அஜாக்ஸ் எனும் கப்பல் கல்கத்தாவிலிருந்து அக்டோபர் மாதத்து ஏடாகூடமான தட்பவெப்பத்தில் சீனாவின் காண்டன் நகருக்கான மனிதர்களையும் சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு இந்திய, பசிபிக் கடல் வெளியைக் கடந்து தென் சீனக் கடலில் நீந்திக் கொண்டிருந்தது. அந்த வயோதிகன் எழுந்து நடமாட முடியாத நிலையில், எழுத முடியாத நடுங்கும் கைகளோடு சாவுக்கு பயந்து படுத்திருந்தவன் இறந்தே போனான். அவனைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாத அந்தக் கப்பல் தலைவன் அவனுடலை வெள்ளைத் துணியால் சுற்றி பீரங்கிக் குண்டுகளைக் கால்களோடு பிணைத்துக் கட்டி, பைபிளிலிருந்து வாசகங்களை வாசித்து விட்டு அவ்வுடலை கடலுக்குள் வீசி எறிகிறான். அந்த உடலுக்குச் சொந்தமானவன் பெயர் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus Hicky) ஒரு பத்திரிகையாளன், இந்தியாவின் முதல் செய்திப் பத்திரிகையை, கல்கத்தாவில் 1780லிருந்து 1782 வரை நடத்தி அன்றைய பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனி ராணுவ அதிகாரிகளையும், கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ்ஸையும் தன் பத்திரிகை வாயிலாக பயமுறுத்தியவர், இந்தியாவின் அந்த முதன் முதல் செய்தி இதழின் பெயர் பெங்கால் கெஜட் அல்லது ஒரிஜினல் கல்கத்தா ஜெனரல் அட்வெர்டைஃபெர் (Advertifer) என்பது.
கல்கத்தாவில் அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரது மரணத்தை கேள்வியுற்று கடனை வசூலிக்க வந்துவிட்டனர். கிழக்கிந்திய கம்பெனி அவரது வீட்டுக்கு காவலாளி ஒருவரை நியமித்துவிட்டு 1803ல் அவரது எஞ்சிய வீட்டு பொருட்களை பொது ஏலத்தில் விட்டு கடன்களை அடைக்க இரு முறை விளம்பரம் செய்தது, ஒரு அழகான எட்டு விளக்குள்ள சரவிளக்கு, நாற்பது பெட்டிகள் ஹாலந்து ஜின், இருபத்தைந்து டஜன் பேல், யேல் புட்டிகள், பிற பல்வேறு மதுபான புட்டிகள் மற்றும் வைரக் கற்கள் பதித்த தங்க கை கடிகாரம் ஒன்று ஆகியவை ஏலமிடப்பட்டன. ஆனால் அவரை பிரபலமாக்கிய அச்சுமை, அச்சுகள், அச்சு இயந்திரம் என்பவை ஏலத்துக்கான விளம்பரத்தில் இடம் பெறவேயில்லை. அந்த இரு ஆண்டுகளில் இவற்றைக் கொண்டு ஹிக்கி கிழக்கிந்திய கம்பெனியில் நிலவிய ஊழலை, அரசாங்கத்தின் அநியாயத்தை, கிறிஸ்தவ தேவாலயத்தில் நிலவி வந்த ஊழல்களை அம்பலப்படுத்தி, எதிர்ப்பாளர்களை ஒழித்துக்கட்டும் வேலையை எதிர்த்து பத்திரிகை சுதந்திரத்துக்கும், எழுத்து- கருத்துச் சுதந்திரத்துக்கும் உறுதியோடு பணியாற்றியவர், இந்த செய்தி இதழ் நான்கு பக்கங்களைக் கொண்டு வாரம் ஒரு முறை வெளிவந்தது. அதன் அன்றைய விலை ஒரு ரூபாய்.
அந்த பெங்கால் கெஜட் பத்திரிகையின் வரலாற்றையும், அதன் ஆசிரியர்- உரிமையாளர் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியின் வரலாற்றையும் கூறும் நூல், ‘‘ஹிக்கியின் பெங்கால் கெஜட் அல்லது அசல் கல்கத்தா ஜெனரல் அட்வெர்டைஃபர் (Hicks Bengal Gazette or the Orignal Calcutta General Advertifer) என்பது இந்தியாவின் முதல் செய்திப் பத்திரிகையான இதையும், இதன் ஆசிரியரையும் அரும்பாடுபட்டு கண்டெடுத்து ஆய்வு செய்திருப்பவர் ஆண்ட்ரூ ஓடிஸ் எனும் பிஹெச்டி ஆய்வுமாணவர்.ஆண்ட்ரூ மேரிலிண்டிலுள்ள ஃபிலிப் மெர்ரில் இதழியல் கல்லூரியில் ஆய்வு படிப்பு முடித்து, 2013-2014களில் இந்தியாவில் ஆரம்ப காலத்தில் இதழியல் இருந்ததை ஆய்வுக்காக எடுத்து கல்கத்தாவில் தங்கியிருந்து பணி மேற்கொண்டு தம் ஆய்வுக் கட்டுரைகள் சிலவற்றை கல்கத்தா டெலிகிராஃப் மற்றும் பிஸ்னெஸ் இகானமிக்ஸ் இதழ்களில் அறிமுகப்படுத்தினார். ஆண்ட்ரூ தம் ஆய்வின்போது நியூயார்க் ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஓர் அபூர்வ நூலை தேடிப் பிடிக்கவும், அது வில்லியம் ஹிக்கி என்ற 18-ஆம் நூற்றாண்டு பிரிடிஷ் வழக்கறிஞரின் நினைவுகள் என்பதைக் காண்கிறார்.
வழக்கறிஞர் வில்லியம் ஹிக்கியின் நினைவுகள் வாயிலாகத் தான் இந்தியாவின் முதல் செய்திப் பத்திரிகையைப் பற்றியும் அதன் நிறுவனர் ஆசிரியர் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியைப்பற்றியும் அறிந்து கொள்ளுகிறார் ஆண்ட்ரூ. இவ்விருஹிக்கிகளும் உறவினர்களோ, ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களோ அல்ல. பத்திரிகையாளர் ஹிக்கி சமய ரீதியாகவும் பிரிட்டிஷாருக்கு ஒவ்வாமையுணர்வை ஏற்படுத்தியவர் என்பதும் ஒரு முக்கிய விஷயம். இந்த வட அயர்லாந்துக் கார ஹிக்கி கிறிஸ்தவ சமயத்தின் ‘‘எதிர்ப்பாளர்’’ எனப்படும் (ஆங்லிகன் மிஷனரி) Protestant பிரிவினரை எதிர்த்த ரோமன் கத்தோலிக்கர். இருப்பினும், புரொடெஸ்டண்டான பிரிட்டிஷ் வழக்கறிஞர் வில்லியம் ஹிக்கி, மனிதநேயத்தின் அடிப்படையில் பத்திரிகையாளரும் கத்தோலிக்கருமான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கிக்கு சார்பாக வழக்காடி வென்று சிறையிலிருந்து விடுவிக்கிறார்.
வழக்கறிஞர் லண்டனில் இருந்தாலும் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பிரஜைகளின் வேண்டுகோளையேற்று கல்கத்தா வந்து இதழியர் என கருதப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி- லண்டனில் அச்சுத் தொழிலில் தம் ஆரம்ப காலத்தை கழித்தவர் ஆசியாவின் முதல் செய்தி வார இதழான பெங்கால் கெஜட்டை 1780ல் ஜனவரி 29ல் கல்கத்தாவில் அச்சிட்டு வெளியிட்டார். கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தாராலும் இந்திய பிரிட்டிஷ் பிரஜைகளாலும் ஆர்வத்தோடு வாங்கி வாசிக்கப்பட்டது. ஒரு ரூபாய் விலையில் நான்கு பக்கங்கள் கொண்ட கல்கட்டா கெஜட், மூன்று பக்கங்களில் இந்திய மற்றும் உலகச் செய்திகள், கவிதைகள், ஆசிரியருக்கான வாசகர் கடிதங்கள்; மீதி ஒரு பக்கத்தில் விளம்பரங்களையும் கொண்டு வெளிவந்தது. புகைப்படக்கலை கண்டு பிடிக்கப்படாத காலம் அது. முக்கியமான செய்திகளுக்கும் விளம்பரங்களுக்கும் கோட்டோவியங்களும் பதிப்போவியங்களும் சேர்க்கப்பட்டன.
ஹிக்கி கல்கத்தாவோடு முக்கியமானதாய் தோன்றிய ஒவ்வொன்றையும் தன் பத்திரிகையில் வெளியிட முயன்றார். அரசியல், உலகச் செய்திகள் மற்றும் இந்திய நிகழ்வுகள் இடம் பெற்றன. வாசகர்களை தமக்கு கடிதங்களும் கவிதைகளும் எழுதியனுப்புமாறு கேட்டுக் கொண்டார். தன் எழுத்துக்களில் நகைச்சுவையும் அங்கதமும் விளங்குமாறு பார்த்துக் கொண்டதாய் ஆண்ட்ரூ ஓடிஸ் எழுதுகிறார். தொடக்கத்தில் தம் பத்திரிகையில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் நகர முன்னேற்றம் குறித்து எழுதினார்.
பெண்களைப் பற்றி பெங்கால் கெஜட்டில் ஹிக்கியும் சரி, அவரது மற்ற ஆண் எழுத்தாளர்களும் சரி, பெண்கள் ஆண்களுக்கு சமமாக முடியாது என்றே கருத்து தெரிவித்து வந்தனர். கல்வி கற்பதின் மூலம் பெண்கள், உடல் நிலை ரீதியாக ஆண்கள் முக்கிய அங்கம் வகித்த உரையாடல்கள் விவாதங்களில் பங்கு பெறுமளவுக்கு அறிவார்த்தம் நிறைந்தவர்களாயில்லை என்று தம் இதழில் எழுதினார். அதே சமயம் வெள்ளைக்கார ஆண்மிட் வைஃப்களை ஆங்கிலோந்திய பெண்கள் எதிர்த்ததை ஆதரித்ததோடு, மருத்துவச்சியின் பிரசவ சேவையை செய்துவந்த ஆண் மிட்வைஃப்களை எதிர்த்து ஓல்டு நெல் எனும் ஆங்கிலோந்திய பெண் பெங்கால் கெஜட்டுக்கு எழுதிய கடிதத்தை முதல் முதல் பெண் வாசகரின் கடிதத்தை பிரசுரித்தார் ஹிக்கி. பெண்கள் கற்புடையவராயிருப்பதை தம் பத்திரிகையில் வலியுறுத்தி எழுதிவந்த ஹிக்கி, தம் வாசகர்கள் பெரும் அதிர்ச்சியடையும்படிக்கு பெண்கள் ரகசியமாக சுய இன்பம் அடைய கையாளும் செயலை குறித்து எழுதினார்.
அகஸ்டஸ் ஹிக்கியின் பெங்கால் கெஜட்டின் குரல் போகப் போக மாறி வந்தது. தன் பத்திரிகையின் சக்தியை உணர்ந்த ஹிக்கி அவர் தம் இதழில் அரசியல் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார். முதலில் பிரிட்டிஷாரின் போர்களை, குறிப்பாக அமெரிக்க புரட்சியாளரோடு பிரிட்டன் புரிந்து வந்த யுத்தத்தைப் பாராட்டி ஆதரித்து எழுதிய அவர் போகப் போக போர்களையும், கிழக்கிந்திய கம்பெனி ராணுவ அதிகாரிகளின் ஊழல்களையும் கண்டித்து எழுதத் தொடங்கினார். கூடவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பொறுப்புள்ளபதவிகளில் அமர்ந்து ஊழல்கள் புரிந்து சொந்த நலனுக்காக சொத்து சேகரித்தவர்களையும் தம் பத்திரிகை வாயிலாக அம்பலப்படுத்தினார். இந்த உள்விவகாரங்கள் அவ்வந்த அமைப்புகளினூடே பணிபுரியும் சாதாரண ஊழியர்களால் ஹிக்கியின் வசம் கிட்டியவை.
ஹிக்கி ஐரோப்பிய கம்பெனி ராணுவ சிப்பாய்களோடு இந்திய கருப்பு சிப்பாய்களைப் பற்றியும் இரக்கத்தோடு தம் பத்திரிகையில் எழுதினார். இந்திய சிப்பாய்களின் மாத ஊதியம் மூன்று நான்கு மாதங்களாய் பட்டுவாடா செய்யப்படாமல் தேங்கியிருக்க, அவர்கள் வட்டிக்கு கடன் வாங்கியும் உடைமைகளை விற்றும் ஜீவித்தார்கள் என்று பெங்கால் கெஜட் கூறுகிறது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் இந்தியாவில் சுதேசி மன்னர்களோடு நிகழ்த்திய போர்களால் ஏற்பட்ட அனாவசிய உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் குறித்து ஹிக்கி விலாவாரியாக தமது இதழில் வெளியிட்டார். அந்தச் செய்திகளில் முக்கியமான ஒன்று பொல்லிலூர் யுத்தம்.பொல்லிலூர் காஞ்சிபுரம் அருகில் பாலாற்றங்கரையிலுள்ள சிற்றூர். இங்கு 1780ல் ஹைதர் அலிக்கும் கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்துக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது.
90,000-சிப்பாய்களோடு வந்திருந்த
ஹைதர் அலி, கிழக்கிந்திய கம்பெனியின் தென்னிந்திய இராணுவப் பிரிவின் கர்னல் பெய்லியின் தலைமையிலான 5700 கம்பெனி சிப்பாய்களில் 3000 பேரை ராக்கெட் தாக்குதல் நடத்தி அழித்துவிட்ட, நிகழ்வு பிரிட்டிஷ் படை இந்தியாவில் சந்தித்த பெரும் பின்னடைவுகளில் ஒன்று. இதன் முழு விவரத்தையும் நான் எனது ‘‘தமிழகக் கோட்டைகள்’’ நூலில் இறுதிப் பகுதியில் எழுதியிருக்கிறேன் நீண்ட போர்வாள் இணைக்கப்பட்ட சிறு ராக்கெட், பற்ற வைத்தவுடன் சீறிப் பாய்ந்து பலரின் தலைகளை சீவித் தள்ளும், பொல்லிலூர் போரில் நடந்தது வேறு. கர்னல் பெய்லி தம் படையினர் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்துப் போரிட்டபடியே நிஜாமின் உதவிப் படையின் வருகையை எதிர்பார்த்திருந்தார். அவருடைய வெடி பொருட்கள் நிறைந்த மாட்டு வண்டியை வைத்தார். அலியின் ராக்கெட் ஒன்று தாக்கி, வெடித்து சிதறடித்து கம்பெனி சிப்பாய்கள் 3000 பேரை ஒரே அடியில் தீர்த்துக் கட்டியது.
பிரெஞ்சு எஞ்சினியர்களின் உதவியோடு தயாரான இந்த ராணுவ ராக்கெட்டுகளே உலகில் முதன் முதலாகக் கண்டு பிடித்தவை என வரலாறு கூறுகிறது. இந்த திப்புசுல்தான் ராக்கெட் ஒன்று அமெரிக்காவிலுள்ள விண்வெளி மையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஹைதர் திப்புவிடம் அடிபட்டு சரணடைந்த கர்னல் பெய்லி பெங்களூர் சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தப்ப முயன்றதால் சீரங்கப்பட்டண கோட்டையிலுள்ள பாதாளச் சிறையிலடைக்கப்பட்டு அங்கு மரணமடைந்தார். அந்த பாதாளச் சிறைக்கு ‘‘பெய்லி டஞ்சன்’’ என்று பெயர். திப்புவின்
உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கும்பஜ்கு வெளியே பெய்லிக்கு சிறிய நினைவு மண்டபம் ஒன்றை கிழக்கிந்திய கம்பெனி கட்டியிருக்கிறது.
ஹைதர்அலி ஆற்காட்டைப் பிடித்த பின், கம்பெனி படையினரை பத்திரமாக நட்புறவு கொண்ட பகுதியில் விட்டு விட்டதாக ஹிக்கி பெங்கால் கெஜட் செய்தியில், கூறுகிறார். பிரிட்டிஷ் கலெக்டர்கள் எழுதி வைத்த ஹில்லா கெஜட் செய்திகளுக்கு மாறாக பெங்கால் கெஜட் உண்மைகளை எடுத்துச் சொன்னதால் அதன் வாசக வட்டம் பெருகியது. ஹிக்கியின் பெங்கால் கெஜட் பிரசுரித்த இந்திய செய்திகளைப் பார்த்துவிட்டு அன்றைய பிரிட்டிஷ் செய்தித்தாள்களான London Courant, London Chronicle, Public Advitiser Ladys Magazine, British Evening Post ஆகியவை கிழக்கிந்திய கம்பெனி யுத்தங்களை மறு பிரசுரம் செய்தன. போகப் போக ஹிக்கி தேவாலய நிர்வாக நிலவரங்களையும், கம்பெனி அரசியலையும் மிக வெளிப்படையாகவும் தாக்கி எழுதவும் அவை அவருக்கான எதிர்ப்பை சம்பாதித்துத் தந்தன. ஒரு கட்டத்தில் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸை தாக்கி எழுதினார்.
ஒரு ரோமன் கத்தோலிகன், ஆங்கிளிகன் ப்ராடெஸ்டண்டுகளை, மிஷனரிகளை, வாரன் ஹேஸ்டிங்ஸையே விமர்சித்து எழுதியது என்பது சமய சார்பாகவும் ஹிக்கிக்கு எதிர்ப்பைக் கிளப்பிற்று. பெங்கால் கெஜட் தடை செய்யப்பட்டு, ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டார். பிறகு அவரை இங்கிலாந்துக்கு அனாதையாக கப்பலில் ஏற்றியனுப்பிய சமயம் கப்பலிலேயே இறந்து போய் ஜலசமாதியடைந்தார். 1777 முதல் 1786 வரையிலான கல்கத்தா மற்றும் இந்திய சுதேசி நிகழ்வுகளை ஒருவித ஆனந்தரங்கம்பிள்ளை தினப்படி சேதிக் குறிப்புகள் போல மாதாந்திர, தேதி வாக்கில் எழுதப்பட்டிருந்தாலும் ஆண்ட்ரூ ஓடிஸின் மேற்கண்ட அதியற்புத நூல், ஒரு வரலாற்று குறிப்பாக மட்டுமின்றி, ஒரு நாவல் படித்த நிறைவை அளிக்கிறது.
•