பாடலுக்கு இசை அமைப்பது என்பது தமிழ்ச்சூழலில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழமையுடையது. அக்கால கட்டத்தைச் சேர்ந்தவை சங்க இலக்கியத் தொகுதிகள். பரிபாடல் என்ற சங்க இலக்கியத்திற்குப் பாடல் புனைந்தோர் வேறு. இசை அமைத்தோர் வேறு.
திரை இசையும் அவ்வாறானதே. திரை இசை உருவாக்கத்தில் இசையமைப்பு என்பது தலையாய கலைப் படைப்பு. கொலையாளி உருவாக்கப்படுகிறான். படைப்பாளி உருவாகிறான்.
பள்ளிக்கூடம் வைத்து சிறுகதை எப்படி எழுதுவது?’ என்று சொல்லித் தர முடியாது. ‘பாட்டிற்கு இசையமைப்பது எப்படி?’ என்றும் சொல்லித் தர முடியாது; துணை செய்யலாம்.
அதைத்தான் அன்பின் தாஜ் இந்த நூலில் செய்திருக்கின்றார். அவருக்கு, அதற்கான தகுதி உண்டு. நம் காலத்துச் சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். வம்சம், நெடும்பா, ஸ்ட்ராபரி, கதம் கதம், ஞானக்கிறுக்கன் முதலிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கின்றார். உயிர் விடும் மூச்சு, ஆடல் கண்ணகி, மகரந்தமழை, தமிழ்ப் பிள்ளை, நாட்டுக்குறள் முதலிய இசைத் தொகுப்புகளைக் கொண்டு வந்திருக்கிறார்.
இளம் இசையமைப்பாளர்களுக்கு இந்நூல் ஒரு கையேடு என்று கூற வேண்டும். முதலில் தொடக்க இசை (First BGM Prelude), பாடல் வேகம் (Tempo) இரண்டாவது, மூன்றாவது பின்னணியிசை, முடிப்புச்சுரம் (Landing Note) போன்ற நுட்பங்கள் இளம் இசையமைப்பாளர்கள் அவசியம் அறிய வேண்டியவை. இதைப் போல Backing, Sampler, Reverb, delay and Mixing, Mastering, Quantization, Voice processing & Parts, மெலடைன், ஆட்டோ டியூன், டி.டி.எஸ்.டால்பி, அட்மாஸ் போன்ற கணினி மற்றும் இசைப் பதிவு பற்றிய தொழில் நுட்பங்களைத் தெரியாமல் யாரும் இசையமைத்து விட முடியாது.
இன்றைய இசையமைப்பாளன் இரட்டை உரு கொண்டிருக்கிறான். நண்பர் தாஜ் இசையமைப்பாளர் மற்றும் சிறந்த கணினிப் பொறியாளர் (அவருடைய முந்தைய பணி அவர் ஒரு கணினிப் பொறியாளர்.)
இந்நூலின் நோக்கம் குறித்து அவர் தெரிவிக்கும் சில செய்திகள்:
கலை என்பதும் காலந்தோறும் மாறிவரும் கலையின் தொழில் நுட்ப ரகசியம் என்பதும் ஒளித்து வைக்கப்படாமல் தலைமுறைகளோடு பகிரப்பட வேண்டும் என்று நினைப்பவன் நான். என்றும், எப்போதும் நாம் கேட்கும் பாடல் உத்தமபுத்திரன் படத்தில் வரும் ‘யாரடி நீ மோகினி, ‘திரை இசையமைப்பு மன்னர் சி. இராமநாதன் இப்பாடலுக்கு எப்படி இசையமைத்தார் என்பது புதைந்த மீட்க முடியாத ‘இரகசியம்’ ஆகவே போய்விட்டது. இப்படித்தான் உள்ளது என்றும் இரகசியமாகவே!
இளையராஜா, இசை இமயம் என்பதற்கு பாடல்கள் வேண்டாம். ‘கவிதை கேளுங்கள்’ என்ற இந்த ஒரு பாடல் போதும் (இசையமைப்பில் எளிதாகக் கடந்து விடும் பாடல் அல்ல அது) ஏ.ஆர்.ரஹ்மானின், ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலும் இவ்வாறானதே. இசை மன்னர்களும் இமயங்களும் புயல்களும் ‘இந்தப் பாடலுக்கு இவ்வாறு இசையமைத்தேன்’ என்று கூற வேண்டும். இளம் இசையமைப்பாளர்களுக்கு அதுவே சிறந்த பாடமாக அமையும். எதிர்காலத்தில் இசை ஆவணமாகும்.
நூலாசிரியரின் மேலும் ஒரு நல்ல பதிவு.
‘‘இசை ரசிகனுக்கும் இசையின் நுட்பங்களும் அது இயங்கும் நவீன தொழில் நுட்பம் குறித்த அறிவும் அவசியம். அதை அவன் முழுமையாகத் தெரிந்து கொண்டு ரசிக்கும்போது, இசையையும் அதில் வெளிப்படும் படைப்பு நேர்த்தியையும் ஆழமாக ரசிக்க அது பாதையமைத்துக் கொடுக்கிறது.’’
நூலின் மிக அருமையான இடங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
‘‘இந்தியச் சினிமாவின் கதையாடல்களில் இருக்கும் இன்றைய வடிவம், நமது கூத்து மரபின், தொடர்ச்சியை இழக்க விரும்பாத ஒன்று… பாடலின் முக்கியத்துவத்தை இந்தியச் சினிமா இழக்க விரும்பவில்லை.
நூலின் இறுதி அத்தியாயமாக வரும் கலைகளின் நுட்பங்கள் பகிர்வதற்கே மிகச் சிறந்த பகுதி. நாம் படித்துப் பரவசமடையும் பகுதி. இந்த இடத்தில், நூல் ஆசிரியருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
மாம்பழம் அழகானது, சுவையானது, இனிமையானது, மனம் மிக்கது என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதினாலும் மாம்பழத்தின் சுவையை அறிய முடியாது. சாப்பிட்டுத்தான் பார்க்க வேண்டும்.
இசை என்பது நிகழ்கலை. எத்தனை எழுதினாலும் அது ஓரளவே பயன்படும். நூலாசிரியர் இந்த நூலை அடிப்படையாக வைத்து இளம் இசையமைப்பாளர்களுக்குப் பயிற்சி தருதல் வேண்டும். அதுவே நூலின் பயனை முழுமை பெறச் செய்யும்.
பல்வேறு மதம், சாதி, மொழி, கொண்டது நம் நாடு. இங்கு ஒற்றுமை, ஒருமைப்பாடு, பன்மியம் என்றெல்லாம் நம் விழுமியங்கள் கொண்டாடப்பட வேண்டும். அதற்கான நூலின் ஒரு பகுதி நெகிழ்வைத் தருகின்றது.
‘‘தன்னை ஈர்த்து விடும் கலைஞனைத் தனது சமுதாய, இன, மத அடையாளங்களுடன் பொருத்திப் பார்த்துச் சொந்தம் கொண்டாடுவது தேவையற்றது. கலைஞன் எல்லைகள் அற்றவன், யாருக்கும் சொந்தமானவன் கிடையாது. நாட்டின் எல்லைகள் கூட அவனையோ, அவனது படைப்புகளையோ தடுத்து வைக்க முடியாது.’’
நூல்பற்றி நிறைய பேசலாம். இறுதியாக ஒன்றுமட்டும் கூறி, மீதியை உங்கள் நூல் வாசிப்புக்கு விடுகிறேன். நூலாசிரியரின் முத்திரை வரிகளில்:
‘‘பாரம்பரிய இசை நம் வழிபாட்டிலும், கூத்து, நடனம் ஆகியவற்றிலும் முக்கிய அங்கமாக இடம் பெற்றுவிட்டதால், சுவாசித்தலுக்கு அடுத்த இடத்தில் இசையை வைத்துக் கொண்டாடி வந்திருக்கும் இனக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.’’
■