வானம் ஏன் மண்ணில் தெரிய வேண்டும்? வானம் என்பது உயர்ந்த இலட்சியங்கள், கொள்கைகள், நெறிகளின் குறியீடாக படைப்பாளி கருதுகிறார். அவை உயர்ந்த தன்மையைக் கொண்டவை. அவற்றை புவி மாந்தர்கள் கைக்கொண்டால் அப்போது வானம் நம்மிடம் வந்துவிடுகிறது. இங்கு அறம் ஒரு கூறாகிறது. மனித சமுதாயத்தில் அருகி, கருகிக் கொண்டிருக்கும் கருணை, எளியோர்க்கு இரங்குதல். சக மனிதனின்பால் நிபந்தனையும், எதிர்பார்ப்புமற்ற அன்பு கொண்டாடுதல் இதற்கு உதாரணமாகிறது.
எங்கு எதிர்பார்ப்பிருக்கிறதோ அங்கு கருத்து வேறுபாடுகளும், பூசல்களும் இயல்பில் தோற்றம் கொள்கின்றன. இத்தகைய உயர்ந்த, நிபந்தனைகளற்ற அன்பினை, கருணையினை மகாத்மா அவர்கள் தன் வாழ்நாள் முழுதும் பின்பற்றி நடந்தார். அதன் நிமித்தமாகவே அவர் மதம், மொழி, இனம், ஏழை, பொருள் படைத்தவன் என்ற குறுகிய கூறுகளைக் கடந்து உலக மாந்தர்கள் அனைவரையும் நேசித்திட, அன்பு பாராட்டிட அவரால் முடிந்தது.
மாற்றுக் கருத்துக் கொண்டோரையும், தன்னை எதிர்த்தவர்களையும், தன்னைக் கடுமையாகச் சாடியவரையும் அவர் நேசித்தார். மாற்றுக் கருத்துகளை அவர் கவனமாகக் கேட்டுக் கொண்டார். அவர் நிராகரித்தது கருத்துகளை மட்டுமே. அதனைக் கூறியவர்களை அல்ல. இத்தகைய தருணங்களில் அவர் அறிவினையோ, மனதினையோ துணைக்கழைக்கவில்லை. மனச்சான்றினை, ஆழ்மனதின் கூற்றினை ஏற்று அவர் நடந்து கொண்டார். இத்தகைய மேன்மையான பண்பினை அவர் அனைவரும் பின்பற்ற வலியுறுத்தினார்.
சிதம்பர சுப்பிரமணியனின் முன்னுரையும் பொருளாழம் கொண்டது. தாகூரின் சிறந்த வரியொன்றினை மேற்கோள் காட்டித் தொடங்குகிறார். Here is thy foot-stool and there lies thy feet where lives the poorest and lowliest and lost. முன்னுரையிலும் காந்தியடிகள் குறித்தான பல தரவுகளை அவர் தருகிறார்.
கதை நாயகனான நடராஜன் பட்டப் படிப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியுற்றவன். பேருந்தில் உயரதிகாரி பயணம் செய்யும் நிமித்தம் அவனை இடம் மாற்றி உட்காரக் கூறுகின்றார் நடத்துனர். அதை மறுத்து விவாதம் செய்யும் சிறு நிகழ்வே இப்படைப்பின் துவக்கப்புள்ளியாகிறது. அவன் தந்தையோ தன் மகன் ஐ.ஏ.எஸ் தேர்ச்சியடைந்து ஆங்கில அரசில் உயரதிகாரியாக பணியில் சேர வேண்டுமென விரும்புகிறார்.
இந்நிகழ்விற்குப் பின்னர் நடராஜனின் வாழ்க்கைப் பயணம் திசை மாற்றம் பெறுகிறது. நடராஜன் ஆங்கிலேயரை இந்திய மண்ணை விட்டு விரட்டும் உயர்ந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறை செல்கிறான். தந்தையும், தனயனும் இறுதி வரை அதற்குப் பின்னர் பேசுவதுமில்லை, சந்தித்துக் கொள்வதுமில்லை.
சிறை அவனை மேலும் பக்குவமாக்குகிறது. விடுதலை பெற்றதும் அவன் பாபுவின் ஆசிரமத்தில் தொண்டு செய்திடும் வாய்ப்பு தேடி வருகிறது. பாபுவின் நிழலில் அவன் அகிம்சை, உண்மையின் தத்துவம், எளிமை, பணிவு போன்ற பல பாடங்களை பெற்றுக் கொள்கிறான்.
தன்னுடன் முரண்படுபவர்கள் குறித்தான காந்தியின் பார்வைகளும், கொள்கைகளும் அவனை மனதளவில் உண்மையான, நாகரீகம் பெற்ற மனிதனாக்குகின்றன. காந்தியும் அவனும் பல தருணங்களில் உரையாடும் பகுதிகள் சுவாரசியமளிப்பவை, நடைமுறையில் உண்டாகும் பல பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது? அதற்கு காந்தியின் தீர்வு எவ்வாறாக உள்ளது? போன்ற பல பகுதிகள் படைப்பில் இடம் பெறுகின்றன. இதன் விளைவாக பல்வேறு அரிய, சீரிய அனுபவங்களை நடராஜன் பெறுகிறான். வாழ்வினை முற்றிலும் புதிய பார்வையில், கோணத்தில் அணுகும் பட்டறிவு அவன் வசமாகிறது.
காந்தியின் கொள்கைகள், மேடைப் பேச்சுகள், அவரின் அறிவுரைகள், நூல்கள் ஆகியவற்றினை இந்திய மக்கள் வாசித்திருப்பர், கேட்டிருப்பர். ஆயினும், காந்தியே ஒரு கதைமாந்தராக உயிர் பெற்று உலவி, கதையில் இதர பாத்திரங்களுடன் உறவாடும் புதுமைப் புதினமாக மண்ணில் தெரியுது வானம் விளங்குகிறது.
நாவலின் நெடுகிலும் அறம் சார்ந்த துல்லியமான உள்ளீடுகள் ஆங்காங்கே பொதியப்பட்டுள்ளன. காந்தி மட்டுமல்லாது பல தலைவர்களின் உரையாடல்கள், காந்தி செய்தியாளர்களுடன் நடத்தும் விவாதங்கள், பல தருணங்களில் காந்தி நகைச்சுவையுடன், திறந்த மனதுடன் தன் பார்வையினை விளக்குதல் ஆகியவற்றினை தன் எழுத்தின் வழி படைப்பாளி பதிவு செய்துள்ளார்.
சிதம்பர சுப்பிரமணியன் காலத்திய படைப்பாளியான தி.ஜ,ர-வும் இதில் முக்கிய கதைமாந்தராகப் படைக்கப்பட்டுள்ளார். தி.ஜ.ர,வின் படைப்பு மிக மேன்மையானதாக உருவாக்கப்பட்டுள்ளது. பல எழுத்தாளர்கள் இப்படைப்பில் கதை மாந்தர்களாகின்றனர்.
சேவை முடிந்ததும் அவன் சென்னை திரும்பி ஒரு இதழாசிரியனாகப் பணி புரிகிறான். கதையின் இறுதியில் சிறுவர்களுக்கான கல்வி நிலையம் ஒன்றை நிறுவி ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொண்டு செய்வதாக படைப்பு நிறைவு கொள்கிறது.
நாவல் எனினும் சில இடங்களில் அது கட்டுரையின் தன்மையினையே கொண்டுள்ளது. படைப்பாளியின் இலக்கியங்கள் குறித்த ஆழ்ந்த பரிச்சயமும், புலமையும் படைப்பெங்கிலும் அடங்கிக் கிடக்கின்றன. ஆங்கில கவிதைகளும், பல வடமொழி இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்களும், தமிழிலக்கியங்களிலிருந்து குறிப்புகளும், பாடல்களும் மிகப் பொருத்தமான தருணங்களில், சூழலுக்கேற்ப சிதம்பர சுப்பிரமணியன் கையாளுகிறார்.
பாவம் செய்ததற்காக நீ என்னை மன்னிக்க வேண்டும் பாவத்தை உலகில் படைத்ததற்காக இறைவனே நான் உன்னை மன்னிக்கிறேன். என்ற உமர் கயாமின் ஒரு கவிதையையும் படைப்பில் பொருத்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
படைப்பின் எப்பகுதியும் வாசகனுக்கு சோர்வினையோ, சலிப்பினையோ அளிப்பதில்லை. ஒரே அமர்வில் இதனை வாசித்து முடித்துவிடும் சாத்தியங்கள் அதிகம். ஒவ்வொரு இந்தியனின் மனநிலையும் அன்று எவ்வாறு இருந்தது? தனி மனிதன் அகிம்சை, சத்தியம் ஆகிய உயர்ந்த நெறிகளை தன் மூச்சாக ஏற்றுக் கொண்டு வாழ்வது எப்படி? இவை எல்லாவற்றிற்குமான இலக்கிய சாட்சியம்தான் சிதம்பர சுப்பிரமணியனின் மண்ணில் தெரியுது வானம் நாவல்.
ஜார்ஜ் ஜோசப் என்ற மகத்தான, உள்ளார்ந்த அர்ப்பணிப்புடன் எந்தப் பிரதிபலனையும் எதிர்நோக்காது பணியாற்றிய தொண்டரைப் பற்றிய குறிப்பும் இந்த நாவலில் இடம் பெறுகிறது. (இவரைப் பற்றிய கூடுதலான தரவுகளுக்கு பழ.அதியமானின் ‘நவீனத் தமிழ் ஆளுமைகள்‘ நூல் உதவுகிறது)..
உப்பு சத்யாகிரகம் பற்றிய காட்சி உயிர்ப்புள்ளது. கந்தப்பன் என்னும் தொண்டன் உப்பினை கையில் எடுத்துக் கொள்கிறான். அவனை வெள்ளைக்கார சார்ஜெண்ட கடுமையாகத் தாக்குகிறார். அவன் கீழே விழுந்தும் தன் கையில் இறுகப் பிடித்திருக்கும் உப்பினை விடவில்லை. ஓங்கி அவன் கையை மிதிக்கிறார் அதிகாரி. அவனுடைய கட்டை விரல் துண்டிக்கப்பட்டு தெறித்து விழுந்து துடிக்கிறது. இருப்பினும் அவன் பிடி தளரவில்லை, உப்பினையும் கீழே போடவில்லை. அது உப்பு மட்டுமல்ல. தன் உரிமையினை, கடமையினை, தன் சுதந்தரத்திற்கான வேட்கையை விடாது பிடித்துக் கொண்டிருக்கிறான் என்பதை ஆழமாக உணர்த்தும் காட்சியாக அது பதிவு பெறுகிறது.
அதுபோன்றே நல்லதம்பி என்ற தொண்டரின் பாத்திரமும் மிகச் செறிவுடன் சித்தரிக்கப்படுகிறது. அவர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்படுகிறார். அவருடைய மனைவி வேறு ஒருவருடன் வாழத் தொடங்குகிறாள். சிறையிலிருந்து விடுதலையான நல்லதம்பி வீடு திரும்புகிறார். அவர் அந்த மனிதனையும், மனைவியையும் சேர்ந்து ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுறுத்திவிட்டுத் திரும்பிவிடுகிறார்.
இது குறித்து தி.ஜ,ர கேட்கும்போது, ஒன்னு குடும்பம் நடத்தியிருக்கணும், இல்ல தேசத்துக்கு தொண்டு செஞ்சிருக்கணும். தவறு என்னுடையதுதான். மனைவியை காட்டிலும் தேசம் பெரிது. அதனாலேயே மனைவியை விட்டுட்டேன் என்கிறார். இது போன்ற பல உள்ளங்களின் மகத்தான தியாகத்தால் அடைந்தது விடுதலை.
கடற்கரையில் கூடி நடராஜனும், அவரது நண்பர்களும் உரையாடும் காட்சியும், அங்கு ஆரோக்கியமான விவாதங்கள் நடப்பதும் வாசகனுக்கு மிகுந்த பொருளாழத்தினை அளிப்பவை. இன்று வளரும் இளந்தலைமுறையிடம் இத்தகைய ஆழமிக்க, பொருள் பொதிந்த விவாதங்கள் காணப்படுகிறதா என்ற வினா எழுகிறது. இப்புனைவில் பல இதழ்களில் வெளியான செய்திகளும் இடம் பெறுகின்றன.
நாவலின் இறுதிப் பகுதியில் மகாத்மா கொல்லப்படுகிறார். அந்தச் செய்தினை நடராஜன் மிக்கதொரு மனமுதிர்வுடன் ஏற்றுக் கொள்கிறான். மகாத்மா தான் வாழும் காலத்தில் சாதிக்காதது ஏதுமிருப்பின் தன் மரணத்தின் வாயிலாக அதனைச் சாதிப்பார் என்று நடராஜன் நம்புவதாக ஒரு செறிவான கூற்றினை சிதம்பர சுப்ரமணியன் முன்வைக்கிறார்.
இதழாசிரியராகப் பணியாற்றும் நடராஜனுக்கு அவர் எழுதிய தலையங்கம் நிர்வாகத்திற்கு ஏற்புடையதாக இல்லாத சூழல் உருவாகிறது. நிர்வாகி அது குறித்து அவருடன் விவாதிக்கிறார். அத்தருணத்தில் சுதந்தரத்திற்கு முந்தைய காங்கிரஸ் வேறு. இப்போதுள்ள காங்கிரஸ் வேறு. அப்போது அந்நிய ஆட்சியை எதிர்க்க உருவானது. அன்று காங்கிரஸ் வேறு தேசம் வேறேன்று சொல்ல முடியாது. ஆனால், இன்று கட்சி வேறு, தேசம் வேறென்று கூற முடியும். கட்சி நலனுக்காக தேச நலனைப் புறக்கணிக்கக்கூடும். இருப்பினும், பத்திரிக்கையாளர்களாகிய நாம் தேச நலனைக் குறித்தே கவலை கொள்ள வேண்டும் இவ்வாறான நடராஜனின் கருத்தினையும், தலையங்கத்தினையும் நிர்வாகம் ரசிக்கவில்லை. நடராஜன் தன்னைப் பணியிலிருந்து விடுவித்துக் கொள்கிறார். இவ்வுரையாடலின் பொருளினை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும்.
.
எண்ணற்ற, முகமறியா மனிதர்களின் உள்ளார்ந்த அர்ப்பணிப்பினாலும், தியாகத்தாலும் பெற்ற சுதந்தரத்தின் பொருளும், மேன்மையும் யாராலும் நினைவு கூறப்படுவதில்லை. அது அளிக்கும் அடிப்படை உரிமைகள், நாம் சக மனிதனுக்கும், சமூகத்திற்கும் ஆற்றிட வேண்டிய கடமைகள் குறித்தும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படுவதில்லை. ஒரு புறம் கற்றோர் விழுக்காடு கூடிக் கொண்டே இருக்கும் சூழல் இருப்பினும், பகுத்தறிவுடன் சிந்திப்போரின் விழுக்காடு குறித்துப் பேச எவரும் முற்படுவதில்லை.
இன்றைய தலைமுறைக்கு சுதந்தர நாள் என்றால் விடுமுறையுடன் இனிப்பு கிடைக்கும் என்ற கசப்பான எதார்த்தத்தினை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலை. வீட்டிலிருப்போர் நாள் முழுதும் தொலைக்காட்சியில் தேசபக்தித் திரைப்படம் என்கிற போர்வையில் திரையிடப்படும் மலினமான, பார்வையாளர்களை சிந்தனையை மழுங்கடிக்கும் குப்பைகளையும், நுகர்வோருக்கான போலி விளம்பரங்களையும் பார்த்து கைதட்டி, விசிலடித்துப் புளகாங்கிதமடையும் ஒரு கூட்டமாகின்றனர்.
மேலை நாடுகளின் உடை, நடை போன்ற நாகரீகத்தினை மட்டும் நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு வாழத் தொடங்கிவிட்டோம். ஆனால், மேல் நாட்டு மக்களின் சிறந்த பண்புகளை நாம் வசதியாகப் புறக்கணித்துத் தள்ளிவிடுகிறோம். அவர்கள் பொது இடங்களில் கடைபிடிக்கும் கண்ணியம், நேரந்தவறாமை, சட்டத்தினை மதித்து பொது வெளியில் நடந்து கொள்ளுதல், பணி இடங்களில் தனது கடமைகளை நேரத்தினை வீணாக்காது செய்தல், அங்கு பல்வேறு அலுவல்களாக வரும் சாமானியரை மதித்து அவர்களுக்கு வழிகாட்டி அவர்களது தேவைகளை செய்து கொடுத்தல் என இவ்வாறானவற்றை நாம் அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளவில்லை, அதற்கு முயற்சிப்பதுமில்லை.
திரைப்படங்களைப் பார்த்துவிட்டு பொது இடங்களில் கூச்சலிடுதல், பெண்களை இழிவாக கேலி செய்தல், மது அருந்திவிட்டு பொறுப்பற்ற வகையில் எங்கும் திரிதல் போன்ற செயல்களே உயர்ந்த நாகரீகம் என எண்ணிக் கொண்டிருக்கும் மனப்போக்கே இன்றைய சூழல்.
தார்மீக நெறிகளை, அறம் குறித்த எண்ணங்களை, கருத்துகளை யாரும் வளரும் தலைமுறைக்குள் விதைத்திட விரும்புவதில்லை, முயல்வதுமில்லை.. குழந்தைகளுக்கு பொறுப்புகளை, கடமைகளை உணர்த்துவதில்லை. வாசகர்கள் தங்களது குழந்தைகளுக்கு சொற்ப நேரத்தினையாவது ஒதுக்கி இது போன்ற உயர்ந்த நெறிகளைச் சுட்டிக்காட்டும் நூல்கள் குறித்துப் பேசி அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தினை உருவாக்க வேண்டும். இது போன்ற நூல்களைத் தேடிக் கண்டடைந்து தங்களது சேகரிப்பில் சேர்க்கவேண்டும். இந்நூலினை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
காந்தி என்பதற்கு பிரகாசமான ஒளி என்பது பொருள். அந்த ஒளியின் தெறிப்புகளே இப்புதினத்தில் இடம் பெறும் கதை மாந்தர்கள். அறப்போராட்டத்தில் பங்கு பெற்று சொல்லொணா இடர்களை அனுபவித்த தொண்டர்களும் தங்களது இன்னல்களைப் பொருட்படுத்தவில்லை, மாறாக, அவற்றை இன்முகத்துடன் ஏற்றனர். இது காந்தி என்னும் தன்னலங்கருதாத மேன்மை கொண்ட மனிதனுக்கான சாமானியர்களின் வெகுமதியானது
மனம் நாகரீகமடைய வேண்டும். நல்ல நெறிகளால் மேன்மையடைய வேண்டும். அதுவே சிறந்த மாற்றம். மகாத்மா சிலையாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை அவரது சிந்தனைகளை, கோட்பாடுகளைப் பின்பற்றி, அவற்றிற்கு உயிருட்டி. வாழவைப்பதே அவருக்கு நாம் அளிக்கும் உயர்ந்த மேன்மையாகும். சான்றோர் முதல் சாமானியன் வரை ஒவ்வொரு குடிமகனையும் மனச்சான்றின் வாயிலாக பல அவசியமுள்ள, ஆழமான கேள்விகளுக்கு உட்படுத்தும் புதினமாக இது விளங்குகிறது.