இலக்கியவாதியாக, அரசியல்வாதியாக உங்களைப் பலரும் அறிவார்கள். உங்களது இளமைக் காலம் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்.
என் சமவயதுடையவர்களோடு ஒருபோதும் நான் பழகியதில்லை. சிறுவனாக இருக்கும்போதே வயதில் பெரியவர்களோடு பழக்கம்.புத்தகங்கள்தாம் அவர்களுக்கும் எனக்கும் இடையில் இருந்த வயது என்னும் இடைவெளியைக் கடக்க உதவிய பாலம். தற்போதைய நாகை மாவட்டத்தில் கொள்ளிடத்துக்கு அருகில் மாங்கணாம்பட்டு என்னும் சிற்றூரில் பிறந்தேன். ஆறாம் வகுப்பு முதல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரத்தில் படிப்பு. தினமும் ரயிலில் பயணம். நாகை மாவட்டமும் கடலூர் மாவட்டமும் இருவேறு பண்பாடுகளைக் கொண்டவை. பேச்சுவழக்கு,உணவுப் பழக்கம்,வழிபாட்டுமுறை ஏன் கலைகளில்கூட அந்த வேறுபாட்டைப் பார்க்கலாம். சிதம்பரம் பகுதியில் பிரபலமாக இருந்த தெருக்கூத்து எங்கள் ஊரில் கிடையாது. எஸ்.ஜி.கிட்டப்பா,எம்.எம்.மாரியப்பா.டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோரும் வள்ளி திருமணம்,அரிச்சந்திரா முதலான நாடகங்களும்தான் எங்களுக்குத் தெரியும். நான் தினமும் ரயிலில் பள்ளிக்கு மட்டும் போய்வரவில்லை, இருவேறு பண்பாடுகளுக்கிடையில் பயணித்து வந்தேன். எனது ஆளுமையை வடிவமைத்ததில் அந்தப் பயணத்துக்கு முக்கியமான பங்கிருப்பதாக உணர்கிறேன்.
ஏறக்குறைய ஒரு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் உங்களுடன் பழகி வருகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான நிலைப்பாடுடன் உங்களுடைய அறிவுத் தேடலின் பயணம் அபரிமிதமான வளர்ச்சிப்போக்குகளைக் கண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அறிவுப் பயணப் பாதைகளையும் அதன் போக்குகளையும் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
சிறு வயதில் திராவிட இயக்க அரசியலின் அறிமுகம். பள்ளியில் படிக்கும்போது எனது அம்மாவின் ஊரில் சோவியத் பிரசுரங்களின் அறிமுகம். ஒருபுறம் அரசியல் சார்ந்த நூல்கள் இன்னொருபுறம் படைப்பிலக்கியங்கள் என வாசிப்பில் இருந்த நாட்டம்தான் என்னை எப்போதும் இயக்கி வந்திருக்கிறது. பள்ளிப் பருவத்தில் முத்து காமிக்ஸ் புத்தகங்களையும் சரத்சந்திரரின் படைப்புகளையும், லெனினின் அரசும் புரட்சியையும் ஒரே நேரத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அண்ணாவின் கம்பரசம் படித்துவிட்டு அதுதான் சரி என்று என்னால் இருக்க முடியவில்லை, கம்ப ராமாயணத்தைப் படிக்கவேண்டும் என்று போனேன். அதுபோலவே ஹெகல் மீதான கார்ல் மார்க்ஸின் விமர்சனங்களை அப்படியே நான் எடுத்துக்கொண்டதில்லை.ஹெகலைத் தேடிப் படித்தேன். ஒரேயொரு சிந்தனையாளருக்கு மட்டுமே நம்மை ஒப்புக்கொடுத்துவிடவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நான் வாசித்த சிந்தனையாளர்களில் இதுவரை கார்ல் மார்க்ஸைப் போல என்னை பிரமிக்கவைத்த ஆளுமை வேறு யாருமில்லை.
‘ஊடகம்’ சிற்றிதழ் வெளியான காலகட்டம் ஒரு வகையான துள்ளலான போக்கைக் கொண்டது. அதில் வெளியிட்ட ‘கோஸ்ட்’ கவிதைகளை ’தினமணி’ இதழ்கூட மறுபிரசுரம் செய்திருந்தது; ‘ழான் க்ளோத் இவான் எர்மோலா’ என்பவரை (ஒரு கற்பனைப் பாத்திரம்) ஊடகம் நண்பர்கள் அனைவரும் நேர்காணல் செய்திருந்தோம், அது ஒரு வகையான போஸ்ட் மாடர்ன் போக்கு. அந்த வகையான நடவடிக்கைகள் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?
ஊடகம் இதழ் முயற்சியை நான் மிகவும் சீரியஸான ஒன்றாகவே இப்போதும் கருதுகிறேன். நாம் எதிர்த்துப் போராடுவது மிகவும் அருவெறுக்கத்தக்க ஒன்றாக இருந்தாலும்கூட கலகக்காரராக இருக்கவேண்டுமென்றால் ஒருவர் சோகமாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்காதீர்கள் என மிஷெல் ஃபூக்கோ கூறியதை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். கற்பனையை எதிர்ப்பு அரசியலுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்ற சிறு பரிசோதனையாகத்தான் ஊடகம் இதழைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த இதழோடு ஒப்பிடக்கூடிய ஒரு சிற்றிதழ் அதற்கு முன்பும் இருந்ததில்லை,அதற்குப் பிறகும் வரவில்லை.
ஆர்எஸ்எஸ்காரர்களால் நாட்டின் பல்வேறு இடங்களில் ஷாக்காக்கள் என்று சொல்லப்படும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு பிற அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? அல்லது பிற அமைப்புகள் இது போன்ற வகுப்புகள் எடுக்க முடியுமா?
ஆர்.எஸ்.எஸ் தனக்கென்று ஒரு சித்தாந்தத்தை வைத்திருக்கிறது,.அதற்கான நடைமுறைகளை உருவாக்கியிருக்கிறது.அத்தகைய நடைமுறைகளை மார்க்ஸியம் போன்றதொரு சிந்தனையைப் பரப்புவதற்கு நாம் கைக்கொள்ள முடியாது. அவர்கள் ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளின் மூலமாக சனாதனத்தை உயிர்ப்பிக்கிறார்கள். அதன்வழியே ஜனநாயகத்தை அழிப்பதற்கான உத்திகளை உருவாக்குகிறார்கள். புரட்சிகர அரசியலும்கூட ஜனநாயக வழிமுறைகளைப் பயன்படுத்தி வேறொரு அரசமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் அது சமூகத்தை முன்னோக்கிக் கொண்டுபோக முனைகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்போ சமூகத்தை பின் நோக்கி இழுத்துச் செல்ல முற்படுகிறது. இந்திய அரசியலை மதவாதம் எதிர் மதச்சார்பின்மை எனப் பார்த்துவந்தோம். இப்போது மதவாதம் என்பது தீவிரம் பெற்று சனாதன முகத்தோடு வெளிப்படுகிறது. எனவே இப்போது சனாதனம் எதிர் சமத்துவம் என்ற நிலைபாட்டை நாம் எடுத்தாகவேண்டும்.
வாக்கு எந்திரங்களை பிஜேபி அரசாங்கத்திடமிருந்து பறித்துக் கொண்டாலொழிய வேறு எந்த கட்சியும் இனிமேல் ஆட்சிக்கு வர முடியாது என்று வலுவான ஒரு வாதம் இருக்கிறது. இந்த வாக்கு எந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் எதுவுமே உருப்படியாகப் பேசவில்லை. இதை எப்படி நாம் எதிர்கொள்ளப் போகிறோம்?

வாக்கு எந்திரங்களைவிடவும் ஆபத்தானது ’ஆதார்’. அதைப் பயன்படுத்தி ஒரு கண்காணிப்பு அரசை ( Surveillance State ) பாஜக கட்டியெழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதன் முழு பரிமாணத்தையும் எந்தவொரு அரசியல் கட்சியும் உணரவில்லை. ஆதாரையும் வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்கிறார்கள். அதன்மூலம் போலி வாக்காளர்களை நீக்கப்போவதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர்கள் விரும்பாத லட்சக் கணக்கானவர்களின் வாக்குரிமையை சத்தமில்லாமல் அவர்களால் பறித்துவிட முடியும். NERP- AP என்ற திட்டத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டில் தெலுங்கானாவில் மட்டும் சுமார் 30 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அப்படி நீக்கவில்லையென்றால் அங்கே சந்திரசேகர ராவ் ஆட்சியே வந்திருக்காது. அதைப்பற்றிய வழக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. 2019 பொதுத் தேர்தலிலும்கூட பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருந்தன. இவ்வளவு பெரிய பிரச்சனையைப்பற்றி எதிர்க்கட்சிகள் பெரிதாக எதுவும் செய்யவில்லை.ஆதாரை அறிமுகப்படுத்தியதற்காக காங்கிரஸ் இப்போதாவது வருத்தப்படவேண்டும். இந்த கண்காணிப்பு அரசை எதிர்கொள்வதற்கு நமக்கு இப்போதுள்ள சிந்தனையாளர்கள் மட்டுமே போதாது. அதிகாரத்துவ எதிர்ப்பு சிந்தனைகளை முன்வைத்த அனைவரிடமிருந்தும் நாம் கற்றாகவேண்டும். அது பின் நவீனத்துவம் இது ஃப்ராங்க்பர்ட் மார்க்ஸியம் என்று முகத்தைத் திருப்பிக்கொண்டுபோனால் நட்டம் நமக்குத்தான்.
உங்களுடைய பாராளுமன்றச் செயல்பாடுகளை கவனிக்கிற எவரும், நீங்கள் மிக காத்திரமான பங்களிப்பைச் செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம் இந்த பிஜேபி அரசாங்கத்தை யோசிக்கச் செய்ய முடியுமா? இவற்றால் ஏற்படும் பயன் என்ன?
இதுவரையிலும் கவனிக்கப்படாத புறக்கணிக்கப்பட்ட பிரச்சனைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வது என்பதை நான் நோக்கமாக வைத்திருக்கிறேன். நமது அமைப்பில் ‘பேச்சுவார்த்தைக்கு’ (Negotiation) ஒரு இடம் இருக்கிறது. சனாதனிகளின் ஆட்சியில் அது குறுகிக்கொண்டே போகிறது என்றாலும் அதைப் பயன்படுத்த நாம் தவறக்கூடாது. நான் எம்.எல்.ஏவாக இருந்தபோது எழுப்பிய பிரச்சனைகளின் தொடர்ச்சியாகத்தான் இப்போது நான் சிலவற்றை கவனப்படுத்தி வருகிறேன். தலித் மக்களின் பிரச்சனைகள், பெண்களின் பிரச்சனைகள், முஸ்லிம்களின் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறேன். தலித்துகளுக்கு அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தின்மூலம் பெற்றுத்தந்த இரட்டை உறுப்பினர் தொகுதி முறையை மீண்டும் கொண்டுவரவேண்டும் எனவும்; பெண்களுக்கு மெனோபாஸ் கொள்கை உருவாக்கப்படவேண்டும் எனவும் ; முஸ்லிம்களுக்கு ’சமவாய்ப்பு ஆணையத்தை’ உருவாக்கவேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறேன்.
நான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் இப்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அமைய இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்களில் சுமார் 10 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. விழுப்புரத்தில் இருக்கும் நகைத் தொழிலாளர்கள் பிரச்சனைமுதல் பனைமலை கோயில் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம் வரை நாடாளுமன்றத்தில் முதன்முதலாக என்னால் எழுப்பப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை கிராமப்புறத்தில் நடத்தி 314 பேர் வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்டனர்
நாடாளுமன்ற உறுப்பினருக்கென ’ஆண்டிராய்டு செயலி’ ஒன்றை உருவாக்கி தொகுதி மக்கள் எளிதில் தமது பிரச்சனைகளைத் தெரிவிக்க வசதி செய்திருக்கிறேன். அனேகமாக இந்திய அளவில் அத்தகைய செயலியை நான்தான் முதலில் உருவாக்கியிருப்பதாக நினைக்கிறேன். இவையெல்லாம் சிறு விஷயங்களாகத் தோன்றினாலும் இவற்றைச் செய்வதற்கு இதுவரை எவருமே முன்வந்ததில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உலக நாடுகளில் இருந்து சில குரல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை சட்டப்படி இந்திய செயல்பாடுகளை என்ன செய்ய முடியும்? இந்தியாவிற்கு எதிரான பொருளாதார நெருக்கடிகளைப் பிற நாடுகளால் தரமுடியுமா?
ஐநா சபை ஐசிசிபிஆர் (ICCPR) என ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் உறுப்பு 2 இல் இதில் கையெழுத்திட்டிருக்கும் நாடு ஒவ்வொன்றும் இந்த ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளைத் தனது நாட்டு எல்லைக்குள் அனைத்து தனி நபர்களுக்கும் இனம்,நிறம்,பாலினம்,மொழி,மதம்,அரசியல் அல்லது பிற சார்பு,சமூகம் அல்லது தேசியம்,சொத்து,பிறப்பு அல்லது பிற அம்சங்களின் அடிப்படையில் எவ்வித பாகுபாடுமின்றி வழங்குவதற்கு உறுதியேற்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படி கூறிவிட்டு முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்கு அதுவும் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டும் குடியுரிமை தருவோம் என சட்டம் இயற்றுவது எப்படி அந்த ஒப்பந்தத்துக்கு ஏற்புடையதாக இருக்கும்? அதனால்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையர் சிஏஏ வை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
ஐநா இயற்றிய சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் நாடுகள்மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐநாவுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும் அது அப்படிச் செய்வதில்லை. மிகப்பெரிய இனப்படுகொலையைச் செய்த இலங்கைமீதே ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே! ஆனால் வழக்கு தொடுப்போம் என்று அறிவித்திருப்பது சர்வதேச நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தும். ஆனால், சர்வதேச நிர்ப்பந்தங்களை மட்டுமே நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மக்களின் போராட்டங்கள்தான் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவர முடியும்.
நாடு தழுவிய என்.ஆர்.சியைக் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனப் பிரதமர் மோடி பேசி வந்தார். ஆனால் இப்போதோ ’இந்தியாவுக்குள் இருக்கும் சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிவதற்கு என்.ஆர்.சி அவசியம் மேற்கொள்ளப்படவேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆபத்தை எதிர்கொள்வதில் இடதுசாரிக் கட்சிகள் இன்னும் முனைப்போடு செயல்படவேண்டும். இப்போது முஸ்லிம் அமைப்புகளே போராட்ட களத்தில் முனைப்பாக இருக்கின்றன. அது ஒருவிதத்தில் வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் நாட்டை இந்துக்கள் முஸ்லிம்கள் எனப் பிரிக்க முயற்சிக்கும் சனாதன செயல்திட்டத்துக்கு அது வசதியாகப் போய்விடும் ஆபத்தும் இருக்கிறது. எனவே ஜனநாயக சக்திகள் சி.ஏ.ஏ,என்.பி.ஆர்,என்.ஆர்.சிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகிக்கவேண்டும். அப்போதுதான் இது அரசியல் ரீதியான போராட்டம் என்ற தோற்றம் உருவாகும்

இந்தியாவில் கம்யூனிசம் இன்னும் தன்னை நவீனப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா? இந்தியாவில் உள்ள சாதிய கட்டுமானத்தைத் தகர்ப்பதற்கு எந்த வகையான செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
ரஷ்யாவில் கோர்ப்பசேவ் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அதே காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை முன்வைத்து இந்திய மார்க்சியர்களும் இடதுசாரி கட்சிகளும் கோட்பாட்டு ரீதியான உரையாடலைத் துவக்கியிருந்தால் சர்வதேச அரசியல் சூழலின் பின்னணியில் இந்தியாவின் பருண்மையான சூழலுக்கு ஏற்ப தமது அரசியல் உத்திகளை மாற்றியமைத்திருக்க முடியும். நிறப்பிரிகை பத்திரிகையின் மூலமாக அதற்கான களத்தைத்தான் உருவாக்கினோம். ஆனால் எங்களை பின் நவீனத்துவவாதிகள் என எதிர்மறையாக விமர்சித்து அந்த உரையாடலுக்குள் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் வர மறுத்துவிட்டனர். ரஷ்யாவில் மாற்றங்கள் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கு நடந்த சோஷலிசக் கட்டுமானம், அதில் நேர்ந்த சிக்கல்கள் ஆகியவற்றைத் திறந்த மனதோடு விவாதிப்பது நம்மை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ள உதவும் சாதி பிரச்சனையைப் பொருத்தவரை இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறோம் என முன்வரும் எந்தவொரு அரசியல் கட்சியும் தற்போது சமூகத்தில் நிலவும் படிநிலைகளைத் தமது கட்சிக் கட்டமைப்புக்குள் மறு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது முதல் அம்சம். அப்படி சமூகப் படிநிலைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் கட்சியால் எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
இடதுசாரிக் கட்சிகள் தமது கட்சிக் கட்டமைப்புக்குள் , கட்சி பொறுப்புகளில் சமூகத்தில் நிலவும் சாதிய படிநிலை மறு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை முதலில் ஆராயவேண்டும். அப்படியிருந்தால் அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
சாதி ஒழிப்புக்காக அம்பேத்கர் முன்வைத்த திட்டங்கள் இப்போது சனாதனமாக உருவெடுத்திருக்கும் மதவாதத்தை எதிர்கொள்வதற்கும் பயன்படக்கூடியவை.மதவாத எதிர்ப்பில் காந்தியத்தை அனுசரணையாகப் பார்க்கும் அளவுக்கு அம்பேத்கரியத்தை இடதுசாரிகள் இணக்கமாகப் பார்க்கவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது.அம்பேத்கரைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல் அவரது சிந்தனைகளை உள்வாங்கித் தமது செயல் திட்டங்களின் அங்கமாக ஆக்கவேண்டும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும், பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், எஸ்சி எஸ்டி துணைத் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க வலியுறுத்தியும் நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவதாக 2012 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் கூடிய சிபிஐ எம் கட்சியின் 20 ஆவது காங்கிரஸில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் கூடிய 21 மற்றும் 22 ஆவது காங்கிரஸ்களிலும் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் போராட்டங்களை முன்னெடுக்க இதுவே சரியான தருணம்.அதில் தமிழ் மாநிலக் குழு முன்னோடி பங்கு வகிக்கவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
சாதி பிரச்சனையை அணுகுவதில் தற்போது இடதுசாரிக் கட்சிகளின் நிலைபாட்டில் ஒரு நெகிழ்வு ஏற்பட்டிருக்கிறது. தலித்துகளுக்கு சாதி ஒழிப்புக் களத்தில் இடதுசாரிகளைப் போல நம்பகமான கூட்டாளிகள் வேறு எவரும் இருக்கமாட்டார்கள்.அதை விசிக சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த இரு அரசியல் போக்குகளுக்கும் இடையில் இணக்கமான உறவு நிலவுகிறது. அதை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இரு தரப்பினருக்குமே இருக்கிறது.
உங்களுடைய அரசியல் பணிகளுக்கிடையே படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்த முடிந்து இருக்கிறதா? மழை மரம் போன்ற மிகச் சிறப்பான கவிதைத் தொகுப்புகளை உங்களால் இப்போதும் தர முடியுமா? அதற்கான நேரம் உங்களுக்குக் கிடைக்கிறதா?
படைப்பிலக்கியமும் அரசியலும் எதிரெதிரானவை அல்ல. நான் எப்போதுமே இரண்டு தளங்களிலும் பங்களித்தே வந்திருக்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் 6 மாத இடைவெளிக்குள் ’அவிழும் சொற்கள்’ ‘மழை மரம்’ என இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டேன். 2011 தேர்தல் பிரச்சாரத்தின்போது எடுவர்டோ கலியானோவின் படைப்புகளிலிருந்து நான் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த ‘வரலாறு என்னும் கதை’ என்ற நூல் வெளியானது.2014 நாடாளுமன்றத் தேர்தலில் நான் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டேன்.அங்கு வாக்கு சேகரித்தபடி திறந்த ஜீப்பில் நின்றுகொண்டு போகும்போது லாங்க்ஸ்டன் ஹியூஸின் கவிதைகளையும் , நிஸார் கப்பானியின் கவிதைகளையும் மொழிபெயர்த்தேன். வாக்குசேகரிக்கும் பயணத்தின்போது ஒரு ஊரில் எனது சிறுகதைத் தொகுப்பான ‘கடல் கிணறு’ வெளியிடப்பட்டது. மழைமரம் போல இன்னொரு தொகுப்புக்கான கவிதைகள் தொகுக்கப்படாமல் கிடக்கின்றன. நான் மொழிபெயர்த்த சுமார் 500 கவிதைகளை நான்கு தொகுப்புகளாக வெளியிட இருக்கிறேன்.
2019 தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்து சுமார் ஒரு வருடம் ஆகப்போகிறது. இந்த கால இடைவெளியில் எனது 6 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் ‘அதிகாரத்துவ எதிர்ப்பு நூல் வரிசை’ என 5 நூல்கள் வெளியாகியுள்ளன. மணற்கேணி என்ற இலக்கிய ஆய்வு இதழ் ஒன்றையும் வெளியிட்டு வருகிறேன்.
படிப்பதற்கும் எழுதுவதற்குமான நேரத்தை நாம்தான் ஒதுக்கிக்கொள்ளவேண்டும். அதை யாரும் நமக்கு வழங்கமாட்டார்கள். எழுதுவதற்கு நேரம் இல்லை என யார் சொன்னாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. படைப்பு என்பது படைப்பாளியைத் தனது ஊடகமாக்கிக்கொள்கிறது. ஒரு படைப்பு உங்களுக்குள் உருத்திரண்டுவிட்டால் அதை எழுதாமல் நீங்கள் வேறு எந்த வேலையையும் பார்க்க முடியாது.

இன்றைக்கு இந்தியாவை ஆளும் பிஜேபி அரசு ஏறக்குறைய 35 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று இவர்களுக்கு எதிரான 65 சதவீத வாக்காளர்களை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறை சரிதானா?
இங்குள்ள தேர்தல் முறை தலித் மக்கள் அதிகாரம் பெற உதவுவதாக இல்லை.எனவே அம்பேத்கர் வலியுறுத்திய ‘இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனித் தொகுதி ‘முறையைக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நானும் சில தோழர்களும் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். அதற்காக 12 இடங்களில் மாநாடுகளை நடத்தினோம். சில நூல்களையும் வெளியிட்டோம். இப்போதும்கூட நான் நாடாளுமன்றத்தில் இரட்டை உறுப்பினர் முறை வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறேன்.
இந்திய ஜனநாயகம் என்பது தேர்தல் முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வயது வந்தோருக்கான வாக்குரிமையை அளித்துள்ளது. ‘ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு’ என்பது தான் அரசியல் சமத்துவத்தின் அடிப்படை என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். எல்லா வாக்குக்கும்ஒரே மதிப்பு என்பது சட்டரீதியில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் நமது தேர்தல் முறையில் நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ‘அதிக வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுகிறார்’ என்ற தேர்தல் முறையில் (FPTP) ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் அதிக வாக்குகள் எவருக்கு விழுந்துள்ளனவோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். எனவே, அவரைத்தேர்ந்தெடுத்த வாக்குகள் மதிப்புள்ளவையாக ஆகின்றன. அவரைத் தவிர மற்றவர்களுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் மதிப்பற்றவையாக ஆகின்றன. இதனால் ‘எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு’ என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்று பொய்யாக்கப்படுகிறது.
தேர்தலில் பதிவு செய்யப்படும் எல்லா வாக்குகளுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமெனில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறைதான் உகந்தது என்ற வாதம் அரசியலமைப்புச் சட்ட அவையிலேயே சிலரால் முன்வைக்கப்பட்டது. சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு அந்த முறையே சிறந்தது என்று வாதிடப்பட்டது. ஆனால் அது அப்போது ஏற்கப்படவில்லை.
இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போன்ற தேர்தல் முறையைப் பின்பற்றிய 89 நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறிச் சென்றுவிட்டன. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த முறைதான் நடைமுறையில் உள்ளது.
இந்தியாவிலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுவர வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 1974 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்ட நீதிபதி வி.எம்.தார்குண்டே தலைமையிலான குழுவும் அதை பரிந்துரைசெய்துள்ளது. இந்தியாவில் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்த பலரும் அதை வலியுறுத்தியுள்ளனர். இந்திய சட்ட ஆணையம் இங்கே விகிதாச்சார பிரதிநித்துவ முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென 1999 ஆம் ஆண்டு பரிந்துரை செய்து விரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் அளித்துள்ளது.விகிதாச்சார பிரதிநித்துவ முறையை வலியுறுத்துவதற்கு முன்பு அம்பேத்கர் ஏன் அதை ஏற்கவில்லை என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். பெரும்பான்மை ஆட்சி என்பதை பெரும்பான்மைவாத ஆட்சியாக உருமாற்றிவிட முடியும் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் காட்டிவிட்டனர். இந்தச் சூழலில் சிறுபான்மை என்பதை நிரந்தர சிறுபான்மையாக (perpetual minority) ஆக்கிவிடக்கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தற்போதைய வகுப்புவாதப் பெரும்பான்மையை (communal majority) அரசியல் பெரும்பான்மையாக (political majority) மாற்றுவதற்குப் பயன்படுமா என்பதையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டும்.
தோழர் ரவிக்குமார் மார்க்சியத்தோடு பரிச்சயம் உள்ளவர் என்று பொதுவாக கருதப்படுபவர்தான்; எந்த அளவிற்கு உங்களுக்கு வாசிக்க வாய்ப்பு கிட்டியது? மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரின் செவ்வியல் நூல்கள் எந்த அளவு வாசித்து இருக்கிறீர்கள்? மார்க்சின் மூலதனம் நூலை வாசிக்க முயற்சித்தது உண்டா? இந்தியாவில் கட்சி சாராத மார்க்சிஸ்டுகள் என்றும், அதேநேரத்தில் பி.சி. ஜோஷி, இ.எம்.எஸ். போன்றோரே தமது ஆசான்களாகக் கூறும் டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இன்னும் பெரிய அளவில் வெளியில் தெரியாத ஜி.எஸ். குரியே போன்றோரை வாசித்தது உண்டா? அவர்களது எழுத்துக்கள் குறித்து கூற முடியுமா?
மார்க்ஸ், எங்கெல்ஸ்,லெனின்,ஸ்டாலின்,மா ஓ மட்டுமல்ல காண்ட்,ஹெகல்,பகூனின், ட்ராட்ஸ்கி என அவர்களுக்கு முன்னும் பின்னுமாகப் பலரையும் வாசித்திருக்கிறேன். ஃப்ராங்க்பர்ட் பள்ளி சிந்தனையாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் ஹெர்பர்ட் மார்க்யூஸ், ஹேபர்மாஸ், அடர்னோ, வால்டர் பெஞ்சமின் எரிக் ஃப்ரம் எனத் தொடர்ந்த என் வாசிப்புப் பயணம் கிராம்ஸ்சி, அல்தூஸர்,மிஷெல் ஃபூக்கோ,தெரிதா, போத்ரியா,ஸிஸேக், ழான் லுக் நான்ஸி, அகம்பன் என நீண்டுகொண்டிருக்கிறது. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையின் இயக்கவியலையும், மார்க்ஸின் EPM 1844 ஐயும் வாசித்த மனக் கிளர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள யாராவது கிடைக்க மாட்டார்களா என அலைந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அது கார்ல் மார்ஸோ அல்லது ஃபூக்கோவோ அவர்களெல்லாம் எனக்கு வெறும் சிந்தனையாளர்கள் மட்டுமல்ல. ஒவ்வொருநாளும் என் சமகால அரசியல் நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும் தோழர்கள்.டிடி.கோசாம்பியும் சட்டோபாத்யாவும் அம்பேத்கரை, அயோத்திதாசரை வாசித்ததற்குப் பிறகு என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்திய வரலாற்றை குறிப்பாக தென்னிந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள ஏராளமான வரலாற்றறிஞர்களின் படைப்புகள் உள்ளன. பர்ட்டன் ஸ்டெயினும் சபால்டர்ன் வரலாற்றறிஞர்களான டேவிட் அர்னால்ட், ரணஜித் குஹா உள்ளிட்டவர்களும் இந்திய வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதிக் காட்டியுள்ளனர். இந்திய கிராமம் ஒவ்வொன்றும் தன்னிறைவு பெற்றவையாக இருந்தன என்ற கார்ல் மார்க்ஸின் கணிப்பு எப்படி தவறானது என்பதை நொபொரு கராஷிமா சோழர் காலக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு விளக்கியிருக்கிறார்.
இப்போது நான் கவனம் குவித்து வாசிப்பது ’கலை வரலாறு’ என்னும் துறை. ழூவு துப்ராய்ல்,சி.சிவராமமூர்த்தி,எஸ்.பரமசிவன் முதலான 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பங்களிப்புச் செய்த அறிஞர்களையும் வித்யா தெஹேஜியா உள்ளிட்ட சமகால வரலாற்றறிஞர்களையும், அண்மையில் காலமான தெலோஷின் நூல்களையும் வாசித்துகொண்டிருக்கிறேன்.
நிறப்பிரிகை காலம் உங்கள் கருத்து தளம் பணிகளில் ஒரு முக்கியமான கட்டம். இன்று அது பொதுவாக பின்நவீனத்துவ இதழ் என்றும் அதன் பங்களிப்பு பின்நவீனத்துவம் என்ற சிந்தனைப் போக்கை தமிழுக்கு அறிமுகம் செய்ததுதான் என்றும் அறியப்படுவது சரியா?
நிறப்பிரிகை சில ஆண்டுகளே வெளிவந்தது. எனினும் அதன் தாக்கம் மிகப்பெரியது என்பதை அதுகுறித்துப் பலரும் சொல்வதைக்கொண்டு உணரமுடிகிறது. தத்துவத்தையும் களப் பணிகளையும் இணைத்ததுதான் அதன் தனித்துவம் எனக் கருதுகிறேன். பின் நவீனத்துவ சிந்தனைகளை மட்டுமல்ல சாதி,தேசிய இனப்பிரச்சனை,பெரியாரியம், பெண்ணியம் எனப் பல்வேறு சிந்தனைப் போக்குகள் குறித்த பலதரப்பட்ட கருத்துகளை அது வெளிக்கொணர்ந்தது. தமிழ்ச் சிந்தனைச் சூழலில் மீண்டும் பழமைவாதம் கொடிகட்டிப் பறக்கிறது. இப்போது நிறப்பிரிகை போன்ற ஒரு பத்திரிகையின் தேவை அதிகரித்திருப்பதாக உணர்கிறேன்.

போதுமான சித்தாந்த பயிற்சி இல்லாத இடதுசாரி வட்டாரங்கள் பின்நவீனத்துவம் என்ற பதத்தையே ஒவ்வாமையோடு நோக்கி இருக்கலாம். ஆனால் செழுமையான அறிவுப் பாரம்பரியம் கொண்ட மார்க்சியம் அப்படி கருதவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம். பிரெட்ரிக் ஜேம்சன் டேவிட் ஹார்வி டெரி ஈகிள்டன் பெரி அண்டர்சன் போன்ற மார்க்சியர்களும் எல்லோருக்கும் மேலாக மார்க்ஸ் நவீனத்துவம் குறித்தும் அதன் பிந்தைய நிலை குறித்தும் எழுதியவற்றை தாண்டி பின்நவீனத்துவ அறிவாளிகள் அறிவாண்மைகள் என அறியப்படுவோரிடம் நமக்கு கிடைப்பது என்ன?
பின் நவீனத்துவ சிந்தனைகளை சாதகமாகப் பார்த்து உள்வாங்கிய கட்சிசார்ந்த மார்க்சியர்கள் எனத் தமிழ்நாட்டில் யாரைச் சொல்வது எனத் தெரியவில்லை. ரஷ்ய நாட்டின் சித்தாந்திகளின் வரிசைகூட ஸ்டாலினோடு இங்கு நின்று போய்விட்டது. அங்கு புதிய சிந்தனைத் திறப்புகளை உருவாக்கிய ஃபார்மலிஸ சிந்தனையாளர்களையோ, மிகைல் பக்தினின் சிந்தனைகளையோ இங்கு கட்சி சார்ந்து யார் பேசினார்கள்? அப்படி அவர்களை வாசித்திருந்தால் அமைப்பியலையோ, பின் அமைப்பியலையோ, பின் நவீனத்துவத்தையோ எதிராகப் பார்க்கும் நிலை நிச்சயம் இங்கு ஏற்பட்டிருக்காது
நீங்கள் குறிப்பிடும் பட்டியலில் இருப்பவர்கள் பிரிட்டிஷ் மார்க்ஸியர்கள். அவர்களுடைய சிந்தனாமுறை வேறு. பிரெஞ்சு மார்க்ஸியர்களின், ஜெர்மானிய மார்க்ஸியர்களின் சிந்தனாமுறை வேறு. அவற்றை ஆழ்ந்து வாசிக்கும்போதுதான் அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். பிரிட்டிஷ் மார்க்ஸியர்கள் பெரும்பாலும் மரபான முறையில் சிந்திப்பவர்கள். மந்த்லி ரெவ்யூ பத்திரிகையின் நிறுவனரான காலஞ்சென்ற பால் ஸ்வீஸியும், தற்போது முனைப்போடு பல நூல்களை எழுதிக்கொண்டிருக்கும் அமெரிக்கரான கெவின் ஆண்டர்சனும் ஏறக்குறைய பிரிட்டிஷ் மார்க்சிஸ்ட்டுகளின் வழியில் வருபவர்கள்தான்.
பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய சிந்தனையாளர்கள் என்னை ஈர்க்கும் அளவுக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க மார்க்ஸியர்கள் என்னை ஈர்க்கவில்லை.பிரெஞ்சு,ஜெர்மானிய சிந்தனையாளர்களின் எழுத்துமுறையில் கலந்திருக்கும் படைப்பு குணம் அதற்கொரு காரணமாக இருக்கலாம். அல்தூஸரை, வால்டர் பெஞ்சமினை வாசித்தால் நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்காலந்தோறும் மாறி வருகிற உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றையும் அரசு என்னும் வடிவத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களையும் புரிந்துகொள்வதற்கு ஒருசில தத்துவ அறிஞர்களைப் பயின்றாலே போதும் என நினைப்பது சரியானதாகத் தெரியவில்லை. தன்னிலை, அதிகாரம் என்பவை குறித்து மிஷெல் ஃபூக்கோ கொடுக்கும் தெளிவை எனக்கு வேறெந்த சிந்தனையாளரும் கொடுத்ததில்லை.
இயற்கை அறிவியல் இயற்பியல் ஆக இருந்தாலும் உயிரியல் ஆக இருந்தாலும் அதன் கோட்பாடுகளை பெருங்கதையாடல் என்று ஒதுக்கினாலும் Cern ஆய்வுகள் போன்றவை மற்றும் மரபணு அடிப்படையிலான ஆய்வுகள் போன்றவை எல்லாம் பெருங்கதையாடல் பெருமளவுக்கு சரி என்றுதான் நிறுவியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் முதலாளித்துவத்தின் பெரும் நெருக்கடிகளை மார்க்சின் பெருங்கதையாடல் ஒன்று மட்டும் தான் விளக்க முடிகின்றது. அதனை அவரது எதிரிகள் கூட அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் பின்நவீனத்துவ நிலைபாடுகளை மறுபரிசீலனை செய்தீர்களா?
நீங்கள் ழான் ஃப்ரான்ஸுவா லயோத்தாவினால் அவரது ‘போஸ்ட் மாடர்ன் கண்டிஷன்’ என்ற நூலில் முன்வைக்கப்பட்ட கருத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அது 40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நூல். மிகவும் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ சமூகத்தைத்தான் அவர் ‘போஸ்ட் மாடர்ன்’ என அந்த நூலில் அடையாளப்படுத்தினார். அந்த நூல் அறிவியலை நிராகரித்து எழுதப்பட்டதல்ல. ’விஞ்ஞானி என்பவரும் ஒரு கதை சொல்லி தான் .ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் அந்தக் கதைகளை சோதிக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது’ என்று அந்த நூலில் அவர் சொல்லியிருப்பார். ’ ஒரு கேள்விக்கான விடையை அறிவியல் அளித்தால் மேலும் பல கேள்விகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அந்த கேள்விகளுக்கும்கூட அறிவியல் மூலமே விடை காண முடியும்’ என்ற க்ளோத் லெவிஸ்த்ராஸின் கூற்றில் எனக்கு முழு உடன்பாடு உண்ட இப்போதைய தேவை மார்க்ஸின் மேதமையைப் பாராட்டி சந்தோஷப்பட்டுக்கொள்வது அல்ல.
இன்றைய நெருக்கடிகளை மார்க்ஸின் சிந்தனையைப் பயன்படுத்திப் புரிந்துகொள்வதுதான். மார்க்ஸுக்கு எதிராகப் பின் நவீனத்துவ சிந்தனையாளர்களை நிறுத்துவதால் அவருக்கும் இழப்பு அல்ல, பின் நவீனத்துவ சிந்தனையாளர்களுக்கும் இழப்பு அல்ல. நமக்குத்தான் பேரிழப்பு. ஜனநாயகத்தையும் கும்பல்நாயகத்தையும் ( Mobocracy) வேறுபடுத்திப் பார்ப்பதற்கும், கும்பல்நாயகத்துக்கும் ஃபாசிசத்துக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்வதற்கும் எனக்கு எலியா கனெட்டியின் சிந்தனை பயன்படுகிறது என்றால் அதை நான் எடுத்துக்கொள்கிறேன். கார்ல் மார்க்ஸைத் தவிர நான் வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ’பதிவிரதைத்தனம்’ எனக்குத் தேவையில்லை.
நான் வாழும் நாடு, அம்மணமாகத் திரியும் சாமியார்களையும் அவர்கள் காலில் விழுந்து வணங்கும் ஆட்சியாளர்களையும் மட்டும் கொண்டதல்ல. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய அடிமை முறையை உருவாக்க முயலும் அரசு வடிவத்தையும் கொண்டது. அம்மண சாமியார்களின் அதிகாரத்தையும் நான் புரிந்துகொள்ளவேண்டும், கண்காணிப்பு அரசமைப்பையும் நான் விளங்கிக்கொள்ள வேண்டும். இவற்றுக்கிடையிலான உறவையும் அதில் வெளிப்படும் அதிகாரத்தையும் எதிர்கொள்ளவேண்டும். அதனால்தான் எனக்கு இங்கே அம்பேத்கரும் தேவைப்படுகிறார், மிஷெல் ஃபூக்கோவும் அவசியமாகிறார்.
ஒரு சிந்தனையாளரைப் பயில்வது இன்னொருவரை நிராகரிப்பதற்கல்ல, நமது புரிதலை ஆழப்படுத்திக் கொள்வதற்குத்தான் என்பது எனது நிலைபாடு. அதனால்தான் கார்ல் மார்க்ஸை மட்டுமின்றி பகூனினிடமும் நான் போகிறேன், லெனினோடு நிற்காமல் டிராட்ஸ்கியிடமும் செல்கிறேன்.ஃபூக்கோவே போதுமெனக் கருதாமல் ’ஃபர்கெட் ஃபூக்கோ’ என்ற நூலை எழுதிய ழான் போத்ரியாவையும் தேடிச்செல்கிறேன். என்னைப் பொருத்தவரை அறிவுச் செயல்பாடு என்பது அதிகாரத்துவத்தை எதிர்கொள்வதுதான்.
இந்தியாவில் நிலமற்ற விவசாயக் கூலிகள் பெரும்பகுதியினர் தலித் மக்கள்தான் . நிலச்சீர்திருத்தம் அல்லாது இவர்களது வாழ்வு மேம்பட இயலாது. ஆனால் இந்த அம்சம் அன்றைக்கு அம்பேத்கரின் செயல்பாடுகளிலோ அல்லது இன்றைக்கு தலித் இயக்கங்களிலோ எந்த அளவு பேசுபொருளாக உள்ளது?
இந்தியாவில் நிலம் விவசாயம் என்பதன் முக்கியத்துவத்தை அம்பேத்கர் தனது இளம் வயதிலேயே உணர்ந்திருந்தார்.இன்றைக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது 27 ஆவது வயதில் , 1918 ஆம் ஆண்டில் எழுதிய ’இந்தியாவில் சிறு நில உடமைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்’ என்ற ஆய்வுக் கட்டுரை இப்போதும் பொருந்தக்கூடியதாகும் நிலம் துண்டு துக்காணியாக சிதறுண்டு கிடப்பதற்கும் விவசாயத்துறை நவீனமயமாகாமல் இருப்பதற்கும் உள்ள உறவை அதில் அவர் ஆராய்ந்திருப்பார். அதுமட்டுமின்றி பெரும்பகுதியான மக்கள் சிறு அளவு நிலத்தையே சார்ந்திருக்க வேண்டியிருப்பதால் ஏராளமானவர்கள் வேலையின்றி கிடக்கவேண்டியிருக்கிறது என்பதையும், உற்பத்தியில் ஈடுபட வழியின்றி நுகர்வை மட்டும் செய்துகொண்டிருப்பவர்களால் எப்படி பஞ்சம் உருவாகிறது என்பதையும் அந்த ஆய்வுக் கட்டுரையில் அவர் எடுத்துக் கூறியிருப்பார்.
1947 ஆம் ஆண்டு அவர் தலைமையேற்று நடத்திய ’ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷன்’ என்ற அரசியல் கட்சியின் சார்பில் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவில் ‘ நிலங்களை கூட்டுப் பண்ணை முறையில் சாகுபடி செய்யவேண்டும் , விவசாயம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் செய்யப்படும் தொழில் ஆக்கப்படவேண்டும் ‘ என வலியுறுத்தியிருக்கிறார். 1918 இல் மட்டுமல்ல 1947 இலும் நிலம் என்பது அவரது அரசியல் திட்டத்தில் முதனமையான பங்கை வகித்தது.
இப்போது விவசாயிகளின் பிரச்சனை என்று பேசுகிற எல்லோருமே நிலம் உள்ளவர்களின் பிரச்சனையை மட்டுமே முதன்மைப்படுத்திப் பேசுகிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களும்கூட அப்படியே கருதுகிறார்கள். ’பிரதம மந்த்ரி கிஸான்’ திட்டம் என்ற பெயரில் இப்போது மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம்கூட நிலம் உள்ள விவசாயிகளுக்குத்தான் ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்குகிறது.
நிலமற்ற கூலிகளின் பிரச்சனையை விசிக சார்பில் நாங்கள் தொடர்ந்து முதன்மைப்படுத்தி வருகிறோம். டெல்டா மாவட்டங்களை வறட்சி தாக்கியபோது கூலி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வலியுறுத்தினோம். நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை உயர்த்த வேண்டுமென்றும், அந்த வேலையை 200 நாளாக உயர்த்தவேண்டும் என்றும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துவருகிறோம்
2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் முன்மொழிந்த ‘நியாய்’ என்ற திட்டம் நிலமற்ற கூலிகளுக்கு பயனளிக்கும் மகத்தானதொரு திட்டமாகும்.காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதை நடைமுறைப்படுத்த அவர்கள் முன்வரவேண்டும்.கேரளாவிலும்கூட அதை முயற்சித்துப் பார்க்கலாம்.

தமிழகம் இன்று இருப்பதைக் காட்டிலும் சாதிய மனப்பான்மை குறைவான சமத்துவம் நிலவும் பூமியாக இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைக்கும் இந்தியாவில் தமிழகத்தைக் காட்டிலும் இந்த விஷயத்தில் முன்னேறிய மாநிலம் வேறு என்ன இருக்கிறது?
இந்தியாவின் பிற மாநிலங்களைவிட பல விதங்களில் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இதற்கான அடிப்படையை இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னே சென்று பார்க்கவேண்டும். இந்தியா என இப்போது அறியப்படும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல விதங்களிலும் முன்னேறிய பண்பாட்டைக்கொண்ட ஒரு பகுதியாகத் தமிழகம் திகழ்ந்திருக்கிறது. அதைத்தான் கீழடி,பொருந்தல், கொடுமணல், ஆதிச்சநல்லூர்,கொற்கை முதலான அகழ்வாய்வுகள் காட்டிக்கோண்டிருக்கின்றன.
ஆனால் இங்கே இப்போது சமூகநீதி தழைத்தோங்குகிறது என்று நீங்கள் சொன்னால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்றே நான் சொல்வேன். இந்தியாவின் மிகவும் பிற்போக்கான மாநிலங்கள் எனக் கருதப்படும் உத்தரபிரதேசத்தைவிட, பீகாரைவிட இங்கே சாதிய உணர்வு குறைவாக இருக்கிறது என என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டின் நிலவுடைமை குறித்த புள்ளி விவரங்கள் மட்டுமல்ல, கலப்புமணம் குறித்த புள்ளி விவரமும்கூட சாதி இறுக்கம் மிகுந்த மாநிலமாகத்தான் தமிழகத்தைக் காட்டுகின்றன.
அண்மைக்காலமாக அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளும், வெறுப்புக் குற்றங்களும் இங்கே சனாதனமும் சாதிவெறியும் கைகோர்த்துக் கொண்டிருப்பதற்கு சான்றுகளாக இருக்கின்றன. அந்த ஆபத்திலிருந்து தமிழகத்தைப் பாதுகாக்கவேண்டிய கடமை நம் எல்லோருக்குமே இருக்கிறது. மதவாதத்தை எதிர்ப்பதென்பது சாதியவாதத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல. இதை நாம் வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் இப்போதும்கூட அம்பேத்கரின் சிந்தனைகளை உயர்த்திப் பிடிப்பதென்பது தலித்துகளுக்கு மட்டுமேயான ஒரு கடமை என்ற நிலைதான் உள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாளை ’சமத்துவ நாள்’ என அறிவிக்கவேண்டும் என நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசினேன். ஏன் இந்த கோரிக்கையை தமிழ்நாட்டிலுள்ள மற்ற கட்சிகள் ஆதரிக்கக்கூடாது?