நேமிநாதம் காலத்தின் பிரதி என்ற இலக்கண ஆய்வுப்பிரதியைக் தமிழுலகிற்குக் கொடுத்துள்ள முனைவர் நா. அருள்முருகன் அவர்கள் தொல்லியல் ஆய்வாளர் என்று அறியப்பட்டவர். இவர் கவிதை, கட்டுரை, என்று இலக்கிய ஆக்கங்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர். திருமயம் கோட்டையில் மூன்று பாறை ஓவியங்கள், சித்தன்னவாசலில் ஏழடிப்பட்டம் குகையில் ஓவியங்கள், மேட்டுப்பட்டியில் தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல், மேட்டுப்பட்டி வழியாகச் சென்றுள்ள பெருவழி என்று பல கண்டுபிடிப்புகளால் நன்கு பேசப்பட்டவர். இவர் இதற்கு முன்னர் 3 கவிதை நூல்களையும் 3 கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.
இந்நூலை இலக்கண ஆய்வில் முக்கியமான ஆய்வு நூலாகப் பார்க்க முடிகின்றது. நேமிநாதம் குறித்து இதுவரை எழுதப்பட்டுள்ள பல்வேறு நூல்களில் சொல்லப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மிக விரிவான ஆய்வுக் கண்ணோட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எல்லாருக்கும் புரியும்படியான பொருளடக்கத்தைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.
நேமிநாதம் தோன்றுவதற்கான காரணத்தைத் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்திற்குப்பின் எழுந்த இலக்கியவளர்ச்சி, இலக்கணமரபுகள், பேச்சுவழக்கு, தொடர்களின் போக்கு, வேற்றுமொழி ஆதிக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என அனைத்தையும் தொல்காப்பியத்திற்குள் அடக்கிக் காட்டுவது இயலாது. எனவே மொழியின் வளர்நிலைக்கேற்பத் தன்காலத்திய மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு நேமிநாதம் தோன்றியுள்ளது.
இலக்கணங்கள் தோன்றிய சூழலில் இந்நூலின் இடம்குறித்து இலக்கண வகையில் என்னும் கட்டுரை விளக்குகிறது. இலக்கணங்கள் ஏன் அதிகமாக எழுதப்படவில்லை என்ற கருத்தையும் அவர் முன்வைக்கிறார். இலக்கணவகை என்று குறிப்பிட்டு அதனை எண்வகை இலக்கண வகைகளை மிக விரிவாக பட்டியலிட்டு விளக்கம் தந்துள்ளார். எழுத்து, சொல் என்று இரண்டு இலக்கணத்தையும் கூறும் நூல்தான் நேமிநாதம். மேலும் இக்கட்டுரையில் நூலின் வகை, தொகை, பிறப்பு போன்றவற்றைத் தெளிவாக கூறியுள்ளது கவனிக்கத்தக்கதது.
நேமிநாதர் குறித்தும் 22 தீர்த்தங்கரர், அதனுள் அரிஷ்டநேமி என்ற பெயரையும் சொல்லி பல்வேறு விளக்கங்களை ஆசிரியர் நூலில் பதிவு செய்துள்ளார். மேலும் நேமிநாதர் கோயில் எந்த ஊரில் இருக்கிறது என்று குறிப்பிடும்போது மயிலாப்பூர் என்று வருகின்ற நிலையில் செ. இராசு அவர்கள் ஈரோடு என்று சொல்வதையும் விவாதத்திற்குட்படுத்தி இறுதியில் ஆய்வுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அதற்கான விளக்கமாக மயிலாபுரி என்பது நெய்தல் சார்ந்த பகுதியைக் கூறுவது அன்றி குறிஞ்சி முல்லை சார்ந்த பகுதியே என்று ஒப்புநோக்கி உரிய சான்றுகளோடு ஈரோடு பகுதியைத்தான் மயிலாபுரி என்று நிறுவி உள்ள விதம் ஆய்வாளரின் ஆய்வுத்திறனை காட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது
ஈரோடு காவிரி பாயும் மருதநிலப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் சுற்று வட்டாரத்தில் முல்லையும், குறிஞ்சியும் கைகோத்துள்ளன. எனவே, நேமிநாதப் பாயிர உரை கூறும் தேனிமிர் பைம்பொழில் தென்மயிலாபுரி கடற்கரையோரத்தில் அமைந்த மயிலாப்பூர் அன்று. மயிலாபுரி என்னும் பழம்பெயரைப் பெற்ற ஈரோடுதான் என்பது மேலும் உறுதியாகிறது.
மேற்கண்டவற்றிலிருந்து, இலக்கண நூலாகிய நேமிநாதம், மயிலாபுரி என்பதைப் பழம்பெயராகக் கொண்ட ஈரோட்டில் முன்பு, கோயில் கொண்டிருந்த நேமிநாதர் பெயரால் அமைந்தது என்பது அதன் பாயிர உரையால் விளக்கமாகிறது என்று தெளிவுபடக் கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது. நேமிநாதம் என்னும் இந்நூலை எழுதிய குணவீர பண்டிதர் வச்சணந்தி மாலை என்ற வெண்பாப் பாட்டியல் நூலையும் எழுதியுள்ளார். இது அந்தாதித் தொடையில் அமைந்த 100 பாக்களைக் கொண்டது. இந்நூல் 53 இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது என்ற செய்தியையும் இந்தக் கட்டுரையின் வழி நாம் அறிய முடிகின்றது. மேலும் இந்திரகாளியம் என்பது வழிநூலாகச் செய்யப்பட்டது என்பது குறித்தும் தெரிந்து கொள்கின்றோம்.
வச்சணந்திமாலை என்னும் நூலை இயற்றியவரும் நேமிநாதத்தை இயற்றியவரும் ஒருவரா என்பது குறித்த செய்திகளைப் பேசி இறுதியில் அது சரியானது என்று நிரூபிக்கின்றதை நாம் பார்க்க முடிகிறது. நேமிநாதத்தை இயற்றிய குணவீர பண்டிதர் கோமிகாமற்புயனை வென்றவர்; தன்குரு வச்சணந்தியின் கொள்கையில் வழுவாதவர். கல்விச் செல்வத்தைத்தவிர, வேறுசெல்வமோ செல்வாக்கோ இல்லாதவர். அரசர் ஆதரவு இன்றி தன் ஆசிரியரின் ஆதரவில் இயங்கியவர். இலக்கணப் பாண்டித்தியம்மிக்க பண்டிதர். தென்களந்தை என்னும் ஊரைச் சேர்ந்தவர். யாப்பருங்கலத்தின் காலத்திற்குப் பிற்பட்டவர். எனவே, நேமிநாதம் இயற்றிய குணவீரபண்டிதர் மேற்கண்ட யாவரினும் முற்றிலும் வேறானவர் எனக்கொள்வதே ஏற்புடையதாகும் என்று தன் ஆய்வில் சொல்லியுள்ளார்.
நேமிநாதத்தின் ஆசிரியர் குறித்து குறிப்பிட்டு வச்சணந்தி, நேமிநாதன், குணவீரர் எனும் பெயர்களைப் பற்றி, வரலாற்றின் அடிப்படையில் விளக்கி அதற்கான உரிய காரணங்களின் அடிப்படையில் நேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் முற்றிலும் எதிரானவர் என்று ஆய்வு முடிவினை கொடுத்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. குணவீர பண்டிதர் என்ற கட்டுரையில் பண்டிதரின் ஊர் குறித்தும் தனக்கு முன்னுள்ள ஆய்வாளர்கள் கூறியுள்ள கருத்துக்களை ஒப்புநோக்கி குணவீரபண்டிதரின் ஊர் கொங்குக்களந்தை என்பதே பொருந்துவதாகும் என்று ஆய்வுகளின் அடிப்படையில் விரிவாக விளக்கியுள்ளார்அருள்முருகன். இக்கட்டுரை மிகவிரிவான ஆய்வுத் தலைப்புகள் கொண்டதாக அமைந்துள்ளது. புவியியல் சான்றுகள், அமைவிடம், நிலம், தாவரம் தொடர்பானவை, சாதிப்பெயர் , குழுப்பெயர், உ.வே.சா குறிப்பு என்று பலவாறாகத் தலைப்பிட்டு ஆய்வாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
இலக்கண வரலாற்றில் உரைகளுக்கு மிக உயர்வான இடம் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய உரைகள் மூலநூலுக்கு இணையாக மதிக்கப்பட்டன. இளம்பூரணம், சேனாவரையம் என உரையாசிரியர் பெயரால் அழைக்கப்படும் அளவிற்கு அவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. நூலாசிரியனின் மனக்கருத்தைக் கற்போர்க்குப் பரிமாறுவதில் உரையாசிரியர்களின் பணி போற்றுதற்குரியதாக உள்ளது.
நேமிநாத உரையாசிரியரின் உரைவகை என்னும் இக்கட்டுரையில் இலக்கண உரையாசிரியர்கள், நேமிநாத உரையாசிரியர் உரைகளின் சிறப்பு, உரையாசிரியர் குறித்த ஆய்வுப் போக்கு, சமயம் சார்ந்த கருத்து, வைரமேக விருத்தி, நேமிநாத உரை வேறு எனப் பிரித்து வெளிப்படுத்தி மு. அருணாசலம், உ.வே.சா போன்றோரின் கருத்துக்களை ஆராய்ந்து உரையாசிரியர் குறித்த தகவலை விளக்கமாக தந்துள்ளார் ஆசிரியர்.
இக்கட்டுரையில் உரைவகை, நேமிநாத உரை அமைப்பு, நடை, வாய்மொழிப் பண்பு, பாடம் கூறும் முறை, எழுத்ததிகார முதல் சூத்திர உரை, உத்திகள், உவமைகள், புவியியல் பதிவு, சமுதாயப் பதிவு எனப் பல்வேறு தலைப்புகளில் இக்கட்டுரை அமைந்துள்ளமை சிறப்பிற்குரியது. நேமிநாத ஓலைச்சுவடிகள் என்னும் கட்டுரையில் இவ்வோலைச்சுவடிகள் 30 கிடைத்துள்ளன என்ற தகவல் சொல்லப்பட்டுள்ளன. 19-ம் நூற்றாண்டில் அச்சேறியுயள்ள செய்தியை நாம் அறிந்து கொள்கிறோம். மேலும் இச்சுவடிகள் எங்கிருந்தன என்ற செய்தியையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அயல்நாட்டுச் சுவடிகள், அயல் மாநிலச் சுவடிகள் குறிப்பாக சுவடிகள் குறித்த அளவு, அமைப்பு, தமிழ்நாட்டுச் சுவடிகள் அதனுள்ளும் தமிழ்நாட்டில் 23 சுவடிகள் இருந்ததை இக்கட்டுரையின் வழி அறிய முடிகின்றது. இதுவரைக்கும் இந்நூலுக்குச் செம்பதிப்பு வரவில்லை என்றும் பாடபேதம் கண்டும் பிரதிகள் ஒப்பாய்வு செய்தும் செம்பதிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்பது ஆய்வாளரின் எண்ணமாக உள்ளது.
நேமிநாத பதிப்புகள் என்னும் கட்டுரையில் ஓலைச் சுவடியிலிருந்து நூலாக்கம் பெற்ற செய்தியினை ஆசிரியர் விளக்கியுள்ளார். தொன்றுதொட்டு இலக்கிய இலக்கணங்கள் யாவும் பனை ஓலைகளில் எழுதப்பட்ட ஏட்டுச்சுவடிகளாகவே இருந்தன. 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளிலேயே அச்சு இயந்திரங்கள் நம்நாட்டிற்கு வந்துவிட்டபோதிலும் அவை கிறித்தவப் பாதிரியார்களிடமும் அயல்நாட்டு ஆட்சியாளரிடமுமே இருந்தன. சுதேசிகள் அச்சு இயந்திரம் வைப்பதற்கான தடை 1835 ஆம் ஆண்டு ஆகஸ்டு 3 ஆம்நாள் இயற்றப்பட்ட ‘1835ஆம் வருஷத்து ஆக்ட்’ என்னும் 11ஆவது சட்டத்தின்படி நீக்கப்பட்டது. இதனால் பல ஏட்டுச்சுவடிகள் அச்சேறி நூல்களாக வெளிவரத் தொடங்கின.
1836, 1852, 1903, 1923 என விரிவான பதிப்பு வரலாற்றைக் குறிப்பிட்டு தமிழ்ச்சங்கப் பதிப்புகள் உதவியாக இருந்ததை குறிப்பிட்டுள்ளவிதம் கவனிக்கத்தக்கது. நூல்பதிப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களுள் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகமும் ஒன்று. கழகம் கா. ர. கோவிந்தராச முதலியாரைப் பதிப்பாசிரியராகக்கொண்டு பழந்தமிழ்நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது. கழகப்பதிப்பு, சூத்திரப்பாடுகளின் பொருத்தப்பாடு, சீர்மைகோரும் தலைப்புகள், பொருந்தா தலைப்புகள், தலைப்பில்லா சூத்திரம், சந்திப்பிரிப்பு எனப் பல்வேறு தலைப்புகளின் வழி கழகப்பதிப்பின் முக்கியத்துவத்தை ஆய்வாளர் திறம்பட எடுத்துக் கூறியுள்ளார், மேலும் இப்பதிப்பு பரவலாக சென்றதையும் குறிப்பிட்டுள்ளார்.
சீனிவாசனார் பதிப்பில் பல்வேறு விளக்கங்களைக் கூறி ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து, அச்சில் இல்லாத ஒருநூலை மக்களுக்குக் கிடைக்குமாறு செய்துள்ள பணிபாராட்டுக்குரியதே ஆகும். தமிழர்கள் கிட்டத்தட்ட மறந்துபோன நூலை வெளிக் கொணர்ந்து அனைவர்க்கும் பயன்படுமாறு செய்துள்ளது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதே ஆகும். ஆயினும் இப்பணி செம்மையாக நிறைவேற்றப் பட்டிருப்பதாகக் கூறுவதற்கில்லை என்றும் கூறியுள்ள பாங்கினை நாம் அறிகின்றோம். பாயிரம், பாயிரத்தின் விளக்கம், அதன் பின்னணி, பொது, சிறப்புப்பாயிரம் குறிப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளின் வழியாக நேமிநாதத்தின் பாயிரச்செய்தியை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. நேமிநாதத்தின் காலம், இந்நூல் குறித்து மூன்று வகையான கருத்து இருப்பதைச் சொல்லி அதனை உற்றுநோக்கி எவையெல்லாம் இல்லை, சிற்றிலக்கிய இலக்கணம், பெண்பாற் பிள்ளைத்தமிழ், மெய்க்கீர்த்தி, பரணி, நேமிநாதமும் இளம்பூரணமும் உரை ஒப்பீடு, உரையின் காலம் எனப் பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் 1015 – 1940 என்று வரையறுத்துக் கூறியிருப்பதன் மூலம் ஆய்வு நெறியைப் பின்பற்றி காலத்தை வரையறை செய்து வெளிப்படுத்தியவிதம் சிறப்பாக உள்ளது.
நேமிநாத காலச் சமுதாயம் என்னும் கட்டுரையில், இக்காலச் சமுதாயத்தை அந்நூலின் உரையால் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். பாவடிவம், வெண்பா யாப்பில் அமைந்த இந்நூலின் பாவகை குறித்தும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு, சிற்றிலக்கியம் போன்றவற்றில் வெண்பாவின் பயன்பாட்டையும் விளக்கியுள்ளார். வெண்பாவைத் தேர்வு செய்ததற்கான காரணமாக சில கூறப்பட்டுள்ளன. அவை மனதில் பதிய வைப்பது, எளிதான வடிவம் என்று ஆசிரியர் கருதியதாலே இதைத் தேர்ந்தெடுத்தாகக் நேமிநாத ஆசிரியர் கூறியுள்ளார். நூலகத் திட்டம் என்ற கட்டுரையில் கூட்டல், கழித்தல், பெருக்கல், தொகை, வகை, விரி, புதிய அணுகுமுறைகள், கலைச்சொல்லாக்கம், இலக்கியமாகும் இலக்கணம், நூல்வகை, நேமிநாதம் ஒரு கையேடு எனப் பல்வேறு தலைப்புகளின் ஊடாக நூலாகத் திட்டம் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
தற்காலத்திலும் நேமிநாதத்திற்கு ஓர் எளிய உரை எழுதி வெளியிட்டால் அது தமிழ்மொழியின் போக்குகளைக் கற்க விரும்பும் பிறமொழியினர்க்கு ஒரு கையேடாக அமையும். மேலும், தொடக்கநிலைத் தமிழ் மாணவர்களுக்கும் நேமிநாதம் போன்ற நூல்களே உதவும். நேமிநாதம் இவ்வடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் இயல்புகளையும் தமிழ் இலக்கணத்தின் மரபுகளையும் தொகுத்து வைத்திருக்கிற நேமிநாதம் தொல்காப்பியத்தைக் கற்பிப்போர்க்கு ஆசிரியர் கையேடாகவும் (Teacher’s Handbook) உதவக் கூடியதாகும் போன்ற கருத்துகள் குறிப்பிடத்தக்கது.
வீரசோழியம் தரவு மூலமாகுமா? நேமிநாதத்தின் எழுத்ததிகாரத்தில் கூறப்பட்டதும் வீரசோழியத்தில் சொல்லப்பட்டதும் ஒன்றா? என்பது குறித்து இக்கட்டுரையில் ஆய்வு செய்துள்ளார். பல்வேறு தலைப்புகளின் வழியாக வீரசோழியத்தைப் பின்பற்றி நேமிநாதம் எழுதபட்டதா? என்ற விவாதம் ஆய்வுக்கு உட்பட்டது என்கிறார். முடிந்த முடிபாக இவ்விரு நூல்களும் முன்னோடி நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதை ஆய்வுலகம் ஏற்றுக் கொள்ளும் நோக்கில் இவரது கட்டுரை அமைந்துள்ளது.
நேமிநாதம் வீரசோழியம் கூறும் முறை வேறுபாடு என்ற கட்டுரையில் இரண்டிற்கும் இடையேயான இலக்கண வேற்றுமை குறித்து கூறியதோடு அதனை அட்டவணையிட்டும் விளக்கியுள்ளார். நேமிநாதத்தின் செல்வாக்கையும் வீரசோழியத்தின் புறக்கணிப்பையும் இக்கட்டுரை விளக்குகிறது. நேமிநாதம் தோன்றக் காரணம், நேமிநாதம் சிந்தனை மரபு, காலந்தோறும் நேமிநாதம் போன்ற கட்டுரைகள் நேமிநாதத்தின் அகலத்தையும் ஆழத்தையும் காட்டுவதாக உள்ளன. இவ்வாய்விற்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியலை முதன்மை, துணைமை ஆதாரங்கள் எனக் குறிப்பிட்டதோடு ஆசிரியர்கள் பெயரை அகர வரிசைப்படுத்தி கொடுத்துள்ள முறையானது ஆய்வுமுறையினையும் அவரது உள்ளார்ந்த அறிவினையும் காட்டுவதாக அமைந்துள்ளது.
பின்னிணைப்பு என்ற தலைப்பில் இலக்கண வளர்ச்சியை படமிட்டு விளக்கியிருப்பது சிறப்பிற்குரியது. ஆய்வாளர் நேமிநாதத்தின் தரவு ளாக அமைந்த இலக்கண நூல்களை எளிமையாக விளக்கும் வண்ணம் ஒரு படமாக வரைந்து காட்டியுள்ளார். மறைந்துபோன தமிழ்நூல்களில் எழுத்து, சொல் இலக்கணம் குறித்து வருகின்ற பாடல்களை மூன்றாவது பின்னிணைப்பாகத் தந்துள்ளார். நான்காவதாக நேமிநாதத்தின் பழம்பதிப்பு நூல்களின் முதல் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் ஆய்வின் இற்றைக்காலத்தில் இலக்கணம் குறித்து ஆய்வது அரிதாகிவரும் சூழலில் நேமிநாதம் குறித்த ஆய்வை முனைவர் நா அருள்முருகன் அவர்கள் மிகச் சிறப்பாக செய்துள்ளார். இந்நூல் குறித்து தமிழகம் செய்ய வேண்டியதை குறிப்பிட்ட விதம் பாராட்டுக்குரியது. இவ்வாய்வு வரும் ஆய்வாளர்களுக்கு முன்னோடியாக அமையும் என்பதில் வியப்பில்லை.
இலக்கண ஆய்வுநூலான இது, படிப்போருக்கு வறட்சியைத் தராமல் இலக்கியச் சுவையோடு எழுதப்பட்டுள்ள உணர்வைத் தருகிறது. அனைத்தையும் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளைத் தந்துள்ளமை பாராட்டிற்குரியது. நேமிநாதம் காலத்தின் பிரதி எனும் இந்நூலின் தலைப்பிற்கேற்ற நேமிநாதம் குறித்து ஆழமானப் பார்வை இந்நூலில் உள்ளதால் ஆய்வாளர்கள் மத்தியில் காலந்தோறும் இந்நூல் பேசப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல உள்ளது. ஆய்வாளருக்கும் இந்நூலைச் சிறப்பான முறையில் பதிப்பித்த சந்தியா பதிப்பகத்தார்க்கும் வாழ்த்துக்கள்
சந்தியா, விலை ரூ.230