உடல்,அறிவு,மனம் என அனைத்து வகையிலும்முழுமையாக்கப்பட்ட ஒரு மனிதணை உருவாக்குவதையே கல்வியின் ஒரே நோக்கமென்பேன்
-மகாத்மா காந்தி
நாட்டின் முதல் கல்விக்கொள்கையை வடிவமைத்த பேராசிரியர்.கோத்தாரி அவர்கள் கூறும் போது,
ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்றார்.
மக்களாட்சி நடைபெறும் ஒருநாட்டில் அந்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் வகுப்பறை எப்படியிருக்கவேண்டும்,எதை எப்படி சொல்லித்தரவேண்டும்,ஆசிரியரின் தகுதியும் திறனும் எப்படியிருக்கவேண்டும்,அரசு எவ்வளவு நிதி செலவழிக்கவேண்டும்,பெற்றோரின் பொறுப்புஎன்ன என்பதையெல்லாம் தீர்மானிக்கப்போகும் ஒரு கல்விக்கொள்கையை நாட்டுமக்கள் தெரிந்துகொள்வதுதான் முறை.அதேபோல்,நாட்டின்கல்விக்கொள்கை குறித்து அறிவதும் விவாதிப்பதும் நாட்டிலுள்ள ஒவ்வொரு பெற்றோரின் கடமையும் உரிமையுமாகும்.(பக்:8)
ஒரு நாட்டின் கல்விக்கொள்கை அதாவது, மக்களுக்கான கல்விக்கொள்கை என்பது, மக்களின் கனவும் ,வாழ்வும்,வேதனையும், வலியும் ஆலோசனையும்,எதிர்காலமும் அதனுள் அடங்கப்பெறும்போதுதான்அது முழுமையடைகிறது.(பக்:10)
1968 ஆம் ஆண்டில் அமலான ,நாட்டின் முதலாவது கல்விக்கொள்கையானது நாடெங்கிலுமுள்ள,9000 பொது மக்களைச்சந்தித்து, பள்ளி,கல்லூரிகளுக்கு நேரடியாகச்சென்று,2000 ஆவணங்களை பரிசீலித்து,கல்வியாளர்களுடன் இரண்டு ஆண்டுகள் பல கட்டங்களாகவிவாதித்து பேராசிரியர் கோத்தாரி அவர்களால் தயாரிக்கப்பட்டதாகும்.(.பக்:11)இதனையடுத்து அடுத்து 1986 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அரசால் இரண்டாவது கல்விக்கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டாலும் இப்போது பாஜக கொண்டுவந்துள்ள கல்விக்கொள்கை போலானது அல்ல.
2017 ஆம் ஆண்டில் தேசிய கல்விக்கொள்கையை தயாரிக்கும்படி, கஸ்தூரி ரங்கன் தலமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.அக் குழுவானது தனது அறிக்கையை 2019 ஆம் ஆண்டு பாஜக அரசிடம் சமர்பித்தது.தற்போது பாஜக அரசு வெளியிட்டுள்ள இக்கல்வி கொள்கையானது, மூன்று வயதில் கல்வி துவங்குதல்,மூன்று மொழி கற்றல்,மூன்றாவது வகுப்பில் பொதுத்தேர்வு,பள்ளியில் பதினொறு பொதுத்தேர்வுகள்,மேல் நிலையில் நாற்பது பாடங்கள்,கட்டாய சமஸ்கிருதம்,அனைத்து கல்லூரிகளுக்கும் பட்டம் வழங்கும் அதிகாரம்,ஒவ்வொரு உயர்கல்வி படிக்கப் போகும்முன் ஒரு தேர்வு என்பதோடு கல்விக்கான நிர்வாக அமைப்பையே மொத்தமுமாக மாற்றுவது என்பதாக உள்ளது.அதாவது,இந்தியக்கல்வியின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.. (பக் 11)
பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கும்போது,குறைந்தபட்சம் பள்ளிக்கல்வியில் வகுப்பறை, தேர்வு,போதனாமுறையில் உள்ள சிரமங்கள் பற்றி மாணவர்களிடம் கலந்து ஆலோசித்திருக்கவேண்டும்.இது மாணவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும் (பக்: 14)
நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளில், பாஜக அரசு அறிமுகப்படுத்தியிருப்பது மூன்றாவது கல்விக்கொள்கையாகும்.இச்சூழலில்,பெற்றோர்கள்-ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆய்ந்து அதனை சரிசெய்யத்தக்க அளவு புதிய கல்விக்கொள்கையில் திட்டங்கள் கொண்டுவரவேண்டும்.பழைய கல்வித்திட்டத்தில் என்னென்னெ குறைகள் இருக்கின்றன என்பதை அறிய நாடெங்கிலும் உள்ள கல்வியாளர்களைக்கொண்டு விவாதம் நடத்தி அதனடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக்கப்படவேண்டும்.
அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தான் ஒரு வளமான ஆரோக்கியமான அமைதியான தேசத்திற்கான விதைப்பாளர்களாய் இருக்கமுடியும் என்பதால் அவர்களுடைய கருத்துக்களையும் உள்ளடக்கியிருப்பது அவசியம்..(பக்:15)
இந்தியா, பல மாநிலங்களின் கூட்டமைப்பாய் உள்ள ஒரு நாடாகும்.கல்வி என்பது இங்கே பொதுப்பட்டியலில் தான் இன்னமும் இருக்கிறது.ஒரு தேசத்திற்கான புதிய கல்விக்கொள்கையை உருவாக்கும் போது மாநில அரசுகளை கேட்டறிந்து அக்கருத்துக்களும் கல்விக்கொள்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.அதுபோன்று,இப்புதிய கல்விக்கொள்கையானது நாடாளுமன்றத்திற்கு சம்பந்தமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது எனவே நாடாளுமன்றத்தில் முதலில் கல்விக்கொள்கைக்கான அணுகுமுறை வரைவுகளை விவாதித்து உருவாக்கி, அதன் பின் குழுவிடம் அளித்து, அந்த அடிப்படையில் கல்விக்கொள்கையை உருவாக்கிடவேண்டும் .பக்:17)
இஸ்ரோவில் பணியாற்றிய ஒருவரின் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினரால் நாடெங்கிலும் உள்ள கல்வியாளர்களைக்கூட கலந்து ஆலோசிக்காமல் ஒரு கல்விக்கொள்கை தயாரிக்கப்படுகிறது.அதுவும் இணையத்தில் வெளியிடப்பட்டு ஒரு மாத அவகாசத்தில் கருத்துச்சொல்வோர் கூறிடவேண்டும் என்பது கருத்துக்கேட்கும் முறையல்ல.(பக்:17)
இவ்வரைவுக்கொள்கையை2016 ஆம் ஆண்டிலிருந்து தயாரித்தவர்கள் கல்வியாளர்களிடம் கூட விவாதிக்காமல், FICCI ,NASSCOM ,ASSOCHAM ,CII உள்ளிட்ட பெரு முதலாளிய அமைப்புக்களோடு மூன்று ஆண்டுகள் கலந்தாலோசித்து தயாரித்திருக்கின்றனர்.ஆக,தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டிருப்பது கல்விக்கொள்கையல்ல,.கல்வி வியாபாரக்கொள்ளையாகும். (பக் :19)
பள்ளிக்கல்வியில் பதினொறு பொதுத்தேர்வு,ஒவ்வொரு கட்டத்திலும் நுழைவுத்தேர்வு, பருவத்தேர்வு,திறனறித்தேர்வு ஆகிய யாவற்றையுமே வியபாரக்கொள்ளைக்காணதேர்வாகத்தான் பார்க்கமுடிகிறதே ஒழிய, இந்திய மக்களுக்கான கல்விக்கொள்கையாக இல்லை.(பக்: 19)
மாணவர்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு,மூன்றாம் வகுப்பு,ஐந்தாம் வகுப்பு,எட்டாம் வகுப்புகளை திறனறித்தேர்வுகள் நடத்தப்படும்.எட்டாம் வகுப்போடு பொதுக்கல்வி முடிந்துவிடும்.பிறகு,ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பவரை எதிர்கால படிப்புக்கானதாக கருதப்படும்.எந்தத்தொழில் அல்லது வேலையென தனக்கான ஒரு படிப்பை அப்போதே மாணவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.இவற்றிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவத்தேர்வு நடைபெறும்.24 பாடங்கள் மற்றும் 16 விருப்பப்பாடமெனெ மொத்தம் 40 பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும். (பக் :20)
இத்துடன்,இன்னும் சில ஆபத்துக்களையும் இணைத்து பார்க்கவேண்டியுள்ளது.முதலில்,இனி ஆசிரியர்களின் நோக்கம் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவது மட்டுமே என இருக்கப்போகிறது.அடுத்து நான்காம் வகுப்பு,ஆறாம் வகுப்பு,ஒன்பதாம் வகுப்புக்கென தனித்தனியே மாணவர் சேர்க்கை நடைபெறும். (பக்:22)கல்விக்கட்டணத்தை பள்ளி நிர்வாகமே தங்கள் தேவைக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ளலாம்.அரசு இவ்விசயத்தில் தலையிடாது. அதுமட்டுமல்லாது கல்வியிலும்கூட அரசு இனி தலையிடாது. (பக்:23)
இடைவிலகலே இல்லாத கல்விக்கொள்கைதான் இப்போதைக்கு இந்தியாவிற்குத்தேவை.அதனை விடுத்து மூன்றாம் வகுப்பு முதலே திறனறித்தேர்வினை நடத்திடும்போது அது மாணவர்கள் இடை நிற்றலை அதிகப்படுத்தவே செய்யும்.அதுமட்டுமல்லாது பெண்குழந்தைகளின் கல்விவாய்ப்பும் பறிபோகும் நிலை உருவாகிவிடும் .பக் :35)
இந்தியாவின் கல்வியாளர்களூம்,பல அமைப்புக்களும்,எழுத்தாளர்களும் வலியுறுத்தும் ஒற்றைக்கோரிக்கை அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கவேண்டும் என்பதுதான்.ஆனால்,புதிய கல்விக்கொள்கையோ, கல்வித்தரத்தை உயர்த்த இரண்டு திட்டங்களை முன்மொழிந்திருக்கிறது.1. தேர்வுகள் 2. நாடெங்கிலும் ஒரே பாடத்திட்டம். இதன் மூலம் கல்வித்தரம் உயரப்போவதில்லை மாறாக மாணவர்கள் குறைந்துகொண்டே வருவர். தரமான கல்வி யென்பது கல்வித்தரமெனும் வார்த்தையைவிட மேம்பட்டதோர் வார்த்தை மட்டுமின்றி அனைவரையும் உள்ளடக்கியதுமாகும் .(பக் :38)
இந்தப்புதிய கல்விக்கொள்கையானது, ஆசிரியர்களை வெறும் சேவகர்கள் என்பதுபோல் அவமானப்படுத்துவதோடு ஆசிரியரே இல்லாத வகுப்பறைகளையும் பரிந்துரைக்காமல் பரிந்துரைக்கிறது.இனி அனைத்து வகை ஆசிரியர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தான் தேந்தெடுக்கப்படுவர்.ஆசிரியர்களுக்கு இனி தனியார் ஐ.டி நிறுவனங்களைப்போன்று மதிப்பீடு செய்யப்பட்டபின்னரே பணிநிரந்தரமோ,ஊதிய உயர்வோ கிடைக்கும்.எல்லா ஆசிரியர்களும் மூன்றாண்டுக்கு ஒருமுறை பணியிடைப்பயிற்சியில் பங்கேற்பது கட்டாயம்.ஆக மொத்தத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரம் முழுமையாக பாதிக்கப்பட்டு மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவது மட்டுமே நடைபெறும்.(பக் :46)இதுமட்டுமின்றி,மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, ஆசிரியர்கள் மட்டுமின்றி, உயர்தர சக மாணவர்கள்,உள்ளூர் தன்னார்வலர்கள்,பள்ளி நேரம் முடிந்த பின்பு உள்ளூர் பிரமுகர்கள் மூலம் கல்விகற்கவும் இப்புதிய கல்விக்கொள்கை வழி செய்கிறது. (பக் :47)
புதிய கல்விக்கொள்கையின்படி, பள்ளி நிர்வாகமென்பது இப்போதுள்ள பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வராது.அதற்குப்பதில் மாநிலப்பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று உருவாக்கப்படும். பத்து மைல் வரையுள்ள தொடக்கப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளோடு இணைக்கப்படும்.இதன் மூலம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும்.(பக்:58)
அருகமைப்பொதுப்பள்ளி என்றொரு பள்ளி முறையே உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள முறையாகும்.வீட்டிற்கு மிக அருகில் எந்தப்பள்ளி உள்ளதோ அந்தப்பள்ளியில்தான் ஒருவர் தன் குழந்தையைச்சேர்க்கமுடியும்.அதேபோல உலக நாடுகள் பலவற்றிலும் படிக்கும் மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் தான் பயிலுகின்றனர்.ஆனால் இந்தியாவில் மட்டுந்தான் கற்கும் மொழியே அந்நிய மொழியாக இருக்கிறது. அதுவும் மழலையர் வகுப்பிலிருந்தே மூன்று மொழிகளையும் கற்பிக்க வேண்டும்.உலகில் எந்த நாட்டிலும் கல்வி என்பது வியாபாரப்பொருள் கிடையாது.கல்விக்கென கடவுளைக்கொண்ட இங்கு மட்டுந்தான் மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை வியாபாரப்பொருளாகிவிட்டது.(பக் :67)
இந்த நாட்டின் குடிமக்களை தரமானவர்,தரமற்றவர் என இரு பிரிவாகபிரிக்கப்போவதாக கல்விக்கொள்கை கூறுகிறது.இதிலிருந்து தரமற்றவர்களுக்கு கல்வியும் கிடையாது, வேலையும் கிடையாது என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். (பக் :80)
வேலைவாய்ப்புக்காகத்தான் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாக அரசு கூறுகிறது.கல்வி வேலைவாய்ப்புக்கானதுதான்.ஆனால் வேலைவாய்ப்பு என்பது எது ? பூமியின் இயற்கை வளங்களைச்சுரண்டுவதையும்,அது சார்ந்து தொழில்வளர்ச்சி ஏற்படுவதையும் வேலைவாய்ப்பெனக்கொண்டால்பூமி என்னாகும் ? ஒரு ஊரின் வளம் பாதிக்கப்பட்டபின்பு,அந்த முதலாளி வேறு ஊருக்கு போய்விடுவார்.அப்படியெனில்,இருந்த வளத்தையும்,நீரையும்,நிலத்தையும் அந்த முதலாளி கொடுத்த வேலைவாய்ப்புக்காக இழந்த மக்கள் என்ன செய்வார்கள்? .(பக்: 85).ஆக,கல்வியென்பது வேலைவாய்ப்புக்கானது மட்டுமல்ல,எனது வாழ்வை எனது சமூகத்துடன் சேர்ந்து நான் வாழ்வதற்காக,இணக்கமாக,அமைதியாக,வளமாக வாழ்வதற்காக கற்றுத்தரப்படுவதுதான் கல்வியாகும் .பக் :87)
உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் பொதுவாய் அதிகரித்திருந்தாலும்,சமூகப்பொருளாதார அளவில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பானது கிடைக்கப்படாமல் இருக்கிறது.ஆசிரியர்களுக்கான வகுப்பறை சுதந்திரம் இல்லாத காரணத்தால்,பாடத்திட்டம் சார்ந்து மட்டுமே பாடமெடுக்க நிர்பந்திக்கப்படுவதால் அறிவைமேம்படுத்தும் இடமாக வகுப்பறை மாற்றப்படவில்லை.
அதுமட்டுமின்றி,ஆசிரியர் போதாமை-காலத்திற்கேற்றவாறு பாடத்திட்டம் மாற்றியமைக்காமை-போதிய நிதிஒதுக்கீடு இன்மை- உள்கட்டமைப்பு வசதியின்மை போன்ற காரணங்களால் உயர்கல்வி தடுமாறிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையானது,உயர்கல்வி நிறுவனங்களை 1. ஆராய்ச்சிக்கு 2. கல்விகற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் 3.இளங்கலை முதல் முதுகலைப்படிப்புகளை கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தருபவையாக மாற்றுவதற்கு புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .(பக்:96)
இந்த உயர்கல்வி நிறுவனங்களானது,ஒன்று,அரசின் நிதியுதவியுடனும்,அடுத்து,.தனியார் மூலதனத்துடனும் இயங்கும்.இவை .இரண்டிற்கும் அரசானது சமமான ஊக்குவித்தலையும் ஒழுங்குபடுத்தலையும் மேற்கொள்ளும். தனியார் உயர்கல்வி நிறுவனங்கள். கல்விக்கட்டணத்தை தாங்களே தீர்மானித்துக்கொள்ளவும் இக்கல்விக்கொள்கை வகை செய்கிறது. இன்னும் போதாதென்று,பட்டம் அளிக்கும் அதிகாரமானது பல்கலைக்கழகத்திலிருந்து பிடுங்கி, கல்லூரிகளிடமே தரப்பட கல்விக்கொள்கை வகைசெய்கிறது.(பக் :102)
தாராளவாதக்கல்வியென்றால், அரசின் கட்டுப்பாடின்றி,பாடப்புத்தகங்களில் பாரம்பரியம்,பண்டையம் என்று பேசுவதோடு மட்டுமல்லாமல்,பாடப்புத்தகம் இல்லாமல் வகுப்புக்களை எடுக்கவும் இக்கல்விக்கொள்கை வழிவகை செய்துள்ளது.64 வகை ஆயக் கலைகளையும் பாடப்பிரிவுகளாக்கி கல்லூரிகளில் சொல்லித்தரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.(பக்: 109)
கல்விக்கொள்கையென்பது அந்த நாட்டின் பெருவாரியான மக்களின் சமூகப்பொருளாதார நிலையினை உணர்ந்து கொண்டதாக இருக்க வேண்டியது அடிப்படை அம்சமாகும்.ஒருநாடு தனக்கான பாதையை சரியாகக்கொண்டிருந்து,அதன் அடிப்படையில் கல்விக்கொள்கை வகுக்கப்பட்டால் அது,அந்த நாட்டின் இயற்கைவளம்,தொழில் வளம்,வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,சமூக அமைதி,பொருளாதார வளம் ஆகியவற்றினது வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பை இளைஞர் சக்தியின் உதவி கொண்டு திறம்படச்செய்யும். (பக் :110)
மக்களின் நலன் காக்கும் கல்விக்கொள்கையானது,முதலில்,மாநிலங்களின் உரிமையில் மத்திய அரசு தலையிடக்கூடாது.
அடுத்து,கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கிடு 6% சதவிகிதம் இருக்கவேண்டும்.இறுதியாக,கல்விக்கொள்கையின் ஒருபகுதியாகவே வேலைவாய்ப்பு குறித்த அணுகுமுறையும் உள்ளடக்கப்பட வேண்டும்.(பக் :111)
பிறர் கருத்தை மதியாது,ஆளும் அரசு தன் கருத்தை மட்டுமே திணிக்குமெனில் அது சர்வாதிகாரம் என்றழைக்கப்படுகிறது.என்மதம்,என் இனம் என்று மட்டுமே சொல்லி ,உயர்வு தாழ்வு, கற்பித்து, அதன் மீது வன்மமேற்றி அதை ஒரு கலாச்சார கோட்பாட்டின் அடிப்படையில் அரசியலாய் முன்னெடுத்து, அதில் அரச அதிகாரத்தையும் சேர்ந்தெடுத்து அமல்படுத்துவதை பாசிசம் எனலாம்.ஆக இந்த கல்விக்கொள்கையும் அதை ஒத்ததாக இருக்கிறது.(பக் :119)
கல்வி விற்பனைக்கு என்று வைத்தால் புதிய கல்விக்கொள்கையின் 484 பக்க அறிக்கையும் பாஜக அரசின் நோக்கத்தையும் குறைத்து மதிப்பிட்டதாகிவிடும்.எனவே இந்தியா விற்பனைக்கு என்றே அழைக்கப்படட்டும் இக்கல்விக்கொள்கை…