மத்திய பி.ஜே.பி. அரசின் தேசிய அறிவியல் மாநாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நோபல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேசிய அறிவியல் மாநாட்டை தேசிய அறிவியல் சர்க்கஸ் என சாடிவிட்டு ‘‘இனிமேல் இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளவே மாட்டேன்.’’ என 2015 அறிவியல் மாநாட்டில் பங்கு பெற்ற பின் அறிவித்து இருந்தார். 2017 மாநாடு என்பது இன்னும் ஒரு படி மேலே போய் இருக்கிறது. முறையான அறிவியல் ஆய்வு செய்யாதோர் உட்பட பலர் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று வேதங்கள், புராணங்களில் கற்பனையாக, கட்டுக் கதைகளாக சிலாகித்தவற்றை நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைத்துப் பெருமைபடப் பேசியுள்ளனர். அறிவியல் மாநாடு என்பது அறிவியல் கதாகாலட்சேபமாக மாறிவிட்டது.
‘‘எங்கள் தங்கம்’’ என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் நிலாவில் மனிதன் கால் வைத்து வெற்றி பெற்றதை மக்களுக்கு எளிதாக விளக்கும் வண்ணம் ஒரு கதா கலாட்சேப நிகழ்ச்சி மூலம் விளக்கி இருப்பார். ஆன்மீக வழியில் அறிவியலைப் பரப்பினார். ஆனால் அறிவியல் மாநாட்டில் இந்து மதக் கருத்துக்களை அறிவியலைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர். இந்துத்துவாவை அறிவியல் வழியாகப் பரப்புகின்ற ஒரு கதா கலாட்சேபம் தான் தற்போது நடைபெற்று முடிந்துள்ள இந்திய அறிவியல் மாநாடு ஆகும்.
இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், அறிவியல் மனப் பாங்கினை சாதாரண மக்கள் வரை உருவாக்குவது. இதன் முனைப்புத் திட்டம் என்பது சமீபத்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் சமூகத்தின் மீதான தாக்கங்களையும் வளர்ச்சியையும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. வெளிநாட்டு-உள்நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான மாநாடாக நடத்துவது.
ஆனால் பி.ஜே.பி. அரசின் காலங்களில் இந்த அமைப்பின் குறிக்கோள்களுக்கு எதிரான அறிவிப்புகளும் போலி ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்களும் போலி அறிவியலுமே முன்னிறுத்தப்படுகிறது.
தேசிய அறிவியல் மாநாட்டை இந்திய அறிவியல் மாநாட்டு அமைப்பு (Indian National Science Association) நடத்துகிறது. இது அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் பதிவு பெற்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் முதல் மாநாடு 1914ல் கல்கத்தாவில் பெருமை மிகுந்த ஆசியாடிக் சொசைட்டியில் நடைபெற்று இருக்கிறது. சுமார் 105 உறுப்பினர்கள் உள்ளனர். முதல் மாநாட்டில் 35 ஆய்வுகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டன. தற்போது சுமார் 20,000 ஆய்வுக் கட்டுரைகள் வரை சமர்ப்பிக்க, இந்த வருடம் 2019 ஜனவரியில், ஜலந்தரில் நடந்த அறிவியல் மாநாட்டில் மிகப் பெரிய போலி அறிவியல் பிரச்சாரம் நடந்துள்ளது. இது இந்திய நாட்டிற்காக பெரும் அவமானத்தை தரக்கூடியதாக அமைந்துள்ளது.
குறிப்பாக ஆந்திர பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். ஜி. நாகேஸ்வரராவ் அவர்கள் கௌரவர்கள், டெஸ்ட் டியூப் குழந்தைகள் என்றும் ராவணன் பல்வகையான விமானங்கள் வைத்திருந்ததாகவும் இலங்கையில் பல ஏர்ப்போர்ட்டுக்கள் இருந்ததாகவும் இவையனைத்தும் இந்தியாவின் தொன்மை அறிவியலுக்கான பெருமை மிகு சான்றுகள் எனக் கூறியுள்ளார். இந்த வகையான போலி அறிவியலை குழந்தை விஞ்ஞானிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கள அளவில் அறிவியல் வழிமுறையில் சின்னஞ்சிறு ஆய்வுகள் செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி பல மட்டங்களில் தேர்வு பெற்று இந்த மாநாட்டிற்கு வந்தவர்கள் ஆவார்கள். இக்குழந்தைகளின் முன்னிலையில் அறிவியல் சிந்தனைகள், செய்முறைகளை முடமாக்கும் வகையில் புராணக் கட்டுக்கதைகளை அறிவியலாக பெருமைப்படுத்திப் பேசியது அறிவியல் மாநாட்டிற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரான செயல்பாடாகும்.
அது மட்டுமல்லாது முறையான அறிவியல் வழியல்லாத, அறிவியல், உயர்கல்வி நிறுவனம் சாராத ஆய்வுக் கட்டுரைகளும், உரையும் இடம் பெற்று இருக்கின்றன. ஒரு படி மேலாக தமிழ்நாட்டில் இருந்த தன்னை விஞ்ஞானியாக அறிவித்துக் கொண்ட கண்ணன் ஜகதாலக் கிருஷ்ணன் என்பார் ஈர்ப்பு அலையை நரேந்திரமோடி அலை என்றும் ஈர்ப்பு விளைவை ஹர்ஷ்வர்த்தன் விளைவு என்றும் அழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். நியூட்டனுக்கு ஈர்ப்பு விசை குறித்த பல கேள்விகளுக்குப் பதில் தெரியாது என்றும் அந்தக் கேள்விகளை இவரால் பதில் கொடுக்க முடியும் என அறிவித்து இருக்கிறார். நியூட்டன், ஐன்ஸ்டீன், ஹாக்கிங் ஆகியோரின் கொள்கைகள் அனைத்தும் தவறு என அடித்துக் கூறியிருக்கிறார். அனைத்து கொள்கைகளை தவறு எனக் கூறியது மட்டுமல்லாமல் தன்னிடம் அனைத்தையும் விளக்கும் கொள்கை இருக்கிறதென்றும், என மாபெரும் அறிவிப்பைக் கொடுத்து உள்ளார். இத்தனைக்கும் வேர்ல்ட் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் என்ற ஒரு பதிவு பெற்ற அமைப்பு உறுப்பினர். இவ்வாறாக ஒரு புறம் தலை சிறந்த ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும் மறுபுறம் அறிவியல் அங்கீகாரமே இல்லாத ஒரு அமைப்பின் போலி ஆராய்ச்சியாளரும் அகில இந்திய அறிவியல் மாநாட்டில் அறிவியல் கதா கலாட்சேபம் நடத்தி கேலிக்குரியதாக ஆக்கி உள்ளனர்.
நவீன அறிவியலின் வளர்ச்சியை மறுக்கும் புராணிக அபத்தத்தை சித்தாந்த ரீதியில் எப்படி எதிர்ப்பது?
நவீன அறிவியலின் வளர்ச்சி இந்த இந்துத்துவாக் கும்பலின் சிந்தனைக்கு எதிரானது. வேதங்களில் எல்லாமே இருக்கிறது என்று பெருமை கொண்டு பிரச்சாரம் செய்யும் பொழுது, நவீன அறிவியல் வளர்ச்சி பிரமாண்டமானதாகவும் மக்களை நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் பின்னால் அணிவகுக்கச் செய்வதும் அவர்களின் பண்டைய போலிப் பெருமைகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. இதனால் தற்காலத் தொழில் நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கப்படுவன அனைத்தையும் புராண அபத்தங்களோடு ஒப்பிட்டு, நவீன அறிவியல் தொழில்நுட்பம் புதியன அல்ல என்றும், அவையெல்லாம் எங்கள் வேதத்திலும், புராணத்திலும் இருக்கிறது எனக் கூறி தாங்களே இதில் முன்னோடி என மார்தட்டிக் கொள்வதன் மூலம் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை நுகர்பவர்களைத் தங்கள் பின்னே அணிவகுக்க வைப்பதே இவர்களின் நோக்கம்.
அபத்தங்களைக் கூறி… அறிவியல் தொழில்நுட்பத்தைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் பிறநாட்டவரின் தொழில்நுட்பங்களை அங்கீகரிப்பதும் பிறநாடுகளில் இருந்து நவீனப் பொருட்களை இறக்குமதி செய்வதையும் வெட்கமற்ற முறையில் செய்து கொள்வதை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். மேலும் உலக மயமாக்கலுக்கும் கார்ப்பரேட் மயமாக்கலுமான தொழில்நுட்பத்தை மக்களை ஏற்றுக் கொள்வதற்குமான தந்திரமும் ஆகும்.
எடுத்துக்காட்டாக இந்தியப் பண்பாடு என்பது ‘பெண் புனித மானவள்’ என்றும் ‘கற்புடையவள்’ என்றும் பிரபலப்படுத்திவிட்டு, குந்தி தேவியை ‘திருமணத்திற்கு முன் கர்ணனைப் பெற்றவள்’ என்றும், பிற பஞ்ச பாண்டவர்களை பல்வேறு கடவுளுக்குப் பெற்றவள் என்றும் தற்போது கூறுவது, இந்துத்துவா கொள்கைகளைப் பிரபலப்படுத்தும்போது குந்தி பெற்ற பிள்ளைகள் எல்லாம் ‘ஸ்டெமசெல்’ கல்சர் வகையறா எனக் கூறி குந்தியின் புனிதத்தைக் காப்பாற்றுவது ஒரு புறம், நவீன அறிவியல் தொழில்நுட்பமான செயற்கைக் கருவுறுதல் முறையை அங்கீகரிப்பதும் மறுபுறம் ஆகும். இதன் மூலம் கார்ப்பரேட் கருத்தரிப்பு முறைக்கு வழிவிடுவதும் பழமையைப் பெருமைப்படுத்துவதும் ஆகும். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் தான் அதிகமான வாடகைத் தாய்மார்கள், நவீன குந்திகள், இருப்பதாகக் கூறுகின்றனர்.
புராண அபத்தங்களை நவீன அறிவியலுக்கு ஒப்பிட்டு, நவீன அறிவியலைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் முறைக்கு பச்சைக் கொடி காட்டுவதும் ஆகும்.
இதை முறியடிப்பதற்கு அறிவியலின் வரலாற்றையும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியையும் மக்களிடம் விளக்குவதே சரியான முறையாகும் புராணங்களைக் கொண்டேயும் நாம் மக்களிடம் விளக்கலாம். எடுத்துக்காட்டாக; ராவணனிடம் பல்வேறு விமானங்கள் இருந்தபோது ஏன் ராமனிடம் விமானங்கள் இல்லை? எதற்குப் பாலம் கட்டி இலங்கைக்குச் செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்ப வேண்டும்.
மற்றொன்று; புராணங்களில் கற்பனைகள் பலகாலமாக மக்களிடம் கூறப்பட்டு வந்திருக்கிறது. அந்தக் காலக் கட்டங்களில் ‘டெஸ்ட் டியூப்’ குழந்தைகள், ‘குளோனிங்’ முறைகள் பற்றிய பேச்சே இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்த பின்னரே அவற்றுடன் புராணக் கட்டுக்கதைகள் இணைத்துப் பேசப்படுகிறது என விளக்க வேண்டும்.
சித்தாந்த ரீதியாக மக்களிடம் பெரிதும் வளர்ந்திருப்பது கருத்து முதல்வாதம் ஆகும். எல்லாவற்றிற்கும் தலைவிதியே காரணம் என்றும் கடவுள் தான் அனைத்து முன்னேற்றத்திற்கும் பிரச்சினைக்கும் காரணம் என்றும் பெரும்பான்மை மக்கள் நம்பி இருக்கின்றனர். இந்த இடைவெளியில் தான் இந்துத்துவா குழுக்கள் செயல்படுகின்றன இந்தக் கருத்து முதல் வாதத்தை எதிர்த்து பண்டைய காலத்தில் இருந்த பகுத்தறிவு வாதிகள் எதிர்த்தே வந்திருக்கின்றனர். ஆனால் பிரச்சினைகளை அறிவியல் வழிமுறையில் விளக்குவது அப்போதைய காலத்தில் எளிதாக இல்லை. இதனால் அவர்கள் நாத்திகர்களாக, கடவுள் மறுப்பாளர்களாக சுட்டப்பட்டு, மக்களிடமிருந்து விலகிப்போக வைத்துவிட்டனர் என்கிறார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.
ஆனால் மக்களின் பிரச்சினைகளை இன்றைய நவீனத் தொழில்நுட்ப, அறிவியல் வழியில் எளிதாக மக்களிடம் விளக்கமுடியும். விவசாயம் பொய்த்துப் போனதற்கும் கடனாளி ஆவதற்கும் தலைவிதி என்பதை இப்போது விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் விவசாயிகள் எழுச்சி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தங்களுடைய பிரச்சினைகளுக்குக் காரணங்களை
அறிந்து கொண்டு விட்டனர். இந்த வகையில் நாம் உழைக்கும் மக்களைத் திரட்டுவது அவசியம்.
அதேபோல் மலம் அள்ளுவது இறைவனுக்குச் செய்யும் பணியாகும் என்ற கருத்தை இந்திய நாட்டுப் பிரதமர் சில வருடங்களுக்கு முன்னர் பாராட்டி மகிழ்ந்தார். இதன் மூலம் மலம் அள்ளும் குறிப்பிட்ட ஜாதியினரைப் பெருமைப்படுத்தி நியாயப்படுத்தினார்.
ஆனால் மலம் அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வதை ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் செய்ய வேண்டும் என்பதைக் கேள்வியாக வைக்க வேண்டும். தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்திரங்கள் மூலம் இத்தொழிலை சிறப்பாகச் செய்ய முடியும் என்ற பொருள் முதல்வாத அறிவியல் வழி சித்தாந்தத்தை முன் நிறுத்தி முறியடிக்க வேண்டும்.
தொடர்ந்து இந்துத்வா எதிர்ப்புப் போராளிகள் திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகிறார்களே?
இன்றைக்கு இந்துத்வா கொள்கைகளுக்கு எதிராக ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் அறிவியல் முறையிலும், அணுகுமுறையிலும் காரண காரியங்களுடன் விளக்குவதாலும் அது மக்களிடம் அங்கீகாரம் பெற்று வருவதுமாகும். குறிப்பாக டாக்டர் நரேந்திர தபோல்கர் 40 வருடங்களுக்கு மேலாக மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் ரீதியான விளக்கங்களும், செயல்பாடுகளும் சவால்களும் விடுத்து பெருமளவில் மக்களைச் சந்தித்தார். மக்களிடம் போலி விஞ்ஞானத்திற்கும் போலிச் சாமியார்களுக்கு எதிராகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது இந்துத்துவா அரசியலுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும் சூழ்நிலையில் – அவர் கொல்லப்பட்டார்.
டாக்டர் பன்சாரே என்பார் சிவாஜியின் உண்மை வரலாற்றை மக்களிடம் பல லட்சம் பிரதிகளுடன் விளக்கினார். இது இந்துத்வா அரசியலுக்கு எதிரானதாக இருந்தது. அவரும் கொல்லப்பட்டார். டாக்டர் கல்புர்கி இந்துத்வாவிற்கு எதிராக பசவண்ணாவின் வாச்சான இயக்கத்தை முன்நிறுத்தினார். இதனை பன்மொழிகளில் பிரச்சாரம் செய்ய முனைந்தார். இது சனாதன இந்துத்வா அரசியலுக்கு எதிரானது. அவரது வீட்டிற்குள் நுழைந்து இந்துத்வாகக் கும்பலில் இருவர் சுட்டுக் கொன்றனர். இதே வழியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்த கௌரி லங்கேஷ் வீட்டருகிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலே குறிப்பிட்ட இந்துத்வா போராளிகள் இந்து மதத்திற்குக்கெதிராக அல்லாமல் மதத்தைப் பயன்படுத்தி, கடவுளைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் இந்துத்வா அரசியலுக்கு எதிரானவர்கள். மத்திய காலத்தில் மதங்கள் நம்பியிருந்த காலத்தில், அரசன் மதங்களை நம்பியிருந்த காலங்களில் இது போன்ற கொலைகள், கொடூரங்கள், சித்ரவதைகள் நடந்து இருக்கின்றன. மதங்கள் கொடி கட்டிப் பறந்த காலங்களில் இது போன்று நடந்துள்ளன. புரூனோ, கலீலியோ, டார்வின்… என உலக வரலாற்றில் நெடுகப் பார்த்து இருக்கிறோம்.
தற்போது இந்தியா அதுபோன்ற காலத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்துத்வா மதம் சார்ந்த அரசியல் மூலம் எழுச்சி பெற நினைக்கிறது. இதனால் இந்துத்வாவை எதிர்க்கும் போராளிகள் கொல்லப்படுகின்றனர். குறிப்பாக இந்துமதத்தின் ஆதிக்கத்தை, சனாதன தர்மத்தை காரண காரியங்களுடன் விளக்கங்களுடன் முன்னெப்பதையும் விட ஆய்வுகள் மூலம், அறிவியல் மூலம் அதனை ஆட்டங்காண வைத்தவர்கள் இந்தப் போராளிகள். இப்போராளிகளைக் கொல்வதன் மூலம் பிறருக்கு அச்சத்தை உருவாக்கும் முயற்சியை உருவாக்குகின்றன. ஆனால் அது நடைபெறவில்லை. மாறாக இக்கொலைகளுக்கு எதிராக மக்கள் மத்தியிலும் அறிஞர்கள் மத்தியிலும் பெரும் கோபம் எழுந்துள்ளது. அதன் பிரதிபலிப்புகளை நாடெங்கும் இக்கொலைகளுக்கு எதிரான இயக்கங்கள் மாபெரும் எழுச்சியுடன் நடத்துகின்றன.
அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கம் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட ஆகஸ்ட் 20ந் தேதியை தேசிய அறிவியல் மனப்பாங்கு நாளாக நாடு முழுவதும் அனுசரித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த எழுச்சி மிகு இயக்கத்தால் இக் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதில் முனைப்பு ஏற்பட்டு உள்ளது. பல மாநிலங்களில் மூட நம்பிக்கைக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என குரல்கள் எழும்பி உள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்தியில் இந்துத்வா கொள்கை சார் பி.ஜே.பி. கட்சியின் அரசு ஆட்சி செய்வதால் இது போன்ற கொலைகள் நடந்தேறுகின்றன. அது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்றாலும் மத்திய ஆட்சியில் இருக்கும் துணிச்சலில் இந்துத்வா குழுக்கள் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுகின்றனர். எனவே இந்துத்வா சார்பு அரசியலையும், அரசியல் கட்சிகளையும் நிராகரிக்க இச்சம்பவங்களின் மூலம் நாம் மக்களிடம் பிரச்சாரமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
டார்வினை மட்டுமே எதிர்த்தவர்கள் இன்று நியூட்டன் ஐன்ஸ்டீன் என தொடர்வதும், மோடி அலை என நேரடியாக மதவாதப் பொய்களை உண்மை போலவே பேசுவதும் உலக கேலிப் பொருளாகி உள்ளதே?
உண்மை! முற்றிலும் உண்மை இந்துத்வா என்பது நவீன அறிவியலை மேலைநாட்டு அறிவியல் எனத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவுகளில் இதுவும் ஒன்று. அறிவியலைப் பொறுத்த வரையில் மேலைநாட்டு அறிவியல், கீழை நாட்டு அறிவியல் எனப் பாகுபாடு கிடையாது அறிவியல் என்பது பொதுத் தன்மை கொண்டது. (Universal) தொழில்நுட்பம் வேண்டுமென்றால் நாடுகளுக்கு நாடு வேறுபடலாம். இந்தப் பின்னணியை அறியாததாகவே இந்துத்வா குழுவினர் இருக்கின்றனர். அதனால்தான் டார்வின், நியூட்டன், ஐன்ஸ்டீன் ஆகியோரை மேலைநாட்டு விஞ்ஞானிகளாகவும் அவர்களின் அறிவியல் கோட்பாடுகளை மேலைநாட்டு அறிவியல் எனவும், இதை ஏற்றுக்கொள்பவர்களை ‘‘மெக்காலேயின் புதல்வர்கள்’’ எனவும் கீழ்த்தரமாகப் பேசுகின்றனர்.
ஆனாலும் அவர்களால் இந்தக் கோட்பாடுகளை நிராகரிக்க முடியவில்லை முறையான அறிவியல் ஆய்வுகளிலோ, உயர்கல்வியிலோ இதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை. எனவே தான் மேற்சொன்னோரின் கோட்பாடுகள் வேதங்களில் உள்ளது, பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. என சிலாகித்துப் பேசுகின்றனர். சமீபத்தில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் பெருமாளின் பத்து அவதாரம் டார்வினின் கோட்பாட்டை விளக்குகிறது என ஆந்திரப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் நாகேஸ்வரராவ் பேசி இருக்கிறார்.
இந்துத்வா கோட்பாடுகளை எழுச்சிபெறச் செய்வதற்காக அறிவியலைப் பயன்படுத்துகின்றனர். அதனால்தான் ‘‘மோடி அலை, ஹர்ஷ்வர்த்தன் பேக்டர் எனப் பெயரிடுவோம்’’ என்கின்றனர். இந்துத்வா மதவெறியை மக்களிடம் அறிவியல் ஆய்வுமூலம் பரப்புவதற்காக ‘‘ராமர் பாலம் ஆய்வு’’ சஞ்சீவி மலை கண்டுபிடிப்பு சரஸ்வதி ஆற்றைத் தேடி, பசு மூத்திரத்தின் சர்வரோக நிவாரணக் குணம் என அறிவியல் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இவ்வழியில் ஆய்வு செய்பவர்களுக்கு அரசு நிதியை அதிக அளவில் ஒதுக்குகிறது என்பது ஊரறிந்த செய்தி.
இந்திய அறிவியலாளர்களான சி.வி.ராமன் முதல் சத்யேந்திரநாத் போஸ், மெக்னாத் சாஹா என பெரும்பாலானவர்கள் சடங்கு எதிர்ப்புவாதிகளாக இருந்தார்களே – இன்றைய நிலை என்ன?
அவர்கள் உண்மையிலேயே நாட்டுப் பற்று உடையவர்களாகவும் அறிவியல் பற்று உடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். நாட்டின் மிகவும் பிற்போக்கான நிலையை வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் பார்த்து இருக்கின்றனர். இந்திய நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆராய்ச்சி தேவை என உணர்ந்து இருக்கின்றனர். அறிவியலுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அறிந்து இருக்கின்றனர். அப்போதைய சமூகப் பொருளாதார அரசியல் சூழ்நிலையும் ஒரு முக்கியமான காரணமாகும் 1914ல் சென்னையில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டின் கருப் பொருள் ‘‘மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதும் அறியாமையை அகற்றுவதும் என்ற தலைப்பு ஆகும். இதன் மூலம் அறிவியல் வளர்ச்சியை நோக்கிச் செல்வது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
அந்த மாநாட்டின் தலைவர் சர்ஜியன் ஜெனரல் பேனர்ஜி பேசிய போது மலேரியா காலரா பிளேக் போன்ற நோய்கள் தீய சக்திகளாலும் தீய மந்திரங்களாலும் உருவாக்கப்படுவதில்லை என எத்தணை மக்களுக்குத் தெரியும் எனக் கேள்வி எழுப்பினார்.
அந்த மாநாட்டில் சிவி ராமன் பிசிராய் ஜேசி போஸ் போன்றோ்களின் கண்டுபிடிப்புகளை சக மக்களுக்குப் பெரும் பயனை உருவாக்கப் போகிறது எனப் பாராட்டி இருக்கிறார்கள்.ஆனால் 105 வருடத்திற்குப்பின் நடைபெற்ற 2019 மாநாட்டில் புராணீகக் கருத்துக்களை முன் வைத்து துணைவேந்தர் உட்பட பலர் பேசி இருப்பது கேலிக்குரியதாகும்.
மாட்டிறைச்சி அரசியலில் இருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு பாரத ரத்னா வரை யாவற்றுக்கும் எதிராக அறிவியல் இயக்கங்கள் என்ன செய்ய வேண்டி இருக்கிறது? அகில இந்திய அளவிலான நமது செயல் திட்டம் என்ன?
அறிவியல் இயக்கங்கள் இது நாள் வரை அறிவியல் விழிப்புணர்வு செயல்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தன. இது இயற்கை அறிவியல், பாடநூல் சார்ந்த அறிவியலை மையப்படுத்தி செயல்பட்ட முறையாகும். தற்போது இந்து முறைக்கு அடுத்த கட்டமாக அறிவியல் அணுகுமுறை, அறிவியல் பார்வை, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை மையப்படுத்தி இயக்கங்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை அறிவியலோடு சமூக அறிவியலையும் இணைத்து அறிவியலுக்கும் சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்’ என்ற தலைப்பில் எது தேசீயம், இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு, வளர்ச்சி யாருக்காக, கல்வி, சுகாதாரத்தின் நிலை என்ன என ஒன்பது தலைப்புகளில் நூல்கள் வெளியிட்டுப் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக 2018 ஆகஸ்ட் 20ஐ யொட்டி நடத்தப்பட்ட ஏன் என்று கேள் (ASK HOW) என்ற இயக்கம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. இதில் அறிவு ஜீவிகள் பகுத்தறிவுவாதிகள் கொல்லப்படுவது ஏன்? போலி அறிவியல் பிரபலப்படுத்தப்படுவது ஏன்? அறிவியலுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் நிதி ஒதுக்கீடு குறைந்தது ஏன்? வளர்ச்சித் திட்டங்களால் பயனடைபவர்கள் யாவர்? போன்ற கேள்விகளை முன்னிறுத்தி மாபெரும் இயக்கம் நடத்தப்பட்டது.
அதேபோல் ஜனவரி 23 முதல் 30 வரை ‘‘எப்படி எனக் கேள் (ASK HOW) என்ற தேசந்தழுவிய இயக்கம். சுபாஷ் சந்திரபோஸ், காந்தி, அம்பேத்கார், நேரு போன்றோரின் விடுதலை கால முன்னெடுப்புகளையும் விடுதலைக்குப் பின் நாட்டின் முன்னேற்றத்திற்காக சுயசார்புக் கொள்கைக்கான திட்டங்களை உருவாக்கியது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்கும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் சட்ட ரீதியாக உறுதி செய்தது, பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க போஸ், நேரு, மேக் நாட் சாகா ஆகியோரின் முயற்சிகளை முன்னிறுத்தி இயக்கம் நடத்தியது இந்துத்வா அரசியல் பின்னணி கொண்ட பி.ஜே.பி. அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் இயக்கமாக அறிவியல் ரீதியாக விளக்கம் அளிக்கும் இயக்கமாக மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது.
இந்த இயக்கம் தொடர்ந்து தேர்தல் துவங்குவதற்கு முன்னர் வரை நடத்தப்படும். இது மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் அரசியலுக்கு உதவிகரமாக அமையும்.
பொதுவாக மூட நம்பிக்கைகளும், பழமைவாதிகளும் சாதிவெறியும், சபரிமலை போன்ற பெண் மறுப்புவாத அவலமும் அறிவியல் முறைப்படி எப்படி அணுகப்பட வேண்டும்.?
மேற்சொன்ன அனைத்தும் நமது கல்வி முறையில் அறிவியல் முறைப்படி சொல்லப்படவில்லை. தற்போது இவையனைத்தும் எழுச்சி பெற்று உள்ளதற்கு உண்மையான காரணம் தற்போதைய சமூகப் பொருளாதார அரசியல் சூழ்நிலையே காரணம். உலக மயமாக்கலுக்குப் பின்னர் வறுமை, ஏழ்மை அதிகரித்து உள்ளது. கல்வியை, சுகாதாரத்தை அரசு தனியார் மயமாக்கியுள்ளது. வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதைப் பயன்படுத்தி மதவாத சக்திகள் சாதிய சக்திகள் மக்களைத் திரட்டுகின்றனர். மூட நம்பிக்கைகளும், பழமைவாதமும் மக்களை அரசியல் ரீதியாக எழுச்சிபெற வைக்காமல் கடவுள், பக்தி, ஆன்மிகம் ஆகியனவற்றின்மீது பக்கம் திசை திருப்ப வைக்கின்றன. அதனால்தான் ஜக்கிவாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் அதிகரித்து வருகின்றனர்.
மதமும் சாதியும் மக்களைத் திசை திருப்பி மக்களுக்குள் மோதலை உருவாக்கி மத அரசியல், ஜாதி அரசியல் பின்னர் திரள வைக்கின்றது. அதேபோல் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து உள்ளது. இது பெண்களை பொது வெளியில் சமத்துவமாக நடமாட முடியாதபடி செய்து வருகிறது. இதற்கு இந்துத்வா, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற பழமைவாதக் கோட்பாட்டைக் கையில் எடுக்கிறது. அது தான் ‘‘பெண் என்பவள் ஆணுக்கு நிகரானவள் அல்ல; பெண்கள் சமத்துவம் பெற முடியாது. மாதவிடாய் என்ற இயற்கைச் செயலை தீட்டு’’ என்ற சமத்துவமின்மைக்குள் பூட்டி விடுகின்றனர்.
இதுபோன்ற பிற்போக்கான சமூகச் செயல்பாடுகளை விளக்கி அறிவியல் ரீதியாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பெண்களின் மாதவிடாய் அறிவியல் பெண்கள் மீதான அடக்குமுறையின் காரணங்கள், முதலியன குறித்து சமம் அறிவியல் திருவிழா, மூலம் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் போலிச் சாமியார்களின் செயல்பாடுகளை அற்புதங்களை விளக்கும் அறிவியல் என நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு நடத்துகிறோம். மனித இனத்தில் வேறுபாடுகள் இல்லை. ஜாதி, மதம் இல்லை என தற்போதைய நவீன மரபணு அறிவியல் வழி விளக்கங்கள் கூறி பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதன் அளவுகளை அதிகப்படுத்த வேண்டும்.
உலகெங்கும் அறிவியல் விழிப்புணர்வு இயக்கங்கள் எப்படி உள்ளன?
சமீபகாலங்களில் உலகளவில் அறிவியல் விழிப்புணர்வு இயக்கங்கள் ஒன்று சேரும் காலம் தெரிகிறது. குறிப்பாக அறிவியலுக்கான உலகப் பேரணி அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கம் என்பது ட்ரம்ப் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஆனவுடன் ஈரானியப் பெண் விஞ்ஞானியை அமெரிக்காவிற்குள் அனுமதி மறுத்ததன் காரணமாக எழுந்த இயக்கம் ஆகும். மேலும் அறிவியலுக்குப் புறம்பான தகவல்களைக் கொடுத்து புவிவெப்ப மயமாதல் உள்ளிட்டதை மறுக்கும் போக்கிற்கு உலக அளவில் அறிவியல் விழிப்புணர்வு இயக்கங்கள் திரண்டு உள்ளன.
அறிவியலுக்கு நிதி ஒதுக்கீடு அரசு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நம்பிக்கை தருகிறது. இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்கள் ஒரு சமூக இயக்கமாகவும் இதில் பங்கு பெறுபவர்கள் தேபகா இயக்கம், தெலுங்கான விவசாயிகள் போராட்டம், ரயில்வே தொழிலாளர் போராட்டம், நக்சல்பாரி இயக்கப் போராட்டம் ஆகியவற்றின் வரலாற்றுப் போக்கில் வந்தவர்களால் நடத்தப் படுகிறது என்கிறார் ரோலி வர்மா (EPW Dec2001). அரசின், அதிகார வர்க்கத்தின் அறிவியல் ஆய்வுகளையும் அறிவு உற்பத்தியையும் விமர்சனத்துக்கு உட்படுத்துவது என்பதே உலகளவில் நடைபெறும் அறிவியல் விழிப்புணர்வு இயக்கங்களின் ஒற்றுமை என்கிறார் சபரினா மெக் காரிமிக் (Social Studies Science 37/4) ஆகஸ்ட். 2
பல்கலைக் கழக, கல்லூரி அளவில் நம் அறிவியல் இயக்கச் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
தற்போது அறிவியல் இயக்கங்கள் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளை குறிவைத்து இயங்க ஆரம்பித்து உள்ளன. ஆகஸ்ட் 20ல் நடைபெற்ற தபோல்கர் நினைவு நாள் பெருமளவில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பேராசிரியர்களை ஈர்த்து இருக்கிறது. நர்லிக்கர் உட்பட பல உயரிய விஞ்ஞானிகள் மூலம் மக்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அறிவியல் மனப்பான்மை வளர்ச்சிக்கு வேண்டுகோள் விடுத்தது பல விஞ்ஞானிகளைத் திரட்டியுள்ளது. 700க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எங்கள் இயக்கத்தின் வேண்டுகோளுக்கு ஆன்லைன் மூலம் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர். இந்த இயக்கத்திற்குப் பின் விஞ்ஞானிகள் அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் துணிவுடன் மாறியுள்ளனர்.
அறிவியலுக்கான உலகளாவிய பேரணியை (Global March for Science) நமது இயக்கம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அறிவியலுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், போலி அறிவியலைப் புறந்தள்ளும் கோரிக்கையும் இதில் முன்னுரிமை பெற்று இருக்கிறது.
கல்லூரி அளவில் பேராசிரியர்களை பருவகால மாற்றத்தின் அரசியல் குறித்துத் திரட்டி வருகிறோம். கல்லூரி மாணவர்களிடையஇளைஞர் அறிவியல் திருவிழா என்ற நிகழ்வு மாணவர்களின் தறன்களை வெளிக் கொணர்வதற்கு நடத்தப்பட்டு வருகிறது. கல்லூராகளில் அறிவியல் இயக்கக் கிளைகள் உருவாகி வருகின்றன.
இனிவரும் தேசிய அறிவியல் மாநாடுகளை சரியாக வழிநடத்த உங்களது ஆலோசனை என்ன?
அதன் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் ஆய்வு அறிக்கைகள் , உரைகள், இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டும் ஜலந்தர் மாநாட்டுக்குப் பின் இதை அறிவித்து இருக்கிறார்கள். ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் சார்ந்ததாக மட்டுமே இருப்பதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் மாநாட்டிற்கு முன்னரே பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும். அரசும், அரசியலும் தலையிடாமல் இந்த அமைப்பு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். போலி அறிவியலை முன்னிறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.