கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து ஆண்டுகளாக மலையாளப் படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து வரும் மூத்த மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன். சாகித்ய அகாதெமி விருதாளர். ‘திசை எட்டும்‘ என்னும் மொழியாக்க காலண்டிதழின் ஆசிரியர். மலையாள இலக்கியத்தின் மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வளம் சேர்த்தவர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வசித்து வருகிறார். புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் ‘விலாசினி‘ அவர்களின் 4300 பக்கங்களைக் கொண்ட ‘அவகாஸிகள்’ என்னும் நாவலின் மொழியாக்கத்தை நிறைவு செய்து, அந்நாவலைச் செப்பனிடும் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருந்த குறிஞ்சிவேலனுடன் ஒரு நேர்காணல்.

புத்தகம் பேசுது வாசகர்கள் சார்பாக வணக்கம். பரவலாக அனைவராலும் அறியப்பட்டவர் நீங்கள். உங்களுடைய இளமைக்கால சென்னை மாநிலம் எப்படியிருந்தது?
இந்த கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் எங்கள் கிராமத்திலும் தமிழ்நாட்டிலும் நடந்த இரண்டு மூன்று முக்கிய நிகழ்வுகளைப் பதிவிட வேண்டும். முதல் நிகழ்வு: நான் நேரிடையாக அனுபவித்த குலக்கல்வித் திட்டம். அப்போது நான் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். இராஜாஜி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாம் முறை தேர்வாகி இருந்தார். 1953-54 காலகட்டம். அதுநாள் வரையில்-அதாவது முதல் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரையில் எங்கள் ஜில்லா போர்டு துவக்கப்பள்ளியில் காலை மதியம் என இரு வேளைகளிலும் வகுப்பு நடைபெறும். ஐந்தாம் வகுப்புக்கு மாறிய பின்தான் இந்த ‘குலக்கல்வித் திட்டம்‘வந்தது. காலை ஒன்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை தான் பள்ளிக்கூடம். மதியத்திற்கு மேல் பள்ளி கிடையாது. மதியத்திற்கு மேல் அப்பா செய்யும் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
விவசாயி பிள்ளை ஏர் ஓட்ட வேண்டும். நெசவாளி பிள்ளை தறி நெய்தல் வேண்டும். நாவிதர் பிள்ளை முடி வெட்ட வேண்டும். ஏகாலி பிள்ளை துணி துவைக்க வேண்டும். இந்த நான்கு இனத்தாரை மட்டும் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இந்த இனத்தவர்கள் தான் எங்கள் கிராமத்தில் வாழ்ந்தார்கள். இதனால் என்னவாயிற்று… கண்டிப்பான வீட்டுப்பிள்ளைகள் மட்டுமே படிப்பைத் தொடர முடிந்தது. மற்றவர்கள் படிப்பில் தடுமாறி குலத் தொழிலுக்கே செல்ல வேண்டிய நிலை. எங்கள் கிராமத்தில் அப்போது மொத்தம் 150 பிள்ளைகள் படித்ததில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் போது ஏழெட்டுப் பேர்களாகி விட்டார்கள். குலக்கல்வித் திட்டத்தால் நேர்ந்த பலன் இதுதான். அதனால், தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடந்தன. தி.க, தி.மு.க மற்றும் காங்கிரஸிலேயே ஒரு பகுதியினர் எல்லாம் இணைந்துதான் இப்போராட்டத்தை நடத்தினார்கள். அதனால், இராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். காமராஜர் முதல்வரானார். காமராஜர் முதல்வரானதும் முதலில் குலக் கல்வித் திட்டம் வாபஸ் ஆனது. அந்த இரண்டாண்டுகளில் தட்டுத்தடுமாறிய மாணவர்கள் மீண்டும் எழவில்லை.
இரண்டாவது நிகழ்வு: நான் அப்போது எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் படிக்கிற காலகட்டம். மொழிவாரி மாநிலப் பிரிவினை. குலக் கல்வித் திட்டம் மாணவர்களுக்கு விளையாட்டாக இருந்தது. இந்த மொழிவாரி மாநிலப் பிரிவினைப் போராட்டம் அரசியல்வாதிகளை மட்டுமல்லாமல் மாணவர்களையும் பெரும் கொந்தளிப்பில் தள்ளி விட்டது. இரண்டு ஆண்டுகள் வரை நீண்டது. 16 மாநிலங்களாகவும் 3 யூனியன் பிரதேசங்களாகவும் மொழிவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டது.
மெட்ராஸ் ராஜதானி என்ற மாபெரும் மாகாணம் நான்காகியது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சென்னை என நான்கு மாநிலங்களாயின. தெலுங்கு மொழிக்கு ஆந்திராவும் கன்னட மொழிக்கு கர்நாடகாவும் மலையாள மொழிக்கு கேரளாவும் தமிழுக்கு சென்னையும் பிரிந்தன. இந்தப் பிரிவினையால் தமிழக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பு. தமிழர்களின் எல்லையாக குமரி முதல் வடவேங்கடம் எனும் திருப்பதி வரையில் என ஏட்டிலும் பாடல்களிலும் இருந்தாலும் சித்தூர், திருப்பதி வரையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் திருத்தணி வரையில் தான் வடக்கே நம் எல்லையாக இருந்தது. அதுவும் மா.பொ.சி யின் தீவிரப் போராட்டத்தால் பெற முடிந்தது.
அதைபோல், வெங்காலூர், கோலார் வரையிலும் தமிழர்கள் அதிகம் வசித்தாலும் ஓசூர் வரையில்தான் நம்மால் தக்க வைக்க முடிந்தது. மேற்கே எடுத்துக் கொண்டால் பாலக்காடு, தேவிகுளம் பீர்மேடு, தெற்கே நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு வரையில் தமிழ் பேசுபவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் வரையில்தான் நம்மால் தக்க வைக்க முடிந்தது. இதுவும், நேசமணி, ஜீவா போன்றவர்களின் பெரும் போரட்டத்தால் சாத்தியமானது. இந்த எல்லைகளை தமிழர்கள் பெறுவதற்கே மாணவர்கள் இரண்டாண்டுகள் வரை தீவிரமாகப் போராட வேண்டிய நிலையாயிற்று. ஆசிரியர்கள் எங்களுக்குப் பாடம் எடுத்தார்களோ இல்லையோ, ‘நம் எல்லை மிகவும் சுருங்கி விட்டது. நம் வாழ்வாதாரமே போய் விடும் போலிருக்கிறது. அதனால், எல்லாருடனும் மாணவர்களாகிய நீங்களும் இறங்கினால்தான் வெற்றி பெற முடியும்‘ என்ற போதனையை எங்களுக்கு ஊட்டினார்கள்.
பெரியார், அண்ணா, ஜீவா, மா. பொ. சி, நேசமணி, சங்கரலிங்கனார் போன்ற பெரும் தமிழகத் தலைவர்கள் போராடினாலும் ராஜாஜி போன்றவர்கள் ஆதரவளிக்கவில்லை. முல்லைப் பெரியாறு, நெய்யாறு, ஆழியாறு-பரம்பிக்குளம் போன்றவைகளை மேற்கிலும் காவிரி, பொன்னையாறு, பாலாறு போன்ற நீராதாரங்களை வடக்கிலும் இழக்க வேண்டிய நிலை வந்தபோதுதான் மொழிவாரி மாநிலப் பிரிவினை மிகப் பெரும் போராட்டமாக வெடித்தது.
ஒருநாள் எங்கள் ஊர் குறிஞ்சிப்பாடியில் பொதுமக்கள், மாணவர்கள் ஒருங்கிணைத்து அமைதியான கோஷங்களுடன் ஊர்வலம் போனோம். போலீஸார் எங்களுடனேயே வந்தனர். மத்திய அரசுக்கு எதிராக நடந்த போராட்டமானதால் குறிஞ்சிப்பாடி ரயில்நிலையம் வரையிலும் அமைதியாகதான் ஊர்வலம் நடந்தது. யாரோ ஒருவர் ரயில்நிலையத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடியில் கல்லைவிட்டு எறிந்தார். கண்ணாடி பொலபொலவென்று கொட்டியது. மாணவர்கள் மத்தியில் உற்சாகம் வந்து விட்டது. தலைக்கு ஒரு கல்லாக எடுத்தார்கள். போலீஸார் அனைவரையும் அடிக்கத் துவங்கி விட்டனர். மாணவர்களும் தங்கள் கையிலிருந்த கற்களை போலீஸார் மேல் வீசினார்கள். அவ்வளவுதான்.

அந்த இடமே பெரும் போர்க்களமாயிற்று. மண்டை உடைந்தது. கைகால்கள் முறிந்தன. என் முதுகிலும் லத்தி சார்ஜ் விழுந்தது. கூட்டம் நாலாதிசைகளிலும் கலைந்து ஓடியது. நானும் என் நண்பர்கள் இரண்டு மாணவர்களும் வடக்கு நோக்கி ஓட்டம் பிடித்தோம். எங்களைத் துரத்திக் கொண்டு இரண்டு போலீஸார் லத்தியுடன் ஓடி வந்தார்கள். எங்கள் வீடு அருகில் இருந்தாலும் நாங்கள் வீட்டுக்குப் போகாமல் ஊரைத்தாண்டி ஓடினோம். எங்கள் கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே அடர்வனப் பகுதி. பெருந்த முந்திரி மரங்கள். அக்காட்டில் ஓடி பதுங்கிக் கொண்டோம். எங்களைத் துரத்தி வந்த போலீஸார் எங்கள் கிராமத்துடன் நின்று கொண்டார்கள். இருந்தாலும் மதியநேரத்தில் வந்த நாங்கள் சூரியன் மறையும் நேரம் வரையில் அங்கேயே இருந்தோம். மதியம் சாப்பிடாததால் மயக்கம். தண்ணீர் கூட இல்லை. எலி, வளையை விட்டு வந்ததுபோல் நாங்கள் காட்டை விட்டு வெளியே மெல்ல வந்தோம்.
தற்போது அந்த முந்திரிக்காடு இருந்த பகுதி ‘கன்னித்தமிழ் நாடு‘ என்னும் பெயரில் சிறு கிராமமாக மாறியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், நெய்வேலியைச் சுற்றியிருந்த கிராமங்களுக்குச் சொந்தக்காரர்கள். நிலக்கரி எடுப்பதற்காக அக்கிராமங்களைப் பறித்துக் கொண்டு சொற்ப தொகையை வழங்கினார்கள். அந்தத் தொகையுடன் வந்தவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் காட்டை வாங்கி முந்திரிகளை அழித்துவிட்டு வயல்களாக மாற்றி விட்டார்கள். அவ்வயல்களிலேயே வீடுகளையும் கட்டிக் கொண்டு ஒரு சிறுகிராமமாகவே அமைத்துக் கொண்டார்கள்.
இந்தக் கேள்வி ஒரு மொண்ணையான கேள்வி என்று நினைக்க வேண்டாம்; நான் இதை முக்கியமான கேள்வியாகக் கருதுகிறேன். நீங்கள் தீவிரமாக மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன?
நான் 1964 ல் தான் சமகால கதை, கவிதைகளையே படிக்கத் தொடங்கினேன். அந்த நாள் வரையில் தமிழ்ப்பாட நூல்களில் உள்ள சங்கப் பாடல்களையும் கதைகளையும் படித்தேனே தவிர, எவ்வித சமகால படைப்புகளையும் கவிதைகளையும் படித்ததில்லை. ஆனால், பாட நூல்களிலுள்ள கதைகளையும் கவிதைகளையும் எங்கள் ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி என்கிற புதுவை கலைச்செழியன் அவர்களும் இராஜாராம் அவர்களும் சமகால கதை, கவிதைகளைப் போல் நடத்துவார்கள். இந்த இரு ஆசிரியர்களும் சிறுகதைப் படைப்பாளர்கள். அதனால் அவர்கள் பாடம் நடத்தும்போது சிறிதும் மனச்சோர்வு ஏற்படாது. உற்சாகமாக இருப்போம். மேலும் சொல்வதென்றால், வார மாத இதழ்களையும் வாங்கி வந்து படிக்கச் சொல்வார்கள். நான் அவற்றை படிக்கவே மாட்டேன். என் நண்பன் (குறிஞ்சி. ஞான. வைத்தியநாதன்-பல்கலை படைப்பாளி) அவை அனைத்தையும் படிப்பான். அரு. ராமநாதன் நடத்திய ‘காதல்‘ இதழை பாடப்புத்தகத்தின் இடையே வைத்துப் படிப்பான்.
பள்ளி இறுதித் தேர்வு (பதினோராம் வகுப்பு) நடந்தது. தேர்வு முடிவில் நான் தோல்வியடைந்தேன். பாடப்புத்தகத்தின் மத்தியில் காதல் இதழை வைத்துப் படித்த நண்பன் தேர்வாகி விட்டான். இது எப்படி? என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்போது எனக்குத் தோன்றியதுதான் என் நண்பனின் செயல். அதாவது, நாமும் கதைகள் படிக்க வேண்டும்.
எங்கள் ஊரில் அந்த ஆண்டில்தான் நூலகம் தொடங்கினார்கள். உறுப்பினர் கட்டணம் மூன்று ரூபாய். முதன் முதலில் நான் எடுத்து படித்த புத்தகம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்.‘ அதன் வாசிப்புச் சுவை என்னை ஒரு புத்தகப் புழுவாகவே மாற்றி விட்டது. அந்த ஆண்டில் மட்டும் முந்நூறு நாநூறு நாவல்களைப் படித்திருப்பேன். அவற்றில் ஒரு நாவல்தான் மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கர பிள்ளையின் ‘செம்மீன்‘. நாவலை சுந்தரராமசாமி தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார். அதை படிக்கலாம் என்று எடுத்து வந்து படித்தபோதுதான் அதுநாள் வரை படித்தவை மறைந்தன. அதேபோல், மொழியாக்கம் பெற்ற ரஷ்ய நாவல்களையும் மற்ற மொழியிலிருந்து வந்த நாவல்களையும் படிக்கும் போது என் உள்ளுக்குள்ளேயே இனி புத்தகங்களை தேர்வு செய்துதான் படிக்க வேண்டுமென்று உறுதி பூண்டேன்.
காலம் ஓடியது. கால்நடைத்துறையில் கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்தேன். மதுரை மாவட்டத்தில் 1964 ல் பணியில் சேர்ந்தேன். பணியேற்ற இடம் நத்தம். அங்கு பணிபுரியும் போதுதான் எங்கள் மாவட்ட அலுவலர் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு செயலை செய்யச் சொல்லியிருந்தார். நான் மறுத்தேன். என்னுடன் பணியாற்றிய இன்னொருவர் அவரின் ஆணையை ஏற்றுக் கொண்டார். அதனால், அவர் அங்கேயே நீடிக்கப்பட்டார். எனக்குத் தண்டனை கிடைத்தது. சுற்றுப்புறத்தில் ஓட்டல்கள் இல்லாத காட்டின் நடுவே இருந்த செக்போஸ்டுக்கு டெபுடேஷனில் அனுப்பினார். கேரள மாநிலம் வண்டிப் பெரியாரை நோக்கிச் செல்லும் ஒரு காட்டுப்பாதையில் அந்த செக் போஸ்ட் இருந்தது. அந்த செக் போஸ்டில் ஒரு போலீஸ்காரர், ஒரு உதவியாளர் நான் மட்டும்தான் அமர்ந்திருப்போம். எப்போதாவது மாடுகள் வந்தால் தடுப்பூசி போட்டு அனுப்ப வேண்டும். மற்றபடி ஓய்வுதான். இந்த ஓய்வு நேரத்தை நான் மலையாள மொழியாக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டேன்.
அருகிலிருந்த கிராமத்தின் (கேரளப் பகுதி) பள்ளியில் படிக்கும் முதல், இரண்டு வகுப்பு மாணவர்களின் மொழிப்பாட நூல்களை வாங்கி வந்து மலையாளம் கற்கத் தொடங்கினேன். வெகுவிரைவில் மலையாளம் வசப்பட்டது. காரணம், செம்மீனை மலையாள மொழியிலேயே படிக்கக் வேண்டும் என்ற உந்துதல். மலையாள இதழ்களில் மாத்ருபூமியைத்தான் நான் முதன்முதலில் வாங்கிப் படித்தேன். 1960முதல் 1965 ம் ஆண்டுகளில் சொந்தமாக சில சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் எழுதியிருந்தாலும் மாத்ருபூமியில் வந்த கதைகளைப் படித்தபோது, நாம் எழுதியது கதைதானா என்ற சந்தேகம் வந்தது. சொந்தமாக எழுதுவதையே நிறுத்தி விட்டேன். அப்போதுதான் மாத்ருபூமியில் வந்த ஒரு விமர்சனக்கட்டுரை எனக்குக் கோபத்தை தூண்டியது. அதனால், அக்கட்டுரையை அப்படியே மொழியாக்கம் செய்து, இலக்கியத்தரமாக வந்து கொண்டிருந்த ’தீபம்’ மாதஇதழுக்கு அனுப்பினேன். மறுமாதமே அக்கட்டுரையின் ஒரு பகுதி பிரசுரமானது. அது என்னுடைய மொழியாக்கத்தில் பிரசுரமான முதல் படைப்பு. அதன்பின்தான் தரமான கதைகளையும் நாவல்களையும் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி மொழிபெயர்ப்பில் முழுமூச்சாக இறங்கினேன். மொழியாக்கம் என் வசமாகியது. காரணம், கேரள எல்லையில் பணியாற்றும்போது அம்மக்களோடு மக்களாகப் பழகியதுதான்.
என் முதல் மொழியாக்கக் கதை நந்தனாரின் ‘பலியாடுகள்‘. இக்கதை அன்றைய இலக்கிய இதழான ‘கண்ணதாசன்’ மாதஇதழில் வெளிவந்தது. மொழியாக்கத்தை ஒரு மொழியின் வளர்ச்சிக்காகச் செய்தேன். இன்றைய நிலையைப் போல் மொழியாக்கத்திற்கு,ஒரு பெரும் ஆதரவோ, பரிசுகளோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை. இருந்தாலும் என் மொழியாக்கமே என் முழு மூச்சாக இருந்தது. நான் மொழியாக்கம் செய்த நூல்களின் மூல ஆசிரியர்கள் பலருக்கும் தமிழும் ஓரளவு தெரிந்திருந்தமையால் ஏதாவது ஒரு சிக்கல் எழுந்தபோது அவர்களிடமே அதற்கான தீர்வைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

நீங்கள் மொழிபெயர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் படைப்பை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நான் இதுவரையில் 38 நூல்களை மொழிபெயர்த்துள்ளேன். இவற்றில் நானே விரும்பிக் கேட்டு வாங்கி மொழியாக்கம் செய்தவை 20நூல்கள் இருக்கும். மற்ற 18 நூல்களும் மூல ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரிலும் பதிப்பாளர்களின் விரும்பத்தின் பேரிலும் தான் செய்துள்ளேன்.
1966-67 ல் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் மாத்ருபூமி வார இதழில் தொடராக எழுதியதுதான் ‘சல்லி வேர்கள்‘ நாவல். இந்த நாவலை நான் தொடராகப் படிக்கும்போதே, அதுவரையில் தமிழில் வெளிவந்த எந்த நாவலும் இதுபோல் இல்லை என்ற எண்ணம் எழுந்தது. நாவலைப் படித்து முடிந்த பின்புதான் இந்நாவலின் வடிவம் நனவோடை உத்தியில் எழுதப்பட்டிருப்பதை அறிந்து கொண்டேன். மலையாற்றூரிடம் அனுமதி கேட்டேன். கொடுத்தார். தமிழாக்கம் செய்தேன். இந்த நாவல் ‘தீபம்‘ மாத இதழில் தொடராக வந்தது. ‘பாண்டவபுரம்’ மலையாள எழுத்தாளர் சேது எழுதிய நாவல். இதன் வடிவம் மாய யதார்த்தவாத உத்தியால் எழுதப்பட்டிருந்தது. இந்த நாவல் தமிழில் வருவதற்கு முன்பு தமிழில் எந்த நாவலும் இந்த உத்தியில் எழுதப்படவில்லை. ‘தகழி’ ஒரு வித்தியாசமான தொகுப்பு. தகழி சிவசங்கரப் பிள்ளையின் நாவல்களின் சுருக்கம், தேர்ந்தெடுத்த சிறுகதைகள், குறுநாவல் (முழுமையாக), தகழியைப் பற்றி பலரும் கூறிய தகவல்கள் என தகழியை முழுமையாக அறிந்து கொள்ள உதவும் தொகுப்பு நூல்.
‘கோவர்த்தனின் பயணங்கள்‘ பிரபல மலையாள நாவலாசிரியர் ஆனந்த் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நாவலை மொழிபெயர்க்கும் முன் முதல் வாசிப்பில் எளிமையாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் போன பின்புதான் இந்திய வரலாறும், இதிகாசங்களும் அறியாமல் மொழியாக்கம் கைவசப்படாது என்பதை உணர்ந்து அவைகளை முன்னதாகப் படித்து விட்டு பின்புதான் மொழியாக்கம் செய்தேன். எஸ். கே. பொற்றேக்காடின் ‘பாரதப் புழையின் மக்கள்‘ இந்திய சமகால இலக்கியங்களில் இல்லாத ஒரு புதிய வடிவமாக இருந்தது. நாவலும் நாடகமும் இணைந்து ‘நாவடகம்‘ என்னும் புதிய உத்தியில் எழுதியிருந்தார். இவரின் ‘விஷக்கன்யகா’ வை இந்திய தேசிய புத்தக நிறுவனத்திற்காக நான் மொழியாக்கம் செய்ததுடன், அந்நூலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அக்காதெமி விருது பெற்றேன்.
இளம் எழுத்தாளரான ட்டி.டி ராமகிருஷ்ணன் தம் முதல் படைப்பான ‘ஆல்ஃபா‘ என்றொரு நாவலை வெளியிட்டு மலையாளத்தில் அமோக வெற்றி பெற்றதால் ஆங்கிலம் உள்பட பல மொழிகளிலும் அந்நாவல் வெளிவர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருடைய நண்பரான தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனிடம் ‘தமிழில் யார் செய்தால் நன்றாக வரும்’ என்று ஆலோசனை கேட்க, அவர் என்னிடம் கைகாட்டியுள்ளார். நாவலின் பிரதி எனக்கு வந்து சேர்ந்தும் படித்து பார்த்தேன். இது சர்வதேச தரத்தில் அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றியது. மொழிபெயர்க்க ஏற்றுக் கொண்டேன். அவருடைய நாவல்கள் இதுவரை நான்கு வந்துள்ளன. மூன்று நாவல்கள் தமிழில் வந்து விட்டன. நான்காவது நாவல் மொழிபெயர்ப்பில் உள்ளது. இவருடைய நாவல்கள் அனைத்தும் சர்வதேசப் பிரச்சினைகளைச் சொல்வது. கொஞ்சம் தேன் தடவுவது போல் பாலியலைக் கலந்து எழுதியுள்ளார். இவ்வாறு நான் விருப்பப்பட்டும், மூல ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் விருப்பப்பட்டும் மொழியாக்கங்களைத் தேர்வு செய்கிறேன்.

உங்களுக்கு அந்தப் படைப்பாளர்களுடன் நேரடித் தொடர்பு இருந்ததுண்டா? அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நான் சுமார் 20 மலையாள எழுத்தாளர்களின் 38 படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன். இவர்களில் 10 பேர்கள் என்னை நேரிடையாக அறிந்தவர்கள். நான்கைந்து பேர்களுடன் நெருங்கிய பழக்கம் உண்டு. மற்றவர்கள் என்னுடைய மொழிபெயர்ப்பை நன்கு அறிந்தவர்கள். என்னுடைய மொழிபெயர்ப்புகளுக்கு கூடவே இருந்து ஊக்கம் அளித்தவர் சசிதரன் அவர்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பது என் கடமை. மலையாள இலக்கிய உலகில் எனது நீண்டகால நண்பராக இருந்தவர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் அவர்கள்தான். 1966 முதல் அவருடன் கடிதத் தொடர்பில் இருந்தேன். தமிழ் அறிந்த மலையாள படைப்பாளி. எனவே, 1993 ஆம் ஆண்டு அவரைச் சந்திப்பதற்காக திருவனந்தபுரம் சென்றபோது தம்முடைய வீட்டில் காத்திருந்தார். நேரில் சந்தித்ததும் கைகுலக்கி தன் அறைக்கு அழைத்துச் சென்றார். வீட்டில் அவரும் அவருடைய துணைவியாரும் மட்டும்தான் இருந்தார்கள். இலக்கியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நான் பேசப்பேச அவர் ஏதோ ஒரு பேப்பரில் பென்சிலால் கிறுக்கிக் கொண்டே இருந்தார். 10 நிமிடத்திற்குள் அந்த பேப்பரை என்னிடம் நீட்டினார். இதுதான் குறிஞ்சிவேலன் என்று தமிழில் எழுதியிருந்ததுடன் என் முகத்தோற்றத்தை படமாக வரைந்திருந்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம். பிறகு எங்களுக்கு காப்பி வரவழைத்துத் தந்தார். மீண்டும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு திருவனந்தபுரம் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். தனது அனைத்து நூல்களையும் எனக்குக் கொடுக்கும்படி. நாங்கள் விடைபெறும் போது தம்முடைய நூல்களை மொழியாக்கம் செய்வதற்கான அனுமதி கடிதத்தையும் தந்தார்.
அங்கிருந்து புறப்பட்டு கோட்டயம் சென்றோம். ‘முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்‘ நூலின் ஆசிரியர் வி.பி.சி. நாயரைச் சந்தித்தோம். வறுமை நிலையில் இருந்தார். தமிழ் நூல் பிரதிகள் ஐந்தையும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் அளித்து விட்டு தகழிக்கு புறப்பட்டோம். தகழிக்கு நாங்கள் போய்ச் சேரும்போது பகல் மணி 2.30. தகழியின் ‘சங்கர மங்கலம்‘ வீட்டில் நுழைந்தோம். சுமார் முப்பது ஆண்டுகளாக கனவிலும் கற்பனையிலும் கண்டிருந்த வீடு. புனிதமான ஆலயத்துக்குள் நுழைகையில் ஏற்படும் சிலிர்ப்பு. வீட்டின் வாயிலைத் தாண்டியவுடன் முன் வராண்டா. வரவேற்பறையும் அதுவே. வரவேற்பறையின் வலது புறத்தில் சாய்வு நாற்காலி. அருகில் இரண்டு மூன்று நாற்காலிகள். டீப்பாய்கள் இரண்டு. ஒரு டீப்பாயின் மேல் தினசரி, வார, மாத இதழ்கள், கடிதங்கள். இன்னொன்றில் தரைவழி தொலைபேசியும் வெற்றிலைப் பெட்டியும். சாய்வு நாற்காலியில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை. அவருடைய காலடியில் எச்சில் துப்பும் பாத்திரம்.
‘ஞான் குறிஞ்சிவேலனானு. தமிழ்நாடு. இத்தேகம் என்டெ ஸுக்ருத்து மிஸ்டர் சசிதரன். மலையாளி. நெய்வேலி எம்ப்ளாயி. ’ ‘ஓ… குறிஞ்சிவேலன் நிங்ஙளானோ? I know you very well.‘ என்றார். திடுக்கிட்டேன். மீண்டும் எனக்குள் ஒரு சிலிர்ப்பு.
இவருக்கு எப்படி என்னை… இதற்கு முன் சந்தித்ததில்லையே… திடீரென்று ஒரு ஞானோதயம். என் மதிப்பிற்குரிய இலக்கிய ஆசான் தீபம் நா. பா. அவர்களை நான் சந்திக்கும் போது, ‘டில்லிக்குப் போயிருந்தபோது தகழியைப் பார்த்தேன். குறிஞ்சிவேலன் மூலம் மலையாளப் படைப்புகள் எங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கின்றன என்றேன்.‘ என்பார். ‘கொச்சியில் நடந்த சாகித்திய அக்காதெமி கருத்தரங்குக்குச் செல்கிறேன். எஸ். கே. பொற்றக்காட், எம்.டி. வாசுதேவன் நாயர், தகழியைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் உங்களைப் பற்றியும் பேசினோம்‘ என்பார். இப்படி நா. பார்த்தசாரதியின் பேச்சால் மலையாள இலக்கியவாதிகளிடம் நான் முன்பே அறிமுகமானதின் பலனை அன்று பெற்றேன்.
அதன்பின் நீண்ட நாட்கள் பழகிய நண்பரிடம் பேசுவது போல் நாங்கள் விடைபெறும் வரையில் தகழி பேசிக் கொண்டிருந்தார். அன்று மே 31. ‘இடவப்பாதி காலவர்ஷம்‘ என்றழைக்கப்படும் தென்மேற்கு பருவமழை பாட்டம் பாட்டமாக பெய்யத் தொடங்கியது. ஆண்டின் புதுமழையைக் கண்ட தகழி, குழந்தையாக குதூகலித்தார். மாலை 5.30 மணிக்கு விடை பெற்றோம்.
2005ல் ஆல்ஃபா நாவலை கோழிக்கோட்டில் வெளியிடும்போதுதான் எம்.டி. வாசுதேவன் நாயரை நேரில் சந்தித்தேன். நாவலை வெளியிட்டு அவர்தான் வாழ்த்தினார். வீட்டுக்கு அழைத்தார். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அவருடன் அளாவளாவினேன். பின்பு மஞ்சேரியிலுள்ள டாக்டர் டி.எம். ரகுராம் அவர்களின் தமிழ் கவிதைகளின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா நடந்தது. நானும் எம்.டி.வாசுதேவன் நாயரும் கலந்து கொண்டோம். அப்போது எம்.டி. வாசுதேவன் நாயர் பேசும்போது ‘மொழிபெயர்ப்பு என்றால் அது குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பைப் போல இருக்க வேண்டும்‘ என்றார். எனக்கு ஞானப்பீட விருது கிடைத்தது போல இருந்தது. 2017 மார்ச் மாதத்தில் எம்.டி. வாசுதேவன் நாயருக்கு ‘தேசாபிமானி‘ பத்திரிகையின் சார்பில் ஒரு வாரம், விழா கொண்டாடப்பட்டது. ‘ரண்டாமூழம்‘ நாவலை பிறமொழிகளுக்கு கொண்டு சென்ற நான்கு பேர்களையும் அழைத்து கெளரவிக்க வேண்டும். மொழிபெயர்ப்பில் அவர்களுக்கு, எற்பட்ட அனுபவங்களை பகிரச் சொல்ல வேண்டும் என்று விழா குழுவினரிடம் எம்.டி. கூற என்னைத் தொடர்பு கொண்டார்கள். நான் அப்போது என் மகனுடன் அமெரிக்காவில் இருந்தேன். விழா குழுவைச் சேர்ந்தவரும் தமிழ்-மலையாளம் மொழிபெயர்ப்பாளருமான கே. எஸ். வெங்கடாசலம் என்னை தொடர்பு கொண்டார்.

நான் அமெரிக்காவில் இருக்கும் விபரத்தைச் சொன்னேன். ‘என்ன செய்வீர்களோ தெரியாது. எம்.டி. சொல்லி விட்டார்‘ என்றார். நான் என் அமெரிக்கப் பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி, கோழிக்கோட்டுக்குச் சென்று விழாவில் கலந்து கொண்டேன். எம்.டி.க்கு மிகுந்த மகிழ்ச்சி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2018 ல் வயநாடு சென்றிருந்தபோது குடும்பத்துடன் கோழிக்கோட்டுக்குப் போனேன். சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் நேரம் ஒதுக்கி எங்கள் குடும்பத்தினருடன் ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். தம்முடைய ‘அசுரவித்து‘ நாவலை எனக்குத் தந்து விடைகொடுத்தார்.
அப்புறம் கே.வேணுகோபால், இவர் நெய்வேலியில் வாழ்ந்த மலையாள மொழி படைப்பாளி. நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவருடைய நாவல்களான ‘ஸ்லத பிம்பங்கள்‘(கரைந்த சிற்பங்கள்), மற்றும் ‘அக்ரயானம்‘(முனைப்பு)ஆகிய நாவல்களை நான் மொழிபெயர்த்துள்ளேன். குடும்ப நண்பராகவே இருந்தார். ரண்டாமூழம், பாண்டவபுரம் நாவல்களை மொழிபெயர்க்கும் போது சில சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தவர். ஓய்வு பெற்று கேரளாவில் குடியேறினார். சில வருடங்களிலேயே மூளை நரம்பின் பாதிப்பு ஏற்பட்டு காலமானார்.
‘ஆல்ஃபா‘ நாவலை மொழிபெயர்த்து முடித்தவுடன் எங்கள் வீட்டுக்கே வந்து விட்டார் ட்டி.டி. ராமகிருஷ்ணன். இரண்டு நாட்கள் என்னுடன் தங்கி ‘ஆல்ஃபா‘ நாவலின் மொழியாக்கத்தை வரிவிடாமல் படித்துப் பார்த்து, ‘நானே தமிழில் எழுதியது போல் இருக்கிறது‘ என்றார். அதன்பின்அவரும் குடும்ப நண்பராகி விட்டார். ஆல்ஃபாவுக்கு பின் அவர் எழுதிய ‘ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா‘, ‘சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி‘ஆகிய நாவல்களுக்கு அனுமதி அளித்து தமிழில் வருவதற்கு ஆதரவு தந்தார். தற்போது அவருடைய ‘மாம ஆப்ரிக்கா‘நாவலையும் மொழிபெயர்த்துக் கொணடிருக்கிறேன். கிழக்கு ஆப்ரிக்காவின் உகாண்டாவின் இடி அமீன் ஆட்சிக் காலத்தின் அலங்கோலத்தை விவரிக்கும் விறுவிறுப்பான நாவல்.
மலையாள எழுத்தாளர் சேது அவர்கள் ‘பாண்டவபுரம்‘ நாவலுக்கு நான் அனுமதி கேட்டவுடனேயே அளித்தார். மிகவும் சிக்கலான, சவாலான அந்த நாவலை மொழியாக்கம் செய்தவுடன் நேரடித் தொடர்புக்கு வந்தவர். அவருடைய ‘‘அடையாளங்கள்‘ நாவலை அவராகவே அனுப்பி மொழிபெயர்க்க சொன்னார். நான் அதை மொழியாக்கம் செய்து முடிக்கும் போது அதே நாவல் அந்த ஆண்டு மத்திய சாகித்திய அக்காதெமியின் விருது பெற்றது. அதை மொழிபெயர்க்கும் உரிமையை எனக்கு அளிக்க வேண்டும் என்று சாகித்திய அக்காதெமிக்கு கடிதம் எழுதினார். அதன்படி சாகித்திய அக்காதெமியும் எனக்கே மொழியாக்கம் செய்யும் உரிமையை அளித்து, நூலாகவும் வெளியிட்டது. அதன்பின் அவர் NBT தேசிய புத்தக நிறுவனத்தின் தலைவராக ஆனபோது தமிழ் ஆலோசனைக்குழு உறுப்பினராக என்னை நியமித்தார். அவருடைய இன்னொரு சிறந்த நாவலான ‘ஆறாவது பெண்‘என்னும் இன்னொரு சிறந்த நாவலை மொழிபெயர்த்துள்ளேன். ‘அகநி’பதிப்பக வெளியீடாக வரவுள்ளது.
உங்கள் ஆரம்பகால படைப்புகள் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘தீபம்‘இலக்கியப் பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்தன. உதாரணமாக ‘முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்‘. இந்த அனுபவங்களையும் நா.பா. உடனான உங்கள் நட்பையும் பற்றிக் கூறுங்கள்.
1960 ஆம் ஆண்டு நான் சமகால தமிழ்ப் படைப்புகளை படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நா. பார்த்தசாரதி அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது நா.பா. வைப் பற்றியும் அவருடைய படைப்புகளைப் பற்றியும் விமர்சிக்கும் போது, அவர் எழுதியது விமர்சனத்திற்கே தகுதியற்றவை என்றும் அவற்றை எவ்விதத்திலும் சமகால இலக்கியப் படைப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்.

ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் நா.பா.வின் எழுத்துகளில் எந்த இடத்திலும் விரசம் இருக்காது. அவருடைய கதாபாத்திரங்கள் சமூகக்கொடுமைகளின் மீது கடும் சீற்றம் கொண்டவர்கள். நாகரீகமான உரையாடல்களால் பெருந்தன்மையைக் காட்டுபவர்கள். குறிஞ்சி மலரின் அரவிந்தனாகட்டும், பொன்விலங்கின் சத்தியமூர்த்தியாகட்டும், சத்திய வெள்ளம் பாண்டியனாகட்டும் அனைவருமே லட்சிய நாயகர்களாக நாவல்களில் வலம் வருவார்கள். இதைத்தான் விமர்சகர்கள் கடுமையாகச் சாடுகிறார்கள். இவர்களை யதார்த்தமானவர்கள் இல்லை என்பார்கள். நான் கேட்கிறேன்-யதார்த்த மனிதனை மட்டும் படைப்பவர்கள் பலர் இருக்க லட்சிய மனிதர்களை படைத்து சமூகத்தில் உலவுபவர்கள் ஏன் இப்படி இருக்கக் கூடாதா என்று உணர்த்துவது தவறா? கதைகள் என்பதே கற்பனைதான். இந்தக் கற்பனையில் யதார்த்த மனிதனைத் திரிய விடுவதை விட லட்சிய மனிதர்களை நடமாட விட்டு, இப்படி மனிதர்கள் வாழலாமே என்று சொல்வதால் அந்தப் படைப்பே மோசம் என்று ஒதுக்க வேண்டுமா?
இந்த வகையில் நா.பா. வின் எழுத்தில் ஆர்வம் கொண்ட நான் அடிக்கடி அவருக்குக் கடிதம் எழுதுவேன். அவரும் பதில் போடுவார். இப்படி கடிதத்தின் மூலம் எங்கள் நட்பு வளர்ந்தது. மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை கல்கி நிறுவனத்தினர் சென்னைக்கு அழைத்தனர். ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொண்டனர். பொன்விலங்கு நாவல் கல்கியில் தொடராக வந்தது. இந்த நாவல் 1963 ஜனவரி பொங்கல் மலரிலிருந்து ஆரம்பித்து 1964 ஏப்ரலில் முடிந்தது என்று நினைக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் நிர்வாகத்திற்கும் நா.பாவுக்கும் கருத்து வேறுபாடு முற்ற கல்கி பணியிலிருந்து விலகி விட்டார். ஓராண்டு முழுவதும் மேடைப்பேச்சுகளுக்கு சென்று வந்தார். அவருடைய இலக்கிய உரையைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நா.பா. கர்மவீரர் காமராஜரின் தொண்டர். எனவே சில அரசியல் மேடைகளிலும் அவரைக் காணலாம். அவரது உரை காரசாரமாக, அதே சமயம் நாகரீகமாக இருக்கும். நான் 1964 முதல் 1967 வரையில் மதுரை மாவட்டத்தில் பணியாற்றியபோது நேரில் கேட்டிருக்கிறேன். நிறைய கடிதங்கள் எழுதியிருந்தாலும் அவரிடம் நேரில் சென்று அறிமுகப்படுத்திக் கொள்ளத் தயங்கினேன்.
1965 மார்ச் மாதம் என்று நினைக்கிறேன். நா.பா. நேரிடையாகக் கடிதம் அனுப்பியிருந்தார். அன்று கடிதம் கார்டுதான். அதில் தாம் ‘தீபம்‘ இலக்கிய மாத இதழ் ஒன்று தொடங்க இருப்பதாகவும் அந்த இதழுக்குத் தங்களைப் போன்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்றும் எழுதியிருந்தார். தனி இதழ் 75 பைசா என்றும் ஆண்டு சந்தா ரூபாய் 7.50 என்றும் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 10 சந்தாக்கள் சேர்த்து அனுப்பினேன். முதல் இதழ் லதாவின் அட்டைப்படத்துடன் 80 பக்கங்களில் 75காசுகள் விலையில் வெளிவந்தது. முதல் இதழ் அனைவராலும் போற்றப்பட்டது.
இதழ் தொடங்கி ஆறாவது மாதம் மதுரையிலிருந்து வீட்டுக்கு (குறிஞ்சிப்பாடி) வந்த நான், சென்னைக்குப் புறப்பட்டு விட்டேன். சொந்த வேலை எதுவுமில்லை. நா.பா. வை நேரில் பார்த்து பேசி விட வேண்டும். தீபம் அலுவலகத்தையும் பார்த்து விட வேண்டும் என்கிற உந்துதல்தான். எழும்பூரில் இறங்கினேன். அண்ணாசாலையிலுள்ள அண்ணா சிலை சதுக்கத்தின் பக்கத்திலேயே இருந்த எல்லீஸ் ரோடின் உள்ளே முதல் சந்து நல்லத்தம்பிச் செட்டித் தெரு. அத்தெருவில் 6ஆம் எண் வீட்டின் உள்ளே பக்கவாட்டில் திரும்பினால் முதல் மாடியில் தீபம் அலுவலகம் இருந்தது. நான் சென்றபோது மணி காலை 9 இருக்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக ஒருவர் இயங்கிக் கொண்டிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் ‘ நான்தான் திருமலை. மேனேஜர்‘ என்றார். ‘ஆசிரியர் 10 மணிக்கு வருவார்‘ என்றார். பேக்கை வைத்து விட்டு குளியுங்கள். இங்கேயே பாத்ரூம் இருக்கிறது. எத்தனை நாள் தங்க போகிறீர்கள். ரூம் போட வேண்டாம். இங்கேயே தங்கிக் கொள்ளலாம்‘ என்றார்.
என் பேக்கை வைப்பதற்கு ஒரு அறையைக் காண்பித்தார். நான் குளித்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டு வருவதற்குள் டீ போட்டு வைத்திருந்தார். அருந்தினேன். அதற்குள் மணி பத்து ஆகிவிட்டது. ஆசிரியர் நா.பா. வந்தார். நான் ஒதுங்கி நின்று பார்த்தேன். மாடிப்படிக்கட்டில் அவர் மிகவும் வேகமாக ஏறி வந்தார். அவர் படிக்கட்டில் ஏறுவதும் இறங்குவதும் எப்போதும் வேகமாக தான். அவருடைய அறையில் போய் அமர்ந்தார். ‘திருமலை‘ என்றார். திருமலை கடிதங்களை எடுத்துச் சென்று மேசையின் மேல் வைத்தார். ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்த பின், மதுரையிலிருந்து செல்வராசு வந்திருக்கிறார் என்றதும் என்னை அறைக்கு அழைத்தார். ‘எங்கே இருக்கிறீர்கள் என்ன செய்கிறீர்கள்? தீபத்தைப் பற்றி நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்?‘ என்றெல்லாம் விசாரித்தார். நான் ‘சிறப்பாக போகிறது. ஒரு சிறந்த இலக்கிய இதழாக வருகிறது என்று சொல்கிறார்கள்‘ என்றேன்.
நான் அப்போதுதான் ‘வேலை நிமித்தமாக கேரள எல்லையோரம் பணி செய்து வருகிறேன். மலையாள மொழியையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.‘ என்றேன். ‘நல்லதாகப் போயிற்று. தீபத்துக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பார் என்று நம்புகிறேன்.‘ என்றார் நா.பா. சிரித்துக் கொண்டே. ‘அப்புறம் எவ்வளவு நாள் தங்குகிறீர்கள்? ஓட்டலில் ரூம் போட வேண்டாம். இங்கேயே தங்கி விடுங்கள். கைலாசம் இங்குதான் தங்குகிறார். திருமலையும் இருப்பார்.‘ என்று உரிமையுடன் பேசினார். எனக்கு மகிழ்ச்சி. மதியம் வரை இருந்தவர் புறப்பட்டு விட்டார். அன்றிரவே நானும் புறப்பட்டு விட்டேன். நா.பா. என்று அழைக்கப்படும் தீபம் நா. பார்த்தசாரதி அவர்களுடன் அதுதான் முதல் சந்திப்பு. ஆசிரியர் குழுவில் அப்போது சிலகாலம் திருப்பூர் கிருஷ்ணனும் இருந்தார். அதன்பின் நா.பா.வுடன் சந்தித்து அளாவளாவியது ஏராளம்
இந்நாள் வரையில் செல்வராசு, மீனாட்சி மைந்தன், ஏ.எஸ். ராஜு என்ற பெயர்களில் சொந்தப்படைப்பாக ஐந்து சிறுகதைகளும், ஒரு குறுநாவலும் எழுதியுள்ளேன். என் மொழியாக்கக் கட்டுரை முதன்முதலில் தீபத்தில் வெளிவந்தது. குறிஞ்சிவேலன் என்ற பெயரை தீபத்தில் இந்தக் கட்டுரை மூலம்தான் பதிவு செய்தேன். அந்த சமயத்தில் ‘மலையாள நாடு‘ வார இதழில் வி.பி.சி. நாயர், மலையாள எழுத்தாளர்களிடம் நேர்காணல்கள் கண்டு ஒவ்வொரு ஒணப்பண்டிகை மலர்களிலும் நான்கு அல்லது ஐந்து கட்டுரைகள் வெளிவந்தன. எட்டொன்பது கட்டுரைகள் வந்தபின், அக்கட்டுரைகளின் உண்மைத்தன்மையையும் வீரியத்தையும் உணர்ந்து இவற்றை தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு வி.பி.சி. நாயரிடம் அனுமதி கேட்டேன்.
எவ்வித மறுப்பும் சொல்லாமல் அனுமதி தந்தார். ‘தீபம்‘1976 பிப்ரவரி இதழிலிருந்து ‘ முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்‘ தொடராக வரத் தொடங்கியது. சுமார் இருபத்தி நான்கு மலையாளப் படைப்பாளிகளின் உள்ளும் புறமுமான வாழ்க்கை நிலையுடன் அவர்களின் படைப்புகளைப் பின்னிப் பிணைவதாக அந்த நேர்காணல்கள் இருந்தன. முதல் இரண்டு நேர்காணல்கள் வந்தவுடனேயே வாசகர்கள் மட்டுமல்லாமல் பல பெரும் எழுத்தாளர்களும் பாராட்டுக் கடிதங்கள் எழுதினார்கள். பலர் நேரிலும் பாராட்டியிருக்கிறார்கள். எனவே தீபம் நா.பா. அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதினார்:
முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்‘ தொடருக்கு பெரும் ஆதரவு வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்’. 1980 வரையில் அக்கட்டுரைகள் வந்தன. இந்த கால இடைவெளியில்தான் வல்லிக்கண்ணன் சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அந்நேரத்தில் தற்செயலாக ஒருநாள் வேறு வேலையாக சென்னைக்குச் சென்றேன். வழக்கம் போல தீபம் அலுவலகத்தில் தங்கினேன். அலுவலகம் வந்த நா.பா. என்னை அழைத்து,‘என்ன குறிஞ்சி எப்ப வந்தீங்க? என்ன வேலை? எந்த வேலையாக வெளியில் போனாலும் மாலை நான்கரை மணிக்கெல்லாம் இங்கு வந்து விடுங்கள். மாலை நாம ஒரு முக்கியமான இடத்துக்குப் போக வேண்டும். சரியா?‘ என்றார். ‘சொன்ன நேரத்துக்கு நான் வந்துடறேன் சார்,‘ என்றேன்.
நான்கு மணிக்கே என் சொந்த வேலைகளை முடித்து விட்டு வந்தேன். நா.பா. சரியாக நான்கரை மணிக்கு வந்தார். ‘குறிஞ்சி புறப்படுங்க‘ என்று கூறிவிட்டு முன்னால் சென்றார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன். கீழே அவருடைய கார் நின்றிருந்தது. காரை நெருங்கி கதவைத் திறந்து அமரச் சொல்லிவிட்டு காரை ஓட்டினார். சென்ட்ரல் அருகிலுள்ள சி.எல்.எஸ் என்று இலக்கிய ஆர்வலர்களால் அழைக்கப்படும் கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தின் எதிரில் கார் நின்றது. வாயிலில் ‘சாகித்திய அக்காதெமி விருது பெற்ற வல்லிக்கண்ணனுக்குப் பாராட்டு விழா’ என்னும் துணி பேனர்.
காரிலிருந்த இறங்கிய நா.பா. வுடன் நானும் சென்றேன். சி. எல். எஸ் செயலாளர் நா. பா. வை வரவேற்று அமர செய்தார். நான் அவரருகில் அமராமல் நின்றேன். அதற்குள் வல்லிக்கண்ணனும், தி.க.சி. யும் அருகில் வந்து நா.பா. விடம் பேச்சுக் கொடுத்தார்கள். அப்போது நா. பா. என்னை அவர்களிடம் சுட்டிக்காட்டி, ‘நீங்கள் இருவரும் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பீர்களே, அவர்தான் இவர்; குறிஞ்சிவேலன்,‘ என்றதும் வல்லிக்கண்ணன் கைகுலுக்கி மகிழ்ந்தார். தி.க.சி. என்னைத் தழுவிக் கொண்டு, ‘நாங்கள் பாமர வாசகர்களுக்காக எழுதுகிறோம். நீங்கள் எங்களைப் போன்றவர்களுக்காக எழுதுகிறீர்கள்‘ என்றார். அவர் குறிப்பிட்டது அப்போது தீபத்தில் தொடராக வந்து கொண்டிருந்த ‘முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்‘ தொடரைப் பற்றித்தான்.
தீபத்தில் இந்த நேர்காணல் தொடர் முடிந்ததும், மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் ‘ஐந்து சென்ட் நிலம்’ மற்றும் ‘சல்லி வேர்கள்‘ நாவல்கள் அடுத்தடுத்து தொடராக வெளிவந்தன. தீபம் மாத இதழில் வெளியான மூன்று தொடர்களும் தமிழின் தீவிர வாசகர்களிடமும் எழுத்தாளர்களிடமும் பரவலாக என்னை அறிமுகம் செய்தன. இந்தக் காலகட்டத்தில்தான் நா.பாவின் மூத்த பெண் பூமணியின் திருமணம், தி. நகர், மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. நானும் என் மனைவியும் சென்றிருந்தோம். எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தங்கள் மகளைப் போலவே என் மனைவியையும் நா.பா.வின் குடும்பத்தினர் வரவேற்றார்கள். எங்கள் இருவருக்கும் புத்தாடை வாங்கித்தந்து சிறப்பித்தார்கள். அந்த மாபெரும் மனித நேசிப்பாளரை மறக்கவே முடியாது.

அதன் பிறகு மூன்று முறை என் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவருக்கு விருந்து உபசரிப்புகள் பிடிக்காது. ஆனால், கண்டிப்பாக கீரை மசியல் இருக்க வேண்டும். முதன் முறையாக என்னுடைய நூல் வெளியீட்டு விழாவுக்கும், அடுத்த முறை நெய்வேலிக்கு ஒரு பள்ளி விழாவுக்கும் வந்திருந்தார். மூன்றாவது முறை அவர் வந்தது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிய ஜாபர் அலி என்கிற நண்பரின் திருமணத்திற்கு. அவர் தீபம் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லையென்றாலும் இந்து ஆர். நடராஜனின் நெருங்கிய நண்பர். அந்த வகையில் நெய்வேலியைச் சேர்ந்த ஏழெட்டு பேர்கள் எங்களுக்கு நண்பர்களானார்கள். அந்த நட்பின் காரணமாகத்தான் நா.பா. வும் வந்திருந்தார். முதல்நாள் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டு எங்கள் ஊர் பயணியர் விடுதியில் தங்கினார். மறுநாள் நாங்கள் ஏழெட்டு பேர்கள் இரண்டு கார்களில் ஜாபர் அலியின் சொந்த ஊருக்குப் புறப்பட்டோம். அந்த திருமணம் அவருடைய வீட்டில்தான் நடந்தது. நண்பர்களாகிய நாங்கள் தோட்டத்தில் பிரியாணிக்கு ‘தம்‘ போட்டுக் கொண்டிருந்த இடத்துக்குப் போனோம். நா.பா.வை திருமணக் கூடத்திலேயே இருக்குமாறு சொன்னோம். அவர் பிராமணர் என்பதால். ஆனால், நா.பா. எங்களுடனேயே பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கு வந்து கவனமாக நோட்டமிட்டார். பின்புதான் தெரிந்தது, தன் கதையொன்றில் அக்காட்சியை அப்படியே பதிவிட்டிருந்தார்.
நா.பா. நட்புக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். தம்மை பெரிய எழுத்தாளன் என்றெல்லாம் நினைக்க மாட்டார். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி.
இந்து ஆர். நடராஜனுக்கு கடலூரிலிருந்து சென்னைக்கு மாறுதல். சென்னை மாம்பலம் சி. ஐ.டி நகரில் வீடு பார்க்கப்பட்டது. நா.பா. தான் வீடு பார்த்துத் தந்தார். நடராஜனின் குடும்பத்துடன் நானும் சென்றேன். நாங்கள் போய் சேர்வதற்கு அந்தியாகி விட்டது. மாலை ஏழு மணி. வீட்டுச் சாமான்கள் இறக்கும் இடத்திற்கு நா.பா. வந்து விட்டார். சாமான்களை இறக்க ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. நானும் நடராஜனும் அவர் மனைவியும் சேர்ந்துதான் இறக்கினோம். இறுதியில் அலமாரியை இறக்கும்போது நா.பா. வும் ஒரு பக்கமாக பிடித்து இறக்கி வீட்டுக்குள் கொண்டு வந்து வைக்க உதவினார். அந்த நிகழ்ச்சி மறக்க முடியாத அனுபவம்.
தீபம் இதழை தவறாமல் கொண்டு வருவதற்கு கடைசி பத்தாண்டுகள்- அதாவது 1980க்கு பின்பு பொருளாதார வகையில் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. அதனால் அடிக்கடி மேடைப்பேச்சுக்கோ பட்டிமன்றத்துக்கோ புறப்பட்டு விடுவார். அதில் வரும் வருமானத்தில் தான் இதழ் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. ஒருமுறை தஞ்சாவூரில் சொற்பொழிவு. அதற்காக இவர் செல்ல வேண்டும். நான் அப்போது நா.பா. வைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். இரவு எட்டு மணி இருக்கும். அவர் வீட்டிலேயே இருவரும் சாப்பிட்டு விட்டு அவரை பஸ்ஸில் ஏற்றுவதற்காக வீட்டிலிருந்து மாம்பலம் பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்றோம். போகும் வழியில் அவருக்கு மூச்சு வாங்கியது. சரியாக நடக்க முடியவில்லை. பயணத்தை தவிர்த்து விடுங்கள் என்றேன். கேட்கவில்லை.எப்படியோ சென்று திரும்பி விட்டார்.
இறுதி நாட்களில் உடம்பை அவர் சரியாக கவனிக்கவில்லை. வெளிநாட்டுக்குப் போய் திரும்பும்போது விமான நிலையத்திலேயே மார்புவலி ஏற்பட்டு விட்டது. வரும் வழியிலேயே பாலாஜி மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள். இதைக் கேள்விப்பட்டு சென்னைக்குச் சென்று அவரை மருத்துவமனையில் பார்த்தேன். உடல்நலம் தேறியிருந்தார். ஒரு வாரத்தில் நா.பா. மறைந்து விட்டார் என்ற வானொலி செய்தி கேட்டு சென்னைக்குச் சென்றேன். அந்த ஆஜானுபாகுவான ஆள் அசையாமல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் என ஏராளமானோர் வந்து சென்றார்கள் ஆனால், அன்று மாலையில் நடந்த இறுதி ஊர்வலத்துக்கு பத்துப் பதினைந்து பேர்கள் மட்டும்தான் வந்திருந்தார்கள். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், என் இலக்கிய வழிகாட்டியுமான அந்த உயர்ந்த மனிதர் 1987 டிசம்பர் மாதத்தில் இப்பூவுலகை விட்டு மறைந்தார். அவருடைய லட்சிய இலக்கிய இதழும் நின்று விட்டது.
எஸ். கே. பொற்றேகாட் முதல் இன்றைய எழுத்தாளர் ட்டி.டி. ராமகிருஷ்ணன் வரை மலையாள இலக்கியத்தின் மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். இந்திய இலக்கியத்தில் மலையாள இலக்கியத்திற்கான இடம் என்ன?
தகழி சிவசங்கர பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே. பொற்றக்காட், கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி, காரூர் நீலகண்ட பிள்ளை, வெட்டூர் ராமன் நாயர், போஞ்ஞிக்கர ராஃபி, ஈ.எம். கோவூர், லலிதாம்பிகா அந்தர்ஜனம் ஆகியோர் சமகால மலையாள இலக்கிய உலகின் முதல் தலைமுறையினர். இவர்கள் மக்கள் வாழ்க்கையின் உண்மை நிலையை கற்பனை கலந்து யதார்த்த இலக்கியம் படைத்தவர்கள்.
இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இ. வாசு, டி. பத்மநாபன், எம்.டி. வாசுதேவன் நாயர், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், ஓ.வி. விஜயன், காக்கநாடன், எம். முகுந்தன், சக்கரியா, சேது, பி. வத்ஸலா, புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம். சுகுமாரன், சாரா ஜோசப், வைசாகன் போன்றவர்கள் நனவோடை உத்திகளிலும் மாய யதார்த்தம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கிய வகைமைகளிலும் மலையாள இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள். இவர்களுக்கு அடுத்து வந்த என். எஸ். மாதவன், சி.வி. பாலகிருஷ்ணன், என். பிரபாகரன், வி.பி, சிவகுமார், எம். ராஜீவ் குமார், ட்டி.டி. ராமகிருஷ்ணன், சி. எஸ், சந்திரிகா, சந்திரமதி போன்றவர்கள் இந்தியா மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை தங்கள் கற்பனைகளோடு கலந்து மலையாள மொழியில் இலக்கியம் படைக்கிறார்கள். இவ்வாறு காலத்துக்கு தகுத்தாற்போல் தங்கள் கற்பனை போக்கையும் வடிவத்தையும் தங்கள் எழுத்துகளில் மாற்றிக் கொண்டு வருவதால், இந்திய இலக்கியத்தின் சமகால படைப்புகளில் வங்காள மொழிக்கு அடுத்து மலையாள மொழி எழுத்துகள் இடம் பிடித்துள்ளன என்பது என் அனுமானம்.
மலையாளத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தவர்களின் வரிசையில் சாகித்ய அகாதெமியின் விருதை முதலில் பெற்றவர் நீங்கள். அந்த அங்கீகாரத்தை எப்படி உணர்ந்தீர்கள்?
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அக்காதெமி விருது 1989 ஆம் ஆண்டு முதல்தான் தொடங்கினார்கள். அப்போது அந்த விருதுக்கான பரிசுத் தொகை ரூபாய் 10000. தமிழில் மொழிபெயர்ப்புக்கான விருதை 1989 ஆம் ஆண்டில் பெற்றவர் பன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாத ராஜா. ‘ஆமுக்த மால்யதா‘ என்றும் பெயரில் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் எழுதிய நூலை தமிழாக்கம் செய்தமைக்காக விருது வழங்கப்பட்டது. 1990 இல் சிவராம கரந்த் கன்னடத்தில் எழுதிய (மரலி மன்னிக்கே) மண்ணும் மனிதரும் என்ற நாவல் மொழியாக்கத்திற்காக 1990இல் டி.பி. சித்தலிங்கைய்யாவும், வி.எஸ். காண்டேகர் மராத்தியில் எழுதிய ‘யயாதி’ என்ற நாவல் மொழியாக்கத்திற்காக கா. ஸ்ரீ.ஸ்ரீ.யும் , ‘மெளன ஓலம்‘ என்ற கன்னட நாவலை தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக கே. வெங்கடாசலமும், 1993இல் ‘இந்திய மொழி நாடகங்கள்‘ என்ற நூலின் தமிழாக்கத்திற்காக சரஸ்வதி ராம்னாத்தும்,1994 இல் ‘விஷக்கன்னி‘ என்ற மலையாள நாவலின் மொழியாக்கத்திற்காக நானும் மொழியாக்க விருதுகளைப் பெற்றோம். நான் சாகித்திய அக்காதெமி விருதைப் பெற்றபோது நடந்த சுவாரசியமான செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

1994 டிசம்பர் 15 ஆம் தேதி தில்லியில் நடந்த சாகித்திய அக்காதெமி மீட்டிங்கில் மொழியாக்க விருதுகளையும், படைப்பாக்க விருதுகளையும் அறிவித்துள்ளார்கள். இச்செய்தி அன்று வானொலி மூலமாக அன்று மாலை ஒலிபரப்பாகி உள்ளது. இச்செய்தியை நான் கேட்கவில்லை. பத்திரிகை ஊடகங்கள் மற்றும் தொடர்பு சாதனங்கள் சார்ந்தவர்கள் யாரும் என்னை அணுகவில்லை. நான் வழக்கம்போல் மறுநாள் காலையில் அலுவலகம் போகும் வழியில் தமிழ் தினசரியான ‘தினமணி‘யும், ஆங்கில தினசரியான ‘இந்து‘வையும் வாங்கிப் பையில் வைத்துக் கொண்டு பணிக்குப் புறப்பட்டேன். எங்கள் வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் நான் பணியாற்றும் நெய்வேலிக்கு அருகிலுள்ள வடக்குத்து கிராமம் இருந்தது.
நான் பணியாற்றும் கால்நடை கிளை மருந்தகத்தில் எட்டு மணிக்குப் போய்விட்டேன். பதினொரு மணிக்கு விரைவில் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்து விட்டு கைகால்களை கழுவிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தேன். முதலில் தினமணியைத் தான் படித்தேன். என் எதிரில் ஒரு விவசாயியும் நாற்காலியில் அமர்ந்து தினமணியின் ஒரு பக்கத்தை எழுத்துக் கூட்டி படித்துக் கொண்டிருந்தார். தினமணியின் ஐந்தாம் பக்கம் என்று நினைவு. ‘பொன்னீலனுக்கு சாகித்திய அக்காதெமி ‘ விருது என்று கொட்டை எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது. குறிஞ்சி வேலனுக்கு ‘விஷக்கன்னி’ என்ற மலையாள நாவலை மொழியாக்கம் செய்தமைக்கு மொழிபெயர்ப்பு விருது என்று இருந்தது. அந்நேரத்தில் எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியை பகிர்ந்து கொள்ள விருதைப் பற்றித் தெரிந்த நபர்கள் அருகில் யாருமில்லை. ஆனால், சிசிச்சைக்காக மாட்டை ஓட்டி வந்த விவசாயி மட்டும் அமர்ந்திருந்தார்.
நான் சட்டென்று எழுந்தேன். எதிரில் அமர்ந்து எழுத்து கூட்டிப் படித்துக் கொண்டிருந்த விவசாயியிடம், ‘கையை நீட்டுங்கள்‘ என்று கூறி அவர் கையைப் பிடித்து இரண்டு நிமிடங்கள் வரை குலுக்கினேன். அந்த விவசாயியோ டாக்டர் இவ்வளவு நேரம் நன்றாகத்தானே இருந்தார். இது என்ன இப்படியெல்லாம் குதிக்கிறாரே என்று நினைத்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். பிறகு நாற்காலியில் அமர்ந்து விருது கிடைத்த விவரத்தை கூறினேன். அவர், ‘அப்படியா?‘ என்று விட்டேற்றியாக மொழிந்தார். விருதைப் பற்றி அவருக்குத் தெரியவில்லை. அதனால் நானே அவரிடம், ‘ஐயா, புத்தகம் எழுதுகிறவர்களுக்கு இது மிகப் பெரிய விருது‘ என்றேன். அப்போதும் அவர், ‘அப்படியா‘என்றார். அதன் பிறகு ‘இந்த விருதுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு கொடுப்பார்கள்‘ என்றேன். அப்போது அவர் சட்டென்று எழுந்து நான் செய்ததைப் போல என் கையைக் குலுக்கினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த கிராமம் முழுவதும் இந்தச் செய்தியைப் பரப்பி விட்டார்.
மணி பனிரெண்டு ஆயிற்று. மருத்துவமனையை மூடி விட்டு (எல்லா வேலைகளையும் நாங்களேதான் செய்ய வேண்டும் – ஓராசிரியர் பள்ளியைப் போல). வீட்டுக்குப் புறப்பட்டேன். எப்படியும் பத்திரிகை நிருபர்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள். வானொலி நிலையத்தார் வந்திருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது போன்றவையெல்லாம் கற்பனையில் மிதந்தது. வேகமாக சைக்கிளை மிதித்தேன். வீட்டை அடைந்ததும் எல்லோரும் வழக்கம் போல அமைதியாகத்தான் இருந்தார்கள். சிறிது நேரத்தில் தந்தி பையன் தந்தி ஓன்றை நீட்டினான். வாங்கி பார்த்தேன். ‘சுபமங்களா‘ ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். ஒரு மணிநேரம் கழித்து சாகித்திய அக்காதெமியின் தந்தி வந்தது. அதன்பிறகுதான் வீட்டிலுள்ள அனைவரிடமும் சொன்னேன். அப்பா அன்றுதான் மகிழ்ச்சியடைந்தார். காரணம், நான் அதுவரையில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் புத்தகங்களாக வாங்கிச் செலவழிக்கிறேன் என்கிற வருத்தம் அவருக்கு, இப்பரிசைப் பற்றி விளக்கிவிட்டு பணமும் பத்தாயிரம் கிடைக்கும் என்று சொன்ன பின்புதான் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, இந்தப் பரிசை வாங்குவதற்காக தில்லிக்குப் போய் வரவேண்டும் என்று சொன்னதும் மேலும் மகிழ்ந்தார். என் தாயார் அந்த வருடம் தவறினார். என்னை வளர்த்த என் பெரிய தாயாருக்கு இதை எப்படிச் சொன்னாலும் புரியாது. மனைவியும் பிள்ளைகளும் என் மகிழ்ச்சியில் முழுமையாகப் பங்கேற்றார்கள்.
எந்த ஊடகமும் என்னை சந்திக்கவில்லை. நேர்காணலும் செய்யவில்லை. நான் பொன்னீலனுக்கு மட்டும் போன் செய்து அவருக்கு வாழ்த்து கூறிவிட்டு, ‘தில்லி போகும்போது சேர்ந்தே போகலாமா‘ என்று கேட்டேன். ‘போகலாம், நான் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து போகப் போகிறேன்.‘ என்றார். ‘எந்த தேதி‘ என்று அவரிடமே கேட்டேன். பிப்ரவரி மாதத்தில் ஒரு தேதியைச் சொன்னார். எனக்கு அதுவரையில் அழைப்பு வரவில்லை. அதன்பின், சென்னை சாகித்திய அக்காதெமிக்கு கடிதம் எழுதிக் கேட்டபோது, படைப்பிலக்கியத்துக்கு பிப்ரவரி மாதத்திலும், மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு ஆகஸ்ட் மாதத்திலும் பரிசளிப்பு விழா என்றார்கள். சாகித்திய அக்காதெமி விருது பெற்ற செய்தியை சுபமங்களா, புதிய பார்வை, ஆனந்த விகடன் இதழ்கள் மட்டுமே பிரசுரித்தன. வேறு யாரும் பிரசுரிக்கவில்லை. 1995 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னை சென்ட்ரலிலிருந்து நானும் என் மனைவியும் ரயிலில் புறப்பட்டோம். என் மனைவி விமானத்தில் செல்ல மறுத்துவிட்டார். 14 ஆம் தேதி தில்லியில் இறங்கினோம். சாகித்திய அக்காதெமியினர் இன்டர் நேஷனல் ஓட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல கன்னட எழுத்தாளர் யு. ஆர். ஆனந்தமூர்த்தி தான் அப்போதைய தலைவர். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் நீண்டநாள் பழகியது போல் பேசினார். என் மனைவியிடம் ‘என் மனைவியும் தமிழ் பேசுவார்‘ என்று சொல்லி வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் தலைநகர் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு விழா. மேலும் மூன்று நாட்கள் தங்கி, பணிக்கர் டிராவல்ஸில் ரிஷிகேஷ், ஹரித்துவார் ஒருநாளும்- மதுரா, ஆக்ரா, பதேபூர் சிக்ரி ஒருநாளும் பார்த்தோம். மூன்றாம் நாள் தில்லியைப் பார்த்து விட்டு நான்காம் நாள் ரயிலில் சென்னைக்குத் திரும்பினோம்.
இந்திய மொழிகளிலேயே முதல்முறையாக மொழியாக்கப் படைப்புகளுக்காக மட்டும் வெளிவரும் ‘திசைஎட்டும்‘என்ற காலாண்டிதழை கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வருகிறீர்கள். இந்த இதழின் சாதனைகளையும் நோக்கங்களையும் பகிருங்கள்.
தேசிய ஒருமைப்பாட்டைப் பேணவும், இளம் மொழியாக்கப் படைப்பாளிகளை உருவாக்கவும், இந்திய மற்றும் உலகின் நல்ல பயனுள்ள இலக்கியங்களைத் தமிழில் கொணரவும், அதேபோல் தமிழின் சிறந்த படைப்புகளை பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லவும் தோன்றியதுதான் ‘திசை எட்டும்‘ மொழியாக்கக் காலாண்டிதழ். 2003 ஜூலை மாதத்தில் தோன்றிய இவ்விதழ் இதுவரையில் 64இதழ்களாக மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இதழும் ஒரு புத்தகம் என்று சொல்லும் படியான அளவில் வெளிவந்துள்ளது.
மேலும், மொழியாக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வெளிவரும் இவ்விதழின் தனிச்சிறப்பு, இந்திய அளவில் மொழியாக்கத்திற்கென்று வெளியிடப்படும் ஒரே பிராந்திய மொழி இதழுமாகும். இவ்விதழ் மூலம் இதுவரையில் நோபல் இலக்கியச் சிறப்பிதழ், புக்கர் இலக்கியச் சிறப்பிதழ், சர்வதேச இலக்கியச் சிறப்பிதழ், ஜப்பானிய இலகியச் சிறப்பிதழ், ஸ்பானிஷ் இலக்கியச் சிறப்பிதழ், உலக வாய்மொழி இலக்கியச் சிறப்பிதழ், ஸ்கேண்டி நேவியன் இலக்கியச் சிறப்பிதழ், உலக அறிவியல் இலக்கியச் சிறப்பிதழ், கொரியமொழி இலக்கியச் சிறப்பிதழ், அரபி இலக்கியச் சிறப்பிதழ், உலகக் குழந்தை இலக்கியச் சிறப்பிதழ், உலகச் சுற்றுச்சூழல் இலக்கியச் சிறப்பிதழ், உலக ஹைக்கூ சிறப்பிதழ் என்னும் உலகளாவிய இலக்கியச் சிறப்பிதழ்களுடன் இந்திய மொழிகளான மைதிலி மொழி இலக்கியம், தெலுங்கு மொழி இலக்கியம், வடகிழக்கிந்திய மொழிகள் இலக்கியம், கன்னட மொழி இலக்கியம், இந்தோ-ஆங்கில இலக்கியம், கொங்கணி மொழி இலக்கியம், குஜராத்தி மொழி இலக்கியம், பஞ்சாபி மொழி இலக்கியம் எனப் பல சிறப்பிதழ்களையும் நண்பர்களின் தன்னலமற்ற மொழியாக்க உதவியுடன் கொணரப்பட்டுள்ளன. இவ்விதழின் சிறப்புக்கு பாராட்டு அளிக்கும் விதமாக 2017 மே மாதம் முதல் இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழுவினரால் ஓர் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் இதழாக அறிவித்துள்ளது.
இவை மட்டுமல்ல, மொழியாக்கப் படைப்பாளிகள் என்றாலே இரண்டாம் இடத்தில் வைத்துப் பார்க்கும் இந்திய இலக்கிய உலகில், அவர்களும் முதல்நிலைப் படைப்பாளிகள்தான் என்று அனைவரும் உணரவேண்டும் என்னும் உயரிய குறிக்கோளோடு தொடங்கப்பட்டதுதான் ‘நல்லி- திசைஎட்டும்‘ மொழியாக்க இலக்கிய விருதாகும். சென்னை நல்லி சின்னசாமி செட்டி நிறுவன உரிமையாளர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் பொருளாதார உதவியுடன் 2004-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவரும் இவ்விருதுகள் ஒரு விருதுக்கு பரிசுத்தொகை ரூ.15000/- எனத் தொடங்கி, இதுவரையில் (2019 வரை) 146 மொழியாக்கப் படைப்பாளிகள் நல்லி- திசைஎட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளனர். 2011-ம் ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மொழியாக்கத் துறையில் ஊக்கமளிக்கும் விதமாக ரூபாய் 50000/- ஒதுக்கி பரிசுகளாக அளித்து வருகிறோம். ஒவ்வொரு விருதாளருக்கும் அவர்களின் சொந்த ஊரிலிருந்து விழா நடைபெறும் ஊருக்கு வந்து செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத் தொகையும் அவர்கள் விழா நாட்களில் தங்குவதற்கு வசதியாக உயர்தரமான ஓட்டலில் இடவசதி ஏற்பாடும் செய்யப்படுகிறது. தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த மீனாட்சிப்பேட்டை எனும் ஒரு குக்கிராமத்தில் வசித்துக்கொண்டு, ஒரு கிராமத்திலிருந்தும் ஓர் இதழை வெளியிட முடியும் என்னும் நம்பிக்கையுடன் இதுவரையில் 64 இதழ்கள் தொடர்ந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
மகாபாரத கதையை அடிப்படையாக வைத்து, பீமனை மையப்பாத்திரமாக்கி எம்.டி. வாசுதேவன் நாயரால் எழுதப்பட்ட ‘இரண்டாம் இடம்‘ என்ற புகழ்பெற்ற நாவலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். மிகச் சிறந்த இந்திய நாவல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள அந்த நாவல் மொழியாக்கத்தைப் பற்றி குறிப்பிட முடியுமா?
இரண்டாம் இடம் (ரண்டாமூழம்) கலாகெளமுதி வார இதழில் தொடராக வரும் போதே நானும் தொடர்ந்து படித்து வந்தேன். இந்த நாவல் பற்றி கலாகெளமுதியில் விளம்பரம் வந்தபோது நான் அந்தளவுக்கு அதில் ஈர்ப்புக் கொள்ளவில்லை. தொடர் ஆரம்பித்து முதல் அத்தியாயத்தை படித்து முடித்ததும் என்னால் வாரம் ஒருமுறைதான் ஒரு அத்தியாயம் வரும் என்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பரபரவென்று மறுவாரம் எப்போது வரும் என்று காத்திருந்து பதினேழு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் நெய்வேலிக்குச் சென்று இதழை வாங்கிப் படித்த பின்புதான், மனம் ஒரு நிலைக்கு வரும். நாவல் முடிந்தது. நூலாகவும் வந்தது. எத்தனை முறை அந்த நாவலை படித்திருப்பேன் என்று எனக்கே நினைவில்லை. அதன் பின்புதான் மொழியாக்கம் செய்யவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அனுமதிக்காக கடிதம் எழுதினேன். அப்போது அவரிடமிருந்து பதில் கடிதம் வந்தது:
‘தங்களுடைய மொழிபெயர்ப்பை நான் இதுவரையில் பார்த்ததில்லை. கேள்விபட்டிருக்கிறேன். தங்கள் மொழிபெயர்ப்பை நான் பார்க்க வேண்டும். அதன்பின்தான் ‘ரண்டாமூழம்‘ நாவலுக்கு அனுமதி. அதனால், நான் எழுதி இப்போது வெளிவந்திருக்கும் ‘வானப்பிரஸ்தம்‘ கதையை மொழியாக்கம் செய்து அனுப்புங்கள். அதன்பின் அதைப் பார்த்து விட்டு அனுமதி தருகிறேன்.‘ என்று கூறிவிட்டார்.
உடனே ‘வானப்பிரஸ்தம்‘ கதையை மொழிபெயர்த்தேன் கோமல் சுவாமி நாதன் அவர்கள் அக்கதையை ‘சுபமங்களா’ இதழில் வெளியிட்டார். அந்த இதழை அனுப்பி வைத்து மீண்டும் ‘ரண்டாமூழாம்‘ நாவலுக்கு அனுமதி கேட்டேன். மூன்றே நாட்களில் அனுமதி கிடைத்தது. இரண்டடிரண்டு அத்தியாயங்களாக மொழிபெயர்த்து எனது நண்பரும் மலையாள நாவலாசிரியருமான கே. வேணுகோபாலிடம் படித்துக் காண்பிப்பேன். எங்கோ ஓரிரு இடங்களில் வார்த்தைகளை மாற்றிப் போட்டால் சிறப்பாக இருக்கும் என்பார். நாவல் மொழியாக்கம் முடியும் தருவாயில் சாகித்திய அக்காதெமி இந்நூலை கிளாசிக் வரிசையில் எடுத்துக் கொண்டு பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யத் துவங்கினார்கள்.
எம்.டி. அப்போது சாகித்திய அக்காதெமிக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘மற்ற மொழிக்கு யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள். தமிழில் நான் ஏற்கனவே குறிஞ்சிவேலனுக்கு அனுமதி கொடுத்து அவரும் மொழியாக்கத்தை முடித்து விட்டதால் அவருக்கே ஒப்பந்தம் போடுங்கள்’ என்று எழுதி விட்டார். ஒப்பந்தம் போட்ட பின்பும் யாரோ ஒருவர் தமிழாக்கும் உரிமையைக் கேட்டபோது சாகித்திய அக்காதெமி மறுத்து விட்டார்கள். மகாபாரதத்திலுள்ள மாயைகளை உடைத்து, யதார்த்த மனிதர்களை பீமனின் பார்வையில் கதை சொல்லலாக எழுதியிருந்ததை தமிழ் இலக்கிய உலகம் இருகரம் ஏந்தி பெற்றுக் கொண்டது. என் மொழியாக்கத்திலேயே ‘இரண்டாம் இடம்‘ நான்கு பதிப்புகளுக்கு மேல் கண்டு விற்பனையிலும் சாதனை புரிந்துள்ளது.
டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுடன் இணைத்து ஆண்டுதோறும் தமிழிலிருந்து பிறமொழிகளிலும், பிறமொழிகளிலிருந்து தமிழிலும் வெளியாகும் சிறந்த மொழியாக்க நூல்களைக் கண்டறிந்து அந்த மொழிபெயர்ப்பளார்களைப் பாராட்டி, விருது வழங்கி கெளரவித்து வருகிறீர்கள் அப்பணியைப் பற்றி சொல்லுங்கள்.
திசை எட்டும் இதழ் 2003 ஜூனில் தொடங்கப்பட்டது. முதலாண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு ஆரம்பிக்கும்போது, மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு விருது வழங்க வேண்டும் என்பதும் அவ்விருது கொஞ்சம் சொல்லும்படியான பரிசுத்தொகையுடன் இருக்க வேண்டும் என்பதும் ஆசிரியர் மற்றும் ஆலோசனைக்குழு கூடி முடிவு செய்தோம். ரூபாய் பத்தாயிரம் பரிசுத்தொகையை முடிவு செய்து விழா ஏற்பாடுகளை செய்தோம். அதுவரையில் ஐயா நல்லி செட்டியார் அவர்களை நான் அணுகவில்லை. அப்போதுதான் எங்கள் ஆலோசனைக்குழுவின் தலைவராக இந்து ஆர். நடராஜன் அவர்கள், தாம் செட்டியார் அவர்களை அணுகி பரிசுத்தொகைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார். அதன்படி செய்தும் விட்டார். செட்டியார் அவர்களிடமிருந்து பரிசுத்தொகையும் கிடைத்தது. விழா சிறப்பாக நடந்து முடிந்தது. முதன் முதலாக கல்கத்தா சு. கிருஷ்ண மூர்த்திக்கு (நீலகண்ட பறவையைத் தேடி நாவலை மொழியாக்கம் செய்தவர்) விருது வழங்கப்பட்டது.

மறுவருடம் இரண்டு விருதுகள் என்று தீர்மானித்தோம். ஒன்று பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல் ஒன்றுக்கும், இன்னொன்று தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல் ஒன்றுக்குமாக முடிவு செய்து நல்லி செட்டியார் அவர்களிடம் அணுகினோம். எவ்வித மறுப்பும் சொல்லாமல் அப்பெருந்தகை ஏற்றுக் கொண்டார். இந்த விழா புதுச்சேரியில் நடந்தது. இளம்பாரதியும் ஹெச். பாலசுப்ரமணியமும் விருதைப் பெற்றுக் கொண்டார்கள். மூன்றாம் வருடம் அதாவது 2006 ல் பரிசுகள் நான்காயிற்று. செட்டியார் அவர்களை அணுகியபோது ‘விழாவை ஏன் வெளியூர்களில் வைத்துச் சிரமப்படுகிறீர்கள்? சென்னையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அனைத்துச் செலவுகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்‘, என்றார் அந்த இலக்கிய வள்ளல் பெருந்தகை. அதன்பின் அவர் குறிப்பிடும் இடத்திலேயே விழாவை வைத்துக் கொள்கிறோம். விழா செலவு மற்றும் விருது செலவுகளை அவர்தான் செய்கிறார்.
இதுவரையில் 146 பேர்களுக்கு மொழியாக்க விருதுகளும், சாதனையாளர்கள் விருதுகளுமாக வழங்கியுள்ளோம். இதில் எங்கள் குழு பெருமைப்படும் விஷயம் யாருக்கு விருது கொடுக்க வேண்டும் யாருக்குக் கொடுக்கக் கூடாது என்னும் விஷயத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் செலவு செய்யும் நல்லி செட்டியார் அவர்கள் ஈடுபட்டதே கிடையாது. நாங்களும் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி வேண்டப்பட்டவர்களுக்கு விருது கொடுப்பதில்லை. தேர்வுக்குழுவை அமைக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்து விடுவார்கள். நான்தான் ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று பேர்கள் வீதம் தேர்வுக்குழுவை அமைப்பேன். அவர்கள் அளிக்கும் மதிப்பெண்களை வைத்துத்தான் ஆசிரியர் குழு கூடி விருது பெறுபவர்களைத் தேர்வு செய்யும். இந்தத் தேர்வு முடிந்த பிறகுதான், எந்தெந்த பிரிவுகளில் யார்யார் தேர்வுக்குழுவில் இருந்தார்கள் என்பது ஆசிரியர் குழுவுக்கே தெரியும். எனவே, நல்லி திசை எட்டும் விருது என்பது மதிப்புமிக்கதாக பலராலும் போற்றப்படுகிறது.
மொழியாக்கத்தில் சாதனை படைத்தவர்களுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. எந்தத் தகுதியின் அடிப்படையில் அத்தகையவர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? முக்கிய விருதாளர்களையும் அவர்களின் சாதனைகளையும் குறிப்பிட முடியுமா?
தமிழகத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் எவ்வித அங்கீகாரமும் இல்லாமல்தான் தங்கள் மொழியாக்கப் பணியை அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செய்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மரியாதையுடன் கூடிய ஒரு கெளரவிப்பு என்கிற முறையில் தான் இந்தச் சாதனையாளர்கள் விருதை உருவாக்கினோம். இந்த வகையில் நா. தர்மராஜன், செளரி, டாக்டர் என். சுந்தரம், மயிலை பாலு, சேஷ நாராயணா, ரவீந்திரநாத் சேத், உள்ளூர் பரமேஸ்வரன் போன்றவர்கள் வாழ்நாள் சாதனை விருது பெற்றுள்ளார்கள். இவர்களில் நா. தர்மராஜன் நூற்றுக்கு மே;ற்பட்ட நூல்களை ஆங்கிலம் வழியாக மொழியாக்கம் செய்தவர். செளரி தமிழிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்துள்ளார். மயிலை பாலு ஆங்கிலத்திலிருந்து பல அரிய நூல்களையும், ரவீந்திரநாத் சேத் தமிழிலிருந்து இந்திக்கு பல பழம்பெரும் நூல்களையும், உள்ளூர் பரமேஸ்வரன், கே.ஜி. சந்திர சேகரன் நாயர் ஆகியோர் தமிழிலிருந்து மலையாள மொழிக்கு ஏராளமான நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
ஆறாம் வகுப்பு சிறுமியின் மொழியாக்கத் திறமையைக் கண்டறிந்து விருது வழங்கியதாக அறிந்தேன். அந்த விவரங்களைத் கூறுங்கள்.
ஆறாம் வகுப்பு சிறுமியல்ல. அவள் பெயர் சைதன்யா. நான்காம் வகுப்பு சிறுமி. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு விட்டாள் என்று அவளுடைய தந்தை கூறினார்.
எஸ். ராமகிருஷ்ணனின் ‘கால் முளைத்த கதைகள்‘என்னும் சிறார்களுக்கான கதைகளைத்தான் ‘Nothing but water‘ என்னும் தலைப்பில் அச்சிறுமி மொழிபெயர்த்திருந்தாள். மொழியாக்கம் சுமாராக இருந்தாலும் மொழியாக்க உணர்வைத் தூண்டி விட வேண்டும் என்ற உந்துதலால், அவளை நேரில் வரவழைத்து பேச வேண்டும் என்று நானும் இந்து ஆர். நடராஜனும் முடிவு செய்தோம். அதன் பேரில் அச்சிறுமியின் தந்தையிடம் ‘தாங்கள் மகளை அழைத்துக் கொண்டு நல்லி கடையிலுள்ள அலுவலகத்திற்கு வர முடியுமா?‘ என்று கேட்டோம். அவரும் ‘ஒன்றும் சங்கடமில்லை‘வருகிறோம் என்று கூறிவிட்டார். சரி, வாருங்கள் என்றோம். மகளை அழைத்துக் கொண்டு அவரும் வந்து விட்டார். அன்று சனிக்கிழமை. தினமலர் சிறுவர் மலரிலிருந்த ஒரு சிறார் கதையைக் கொடுத்து, ‘இந்தக் கதையை இங்கேயே உன்னால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியுமா?‘ என்று கேட்டோம், ஓகே அங்கிள் செய்யலாமே‘ என்றாள். அந்நொடியில் அக்குழந்தையின் தன்னம்பிக்கை கண்களில் ஒளிர்ந்தது, தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற முனைப்பு வெளிப்பட்டது.
நாங்கள் அந்த சிறுவர் மலரையும் வெள்ளைத்தாள்களையும் தமிழ்-ஆங்கில அகராதியையும் அவளிடம் கொடுத்தோம். ‘இது வேண்டாம் அங்கிள்‘ என்று கூறி அகராதியை எங்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள். பேப்பரையும் சிறுவர் மலரையும் எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றாள். அதற்குள், நாங்களும் அவளுடைய தந்தையும் எங்கள் அறையில் உட்கார்ந்து மொழிபெயர்ப்பில் அவளுக்கு ஏற்பட்ட ஆர்வத்தையும் அதற்கு உறுதுணையாக அவர்களின் குடும்பத்தினர் எப்படி ஊக்குவிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு முப்பது நிமிடத்தில் மொழியாக்கத்தைக் கொண்டு வந்து தந்தாள் சிறுமி. படித்துப் பார்த்தோம். அசந்து விட்டோம். அகராதி இல்லாமல் அரைமணி நேரத்திற்குள் ஒன்றரை பக்கக் கதையை மூன்று பக்கங்களில் மொழியாக்கம் செய்திருந்தாள். அவளுக்கு அப்போதே ஒரு சிறு பரிசைக் கொடுத்து வாழ்த்தினோம். பின்பு கடலூரில் நடந்த நல்லி-திசை எட்டும் விழாவுக்கு குடும்பத்தோடு வந்த மொழியாக்க விருதைப் பெற்றாள் சிறுமி சைதன்யா. அவளுடைய தந்தை கே.பி. வினோத்.
இன்று இருபத்தி ஐந்துக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்து வருகிறார்கள். வேறு எந்த இந்திய மொழிகளிலும் இத்தனை மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. இவர்களில் பெரும்பாலானோருக்கு மூலமொழியிலும் இலக்குமொழியிலும் புலமை இல்லை. அர்ப்பணிப்பும் உழைப்பும் கிடையாது. அச்சு வசதியையும் தகவல் தொழில் நுட்ப வசதியையும் வைத்து புத்தகங்களை வெளியிட்டு விடுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு சரிதானா? மூத்த மொழியாக்கப் படைப்பாளி என்கிற முறையில் இந்தத் தவறான போக்கைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர்களில் முன்னோடியாக இருந்தவர்கள் சுந்தர ராமசாமி, செளரி (அவர் உரூப்பின் ‘உம்மாச்சு‘ நாவலை மொழியாக்கம் செய்துள்ளார்), மணவை முஸ்தபா மற்றும் சி.ஏ. பாலன். எனக்கு தெரிந்து மொழிபெயர்த்தவர்கள் இவர்கள் தான். தற்போது, தாங்கள் சொன்னது போல மலையாளத்திலிருந்து ஏராளமானவர்கள் தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மலையாள மண்ணின் தன்மையையோ, மக்களின் பண்பாட்டையோ, மலையாள மொழிக்கேயுரிய மொழியுணர்வையோ மொழிபெயர்ப்பதாகத் தெரியவில்லை. நான் எப்போதும் யாரையும் புண்படுத்தும்படி குறிப்பிடுவதில்லை. ஆனால், இருவரை மட்டும் இங்கு பெயர் குறிப்பிடாமல் சொல்ல நினைக்கிறேன். காரணம் அவர் செய்தது அப்படிப்பட்ட அநியாயமாக மொழிபெயர்ப்பு.
லலிதாம்பிகா அந்தர்ஜனம் மலையாள மொழியினரும் படைப்பாளிகளும் ஒரு தாயைப் போல கொண்டாடக் கூடிய ஒரு முதுபெரும் எழுத்தாளர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு பேராசிரியர் மொழிபெயர்த்திருந்தார். நூலின் தலைப்பிலிருந்து உள்ளடக்கம் முழுவதையும் நான் படித்து முடிப்பதற்குள் என் மூளையே குழம்பி விட்டது. உதாரணமாக புத்தகத்தின் தலைப்பை எடுத்துக் கொள்ளலாம். ‘லலிதாம்பிகா அந்தர்ஜனம்‘ என்ற புத்தகத்தின் தலைப்பை ‘லலிதாம்பிகை உள்ளுறைவாசி‘ என்று மொழிபெயர்ந்திருந்தார். லலிதாம்பிகா என்பது வட மொழியாம். அதனால். லலிதாம்பிகை என்று மாற்றினார். அது போகட்டும். ‘அந்தர்ஜனம்‘ என்ற பெயரை ‘உள்ளுறைவாசி‘ என்று மொழிபெயர்த்து விட்டார். அவரை என்ன செய்யலாம்? ‘அந்தர்‘ என்றால் ‘உள்ளுறை‘யாம். ‘ஜனம்‘ என்றால் வாசியாம். மலையாள மண்ணில் நம்பூதிரி சமூகத்தினரின் வீட்டுப் பெண்களை ‘அந்தர்ஜனம்‘ என்றழைப்பார்கள். இந்த மொழிபெயர்ப்பு எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. தமிழ்நாட்டில் நாட்டுக்கோட்டை செட்டியார் இல்ல பெண்களை ‘ஆச்சி‘ என்றழைப்பார்கள். இவர் ‘ஆச்சி‘ என்பதை எப்படி மொழியாக்கம் செய்வார்.
ஆகவே, எத்தனை பேர்கள் எப்படி மொழிபெயர்த்தால் என்ன? சிறந்த மொழியாக்கமே நிலைத்து நிற்கப் போகிறது. இல்லையெனில், காணாமல் போய் விட போகிறது. ஏற்கனவே வெளியான புத்தகத்தை மறு மொழியாக்கம் செய்கிறார்கள். ஒப்பிட்டுப் பார்த்தால் முதல் மொழியாக்கத்தை விட மோசமாகவும், முதல் மொழியாக்கமே பரவாயில்லை என்று தோன்றுகிற விதமாக உள்ளது.
1981 -ல் சாகித்ய அகாதெமி விருது பெற்ற அவகாசிகள் என்ற நாவலின் மொழியாக்கத்தை நிறைவு செய்துள்ளீர்கள். பிரமாண்டமான இந்த நாவலைப் பற்றியும், மொழியாக்கத்திற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தையைப் பற்றியும் சொல்லுங்கள்.
நான் ‘அவகாசிகள்‘ நாவலை 1980 ல் முதன்முறையாக நெய்வேலி நூலக நூலகரிடம் சொல்லி வாங்கச் செய்தேன். அப்போது அதன் விலை ரூபாய் 250 என்பதால் வாங்க முடியாத சூழல். அப்போதிருந்த நெய்வேலி நூலகர், நூலின் பெயரையும் கிடைக்குமிடத்தையும் சொல்லி விட்டால் போதும் மறுமாதமே வாங்கி விடுவார். அவ்வாறு நாவல் வந்ததும் நான்தான் முதலில் எடுத்து வந்து படித்தேன். நண்பர்களின் நான்கைந்து உறுப்பினர் அட்டைகளை வைத்துக் கொண்டு, மாறி மாறி பதிவு செய்து எடுத்து வந்து படித்து முடிக்க ஆறு மாதத்திற்கு மேல் ஆனது. அதிகப் பக்கங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதனால்தான் அந்த நாவலை எப்படியும் தமிழுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற முனைப்பில் முயன்றேன். சாகித்திய அக்காதெமி அனுமதி தந்து ஒப்பந்தம் செய்தார்கள். மொழியாக்கத்தைத் தொடங்கி மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. தற்போதுதான் முழுவதுமாக மொழிபெயர்த்து முடித்தேன். சுமார் இரண்டாயிரம் பக்கம் தட்டச்சு வேலைகள் முடிந்து விட்டன. மீதியைத் தட்டச்சு செய்ய வேண்டும். அதன்பிறகு பிழை நீக்கம் செய்ய வேண்டும். வாசிப்பு சுவையைக் கூட்ட வாக்கிய அமைப்புகளைக் கட்டமைக்க வேண்டும். இப்படி இதன் பணிகள் முடிப்பதற்கு இன்னும் ஓராண்டு காலம் தேவைப்படும். இந்நாவலை வாசகர்கள் புறம் தள்ளாமல் படிக்க வேண்டும். அவசரப்பட்டு இப்படியே நூலாக்கி விட்டால் என் மொழியாக்கப் பணியே மோசமாகி விடும்.
இந்த நாவல் முழுக்க முழுக்க மலேசியா மண்ணில் நடைபெறும் ஒரு பெரும் குடும்பத்தின் கதை. சுமார் நாற்பத்தைந்து நாட்களில் நிகழக்கூடிய சம்பவங்கள். முன்னும் பின்னும், பின்னும் முன்னுமாக நகர்ந்து போகும் கதை சொல்லல் முறை. ஒரு கதாபாத்திரம் நினைப்பதை இன்னொரு காதாபாத்திரம் அதே எண்ணத்தை வேறு கோணத்தில் நினைப்பதைப் போன்ற கதையாடல். அதேவேளையில் சுவையான போக்கில் நீள்கிறது. .இவ்வாறுதான் இந்த நாவல் செல்கிறது. பொறுத்திருங்கள் ஒரு புதுமையான நாவலைப் படிக்கலாம்.

தமிழ் இலக்கணத்திற்கு ஏறக்குறைய 1800 ஆண்டுகால பாரம்பரியம் உண்டு. ஆனால், மலையாளத்தைப் பொறுத்தவரை, வெகுசமீபத்தில் உருவாக்கப்பட்ட மொழி. இருமொழிகளிலும் உள்ள வார்த்தைகள் (words) மற்றும் வாக்கிய அமைப்பு (syntax) முறைகளில் பாரதூரமான வித்தியாசம் இருப்பதாக உணர்கிறீர்களா? சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?
மலையாள மொழியில் உள்ள வார்த்தைகள் பல இடங்களில் இணைந்த வார்த்தைகளாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகள் இணைந்து ஒரே வார்த்தையாகவும் பழக்கத்தில் உள்ளன. தமிழில் அவ்வாறு எந்த வார்த்தைகளும் இணைந்து வருவதில்லை. அதேபோல், வாக்கிய அமைப்புகளும் ஆங்கில வாக்கிய அமைப்பு முறையில் உள்ளன. இதை உணர்ந்து வார்த்தைகளைப் பிரித்துப் படித்தால் சிக்கல் எழுவதில்லை. வாக்கியங்களையும் தமிழ் வாக்கிய அமைப்புக்கு மாற்றிக் கொண்டோமானால் மொழியாக்கம் எளிதாக வசப்பட்டு விடும். அதனால், நான் சிக்கல்கள் எதையும் பெரிதாக எதிர்கொள்ளவில்லை.
இந்த நேர்காணல் திட்டமிடுதலில் இருந்து, கேள்விகளைச் சரிபார்த்து உதவி, பதில்களை அச்சேற்றும் வரை உறுதுணையாக இருந்தவர் என் இனிய சகோதரர் நிர்மால்யா.
குறிஞ்சிவேலன் மொழியாக்கம் செய்த நூல்கள்
- ஐந்து சென்ட் நிலம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1982,
- சல்லி வேர்கள் – மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1988,
- முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் பாகம் 1-வி.பி.சி. நாயர்- 1990,
- காட்டு வெளியினிலே- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1991,
- விஷக்கன்னி-எஸ்.கே.பொற்றெகாட் – 1991,
- சிதைந்த சிற்பங்கள்-கே.வேணுகோபால் – 1992,
- ஒரு நெஞ்சத்தின் ஓலம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1993,
- நான்கு முகங்கள்-பலர் -1994,
- இரண்டு ஜென்மங்கள்-தகழி – 1994,
- தகழி- ஐயப்பபணிக்கர் – 1994,
- கண்ணாடியில் தோன்றும் உருவங்கள்-தகழி -1994,
- பாரதப்புழையின் மக்கள்- எஸ்.கே.பொற்றெகாட் -1994,
- ஆறாம் விரல்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1995,
- நெட்டுர் மடம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1995,
- முனைப்பு-கே.வேணுகோபால் -1996,
- அமிர்தம் தேடி- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1996,
- மற்போர்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1997,
- தேர்ந்தெடுத்த கதைகள்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1997,
- இப்போது பனிக்காலம்-கிரேசி -1997,
- மனமே மாணிக்கம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1998
- பாண்டவபுரம்-சேது – 1999,
- இரண்டாம் இடம்- எம்,டி,வாசுதேவன் நாயர் -2000
- வானப்பிரஸ்தம்-எம்,டி,வாசுதேவன் நாயர் -2001,
- எழுத்துமேதைகளின் முதல் கதைகள்-பலர் -2002,
- பஷீர்-இ.எம்.அஷ்ரப் -2003,
- முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் பாகம் 2- வி.பி.சி.நாயர் -2003,
- ஆல்ஃபா-டி.டி.ராமகிருஷ்ணன் – 2005,
- சூஃபி சொன்ன கதை-கே.பி.ராமனுண்ணி -2006,
- காலம் முழுதும் கலை- இ.எம்.அஷ்ரப் -2006,
- பாண்டவபுரம்-மிமி -சேது – 2006,
- ராஜவீதி – பலர் – 2007
- கோவர்தனின் பயணங்கள்- ஆனந்த்- 2012,
- அடையாளங்கள்-சேது – (2013),
- ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா-டி.டி.ராமகிருஷ்ணன் – (2014),
- பிறை – சி.எஸ்.சந்திரிகா – (2015)
- மலையாற்றூர் இராமகிருஷ்ணனின் நாவல்கள் – 2016
- சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி-டி.டி.ராமகிருஷ்ணன்-2018
- ஆறாவது பெண் -சேது -(அச்சில்)
- வாரிசுகள்-விலாசினி (அச்சில்)
2 comments
நேர்காணல் – குறிஞ்சிவேலன் – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன் – திரு Subba Rao Chandrasekara Rao அவரது முகநூல் பதிவில் இந்த நேர்காணலைப் பார்த்தேன். தகவல்கள் நிறைந்திருக்கின்றன. ஐயா குறிஞ்சி வேலன் அவர்கள் மிகப் பெரிய ஆளுமை – ஐந்தாம் வகுப்புக்கு மாறிய பின்தான் இந்த ‘குலக்கல்வித் திட்டம்‘வந்தது. காலை ஒன்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை தான் பள்ளிக்கூடம். மதியத்திற்கு மேல் பள்ளி கிடையாது. மதியத்திற்கு மேல் அப்பா செய்யும் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
விவசாயி பிள்ளை ஏர் ஓட்ட வேண்டும். நெசவாளி பிள்ளை தறி நெய்தல் வேண்டும். நாவிதர் பிள்ளை முடி வெட்ட வேண்டும். ஏகாலி பிள்ளை துணி துவைக்க வேண்டும். இந்த நான்கு இனத்தாரை மட்டும் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இந்த இனத்தவர்கள் தான் எங்கள் கிராமத்தில் வாழ்ந்தார்கள். இதனால் என்னவாயிற்று… கண்டிப்பான வீட்டுப்பிள்ளைகள் மட்டுமே படிப்பைத் தொடர முடிந்தது. மற்றவர்கள் படிப்பில் தடுமாறி குலத் தொழிலுக்கே செல்ல வேண்டிய நிலை. எங்கள் கிராமத்தில் அப்போது மொத்தம் 150 பிள்ளைகள் படித்ததில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் போது ஏழெட்டுப் பேர்களாகி விட்டார்கள். குலக்கல்வித் திட்டத்தால் நேர்ந்த பலன் இதுதான். அதனால், தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடந்தன. தி.க, தி.மு.க மற்றும் காங்கிரஸிலேயே ஒரு பகுதியினர் எல்லாம் இணைந்துதான் இப்போராட்டத்தை நடத்தினார்கள். அதனால், இராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். காமராஜர் முதல்வரானார். காமராஜர் முதல்வரானதும் முதலில் குலக் கல்வித் திட்டம் வாபஸ் ஆனது. அந்த இரண்டாண்டுகளில் தட்டுத்தடுமாறிய மாணவர்கள் மீண்டும் எழவில்லை. – மிக அரிய தகவல் – அடுத்து – மதுரை மாவட்டத்தில் 1964 ல் பணியில் சேர்ந்தேன். பணியேற்ற இடம் நத்தம். அங்கு பணிபுரியும் போதுதான் எங்கள் மாவட்ட அலுவலர் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு செயலை செய்யச் சொல்லியிருந்தார். நான் மறுத்தேன். என்னுடன் பணியாற்றிய இன்னொருவர் அவரின் ஆணையை ஏற்றுக் கொண்டார். அதனால், அவர் அங்கேயே நீடிக்கப்பட்டார். எனக்குத் தண்டனை கிடைத்தது. சுற்றுப்புறத்தில் ஓட்டல்கள் இல்லாத காட்டின் நடுவே இருந்த செக்போஸ்டுக்கு டெபுடேஷனில் அனுப்பினார். கேரள மாநிலம் வண்டிப் பெரியாரை நோக்கிச் செல்லும் ஒரு காட்டுப்பாதையில் அந்த செக் போஸ்ட் இருந்தது. அந்த செக் போஸ்டில் ஒரு போலீஸ்காரர், ஒரு உதவியாளர் நான் மட்டும்தான் அமர்ந்திருப்போம். எப்போதாவது மாடுகள் வந்தால் தடுப்பூசி போட்டு அனுப்ப வேண்டும். மற்றபடி ஓய்வுதான். இந்த ஓய்வு நேரத்தை நான் மலையாள மொழியாக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டேன். – கேரள எழுத்தாளர்கள் மொழி பெயர்ப்பாளர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, எழுத்தாளர்களின் சந்திப்பு என நிறைய தகவல்கள் இருக்கின்றன. அனைத்து எழுத்தாளர்களும் படிக்க வேண்டிய பொக்கிஷம் இது – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி புத்தகம் பேசுது – நன்றி சார் திரு Subba Rao Chandrasekara Rao
.
மிக அருமையான நேர்காணல்.தமிழகத்தில் ஆர்ப்பரிப்பில்லாமல் ஒளிர்ந்த மொழிபெயர்ப்பு படைப்பாளி தோழர் குறிஞ்சி வேலனின் ஆளுமையை முழுமையாக வெளிக் கொணர்ந்து கௌரவித்த ஆவணம்.பாரதி புத்தகாலய ஆசிரியர் குழுவிற்கும் நேர்கண்ட பிரதிபா ஜெயச்சந்திரனுக்கும் குறிஞ்சி வேலனுக்கும் வாழ்த்துகள்.