தமிழில் நாவல் இலக்கியம் தோன்றி அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னரே சிறுகதை இலக்கியம் தோன்றியிருக்கிறது.1927ல் வ.வே.சு ஐயர் எழுதிய ‘மங்கையர்கரசியின் காதல்‘ என்ற தலைப்பில் 8 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு வெளியானது. இதுவே தமிழின் முதல் சிறுகதைத் தொகுப்பு நூலாக கருதப்படுகிறது.
ஆதி மனிதன் சைகை மொழியையும், ஒலிகளையும் பயன்படுத்தினான். அது கோட்டுச் சித்திரங்களாக உருவகமாகி, ஒலிக்குறிப்புகளாகவும், ஒலிவடிவமாகவும் உருமாறி, அட்சரங்களாய், வரிவடிவங்களாக தோன்றியிருக்கிறது. அதிலிருந்து மொழி ஏடுகளின் வழியாக இலக்கியம் உருவானது. அதே நேரம் கல்வி அறிவில்லாத பாமர மக்கள் செவி வழியாகக் கேட்டு வாய்மொழியாகப் பேசி தலைமுறை தலைமுறையாகக் கதைகளை வளர்த்தார்கள். வாய்மொழிக் கதைகள் பிற்பாடு நூல் வடிவம் பெற்றது.
சாகித்ய அகாதெமி இந்திய அளவில் பல மொழிகளில் வெளிவரும் சிறுகதைகளைத் தொகுத்து அவ்வவ்போது தொகை நூல்களாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழில் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறது. தமிழ்ச் சிறுகதைகள் எனும் தலைப்பில் இரண்டு தொகுப்புகளும், நவீன தமிழ்ச் சிறுகதைகள் என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பும் வெளிவந்துள்ளன. போராசிரியர் அ.சிதம்பரநாதன், அகிலன், சா.கந்தசாமி ஆகியோர் இந்தத் தொகுப்பினை தொகுத்திருக்கிறார்கள்.
‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்‘ என்ற தலைப்பிலான நான்காவது தொகுப்பை முகிலை இராசபாண்டியன் தொகுத்திருக்கிறார். முகிலை இராசபாண்டியன் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகிலன் குடியிருப்பில் பிறந்தவர். தமிழ் பேராசிரியராகவும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பதிவாளராகப் பணியாற்றியவர். இதுவரை ஐந்து நாவலகளையும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்திருப்பவர். இப்போது தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்.
புதிய தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பில் முப்பத்தோரு சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கு முன் வெளிவந்த தொகுப்புகளில் இடம் பெறாத படைப்பாளர்களின் கதைகள் மட்டும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு தளங்களில் சிறுகதை படைக்கும் படைப்பாளர்கள் இந்தத் தொகுப்பிற்குத் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்கள்.
சிறுகதையின் வடிவம் என்பது தேர்ந்த ஓவியன் மிகவிரைவாக வரையும் கோட்டோவியத்தைப் போன்றது, அது எளிதாக ஒரு கீற்று வரையப்பட்டால் தான் அழகு என்று சொல்வார்கள் அப்படியான ஒரு கீற்று ஓவியமாகத் துவங்குகிறது அண்டனூர் சுராவின் ‘திற‘ சிறுகதை.
தன் சகாக்களுடன் மன்னார்குடி பயணப்படும் இதயம் எக்மோர் ரயில் நிலையத்தில், நிறைத்த கூட்டத்திற்கு இடையில் ரயிலில் உட்கார இடம்பிடிக்கப் போராடுகிறான். இடம் பிடித்த பின், டிக்கெட் எடுக்கச் சென்று வரிசையில் நின்று பிரயத்தனப்பட்டு, கடைசி நேரத்தில் எடுத்து வருகிறான். அந்த அவரசத்தில் அவனது நண்பர்கள் அவனது பையை பிளாட்பாரத்திலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். அதனுள் அவனது கல்விச் சான்றிதழ்கள் உட்பட அனைத்தும் இருக்கிறது.
இதயம் பதட்டத்துடன் அதை எடுத்துவர தாம்பரத்தில் இறங்கி மின்சார ரயிலில் எக்மோர் திரும்புகிறான். அவனது பையை ரயில்வே போலீஸ்காரர்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். நிம்மதியோடு அவர்களிடம் விவரம் சொல்லி பையை பெற்றுக் கொள்கிறான். இனிமேல் ஜாக்கிறதையாக வைத்திருக்க அறிவுரை சொல்லி அனுப்பும் போலிஸ்காரர், அவன் புறப்படும் போது அவன் பெயரைக் கேட்கிறார். ‘இதயத்துல்லா‘ என்று சொன்னதும், அதட்டும் குரலில் பையைத் ‘திற‘ என்கிறார். அவனது பெயரை சான்றிதழோடு சரி பார்ப்பதோடு சந்தேகத்துக்காக புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்புகிறார்கள். போலீஸ்காரர்களின் செயலைக் கண்டு அதிர்ந்து நிற்கிறான் இதயம்.
பெயர் அளவில் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவன் என்பதை அறிந்ததும் காவலர்களின் செயல்பாடுகள் மாறிப் போவதும், செயல் பூர்வமாக வன்முறை கட்டவிழ்வதும் இயல்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறுபான்மைச் சமூக மனிதர்களின் மனதில் வலியவர்களின் கூர் நகங்கள் உண்டாக்கும் கீறல்கள் எத்தனை பெரிய காயத்தை உண்டாக்குகிறது என்பதை ‘திற‘ என்ற ஒற்றைச் சொல் அடையாளப்படுத்திவிடுகிறது.
வாழ்க்கை மனிதர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. துணையின் பிரிவால் உண்டாகும் வெறுமை நாக்கை விட்டு அகலாத கசப்பைப் போல் இருந்து கொண்டே இருக்கிறது. இறப்பின் வழியாக பிரிவு நேர்வது ஒரு வகை என்றால், விவாகரத்தின் வழியாக ஏற்படுவது மற்றொரு வகை. கணவன் விலக்கி வைத்த பின் வாழ்வின் நகர்வில் பெண்கள் சமுதாயத்தை எதிர் கொள்ளும் போக்கு எப்போதும் போராட்டம் நிறைந்ததுதான். அதுவும் குழந்தையுடன் Single parent ஆக உலவுபவர்களின் சோகம் தனி உலகம்.
கணவனால் ‘முத்தலாக்‘ சொல்லி தள்ளி வைக்கப்பட்ட பரக்கத் தன் மகன் மன்சூருடன் தாய் வீட்டிற்கு பயணப்படுகிறாள். கசகசப்பு, வெக்கை, அசதியோடு பீதியும் அவநம்பிக்கையும் கலந்த மனநிலையோடு பிறந்த மண்ணில் கால் வைக்கிறாள். ‘ராவுத்தர்‘ இல்லாமல் தனியே ஒரு பெண் குழந்தையுடன் செல்வதை ஊர் வேடிக்கையாகப் பேசுகிறது. திருமணமானதும் குழந்தை பெற்று பொலி விழந்து போனதைக் காரணம் காட்டி மும்முறை தலாக் சொல்லி அனுப்பிவிடுகிறான் அவள் கணவன். ‘ச்சீ போங்கடா‘ என மஹர் (ஜீவனாம்சம்) தொகையை விட்டெறிந்து மகனை அழைத்துக் கொண்டு வருகிறாள். இப்ப என்ன குடியா முழுகிப்போச்சு. அவனில்லாட்டி பொழைக்க முடியாதா என ஆறுதலாக ஏற்றுக் கொள்கிறாள் தாய். கணவனால் தலாக் தந்து விடப்பட்ட பக்கத்து வீட்டுப் பெண் ஆமினாவை அழைக்கிறாள். ஆமினா தன் மகள் பானுவுடன் வருகிறாள். அறிமுகமாகிறார்கள். குழந்தைகள் மன்சூரும், பானுவும் நட்பாகி விளைபாடுகிறார்கள். குழந்தைகள் விளையாடுகையில் ஒரு கட்டத்தில் ‘இப்படி சோறாக்குனா நீ எனக்கு வேணாம், போடி உன் ஆத்தா வீட்டுக்கு நான் உனக்கு தலாக் குடுத்துட்டேன‘ என்கிறான் மன்சூர். இதைப் பார்த்து ஒருவித வேகத்துடன் பாய்ந்து வரும் பரக்கத், மன்சூரை அறைகிறாள். மன்சூர் அழுகிறான். சிறிது நேரம் கழித்து குழந்தைகள் இருவரும் இணைந்து மீண்டும் சோறு விளையாட்டு விளையாடுகிறார்கள். பெரியவர்கள் ஏதேதோ யோசித்தவாறு கிடக்கிறார்கள் என்று முடிகிறது கீரனூர் ஜாகீர் ராஜாவின் பாவம் இவள் பெயர் பரக்கத் நிஸா சிறுகதை.
பெரியவர் உலகம் எத்தனை விசித்திரமானது என்பதை நுட்பமாக சித்தரிக்கிறது கதை. ஆண்களின் சுயநலப் போக்கையும், ஆணவத் திமிரையும், பெண்கள் மீது அவர்கள் பிரயோகிக்கும் வன்முறையையும் பிரதிபலிக்கும் அதே நேரம், பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத இயலாமையையும் அப்பட்டமாய் சித்தரிக்கிறது. கதையில் பரக்கத் தன் தாய் வீடான திருப்பூருக்கு வருகிறாள். இது நகரத்தில் நடப்பதாய் இருந்தாலும், இது அனைத்து ஊர்களிலும் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது.
பிரிவு வளர்க்கும் அன்பை நெருக்கங்கள் விலக்கி வைப்பதும், உதாசினப்படுத்துவதும், முற்றிலும் தேவையற்றயதாக்குவதும் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விவரணைகள் வழியே முழுக் கதையும் விரிந்து செல்வது உணர்வு ரீதியாக மென் அசைவுகளை ஏற்படுத்துகிறது.
ஒரே ஒரு வானம்தான் என்றாலும், ஒவ்வொரு பறவையும் ஒரு இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒற்றைப் பறவையாய் தன் வானத்தைச் சுற்றும் மனிதனின் கதையாகப் பறக்கிறது பொன்னீலனின் ஈரம் சிறுகதை.
மழை நாள் ஒன்றில் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தன் மனைவி கல்யாணியைக் காண பஸ்ஸில் வருகிறான் கணவன். மழை விடாமல் கொட்டிக் கொண்டே இருக்கிறது. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஆஸ்பத்திரி செல்ல ஆட்டோ டாக்சி கிடைக்காததால் நிறுத்தத்தில் ஒதுங்கி நிற்கிறான். பக்கத்தில் முனகல் சத்தம் கேட்கிறது. ஒரு வேசி பிரசவ வலியால் துடிக்கிறாள். அவளை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். இப்போது பிரசவ வலியால் பலவீனமாகக் கிடக்கிறாள். ஓடிச் சென்று டீக்கடையில் ஒரு கத்தி வாங்கி வந்து, அவள் குழந்தையை பிரித்து எடுக்கிறான். தன் சட்டையைக் கழற்றி சிசுவை சுத்தப்படுத்துகிறான். தான் எடுத்து வந்த போர்வையைத் தந்து அவளை பயணியர் விடுதியில் சேர்க்கிறான். ரெண்டு பன்னும் ஒரு கிளாஸ் பாலும் வாங்கி வந்து தருகிறான். இந்தக் குழந்தையை வைத்து இனி இவள் இந்தக் குழந்தையை வைத்து என்ன செய்வாள், பிச்சைதான் எடுப்பாள் என கற்பனை செய்து பார்க்கிறான். நம்மால என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு பஸ் ஸ்டாண்டிலேயும் இதுபோல எத்தனை பேரு என யோசித்த படி வெளியேறுகிறான். ஈரமான காற்றுக்குள் சட்டையில்லாமல் நடக்கும் போதுதான் எண்ணுகிறான், ‘கல்யாணி… நீ எப்படிக் கெடக்கிறியோ?‘
மழை மட்டும் ஈரத்தை உண்டாக்குவதில்லை, சக மனிதர்களுக்கு உதவும் செயல்களாலும் ஊற்றெடுக்கிறது என்பதை உணர்த்துகிறது கதை. எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல் உதவியாக நீளும் கரங்கள் மனிதத்தை போதிப்பதாகவே இருக்கிறது.
இன்றைய தேதியில் இன்னும் ஒரு நாள் விடுமுறை என்கிற மனநிலைக்கு மனிதர்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையும், அதை முன்னிட்டு மகனை ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வைத்தற்காக, கூப்பிட்டனுப்பிய தலைமையாசிரியரை எதிர் கொள்ளும் ஒரு சாமானிய தந்தையின் அலைச்சலையும் அழகாக பதிவு செய்கிறது இலக்குமி குமாரன் ஞானதிரவியத்தின் ‘பொங்க‘ சிறுகதை.
லீவ் எடுத்ததற்காக மகனை வகுப்புக்கு வெளியே நிற்க வைக்கிறார்கள், தந்தையை சந்திக்க நேரம் ஒதுக்காமல் அலைய விடுகிறார்கள். //வடிகட்டிக்கு… எறும்பைத் தெரியுமா, தூசியைத் தெரியுமா, பாலைத் தெரியுமா?// என்று ஆதங்கத்தோடு நகர்கிறார் தந்தை. ரொம்பவே அலையவிட்டு கடைசியாக சந்திக்க நேரம் ஒதுக்கித்தருகிறார் தலைமை ஆசிரியர். காத்திருந்து காத்திருந்து பொறுமை இழக்கும் தந்தை வெடித்துக் கத்துகிறார். ‘பொங்கலுக்கு ஒருநா லீவு போட்டது தப்பா, அது விவசாயியோட விழாடா‘ என்று வெளுத்து வாங்குகிறார். யார் தடுத்தும் அடங்காமல் பொரிந்து தள்ளுகிறார். அப்போது மகன் அழுது கொண்டே வந்து அவர் கைகளைப்பிடித்து வெளியில் அழைத்துப் போகிறான். பிள்ளையின் முகமும், மனைவியின் முகமும் நினைவிலாட இதுவரை செலவு செய்த பெரும் பணம் மூளைக்கணக்கில் வரைகோடாக ஓடி மறைய மேற்கொண்டு பேசாமல் தளர்வாக பள்ளியிலிருந்து நடந்து போகிறார் தந்தை. தன் ஆதங்கத்தைவிட பிள்ளையின் எதிர்காலம் முக்கியமாகிப் போகும் தருணம் அவரை வாயடைக்க வைத்து நகர்த்தி விடுகிறது.
யதார்த்த வாழ்க்கை கசப்பு ஒரு பக்கம், பிள்ளைகள் மீது வைத்திருக்கும் கனவு ஒருபக்கம் என்று மத்தியதர குடும்பத் தலைவனின் வாழ்வை சித்திரிக்கிறது கதை.
பெயரற்ற மனிதர்களின் சுயநலமற்ற மனிதாபிமானம் நிறைந்த ஈரம் கசியும் செயல்களால்தான் இன்றளவும் வயல்களில் தண்ணீரை ஊற்றெடுக்கச் செய்து கொண்டிருக்கிறது.
நான்கு பக்கமும் வயல்களால் சூழப்பட்ட நிலத்திற்கு வழிநடத்தும் பாதைகள் பெரும்பாலும் வரப்புகள்தான். தன் நிலத்தை அடுத்தவனுக்கு விற்பதைவிட தார்மீக ரீதியாக பக்கத்து வயல்காரனுக்கு விற்பதே சிறந்தது என்று எண்ணி தன் மாமனிடம் வயலை விற்க வருகிறான் கோபால்.
நன்றாக விளையும் வயலை விற்காதே என்ற அறிவுறுத்தலை கோபால் கேட்காமல் போக, வயலை வாங்கிக் கொள்ள சம்மதிக்கிறான் மாமன். வயலை வாங்கிகிட்டா நடுவுல இருக்கிற வரப்பைத் தட்டிட்டு மொத்தமா பயிர் செஞ்சுக்குங்க என்று கோபால் சொல்ல. வயலை வாங்கினாலும் வரப்பை வெட்டமாட்டேன், அந்த வரப்புதான் தங்கள் வயலைத்தாண்டிச் செல்பவர்களுக்கு வழியாக இருக்கிறது. அது இல்லை என்றால் சுற்றிக் கொண்டு போக அவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்கிறான் மாமன்.
ஏட்டுக் கல்வி உருவாக்கிய கதைகளை விட வாய் மொழியாக விரியும் கதைகள்தான் ஏராளமாக இருக்கிறது. அப்படி முன்பு தாங்கள் நடக்க தரப்படாத வயலின் வரப்பை, நிலத்தோடு சேர்த்து வாங்கிக் கொண்டாலும், அடுத்த வயல்காரன் நடந்து போக பயன்படும் வரப்பை வெட்டாமல் இருக்கு முடிவெடுக்கும் மாமனின் மனதில் கசியும் ஈரத்தைக் காட்டுகிறது வரப்பு கதை.
சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுகதைகளும் ஒரு நவீனத்தை நோக்கிய நகர்வாகவே இருக்கிறது. அது இன்றைக்கும் என்றைக்குமான சமூகத்தின் பிரதிபலிப்பாகவும், மனித மனதில் உறைந்திருக்கும் புதிர்களின் ஆச்சர்யங்களை அள்ளித் தந்து, யதார்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாகவும் இருக்கிறது. எல்லாக் கதைகளுமே மனிதர்களின் வாஞ்சையை, அன்பை ஒரு துளியேனும் உலகத்திற்கு காட்டிக் கொண்டே இருப்பதோடு வாசக அனுபவத்தையும் குறைவின்றி தருகிறது தொகுப்பின் இறுதியில் கதாசிரியர்கள் குறித்தான விவரக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது. சிறுகதைகள் எழுதிய 31 நபர்களில் 10 பேர் மட்டுமே புனை பெயரில் எழுதுபவர்களாக இருக்கிறார்கள். ‘ஸ்ரீ கண்டேஸ்வர பக்தவத்சலன்‘ தான், பொன்னீலனின் இயற்பெயர் என்பது இது போன்ற குறிப்புகளின் வழியாகத்தான் தெரிந்து கொள்ள முடிகிறது.
தொகுப்பின் உள் அட்டையில் புத்தரின் அன்னை மாயாதேவி கண்ட கனவின் பலனை நிமித்திகர்கள் மூவர் விளக்கிக் கூற, அதை ஒரு எழுத்தர் எழுதுகிறார். இந்தச் சிற்பம் நாகார்ஜுன மலைச்சிற்பத்தில் இடம் பெற்றிருக்கிறது. எழுதும் கலையைச் சித்தரிக்கும் முதல் இந்தியச் சிற்பமும் இதுதான். சிறுகதைகளின் தொகை நூலுக்கு இப்படியான படத்தை வெளியிட்டிருப்பதும் தொகுப்பை அர்த்தப்படுத்துவதாகவே இருக்கிறது
தலைமையிடத் துணை வட்டாட்சியாளராகப் பணியிலிருக்கும் கதை சொல்லியின் பார்வையில் விரிகிறது பவா செல்லத்துரையின் பிரிவு கதை. TNPSC தேர்வு எழுதி வென்ற தன் மனைவி லாவன்யாவை பணியில் சேர்த்துவிட்டுச் செல்கிறான் ராணுவத்தில் பணி புரியும் கணவன். லாவன்யா சேர்ந்த பிறகு அந்த அலுவலகத்தின் முகம் பொலிவூட்டப்பட்டது போலிருக்கிறது. பணியில் சேர்ந்த பிறகு அலுவலகம், வெளி இரண்டிலுமே லாவண்யா தனித்தே இருக்கிறாள். அதே நேரம் கலகலப்பாகவும் இருக்கிறாள், அவளிடமிருந்து சொற்கள் சதா கொட்டிக் கொண்டே இருக்கிறது. அடிக்கடி கணவனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறாள். தன் கணவனுக்கு தன்னோடு எப்போதும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறாள். சில ஆண்டுகளில் ராணுவப்பணி முடிந்து வீடோடு வந்துசேருகிறான் கணவன். வீட்டோடு இருக்கையில் லாவண்யாவிற்கு வரும் போன் கால்களை கண்டு சந்தேகிக்கிறான். தூரத்திலிருந்து தொலைபேசி வழியே கசிந்த அன்பு ஒருவருக்கு ஒருவர் மீட்டெடுக்க முடியாதவர்களாக மாறுகிறார்கள். ‘அப்ப என்ன வெளியில போடான்ற?‘ வேலைக்குப் போன்றன்‘ எனும் வரிகளில் விரிகிறது பிரிவின் சித்திரம்.