உங்களுடைய மொழிபெயர்ப்பின் தீவிர வாசகன் என்ற அடிப்படையில் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன். மொழிபெயர்ப்பின் அடிப்படைக்கூறுகள் என்று எவற்றைக் குறிப்பிடுவீர்கள்.?
அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். காமன் சென்ஸ். மூல ஆசிரியர் சொல்லாத ஒன்றை மொழிபெயர்ப்பாளர் சொல்லிவிடக் கூடாது. மூல ஆசிரியர் தனது சூழலின் தேவை கருதியோ, விருப்பத்தின் அடிப்படியிலோ ஒரு நடையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சில விஷயங்களை மர்மமாக விட்டிருக்கலாம். தனது மொழியைச் சேர்ந்தவர்களுக்கு எளிதில் புரியும் என்று விளக்காமல் விட்டிருக்கலாம். அதையெல்லாம் மொழிபெயர்ப்பாளர் அடிக்குறிப்பில்தான் . விளக்க வேண்டுமே தவிர நூலுக்குள் மாற்றங்கள் செய்யக் கூடாது.
இரண்டு மொழிகள் கடந்து வரும் நூல், எழுத்துப் பயிற்சியில்லாதவர்களின் நூல் போன்றவற்றில் ரீடபிளிடி பிரச்சினைகள், வாக்கிய அமைப்புகளில் பிரச்சினைகள் இருக்கும். அதைச் சரி செய்ய மொழிபெயர்ப்பாளருக்கு உரிமை உண்டு. உதாரணமாக இளமையின் கீதம் என்ற சீன நாவலை ஆங்கிலத்தில் படித்தேன். சீன மொழியிலிருந்து மிக மோசமாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இலக்கணப் பிழைகள், மிக மோசமான வாக்கிய அமைப்புகள் என்று படிக்க மிகவும் சிரமமாக இருந்தது.
அதைத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் மயிலை பாலு அந்தத் தவறுகளை மிக அழகாகச் சரி செய்திருந்தார். இதை ஒரு மொழிபெயர்ப்பாளர் கட்டாயம் செய்ய வேண்டும். இந்த சுதந்திரத்தை மொழிபெயர்ப்பாளர் எடுத்துக் கொள்ளலாம். மூல ஆசிரியரே தவறுகள் செய்திருந்தாலும் அதைத் திருத்தலாம். மற்றபடி மொழிபெயர்ப்பு தவம், மொழிபெயர்ப்பு மூலத்துக்குச் செய்யும் துரோகம் போன்ற கோட்பாடுகள் குறித்தெல்லாம் நான் அலட்டிக் கொள்வதில்லை. மொழிபெயர்ப்புப் பணியை மேற்குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டு சுவாரஸ்யமாகப் படிக்கத் தக்க வகையில் செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
மொழிபெயர்ப்பில் ஏற்படும் பொதுவான சவால்கள் யாவை?
மூல நூலில் பயன்படுத்தப்படும் மொழி பற்றிய அறிவு மொழிபெயர்ப்பாளருக்கு வேண்டும். ஆங்கிலத்திலிருந்து மொழிப்யெர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலம் தெரிந்தே இருந்தாலும் குறிப்பிட்ட வட்டாரங்களில் என்ன பொருளில் ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலத்தில் பனாமா கால்வாயில் கப்பல்களை இழுத்து வர ம்யூல்கள் பயன்படுத்தப்பட்டன என்ற வாக்கியம் வருகிறது. இது எப்படி சாத்தியம் என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்பு மியூல் என்ற சொல்லுக்கு கோவேறு கழுதை என்பதைத் தவிர டிராக்டர் என்ற பொருளும் உண்டு என்று கண்டுபிடித்தேன்.
அடுத்ததாக மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லுக்கு நமது மொழியில் ஏற்கெனவே உள்ள சொல்லை அறிந்திருக்க வேண்டும். ரெட் டீயில் இரண்டு தேயிலைச் செடி வரிசைகளுக்கு இடையே உள்ள பாதை என்று மூல ஆசிரியர் எழுதியிருப்பார். அதை அப்படியே எழுதினாலும் தவறில்லை. ஆனால் இதற்கு தமிழில் சால் என்ற மக்கள் பயன்படுத்தும் ஒரே சொல் உள்ளது. அதுவே மிகவும் சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும்.
எழுத உட்கார்ந்து விட்டால் நமது படைப்புத் திறன் வானளாவப் பறக்கும். அதைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு மூல ஆசிரியர் என்ன சொல்லியிருக்கிறாரோ அதற்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை இன்னும் நன்றாக எழுதலாமே என்ற ஆசை எல்லாம் தோன்றும். அதைத் தவிர்க்கும் மன உறுதி வேண்டும்.
சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வு நூல்கள் தமிழில் ஏராளமாக நிரம்பிக் கிடக்கும் போது மிளிர் கல் நாவலுக்கான தேவை என்ன?
சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுகள் தமிழ் நாவல்களில் பெரிய அளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ரத்தினக் கல்வளம், ரத்தினக் கல் வணிகம் ஆகியவை பற்றி நாவல்களே வந்ததில்லை. எனவே கூறியது கூறல் பிரச்சினை மிளிர் கல்லில் பெரிய அளவுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.
தமிழ் தேசிய இனப் பண்பாட்டை உருவாக்குவதில் பழங்குடி இனங்களின் பங்கு, அரசியல் பொருளாதாரத்தில் அயல் வணிகத்தின் பங்கு, கற்பு, பொதுமகளிர் ஆகியவற்றின் தேவை, எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி சிலப்பதிகாரம் போன்றதொரு ஒரு இலக்கியம் உருவாக வேண்டிய அவசியம் என்ன ஆகியவை பற்றிய எனக்குத் தோன்றிய கேள்விகளும் பதில்களும் தான் மிளிர் கல்.
மிளிர்கல் நாவல் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டு வருகிறது. அதை படிக்கும் மாணவர்கள் நாவல் பேசும் இலக்கியத்தை புரிந்துகொள்ளும் அளவிற்கு அதன் ஊடுபொருளான அரசியலைப் புரிந்து கொள்கிறார்களா.?
ஹா ஹா எனக்கு மாணவர்களிடம் நேரடியாகத் தொடர்பு இல்லை அல்லவா? நாவல் பிடித்துப் போன இளம் நண்பர்கள் எனக்குத் தெலைபேசி செய்ததும், கூட்டங்களில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதும் உண்டு. மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வழியில்லை. பேசியவரை முல்லை, அவள் சிக்கலான உறவுகளைக் கடந்து வருவது, அந்தப் பயணம் போன்றவை இளைஞர்களுக்கு அதிகம் பிடித்திருப்பது போலத் தெரிகிறது.
செம்புலமும் முகிலினியும் சூழலியல், வர்க்க, வர்ண அரசியல் பற்றி பேசுகிறது.கொங்கு மண்டலத்தின் முதன்மைப் பிரச்சனையாக இதில் எதைக் கருதுகிறீர்கள்?
இதெல்லாம் பி எச் டி க்கு போல ஆய்வு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் சாதியானது அரசியல் அதிகாரத்துடனும், பொருளாதர பலத்துடனும் இணையும் போது மூர்க்க வெறி கொள்கிறது. சாதிப் பெருமை பேசும் அடையாள அரசியல், சாதியினர் குழுவாகத் திரள்வது என்பது உள்ளூர் அதிகாரத்தையும், தொழில்களையும், வணிகத்தையும் கைப்பற்றுவதை எளிதாக்குகிறது. இளவரன் திவ்யா திருமணத்துக்கு முன்பு நாயக்கன் கொட்டாயில் அது போன்ற சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பத்து தம்பதிகள் இருந்தனர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அடித்தளமாகப் பயன்படுத்தி ஒரு ஆளும் வர்க்கப் பிரிவு உருவாகும் போது சாதி உணர்வுகள் தூண்டப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
கோவையிலும், திருப்பூரிலும் தொழிலாளர் குடியிருப்புகளிலும், குடிசைப்பகுதிகளில் சாதி அவ்வளவு உக்கிரமானதாக இருந்ததில்லை. இப்போது அதிகாரத்துக்கான போட்டியில் அடையாள அரசியல் முக்கிய இடம் வகிப்பதால் சாதியாகத் திரள்வதும், சாதியத் தூய்மையைப் பாதுகாப்பதும், கற்பனையான வெறுப்பை விதைப்பதும் அவசியமாகிவிட்டது.
எனவே தமிழகத்தில் சாதி தலைவிரித்து ஆடுவதற்கு பொருளாதாரக் காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கருதுகிறேன்.
காத்திரமான விஷயங்களைப் பேசும் உங்கள் படைப்புகளில் ஊடாடும் காதலில் அழகியலுக்கும் குறைவில்லை. இந்த இரண்டையும் ஒரு சேர கையாளும் ரகசியம் என்ன?
நான் சத்ய ஜித் ரேவின் ரசிகன். ஜானகிராமனைப் பிடிக்கும். புத்துயிர்ப்பில் ஈஸ்டர் இரவு பகுதி வரும் அல்லவா? அதை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. இயல்பில் யாருக்கும் தொல்லை இல்லாமல், இனிமையாக, சுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். நான் உட்பட, எல்லோராலும் நினைக்கும் வாழ்வை வாழ முடிவதில்லை என்பதாலேயே அதற்கான காரணங்களைத் தேடவும், எழுதவும் வேண்டி உள்ளது. ஆனால் எல்லோர் வாழ்விலும் இனிமையான அழகான தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒன்றுக்காக ஒன்றைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லை. முழுவதும் அழகியலான ஒரு நாவல் எழுதிவிட வேண்டும் என்பது எனது ஆசை.
முகிலினியில் இயற்கை வேளாண்மை பற்றி பேசுவீர்கள். அதன் அடிப்படையில் கேட்கிறேன். இயற்கை வேளாண்மை உணவுப் பொருட்கள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இல்லையா? எட்டும் கனியாக என்ன வழி?
இப்போது பேசப்படும் ஆன்மீகத்தன்மை கொண்ட தூய இயற்கை விவசாயம் குறித்து எனக்குக் கேள்விகள் இருக்கினறன. இதனால் 130 கோடி பேருக்கு உணவளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் உண்மையான ஒரு மக்கள் நல அரசு அமைந்தால் இது போன்ற பரிசோதனைகளை இன்னும் அறிவியல் பூர்வமாக நடத்த முடியும்.
கோவையில் இயங்கி வந்த பெரிய தொழிற்சங்கங்கள் மூடப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் கோவை தொழில் நிறுவனங்களின் கேந்திரமாகவே இருக்கிறது. இன்றைக்கு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன.?
மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. ஆலைகளுக்கு வெளியே மக்கள் வாழ்க்கையில் தொழிற்சங்களுக்கு இடமே இல்லை. திமுக, அதிமுக, காங்கிரசுக்குக் கூட இல்லாத அளவுக்கு பெரிய அரங்குகளூம், நூலகங்களும் கொண்ட இடதுசாரித் தொழிற்சங்க கட்டடங்கள் எல்லாம் முன்பு தொழிலாளர் பங்களிப்பால் கட்டப்பட்டன. இப்போது பல ஆலைகளில் தொழிற்சங்களே இல்லை. உற்பத்தி ஃப்ரான்சிசி முறையில், பீஸ் ரேட் முறையில் நடக்கிறது.
முன்பு ஒரே பெரிய தொழிற்சாலையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது பல இடங்களில் உள்ள சிறு சிறு தொழிற்சாலைகளில் பாகங்கள் தயாரிக்கப்பட்டு ஓரிடத்தில் கோர்த்து இணைக்கப்படுகின்றன. நானோ கார் போன்றவற்றில் பல பாகங்கள் சீனா போன்ற வேற்று நாடுகளிலேயே தயாரிக்கப்படுகின்றன. எனவே தொழிற்சாலை உடைக்கப்படும் போது தொழிற்சங்கங்களும் சிதறடிக்கப்படுகின்றன. பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை இழக்கிறது. பழைய பாணியில் தொழிற்சங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர கடின உழைப்புத் தொழிற்கூடங்களான கேம்ப் கூலி முறை வேறு. இங்கே தொழிற் சங்கம் அமைக்க வேண்டும் என்றால் மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த நெருக்கடிகளை எல்லாம் கடந்து வர முற்றிலும் வேறுவிதமான செயல்தந்திரங்கள் வேண்டும். அது பற்றி கட்சித் தோழர்கள்தான் சொல்ல வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்களின் வருகை கொங்கு மண்டல தொழிலாளர்கள் வர்க்கத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்ன?
அது புதிராக இருக்கிறது. இன்னும் முழுமையான கள ஆய்வுகள் வரவில்லை. கோவையில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தமிழர்களின் வேலையை அவர்கள் பறித்துக் கொண்டார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. முன்பு இந்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக தொழிலாளர்கள் என்னவானார்கள் என்பது குறித்துக் முழுமையான ஆய்வுகள் இல்லை. கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போயர் போன்ற சமூகங்கள் வளர்ச்சியடைந்து வேறு தொழில்களுக்குப் போய்விட்டார்கள் என்கிறார்கள். உலகமயமாக்கலுக்குப் பின்பு கோவையில் ஏற்பட்டுள்ள பெரும் வளர்ச்சிக்கு இந்த வடமாநில மக்கள் தேவைப்படுகிறார்கள் போலிருக்கிறது. இந்த வடமாநிலத் தொழிலாளர்கள் இரண்டு மூன்று தலைமுறை இங்கேயே தங்கினால் தமிழர்களாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆர்கனைஸ்டு செக்டாரில் வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லை.
சர்வதேச பிரச்சனைகளைப் பற்றி பேசும் உங்கள் படைப்புகளின் களம் கொங்குமண்டலமாக அமைவதின் அடிப்படையில் கொங்குமண்டலத்தில் வலதுசாரிகளின் வளர்ச்சி பற்றி…
இடதுசாரி இயங்கங்கள் வலிமையாக இருந்த இடங்களில் சாதி, மதம் போன்றவற்றைக் கொண்டு மக்களைப் பிரிப்பது வழக்கமாக முதலாளித்துவம் செய்யும் தந்திரம்தான். அவர்கள் தாங்கள் திரட்டி வைத்திருக்கும் செல்வங்களைப் பாதுகாக்கப் போட்டு வைக்கும் பூட்டு தான் இந்த வலதுசாரி இயக்கங்கள்.
ஆனால் இந்த இயக்கங்கள் ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. உயர்சாதியினர் இந்துத்துவ அரசியலை ஏற்றுக் கொண்டுள்ளதாலும், இந்த இயக்கங்களில் இருப்பது ஒருவித செல்வாக்கு என்று மத்தியதர வர்க்கத்தில் ஒரு பிரிவு கருதுவதாலும் இந்துத்துவ அமைப்புகள் பரபரப்பாக இயங்குவது போலத் தோன்றுகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கோ, விவசாயிகளுக்கோ இவர்களால் எதையும் வாக்களிக்க முடியாது. எனவே தான் சிறு சிறு பாக்கெட்டுகளைத் தாண்டி இவர்களால் வளர முடிவதில்லை.
ஆனால் இவர்கள் மேல் ஒரு பயம் இருக்கிறது. தேவைப்பட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு நகரம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைக்க இவர்களால் முடிகிறது.
உங்கள் படைப்புகளுக்கு கவித்துவமான தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் ரகசியம் என்ன?
அது என்னை ஒரு பொறியில் சிக்க வைத்துவிட்டது. எரியும் பனிக்காடு என்ற தலைப்பு வைத்ததும் நண்பர்கள் அது போன்ற தலைப்புகளையே விரும்பத் தொடங்கிவிட்டார்கள். என்ன தலைப்பு சொன்னாலும் அது பழைய தலைப்புகள் போல அழகாக இல்லை என்று மிரட்டிச் சொல்கிறார்கள். எனவே வேறு வழி இல்லாமல் தேட வேண்டியதாகிவிடுகிறது. அழகியல் என்பது இந்த விஷயத்தில் வன்முறை ஆகிவிட்டது.
இன்றைய தலைமுறையின் வாசிப்பனுபவம் பற்றி ..
மிகவும் விரிவாக, ஏராளமாகப் படிக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் நல்ல விஷயம். ஆனால் இவர்களது அறிவுக்கூர்மைக்கு ஏற்ற விதத்தில் அரசியல் பொருளாதார விஷயங்களை நாம் கொடுப்பதில்லையோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. எனவே தான் இவர்கள் சீரியஸ் இலக்கியங்களையும் சினிமாவையுமே நாடிச் செல்கிறார்கள்.
சீரியஸ் இலக்கியம் மற்றும் தற்கால அரசியலில் கவனம் செலுத்தும் அளவுக்கு இந்தத் தலைமுறை அரசியல் பொருளாதாரம், அறிவியல், வரலாறு ஆகியவற்றை நோக்கி ஈர்க்கப்பட்டால் இவர்கள் அற்புதங்களை நிகழ்த்துவார்கள்.
எரியும்பனிக்காடு பேசிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய நிலை மேம்பட்டிருக்கிறதா?
1960லிருந்து 1990 வரை மிகவும் மேம்பட்டு இப்போது வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
கொரானா பாதிப்பிற்கு பின்பான உலக நாடுகளின் அரசியல் பொருளாதார நிலை எதை நோக்கி நகர்வதாக இருக்கும்?
இது பற்றி மேற்கில் ஏராளமான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. அரசு ராணுவம் தவிர்த்து எதிலும் தலையிடக் கூடாது. கல்வி, போக்குவரத்து, மருத்துவம், போன்ற சேவைகளை மக்களுக்கு இலவசமாகவோ, மானியமாகவோ அளிக்கக் கூடாது. அனைத்தையும் தனியார் மயமாக்க வேண்டும் என்ற நியோ லிபரம் தத்துவம் பெரிய அடி வாங்கியிருக்கிறது. இந்த நியோ லிபரல்களால், கார்ப்பரேட்டுகளால் கொரானா ஏற்படுத்திய நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை.
அரசு மருத்துவமனைகள் மேல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி வந்தது. இலவச மருத்துவ உதவி தவிர்க்க முடியாததாகிவிட்டது. மக்கள் நலம் காக்க உற்பத்தியையும், கார்ப்பரேட்டுகளையும் அரசு கட்டுப்படுத்த வேண்டி வருகிறது. உதாரணமாக பிரான்ஸ் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளை சானிடைஸர்கள் தயாரிக்கும் படி உத்திரவிட்டது. இதெல்லாம் உற்பத்தி, சந்தை, முதலாளித்துவத்தில் அரசு தலையிடக்கூடாது, கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்ற நியோ லிபரலிசத்துக்கு எதிரான விஷயங்கள்.
நீலத்தங்கம் நூல் தண்ணீர் தனியார்மயமாதலைப் பற்றிப் பேசுகிறது. அரசுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ள இக்காலக்கட்டத்திற்குப் பிறகு நிலை என்னவாக இருக்கும்?
இந்தியாவில் பெரிய மாறுதல் வரும் என்று தோன்றவில்லை. இந்தியாவில் சுமார் பத்து இடங்களில் குடிநீர் விநியோகம் தனியார்மயமாகி உள்ளது. அங்கெல்லாம் இந்த ஊரடங்கின் போது என்ன நிகழ்ந்தது என்பதை வைத்தே தீர்மானிக்க வேண்டும். பெருநகரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பியதை வைத்துப் பார்த்தால் உணவு மட்டுமல்லாமல் குடிநீர் சேவையும் சரியாக வழங்கப் பட்டிருக்காது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இப்போதைக்கு முடிவு கட்ட சரியான தரவுகள் இல்லை.
படைப்புகளில் கையாளப்படும் பிரச்சாரத் தன்மை பற்றி …
படைப்பு என்ற சொல் எனக்குப் பிடிப்பதில்லை. இலக்கியம் அல்லது எழுத்து என்று வைத்துக் கொள்ளலாம். நீங்கள் பிரச்சாரம் செய்யலாம், செய்யாமல் இருக்கலாம். ஆனால் என்ன செய்தாலும் அதை சுவாரஸ்யமாக நேர்மையுடன் செய்ய வேண்டும் அவ்வளவுதான். பிரச்சாரம் இல்லாத ஒரு இலக்கியம் உலகத்தில் இல்லை.
என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர் தனது அரசியல் கருத்துக்களை தனது எழுத்தில் பிரதிபலிப்பதை வரவேற்கிறேன். சமகால அல்லது வரலாற்று நிகழ்வுகளை ஆய்வுக்குள்ளாக்குவதையும் அதைத் தனது பார்வையில் முன்வைப்பதையும் சரியானது என்று கருதுகிறேன்.
வலதுசாரி எழுத்தாளர்கள் எப்போதுமே தங்கள் அரசியலை இலைமறைவு காய்மறைவாக பிரச்சாரம் செய்தே வந்துள்ளார்கள். ஏன் கா.நா. சு தான் ஜார்ஜ் ஆர்வெலின் 1984 என்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளில் உள்ள அரசியல் எல்லோருக்கும் புரிந்ததுதான். ஜெயமோகன் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல் பற்றி என்ன சொல்வது?. இதையெல்லாம் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லட்டும். அதை எதிர்கொள்வது இடதுசாரிகளின் கடமை.
ஆனால் இடதுசாரிகள் மட்டும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று சொல்லும் போது அது அபத்தமாக இருக்கிறது என்கிறேன். ஸ்டெலைட்டையோ, விஸ்கோஸையோ, அமைதிப் பள்ளத்தாக்கையோ, ஒரு சாதி, மதக் கலவரத்தையோ ஒரு பக்கச் சார்பு இல்லாமல் எழுதிவிட முடியுமா? இந்த சிக்கலால்தான் அவர்கள் அடுத்த இடத்துக்கு நகர்கிறார்கள். சமகால நிகழ்வுகளை எழுதக் கூடாது என்கிறார்கள்.
சமூக அமைதியைக் குலைக்கக் கூடாது, சமூகம் நல்லவிதமாகத்தான் அமைந்திருக்கிறது, இப்போதிருக்கும் சிக்கல்கள் எல்லாம் தனிநபர்களுக்கு இடையிலானவை என்ற கருத்து இந்த அரசியல் கூடாது பிரச்சாரத்துக்குப் பின்னால் இருக்கிறது.
முற்றடைப்பு காலத்தில் உங்களின் எழுத்துப்பணி….
எனது நான்காவது நாவலை முடித்து விட்டேன். மாலிக் காபூர் வருவதற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல். நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சியால் தமிழக தொழில் துறையில் ஏற்பட்ட பின்னடைவு எப்படி நாட்டின் வீழ்ச்சியில் போய் முடிந்தது, சாதிகளின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிப் பேச முயன்றிருக்கிறேன். புனைபாவை என்ற தலைப்பு மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. மாறினாலும் மாறலாம்.
கார்ப்பரேட் என் ஜி ஓக்களும் புலிகள் காப்பகங்களும், நீலத்தங்கம் ஆகிய நூல்களை ஏன் நாவலாக எழுதவில்லை?
இந்த நூல்கள் உடனடி நோக்கங்களைக் கொண்டவை. WWF, போன்றவற்றை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. காடுகளில் இருந்து மக்களை வெளியேற்ற முனைந்து நிற்பவர்களுடன் நேரடியாக விவாதிக்க வேண்டியிருந்தது. இதை புனைவு என்று சொல்லி எழுத முடியாது. எனவே நேரடியாக பெயர்களைச் சொல்லி, ஆதாரங்களைக் காட்டி எழுதுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
நீலத் தங்கத்தைப் பொறுத்தவரை குடிநீரைத் தனியார்மயமாக்கும் போக்கைப் பற்றி ஒரு ரொமாண்டிக்கான சாகசம் கலந்த பார்வையே செயல்பாட்டாளர்களிடம் உள்ளது. பொலிவியா, கொச்சபாம்மா எழுச்சி போன்றவற்றைத் திரும்பத் திரும்ப உதாரணம் காட்டும் போக்கு இருந்தது.
இந்தியாவில் 15 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக குடிநீர் விநியோகம் தனியார்மயமாகிவருகிறது. சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. இதை மட்டும் தனித்த போக்காகக் கருத முடியாது. ஜவஹர் நகர் புனரமைப்புத் திட்டம், ஸ்மார்ட் சிடி திட்டம் போன்றவற்றுக்கும் இந்த சேவைத் துறைகளைத் தனியார்மயமாக்குவதற்கும் தொடர்பு உண்டு. வாரியங்கள் உருவாக்கத்துக்கும் தனியார்மயத்துக்கும் தொடர்பு உண்டு. இவை அனைத்தையும் முழுமையாகப் பார்க்கும் படி தோழர்களிடம் கோர விரும்பினேன். சூயஸ் ஒரு தனித்த துண்டு அல்ல. எனவே இதைப் புனைவாக எழுத முடியாது அல்லவா?
குவாரண்டைன் காலத்தில் அரசியல் பணி என்னவாக இருக்க வேண்டும்?
எண்ணற்ற பணிகள் செய்யலாம். செய்திருக்க வேண்டும். உதாரணமாக காவிரியில் இப்போது எவ்வளவு நீர் ஓடுகிறது என்பதைக் கணக்கிட்டால், அதை முந்திய வேனிற்காலங்களோடு ஒப்பிட்டால் பெங்களூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி நகரங்கள் காவிரியின் நீரில் எந்த அளவை கபளீகரம் செய்து வருகின்றன என்பதைக் கணக்கிட்டுவிடலாம்.
காவிரி என்பது மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல. நகரமயமாக்கலுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான பிரச்சினை. சாதாரண மக்களின் தேவைகளுக்கும் கார்ப்பரேட்டுகளில் பெருவீத உற்பத்திக்கும் இடையேயான பிரச்சினை. ஆனால் இது பற்றி நமது தரப்பிலிருந்து ஏதாவது ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
அதே போல பல அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. முற்றடங்கில் இவை எப்படிச் செயல்பட்டுள்ளன என்பதைப் பற்றி ஆராய வேண்டும்? உதாரணமாக அரசு வழங்கும் வரிச் சலுகைகளை தனியார் குடிநிர் விநியோக நிறுவனங்கள் வழங்கியுள்ளனவா என்று பார்க்க வேண்டும்.
நமது உற்பத்தி, மேலை நாடுகளில் மக்கள் நல அரசுகளைத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று எழும் கோரிக்கைகள் என்று பலவற்றைப் பரீசீலிக்க இந்த ஊரடங்கு நல்ல வாய்ப்பாக அமையும்.