மாதந்தோறும்
ஏதாவதொரு மாலைநேரத்தில்
பிறந்து தொலைக்கிறது
புதிய இந்தியா
ஊரடங்கி இருள்கவிய
பிறப்பதையே
வாடிக்கையாய் கொண்டிருக்கிறது
நள்ளிரவில் பிறந்த
சுதந்திர இந்தியா
கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக் கொண்டிருக்கிறது.
– கவிஞர். ப.செல்வகுமார்
பேசும்பொருளைச் சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாக அழுத்தமாக தனது எல்லா கவிதைகளையும் கவிஞர். செல்வகுமார் பேசுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு தினத்தையும் பயந்து பயந்து கடக்க வேண்டியதாக உள்ளது. இன்று என்ன குண்டு விழுகிறதோ என்று நினைத்தவாறே செய்தித் தாள்களை வாசிக்கும் மனநிலைக்கு இந்த தேசம் தள்ளப்பட்டுள்ளது. எளிய மக்கள் மீது அரசின் அதிகாரம் நடத்தும், நடத்திக்கொண்டு இருக்கும் பலவற்றை தனது கவிதைத்தொகுப்பில் பெரும்பாலும் பதிவு செய்து இருக்கிறார்.
கவிதைக்கு வேண்டிய அழகியலைக் கெடுக்காமலும் சொல்லப்படவேண்டிய அரசியலை தவிர்க்காமலும் இருகோடுகளிலும் அழகாக கவிதைகள் உள்ளன. நேரடியான கவிதைச் சொல்லாடல்கள் குறித்து பலவிதமான கருத்துகள் உள்ளது. ஆனால் மக்களுக்கான படைப்புகள் அந்த மக்களிடம் செல்லவேண்டுமென்ற கருத்தை யாரும் மறுதலித்ததில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி என்பதில், செல்வகுமார் அரசின் அதிகாரங்களை நையாண்டியாகப் பதிவு செய்யும் பாணியைக் கைக்கொண்டு உள்ளார். இந்த பாணியை பலரும் பலவகையில் செய்து பார்த்துள்ளனர். கவிஞர்.கந்தர்வன் அந்த பாணியில் பலகவிதைகளை எழுதி உள்ளார். அந்த முறை செல்வகுமாருக்கும் நன்றாக வந்துள்ளது.
கட்டண கழிவறை
கணினி திரையில் கைரேகை பதிந்து
முக்கி முடிந்து ஊற்றிய
இரண்டு குவளைத் தண்ணீருக்குப் பிறகு
அனுமதிக்கப்பட்ட அளவு
முடிந்ததெனக் திரைக்காட்டி
கூடுதல் தண்ணீருக்கு
கூடுதல் கட்டணம் கேட்டது
கணினி திரை
ஐந்து ரூபாய் வரியோடு
ஏழு ருபாய் ஐம்பது காசு பிடிக்கப்பட்டதாய்
வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வந்தது.
வாசல் சுவற்றில்
மூன்று நாட்களுக்கு
ஒருமுறை மட்டுமே போக
மலஞ்சலி மாத்திரை ருபாய் இருபது என்றபடி
காவிக்கோவணத்தோடு சாமியார் ஒருவர்
தலைகீழாய் நின்றிருந்த
விளம்பரத்துக்கு அருகிலுள்ள செய்தித்தாளில்
விமானத்தின் படிக்கட்டில்
விலை உயர்ந்த கோட்டோடு
இரண்டு விரலை காட்டியபடி
நின்றிந்தார்.
என்ற நீண்ட கவிதையில் தேசத்தின் ஒட்டுமொத்த அவலத்தையும் அங்கதச் சுவையோடு பதிவு செய்கிறார். தண்ணீர் தனியார்மயம், வரி என்ற பெயரில் நடக்கும் சுரண்டல் காவியின் கார்ப்பரேட் சுரண்டல் இதற்கு நடுவில் மாப்பிள்ளையாக உலகத்தை வலம் வரும் தேசத்தின் பிரதமர் என்று ஒட்டுமொத்த தேச அரசியலை மிக லாவகமான நையாண்டித்தனத்தோடு கவிதை உள்ளது. இந்த கவிதையை படிக்கும்போது எதிர்காலத்தில் இப்படியான நிலைமை வந்தால் என்ன செய்வது என்ற பயமே வந்தது. கோவையில் சூயஸ்என்ற தனியார் நிறுவனத்துக்கு தண்ணீர் அப்படியே தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டு விட்டது. இனி அந்த நிறுவனத்தின் தயவில்தான் தண்ணீர் கிடைக்கும். மின்சார மீட்டர் கருவிகளைப் போல இனி அந்த நிறுவனம் ஒவ்வொரு வீட்டிலும் கருவி பொருத்தும் என்று அறிவிக்கப்பட்டதுள்ளது. இந்த கவிதையில் வந்த நிலை விரைவில் கோவையிலும் வரலாம். தமிழக முழுவதும் இந்தத் திட்டம் வருமென்று அமைச்சர் அறிவித்து வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார். ஒரு படைப்பாளி செய்யவேண்டியதை இந்த கவிதை செய்துள்ளது.
அறுத்து லாரியிலேற்றி
அடுக்கிய மரங்களில்
யானையின் பாதம். என்ற கவிதையிலும்..,
கிளைகளிலேறி
வெட்டியவனின்
முதுகில்
எச்சமிட்டது
அந்த சிறுபறவை.
இப்படியான சில கவிதைகள் சூழலியல் குறித்தும் பேசுகிறது. பறவைகள் விலங்குகளால் மட்டுமே காட்டை உருவாக்க முடியும். ஜக்கி வாசுதேவ், பால் தினகரன், கர்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் செல்வாக்குள்ள தனிமனிதர்கள் ஆகியோரால் தொடர்ச்சியாக வன ஆக்கிரமிப்புகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. வனத்தில் உள்ள வளங்கள் அரசின் துணைகொண்டு திருடப்படுகிறது. பறவைகள், மற்றும் விலங்குகளின் வலிகளையும் அதிகமான சொற்களைக் கொண்டு பெரும் அலங்காரம் எதுவும் செய்யாமல் அதன் நேரடி அரசியலை அழகியலோடு சிலகவிதைகள் பதிவு செய்கின்றன.
தமிழக வரலாற்றில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கருப்பு நாளாக உள்ளது. காக்கை குருவிகளைச் சுடுவதைப்போல கார்ப்பரேட் நலன் காக்கும் தமிழக அரசு பொதுமக்களை சுட்டு தள்ளியது. சிறுகுழந்தைகள் என்று கூடப் பாராமல் நரவேட்டையாடியது. அந்த கொலைக் குற்றத்தைச் செய்த அரசு அதுகுறித்து எதிர்கட்சிகள் பேசியதை, அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவிக்குமளவு தரம் தாழ்ந்து சகிப்புத்தன்மை அற்ற அரசாக உள்ளதை, கையாலாகாத படுகொலை என்ற கவிதையில் பதிவு செய்கிறார். அக்கவிதையில் தமிழ்நாட்டை காக்க ஏதோ சமூக பணியாற்றியதை போல அரசு நடந்து கொண்டதை எதிர்மறை சொல்லாடலில் காத்திரமாக பதிவு செய்கிறார்.
தற்காப்புக்காக காவலர்கள்
வானத்தை நோக்கி சுட்டபோது
பொதுமக்கள் தாங்களே முன்வந்து
நெஞ்சில் வாங்கியபடி விழுந்தனர்
முதியவரொருவரின் இடுப்பில் பாரமாயிருந்த
வேட்டியை அவிழ்த்து உதவியதோடு
னங்கென முழங்கையால் முத்தமிட்டதை
படம் பிடித்து பரவ விட்டனர்
கேள்விகளால் வசைபாடிய சிறுமி யொருத்தியின்
வாய்க்குள் விழுந்த ஈக்களை விரட்ட
துப்பாக்கியால் துளாவியபோது அவள்
மூளைக்குள் பதுங்கியிருந்த குண்டுகள் வெளியேறின…
குறைந்தபட்ச மனித நேயம்கூட இல்லாமல், தமிழகத்தை சமூகவிரோத சக்திகளிடமிருந்து மீட்க மகத்தான பணி செய்ததாக நடந்துகொண்ட அரசை இக்கவிதையில் மிக நுட்பமாக அதன் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளார் செல்வகுமார்.
இத் தொகுப்பில்,காதல், ஆழ்மன போராட்டம், சமூகம், அரசியல் என்று பலவற்றை கவிதைப்படுத்தியுள்ளார். சில கவிதைகளில் நல்ல படிமம் உள்ளது. இன்னும் சில கவிதைகளை நேர்த்தியாக செய்திருக்கலாம். சில கவிதைகள் உரைநடை தொனியில் கவிதைக் கட்டமைப்புக்குள் சரியாக பொருந்தவில்லை. சில கவிதைகள் சுருக்கமாக சொல்லிவிடக் கூடியதை நீட்டில்கொண்டே போவதைத் தவிர்த்து இருக்கலாம். இந்த சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் மிக நல்ல தொகுப்பாக ரூபாய் நோட்டில் மிதக்கும் சைபர் உள்ளது. பாரதி புத்தகாலயம் மிகச் சிறப்பாக வடிவமைத்து உள்ளது. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.