அ. கரீம்-இன் சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை என்ற அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பை வைத்து தஞ்சையில் பாரதி புத்தகாலயம் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இது பாரதியின் மகுடத்தில் மேலும் ஒரு அணிகலனாகச் சேர்ந்திருப்பது இந்தச் சிறுகதைத் தொகுப்பு.. 9 கதைகள்..9 தளங்கள்..ஒவ்வொன்றும் வெவ்வேறு வலிகளைச் சொல்லும்..பதிவுகள்.புனைவுகள். எல்லாமே நம் அன்றாட வாழ்வில் நாம் கடந்து வந்திருக்கும் நிகழ்வுகள். காலத்தின் ஓட்டத்தால் மறந்த விசயங்கள்.
அ.கரீம், அவரின் வாழ்வில் ஏற்பட்ட, சந்தித்த சில நிகழ்வுகளைத் தனக்கே உரிய பாணியில் எளிமையான கதை ஓட்டத்தோடு புனைந்திருக்கிறார். இத்தொகுப்பில் வரும் 9 கதைகள், நம்மிடத்தில் ஏற்படுத்தும் , அழுகை, கோபம், ஆற்றாமை, எனப் பல உணர்வுகளைக் கிளறி விடுகிறது.
முதல் கதையின் தலைப்பு இருள். ஒரு யுவதி கலவர நேரத்தில் படும் துயரங்கள்..ஒரு மதக்கலவரம் நடக்கும் போது பெரு நகரமோ..சிறு கிராமமோ எதுவானாலும் அதையொட்டி நீளும் பிரச்சனைகள்..மரணங்கள், பொருளாதார, வர்த்தக பாதிப்பு, உடைமை இழப்பு, அவ்வளவு சிக்கல்களுக்கும் ஊடாகவும் எப்போதும் துளிர்த்தெழும் மனித நேயம் என எண்ணிலடங்கா சங்கிலித் தொடர் நிகழ்வுகள் என நீளும் அந்த புனைவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தவிப்பு, அதனூடே எழும் இணையரின் சிக்கல் என எல்லா பிரச்சனைகளையும் சொல்லிடும் பாங்கு அருமை.
இரண்டாவது,வெக்கை.இந்த கதையை வாசித்தபின் நிச்சயம்அரசு நிர்வாகத்தை, வெட்டி ஆடம்பரங்களைப் பற்றிய விமர்சனம் எழும். ஒவ்வொருவரும் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை நிச்சயம் எதிர் கொண்டு பட்ட அவஸ்தைகளை அசை போடுவார்கள்… காவல் துறையில் பணியாற்றும் நம் சகோதரிகள் மீதான ஒரு பார்வை கண்டிப்பாக மாறும்.
இந்த கதையில் ஆளுனர் ..வி ஐ.பி..முதல்வர் வருகை என நமது நிர்வாகம் செய்திடும் அசிங்கங்களை நம்மால் உணர முடியும். அதுவும் தமிழகத்தில் முன்னொரு காலத்தில் கட் அவுட்கள் கூட போலீஸ் பாதுகாப்போடு சாலைகளில் நின்றன. அரசியல் அநாகரீகத்தின் உச்சம் அது. சமகாலத்தில் ஆளுனர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் இணைத்துப் பார்க்கும் போது நமக்குள்ளும் வெக்கை ஏற்படுகிறது. மதங்கள் எவ்வாறு நிறுவனமயமாகி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. மதங்கள் போதிக்கும் நல்லொழுக்கங்களைப் பெரும்பாலும் யாரும் பின்பற்றுவதில்லை..விதி மீறல்கள் தாராளம். மேலிருந்து கீழ் வரையிலும் இந்த மீறல் தங்கள் வசதிக்கேற்ப தன்மைகளை மாற்றிக் கொள்வார்கள். அது தான் இந்த புனைவின் மையக் கரு. இஸ்லாம் வட்டிவாங்குவதை ஏற்பதில்லை.. ஆனாலும் விதி மீறல்கள் இருக்கிறது என்பதை சுருட்டு ராணி யில் சொல்லியுள்ளார் கரீம். இதில் பணம் தான் பெரிது, அன்பு, தாய்மை..பாசம் எல்லாமே பணத்திற்கு முன்னால் காணாமல் போய்விடும். என்பதைப் பதிவிட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் காரல் மார்க்ஸ் கூறுகையில், பொருளாதார உறவு முறைகள் தாய்- குழந்தை உறவு முறைகளைக் கூட கொச்சைப்படுத்தும் என்பார் . அதை இப்புனைவில் மார்க்க மீறலோடும் இணைத்துச் சொல்லியிருப்பது அருமை.
இந்த தொகுப்பிலேயே மிகவும் ஈர்த்த படைப்பு விருத்த சேதனம். காதலுக்காக எதையும் இணைந்து வாழ்க்கையில் பயணிக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் தியாகங்கள், விட்டுக் கொடுப்பது..சமரசம் செய்து கொள்வது..மத சடங்குகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்வது என பல தடைகளை வாழும் பல தம்பதியினருக்காக இது சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும். மதம் எனும் நிறுவனத்தை பாதுகாக்க இன்றும் செய்யப்படும் சில அர்த்தமற்ற சடங்குகளை, பின்பற்றப்படும் மூடப் பழக்க வழக்கங்களை மிகவும் நேர்த்தியாக சாடியுள்ளார். இக்கதையில் கரீமின் வார்த்தைகளில் இது தெரிகிறது. குடும்பத்தை இழக்காமல் பிடித்தவர்களோடு வாழ்வதற்கு எவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என்றும்….நம்மூர்ல பொண்ணா பொறந்தா இங்கே புடுச்சவன கல்யாணம் செய்ய முடியுமா என்ன? சாதி, மதம், மண்ணாங்கட்டின்னு ஆயிரம் நொட்டையிருக்கு.. எவ்வளவு யதார்த்தமான வார்த்தைகள்…கருத்துச் செறிவு…. சாதியும்..மதமும் இன்றும் சமூகத்தின் கேடுகளாக இருப்பதை அதன் தாக்கங்கள் ஆணவக் கொலைகள் வரை செல்வதை பார்க்க முடிகிறதே… அதை இந்த கதைக்குள் உறவுகளின் திருப்திக்காக மனதார ஏற்கும் அந்த காதல் ஜோடி .. பழமைவாதம் மாறாத மத அமைப்புக்கள்.. என்றாலும் கூட காதல் வெற்றி பெறுகிறது…முக்கியமாக இந்த கதையில் இறுதியில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதில் கூட இருவரும் தலையிடுவதில்லை எனும் விசயம் தான் தேவை..அவரவர் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதே வாழ்க்கை.
அடுத்து இப்புத்தகத்தின் தலைப்பு…காஷ்மீர சிறுமி ஆசிபா கொடூரமாக வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதின் தாக்கமாக அச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு குதிரையின் வழியே நின்று சொல்லும் வழி..அற்புதம்..கண்களை குளமாக்கும்…ஒரு ஐந்தறிவு மிருகம் ஆறு அறிவு மிருகங்களை பற்றி சொல்லிடும் பாணி…இது ஒரு புது யுத்தி… கலைஞர் அவர்கள் கூட குப்பை தொட்டிசிறுகதையில் இதே பாணியில் முன்னரே எழுதியுள்ளார். இவர் இது போன்ற வடிவங்களில் மேலும் பயணிக்கலாம்.
அடுத்து அகழியாகும் கோடுகள். அமிர்தசரஸ் நகரம் அவருக்குள் ஏற்படுத்திய தாக்கம்..அதனால் கலங்கிய உள்ளுணர்வு, ஜாலியன் வாலாபாக் எனும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் உருவாக்கிய அதிர்வுகள் ..அந்த இடம் முக்கியத்துவம் பெற்றதற்கான பின்னணி.
ஆங்கில அதிகாரி டயர்…அவனை கணக்கு முடித்த மாவீரன் உத்தம் சிங்..அதில் தன் நண்பனின் பாட்டியின் நினைவலைகள்..காயங்கள்.. அவரைப்போல நாடெங்கும் இருக்கும் தியாகிகளின் குடும்பம்..அவர்களின் மன வேதனை.என நீளும் கதையில் களம், வாகா எல்லைக்கு செல்கிறது.. இந்திய பாகிஸ்தான் எல்லை வாகா…அங்கு தினமும் இரு நாடுகளும் நடத்தும் ராணுவ செக் போஸ்ட்டில் தேசிய கொடிகளை வைத்து நடக்கும் ஒரு வெறியூட்டும் நிகழ்வு…பல நாடுகளின் தரை வழி எல்லைகளில் இது போன்ற எவ்வித நிகழ்ச்சிகளும் கிடையாது. ஆனால் வாகா எல்லையில் நடக்கும் நிகழ்வு எளிதில் ஒருவனை அண்டை நாட்டுக்கு எதிரியாக்கிவிடும். அதை அப்படியே பதிவிட்டுள்ளார் கரீம். இரு பக்கமும் விண்ணதிரும் தேசியவாத கோஷங்கள்..ராணுவ அணிவகுப்பு, ஒரு தேவையற்ற விரைப்பு..முறைப்பு…இலகுவாக தீப்பற்றிட வைக்கும் சிறு உரசல்கள் என அனுபவித்தால் மட்டுமே தெரியும்..ஆனால் அதை கண்முன் நிறுத்துகிறார் கரீம். இதையொட்டி என்னுள் எழுந்த கேள்வி…ஏன் இந்த நிகழ்ச்சி..அதனால் கிடைக்கும் பலன் என்ன? ஒரு பக்கம் ஆட்சியாளர்கள் அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்லிவிட்டு..மறுபக்கம் தினமும் ஆயிரக்கணகானவர்களை வெறியூட்ட வைக்கும் வேலை எதற்கு? இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் பயணிக்க வேறு நிகழ்வுகளால் மாற்றலாமே?
இதோடு 3 கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அனைத்தும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டவை….மனித நேயம்..சமூக அக்கறை ..கறை படிந்த மத நிறுவனங்கள்…அரசு அதிகாரத்தின் அடாவடிகள்…என பல பரிமாணங்களை கரீமின் சிறுகதை தொகுப்பு கொண்டுள்ளது. ஒரு எழுத்தாளனின் அனுபவ வரிகளே வாசகனை கதைகளுக்குள் சலிப்பு தட்டாமல் பயணிக்க வைக்கும்..ஈர்க்கும். இந்த புத்தகத்தின் மற்றுமொரு சிறப்பு..ஒவியங்கள்.கரீமின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்துள்ளது திண்டுக்கல் கவிப்பித்தனின் கை வண்ணம். அத்தனை உயிர்ப்பு.கதைகளின் தன்மைக்கேற்ப கோடுகளால் வலு சேர்த்துள்ளார். இறுதியாக, ஒரு படைப்பு முழு வெற்றி பெறுவது வாசகன் கவனம் சிதறாமல் படித்திட ஏதுவாக அச்சு இருக்கவேண்டும். ஆனால் இதில் அநேக நேரம் கவனம் சிதறுகிறது…அச்சுப்பிழைகளால்…கூடுதல் கவனம் அவசியம்…