கரோனா நோய் தடுப்பு ஊரடங்கு கொண்டு வந்த அவலங்கள் பல. மத்திய மாநில அரசுகளால் முற்றிலும் கைவிடப்பட்ட புலன்பெயர்ந்த தொழிலாளர் முதல் அடித்தள விவசாயிகள் வரை கரோனாவை விட கொடிய துன்பங்களை அனுபவித்து வருவோர் பல கோடி. அதிலும் பச்சிளம் குழந்தைகளின் துயரம் மிகக் கொடுமை. பள்ளிகளை மூடிய நாம் சத்துணவுக் கூடங்களை மூடி இருக்கவே கூடாது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில்கூட பள்ளிக்கூடம் மூடி இருப்பினும் மதியம் பள்ளி சென்று உணவு நேரத்தில் குழந்தைகள் உணவு பெற வாய்ப்பளிக்கிறார்கள். கோடை, கிருஸ்துமஸ் விடுமுறையிலும்-ஊரடங்கிலும்-அது தொடரும்.
இங்கு சத்துணவுக் கூடங்களும் மூடப்பட்டதால் 29 சதவிகித குழந்தைகள் பட்டினி கிடக்கும் அவலம் தொடர்கிறது. எஞ்சிய குழந்தைகளில் பலர் தங்களது குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டதால் காய்கறி கடைகள், மீன் மார்க்கெட் என்று எடுப்பு வேலைகளுக்கு போய்விட்டார்கள். மேலும் தமிழகத்தில் இந்தியாவிலேயே உச்சமாக 917 குழந்தைகள் (ஜுன் 1 வரை) கோவிட்-19 தாக்குதல் நிரூபிக்கப்பட்ட நோயாளிகளாக உள்ளது இன்னொரு கொடுமை. இந்த நிலையில் ஆன்-லைன் மூலம் கல்வியை பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்த கார்பரேட் முதலாளிகளுடன் கை கோர்த்து மத்திய மாநில அரசுகள் களம் புகுவதை பார்க்கிறோம்.
ஏற்கனவே கரோனா பீதியுடன் வீட்டில் பதுங்கிய குழந்தைகளை தனியார் பள்ளிகள் ஆன்-லைன், ஜும், வாட்ஸ்-ஆப் வீடியோ வகுப்பு என சித்திரவதை செய்வதை பார்க்கிறோம். தமிழகத்தில் மொத்தமாகவே 6.7 சதவிகித மக்கள் மட்டுமே லாப்டாப், கணினி உள்ளிட்ட வசதி பெற்றவர்கள். இந்த நிலையில் ஆன்-லைன் கல்வி மூலம் சர்வதேச பல்கலைக்கழகங்களிடம் நம் மாணவர்களை தாரை வார்க்கும் வர்த்தக சதி நடப்பது நேரடியாக நம்மால் உணர முடிகிறது. ஒரு வகுப்புக்கு ஒரு சேனல் என மத்திய நிதி அமைச்சர் இந்த சதிக்கு சாமரம் விரிப்பதையும்-ஆன்லைன் கல்வியின் சாத்தியங்களை தனியே ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்விக் குழு அமைப்பதையும் பார்க்கிறோம்.
நோய் தடுப்பு, பட்டினியிலிருந்து குழந்தைகளை மீட்க சத்துணவு கூடங்களை திறப்பது உள்ளிட்ட எந்த விஷயத்திலும் ஆர்வம் காட்டாத அரசு ஆன்-லைன் கல்வி எனும் கல்வி வியாபாரத்தை தொடங்கி ஏழை எளிய மக்களின் கல்விக் கனவுகளை சிதைக்க-அவசரம் காட்டுவதை வன்மையாக கண்டிப்போம். ஆன்-லைன் கல்வி என்பது ஆசிரியரின் உண்மை வகுப்பறைக்கு இணை ஆகாது. ஒன்றிணைவோம். குரல் கொடுப்போம். ஆன்-லைன் கல்வி எனும் வியாபாரத்தை வேறொடு கிள்ளி எறிவோம்.
2 comments
மதிய உணவு. பிள்ளைகளுக்கு இல்லையெனில் அதற்கு ஈடாக அந்த குடும்பத்திற்கு ரேசனை அதிகப்படுத்தலாமே
கொரோனா இப்படியே தொடருமானால் எல்லா பிள்ளைகளுக்கும் ஆன்லைனில் சொல்லித்தர சம ஏற்பாடுகளை அரசே செய்யவேண்டும் க்யூபாவில் நடப்பதைப்போன்று
நேரத்தை இளம் வயதில் வீணாக்க முடியாது
மதிய உணவை கூட்டமாக இந்நேரத்தில் வழங்க
இயலாது
அதற்குபதிலாக சம ரேசனை குடும்பத்தாரிடம் வழங்கிவிவிடலாம்
கார்பரேட்டுகளின்உதவியுடன்எல்லா ஏழைப்பிள்ளைகளுக்கும்
கணிணி வழங்கி அவர்களுக்கும் கல்வியை தொடரலாம்
இதற்க்கெல்லாம் அரசு அக்கறை கொண்டால்தான்