Home Uncategorized வாசிப்பு அனுபவப் பகிர்வு – 6 வெளி ரங்கராஜனின் சமகால கலை இலக்கிய உரையாடல்கள்.

வாசிப்பு அனுபவப் பகிர்வு – 6 வெளி ரங்கராஜனின் சமகால கலை இலக்கிய உரையாடல்கள்.

by bpadmin

டெல்லியிலிருந்து வந்து கொண்டிருந்த அரங்கத்துக்கான Theatre ஆங்கில இதழ் ENACT மிகவும் அற்புத சஞ்சிகை. அதைப் போல தமிழில் ஒன்று வந்தால் நன்றாயிருக்குமே என்ற ஏக்கம் பலருக்கு இருந்தபோது தான் திரு ரங்கராஜன் வெளி நாடக இதழை 1990ல் எனாக்ட் இதழுக்கு ஈடாகவும் சில சமயம் அதற்கு மேலும் சிறப்பானதாய்க் கொண்டு வந்தார். வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் சர்வதேச நாடகங்கள், இந்திய நாடகங்கள் நவீன தமிழ் நாடகங்கள் என மொழி பெயர்ப்பிலும் அசலிலுமாய் ஏராளமாய் இடம் பெற்றன. நாடகம், அரங்கம் தொடர்பாய் ஏராளமான கட்டுரைகள், நேர்காணல்கள் வெளிவந்தன. நாடக நூல்கள் விமர்சிக்கப்பட்டன. மூன்றாண்டுகள் கழிந்த பின் வெளி நின்று போய் அதன் படைப்பாளி ஆசிரியர் பெயருக்கு முன்னால் ஒளிர ஆரம்பித்தது.

பல ஆண்டுகளாக கலை இலக்கிய வெளியில் சோர்வின்றி தீவிர ஈடுபாட்டோடு இயங்கி வரும் ரங்கராஜன் பத்திரிகைகளில் கலை இலக்கிய நிகழ்வுகள், நூல்கள் குறித்து கட்டுரைகள் பல எழுதி வருபவர். இவர் தம் நூல்கள், ‘‘”தமிழ் நாடகச் சூழல் ஒரு பார்வை”; இடிபாடுகளுக்கிடையில், நாடகம் நிகழ்வு, அழகியல், ஊழிக் கூத்து, தமிழ் நவீன நாடக நிகழ்வுகள், வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள் என்பனவையும் இப்போது விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கும் நூல், சமகால கலை இலக்கிய உரையாடல்கள் என்பவை தமிழுக்கு முக்கியமான வரவுகள்.

2009ல் சென்னையில் சிலப்பதிகாரம் தழுவிய “மாதரி கதை”, என்ற நாடகத்தைப் பார்க்கும்  அரிய சந்தர்ப்பம் எனக் கேற்பட்டது. மாதரியாக பரதக் கலைஞர் சசிரேகா சிறப்பாகச் செய்திருந்தார். அற்புதமாக இயக்கியிருந்தார் வெளி ரங்கராஜன். இவரது வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள் நூலும் மிக மிக முக்கியமானது. சமகால இலக்கிய உரையாடல்கள் நூலில் பல்வேறு  இதழ்களில் அவர் எழுதிய பதினைந்து  கட்டுரைகளும் ஓர் நேர்காணலும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் அவர் கூறுகிறார், “டீக்கடைகள்தான் பெரும்பாலும் உரையாடுவதற்கான இடங்களாக இருந்தன. தமிழில் நவீன இலக்கியத்தை வளர்த்தெடுத்ததில் டீ கடைகளுக்கு முக்கிய பங்குண்டு” என்று தேநீர் விடுதிகளின்  பெஞ்சுகள் அரசியல், காதல், இலக்கியம், சினிமா, நாடகம் என சகல உரையாடல்களுக்கும் இடமளிக்கும் அரங்கம் என்பது உண்மை. சுந்தரராமசாமியும் கவிஞர் கலாப்ரியாவும் சக படைப்பாளிகளை அழைத்து கூட்டி பரஸ்பர பார்வைகள், நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ள இடவசதி இதர வசதிகளை அமைத்துக் கொடுத்ததை கூறுகிறார். இலக்கு ஒருங்கிணைப்புக் கூட்டமும், முன்றில் இலக்கியக் கருத்தரங்கும் 80திலும் 91லும் இவ்வுரையாடல்களை ஒரு பொது வெளிக்குக் கொண்டு வந்து அவை பதிவு செய்யப்பட்டதையும் ரங்கராஜன் நினைவு கூர்கிறார். இறுதியாக முக்கியமான தம் கருத்தாக, “இன்றைய மதிப்பீடுகளின் நெருக்கடி, உறவுகளின் சிதைவு, யதார்த்தங்களின் கொடூரம் ஆகியவை கலை இலக்கியங்களின் அண்மையை யாசித்தபடி  உள்ளன. அதற்கான போராட்டம் கூர்மையடைந்தபடியுள்ளது. மாறுபாடுகளின் சாத்தியங்கள் பெருகும் நிலையில் ஒரு கலாச்சாரத்தின் உயிர்ப்புக்கு உரையாடல்கள் முடிவற்றுத் தொடர வேண்டிய தேவை உள்ளது” என்கிறார் ரங்கராஜன்.

மா. அரங்கநாதனின் புனைவுலகம் பற்றிய உரையாடலில், “பிரபஞ்சமெங்கும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை உணர்வுகளின் இயல்பான ஓட்டத்துடன் எதிர் கொள்கிறார் மா.அ. எதற்கும் பிடிபடாத அப்பிரவாகத்தை அண்மைபடுத்தும் முயற்சியில் அவரது கலை இடைவிடாது பயணிக்கிறது” என்கிறார். பக்தி இயக்கமும் மக்கள் பங்கேற்பும் என்ற அவரது முழுக் கட்டுரையுமே சிறப்பாக வந்திருக்கிறது. இசையின் சிறப்பை மிக அற்புதமாய் ஒரு இசைக்குடும்ப பாரம்பரிய அனுபவத்துடன் கொண்டுவந்திருக்கிறார்.

மற்றொரு குறிப்பிடப்பட வேண்டிய ரங்கராஜனின் கட்டுரை ஆண்டாளின் நுண் உலகம் பற்றியது. ஆண்டாளில் அவர் மெய்மறந்துபோய், “வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விதமாக என்னுடைய இலக்குகள் மாறியபடியிருந்தாலும் அந்தப் பாடல்களின் ஓசையும் உணர்வும் நான் இழந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு உலகத்தை எனக்கு நினைவுபடுத்தி என்னை உத்வேகப்படுத்தியபடி இருந்தன. என உருகுகிறார். சீரங்கத்துக்காரர் அல்லவா, நோன்புக் கருவியான பறை, என்ற மேளத்தின் பெயர் திருப்பாவை முழுவதும் வாக்கு வாக்கு என்பது போன்ற ஒரு பூடகமான பொருளில் பிரயோகமாகிறது” என்கிறார்.

நாடகம் குறித்து நிறையவே இந்த நூலில் சொல்லியிருக்கிறார். கீர்த்தனை நாடகங்களும் தெருக்கூத்தும் தப்பாட்டம் தேவராட்டம் கணியான் கூத்து என பல்வேறு சடங்குகளுடன் இணைந்த கொண்டாட்டவடிவங்களாய் நாடக உணர்வுகள் வெளிப்பாடு கொண்டுள்ளதை சுருக்கமாயும் அழகாயும் விவரிக்கிறார் ரங்கராஜன். நாடகாசிரியர் பேராசிரியர் ராமானுஜன் குறித்த கட்டுரையில் அவருடைய முறையையும் பாதல் சர்க்காரின் முறையையும் எளியவழியில் விளக்குகிறார் ரங்கராஜன். ராமானுஜம் இயற்கை அழகியல் சார்ந்த மனநிலைக்கு அழுத்தம் கொடுத்தபோது, பாதல் சர்க்கார், சமூக மனவியல் சார்ந்த உடல் கட்டுமானத்தை வலியுறுத்தினார் என்று சொல்லி, இந்த இரு உத்வேகங்களின் அடிப்படையில் தான் தனது, நாடக செயல்பாடுகளை உருவாக்கிக் கொண்டதைக் காட்டுகிறார்.

சமீபகால நாடக நிகழ்வுகளாக முருக பூபதியின் மாயக் கோமாளிகளின் ஜாலக் கண்ணாடி, பிரசன்னா ராமசாமியின் சக்திக் கூத்து, கட்டியக்காரன், நடேஸின் மீண்டும் படுகளம், முத்துசாமியின் இங்கிலாந்து மண்டோவின் கதைகளைத் தழுவிய ஓரிரு நாடகங்கள் என்று விமர்சனபூர்வமாய் ரங்கராஜன் எழுதியிருக்கிறார்.

சமகால ஆவணப் படங்கள் சிலவற்றை ரங்கராஜன் ரசனையோடு எழுதியிருப்பதும் நூலின் முக்கிய பகுதியாகும். முனைவர் சாரோன் இயக்கிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது. லீனா மணிமேகலையின் வெள்ளை வேன் கதைகள், அம்ஷன் குமாரின் யாழ்ப்பாணம் தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி, கவிஞர் ரவிசுப்ரமணியனின் கவிஞர் திருலோக சீதாராம், உபேந்திரா இயக்கிய The soul of Vibrant Shadows ஒரு பார்வை என்று ஆவணப்படங்களில் தனக்கு பிடித்தவற்றில் கொஞ்சத்தைப் பற்றி பேசுகிறார்.

சில படைப்புகளை வைத்து அவர் எழுதிய கட்டுரையில் கண்டராதித்தனின் திருச்சாழல் எனும் கவிதைத் தொகுப்பு மனுஷியின் முத்தங்களின் கடவுள் என்ற கவிதை நூல், ரவிசுப்பிரமணியனின் கவிதைத் தொகுப்பு விதானத்துச் சித்திரம், ந. முத்துசாமியின் நாடகங்களின் தொகுப்பு நூல் மற்றும் நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா என்ற புகழ் பெற்ற தமிழ் சினிமா குணசித்திர நடிகரைப் பற்றி திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன் எழுதிய வரலாற்று நூல்களை ரசிகனாக ரசனையோடு சிலாகிக்கிறார் ரங்கராஜன்.

ஒரு கட்டுரையில் ரங்கராஜன் கலைஞர்கள் சிலருக்கு அஞ்சலி கட்டுரையொன்று வரைந்திருக்கிறார். அஞ்சலி, இரங்கல் என்றதும் அசோகமித்திரன் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர்தான் அதிகமான இரங்கல் பத்திகள் கட்டுரைகள் எழுதியிருப்பவராயிருக்கக்கூடும். அதைப் பற்றி அவரே சுய விமர்சனம் செய்து கொண்டவர். ரங்கராஜன் கலை விமர்சகர் தேனுகாவின் மறைவுக்கு இரங்கல் கட்டுரையில் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவர் வாழ்ந்த இசை, கோயில், சிற்பச் சூழலையும் அவற்றின் பாதிப்பில் வளர்ந்து பக்குவமான அவரது கலைச் சிந்தனையையும் விவரிக்கிறார். அவரது படைப்புகள் குறித்தும் சிலாகிக்கிறார். தமிழ் நவீன அரங்கின் முன்னோடி பேராசிரியர் ராமானுஜத்தின் மறைவுக்கான இரங்கலில் தேனுகா பற்றிய அஞ்சலிக் கட்டுரையின் வழியையே பின் தொடர்கிறார். அதே சமயம் நவீனம் என்பது பழமைக்கு எதிரானதல்ல, கட்டுப்பெட்டித்தனத்துக்குத்தான் எதிரானது என்றும், மரபு நீட்சியும் சிந்தனைத் தூண்டலுமே புதிய நாடகத் தேடலின் ஆத்மார்த்த உணர்வுத் துடிப்புகள் என்பதை ராமானுஜம்தன் உரையாடல்களில் தொடர்ந்து வலியுறுத்தினார் என்றும் கூறுகிறார் ரங்கராஜன்.

கடைசியாக, வெளிரங்கராஜனுடன் ஒரு நேர் காணல், என்ற பகுதி நூலின் முக்கிய சங்கதிகளில் ஒன்று. இளமைக்கால சூழ்நிலை, திராவிட இயக்கத்தின் மீதான ஒவ்வாமையுணர்வு கூடிய விமர்சனப் பார்வை, இலக்கியம், நாடகம் ஆகியவை சார்ந்த அவரது அனுபவம், ஈழப் பிரச்சினை மற்றும் அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள் சார்ந்த தம் நிலைப் பாட்டையும்  கேள்விகளின் போது தெளிவாக பதிலளிக்கிறார் ரங்கராஜன். இந்தச் சிறிய நூல் ரங்கராஜன் எனும் கலை இலக்கிய தாகம் மிக்க படைப்பாளியை நன்கு புரிந்து கொள்ள வகை செய்கிறது.

சமகால இலக்கிய உரையாடல்கள்,வெளிரங்கராஜன்- மலைகள் வெளியீடு.119, முதல் மாடி, கடலூர் மெயின் ரோடு, அம்மாப்பேட்டை, சேலம்-636003. விலை. ரூ.100

Related Posts

Leave a Comment