மகளிர் தினத்தில் சமத்துவ உறுதி ஏற்போம். சர்வதேச தினங்களில் மகளிர் தினம் தனித்துவமானது. 1917ல் சோவியத் நாட்டில் பெண்கள் முதன் முதல் வாக்குரிமை பெற்ற தினம் மார்ச் 8, எனவே அந்த தினத்தை சர்வதேச மகளிர் தினமாக உலகம் போற்றுவது அதிக அர்த்தம் தரும் போர் கால தழும்புகளை நினைவு கூறும் சிறப்பான ஏற்பாடு ஆகும். சோவியத் நாட்டில் தேசிய விடுமுறை நாட்களில் அதுவும் ஒன்று.
அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி, 1909ல் பெண்களுக்கான வாக்குரிமை, தேர்தலில் போட்டி இடும் உரிமை இவற்றை முன்வைத்து முதல் மாநாட்டை நடத்தியது. டென்மார்க்கில் சர்வதேச சோஷலிஸ பெண்கள் மாநாடு 1910ல் கூட்டப்பட்டபோது அறிஞர் லூயிஸ் செயிட்ஸ் அம்மையார் ஆண்டில் ஒரு நாள் பெண்கள் உரிமைதினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்தார். ஆனால் கடுமையான போராட்டங்கள் உலகெங்கும் நடந்தன. 1914ல் பெண்கள் உரிமை தினம் அனுசரிக்க இங்கிலாந்து தடை விதித்தது. தலைவர் சில்வியா பாங்க் ரஸ்த் கைது செய்யப்பட்டார்.
பல்வேறு நாடுகளில் கல்வி, சொத்துரிமை, வோட்டுரிமை கேட்டும் ‘சமவேலை’ ‘சமகூலி’ கேட்டும் போராட்டங்கள் தொடங்கின. பெண் பாதுகாப்பு சட்டங்கள் கேட்டு வழக்குகள் தொடர்ந்து, வாதாடும் அமைப்புகள் தோன்றின. ஸ்பெயின் உள்நாட்டு யுத்தத்தில் பெண்களின் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படுத்த 1936ல் கம்யூனிச அறிஞர் டோலொரஸ் இபாரூரி அம்மையார் நடத்திய பிரமாண்ட பெண்கள் பேரணியை வரலாறு மறக்குமா? இன்று சர்வதேச அளவில் மகளிர் தின முழக்கமாக சமநிலை அடைவோர் சமத்துவ உறுதி ஏற்போம் என்பது முழக்கமாக; முன்வைக்கப்பட்டுள்ளது.
நம் இந்தியாவின் அவலநிலை இந்த நாளின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துகிறது. முத்தலாக் சட்டத்தை அவசரம் அவசரமாக நிறைவேற்றிய பாரதிய ஜனதாவின் இந்துத்துவ வெறி அரசு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கிடப்பில் போட்டது. நாடு முழுதும் கடந்த நான்காண்டுகளில் பாலியல் வன்கொடுமையும் பெண்களுக்கு எதிரான கொடிய குற்றங்களும் முன்பிருந்ததைவிட 67 சதவிகிதம் அதிகம் என பெண்கள் பாதுகாப்பு கமிஷன் மிகுந்த கவலை தெரிவிக்கிறது. ஆணவக் கொலைகள் ஒரு தலைக் காதல் கொலைகள் என தமிழகத்தில் தொடரும் அவலங்களும்…
உழைக்கும் பெண்கள் குறித்த வேலை சமஉரிமை உத்திரவாத சட்டம், பெண்குழந்தை கல்வி குறித்த பாதுகாப்பு சட்டம் என நமது போராட்டம் தொடரவே செய்கிறது. மகளிர் விடுதலை குறித்த சிந்தனையை புராண காலத்திற்கு பின்னோக்கித் தள்ளும் பிற்போக்கு காவியமய பேராபத்து முடிவுக்கு வந்தாலொழிய மகளிர் தினம் அர்த்தம் பெறாது என்பதை மனதில் கொள்வோம்.
பெண் எழுத்து மற்றும் பெண் படைப்பாளிகளை, போராளிகளை எப்போதும் ஆதரித்து வரும் புத்தகம் பேசுது முத்தாய்ப்பான பெண் எழுத்து குறித்த சிறப்பு ஒரு புத்தகம் ஐந்து கேள்விகள் பகுதியோடு உங்கள் கைகளில் இந்த மாத இதழை தவழ விடுவதில் பெருமிதம் கொள்கிறது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவோம்
ஆசிரியர் குழு.