எங்கே செல்கிறது இந்தியா…. கைவிடப்பட்ட கழிப்பிடங்கள், தடைபட்ட வளர்ச்சிகள், சாதியத்தின் விலைகள் என்ற புத்தகத்தினை டியானே காஃ பே மற்றும் டீன் ஸ்பியர்ஸ் ஆகிய பொருளாதார ஆய்வாளர்களால் எழுதப்பட்ட புத்தகம் செ.நடேசனின் தமிழ் மொழியாக்கத்தில், எதிர் வெளியீடாக வந்துள்ளது.
திறந்தவெளி கழிப்பறை எப்படி இந்திய குழந்தைகளின் வளர்ச்சி (உயரம்), கற்றல் திறனை மற்றும் ஆளுமையை பாதிப்பதாகட்டும் அதனையும் தாண்டி சமூக நோய் பரவலுக்கு மூலக் காரணமாக உள்ளது என்பதனையும் தண்ணீர் பற்றாக்குறை, மக்கள் நவீன கழிப்பறையை விரும்பவில்லை போன்ற கருத்தாக்கம், சாதியம், வறுமை, கல்வியறிவின்மை போன்ற பல்வேறு கூறுகள் இந்தியாவில் திறந்த வெளி கழிப்பறை நீடிப்பதற்கான காரணங்களாக கூறப்பட்டாலும் அது உண்மையல்ல என்பதனை பல்வேறு உதாரணங்கள் மூலம் நூலின் ஆசிரியர்கள் மறுக்கிறார்கள். அரசின் தவறான அணுகுமுறையும், தூய்மை இந்தியா போன்ற திட்டங்கள் வெறும் கோஷங்களாக மட்டுமே உள்ளதனையும் பல்வேறு வழியில் நிறுவியுள்ளனர்.
உலகளவில் திறந்த வெளி மலம் கழிப்பில் இந்தியாவின் பங்கு 65%. இதன் வழியே இந்திய சுகாதாரத்தின் தன்மைகளை புரிந்து கொள்ள முடியும்.
மலக்கழிவுகளிலிருந்து மனிதர்கள், பூச்சிகள், பறவைகள் மூலம் பரவும் கிருமிகள், வாந்திபேதி உள்ளிட்ட பலவித கொள்ளை நோய்களை ஏற்படுத்துகின்றன. இதனால் இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 82 பேர் அவர்களது முதல் பிறந்த நாளை கூட பார்க்க இயலாமல் இறந்து போகிறார்கள். அப்படியே தப்பி பிழைத்த குழந்தைகள் குள்ளமானவர்களாக, நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்களாக, கற்றல் குறைபாடுயுள்ளவர்களாக மாறுகின்ற கொடுமை நிகழ்கிறது. பிரிட்டிஷ் பெண்கள் இன்றுள்ளனத விட உயரமானவர்களாக ஆகாவிட்டாலும் கூட, இந்திய பெண்கள் பிரிட்டிஷ் பெண்களின் உயரத்தை எட்டிப் பிடிக்க 250 ஆண்டுகள் ஆகும். இந்திய பெண்கள் திறந்த வெளி கழிப்பறையால் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகின்றனர்.
இந்தியாவின் கழிப்பறைப் பயன்பாட்டை எஞ்சியுள்ள உலகத்திலிருந்து மிகவும் மாறுபட்டதாக ஆக்குவது எது? சாதியத்தின் கூறுகளுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு. கலாச்சார ரீதியான பார்வையும், திறந்த வெளி மலம் கழிப்பது வசதியானது, அதுதான் சுகாதாரமானது என்பது போன்ற அறிவியல் அற்ற பார்வையும், கிருமிக் கோட்பாட்டை புரிந்து கொள்ளாததும் ஆகும்.
ஆய்வுகளில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளன. இந்தியாவில் இந்துக்களை விட மூஸ்லிம்கள் மிகக் குறைவாக திறந்த வெளியில் மலம் கழிக்கிறார்கள். உலகின் ஏழைப் பகுதியான சஹாரன்-ஆப்பிரிக்க பகுதி மக்களை விடவும் இந்தியர்கள் குள்ளமானவர்களாக உள்ளனர். ஜப்பானில் ஆண்கள் 172 செ.மீ சராசரி உயரம் கொண்டவர்கள். ஆனால் ஜப்பானியர் குள்ளமானவர்கள் என்ற புரிதல்தான் நம்மிடையே உள்ளது. இந்திய மக்களின் சராசரி உயரம் 164 செ.மீ. சஹாரன் – ஆப்ரிக்காவிலுள்ள பெண் குழந்தையை விட இந்திய குழந்தைகள் 1 செ.மீ யில் மூன்றில் இரண்டு பங்கு குள்ளமாக உள்ளது. இது பெரிய வேறுபாடு அல்ல என்று தோன்றலாம். ஆனால் இது 5 வயது ஆகுகையில் ஆண்டில் 33 நாட்கள் மதிப்புள்ள வளர்ச்சியை பாதிக்கிறது. இதனை நமது அரசு மரபுடன் தொடர்புபடுத்தி முடித்து விடுகிறார்கள். இது போன்ற புள்ளி விவரங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.
திடக்கழிவு கிருமிகள் எவ்வாறு வளர்ச்சியை பாதிக்கின்றன என்பதனை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பின் மூலம் அதன் மீதுள்ள கிருமிகள், ஈக்கள் மூலம் மேலும் வேகம் எடுக்கிறது. வாந்திபேதி மூலம் பல இன்னல்களை ஏற்படுத்தி உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெற முடியாமல் செய்கிறது. குடல்களை பாதித்து வெளிப்புற நோயாக அல்லாமல் உட்புறத்தில் தீவிரமாக வேலை செய்து குடலின் வளைவுகளை குறைத்து ஊட்டச்சத்து உறிஞ்சுவதை குறைக்க செய்வதன் மூலம் உடல் வளர்ச்சிக்கான சக்தியாக மாறாவிட்டால் அது மரபியல் பண்புக்குரிய உயரத்தைவிட வேறு வழியின்றி குள்ளமாகவே வளரும். திடக்கழிவு கிருமியால் குடலில் வளரும் ஒட்டுண்ணிகளால் உணவை உட்கொள்ள முடியாத அளவிற்கு, ஜீரண சக்தியை இழப்பதற்கும் காரணமாகிறது. இதன் தொடர்ச்சியாக வட்டப்புழு என்ற சிறுகுடல் புழு நுரையீரலுக்குள் சென்று வளர்ச்சி அடைகிறது. மற்றும் கொக்கிப் புழுவும் குடலில் தங்கி அதிகளவு இரத்தத்தை உறிஞ்சி கொள்கிறது. இதனால் ஏற்படும் இரத்த சோகையினையும் கணக்கில் எடுத்தால் நமது வளர்ச்சி வேகத்தை கிருமிகள் எவ்வாறு கட்டுபடுத்துகின்றன என்பதை ஆழமாக அறியலாம். இதே நேரத்தில் அரசின் செயல்பாடு அறிவியல் பூர்வ செயல்பாடாக மாறவில்லை என்பது தான் உலக சுகாதார அமைப்பு சொல்லும் குற்றச்சாட்டு.
திறந்தவெளி மலக்கழிப்பை குறைப்பதில் அரசின் முன்னெடுப்புகள் என்னவாக உள்ளன? அதன் மூலம் பெற்ற முன்னேற்ற அளவுகள் எத்தனை தூரம் நம்பத் தகுந்தவையாக உள்ளன?
நிர்மல் பாரத் அபியான் என்ற திட்டத்தை விட தூய்மை இந்தியா இயக்கம் மிகப் பெரிய அளவில் 2014 ஆகஸ்டு 15 பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டு 2019 அக்டோபர் 2 காந்தியின் 150 ஆண்டு விழாவின் போது திறந்த வெளி மலக்கழிப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் என்று துல்லியமான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கில் அடைந்த முன்னேற்றங்கள் குறித்து எந்த விதமான புள்ளி விபரமும் அரசிடம் கிடையாது. 12.3கோடி குடும்பங்களில் கழிவறையே இல்லை. ஐந்து ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்றால் தினமும் 67000 புதிய கழிப்பிடங்கள் வீதம் கட்டப்பட வேண்டும். ஆனால் நடைபெற்றதோ விளம்பரத்திற்கான செலவு மட்டுமே. 2019 அக்டோபர் 2 அன்று வரை எத்தனை கழிப்பிடம் கட்டப்பட்டன என்பதற்கான எந்த புள்ளி விபரமும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக கொள்கையை உருவாக்குவோர் பொது சுகாதாரம் போன்ற விசயத்தை அறிவியல் பார்வையில்லாமல் செயல்பட்டதற்கு தூய்மை இந்தியா இயக்கம் மிகச் சிறந்த உதாரணம்.
சமூக சமத்துவத்தை, ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்கும், பெண்கள் நலனுக்கும், ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க மலிவு விலை கழிப்பிடங்களை அனைத்து குடியிருப்புகளில் ஏற்படுத்துவதே இன்றைய மிக அவசிய தேவை. இது ஒன்றும் அரசால் முடியாத காரியம் அல்ல; ஆனால் சவாலான காரியம்.