நாவல் இலக்கியம் ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், சமுதாய முன்னேற்றத்திற்கும், பகுத்தறிவின் மேன்மைக்கும், மூட நம்பிக்கைகளை உடைப்பதற்கும் ஒரு கருவியாகவே இருக்கிறது. புனைவு வகைகளில், தமிழில் மிகக் குறைவாக எழுதப்பட்ட மானுடவியலின் முக்கியத்துவத்தை முன்வைத்து, வாழ்க்கையின் நிதர்சனத்தையும், அதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி அதன் வழியாக, இயற்கைக்கும் மனிதனுக்குமான வாழ்க்கையின் தரிசனத்தைக் காட்டுகிறது சி.சரவணகார்த்திகேயனின் கன்னித்தீவு நாவல்.
அந்தமான் நிக்கோபார் தீவு என்றதும் செல்லுலார் ஜெயிலும், பெரிய பெரிய இளநீரும், நீலக்கடலும், காலாபாணி திரைப்படமும், இருட்டு அறைக்குள் நிற்கும் மனிதர்களைப் போன்ற கருப்புநிற உடல் கொண்ட பழங்குடி மக்களும்தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அப்படிப்பட்ட அந்தமானின் தீவு ஒன்றில், நாகரீகம் அறிமுகமாகாத பழங்குடி மக்களிடம், வேடனின் வலையில் மாட்டிக் கொண்ட உயிருள்ள பறவையாய், ஒரு நிறைமாத கர்ப்பினி தன்னந்தனியாக சிக்கிக் கொண்டு, அத்தீவிலிருந்து எப்படி மீண்டு வருகிறாள் என்பதை தேடலையும், உழைப்பையும் கொடுத்து, விஸ்தீரணத்துடனும், பதட்டத்துடனும் விவரிக்கிறது நாவல்.
மெல்லிய சரடாய், சன்னமான நீரோட்டமாய் ஒற்றைக் கோட்டில் நீள்கிறது கதையின் போக்கு.
முருகன்-பார்வதி இருவரும் காதலித்து, பார்வதியின் பெற்றோரை எதிர்த்து கலப்புத் திருமணம் செய்து கொண்டு அந்தமானில் வசிக்கிறார்கள். முருகன் போர்ட் ப்ளயரில் ISRO/ISTRAC-Grade C சயின்டிஸ்டாக இருக்கிறான். பார்வதி கேந்திரிய வித்யாலயாவில் டீச்சராக இருக்கிறாள். நிறைமாத கர்ப்பினி. அந்தமானில் டாக்டர் மித்தாலி சாட்டர்ஜியிடம் செக்கப்பிற்காக வருவதிலிருந்து துவங்கி நீள்கிறது கதை.
பார்வதியை Ultra Sound Scan செய்து பரிசோதிக்கும் மருத்துவர், அவள் கருவுற்று ஒன்பது மாதங்கள் நிறைவடைவதால், மருத்துவ விடுப்பு எடுக்குமாறும், பெரியவர்கள் யாரையாவது வந்து பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்துகிறார்.
கதை 2004ன் இறுதியில் நிகழ்கிறது. அந்தமானில் அப்போது பாராளுமன்ற இடைத் தேர்தல் நடை பெற இருக்கிறது. பிரசவ விடுப்பிற்காக பள்ளியில் விண்ணப்பிக்கச் செல்லும் பார்வதியிடம், நடைபெற இருக்கும் பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கு அவளை Presiding Officer ஆக பணியாற்ற வந்த சுற்றறிக்கையைத் தருகிறார் தலைமை ஆசிரியர். அதைத் தவிர்க்க இயலாத விவரத்தைச் சொல்ல, வேலையையே விட்டுவிடச் சொல்கிறான் முருகன். விரும்பி ஏற்ற ஆசிரியை வேலையை விட மனமில்லாததாலும், அதோடு தேர்தல் பணி சுலபமானது என்பதாலும், தேர்தல் பணிக்கு போக நினைக்கிறாள் பார்வதி. அவள் அம்மா வீட்டுக்கு போன் செய்து கருத்து கேட்கச் சொல்கிறான் முருகன். ‘மக செத்துப்போயிட்டான்னு சொன்னவங்க கிட்ட பேசச் சொல்றியா‘ என்கிறாள். ‘பார்த்துக்க பெரியவங்க இருக்காங்களான்னு டாக்டர் கேட்டாங்களே உன் அப்பாவோ, அம்மாவே விரும்பினா வரட்டுமே‘என்கிறான்.
ஒரே நாளில் தலைகீழாய் மாறுவானா ஒரு மனிதன் என்று புரியாமல் பார்க்கிறாள் பார்வதி.பார்வதிக்கு முருகனை முதன் முதலில் ஐஐடி (சென்னை)யில் பார்த்ததும், அங்கு பஸ்ஸில் ஒருவன் பார்வதியிடம் தவறாய் நடந்து கொள்ள முயன்றபோது, அவனை முருகன் அடித்ததும், அழுதபடி இருந்த பார்வதியை தேற்றியதும் நினைவுக்கு வருகிறது. ‘உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளைங்க முன்னேற முடியும்‘என்ற முருகனின் ஆறுதல் வார்த்தைகள் பார்வதியைக் கவர்கிறது. பழகுகிறார்கள். பழக்கத்தின் இறுதியில் முருகனிடம் காதலைச் சொல்கிறாள் பார்வதி. முருகன் தன் சாதியைச் சொல்கிறான் (முருகன்,தலித் பார்வதி,மாமி) பார்வதி சம்மதிக்கிறாள். ‘ஒரு போதும் நீ என்னை என் சாதியின் அடிப்படையில் இழிவு படுத்தக்கூடாது‘ என்று பார்வதியிடம் உத்திரவாதம் வாங்குகிறான் முருகன். காதல் விஷயம் பார்வதியின் வீட்டில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்துகிறது. ‘நீ செத்துட்டதா நினைச்சுக்கறேன் போயிடு என்கிறார் அப்பா. முருகனுடன் வெளியேறி திருமணம் செய்து கொண்டது நினைவுக்கு வருகிறது.
பார்வதி அம்மாவுடன் போனில் பேசுகிறாள். ‘மகள் செத்து இரண்டரை வருஷமாச்சு‘ என்று போனை துண்டிக்கிறாள் அம்மா. பிறகு முருகன் போன் செய்து சுருக்கமாய் விவரத்தை சொல்கிறான். சிறிது நேரம் கழித்து பார்வதியின் அப்பாவிடமிருந்து போன் வருகிறது. பார்வதி பேசுகிறாள். அம்மா அப்பா இருவரும் கிளம்பி அந்தமான் வந்து அவளுக்கு வளைகாப்பு நடத்தி, பிரசவம் நடக்கும் போது அவளருகில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சந்தோஷம் பொங்க முருகனிடம் விவரத்தைச் சொல்கிறாள். அதோடு எலெக்சன் டூட்டிக்கு போக வேண்டாம் என அவள் அப்பா சொன்தை மாற்றி, தன் ஆசையை இணைத்து முருகனிடம் பொய் சொல்கிறாள் பார்வதி.
பார்வதி தேர்தல் அதிகாரியாகச் செல்ல வேண்டிய இடம் லிட்டில்அந்தமான் தீவு. அத்தனை தொலைவு என்றால் முருகன் போக அனுமதிக்க மாட்டான் என்று புரிந்து போர்ட் ப்ளயரிலில்தான் தேர்தல் பணி என்று இன்னொரு பொய்யைச் சொல்கிறாள். முருகன் பாதி மனதாக பார்வதியை வழியனுப்புகிறான். திரும்பி வந்ததும் முருகனிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று எண்ணுகிறாள் பார்வதி.
பார்வதி, லிட்டில் அந்தமான் தீவிற்கு கப்பலில் பயணிக்கிறாள். அவளோடு ரஸுல் (முகமது ரஸுல்) என்னும் AnSI வைச் சேர்ந்த மானிடவியலாளரும் வருகிறார். அந்தமான் தீவில் வசிக்கும் ‘ஓங்கே‘ பழங்குடிகள் பற்றி ஒரு ஆய்வு கட்டுரையைச் சமர்பித்தால் தனது தலைமை இயக்குனர் கனவு நெருக்கமாகும் என்ற சிந்தனையில் வருகிறார். அந்தமான் தீவுகளைப் பற்றியும், பழங்குடியினரைப் பற்றியும் பார்வதியுடன் பேசியபடி வருகிறார்.அவருடன் நிக்கி என்ற புகைப்படக்காரனும் வருகிறான்.
ஹட்பே (Hut bay) என்ற இடத்தை அடைந்து, 12 கி.மீ தள்ளி இருக்கும் வாக்குச்சாவடிக்கு ட்ராக்டரில் செல்கிறார்கள்.தேர்தலுக்கான அனைத்து எற்பாடுகளையும் செய்துவிட்டு,வாக்குச் சாவடிக்கு வந்து சேர்ந்த விவரத்தை முருகனுக்கு தொலைபேசியில் தெரிவிக்கிறாள். அன்று இரவு நிக்கி அவளிடம் இரட்டை அர்த்தம் தொணிக்க பேசுகிறான், அவனைத் திட்டி அனுப்புகிறாள்.
மறுநாள் மொத்தமாய் 107 வாக்குகள் கொண்ட தேர்தல் துவங்குகிறது.மாலை மணி மூன்று வரை ஓட்டுப் போட ஒரு பழங்குடியின மக்கள் கூட வராமல் போக, அவர்களை நோக்கி நாம் போவோம் என்று முடிவெடுக்கிறார்கள். தரை வழிப் பயணம் கடினம், ஆபத்து என்று ரஸுல் சொல்ல, அதை ஏற்று கடல் வழியே தனி விசைப்படகில் பார்வதி, ரஸுல், நிக்கி, இன்ஸ்பெக்டர், ஒரு கான்ஸ்டபிள், மொழிபெயர்ப்பாளர் செல்கிறார்கள். படகோட்டி இயக்குகிறான்.
பாதி வழி பயணித்ததும் மழை பெரிதாய் பெய்கிறது. கூடவே கடல் சீற்றமும் ஏற்பட, கப்பல் டாஸ்மாக்கிலிருந்து கிளம்பும் வாடிக்கையாளனைப் போல் தடுமாறி, கவிழ்கிறது. பார்வதி லைஃப் ஜாக்கெட்டின் உதவியால் கடலில் மிதக்கிறாள். கண்முன்னே கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி இறப்பதையும், ரஸுலும், இன்ஸ்பெக்டரும், மொழி பெயர்ப்பாளனும், படகோட்டியும் அவளுக்கு நேர் எதிர்க்கி திரையில் செல்வதையும் பார்க்கிறாள். வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் கடல் நீரைக் குடிக்காமல் மிதந்து தத்தளிக்கிறாள். கடல் சீற்றம் தனிய, பார்வதி ஒரு தீவில் கரை ஒதுங்குகிறார்கள்.
விழித்துப் பார்க்கையில் பார்வதிக்கு முருகனிடமிருந்து போன் வருகிறது. பேசும் முன் சட்டென்று சிக்னல் அணைந்து போகிறது. உணவு, தண்ணீர் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறாள்.தீவினுள் ஒரு சிறிய சுனை தென்படுகிறது சென்று தண்ணீர் குடிக்கிறாள். கடற்கரையில் ஒரு உடல் தெரிய ஓடிச் சென்று பார்க்கிறாள். அது நிக்கி. கண் விழித்ததும் நிக்கி தண்ணீர் கேட்கிறான். பார்வதி தருகிறாள். ஆசுவாசம் கொண்டதும், ‘யூ லுக் ஸோ செக்ஸி‘ என்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வளர்கிறது. கை கலப்பு நடக்கிறது. அப்போது அந்தத் தீவில் வசிக்கும் பழங்குடிகள் எட்டிப் பார்க்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் அவர்கள் லெமூரியர்கள் என்பதை அறிந்து கொள்கிறாள் பார்வதி.வேற்று மனிதர்களைப் பார்த்ததும், திகைத்து, ஈட்டியை எரிகிறார்கள் பழங்குடிகள். அதில் நிக்கி கொல்லப்படுகிறான். பார்வதியை நோக்கி ஒரு பழங்குடிக் கருமன் ஈட்டியைத் திருப்ப, ஒரு பழங்குடிப் பெண் வந்து கர்ப்பிணியான பார்வதியைக் கண்டு காப்பாற்றுகிறாள்.
பழங்குடிகள் நிக்கியின் உடலை புதைக்கிறார்கள். பார்வதி தன்னைக் காப்பாற்றிய பெண்ணைப் பார்க்கிறாள், அவள் பார்வையில் கனிவும் பரிவும் கொண்ட அன்னை மேரியாகத் தெரிய, அவளை மரியா என அழைக்கிறாள் பார்வதி. பழங்குடிப் பெண்ணுடனேயே சென்று அவள் குடிசையிலேயே தங்குகிறாள். பார்வதி, மரியா கொடுக்கும் உணவைச் சாப்பிடுகிறாள், மரியாவின் குழந்தையுடன் பழகுகிறாள். மரியாவின் குடிசைக்கு கருமன் வந்து போவதை கவனிக்கிறாள்.
லெமூரியர்களுக்கு உணவு, வசிப்பிடம், காமம் அனைத்தும் பொதுவாக இருப்பதையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக இருப்பதையும் அதிர்ச்யோடு கவனிக்கிறாள். பழங்குடியினர் இயற்கையோடு கலந்து வாழ்வதையும் பார்க்கிறாள்.
லெமூரியர்களின் தீவை நோக்கி ஒரு கப்பல் வருகிறது, அதிலிருந்து படகு மூலம் மீனவர்கள் வருகிறார்கள். அவர்களை நோக்கி ‘ஹெல்ப்‘ என்ற அலறுகிறாள் பார்வதி. அவளைப் பார்ப்பவன் பார்வதியை கவர்ந்து செல்ல எண்ணுகிறான். படகில் வருபவர்களைக் கண்ட பழங்குடிகள் அம்பு எய்து சண்டையிடுகிறார்கள். அம்பு படகில் பாய, கடல் நீர் புகுகிறது. அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள்.
பார்வதி தன் வீட்டை நினைத்துக் கொள்கிறாள், அப்பா அம்மா அந்தமான் வந்திருப்பார்கள், முருகன் பதறிக் கொண்டு இருப்பான், வளைகாப்பு நடத்தியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறாள்.
மரியாவின் குழந்தையை அழைத்து அவனுக்கு பேச தமிழ் சொல்லிக் கொடுக்கிறாள். தான் கிளம்ப வேண்டும் என்பதை சைகையாக மரியாவிடம் தெரிவிக்கிறாள். மரியா பழங்குடிகளின் மூப்பனிடம் பேசுகிறாள்.அவர்கள் பார்வதிக்காக ஒரு துடுப்புப் படகை தயாரித்து, அவளை கடலில் அனுப்புகிறார்கள். பார்வதி கடலில் போகும் போது அவளுக்கு முருகன் அனுப்பியிருந்த SMS கிடைக்கிறது. போனில் லேசாய் சிக்னல் கிடைக்க, முருகனிடம் அழுதபடி லெமூரியால இருக்கேன் என்கிறாள். சிக்னல் கட்டாகிறது. பார்வதி சிக்னலுக்கா படகில் எழுந்து நின்று செல்லை உயர்த்திப் பிடிக்க, படகு நிலைதடுமாறி கடலில் சரிகிறாள். அதை தூரத்திலிருந்து பார்க்கும் மரியா அவளை கரைசேர்க்கிறாள்.
மரியாவின் குடிசைக்குள் மயக்க நிலையில் படுத்திருக்கிறாள் பார்வதி. அப்போது அவளை பலவந்தப்படுத்த முனைகிறான் கருமன், அதைக்கண்ட மரியா கோபத்துடன் ஈட்டியால் கருமனை குத்திக் கொல்கிறாள். யாரும் பார்க்காவாறு கருமனின் உடலை புதைக்கிறாள். இன்னொரு பெண்ணிடம் தவறாய் நடந்து கொண்டதற்காக தன் சிநேகிதத்திற்காக, மரியா அவள் குழந்தையின் தகப்பனையே கொன்றிருக்கிறாள் என நினைக்கிறாள் பார்வதி.
இயற்கையில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களை வைத்து, வரும் ஆபத்துகளை தீவுவாசிகள் அறிந்து கொள்கிறார்கள். திடீரென்று தீவில் நிலநடுக்கம் எற்படுகிறது. தரையில் படுத்து தப்பிக்கிறார்கள். தீவின் மூப்பர் சொல்ல, எல்லோரும் எழுந்து காட்டுக்குள் நடக்கிறார்கள். காட்டின் மத்திய பகுதிக்கு வந்து ஒரு பெரிய மரத்தில் ஏறிக் கொள்கிறார்கள். பார்வதியும் ஏறிக் கொள்கிறாள். அங்கிருந்து பார்க்கும் போது கடல் தெரிகிறது. திடீரென்று கடல் கொந்தளிப்புடன் பெரிய அலைகளாக எழுகிறது. சுனாமி தாக்குகிறது. ஏழு பேரலைகள் வந்த பின் ஓய்கிறது. மரத்திலிருந்து இறங்கி வருகிறார்கள். தங்கள் இடத்திற்கு வந்து மீண்டும் குடிசைகளை உருவாக்குகிறார்கள்.
பார்வதி சுனையில் குளித்து துணியைத் துவைத்துத் திரும்ப, அவளுக்கு ஒட்டியாணம் போல் இலை உடைகளை தைத்துத்தருகிறாள் மரியா. பார்வதிக்கு பிரசவ வலி உண்டாகிறது. உடல் மொழி, சைகைகள் மூலம் அதை மரியாவுக்கு தெரிவிக்கிறாள். பார்வதியை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துப் போகிறாள். மரியா மட்டும் துணையிருக்க பார்வதிக்கு பிரசவம் ஆகிறது. பெண் குழந்தை பிறக்கிறது. மரியா குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து ரத்தத்தைத் தொட்டு பொட்டு வைக்கிறாள். குழந்தையை சுனை நீரில் கழுவுகிறாள். லெமூரியா பழங்குடியின் மூப்பர் வந்து குழந்தையின் உள்ளங்காலில் மையால் ஒரு குறியீடு வரைகிறார்.
அப்போது தான் பார்வதிக்கு லெமூரியர்கள் நெருப்பை பயன்படுத்தாதிருப்பது தெரிகிறது. உடனே நிக்கியைப் புதைத்த இடத்திற்கு அருகிலிருந்து அவன் உடைகளைத் தோண்டி எடுத்து, சிகரெட் லைட்டரை எடுத்து, அதிலிருந்து நெருப்பை உண்டாக்கிக் காட்டுகிறாள்.சுள்ளிகளை வைத்து தீயை வளர்த்து காய் பழங்களை சுட்டு சாப்பிட வைக்கிறாள். நெருப்பின் சுட்டருசி பழங்குடியினர்களுக்கு பிடித்துப் போகிறது. நன்றி சொல்கிறார்கள்.
நிலம், ஜலம், வாயு, அக்னி, வான் என ஐந்து பர்வங்களாக விரிகிறது நாவல்.
லெமூரியத் தீவில் பிறந்த குழந்தையோடு தவிக்கும் பார்வதி அத்தீவிலிருந்து எப்படி மீள்கிறாள், கணவனுடன் எப்படி இணைகிறாள் என்பது படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இது ஒரு மானுடவியல் நாவல், சரியாய் பின் தொடர்கையில் நாவல் டிசம்பர் 2004 காலகட்டத்தில், பத்தே நாட்களில் நிகழும் சம்பவங்களின் தொகுதியாக இருப்பதை உணர முடிகிறது.
நகரத்தில் வாழும் பார்வதியின் பார்வையிலிருந்து பழங்குடியினர் குறித்து சொல்லப்பட்டிருப்பதும், மரியா என்ற பழங்குடியின் பார்வையிலிருந்து நகர்த்து மனிதர்கள் (பார்வதி) குறித்து சொல்லப்பட்டிருப்பதும் ஒரு நெருக்கமான கோணத்தைக் காட்டுகிறது. கலைடாஸ்கோப்பில் தோன்றிமறையும் வெவ்வேறு வடிவக் கோலங்கள் அழகு மாறாமல் பொலிவுடன் காட்டுவது போல், மனித மனதில் வெளிப்படும் நுட்பங்கள் பல இடங்களில் புனைவாகவும், நிஜமாகவும் மாறி மாறி வண்ணக் கோலங்களைத் தீட்டுகிறது.
ஒரு கர்ப்பவதியான பெண் சந்திக்கும் மன, உடல் ரீதியான அழுத்தங்களே நாவலெங்கும் பரவி இருக்கிறது. கதையின் ஓட்டத்தில் முருகன் பார்வதியின் காதலும், அவர்களுக்கு இடையிலான வார்த்தைப் பரிமாற்றங்களும், செல்லச் சீண்டல்களும், மிதமிஞ்சிய கொஞ்சல்களும், படுக்கை அறை நினைவுகளும் எல்லாம் எவ்வித அலங்காரமுமின்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே அவர்களுக்கு இடையிலான காதலின் ஆழத்தையும், புரிதலின் அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது.
சாதி மறுப்பு, சமகால அரசியல், பெரியார் சிந்தனைகள் என கருத்துகளை புகுத்தியிருப்பது கதைக்கு ரொம்பவே பொருந்திப்போகிறது என்றாலும், ஒரு கட்டத்தில் சிறு அயர்ச்சியை ஏற்படுத்தவே செய்கிறது. உளவியல் விவரணைகளும், உடலியல் நினைவுகளும், அது சார்ந்த கேள்விகளும் அதீதமாகத் தோன்றினாலும், அடுத்தடுத்து நிகழும் போக்கும், தீவிலிருந்து பார்வதி மீள வேண்டுமே என்ற ஆதங்கமும் மேலோங்கி நிற்பதால் அயர்ச்சியைக் கடந்து பயணிக்கத் துவங்குகிறோம். ஒரு எளிய விவரிப்பு நடையே நாவலுக்கு பலமாக மாறுவது அழகானதாக இருக்கிறது.
நாவலில் பல இடங்கள் வசீகரமாய் இருப்பதோடு, மனதிற்கு நெருக்கமாகவும் இருக்கிறது. குறிப்பாக… நாவல் முழுக்க பார்வதிக்கும் மரியாவிற்கும் இடையே வார்த்தைகளற்ற, உடல்மொழி ரீதியான புரிதல்கள் மிக அழுகாக பேசப்பட்டிருக்கிறது. மரியா தீவில் வசிக்கும் பழங்குடி இனப் பெண்ணாக இருந்த போதும், அவள் நாகரீகம் கண்ட, நகரத்தில் வசிக்கும் பார்வதியை விட சுதந்திரமும் சுயசிந்தனையும் கொண்ட பெண்ணாகக் காட்டியிருப்பது அடிநாதமாக ஒலிக்கிறது. இடற்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் பார்வதி கந்த சஷ்டி கவச வரிகளை நினைத்துக் கொள்வது ஒரு பலமான பற்றுதலை உணர்த்துகிறது. தீவிலிருந்து பார்வதி புறப்படுகையில் மரியாவின் மகன் ‘அம்மா‘ என்று அழைப்பது மிகப் பெரிய திறப்பாக இருக்கிறது.
36 அத்தியாயங்களாய் விரிந்து நீளும் நாவலில் பல இடங்களில் கவிதைகளாய் வார்த்தை மின்னல்கள் பளிச்சிடுகிறது
- ஒரு ஈசிஜி இசைக்குறிப்பு போல் இதயத்தை மொழிபெயர்த்த கோடுகள்
- செத்துப்போன உன் மக பேசறேன், ஆனா சொர்கத்திலேர்ந்து
- குற்றம் புரிவதன் சுவாரஸ்யத்தைவிட மன்னிப்பு கேட்பதன் சுகம் அலாதியானது
- பிறந்த வீட்டுக்குப் போகும் திருமணமான பெண்கள் வேறு ஒரு மனுஷியாகி விடுகிறாள்
- விஞ்ஞானத்தின் துணை கொண்டு மனிதன் வெல்ல இயலாத இயற்கையின் முகங்களில் கடல் பிரதானம்.
- காடு தன்னிடம் வருபவர்களை ஆற்றுப்படுத்தவே முனைகிறது
- வாழ்க்கை நிம்மதியாய் நகர மனிதர்கள் எதையாவது பற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது
- துயில் என்பது மனம் தன்னை உடலிடம் ஒப்படைக்கும் சடங்கு
நாவலோடு பயணித்துக் கடக்கையில் மனதைத் தாண்டி மூளையும் சில முரண்களை கேள்விகளாக முன் வைக்கிறது - விவரம் தெரிந்த பள்ளி ஆசிரியை, ஒன்பது மாதம் முடிந்த கர்ப்பினி, ரிஸ்க் எடுத்து தேர்தல் பணிக்காக செல்வாளா?
- பத்திரமாய் போய்ச் சேர்ந்த பின், மேலும் ரிஸ்க் எடுத்து வானிலை சரியில்லாத போது படகில் போக சம்மதிப்பாளா?
- கடலில் தத்தளிக்கையில் உயிர் பயம் (இரட்டை உயிர் வேறு) மேலோங்கி இருக்கையில் கைபேசியில் (நோக்கியா 1100) அலாரம் செட் செய்து கொள்வது சாத்தியம் தானா?
- என்னதான் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆதர்ச தம்பதி என்றாலும், பார்க்கும் அனைத்திலும் உடலியல் சார்ந்த காமத்தின் சுவையை தொட்டு ரசிப்பது ஏன்? (தாகத்திற்காக இயற்கையான ஒரு சுனையைப் பார்க்கும் போது கூட, அதை பெண்ணுடன் ஒப்பிட்டு விபரீதமாக எண்ணுவது ரொம்பவே உறுத்துகிறது)
- உயிருடன் திரும்பிச் செல்ல உலகத்துடன் தொடர்பு கொள்ள இருக்கும் ஒரு செல்ஃபோனையும் என்னதான் விரக்தி என்றாலும் கடலில் எரிவாளா?
- துப்பாக்கி குண்டு பட்ட கருமனை அன்று இரவே மரியா கொல்கிறாள். ஆனால் மூப்பன் உட்பட பழங்குடி மக்கள் யாருமே கருமன் இல்லாததை, அவனைக் காணாதது பற்றி எதுவுமே பேசாமல் இருப்பது ஏன்?
- சுனாமிக்காக மரக்கிளையில் தொற்றி நிற்கையில் மரம் முறிந்து ஒரு பழங்குடிப் பெண் கீழே விழுவதையும், இன்னொருவன் வழுக்கிச் சரிவதையும் பார்வதி கவனிக்கிறாள். கைகால்களில் அடிபட்டவர்களைக் பார்க்கிறாள். ஆனால் அது குறித்து எதுவும் பேசாமல் இருப்பது ஏன்?
கன்னித் தீவு என்ற நாவலின் தலைப்பைப் படித்ததும் சிறிது நேரத்திற்கு சிந்துபாத் (தினத்தந்தி) தவிர்க்க முடியாமல் வந்து வந்து போகிறார். நாவலோடு பயணிக்கையில்தான் காணாமலும் போகிறார்.
பார்வதி என்ற கர்ப்பவதியை கடல் தன் கரங்களில் ஏந்தி தீவில் கரை சேர்க்கிறது, கர்ப்பவதி வடிவிலான ஒரு தீவையே கடல் எதிர் கொள்வது போல் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருப்பது அர்த்தப்படுத்துவதாகவே இருக்கிறது.
ஜான் ஆலன் சௌ என்ற அமெரிக்க இளைஞன் அந்தமானின் வடக்கு செண்டினல் தீவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காகச் சட்டத்திற்கு புறம்பாக நுழைந்த போது அத்தீவில் வசிக்கும் பழங்குடிகளான செண்டினலியர்களால் கொல்லப்பட்டு உடல் மீட்க முடியாது போன சம்பவத்தின் அடிப்படைதான் இந்த நாவல் என்றும், ‘one doesn’t need clothes and ornaments and crown to make you
dignified, what comes spontaneously your inner self, you can project your personality that way‘ என்று ஒரு பேட்டியில் மானுடவியலாளர் திர்லோக்நாத் பண்டிட் குறிப்பிட்ட வாசகத்திலிருந்து நாவலில் முக்கிய கதாபாத்திரமான மரியா படைக்கப்பட்டது என்ற விவரத்தையும், முன்னுரையில் பதிவு செய்கிறார் சரவண கார்த்திகேயன். நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய பாத்திரப் படைப்புதான்.
முருகன் – பார்வதியோடு, அந்தமானின் லெமூரியா தீவில், மரியா, கருமன், மூப்பனோடு, அடர் கானகத்திற்குள், தீவின் வெள்ளை மணல் சூழ்ந்த கடற்கரையில் சில நாட்கள் கழித்த நினைவை தோற்றுவித்து, கனவாக நிற்கிறது இந்த கன்னித்தீவு