ளவில்லை என்பதை நமக்கு வெளிபடுத்திக் காட்டுகின்றது.
இவ்வளவு செய்திகள் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டு வந்திருந்தாலும் சிறந்த தமிழ் அறிஞரான திரு.செல்வகேசவ முதலியார் (6) 1917 இல் தன்னால் பதிப்பித்து வெளியிடப்பட்ட “பழமொழி நானூறு” நூலின் ஆய்வு முன்னுரையிலும் 1919 இல் அவர் வெளியிட்ட “முதுமொழிக் காஞ்சி” நூலிலும் உள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவை இவை என்று குறிப்பிடப்படும் ஆய்வு பகுதியிலும் 16 வது நூலாக சரியான நூலான “கைந்நிலை”யை குறிப்பிடாமல் பொய்யாகப் புனையப்பட்ட இன்னிலையைக் குறிப்பிட்டதன் வழியாக 1920 இல் கூட பதினெண்கீழ்க் கணக்கு குழப்பம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.
இதேபோன்று 20ம் நூற்றாண்டில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் தொல்காப்பியம் உள்படபல இலக்கண நூல்கள் என்று பலவகைப்பட்ட தமிழ் நூல்களை சிறந்த உரைகளுடன் அச்சிட்டு வெளிபடுத்தி புகழ்பெற்ற சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தான்வெளியிட்ட பதினெண்கீழ்க் கணக்கு வரிசையில் கைந்நிலையுடன் இன்னிலையையும் சேர்த்து 1961 இல் உரையுடன் வெளியிட்டுள்ளதானது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைப் பற்றிய குழப்பம் நவீன காலத்திலும் தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்ததை வெளிபடுத்துகின்றது. (7)
(ஈரொன்பதின் கீழ்க்கணக்கினுட் படும்வகை யியம்பு நாலடி நானூறும்
இன்னாமை நாற்பது நான்மணிக்கடிகை சத மினிய நாற்பான் காரதே
ஆருகளவழி நாற்ப தைந்திணையு மைம்பதும் ஐம்பதுட னிருபானுமாம்
அலகிலா சாரக்கோ வைசதம் திரிகடுக மையிருப தாகுமென்பர்
சீருறும் பழமொழிகள் நானூறு நூறதாஞ் சிறுபஞ்ச மூலம் நூறு
சேர்முது மொழிக்காஞ்சி யேலாதியெண்பதாம் சிறுகைந்நிலையறுபதாகும்
வாரிதிணைமாலைநூற்றைம்பதாம்திணைமொழி வழுத்தைம்பதாம் வள்ளுவமாலையீ ரொன்பதாய்ச் சாற்று பிரபந்தம் வழுத்துவர்கள் புலவோர்களே.)