லாக்-டவுன்- எனும் ஊரடங்கு, வைரஸ் தாக்குதலை விட அதிக பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. பசித்த வயிறு குறித்தோ பட்டினியின் உக்கிரம் குறித்தோ-கூலித் தொழிலாளர்களின் நீண்ட நடை பயணம் குறித்தோ குறைந்த பட்ச மனசாட்சிகூட இல்லாத க——ஆட்சியாளர்கள், வெறும் காணொளி கூட்டங்களில்-புள்ளிவிபர சர்கஸ் வழியே தன் கையாலாகாத் தனத்தை நிரூபித்தார்கள்.
ஒவ்வொரு பத்தாண்டிற்கு ஒரு முறை முதலாளிய ஏகாதிபத்தியம் உற்பத்தி செய்யும் கோமாளி ஆட்சியாளன் ஒரு வைரஸை செஞ்சீனம் உற்பத்தி செய்து உலகின்மீது ஏவிவிட்டது என ஆரூடம் சொல்வதும் உலக சுகாதார நிறுவனம் முதற்கொண்டு அதை மறுத்து அறிக்கைகளால் காலத்தை வீணடிப்பதும் திசை திருப்பலான கைதட்டி, விளக்கேற்றும் காமடி தர்பாரை விட கேவலமாகிப் போனது. இந்த ஊரடங்கு தரப்போகும் அரசியல் பொருளாதார தாக்கம் வைரஸின் நோய் தாக்கத்தை விட பல மடங்கு சமூகத்தின் மீது பின்னடைவை பணியை சாக்காட்டை தரப்போகும் வலத்தை சொல்லி எச்சரிக்காத சமூக விஞ்ஞானிகள் இல்லை.
உலக நாடுகளுக்கு இணையாக நாம் அறிவித்த நுண்ணுயிரியல் விஞ்ஞானிகள், தொழில் நுட்ப இந்திய நிறுவனங்கள் மருத்துகளை நோய் தடுப்பு நடவடிக்கை, வைரஸை கண்டறியும் சோதனைகள் என எவ்வளவோ முயன்றும்-மதவாத ஆட்சியாளர்களின் மூட நம்பிக்கை பிதற்றல்களாலும் மாட்டு சாணத்தையும் மூத்திரத்தையும் கடந்து வரமுடியாத அங்கீகாரங்களாலும் ஊழல் பெருத்த மரண வியாபாரிகளான கார்பரேட் மருந்து நிறுவன அதிபர்கள் மற்றும் அவர்களது அடிமைகளான மத்திய, மாநில அரசுகளின் கமிஷன் மந்திரிகளாலும் வெளியே தெரியாமல் நீர்த்துப் போகிறது.
ராணுவ தளவாடங்களை விட, வெளிநாட்டுப் பயணம், பாராளுமன்ற புதிய கட்டிடம் என யாவற்றையும் விட மக்களின் சுகாதாரத்திற்காக செலவிடும் அரசுகளே இனி தேவை. ராமர் கோவிலும் படேல் சிலையும் ஒரு மருத்துவமனைக்கு இணையாகா. கல்வி சாலைகளில் மதவாத காவி அரசியல் கல்விக் கொள்கையை வீழ்த்தி இனி அடிப்படை சுகாதாரம், அறிவியல் வளர்ச்சி, பகுத்தறிவு பயிற்சி என பாடங்களை மாற்றி எழுதுவோம். புதிய விடியலை நோக்கி மீண்டுவா… மானுடமே.
-ஆசிரியர் குழு