மனித சமூகத்தின் ஆகச்சிறந்த கருவி மொழி. மொழியின் ஆகச்சிறந்த செயல்பாடு கவிதை. கவிதை என்பதை வரையறுத்துவிட என்னதான் அளவு கோல்கள் நம்மிடையே இருப்பினும் அது அவ்வப்போது தன்னை வேறுவகையில் தகவமைத்துக்கொண்டும் புதிய அளவுகோல்களை உருவாக்கிக் கொள்கிறது அல்லது கோருகிறது.
நனையக் காஞ்சி சினைய சிறுமீன் என்ற உள்ளுறை உவமமும், சிறு கோட்டு பெரும்பழம் தூங்கியாங்கு என்னும் உவமையும் இன்னும் நம்மை என்னவோ செய்து கொண்டுதான் இருக்கின்றன.
கவிதைக் கலை என்பதை நாம் கவிஞர் மையமாகக் கொண்டது என்பதை விட வாசகர் மையமாகக் கொண்டது என்ற அணுகல் முறையையே சரியானதாகக் கொள்ளலாம். ரோமன் யாகப்சனின் மொழிச் சேர்க்கை என்னும் தத்துவத்தின்படி, ஒரு கவிஞனின் மொழி புதிய தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதன் சேர்க்கைகள் வாசகரைத் தூண்டி விடுவதாகவும் அவரை மறுபடைப்பாக்கம் செய்பவராகவும் மாற்றிவிட வேண்டும்.
இலக்கியம் ஆனாலும் கலையின் எந்த வகைமையானாலும் மனிதனை அது பக்குவப்படுத்தப்படவே பயன்படும். தமிழின் இலக்கிய மரமும் அப்படித்தான் இருக்கின்றன. அல்லவை தேய அறம் பெருகும் என்னும் வள்ளுவனின் வாய்மொழியும் பட்டாம் பூச்சிக்கு கொடுக்கும் விஷமும் கேட்கும் தேவசீமாவும் அதைத்தான் வலியுறுத்துகிறார்கள். மனிதர்களை அறவியல் கோட்பாட்டுக்குள் உட்படுத்தி அவர்களின் மனத்தைப் பண்படுத்தி நிலைநிறுத்தும் ஒரு வேலையை இலக்கியம் ஆற்றுகிறது.
கவிதையைப் படித்தவுடனே மனத்தை ஆட்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. எளிமையான சொற்களாள் நெய்யப்பட்டிருந்தாலும் நகுலனின் சொற்கள் நமக்குள் அப்படியான ஒரு தைப்பை உருவாக்குகின்றன.
வைன் என்பது குறியீடல்ல என்னும் தொகுப்பின்மூலமாக நமக்குத் தேநீரோடு அறிமுகமாகிறார் தேவசீமா.
ஒவ்வொரு கவிதையின் தொடக்கமும் முடிவும் அவற்றுக்கே உரிய தன்மையோடு நிகழ்வது கவிதை எழுதுவது என்பதைத் தாண்டி அது மலர்கிறது என்று நாம் சொல்லிவிடலாம்.
இந்த வாழ்க்கை காலம் காலமாக நம்முள் கிடக்கிறது. அது தருகிற அர்த்தங்களும் அதற்கான காட்சிகளும் அவை தருகிற உவமைகளும் படிமங்களும்தான் கவிதைகளாக மாறிவிடுகின்றன. தேவசீமாவின் இந்தக் கவிதைகள் எதுவும் வாழ்க்கைக்கு அப்பால் போய் நின்று அதைக் கேலி செய்யாமல் வாழ்க்கைக்குள்ளேயே நின்று அதைப் பகடி செய்கிறது. கோபப்படுகிறது. ஆழ்மனத்தில் தேங்கியுள்ள சம்பவங்களிலிருந்து தனக்கானதை உறிஞ்சிக்கொள்கிறது.
ஒரு பெண்ணின் இருப்பு என்பது இன்றுவரை சொத்தாக / உற்பத்திப் பொருளாக / வேலைசெய்யும் கைகளாக / தலைமுறைகளை உருவாக்கும் கடமையாகத் தான் கட்டமைக்கப்படுகிறது. ‘மண்ணையும் பொண்ணையும் தொட்டா வெட்டுவோம் என்னும் வசனம் கவிதை பூசி வருவது இதனால்தான்.
சூடு என்னும் முதற்கவிதையிலிருந்து ஆரம்பிபோம். பீங்கான் கோப்பை இந்த வாழ்க்கை/ அதில் வெப்பமேற்றப்பட்ட தண்ணீரும் தேநீர் பையும் இருக்கிறது. இரண்டு முரண்கள் இருக்கின்றன. பையை விட்டு வெளியேறிவிட முடியாத தேயிலை. பையை ஊடுருவிச் சென்று தேயிலைச் சாற்றை கரைக்கும் தன்மையுடைய நீர்மை. எது எதைச் சுவைவூட்டுகிறது. தண்ணீரைச் சுவையூட்டும் முடிவுக்கு வரலாம். நீங்கள் இங்கே சமூக முரணை வைத்துப் பார்க்கலாம். அதில் கட்டுக்குள் இருக்கும் கீழ்மையால் படரும் தன்மைக் கொண்ட மேல்மை சுவையூட்டப்படுகிறது. இதில் சுடுதண்ணீர் என்னும் உலக வழக்கான சொல் வந்திருக்கிறது. அது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கீழ்மை தூக்கி வீசப்படுகிறது. படிமம் என்னும் கவிதையும் அத்தகையதுதான் நீரில் இருக்கும் கல். அதுஅது அதனதன் தன்மையில். ஆனால் வந்து படிகின்ற பாசி கல்லும் நீருக்கும் பொதுவான ஓரு படிமம் படிவதால்.
வாழ்வு குறித்த கண்ணாடிச் சில்லு, போஜனப்ரியன் என்னும் கவிதைகள் நல்ல வெளிப்பாட்டுத்தன்மையுடனானவை. அவற்றில் உருவகங்களும் உவமைகளும் வெகு இயல்பாக் கையாளப்பட்டுள்ளன. கைதவறி விழுந்த கண்ணாடிச் சில்லுகள் சர்க்கரைத் துகள்களைப் போலக் கிடக்கின்றன எடுக்கின்ற கைகளில் வழியத்தான் செய்கிறது ’வியர்வை வாசமொத்த குருதி’ உழைப்பு + இழப்பு என்னும் பெண்ணின் சமையல் வாழ்க்கை இதில் பேசப்படுகிறது. போஜனப்ப்ரியனில் காலம் எப்படி உயிர்களைக் கவர்கிறது மரணம் நிகழும் தருணங்கள் அடுக்கப்பட்டே வருகின்றன. ஆனாலும் காலம் கூட ‘ஊமைக் கோழிகளின் குரல்வளையை அறுத்தால் தான் சத்தமே வராது’ எனக்கிளம்புகிறது என்று முடியும் அக்கவிதை நம்மை வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. பொத்தான்கள் குறுக்கிடும் வாழ்க்கையில் மூன்று சட்டைகளைக் காட்டுகிறார், குறுக்குக் கோடுகள் உடையது / மாற்று நிறக்கட்டங்கள் கொண்டது / விடியலை ஒத்த நிறம் கொண்டது.
எந்த சட்டையிலும் விடியல் இல்லாத மடநெஞ்சுக்கு இது கடைசி சட்டையில்லை. சட்டைகளின் தொடர்ச்சி இன்னும் இருக்கிறது. ஆமாம் இங்கே சட்டை என்பது ஆணா அல்லது உடையா? ஒரு படிமமே கவிதை ஆன இடம் தேவ ஆட்டுக்குட்டியின் ரத்தம். வெங்காயம் தூக்கலாக வைனுக்குப் பொருந்தும் அது ரட்சிக்க வராதா? அது வழிந்த சிலுவையில் மூன்றே ஆணிகளால் தொங்கவிடப்பட்ட செம்மறிகளின் ரத்தம் நாய்களால் உறிஞ்சப்படுவதையும் சப்தமேயில்லாமல் ரத்தத்தைக் குடித்து பூக்களாக்கும் தாவரங்களின் குரூரத்தையும் பதிவாக்குகிறார்.
தேவசீமாவின் இக்கவிதைகளில் கடவுள் பல இடங்களில் வருகிறார். அவர் நம்பிக்கைக்குரியவரா அல்லது இல்லையா என்பது வாசக வாழ்விற்கும் மனதிற்குமானது. ஒரு தேத்தண்ணிக்கு இஞ்சி இடிக்கும் கல்லாக அவர் மாறிவிடுவதும், கூடுகையில் அழும் குழந்தைக்கு போர்வை போர்த்தி பேரத்தை படிவ வைப்பதும் எத்தகைய கடவுளியம்? அதனால்தான் ஜியோமெதியில் கடவுளை வைத்துப்பார்த்திருக்கிறார் தேவசீமா.
போலிச்சாவிக்குறியீட்டைக் கொண்டு அது இன்னொரு சாவி இன்னொரு காதல் என்பதைப் போல என்னும் போது திறக்கும் உண்மைகள் வாய்களைத் திறந்து பேச ஆரம்பிக்கின்றன.
சமையல் சார்ந்த கவிதைகள் பல குறிப்புகளை நமக்குத் தருகின்றன. முதல் தோசை சுடுகையில் ஒன்றும் தோன்றாமல் ஆறாவது தோசையில் கரிப்பேறிக்கொண்டிருந்த நினைவுகள், மகன் சாப்பிட்டுக்கொண்டு இந்ததால் கரித்துணியால் முகம் துடைத்து முதல் தோசை போல ஆகிவிடுகிறது பெண்ணின் நிலை என்னும் கவிதை சிறப்புடைத்து. எல்லா வற்றையும் இழந்து கரிபூசிக்கொள்ளும் பெண்ணின் முகம்.தோசைக்கரண்டியில் முதுகு சொரிந்து கொள்கிறது. ஆட்றா ராமா எனச்சொல்லிப் பார் ஆடுவேன் சீதை என்னும் தேவசீமாவின் வரிகள் வலிமையானவை. வலியானவையும் கூட. கவிதைகள் சமைப்பவரின் கறியும் கறியல்ல.
தொடு திரை அறுவடை பிசினு ஆகியவை இத்தொகுப்பில் வேறுபட்ட தளத்தில் இயங்குகின்றன. சூழல் சார்ந்த கவிதைகள். முனிசிபாலிட்டிக்காரன் தரும் தண்ணீரில் கைகழுவும் புங்க மரத்த வெட்டுன மாமன் கைகளில் ஒட்டியிருக்கும் பிசினில் திறன்பேசியில் தேய்த்து மனதில் அறுவடை செய்கிறான் விவசாயி.
இசைஞானி பற்றிய கவிதை காற்றில் அவர் வீசும் இசைக்குறிப்புளைக் கொண்டுதான் சப்தம் நிறைந்த இந்த உலகில் வாழ்கிறோம்.
தேவசீமாவின் கவிதைகள் தொடங்கும் புள்ளிகள் இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் மிகச்சரியாகவும் அதற்கான நியாயத்தோடும் தொடங்கிவிடுகின்றன. கவிதை தன்னை முடித்துக்கொள்ளும் இடங்களும் சரியானவைகளாக இருக்கின்றன.
யாருடைய போலச்செய்தலும் இல்லாமல் தனக்கான மொழியைத் தானே கண்டடைந்து அதனை பாடுபொருளோடு பக்குவப்படுத்திச் சமைத்துத் தந்திருக்கும் தேவசீமாவின் கவிதைகள் வாழ்க்கையின் கீற்றுகள். ஆகவே வைன் என்பது குறியீடல்ல. சொட்டுசொட்டாய் விழுங்கலாம். கசப்பின் வெளியில் நடக்கலாம். உவகையில் மயங்கலாம். ஏன் இளைப்பாறுதலுக்காய் எண்ணெய்க் கொப்பரையிலும் இறங்கலாம்.
வைன் என்பது குறியீடல்ல என்னும் தேவசீமாவின் தொகுப்பை முன்வைத்து