19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20ம் நூற்றாண்டின் கால்பகுதி வரையில் பழந்தமிழ் நூல்கள் ஏட்டுச்சுவடிகளிலிருந்து அச்சு நூல்களாக வெளியிடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, பழந்தமிழ் நூல்கள் தோன்றிய காலம், அந்நூல்களை எழுதிய ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றிய குழப்பமான பதிவுகள் போன்றவற்றுடன் ஏட்டுச்சுவடிகளில் நிறைந்திருந்த பாடவேறுபாடுகளும் பதிப்பாசிரியர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தன. செ.சண்முகசுந்தர முதலியார் (சைவ சித்தாந்த நூல்களை 1875 க்கு முன்பே முதன்முதலாக பழைய உரைகளுடன் செம்மையாகப் பதிப்பித்தவர்.) இலங்கையின் ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர், ரா.ராகவையங்கார், செல்வகேசவ முதலியார், கா.ர.கோவிந்தராச முதலியார் போன்ற பதிப்புத் துறை சார்ந்த அறிஞர்களும் கூட இத்தகைய பிரச்சனையிலிருந்து விடுபட முடியாமல் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1860 ம் ஆண்டு பன்னிரு திருமுறைகளில் ஒன்றாகிய எட்டாவது திருமுறையாகிய திருக்கோவையாரை அந்நூலுக்கான பழைய உரையுடன் ஆறுமுக நாவலர் சிறப்பாகப் பதிப்பித்தார். அந்நூலின் உரையை எழுதிய ஆசிரியர் நச்சினார்கினியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். உண்மையில் அந்த உரையை எழுதியவர் பேராசிரியர் தான். இந்தச் செய்தி நூல் வெளிவந்து கி்ட்டதட்ட 60 ஆண்டுகளுக்கு பின்னர் தான் தமிழுலகிற்கு தெரிய வந்தது. 1885 இல் தொல்காப்பிய நூலின் பொருளதிகாரம் 9 இயல்களும் சி.வை.தாமோதரம் பிள்ளையால் முதன்முதலாக வெளியிடப்பட்டது.
9 இயல்களுக்கும் உரை எழுதியவர் நச்சினார்கினியர் என்று அப்பதிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உண்மையில் ஒன்பது அதிகாரங்களைக் கொண்டிருக்கும் தொல்காப்பிய பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்ற ஐந்து இயல்களுக்கு மட்டுமே நச்சினார்கினியர் உரை எழுதியிருந்தார்.

பிற்பகுதியான மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கு பேராசிரியர் தான் உரை எழுதியிருந்தார். இந்தத் தகவல் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது, 1916-17 ம் ஆண்டுகளில்தான் தமிழ் அறிஞர்களுக்கு தெரிந்தது. இச்செய்தியை ஆராய்ந்து தெரிவித்தவர் பேராசிரியர் ரா.ராகவையங்கார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சில் வெளிவந்துள்ள தொல்காப்பிய பொருளதிகாரத்தின் உரையாசிரியர்கள் இருவர் என்பது தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அந்த முறையில் நூலை இரண்டாகப் பிரித்து பதிப்பித்தவர் பவானந்தம் பிள்ளை. பதிப்பித்த ஆண்டு 1916-17 என்பது குறிப்பிடத்தக்கது.



1903 ல் மதுரையில் பாண்டித்துரைத் தேவரால் தொடங்கப்பட்ட செந்தமிழ்ப் பத்திரிக்கை பழந்தமிழ் நூல்களின் பதிப்புக்களுக்கும் தமிழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சிக்கும் தமிழ் நூல்களின் கால ஆராய்ச்சிக்கும் தமிழ் நூல்களை பிறமொழி நூல்களுடன் ஒப்பிட்டு ஆராய்வதற்கும் என்று பன்முகப்பட்ட பணிகளை சிறப்பாகச் செய்வதற்கு முதன் முதலாக களம் அமைத்து கொடுத்தது. அதன் விளைவாக அன்றைய தமிழகத்தில் வாழ்ந்த பிற துறை அறிஞர்களும் தங்களுடைய தாய்மொழியான தமிழுக்கு தங்களால் ஆன ஒரு சிறு பணியாவது செய்து தமிழுக்கு வளம் சேர்க்க வேண்டும் என்ற கிளர்ச்சியை அடைந்தனர். அதன் விளைவாக அன்று வெளிவந்து கொண்டிருந்த செந்தமிழ்ப் பத்திரிக்கையில் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தனர். அத்தகைய பிற துறை அறிஞர்களுள் குறிப்பிடத்தக்க சிலர்,
1.தொல்லியல் துறை அறிஞர் கோபிநாதராவ் (தமிழ்நாட்டில் கிடைத்த பிராமி எழுத்துக்களை முதன்முதலாக ஆராய்ந்த அறிஞர்)
2.தபால்துறையில் உயர்பதவி வகித்த கனகசபை பிள்ளை (1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டின் வரலாற்றை முதன்முதலாக எழுதியவர். அந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)
3.தஞ்சையில் புகழ்பெற்ற வழக்கறிஞர் சீனிவாசம்பிள்ளை (தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதத் தொடங்கியவர்)




இன்னொரு பக்கத்தில் அதுகாலம்வரை பதிப்பித்து வெளிவந்த நூல்களில் உள்ள சில பிரச்சனைகளை சரிசெய்யும் பணியிலும் சில அறிஞர்கள் ஈடுபட்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ரா.ராகவையங்கார். 1904 இல் ஆறுமுக நயினார் என்பவர் பழமொழி நானூற்றின் மூலத்தை மட்டும் வெளியிட்டார். இந்நூலின் முதல்பாடல் கிடைக்கவில்லை. ஆனால் அப்பாடலுக்கான பழைய உரை கிடைத்தது. எனவே பாடலின் உரையை மட்டும் வெளியிட்டார். 1917 இல் இந்நூல் முழுவதற்கும் எழுதப்பட்ட பழைய உரையுடன் செல்வகேசவ முதலியார் வெளியிட்டார். அப்பொழுது முதல்பாடல் கிடைக்கவில்லை என்ற குறிப்பையும் வெளியிடுகின்றார். அதே காலத்தில் இந்நூலின் 100 பாடல்களுக்கு, அன்றைய செந்தமிழ்ப் பத்திரிக்கையின் ஆசிரியர் அறிஞர் நாராயண ஐயங்கார் புதியதாக உரை எழுதி வெளியிட்டார். அவர் உரை எழுதிய போதும் அந்நூலின் முதல் பாடல் கிடைக்கவில்லை என்ற குறிப்பை எழுதுகின்றார். பிற்காலத்தில் வந்த பதிப்புகளில் அந்த முதல் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் எப்படி கிடைத்தது என்ற தகவலையும் குறிப்பிட்டு இருந்தனர். அந்தக் குறிப்பில் அந்தப்பாடலை உ.வே.சாமிநாத அய்யர் கண்டுபிடித்து கொடுத்ததாகத் தகவல் இருந்தது. ஆனால் அந்தப்பாடலைக் கண்டுபிடித்தவர் இ.வை.அனந்தராமைய்யர்.


(இவர் கலித்தொகை முழுமையையும் நச்சினார்கினியர் உரையுடன் ஏராளமான ஆராய்ச்சிக் குறிப்புகளைச் சேர்த்து மூன்று பாகங்களாக மிக அற்புதமாக வெளியிட்ட தமிழ் அறிஞர்) இந்தச் செய்தியை உ.வே.சாமிநாத அய்யரே 1918 இல் முதன்முதலாகப் பதிப்பித்த நன்னூல் மயிலைநாத உரை நூலின் முன்னுரையில் குறி்ப்பிட்டுள்ளார். அத்துடன் இப்பாடல் இடம்பெற்றுள்ள நன்னூலின் 418 ஆம் சூத்திரத்தின் அடிக்குறிப்பிலும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குறிப்புகள் இடம்பெற்ற பகுதிகளை உ.வே.சா.வின் மறைவுக்குப் பின்னர் 1946 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பில் உ.வே.சாமிநாதஅய்யர் நூலகத்தார் நீக்கி விட்டார்கள். அதனால் இ.வை.அனந்தராமைய்யரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பாடல் உ.வே.சாமிநாத அய்யர் கண்டுபிடித்ததாக சிறந்த தமிழ் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற மர்ரே பதிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1894 இல் உ.வே.சாமிநாத அய்யரால் புறநானூறு வெளியிடப்பட்டது. அந்நூலின் முன்னுரையில் அய்யர் அவர்கள், தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், மாற்றருங்கூற்றம் என்னும் சூத்திரவுரையில், மீனுண்கொக்கின் என்னும் புறப்பாட்டு மது என்று நச்சினார்க்கினியரெடுத்துக்காட்டிய முதற்குறிப்புச்செய்யுள் ஒரு பிரதியிலும் கிடைத்திலது. என்று கூறுகின்றார். அதே நூலில் 277 வது புறநானூற்றுப் பாடல் முதல்வரி இல்லாமலும் கடைசிவரி இல்லாமலும் சிதைவான நிலையில் உள்ளது.






1923 இல் வெளிவந்த உ.வே.சாவின் இரண்டாம் பதிப்பிலும் இதே போன்றே பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1935 இல் வெளிவந்த உ.வே.சாவின் மூன்றாம் பதிப்பில் 277வது பாடல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. தொல்காப்பிய புறத்திணையியல் உரையில் மீனுண்கொக்கின் என்று நச்சினார்கினியர் குறிப்பிடும் பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதற்பதிப்பிலும் இரண்டாம்பதிப்பிலும் சிதைந்த நிலையில் பதிப்பிக்கப்பட்டிருந்த அந்தப் பாடல் எவ்விதம் மூன்றாம் பதிப்பில் முழுமையாக வெளியிடப்பட்டது என்ற தகவல் உ.வே.சாவால் எங்கும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை.

இந்தத் தகவலைத் தேடி ஆராயும் போது தொல்காப்பிய புறத்திணையியல் இளம்பூரணர் உரையில் 77 வது சூத்திரத்திற்கு மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல் உரையை முதன்முதலாக 1920 இல் நமச்சிவாய முதலியார் அச்சிட்டு வெளியிடுகின்றார். இந்த வெளியீட்டின் அடிப்படையில்தான் தன்னுடைய மூன்றாம் பதிப்பில் உ.வே.சா 277 ம் புறப்பாட்டை முழுமையாக வெளியிடுகின்றார். ஆனால் இதனை அவர் ஏன் தன் பதிப்பில் குறிப்பிடவில்லை என்பது நமக்கு புரியவில்லை.
பழந்தமிழ் நூல்களின் பதிப்புகளைப் பற்றி எழுதிய ஒரு பேராசிரியர், உ.வே.சா., தான் பதிப்பித்த நூல்களில், ஏட்டுச்சுவடியில் எழுதப்பட்டுள்ளதற்கு மாறான எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் மற்ற பதிப்பாசிரியர்கள் தங்கள் பதிப்புகளில் சில திருத்தங்களைச் செய்திருக்கிறார்கள் என்றும் கூறி உ.வே.சாவின் பதிப்புப் பணியின் பெரும்சிறப்பு என்று புகழ்ந்துரைப்பார். உண்மையில் அந்தக் காலத்தில் நிலவிய பதிப்பு முறைகளைப் பற்றிய சரியான புரிதல் அந்தப் பேராசிரியருக்கு இல்லாததால்தான் அவரும் அவரைப் போன்றவர்களும் அவ்வாறு தவறாகக் கூறி வருகிறார்கள். உண்மையில் அக்காலத்தில் ஏட்டுச்சுவடிகளில் இருந்து அச்சுக்கு வந்த பல தமிழ் நூல்கள் அந்தக் காலத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கில அரசாங்கத்தால் பாடநூல்களாக வைக்கப்பட்டிருந்தன.

உ.வே.சாவின் பத்துப்பாட்டில் கிட்டதட்ட எல்லா பாடல்களும், புறநானூற்றின் குறிப்பிட்ட பகுதி பாடல்களும் சீவகசிந்தாமணியில் உள்ள பல இலம்பகங்களும் சிலப்பதிகாரத்தில் பல காதைகளும் புறப்பொருள் வெண்பாமாலையின் குறிப்பிட்ட பகுதிகளும் கிட்டதட்ட 1894 இலிருந்து தொடர்ந்து பாடமாக வைக்கப்பட்டு இருந்தன. அப்படி பாடமாக வைக்கப்பட்டிருந்த நூல்களில் உ.வே.சா, ஏட்டுச்சுவடிகளில் இல்லாத சில திருத்தங்களைச் செய்துள்ளார்.அன்றைய காலத்தில் தாமோதரம்பிள்ளை (தாமோதரம்பிள்ளை வெளியிட்ட சூளாமணி நூலின் ஒரு பகுதி அன்றைய பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. அப்பாட பகுதியில் தன்னுடைய மூலபதிப்பில் இடம்பெறாத பல திருத்தங்களை அந்நூலில் அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.) சவுரிபெருமாள் அரங்கனார் முதன்முதலாக குறுந்தொகையை வெளியிடுகின்றார். அந்த நூல் அன்றைக்கு கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெறும் வாய்ப்பிருந்ததால் மாணவர்களுக்காக சில பகுதிகளைத் திருத்தியதாக முன்னுரையில் கூறுகின்றார். அதாவது ஒரு நூலை பதிப்பித்து வெளியிடுபவர் அந்நூலின் ஏட்டுச்சுவடியில் இல்லாத எந்தவொரு பகுதியையும் சேர்ப்பதும் அல்லது விலக்குவதும் ஒரு தரமான பதிப்பிற்கு அழகல்ல என்ற கருத்து நிலவியது. அதே நேரத்தில் அந்த நூல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டால் மாணவர்களுக்கு பொருந்தாது என்று சமூகம் நினைத்த பகுதிகளைத் திருத்தம் செய்வதை அன்றைய கல்வி உலகம் அவசியமாகக் கருதியது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வகையான நியாயமற்ற பதிப்புத் திருத்தங்களும் சில நூல்களில் இடம்பெற்றுள்ளன. தமிழ் உலகில் புகழ்பெற்ற பதிப்பாசிரியரும் உரையாசிரியருமான வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் பதிப்பித்த நூல்களிலேயே இத்தகைய நியாயமற்ற திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதை நாம் காணமுடியும். குறிப்பாக திருக்குறள் பரிமேலழகர் உரையின் விளக்கப்பதிப்பிலும், கம்பராமாயண உரைப் பதிப்பிலும் இந்த மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. 1937 இல் திருக்குறள் பரிமேலழகர் உரை முழுமைக்கும் விளக்கவுரைப் பதிப்பு வெளிவருகின்றது. அந்த நூலில் விளக்கவுரைசிரியராக வை.மு.சடகோபராமாநுஜாச்சாரியர் குறிப்பிடப்பட்டு்ள்ளார். பதிப்பாசிரியராக வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் குறிப்பிடப்பட்டுள்ளார். இதே நூல் 1946, 1949, 1955 இல் அடுத்தடுத்த பதிப்புகளாக வெளிவருகின்றன. இந்த மறுபதிப்புகளில் பதிப்பாசிரியராக குறிப்பிடப்பட்டிருந்த வை.மு.கோ 1965 இல் வெளிவந்த பதிப்பில் உரையாசிரியராகக் மாற்றப்பட்டுள்ளார். உண்மையான உரைவிளக்க ஆசிரியரான சடகோபராமாநு ஜாச்சாரியாரின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அண்மைக்காலங்களில் உமா பதிப்பகம் இந்நூலை மீள் பதிவு செய்துள்ளது. அதில் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் மட்டுமே குறிப்புரையாசிரியராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனால் என்ன குடியா மூழ்கிவிட போகிறது? என்று நீங்கள் கருதலாம். ஆனால் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் கடந்த 30, 40 ஆண்டுகளாக இந்தக் குறிப்புரையை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட
M.Phil., P.hd., மாணவர்கள் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் எழுதிய குறிப்புரையை ஆய்வு செய்ததாகக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் இந்தக் குறிப்புரைகளில் பெரும்பகுதியை எழுதியவர்கள் சடகோபராமாநுஜாச்சாரியாரும் சே.கிருஷ்ணமாச்சாரியாரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சொல்லுங்கள் தமிழாசிரியர்களையும் தமிழ் மக்களையும் முட்டாள்களாக நினைக்கும் இத்தகைய ஆய்வுகளுக்கு பல்கலைக்கழகங்கள், பட்டங்கள் வழங்கியிருப்பதாக வரும் தகவல்களை என்னவென்று கூறுவது?


இந்த அவலநிலை இத்தோடு நிற்கவில்லை. தமிழ்மொழியின் புகழ்பெற்ற காப்பியமான கம்பராமாயண பதிப்பிலும் இது நடைபெற்றுள்ளது. கம்பராமாயணம் என்று கூறினாலே வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் உரைப்பதிப்பு கற்றவர்களின் நினைவிற்கும் வரும். இப்பொழுது நடைமுறையில் உள்ள நூல்களில் கம்பராமாயணம் ஆறு காண்டங்களுக்கும் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரே உரை எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உண்மையில் அவர் உரை எழுதியது (1)பாலகாண்டம், (2)அயோத்திய காண்டம், (6) யுத்த காண்டங்களுக்கு மட்டுமே. (3)ஆரண்ய காண்டம், (4)கிஷ்கிந்தா காண்டம், (5)சுந்தர காண்டம் ஆகிய காண்டங்களின் உரையாசிரியர்கள் சடகோபராமாநுஜாச்சாரியாரும் சே.கிருஷ்ணமாச்சாரியாரும் ஆவர்.


கிஷ்கிந்தா காண்டத்திலும் சுந்தர காண்டத்திலும் விடுபட்ட பகுதிகள் சிலவற்றிக்கு வை.மு.கோ. உரை எழுதியுள்ளார். அத்துடன் பதிப்பாசிரியராக அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது நடைமுறையில் உள்ள பதிப்புகளில் வை.மு.கோ அவர்களே கம்பராமாயணம் 6 காண்டங்கள் முழுமைக்கும் உரை எழுதிய ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவல்லாமல் சடகோபராமாநுஜாச்சாரியார், சே.கிருஷ்ணமாச்சாரியார் ஆகிய இருவருடைய பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் குறிப்பிட்டுள்ள திருக்குறள் உரைப்பதிப்பு போன்று கம்பராமாயணத்திலும் வை.மு.கோபாலகிருஷணமாச்சாரியார்தான் முழுமையான உரையாசிரியர் என்று பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இது மட்டும் அல்லாது முன்னைய கம்பராமாயண பதிப்புகளில் அரும்பதவகராதி என்று ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும் கொடுக்கப்பட்ட பகுதிகள் இப்பொழுது உள்ள பதிப்புகளில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒவ்வொரு கம்பராமாயணப் பாடலின் கீழும் பாடபேதமாகக் கொடுக்கப்பட்ட பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. முன்பதிப்புகளில் இருந்ததை இப்பொழுது உள்ள பதிப்புகளில் அசட்டுதனமாக நீக்கப்பட்ட பக்கங்கள் சுமார் 1000 இருக்கும். கம்ப ராமாயண ஆய்விற்கு அருந்துணையாக பயன்படும் அற்புதமான குறிப்புகளை நீக்கியிருப்பது என்பது தமிழ் ஆய்வுலகம் குருட்டுதனமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமையாதா?
1 comment
சங்க இலக்கிய நூல்களையும், கம்பராமாயணத்தையும் அண்மைக்காலத்தில் பதிப்பித்ததில் நேர்ந்திருக்கும் அவலங்களை நேர்மையுடனும், திறம்படவும் சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர் பொ. வேல்சாமி. குறிப்பாக வை மு கோ நூல்களை மறுபதிப்பாக வெளியிட்டிருக்கும் உமா பதிப்பகம் செய்த ஏற்க முடியாத அவலங்கள்:
1. வை மு கோ அரும்பாடுபட்டுத் திரட்டி வெளியிட்ட பாடபேதங்களை அறவே நீக்கியது. இது ஆராய்ச்சியாளர்களுக்குச் செய்த துரோகம்.
2. பக்கத்திற்கு பக்கம் எழுத்துப் பிழைகள்.
இவர்கள் வெளியிட்டிருக்கும் கம்பராமாயணம், வில்லிபுத்தூராரின் மகாபாரதம், மற்றும் செங்கல்வராய பிள்ளையின் திருப்புகழ் போன்ற பதிப்புகள் மூல நூல்களின் சிறப்பைச் சிதைத்துச் சீரழித்துவிட்டன.
இந்தக் கறையை எப்படி துடைப்பது?
தமிழ் மக்களுக்கும், மாணவர்களுக்கும் செம்மாந்த பதிப்புகளை எப்படி வழங்குவது?