கரோனா நோய் ஒரு சர்வதேச பேரிடராக மாறிய பிறகு, முதலாளிய நாடுகள், சோஷலிச நாடுகள் இரண்டும் நிலைமையை எதிர்கொள்ளும் விதம் பல்வேறு பாடங்களை அனைவருக்குமே உணர்த்துவதாக உள்ளது. அவலத்தின் இரக்கமற்ற அதிகார சூழலை இடம்பெயரும் பல லட்சம் தொழிலாளர்கள் சாரிசாரியாக நடந்து ஊர் திரும்பிட உயிரையும் பணயம் வைத்து நடந்த சம்பவம் நம்மை திகைக்க வைக்கிறது. அறிவியல்பூர்வ உணர்வற்ற நம் பாசிச ஆளும் குழுமம் வாய் உத்திரவுகளை மட்டுமே கரோனா எதிர்ப்பு செயல்பாடாக ஆக்கி மக்களை வஞ்சித்தது.
உலக அளவில் அதிக பாதிப்புக்கு உள்ளான ஸ்பெயின் தன் நாட்டு மருத்துவமனைகளை தேசிய உடைமை ஆக்கியது. பல கார்ப்பரேட் சாம்ராஜ்யங்கள் விழப் போகின்றன. அமெரிக்க அரசு வெளியில் சொல்ல முடியாத அளவு துயரங்களை தன் மக்களுக்குத் தருகிறது. கியூபாவைப் போன்ற ஒரு சோஷலிச சமுதாயம் நோய் பிடியில் சிக்காதது மட்டுமல்ல உலகில் அதிக பாதிப்பிற்கு உள்ளான நாடுகளுக்கு தன் மருத்துவ குழுக்களை அனுப்பி உலகை வியப்புற வைத்தது. எல்லா நாடுகளும் தன் எல்லைகளை மூடி சுற்றுலா உட்பட யாவற்றையும் முடிவுக்கு கொண்டு வந்தபோதும் கியூபா தங்கள் நாட்டிற்கு வரலாம் என உலகை அழைத்து சவால்விட்டதை என்ன சொல்ல. எது எப்படியோ சீனா கரோனாவின் பிடியில் இருந்து மீண்டு தன் இயல்பிற்கு மிக விரைவாக திரும்பிவிட்டது.
மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தங்களது பரஸ்பர தியாகங்களின் மூலம் இதிலிருந்தும் மீண்டெழுவார்கள். இந்தியாவை பொறுத்தவரை நோயால் செத்தவர்களைவிட பட்டினியால் அதிகம் பேர் செத்த இந்த ஊரடங்கு காலத்தை பல ஆண்டுகளுக்கு மக்கள் மறக்கமாட்டார்கள். சலுகைகளை அதானி அம்பானி கூட்டத்திற்கே வாரி வழங்கிய விசுவாச பிரதமர் பேரிடர்-நிதிக்கு மட்டும் மக்களிடம் கையேந்துகிறார். கம்யூனிச ஆட்சி நடக்கும் கேரள அரசு செய்து வரும் அற்புத பேரிடர் பணிகளில் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு சதவிகிதம் கூட செய்திட மய்ய மாநில அரசுகளுக்கு திராணி இல்லை. இதற்கிடையே ஜெர்மன் நிறுவனமான ‘க்யூர் வாக்’ உருவாக்கிய கரோனா தடுப்பு மருந்தின் முழு உரிமத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வாங்கிட முயன்றது, எத்தனை வெட்கக்கேடான செயல். அதை வழங்க மறுத்த ஜெர்மனி மருந்து அனைவருக்குமானது என அறிவித்தது.
புதிய உலக கட்டமைப்பு நோக்கிய பயணத்தை காட்டுகிறது. இனி வைரஸ் மற்றும் அதற்கான ‘மருந்து’ அடிப்படையில் உலகம் அணிதிரள இருக்கலாம். ஆனால் முதலாளியம் நிலை தடுமாறுகிறது. அதன் ஒவ்வொரு தடுமாற்றமும் இதோ சோஷலிசம் என மக்களை முழங்க வைக்கிறது. சிந்திப்போம்
-ஆசிரியர் குழு