தமிழ் திரைப்படங்கள் பேச ஆரம்பித்த போது திரைப்பாடல்கள் தோன்றின. அதுவும் ஏதோ படத்திற்கு ஐந்தாறு பாட்டுகள் என்றில்லாமல், ஐம்பது அறுபது பாடல்களோடு வந்தன. தமிழ் திரைப்பட விமர்சகர்களின் முன்னோடியான கல்கி அதனால்தான் இவற்றை டாக்கி என்று சொல்வதை விட பாட்டி என்று சொல்லலாம் என்று மிக நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். தென்னிந்தியாவிற்கே உரித்தான கர்னாடக இசையும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த நாடகங்களின் இசையும் சேர்ந்த ஒரு புதுவித கலவையாக தமிழ்த் திரையிசை உருவானது.
துவக்ககாலத்தில், பாடகர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலையில், பாடக நடிகர்களே தமது பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டார்கள். சில பாடல்களுக்கு பாடலாசிரியர்கள் இசையமைத்து விடுவார்கள். சங்கீதச் சக்ரவர்த்தி ஜி.ராமநாதன் திரையிசையில் காலடி வைத்த பிறகுதான் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் என்ற ஒரு பொறுப்பு – பதவியே உருவானது என்கிறார்கள் தமிழ் திரையிசை ஆய்வாளர்கள். இராமநாதன், கே.வி.மஹாதேவன் போன்ற மேதைகளின் இசையமைப்பில் உருவான அற்புதமான பாடல்களின் இனிமையும், அவை தந்த மயக்கமும் சேர்ந்து தமிழ் திரையிசை ரசிகர்களின் மனதில் சினிமாப் பாட்டு என்றால் இன்ன மாதிரிதான் இருக்க வேண்டும் என்ற பெரிய சட்டகத்தை உருவாக்கி விட்டன என்றே சொல்லலாம். நானறிய இளையராஜாவை இசைமேதையாக ஏற்கத் தயங்கியவர்கள் உண்டு. என் போன்றோருக்கு ரஹ்மான் போன்றோரை ஏற்க ஒரு தயக்கம் இருந்ததுண்டு. காரணம் இசையமைப்பில் தொழில் நுட்பத்தின் மாபெரும் தாக்கம்.
அதன் காரணமாக, இது ஆத்மார்த்தமான இசையன்று, வெறும் தொழில்நுட்ப வித்தைதான் என்று எம் போன்றோர் மனதில் ஏற்பட்ட ஒரு பிரமை. இத்தகைய பிரமைகளைத் தகர்க்கும் விதமாக சமீபத்தில் இசையமைப்பாளர் தாஜ்நூர் அவர்கள் எழுதியுள்ள தரணி ஆளும் கணினி இசை என்ற அற்புதமான நூல் வெளிவந்துள்ளது.
முன்னுரைகளிலிருந்து கடைசிப் பக்கம் வரை ஏராளமான புதிய புதிய தகவல்கள். பாடலாசிரியரே பாட்டுக்கு மெட்டமைப்பதுதான் தமிழ் மரபு என்று நான் நினைத்திருந்த வேளையில் ஐயா மம்முது அவர்கள் தமது மதிப்புரையில் பாடலுக்கு இசையமைப்பது இரண்டாயிரமாண்டு தமிழ்மரபு, பரிபாடல் என்ற சங்க இலக்கியத்திற்குப் பாடல் புனைந்தோர் வேறு, இசை அமைத்தோர் வேறு என்று சொல்லி நான் நினைத்திருந்ததை தகர்க்கிறார். தாஜ்நூரும் நூலின் ஒவ்வொரு வரியிலும் இன்றைய தமிழ் திரையிசை பற்றிய எனது அல்லது என் போன்றோரின் கருத்துகளை நிறையவே மாற்றி விடுகிறார்.
இசையும், ரசனையும் காலம்தோறும் மாறிவருபவை. இன்றைய கதாநாயகர்கள் ஒருவருக்கும் மயக்கும் மாலை பொழுதே நீ போ…. போ மாதிரியான பாடலைப் போட முடியாது என்பது ஒரு முக்கியமான செய்தி. பிறகு நான் எவ்வாறு அதே மாதிரியான பாடல் இன்றும் வரவேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?
மற்றொரு விஷயம், இன்றைய நல்ல இசையமைப்பாளர்கள் எல்லாம் நல்ல சவுண்ட் இஞ்சினியர்கள் மட்டுமே என்பது போன்ற எனது நினைப்பு. தாஜ்நூர் பல்வேறு அம்சங்களை, வாதங்களை முன்வைத்து நல்ல இசையமைப்பாளர் நல்ல சவுண்ட் இஞ்சினியராகவும் இருக்கும்போதுதான் மிகத் துல்லியமான, இனிமையான பாடல் பிறக்கும் என்பதை விளக்குகிறார். இடைவெளியை நிரப்பும் இசை, விரல்களின் வழியே வெளிப்படும் கற்பனை, அனலாக் என்பது மண்பானை ருசி, இசைக்குத் தேவைப்படும் இறுதி ஒப்பனை, தாளத்திலிருந்து பிறக்கும் மெட்டு, திரையில் வேரூன்றிய இசைமரபு என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய புதிய செய்திகள், இசையை, அதன் இன்றைய வளர்ச்சியின், பரிணாமதில் புரிந்து கொள்ள உதவும் செய்திகளாகச் சொல்லிச் செல்கிறார். எல்லா நடிகர்களும் எப்படி பாட்டுப் பாடுகிறார்கள், சூப்பர் சிங்கர்கள் ஏன் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை என்பது போன்ற நமது பாமர சந்தேகங்களுக்கும் பெரும் கணினித் தொழில்நுட்ப உதவியோடு இன்று செய்யப்படும் இசையமைப்பு பற்றிய விளக்கம் வழியாக பதில் தருகிறார்.
ரசிப்பதற்கு மனநிலை இருந்தால் போதும் என்றாலும் கூட, ஒரு கலைப்படைப்பு எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல் இன்னும் கூடுதலான ரசனைக்குத் துணைபுரியும். அந்த வகையில் இந்த நூல் திரையிசைத் துறையில் நுழைய நினைக்கும் கணினி மற்றும் இசை வல்லுனர்களுக்கு மட்டுமின்றி, நம் போன்ற சாதாரண ரசிகர்களுக்கும் மிகப் பெரிய அளவில் ஏராளமான தகவல்களைச் சொல்லி உதவுகிறது.
ஒருகாலத்தில் வானொலி கேட்பதற்காக அக்கம்பக்கத்து வீடுகளுக்கும், டீக்கடைகளுக்கும், பின்னர் கேஸட் கடைகளுக்கும் சென்று நின்றவர்கள் நாம். ஒருகாலத்தில் பாடல்களை மனதில் மட்டுமே சுமந்து திரிந்த நாம், இன்று ஒவ்வொருவரும் நமது கைப்பேசியில் நூற்றுக்கணக்கான பாடல்களை எப்போதும் ஒளி/ஒலிரூபமாகவே சுமந்து திரிகிறோம். அந்த அற்புதமான, காலம் கடந்து நிற்கும் பாடல்களின் பின்னால் உள்ள தொழில்நுட்பம், அந்தத் தொழில்நுட்பத்தை மிகச் சரியாக நுட்பமாகப் பயன்படுத்தும் இசையமைப்பாளர்களின் மேதைமை, அயராத உழைப்பு ஆகிய அனைத்தையும் சொல்லும் அழகான நூல் இது.
நூலைப் படித்தபிறகு நீண்ட நேரம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்த நூலின் ஒரு வரியைச் சொல்லி இதை முடிக்கிறேன். “எல்லா இசையமைப்பாளர்களாலும் இந்த மென்பொருளை முழுமையாகக் கையாண்டுவிட முடியாது. உதாரணமாக, கடையில் விற்பது ஒரே மாதிரியான மசாலா பொடிதான். ஆனால், வீட்டுக்கு வீடு சுவை மாறுகிறது அல்லவா?”
இது இசைக்கு மட்டுமல்ல எல்லா கலைகளுக்குமான ஒரு பொன்மொழியை தாஜ் நூர் போகிற போக்கில் எழுதிவிட்டார்.