மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் என்ற புத்தகத்தினை ஆனந்த் டெல்டும்ப்டே ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார். அதைத் தமிழில் மிக அழகிய நடையில் கமலாலயன் அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார். என்.சி.பி.ஹெச். நிறுவன வெளியீடாக வந்துள்ளது.
தோழர் கமலாலயன் மஹத் நூலை மொழியாக்கம் செய்கின்ற போது அதனை நேரடியாக அருகிலிருந்து பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அந்த மொழியாக்கப்பணியின் போது, குறிப்பாக அதில் இடம் பெறும் அம்பேத்கரின் மூன்று உரைகளைப் பற்றி அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். மாநாட்டுத் தீர்மானங்கள் எவ்வளவு கூர்மையாக அமைந்திருந்தன என்பதையும் பகிர்ந்து கொண்டார். ஒரு தீர்மானத்தில், 30 மாணவ மாணவியர் ஒரு கிராமத்தில் இருப்பார்களானால் அக்கிராமத்தில் கட்டாயம் பள்ளிக்கூடம் வேண்டும் என்ற கோரிக்கை எவ்வளவு முக்கியமானது என்றும், அத்தீர்மானத்தை சென்னை அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பேசியதும் எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. மிக விருப்பத்துடனும், வேகமாகவும் அந்த நூலை மொழியாக்கம் செய்து கொண்டிருந்த போதுதான் எதிர்பாராமல் அவருக்கு நேர்ந்த சாலை விபத்து காரணமாகத் தொடர்ந்து பல நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பல மாதங்கள் மருத்துவ சிகிச்சைக்காகப் படுக்கையில் இருந்த நேரத்திலும் மஹத் பற்றி பேசியதும், மொழியாக்கம் செய்யும் பணியை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொண்டு செய்து முடித்தார். அது அவரது சமூக அக்கறையின் வெளிப்பாடே ஆகும். மஹத் போராட்டம் பற்றி அறிய முற்படுகையில் கீழ்க்காணும் கேள்விகளை உள்வாங்கிக் கொள்வது புத்தகத்தை முழுமையாக உணர நல்வாய்ப்பாக அமையும். மஹத் என்பதென்ன? மஹத்தில் உண்மையில் துல்லியமாக நடந்தது என்ன? தலித் உணர்வுலகில் அது இந்த அளவுக்கு அதிகபட்ச முக்கியத்துவத்தை ஏன் பெற்றிருக்கிறது? சமகால தலித் இயக்கத்திற்கு அதனுடைய பாரம்பரியம் என்ன? எதிர்கால சந்ததியினருக்கு அதன் படிப்பினைகள் எவை? மாநாட்டின் முதன்மை அமைப்பாளரான தோழர் ஆர்.பி மோரேயின் முக்கியத்துவம் என்ன? அம்பேத்கரின் மஹத் மாநாட்டு உரை, சத்தியாக்கிரக உரை, பெண்கள் மத்தியில் ஆற்றிய உரை, மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவரது செயல் யுத்திகள், சட்டத்தினை எவ்வளவு லாவகமாகப் பயன்படுத்தி மாநாட்டை அவர் வெற்றிகரமாக நடத்தினார் இவற்றினை எல்லாம் இன்று வாசிக்கும் போது, சமகாலச்சூழல்களுடன் ஒப்பிட்டுப் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் எழுகிறது. சாதி அமைப்பு முறையும், மத அடிப்படை வாதமும் எவ்வளவு வலுவாக ஒன்று சேர்ந்து இறுக்கமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பதனையும், இதில் உடைப்பை ஏற்படுத்த ஜனநாயக சக்திகளும், முற்போக்கு இயக்கங்களும் கைக்கொள்ள வேண்டிய நிகழ்ச்சி நிரலை இப்புத்தகத்தின் மூலம் பெற முடியும்.
மஹத் போராட்டம், ஒரு மனித உரிமைப் போராட்டமாக இன்றைய நாள் வரை குறிப்பிடப்பட்டதே கிடையாது. அது வெறும் நிகழ்வாக மட்டுமே வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய அளவில் தீண்டப்படாத மக்களுக்கு மனிதக் குடியுரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நடந்தது மட்டுமல்ல, மாறாக சட்டத்தினால் நிறுவப்பட்ட அம்சங்கள் அவை என நிறுவியதில் மஹத் போராட்டத்திற்கு முக்கியத்துவம் உண்டு.
அடிமைமுறையை விட தீண்டாமை கொடியது என்றும்,இந்திய அளவில் 1843ல் அடிமைமுறை ஒழிப்பிற்கு சட்டம் இயற்ற கட்டாயத் தேவை ஏற்பட்டது என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் தீண்டாமைக்கு எதிராக அப்படியான முன்னெடுப்புக்கள் ஏதும் இல்லை எனத் தெளிவாக்குகிறார். சாதிப் பற்றாளர்கள் இனத்தூய்மை பற்றி அதிகம் பேசி வருகிறார்கள். ஆனால் இன்றைய இனவரைவியலாளர்கள் கருத்துப் படி கலப்பு இனங்கள் தாம் உலகெங்கும் பரவியுள்ளன. தூய்மைவாதம் என்பது சாதி உயர்வுக்குப் பயன்படுத்தும் சொல்தான்; மற்றபடி அதனைக் கொண்டாடத் தேவையில்லை என்றனர். கல்வியும், மதச்சுதந்திரமும் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்தான் தீண்டப்படாத மக்கள் எனக் கருதப்பட்டவர்களுக்குக் கைகூடியது.
மகாத்மா ஜோதிராவ் பூலே மிஷனரிகளின் பள்ளியில் பயின்றவர்தான். தீண்டப்படாத மக்கள் எனப்பட்டவர்களுக்குக் கல்வி கிடைப்பதில் கிறித்துவ மிஷனரிகளின் பங்கு அளப்பரியது. வாஸ்கோடகாமா வருகையில் இருந்தே இந்தப் பணி தொடங்கியது என்பதனை வாசகர்கள் வாசித்து அறிய இயலும். மதமாற்றம் சார்ந்த நிகழ்வுகளைப் பொறுத்தமட்டில் முதலில் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் மதம் மாறினர் என்ற கருத்து உள்ளது. அது அப்படியல்ல, உயர் சாதிகளைச் சேர்ந்தவர்களைத்தான் முதலில் முயற்சி செய்து பார்த்தனர், அதில் அதிக அளவில் பயன் கிடைக்காத பொழுதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்த மிஷனரிகளால் முடிந்தது.
மதம் மாறுகை என்பது தீண்டப்படாத மக்களைப் பொறுத்தவரை எந்த ஓர் ஆன்மீகத் தாக்கத்தால் நடந்ததும் அல்ல. மாறாக உணவு, உறைவிடம், வேலை வாய்ப்பு, மருத்துவம், சாதிய ஒடுக்குமுறையில் ஒப்பீட்டளவில் சற்றுப் பாதுகாப்பு- என உலகியல் தேவைகளையொட்டியே மதம் மாறினார்கள். இதனை அடுத்து தீண்டப்படாத மக்களுக்கு கல்வியும் வந்து சேர்ந்தது. அடிப்படையில் மஹர்கள் இராணுவத்தில் வேலை செய்தனர். அதனால் இராணுவப் பள்ளியில் கல்வி கற்றனர். அதனைத் தொடர்ந்து மாதச் சம்பளம், ஒய்வூதியம், சுயதன்னம்பிக்கை, சமூக அந்தஸ்து ஆகியவற்றை அவர்களால் பெறவும், உணரவும் முடிந்தது. அதனைத் தொடர்ந்து அதிக உடலுழைப்பு செலுத்தக் கூடிய இரயில்வே துறையிலும் ஈடுபடுத்திக் கொண்டனர். இப்படியான சூழலில்தான் பூலே போன்றவர்களின் சமூக முன்னெடுப்புகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. கேரளத்தில் அய்யன்காளி, உ.பி.யில் சுவாமி அச்சுத்தானந்த் ஹரிஹர், பஞ்சாப்பில் பாபு மாங்கூராம் போன்றோர் மஹத்துக்கு முன் முன்னோடி இயக்கங்களை நடத்தினர். கேரளாவின் வைக்கம் சத்தியாகிரகம் குறிப்பிடத்தக்கது.
தாகூர், ராஜாராம் மோகன்ராய், நாராயண குரு போன்றவர்களின் பங்களிப்புகளும் சமூக சீர்திருத்தங்கள் பற்றிய முன்னெடுப்புகளுக்கு அறிவார்ந்த தட்பவெப்ப நிலையை உருவாக்கியிருந்தது. மஹத் மாநாட்டிற்குப் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்ட ஆர்.பி.மோரே, மஹத்திற்கு அருகில் லாட்வாலியில் 1903 மார்ச் 1ல் பிறந்தார். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய தீண்டப்படாத வீரர்களின் பிள்ளைகளுக்கான தொடக்கப் பள்ளியில் பயின்றார். கற்றுக் கொள்வதில் அலாதியான ஆர்வம் கொண்ட மோரே, மஹத் உயர்நிலைப் பள்ளியில் சேரப்போன போது தலித் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தும்படி அரசுக்குக் கடிதம் எழுதியதால் மோரேவுக்குப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது. பள்ளிக் காலத்திலேயே தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.
மஹத் நகரில் சிறிய உணவகத்தை ஆரம்பித்தார். அது தலித் செயற்பாட்டாளர்களுக்கான இடமாக மாறியது. மஹத் மாநாட்டிற்குத் தலைமை ஏற்குமாறு அம்பேத்கரை அழைத்தார். முக்கியத் தலைவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரும் பொறுப்பையும் மோரேயே ஏற்றுக் கொண்டார்.தலித் இளைஞர் அமைப்பை உருவாக்க அடிகோலினார்.பம்பாய் நெசவாலை வேலை நிறுத்தத்தில் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்தார். 1930ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ‘சவால்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். தலித் மக்களுக்கும், கம்யூனிஸ்ட் இயக்திற்கும் இடையே பாலமாகச் செயல்பட்டார்.
‘நீல வானத்திலே சிவப்பு நட்சத்திரம்’ என்ற பட்டப்பெயருக்குப் பொருத்தமானவரானார். ‘ஜீவன் மார்க்’ என்ற வாரப் பத்திரிகையின் நிறுவன ஆசிரியரும் ஆவார். இது மகாராஷ்டிர மாநில சி.பி.எம் கமிட்டியின் வாரந்திர பத்திரிகையும் ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியில் உயரிய பொறுப்பில் இருந்த போது அம்பேத்கருடன் உறவை நல்ல முறையில் பேணி வந்தார். இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக, செயற்பாட்டாளராக சேர்ந்து பயணிக்க முடிந்தது என்றால் இந்திய சமூகத்தில் நிலவிய தீண்டாமையைப் பற்றிய ஆழமான புரிதல் இருவருக்கும் இருந்ததேயாகும். மேற்சாதி இந்துக்களால் தொடர்ந்து கீழ்த்தரமாக நடத்தப்படுவதால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டும், தமக்குரிய உரிமைகளைப் பெறும் விதத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உணர்வூட்டும் பொருட்டு ஒரு மாநாடு நடத்துவது பற்றி மோரே சிந்தித்து வந்தார்.
மாநாட்டிற்குத் தலைமை ஏற்க அம்பேத்கர்தான் சரியான நபர் என மோரே முடிவு செய்யக் காரணம் அம்பேத்கர் பெற்றிருந்த கல்வித் தகுதி மட்டுமே. உயர் சாதியினர் மட்டுமே உயர் கல்வியைப் பெற முடியும் என்று மக்கள் நம்பிய காலத்தில் அதற்கு மாற்றாக அம்பேத்கர் இருந்ததாலும், அவரைக் கெளரவிக்கும் பொருட்டாகும். அம்பேத்கர் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மூன்று வருடங்கள் ஆயின. 1927, மார்ச் 19,20-ஆகிய தேதிகளில் பகிஷ்கிருத் பரிஷத் மாநாடு என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகளில் முழு வீச்சில் இறங்கினர். பல பரப்புரைக் கூட்டங்களில் அம்பேத்கர் கலந்து கொண்டார். அம்பேத்கர் தனது தலைமை உரையைத் தயாரிக்க ஒரு வாரம் எடுத்துக் கொண்டார். மாநாடு நடத்துவதற்கான இடம் பற்றிய சிக்கல், அதன் தயாரிப்புப் பணிகளை நிறைவேற்ற அவர்கள் பட்ட சிரமங்களைப் பற்றி வாசகர்கள் வாசிப்பதே சிறந்தது.
நியூசெஞ்சுரி , விலை: ரூ.550